மறுபடி ஷெரின் முயற்சிக்கவே கோவத்துடன் போனை எடுத்து அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே பின்ன எதுக்கு ஃபோன் பண்ணுறே. இனிமே எனக்கு ஃபோன் பண்ணாதே என்றான் உதித். ஷெரின் ஒன்றும் பேசாமல் போனை வைத்தாள் .ஸ்வேதாவும், சிவாவும் அவன் எல்லாவற்றையும் புரிந்து கொள்வான் இப்போதைக்கு அவனை அப்படியே விட்டு விடு என்று சொன்னார்கள். ஷெரின் எல்லாம் என்னால் வந்த வினை. ஆள் தெரியாமல் ஆனந்த் மாதிரி ஒருத்தனை நண்பனாய் நினைத்ததற்கு எத்தனையோ உயிர்களை பலி கொடுத்தாயிற்று என்றாள். அப்போது நிர்மலாவிடம் இருந்து சிவாவுக்கு ஃபோன் வந்தது. எத்தனை நாளைக்குத்தான் ஷெரினுக்கு அடைக்கலம் கொடுப்பீர்கள். அவளை கோர்ட்டில் சரணடைய சொல்லுங்கள் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாள். நாங்கள் அவளிடம் பேசிவிட்டு நல்ல முடிவா சொல்லுறோம் என்றான் சிவா. எழிலுக்கும் நாளுக்கு நாள் பிரஷர் அதிகரித்து வந்தது. வேறு வழியில்லாமல் ஷிவானியின் கால் லிஸ்ட் சோதித்தான். அவளது பெயரில் இன்னொரு சிம் நம்பர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். இறுதியாக அந்த நம்பர் மூலமாகத்தான் அவள் ஷெரினை தொடர்பு கொண்டு பேசி வருகிறாள் என்பதை கண்டறிந்தான்.
உதித் இரண்டு நாட்கள் கழித்து ஷெரினுக்கு ஃபோன் செய்தான். நான் உன்னை சந்திக்க வேண்டும் என்றான். இப்போதுள்ள சூழ்நிலையில் அது முடியாது என்றாள். அதெல்லாம் எனக்கு தெரியாது என் அப்பா அநியாயமாக செத்து இருக்கிறார். அதற்கு நியாயம் வேண்டும் என்றான். சரி நானே உனக்கு கால் பண்ணுகிறேன் என்றாள். ஷெரின் அந்த சந்திப்பை தவிர்த்து விட விரும்பினாள். இருந்தாலும் அவன் மேல் உள்ள பரிதாபத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சிவா வீட்டுக்கு வரும்படி சொன்னாள்.எழில் ஸ்வேதாவையும் அரெஸ்ட் செய்ய திட்டமிடுகிறான். ஷெரினும் உதித்தும் சந்தித்து கொண்டார்கள். ஷெரின் நீ எனக்காக ஆனந்த் கூட ஃபைட் பண்ணுணது ஒரு வகையில சந்தோஷம் என்றாலும் என் அப்பா சாவுக்கு நீயும் ஒரு காரணம் என்றான் . என்னை மன்னிச்சிடு உதித் . நான் உங்க அப்பாவை கடத்துனப்ப கூட உங்க அப்பா திருந்தனும் அப்படின்னு தான் நெனைச்சேன் அவரை கொல்ல நினைக்கலை . இப்போ உனக்கு இருக்கிற பழி வாங்குற உணர்வை விட்டுட்டு உன்னோட டாக்டர் படிப்பை கம்ப்ளீட் பண்ணு. அந்த கிரண் அதோட ஆனந்தை நான் பார்த்துக்கிறேன் என்றாள் ஷெரின். என்னோட எதிர்காலமே நாசமா போச்சு என்றான் உதித். அவனுடைய கையை பிடித்து கொண்டாள் ஷெரின் பிளீஸ் என்னை நம்பு. அவசரப்பட்டு என்னை மாதிரி தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டாம் என்றாள். நீ சொல்றது நடைமுறைக்கு ஒத்து வருமா ? ஆனந்த் என்னை நிம்மதியா படிக்க விடுவானா? இனிமேல் அவன் உன்னை தொந்தரவு பண்ண மாட்டான் என்றாள்.
எழில் ஸ்வேதா வீட்டை சர்ச் செய்ய வாரண்ட்க்கு காத்திருந்தான். ஷிவானியை அவன் எதுவும் கேட்கவில்லை. அவளுக்கு பதவியை இழந்ததே பெரிய தண்டனை தான் அதோடு குடும்பத்தையும் பிரிந்து இருக்கிறாள். என்ன எழில் பெரிய யோசனை எப்படி ஸ்வேதாவை அரெஸ்ட் பண்ணுவது என்றா என்றாள் ஷிவானி. அதெப்படி உனக்கு தெரியும். நானும் போலீஸ்ல இருந்தவள் தானே என்றாள். ம் நியாயமா நீ என்னைத்தான் அரெஸ்ட் பண்ணியிருக்கணும் என்றாள். வேண்டாம் ஷிவானி நீ அது பற்றி பேச வேண்டாம் என முடித்துக்கொண்டான். அவளும் எதுவும் சொல்லவில்லை. ஸ்வேதா வீட்டுக்கு வாரண்ட் உடன் விரைந்தான் எழில். வீடு பூட்டி இருந்தது. ஸ்வேதாவுக்கு ஃபோன் செய்தான். நீங்க வருவீங்கன்னு தெரியும் ஆனா திடீர்னு வருவீங்கன்னு தெரியாது என்றாள். போதும் ஸ்வேதா ஷெரின் எங்கே ? அவள் கோர்ட்டில் நாளை சரணடைவாள் . உன்னையும் அரெஸ்ட் பண்ண தான் வந்திருக்கேன் என்றான். இன்னும் அரை மணி நேரத்தில் அங்கிருப்பேன் என்றாள் ஸ்வேதா. ஸ்வேதாவை கைது செய்யும்போது சிவாவும் உடன் இருந்தான். மறுநாள் ஸ்வேதா சொன்னபடி ஷெரின் கோர்ட்டில் சரணடைந்தாள் .
கோர்ட்டில் விரிவாக விவாதங்கள் நடந்தன . நிர்மலா ஆனந்துக்கு எதிராக வாதாடினாள். சந்தர்ப்ப சூழ்நிலையே ஷெரின் செய்த கொலைகளுக்கு காரணம் என்றாள் நிர்மலா. உதித் அவ்வப்போது கோர்ட் வந்து போனான். அவனை அங்கெல்லாம் வரவேண்டாம் என எழில் சொன்னான். ஆனந்த் செய்த குற்றங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஷெரினுக்கு 5 ஆண்டும் ஸ்வேதாவுக்கு ஷெரின் உடன் உடந்தையாக இருந்ததற்காக ஒரு ஆண்டும் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனந்த் அதை எதிர்த்து அப்பீல் செய்ய போவதாக சொன்னான். ஷெரின் ஸ்வேதாவை பார்த்து ஆறுதல் கூறினாள். பரவாயில்லை ஷெரின் எங்களுக்காக நீ செய்த தியாகத்துக்கு முன்னால் ஒரு வருடம் ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை என்றாள் ஸ்வேதா. சிவா கண்கள் கலங்க இருவரையும் பார்த்தபடி நின்றான். அழாதே சிவா இனிமேல்தான் நீ கவனமாய் இருக்க வேண்டும். உதித்தை கவனித்து கொள் என்றாள் ஸ்வேதா. சரி ஸ்வேதா. நிர்மலாவுக்கு ஸ்வேதாவுக்கம், ஷெரினுக்கும் குறைந்த பட்ச தண்டனை வாங்கி கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தான் சிவா. எழில் ஒன்றும் சொல்ல முடியாமல் ஷிவானி பற்றி சிந்தித்தான்.
ஷிவானி எழிலிடம் அடுத்து என்ன என்றாள். கிரண் எப்படியாவது ஆனந்தை காப்பாற்ற முயற்சிப்பான். அதை முறியடிக்க வேண்டும் என்றான். ஸ்வேதா ஒரு தப்பும் செய்யவில்லை என்றாள் ஷிவானி. ம் சட்டத்தின் முன் அதெல்லாம் பார்க்க முடியாது என்றான் எழில். சீக்கிரமே எல்லா பிரச்சினையும் முடிவுக்கு வரும் என்றான். நாம எப்போ ஹனிமூன் போறோம் என்றாள் ஷிவானி. இப்போ இருக்குற நிலைமைல போக வேண்டாம். ஒரு ரெண்டு மாதம் உன்னுடைய போஸ்டிங் திரும்ப உனக்கு கிடைத்த உடனே போகலாம் என்றான். திரும்ப நான் போலீஸ்ல சேருவேணா எழில். நிச்சயமா உன் பதவி நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் ல அப்பீல் பண்ண போறேன். தாங்க்ஸ் எழில். வெறும் தாங்க்ஸ் மட்டும்தானா என்றான். ம் அதெல்லாம் வீட்டுல போய் பார்த்துக்கலாம் என்றாள். சிவா ஸ்வேதாவின் பிரிவை எண்ணி கலங்கினாலும் ஸ்வேதா மன உறுதியோடு இருப்பதை எண்ணி தைரியம் கொண்டான்.
கிரணிடம் இருந்து சிவாவுக்கு ஃபோன் வந்தது. நீ மட்டும் தப்பித்து விட்டதாய் எண்ணாதே கூடிய சீக்கிரம் உனக்கும் ஏதாவது செய்கிறேன் என்றான். இவ்வளவு பண்ணின எங்களுக்கு உன்னை மட்டும் ஏன் விட்டு வைத்தேன் என்று உனக்கு யோசிக்க தெரியாதா. உதித் உனக்காக காத்துக்கொண்டிருக்கிறான். நான்தான் அவனை தடுத்து வைத்திருக்கிறேன் என்றான் சிவா. என்ன என்னையே மிரட்டுகிறாயா என்றான் கிரண். நீ ஒரு போலி போலீஸ் உன்னிடம் எனக்கு ஒன்றும் பயமில்லை என்றான் சிவா. கிரண் போனை தூண்டித்தான். உதித் அவனால் தனக்கு ஆபத்தா என யோசித்தான் கிரண். அவன் படிக்கிற பையன் இப்போதைக்கு அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று நினைத்தான். உதித் சிவாவுடன் வந்து ஷெரினையும், ஸ்வேதாவையும் சிறையில் சந்தித்தான். ஷெரின் கொஞ்சம் பொறுமையாய் இரு என்றாள். கிரண் மீது எழில் நடவடிக்கை எடுக்கும் நாள் வெகுதூரம் இல்லை என்றாள். ம் அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என்றான் உதித். பேசாமல் சிவாவோடு தங்கி விடு. சிவாவுக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும் என்றான். சரி என்றான் உதித்.
எழில் கமலனை கொன்ற ஆட்களை அரெஸ்ட் செய்யும் முயற்சியில் இறங்கினான். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். ஆனால் முன்பகை காரணமாக செய்ததாக சொன்னார்கள். கிரண் பெயரை தப்பி தவறி கூட சொல்லவில்லை. இது பெரிய ஏமாற்றமாக இருந்தது எழிலுக்கு. மறுபடி கிரணை சந்தித்தான் எழில். என்ன ஒருத்தனும் என் பேரை சொல்லலியா எழில் ஏன்னா அவங்க நான் அனுப்புன ஆளே இல்லை. இன்னொரு கட்சி தலைவர் அனுப்புன ஆளுங்க. உனக்கு அரசியலும் தெரியல குற்றமும் பண்ண தெரியல என்றான் கிரண் .அவசரபடாதே கிரண் உன் நடவடிக்கைகள் எல்லாம் பதிவு பண்ணப்பட்டிருக்கு நீ அந்த ஆனந்த் கூட எவ்வளவு நெருக்கமா இருக்கேன்னு கூடிய சீக்கிரம் ப்ரூவ் பண்ணுவேன் என்றான் எழில்.பண்ணு பண்ணு எவ்வளவு முடியுமோ அவ்வளவு ட்ரை பண்ணு. இந்த நேரம் எந்த அரசியல்வாதி கமலனுக்கு எதிரா செயல்பட்டிருப்பான் என்று கணிக்க முடியவில்லை.
உதித்துக்கு ஃபோன் செய்தான் எழில். எனக்கு உன்னோட ஹெல்ப் வேணுமே என்றான். என்ன சார் சொல்லுங்க. உங்க அப்பாவோட பெர்சனல் திங்க்ஸ் அதாவது அவருக்கு ஆனந்த் தவிர மற்ற எதிரிகள் யாரும் இருந்தாங்களானு தெறிஞ்சுக்கணுமே என்றான். ம் நான் இந்த வீக்கெண்ட் வந்து உங்களை மீட் பண்ணுறேன். அப்போ நாம அப்பாவோட இன்னொரு வீட்டுக்கு கூட்டி போகிறேன் என்றான். சரி உதித் . எழில் ஷிவானி சம்பந்தமாக கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தது விசாரணைக்கு வந்தது. கோர்ட் ஒரு கமிட்டி அமைத்து அதனுடைய பரிந்துரைப்படி செயல்படலாம் என முடிவு செய்யபட்டது. உதித் அந்த வார கடைசியில் எழிலை அழைத்துகொண்டு கமலனுடைய வீட்டுக்கு போனான். கமலன் பிரத்யேக அறை ஒன்று இருந்தது. பணத்துக்காக பழகுனவங்க யாரும் அப்பா சாவுக்கு அப்புறம் என்னை வந்து எதுவும் விசாரிக்க கூட இல்லை. நீங்களாவது கொஞ்சம் முயற்சி பண்ணுறீங்களே என்றான் உதித். அதெல்லாம் மறந்துடு உதித் . கமலனுடைய கார் ஒன்றும் கிடந்தது. அதில் ஒன்றும் கிடைக்கவில்லை. அப்போது கமலனுக்கு நீங்க ஒரே பையனா ? என்றான். ஆமாம் சார் அதிலே என்ன சந்தேகம் என்றான் உதித். ம் கேக்குறேன்னு தப்பா நினைக்க வேண்டாம். வேற யார் கூடவாவது கமலன் நெருக்கமா இருந்தாரா. யோசித்தான் ஆமாம் சார் அவங்க பேரு யாழினி என்றான். அவங்களை நாம சந்திக்க முடியுமா என்றான் எழில் நிச்சயமா என்றான் உதித்.