Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஹரிதாவின் பகல் கனவுகள் part 4

கனவு 4

ஹரிதாவுக்கு தன் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. சமர் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது போல தன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்று நினைத்தாள். காலம் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தது. ஹரிதா எக்ஸாம்ஸ் எல்லாம் நல்லபடியாக முடித்திருந்தாள்.இரண்டு மாதம் விடுமுறை விட்டிருந்தார்கள் .எங்காவது பயணம் போக வேண்டுமென்று ஹரிதா அம்மா சொல்லிவந்தாள். நீங்கள் போய் வாருங்கள் நான் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி கொள்கிறேன் என்றாள். அதெல்லாம் சரியா வருமா நீ சும்மா இருக்க மாட்டாய் ஊர் வம்பை இழுத்து வருவாய் என்றாள் ஹரிதா அம்மா. அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது நீ தேவையில்லாமல் பயப்படுகிறாய் என்றாள் ஹரிதா. இரண்டு நாட்களில் ஹரிதாவை கொண்டு போய் கிராமத்தில் விட்டுவிட்டு ஹரிதா அப்பா, அம்மா இருவரும் திருச்செந்தூர் சென்றனர். அவர்களது பயணம் ஒரு வாரம் நீடிக்கும் என்றே தோன்றியது ஹரிதாவுக்கு .

ஹரிதா கிராமத்துக்கு சென்றதும் திலீபன், மஞ்சுவை பற்றித்தான் முதலில் விசாரித்தாள். திலீபன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்ற தகவல் கேட்டு ஆறுதல் அடைந்தாள். மஞ்சுவுக்கு வேறு ஒரு பையனோடு திருமணம் ஆகி அதே ஊரில் வசித்து வந்தாள் என கேள்விப்பட்டாள். இதெல்லாம் எப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று ஆச்சர்யப்பட்டாள் . தெரிந்த ஒரு பெண்ணிடம் சொல்லி திலீபனை தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டாள் ஹரிதா. அவனை எங்கே போய் தேடுவது என அலுத்துக்கொண்டாள் அந்த பெண். ஆனால் எப்படியோ திடுமென அவள் வீட்டு மாடியில் தோன்றினான் திலீபன். ஒரு கையை இழந்திருந்தான். என்ன அக்கா என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னீர்களாமே என்றான் . இப்போதும் அவனிடம் பீடி நாற்றம் வரத்தான் செய்தது. ரொம்ப வருத்தமாய் இருக்கிறது என்றாள். எல்லாம் நேரம் அந்த மஞ்சு இப்போ சவுகரியமாய் இருக்கிறாள் என்றான். நீ அவளை பார்த்தாயா? நான்தான் அவள் கல்யாணத்துக்கு போயிருந்தேனே என்றான். இவள் எதுவும் பேசவில்லை. அவன் படியிறங்கி போய்விட்டான். ஹரிதா மனம் திலீபன் நிலைக்காக வருத்தப்பட்டது.

தினம் ஒரு விளையாட்டு என சிறு சிறு விளையாட்டுகளை கற்று வந்தாள் ஹரிதா. அவளுக்கு நீச்சல் தெரியும் என்பதால் குளத்துக்கு சில பெண்களோடு போயிருந்தாள். அவர்களோடு கேலி பேச்சில் கலந்து கொண்டாள். நாட்கள் இனிமையாக நகர்ந்தன. அப்பா அம்மா போனில் நலம் விசாரித்தார்கள்.அவளுக்கு சமர் பற்றிய நினைவே இல்லாமல் போனது. அவள் அந்த கிராமத்தை நேசித்தாள் . அது சிறிய ரக வசதிகள் இல்லாத ஊராய் இருந்த போதும் அங்கு தேவையில்லாத தொல்லை இல்லாதது நிம்மதி தந்தது. அன்றும் அவ்வாறு குளிக்க போயிருந்த போது மஞ்சுவை பார்த்தாள். அவள் இவளை பார்த்ததும் அழுதாள். அவள் கழுத்தில் புது தாலி மின்னியது. அக்கா என்னுடைய நிலமையை பார்த்தீர்களா என்றாள். இவள் வயதுக்கு அவள் அனுபவம் பெரிது. எல்லாம் சரியாகிடும் மஞ்சு என்றாள். அப்போது திலீபன் அங்கு வர மஞ்சு வேகமாக அங்கிருந்து கிளம்பி போனாள். இவள் பார்த்த காதல் ஜோடி இப்போது தனித்தனியாக.

ஹரிதா அந்த ஊர் கோவிலுக்கு போயிருந்தாள். கடவுள் அதன் சக்தி அதன் பின்னணி எல்லாம் சொன்னார்கள். கடவுள் மனம் மட்டும் ஏன் மண்ணில் மனிதர்களிடம் இறங்குவதில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள் . சௌமியா போன் பண்ணியிருந்தாள். என்னடி ஊருக்கு வர போறதில்லையா என்றாள். அடுத்த வாரம் வந்து விடுவேன் ரஞ்சித் எப்படிஇருக்கிறான்? என்றாள் ஹரிதா . அவனுக்கென்ன நன்றாய் இருக்கிறான். சமர் பற்றி கேட்பாய் என எதிர்பார்த்தேன் என்றாள் சௌமியா. அவன் சபரிமலை போயிருக்கிறான் என்றாள் ஹரிதா. ம் அப்போ உனக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது. நீ சீக்கிரம் வா உன்னிடம் நிறைய பேசவேண்டும் என்றாள் சௌமியா. சரி ஊருக்கு வந்ததும் உனக்கு கால் பண்ணுகிறேன் என்றாள். திலீபன் ஏதோ ஒரு மெக்கானிக் ஷெட் ஒன்றில் வேலை பார்ப்பதாக சொன்னார்கள். இவள் டூ வீலர் ஓட்ட கற்றுக்கொள்ள ஆசைப்பட்டாள் . திலீபனிடம் ஹெல்ப் கேட்டாள். நான் எப்படி நானே ஒத்த கை என்றான்.

ஹரிதா பக்கத்து வீட்டு பெண் மூலம் ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.நல்ல முன்னேற்றம் இருந்தது. தனியாய் ஓட்டும் அளவுக்கு வந்திருந்த நேரம் அது. பஞ்சர் ஆகி விட்டிருந்தது. திலீபன் மெக்கானிக் ஷெட் சென்றிருந்தாள். உக்காருங்க அக்கா என சேர் எடுத்து போட்டான். அவள் அவனையே பார்த்தபடி இருந்தாள். ஒரு வழியாய் வண்டிக்கு பஞ்சர் போட்டான். காசு வாங்க மறுத்துவிட்டான். இவள் கட்டாயப்படுத்தி கொடுத்து வந்தாள். சில நேரம் நல்ல மாதிரி இருக்கிறான் சில நேரம் முரடனாய் மாறி விடுகிறான். அடிக்கடி பீடி குடிக்காதே என்று சொல்லிவிட்டு வந்தாள். நிலை மாறி மாறி மனம் தடுமாறியது. தானும் மஞ்சுவும் கிட்டதட்ட ஒரே வயதுதான். அவள் நிலை இவளுக்கு கவலை அளித்தது. நிழல் போல திலீபன் நடவடிக்கைகளை தான் பார்ப்பது அவனுக்கு தெரியுமா தெரியாதா என்பது பற்றி ஹரிதா கவலைப்படவில்லை. மரங்கள், மேலும் மரங்கள் அவற்றின் நிழல்கள். ஒரு நாள் ராத்திரி மணி 11 இருக்கும் . இவளுக்கு தூக்கம் வரவில்லை. ஹெட் செட் ஒன்றில் பாட்டு கேட்டுக்கொண்டு வாசலில் சேர் போட்டு அமர்ந்திருந்தாள்.

திலீபன் வந்தான் என்ன அக்கா பிஸியா என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை சொல்லு என்றாள். ரொம்ப பசிக்குது என்றான். இரு என்ன இருக்குதுன்னு பார்க்கிறேன். அவள் உள்ளே போய் பிஸ்கட் பாக்கெட் ஒன்றை கொண்டு வந்து கொடுத்தாள். சோறு இல்லையா? இல்லை திலீபன். மணி ஆகிவிட்டது அல்லவா என்றாள். இவள் பேசும் சத்தம் கேட்டு தாத்தா யாரும்மா வெளியில என்றார். திலீபன் உடனே கிளம்பி போனான். பாவம் திலீபன் நாளைக்கு சோறு கொஞ்சம் வைத்து இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.இன்னும் இரண்டு நாட்களில் ஊருக்கு போக வேண்டும். அவள் மனம் திலீபனிடம் ஏதோ சொல்ல வேண்டும் என துடித்தது. அவன் அன்று இரவு வருவான் என எதிர்பார்த்தாள் . வரவில்லை. இவளுக்கு ஏமாற்றமாய் போயிற்று. மஞ்சுவை மறுபடி பார்க்க முடியவில்லை. மறுநாள் காலையில் அந்த செய்தியை தாத்தாதான் சொன்னார் மஞ்சுவும், திலீபனும் ஊரை விட்டு ஓடி விட்டார்கள் என்று. இவள் நிம்மதி அடைந்தாள் . ஆனால் எவ்வளவு நாள் தாக்குபிடிப்பார்கள் . இவர்கள் எப்படியும் தேடிப்பிடித்து இருவரையும் பிரித்து விடுவார்கள் என்றெண்ணினாள்.

மஞ்சு போகும் போது தாலியை கழற்றி கோவில் உண்டியலில் போட்டு சென்றதாக சிலர் சொன்னார்கள். ஹரிதாவுக்கு அந்த தாலியை பார்க்க வேண்டும் போல இருந்தது. குளிக்க போயிருந்தாள். கொஞ்சம் ஆழம் உள்ள பகுதிக்கு சென்று நீந்தி குளித்தாள். என்ன செய்ய முடியும் தான் திலீபனுக்கு எந்த வகையிலும் உதவ முடியவில்லையே என நினைத்தாள். ஹரிதா ஊர் திரும்பும் நாள் வந்தது. அப்பா ஊரில் இருந்து வந்திருந்தார். இவள் எல்லோரிடமும் சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்ப தயாராய் இருந்தாள். அப்பா இவளை அழைத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தார். மறுநாள் சௌமியா வீட்டுக்கு வந்திருந்தாள். இருவரும் கதைகள் பேசினார். சமர் சபரிமலை பயணத்தில் இருந்து வந்துவிட்டான் என பேச்சுக்கு இடையில் சௌமியா சொன்னாள். ரஞ்சித் தன்னிடம் நெருங்க முயற்சித்ததாகவும் இப்போது வேண்டாம் என தான் சொல்லிவிட்டதாகவும் சௌமியா சொன்னாள். டீச்சரை கோவிலில் வைத்து பார்த்ததாகவும் ஹரிதா பற்றி கேட்டதாகவும் சொன்னாள்.
சௌமியா விடைபெற்றுக்கொண்டாள்.

வேறு ஏதாவது கிளாஸ் போகலாமா என யோசித்தாள். யோகா கிளாஸ் போக முடிவெடுத்தாள் . அவள் பெண் யோகா டீச்சர் பெயர் சிந்து. கல்யாணம் ஆகியிருந்தது. வீட்டிலேயே மாடியில் கொட்டகை போட்டு 30 பேருக்கு யோக சொல்லிக்கொடுத்து வந்தாள். இவளை அவளுக்கு அறிமுகம் இல்லை. சிந்து நன்றாக பேசினாள். இங்கே கவனம் ரொம்ப முக்கியம் ஹரிதா என்றாள். அங்கேயும் சமர் வந்துவிட கூடாதென்று இவள் மனம் சொல்லியது. யோகாவுக்கென பிரத்யேக உடைகள் வாங்கினாள். உடை மாற்றும் வசதி கூட சிந்து அங்கே செய்திருந்தாள் . சிந்துவின் கணவன் சூப்பர் மார்க்கெட் ஒன்றை வைத்திருந்தான். அவளுக்கு குழந்தைகள் இல்லை. சிந்து எப்பவும் சிரித்த முகத்துடன் இருப்பாள். அது ஹரிதாவுக்கு ரொம்ப பிடித்திருந்தது, சௌமியாவையும் யோகா வகுப்பில் சேரும்படி ஹரிதா வற்புறுத்தினாள் . ஆனால் சௌமியா அதற்கெல்லாம் நேரம் இல்லை என்று சொல்லிவிட்டாள்.
சிந்து, அவள் கணவன் இருவரும் மாறி மாறி யோகா சொல்லி கொடுப்பார்கள். இவள் சிந்துவின் கணவன் சிரித்தே பார்த்ததில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

விடுமுறை முடிய இன்னும் ஒரு மாதம் பாக்கியிருந்தது. அம்மாவிடம் அவ்வப்போது சமையலும் கற்று வந்தாள் ஹரிதா. அவளுக்கு சமையல் செய்ய பிடித்திருந்தது. திலீபன் சோறு கேட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது. அவன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்திருந்தால் அப்படி கேட்டிருப்பான் என யோசித்து பார்த்தாள். மஞ்சு அவனுக்கு வயிறார சோறு போட்டுக்கொண்டிருப்பாள் என நம்பினாள். சீக்கிரமே யோகா அவளுக்கு நல்ல பலன் தருவதாக சிந்து சொன்னாள். இவளுக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை.பிருந்தா டீச்சர் மாதிரி நெருக்கமாக பழகவில்லை எனினும் இவளும் நல்ல யோகா டீச்சர் . சிந்து அவ்வப்போது சூப்பர் மார்க்கெட் வருவதும் உண்டு. நல்ல திறமைசாலி.சௌமியா இவளை சினிமாவுக்கு கூப்பிட்டாள். ரஞ்சித் வருகிறானா என்றாள் ஹரிதா இல்லை நாம் மட்டும்தான் போகிறோம் என்றாள் சௌமியா. அந்த படம் காதல் சோக படம். சௌமியா படம் பார்க்கும் போது இடையில் அழுதாள்.இவளுக்கு சிரிப்புதான் வந்தது. ஏண்டி நீ இவ்வளவு எமோஷனல் ஆகுற என்றாள் ஹரிதா . அது உனக்கு இப்போ புரியாது என்றாள் சௌமியா.

சமர் ,திலீபன்,மஞ்சு, சௌமியா, ரஞ்சித் இவர்கள் எல்லோரும் இருந்தும் தனிமை இவளை வாட்டி எடுத்தது. தானும் அவர்கள் போல துணிச்சலாக யாரையாவது லவ் பண்ணினால் என்ன என்று தோன்றியது. நாமாக போய் சொன்னால் அது லவ் என்று யார் ஒத்துக்கொள்வார்கள். நம்மை விரும்புபவர்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். சிந்துவிடமே கேட்டு விட்டாள். நீங்கள் லவ் மேரேஜா மேடம் என்றாள். எப்படி கண்டுபிடித்தாய் என்றாள் சிந்து. சும்மாதான் கேட்டேன். அவரும் நானும் காலேஜ் கிளாஸ்மேட்ஸ் என்றாள். ஆனால் அவர் சிரிக்கவே மாட்டேன் என்கிறாரே என்றாள். சிந்து அதுதான் அவரிடம் உள்ள ஸ்பெஷாலிடி . நான் அதிகம் சிரிப்பேன் ..அவருக்கு சிரிப்பு மறந்து விட்டது. எங்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதால் அவருக்கு அந்த சிரிப்பின் மீது நம்பிக்கை போய்விட்டது என்றாள்.