Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு நாளும் உனை மறவேன் - Part 18

நிர்மலாவிடம் இருந்து ஃபோன் வந்ததும் பரபரப்புடன் அட்டென்ட் செய்தான் எழில். என்ன எழில் சார் கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா இப்போ நிர்மலா உயிரோட இல்லை என்று போனை துண்டித்தது ஒரு ஆண் குரல். வேகமாக நிர்மலா வீட்டுக்கு விரைந்தான் எழில். சுற்றிலும் ஆட்கள் கூடியிருக்க நிர்மலா தம்பி அழுது கொண்டிருந்தான். என்னாச்சு என்றவன் கண்ணில் நிர்மலாவின் சடலம் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்த நிலையில் தென்பட்டது. எழில் சகலமும் ஒடுங்கி நின்றான். அவனுக்கு தான் போகும் திசையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது போல தோன்றியது.செய்தி கேட்டு சிவாவும், உதித்தும் அங்கு வந்தனர். எழில் எந்த சமாதானமும் சொல்ல முடியாமல் தவித்தான். என்ன நடந்தது என விசாரித்த போது இரண்டு பேர் ஜீப்பில் வந்திறங்கி நிர்மலாவை சுட்டதாக நிர்மலாவின் தம்பி நரேஷ் சொன்னான்.விஷயத்தை கேள்விப்பட்ட ஸ்வேதாவும்,ஷெரினும் மிகுந்த வேதனைப்பட்டார்கள். இனி என்ன சார் செய்ய போறோம் ? என்று சிவா எழிலை ஆதங்கத்துடன் கேட்டான். இறுதி சடங்கிற்கு ஷிவானியும் வந்திருந்தாள். எவ்வளவோ எதிர்ப்புகளை மீறி ஆனந்துக்கு தண்டனை வாங்கி தந்திருந்தாள் நிர்மலா.

நிர்மலாவின் மறைவுக்கு பிறகு என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான் எழில். போலீஸ் துறை விரிவான அறிக்கை கேட்டது. நிர்மலாவின் தம்பி இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவனாக இருந்தான். ஷிவானி எழிலை அமைதிபடுத்த முயன்றாள் . ஆனால் எழில் எந்த விதமான சமாதானத்துக்கும் வர முடியாமல் தவித்தான். நிலைக்கொள்ளாமல் தவித்து கொண்டிருந்தவனுக்கு கிரணிடம் இருந்து ஃபோன் வந்தது. இன்னுமா ஆனந்தை பகைச்சிக்கிட்டு இருக்க முடியும்னு நினைக்கிற என்றான். இவனால் ஒரு பதிலும் சொல்லமுடியவில்லை. போலீஸ் விசாரித்து இரண்டு பேரை அரெஸ்ட் செய்தது. நிர்மலாவின் தம்பி நரேஷ் நிர்மலாவை கொன்றவர்கள் அவர்கள் இல்லை என்று சொல்லியபோதும் அதை ஏற்றுக்கொள்ள போலீஸ் தயாராய் இல்லை. ஏதோ ரெண்டு பேரை பிடித்து அவர்கள் தான் குற்றவாளிகள் என அவசரமாக கேஸ் ஃபைல் செய்தது போலீஸ். நரேஷையும் தானே பார்த்து கொள்வதாக சிவா சொன்னான். அது ஒன்றுதான் ஆறுதலான விஷயமாக இருந்தது.

கிரணின் மொபைல் அழைப்புகளை செக் செய்ய முடிவெடுத்தான். இன்னும் ஒரு வாரத்தில் கால் லிஸ்ட் தருவதாக சொன்னார்கள். இதற்கிடையில் யாழினிக்கும் இதே நிலை ஏற்படலாம் என யோசித்தான் எழில். யாழினி வீட்டை கண்காணித்தவர்கள் சௌமியாவின் ஆட்கள்தான் என தகவல் கிடைத்தது. இப்போதைக்கு அதை காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம் என முடிவெடுத்தான். யாழினி வீட்டுக்கு சென்றான். யாழினி வீட்டில் இல்லை. ஃபோன் செய்தான். பக்கத்துல ரேஷன் கடைக்கு வந்திருக்கேன் சார் இன்னும் ஒரு அரைமணி நேரத்தில வந்து விடுவேன் என்றாள். சரி யாழினி நான் வெயிட் பண்ணுறேன் என்றான். யாழினி ரேஷன் பொருட்களுடன் வந்து சேர்ந்தாள் . என்ன சார் விஷயம் யாரோ உங்களுக்கு வேண்டிய வக்கீலம்மாவா சுட்டு கொன்னுட்டதா செய்தி வந்தது என்றாள்.ஆமாம் மறுபடி யாராவது உன்னை தொந்தரவு பண்ணினாங்களா . இல்லை சார் அதுக்கப்புறம் அந்த ரெண்டு பேரும் இந்த பக்கம் வருவதில்லை என்றாள். இவனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தது. நீ ஏன் சௌமியாவுக்கு ஃபோன் பண்ணி பிரச்சனையை பெருசு பண்ணுகிறாய் என்றான். ஆங் அது வந்து ஏதோ கோவத்துல அப்படி பண்ணிட்டேன். சரி நான் வரேன் என்றான். ஏதோ தோன்ற யாழினி வீட்டை நோட்டம் விட்டான். அப்போது அவள் கிச்சன் பக்கம் ஒதுங்கியதும் சின்னபையன் அருகில் வந்து அம்மா புது துப்பாக்கி வாங்கி இருக்குது என்றான்.இதை கேட்ட எழில் அங்கிருந்து அவசரமாக வெளியேறினான்.


எழில் சந்தேகப்பட்டது சரிதான். யாழினியும் மறைமுகமாக ஏதோ வேலைகள் செய்கிறாள். அவளும் நம்பிக்கைக்கு உரியவள் அல்ல. அவள் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி ஃபுடேஜ் பார்க்க ஏற்பாடு செய்தான். ஒரு அதிகாலை நேரத்தில் யாரோ இருவர் டூ வீலரில் வந்து அவளிடம் ஏதோ பார்சல் கொடுத்து செல்வதை பார்த்தான். நரேஷ் வரவழைத்து அந்த வீடியோவை காட்டியபோது அந்த இருவர் தான் நிர்மலாவை கொலை செய்தவர்கள் என்று சொன்னான். யாழினிக்கும் நிர்மலா கொலையில் தொடர்பிருப்பதை அறிந்து குழப்பத்தில் ஆழ்ந்தான் . ஷிவானியிடம் விஷயத்தை சொன்னான். யாழினியை கைது செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டான் எழில். அவள் வீட்டை சோதனை போடுவதற்கான எல்லாவித அனுமதியும் வாங்கி விட்டான். வீடு பூட்டி இருந்தது. கதவை உடைத்து திறக்க முடிவெடுத்தான். அவளுக்கு ஃபோன் செய்தான் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. கதவை உடைத்து திறந்த போது வீட்டில் பொருட்கள் ஏதுமில்லை அவள் நேத்து ராத்திரியே வீட்டை காலி பண்ணி விட்டதாக சொன்னார்கள் அக்கம் பக்கத்தினர். எழில் அவளுடைய ஃபோன் டவர் லொகேஷன் மற்றும் கால் லிஸ்ட் இரண்டையும் உடனே தரும் படி நெட்வொர்க் ஆபரேட்டரிடம் கேட்டு இருந்தான். அந்த இரண்டு நபர்கள் வந்த டூ வீலர் நம்பர் டிரேஸ் செய்தபோது அது பாண்டிச்சேரி ரிஜிஸ்டிரேசன் வண்டியாக இருந்தது. அந்த வண்டி திருடப்பட்டதாக ஒரு கம்ப்ளைண்ட் பதிவாகி இருந்தது. அந்த இரண்டு நபர்களின் முகம் சிசிடிவியில் தெளிவாக பதிவாகி இருந்தது. இருவரும் புதிய குற்றவாளிகள் அதனால் அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.

யாழினியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அவள் பிள்ளைகளையும் எங்கு கூட்டி சென்றிருப்பாள் என்பது புதிராக இருந்தது. ஸ்வேதா விடுதலை ஆகும் நாள் நெருங்கி கொண்டிருந்தது. இன்னும் ஒரு வாரமே இருந்தது. சிவா மற்றும் உதித் உடன் நிர்மலாவின் தம்பி நரேஷ் தங்கி இருந்தான். அவன் மனதிலும் ஆயிரம் கேள்விகள் இருந்தன. ஸ்வேதா விடுதலை ஆன பிறகு என்ன செய்ய வேண்டும் என யோசித்தபடி இருந்தான் சிவா. அவர்களுக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்தான் சிவா. யாழினி காஞ்சிபுரம் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. விரைந்து அங்கு போனான் எழில்.
குழந்தைகள் மட்டுமே அங்கு இருந்தனர். அவள் கொடுத்ததாக சொல்லி ஒரு கடிதத்தை கொடுத்தனர். எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னுடைய குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டினார்கள் அதனால் தான் அதை செய்தேன், நான் போகிறேன் என்று மொட்டையாக அந்த கடிதம் முடிவடைந்திருந்தது. குழந்தைகளை காப்பகத்தில் சேர்க்க சொல்லி உத்தரவிட்டான். மேலும் அவள் வீட்டை சோதனை போட்ட போது நிர்மலாவை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி சிக்கியது.

இரண்டு நாட்கள் கழித்து யாழினியின் சடலம் பீச் ஓரம் ஒதுங்கி கிடப்பதாக தகவல் வந்தது. யார் யாழினியை கொலை செய்திருப்பார்கள் என்ற கேள்வியுடன் வலம் வந்தான் எழில். யாழினி கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சு திணறி இறந்து இருந்தாள் என போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் சொன்னது. யாழினியிடம் துப்பாக்கியை கொடுத்து மறைத்து வைக்க சொன்ன அந்த இரண்டு பேருமே இவளையும் கொன்று இருக்கலாம் என நினைத்தான் எழில். ஸ்வேதாவை சிறைக்கு போய் அழைத்து வந்தார்கள் உதித்தும் சிவாவும். ஸ்வேதா இப்போது சற்று தெளிவானவளாக இருந்தாள். அவள் அழவில்லை. ஷெரினை நினைக்கும் போதுதான் வேதனையாக இருக்கிறது என்று சொன்னாள். எழிலையும் ஷிவானியையும் சந்திக்க வேண்டும் எப்படியாவது ஷெரின் தண்டனை காலத்தை குறைக்க வேண்டும் என நினைத்தாள். யாழினி இறந்தது அவள்தான் நிர்மலாவின் கொலையில் முக்கிய பங்கு வகித்தாள் என்பதும் உதித்தால் நம்ப முடியவில்லை. வேண்டுமென்றே யாரோ அவளை இதில் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள் என உதித் நினைத்தான். எழிலிடமும் அதையே சொன்னான்.

ஸ்வேதா சிவாவுடன் எழிலை சந்தித்து ஷெரின் பற்றிய வேண்டுகோளை வைத்தாள். இப்போதைக்கு ஷெரின் வெளியே வந்தா அவளுடைய உயிருக்கு தான் ஆபத்து என்றான் எழில். இந்த யாழினி கேஸ் வேற குழப்பமா இருக்கு நீங்க ஒண்ணு செய்யுங்க ஒரு மனுவா எழுதி என்கிட்ட குடுங்க நான் என்ன செய்ய முடியுமோ செய்யுறேன் என்றான். சரி சார். போலீஸ் நடத்திய தீவிர வேட்டையில் இரண்டு பேரில் ஒருவன் பிடிபட்டான். அவனை விசாரித்த போது யாழினி தான் நிர்மலாவை கொலை செய்ய தூண்டியதாக சொன்னான். இன்னொருத்தன் பற்றி கேட்டபோது அவன் காணாமல் போய் விட்டதாக சொன்னான். போலீஸ் விசாரணையை தொடர்ந்ததில் அவன் வேறு எந்த தகவலும் தரவில்லை. ஷிவானியை மீண்டும் ஒருமுறை ஆஜர் ஆகும்படி கமிட்டி சொன்னது. இந்த முறை அவர்கள் நிலைப்பாடு கடுமையான கேள்விகளால் நிரம்பி இருந்தது.அதை ஷிவானி எதிர்பார்த்திருக்கவில்லை . அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாக வெளியே வந்தாள். போனா போகுது என்று சொல்ல வாயெடுத்த எழில் ஒன்றும் சொல்லாமல் இருந்தான்.

அந்த துப்பாக்கி யாருக்கு சொந்தமானது என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. எங்கிருந்து வாங்கப்பட்டது என சொல்ல மறுத்து விட்டான் போலீசில் சிக்கியவன் . ஸ்வேதா மனுவை தயார் செய்து எழிலுக்கு அனுப்பினான். ஷிவானியின் போலீஸ் பதவி திரும்ப அவளுக்கு கிடைப்பதில் அரசியல் தலையீடு இருந்தது. எழில் காணாமல் போன இன்னொரு ஆளை தேடுவதில் பிஸி ஆக இருந்தான். சௌமியாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டான் எழில். அவள் ஊரில் இல்லை என்பது ஏமாற்றமாக இருந்தது. ஆனந்தை அமெரிக்கா ஜான் கேசில் விசாரிக்க அழைத்திருப்பதாக செய்தி வந்தது எழிலுக்கு. கிரண் ஆனந்தின் பயண ஏற்பாடுகளை செய்து வந்தான். கிரண் ஆனந்தை வழியிலேயே தப்ப வைக்க முடிவு செய்திருந்தான்.