கனவு 3
டீச்சர் அப்படி அழுது ஹரிதா பார்த்ததில்லை. அழாதீங்க மேடம் என்று சொன்னாள். எல்லாம் என்னுடைய நேரம் என்று சொன்னாள் பிருந்தா. இருங்க நான் காபி போட்டு எடுத்து வரேன் என கிச்சன் உள்ளே போனாள். எல்லாவற்றையும் தேடி எடுத்து காபி போட்டு கொண்டு வந்து டீச்சரிடம் கொடுத்தாள். ரொம்ப தாங்க்ஸ் ஹரிதா என்றாள். என்ன இந்த டீச்சர் நம்மை விட வீக் ஆக இருக்கிறார்கள் என்று யோசித்தவாறே விடைபெற்றுக்கொண்டாள். ஹரிதா மனதில் டீச்சர் மேல் பரிதாபமே உண்டாயிற்று. அன்று எப்பவும் போல ஸ்கூல் போனாள். வகுப்புகள், போதனைகள் என தொடர்ந்தன. என்ன மாதிரியான பருவம் இது . எல்லோரும் இந்த பருவத்தில் சந்தோஷத்தின் உச்சியில் இருப்பதாக சொல்வார்கள். தான் மட்டும் அதில் இருந்து விலகி சதா சந்தேகத்துடனே இருக்கும்படி உள்ளதே என கருதினாள். அவள் அம்மாவிடம் இது பற்றி கேட்ட போது உனக்கு எந்தவித தொந்தரவையும் நாங்கள் கொடுக்கவில்லை. நீயாக எந்த ஆசையும் வைத்துக்கொள்ளவில்லை அதனால்தான் இந்த சந்தேகம் என்றாள். உனக்கென ஆசைகள் வரும்போது அதை நிறைவேற்ற நீ முயலும் போது வாழ்க்கையை புரிந்து கொள்வாய் என்றாள் அம்மா.
சௌமியா வீட்டுக்கு வந்திருந்தாள் அவளிடம் பிருந்தா டீச்சர் அழுத கதையை சொன்னாள் ஹரிதா. அதெல்லாம் அப்படித்தான் பெண்கள் என்றாலே அழுகைதான் என்றாள் சௌமியா சிரித்தபடி. நாளைக்கு ஒரு முக்கியமான நபரை அறிமுகப்படுத்த போகிறேன் நீ கட்டாயம் என் வீட்டுக்கு வா என்றாள் . யார் அது எனக்கு தெரியாமல் ?அதெல்லாம் ஸஸ்பென்ஸ் . ஈவினிங் 5 மணிக்கு வந்து விடு என்றாள். சரி வருகிறேன். புஸ்தகமெல்லாம் தூக்கிக்கொண்டு வராதே என்றும் சொன்னாள். யாராயிருக்கும் ? என்று பலவாறாக யூகித்து பார்த்தாள் ஒன்றும் பிடிபடவில்லை. இவள் தெரிந்தவர்களிடம் பேசவே தாளம் போடுவாள். இதில் முன்பின் தெரியாத நபர் வேறா ?மறுநாள் ஸ்கூல் விட்டு வந்ததும் தயாராகி சௌமியா வீட்டுக்கு சென்றாள். இவள் ஒரு சைக்கிள் வைத்திருந்தாள். அதில்தான் சென்றாள். சௌமியா இவளை வரவேற்றாள். இவன்தான் நான் சொன்ன கசின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஃபைனல் இயர் படிக்கிறான் பெயர் ரஞ்சித்.இவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். நல்ல படிப்பாளி போல கண்ணாடி போட்டிருந்தான். அவன் ஹரிதாவை பார்த்து என்ன அப்படி பார்க்கிறீர்கள் என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை நிஜமாகவே இவளுக்கு இப்படி ஒரு ஃப்ரெண்ட் என்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. மூவரும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டார்கள். இவளுக்கும் இன்ஜினியரிங் படிக்க ஆசைதான் என்றான் ரஞ்சித். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பினாள் ஹரிதா. அடிக்கடி சந்திப்போம் என்றான் ரஞ்சித். நிச்சயமாக என்றாள்.
சௌமியா கொடுத்து வைத்தவள் அவள் விருப்பத்துக்கு ஒரு ஃப்ரெண்ட். அதுவும் ஆறடி உயரத்தில் . ம் அதெல்லாம் நமக்கும் ஒரு நேரம் வரும்.. நாமும் ஆசைப்பட்ட மாதிரி வாழ்க்கை மாறும் என சொல்லிக்கொண்டாள். இவள் வீட்டுக்கு ஒரே பெண் குழந்தை என்பதால் கவனத்துடனும் செல்லமாகவும் வளர்த்தார்கள். அதுவே இவள் சுதந்திரத்துக்கு தடையாக இருந்தது. அப்பா ,அம்மாவே உலகம் என்று சுற்றி வந்தாள். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருக்கும் போக போக எல்லாம் வித்தியாசமாய் தெரிந்தது. அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு இருப்பதில் சில சங்கடங்கள் இருந்தன. அதனாலேயே அவளுக்கு ஆண்கள் அறிமுகம் இல்லாமல் போயிற்று. சௌமியா அதெல்லாம் கரைத்து குடித்தவள். அவள் அழகுக்கும் , அறிவுக்கும் தானாக வந்து பழக துடித்தவர்கள் ஏராளம். ஆனால் அவள் எல்லாவற்றிலும் ஒரு லிமிட் வைத்திருப்பாள். அது அவளது கட்டுப்பாட்டில் இருக்கும். இதை நினைக்கும்போது ஹரிதாவுக்கு பெருமையாக இருக்கும்.
ஹரிதாவுக்கு காலையிலேயே சௌமியா ஃபோன் பண்ணிவிட்டாள். நானும் ரஞ்சித்தும் வெளியில் கண்காட்சி பார்க்க போகிறோம். நீ எனக்கு லீவு சொல்லிவிடு என்றாள். சரி சௌமியா.அவள் இல்லாத பொழுது வகுப்புகள் போரடித்தது.நாமும் எங்காவது போனால் என்ன என்று தோன்றிற்று. யார் நம் கூட வருவார்கள். சமர் ? அவனைத்தான் அடிக்காத குறையாக அனுப்பியாயிற்று .. நீ ரொம்ப மோசம் என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள். அவன் சினிமாவுக்கு கூப்பிட்டால் போயிருக்கலாம். தடவத்தான் செய்வான் அதை பொறுத்துக்கொள்ள வேண்டும் . அந்த பொறுமை இவளுக்கு கிடையாது. சிரித்துக்கொண்டாள். நாம் பொறுமையாக இருந்திருந்தால் இந்நேரம் சமர் எனக்கு குழந்தையே கொடுத்திருப்பான் அப்படிப்பட்டவன்தான் அவன் . ஈவினிங் அவள் அப்பா சீக்கிரம் வந்துவிட்டார். என்னம்மா எக்ஸாம் நெருங்குகிறது பயமெல்லாம் இல்லையே என்றார். இவள் நான் நிச்சயம் நல்ல மார்க் வாங்குவேன் என்றாள்.
மறுநாள் மொபைல் போனில் ரஞ்சித்தும், சௌமியாவும் எடுத்துக்கொண்ட போட்டோக்களை காட்டினாள் . சூப்பர் ஜோடி என்றனர் எல்லோரும். என்னடி நீ ஒண்ணுமே சொல்லலை என்றாள் சௌமியா. எனக்கு லேசாக பொறாமை என்றாள் ஹரிதா. அதெல்லாம் சும்மா. நிஜமாகவே இவன் எனக்கு பொருத்தமானவனா? என்றாள் . நிச்சயம் நீ கவலைப்பாடாதே என்றாள் ஹரிதா.சௌமியா என்னவோ தோன அந்த சமர் மாறுபடி உன்னை வந்து பார்த்தானா என்றாள். அதெல்லாம் எப்பவோ நிறுத்தியாச்சு. அவன் எனக்கு சரிப்பட்டு வரமாட்டான் . ம் அவனும் ஹேண்ட்ஸம்தான். ஆனால் எந்த பெண்ணை பாரத்தாலும் வழிவான் அதுதான் அவனிடத்தில் உள்ள குறை என்றாள் ஹரிதா. ஹரிதாவுக்கு அன்று இரவு தூக்கம் இல்லை. கொஞ்ச நேரம் அப்பா மொபைல் நோண்டிக்கொண்டிருந்தாள். ம் இப்படியே இருப்பதற்கு உருப்படியாய் ஏதாவது செய்யலாம் என நினைத்தாள். அவளுக்கென மொபைல் இல்லை. சயின்ஸ் புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள் . சௌமியாவுக்கு ஃபோன் போடலாமா என யோசித்து பிறகு வேண்டாம் அவள் அவன் பாய் ஃப்ரெண்ட் உடன் பேசிக்கொண்டிருப்பாள் என எண்ணினாள்.
வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் தூக்கம் வந்து விட்டது. அவள் மங்கிய கனவில் ரஞ்சித் வந்து போனான். அவள் திடுக்கிட்டு விழித்தாள். கிச்சன் போய் ஃபிரிஜ் திறந்து தண்ணீர் குடித்தாள் . கனவு மோசமான கனவு. போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கினாள் . இம்முறை கனவில் கூட கவனமாய் இருக்க வேண்டும் என எண்ணினாள். இறக்கைகள் விரித்து பறக்கிற கனவென்றால் அவளுக்கு ரொம்ப இஷ்டம். தன் இஷ்டத்துக்கு பறக்கிற நிலை. தான் மட்டுமே பறக்காமல் பறவைகள் மொத்தமாக பறக்கிற நிலை இவை இரண்டும் அவளுக்கு பிடித்தமானவை .மணி காலை 4 தான் ஆகியிருந்தது . மியூசிக் கேட்கலாம் என முடிவெடுத்தாள். அதிலும் சில பாட்டுக்கள் அவளுக்கு உற்சாகத்தை தந்தன . அவள் தன்னை மறந்து பாட்டுக்கு தலையசைத்த வண்ணம் இருந்தாள் . ஃபோன் அடித்ததை அவள் கவனிக்கவில்லை. அப்புறம்தான் கவனித்தாள் . சமரிடம் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தது. இவள் அவன் நம்பரை பிளாக் செய்தாள்.
என்னம்மா சமர் நம்பர் பிளாக் செய்திருக்கிறாயே என்றார் அப்பா. அவன் அதிகாலையில் ஃபோன் பண்ணினான். அதுதான் என்றாள். சரிம்மா உன் விருப்பம் என்றார். சௌமியா ஏண்டி அவசரப்பட்டு பிளாக் பண்ணினே . அதெல்லாம் ஒரு விஷயமா? வேறு ஏதாவது பேசேன். ரஞ்சித் அப்புறம் என்ன சொன்னான். அவனுக்கென்ன கல்யாணத்துக்கு கூட ரெடி என்று சிரித்தாள். கொடுத்து வைத்தவள் நீ என்றாள். எதுக்கு பிளஸ் டூ முடிப்பதற்குள் மூன்று பிள்ளை பெறவா? என்றாள் சௌமியா. அதெல்லாம் கொஞ்ச நாள் நல்லாயிருக்கும். அப்பா அம்மா என்ன சொல்லுகிறார்களோ அதுதான் கடைசி என்றாள். ஹரிதா என்ன ஒரு புத்திசாலித்தனம் சௌமியாவுக்கு என வியந்தாள். நாளைக்கு நாங்கள் முதலைப்பண்ணையும், பாம்பு பண்ணையும் போகிறோம் நீயும் வருகிறாயா என்றாள். கேட்கவே பயமாய் இருக்கிறது. நான் எதற்கு இடைஞ்சலாக என்றாள். அதெல்லாம் ஒன்றுமில்லை நான் உன் அப்பாவிடம் பேசுகிறேன் என்றாள். இவள் மறுப்பேதும் சொல்லவில்லை.
காலையில் காரில் வந்து விட்டார்கள் ரஞ்சித்தும் , சௌமியாவும்.பார்த்து போயிட்டு வாங்க என்றார் ஹரிதாவின் அப்பா. அன்று சண்டே என்பதால் கூட்டம் இருந்தது. முதலைகள் , பாம்புகள் எத்தனை விதங்கள் . இவள் எல்லாவற்றுடன் போட்டோ எடுத்துக்கொண்டாள். ரஞ்சித்தும், சௌமியாவும் செல்பி எடுத்துக்கொண்டனர். மாலை 6 மணி போல வீடு திரும்பினர். ஹரிதாவை வீட்டில் டிராப் செய்தனர். இவளுக்கு ரொம்ப நாள் கழித்து வெளியில் சுற்றி திரிந்த சந்தோஷம்.போட்டோக்களை மெசேஜ் செய்திருந்தாள் சௌமியா. அவற்றை அம்மாவிடமும், அப்பாவிடமும் காட்டி மகிழ்ந்தாள் .உனக்கொரு ஃபோன் வாங்கி தரேன் என்றார் அப்பா. அதெல்லாம் வேண்டாம் நான் காலேஜ் போகும்போது வாங்கி கொடுங்கள் என்றாள். என்னவோ உனக்கு துணையாக இருக்குமென்று நினைத்து சொன்னேன் என்றார். அதெல்லாம் இப்போ ஒண்ணும் வேண்டாம் என்றாள். ஹரிதா மறுநாள் காலையில் எழுந்திருக்க சற்று லேட் ஆகி விட்டது. அவசர அவசரமாக ஸ்கூல் போனாள்.
இடைவேளையின் போது தான் பார்த்த பாம்புகளை அவை படமெடுத்த விதங்களை பற்றி நண்பிகளுடன் பகிர்ந்து கொண்டாள். முதலைகள் உணவு உண்ணும் விதம் பற்றி விவரித்தாள். ஹரிதா போதும்டி விட்டா இங்கேயே பாம்பு கொண்டு வருவா போல என கிண்டல் அடித்தார்கள்.மற்றவர்கள் முன் தானும் இயல்பாக இருப்பது போல காட்டிக்கொள்வதில் எல்லோரையும் போலத்தான் ஹரிதாவும்.
சௌமியா ரஞ்சித் பற்றியும் கேட்டார்கள். இவள் நல்ல ஜோடி பொருத்தம் என்றாள். மாலை வீடு திரும்போது சமர் நம்பர் பிளாக் பண்ணி விட்டாயா என்றாள் சௌமியா ? ஆமாம் அவன் என்ன காலை நாலு மணிக்கெல்லாம் மிஸ்டு கால் கொடுக்கிறான் என்றாள் ஹரிதா. ம் அவனுக்கும் அப்போதுதான் நேரம் இருந்திருக்கிறது போல. இவள் எதுவும் சொல்லவில்லை. சௌமியா விடை பெற்றுக்கொண்டாள்.என்னவோ போல இருந்ததால் கோவிலுக்கு போய் வர முடிவெடுத்தாள். அம்மா வரவில்லை என்று சொல்லிவிட்டாள். கோவில் வாசலில் சமர் நின்று கொண்டிருந்தான் அவன் சபரி மலைக்கு மாலை போட்டிருந்தான். இவள் பார்க்காதது போல போக முயன்றாள். அவனும் தடுக்கவில்லை. உள்ளே சபரிமலை பூஜை நடந்து கொண்டிருந்தது.
ஹரிதா அவசரமில்லாமல் சாமி கும்பிட்டாள். அவனுக்கு பயந்து நாம் ஏன் ஓட வேண்டும் என எண்ணினாள். இவளுக்கும் பிரசாதம் கொடுத்தார்கள். யார் எப்படி போனால் எனக்கென்ன என்ற மனநிலையே பிரதானமாய் இருந்தது. அவன் எங்கு இருக்கிறான் என பார்த்தாள். அவன் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருந்தான். மனதார அவளுக்காக வேண்டிக்கொண்டாள். எனக்கு தேவையில்லாத விஷயங்களில் சலனத்தை கொடுக்காதே கடவுளே என்று வேண்டிக்கொண்டாள். சமர் அவனுடைய அப்பா அம்மா காலில் விழுந்து வணங்கினான். பிறகு அய்யப்ப பக்தர்கள் பயணிக்கும் வேன் ஒன்றில் ஏறிக்கொண்டான் .