Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஹரிதாவின் பகல் கனவுகள் part 2


கனவு 2
ஹரிதாவுடைய உலகம் முற்றிலும் வேறாக இருந்தது. சமரை பார்த்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. பிருந்தா டீச்சரிடம் அவனைப் பற்றி கேட்கலாம் என நினைத்தாள். பிறகு வேண்டாம் போனவன் போனவனாகவே இருக்கட்டும் என்று சொல்லிக்கொண்டாள். ஆனால் அவனை எதிர்த்து அவனோடு சரிக்கு சமமாக பேச முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. பிற பெண்களை போல தானும் மற்ற ஆண்களுடன் நட்பாக பழக முடியாதது குறித்து யோசித்தாள்.அப்படித்தான் ஆரம்பிப்பார்கள் என்று சௌமியா சொல்லியிருந்தாள். அவர்கள் நோக்கமெல்லாம் உடல் ரீதியானது என்றே ஹரிதாவுக்கு போதிக்கப்பட்டு இருந்தது.உடல் ரீதியாக தான் எந்த வகையிலும் தாழ்த்தப்படக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள். ஹரிதா ஊர் திருவிழாவிற்காக அப்பாவுடைய சொந்த கிராமத்துக்கு சென்றிருந்தாள் .அங்கு பாட்டியும், தாத்தாவும் இருந்தார்கள். திருவிழா களை கட்டியிருந்தது.ஹரிதா உற்சாகமாக அங்கு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டாள். மனம் லேசாக இருந்தது. இப்படியே அப்பா, அம்மா . தாத்தா , பாட்டி என்று குடும்பம் என இருந்துவிட்டால் போதும் .. தனக்கு துணை ஒன்று தேவையில்லை என கருதினாள் . அங்கிருந்த இளைஞர்கள் சிலர் இவளை கிண்டல் செய்தனர். இவள் அதனை அலட்சியப்படுத்தினாள் .

மதியம் எல்லோரும் வீட்டில் அசந்து போய் தூங்கி கொண்டிருந்தனர்.இவள் மாடிப்பக்கம் போனாள் . வெயில் அவ்வளவாக இல்லை. அப்போது ஏதோ சத்தம் கேட்க எட்டி பார்த்தாள். வாட்டர் டேங்க் பின்புறம் அந்த பெண்ணும்,ஒரு பையனும் நின்று முத்தமிட்டு கொண்டிருந்தார்கள். இவளை பார்த்ததும் அவன் இறங்கி ஓடினான். அவள் வெட்கப்பட்டவாறே நின்றிருந்தாள். என்னாச்சு ஏன் ஓடி விட்டான். பிடிச்சா அடி பின்னிடுவாங்க.. அவன் வேற கேஸ்ட் நான் வேற கேஸ்ட் என்றாள். ம் அப்போ நீ தெரிஞ்சுதான் அவன் கூட இப்படி ? இது எல்லோருக்கும் நடக்கும். அவள் தன் பெயர் மஞ்சு என அறிமுகப்படுத்தி கொண்டாள். அவன் பெயர் திலீபன் என்றாள்.தானும் அவனும் ஒரே வகுப்பில் படிப்பதாகவும் சொன்னாள்.ஹரிதா ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு கீழே போனாள். திலீபன் கீழேயே நின்று கொண்டிருந்தான். இவள் படி இறங்கி கீழே வந்ததும் அவன் மறுபடி மேலே போனான்.ஹரிதா மறுபடியும் தன் அறைக்கு சென்று தூங்க முயன்றாள். ஆனால் மஞ்சுவை அம்போவென்று விட்டு ஓடிய திலீபன் முகமே ஞாபகம் வந்தது.

ஹரிதா காதலிப்பதில் கூட பல பிரச்சனைகள் இருப்பதாக உணர்ந்தாள். அதற்கொரு துணிச்சலும் தேவைப்படுகிறது. தன்னை வருத்திக்கொள்ள தயாராய் இருப்பவர்களே காதல் செய்ய தயாராய் இருக்க வேண்டும் இப்படியாய் அவளது சிந்தனை நீண்டது. இந்த வெப் சீரிஸ் ,சினிமா இவைகள் காதலின் அசல் முகத்தை காட்டுவதில்லை என்றெண்ணினாள் . தான் ரொம்பவும் யோசிப்பதால் ஒரு பலனும் இல்லை. சிலரை போல அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போக வேண்டியதுதான் அதனால் கிடைக்கும் சுகமே பெரிது என பெண்கள் சிலர் நினைப்பதும் உண்டு என எண்ணிக்கொண்டாள் . ஒரு முறை தாழ்ந்து போய்விட்டால் பிறகு எப்பவும் மீள முடியாது. உடல் அதன் மீதான காம பார்வை இவைகளை எப்படி கடக்க முடியும்? தன் தேவைக்காக மட்டுமே பழகுகிறவர்களை எப்படி அடையாளம் காண முடியும் ? யாரிடம் கேட்டால் விளக்கம் கிடைக்கும். அதற்கான விடை அவள் மனதிலேயே இருந்தது. சலனம் அதன் பின் விளைவுகள் போன்றவற்றை பற்றியெல்லாம் சிந்திக்கும் வயதில்லை என்ற போதும் அவளுடைய பருவம் அத்தகைய கேள்விகளை கேட்டது.

மறுபடி அவள் மாடிக்கு போகவில்லை. தன்னையும் அவன் அவ்வாறு நினைத்துவிடக்கூடும் என்ற அச்சம் இருந்தது ஹரிதாவுக்கு. மீண்டும் சமர் நினைப்பு வந்தது. சௌமியாவுடன் போனில் பேசினாள். சமர் அவளிடம் வந்து ஹரிதா பற்றி விசாரித்ததாக சொன்னாள். இவள் அந்த பேச்சை தவிர்த்துவிட்டாள். மற்ற விஷயங்களை பற்றி பேசினாள். இன்னும் இரண்டு நாளில் வந்து விடுவதாக சொன்னாள் ஹரிதா. உடல் ஒரு பக்கம், மனம் மறுபக்கம் என அலையும் கடலும் போல ஓயாத பேரோசை கேட்டுக்கொண்டிருந்தது . முதலில் தான் படிப்பை நல்லபடியாக முடிக்க வேண்டும் . அப்பா அம்மாவுக்கு பெருமை தேடும் படி நடந்து கொள்ள வேண்டும். திலீபன் மறுபடி மாடி ஏறுவதை பார்த்தாள்.என்னவோ தோன பின்னாலேயே போனாள்.அவன் பீடி குடித்து கொண்டு இருந்தான். இவளை பார்த்ததும் பீடியை கீழே போட்டு நசுக்கினான். எங்கே மஞ்சு என்றாள். நான் உன்னை பார்க்கத்தான் வந்தேன் என்றான். இவள் எதுக்காக என்றாள் . தாங்க்ஸ் சொல்லத்தான். ஓ சரி நான் வருகிறேன் தாங்க்ஸ் என்று கிளம்பி போனான். இவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. தன்னுடைய ரிஸ்க் எடுக்கும் தன்மை மீது அவளுக்கு நம்பிக்கை போய்விட்டிருந்தது.

திலீபன் மஞ்சு என்று டேங்க் மீது கிறுக்கியிருந்ததை பார்த்தாள். ம் நானும் எனக்கு பிடித்தவன் பெயரை ஒரு நாள் எழுதுவேன் என சொல்லிக்கொண்டாள்.தனிமை அதன் தீரா குரல் அதன் மாறுபட்ட ஓசைகள் என அதற்கு பழகி விட்டாள் ஹரிதா. இரவு 2 மணி இருக்கும். யாரோ மாடியில் பெண் அழும் குரல் சத்தம் கேட்டது. காதல் பண்ண என் வீட்டு மாடிதான் கிடைச்சுதா என தாத்தா மஞ்சுவின் முடியை பிடித்து இழுத்து அவள் கன்னத்தில் அறைந்தார் . மஞ்சு நொறுங்கி போயிருந்தாள். நீ ஏம்மா இங்கே வந்தே ? பாவம் தாத்தா விட்டுடுங்க என்றாள் ஹரிதா. இவ வேணா தப்பிக்கலாம் அந்த திலீபன் ராத்திரி தாண்ட மாட்டான் என்றார். போய்த் தொலை
இனிமே இந்த பக்கம் வந்தே? என் பேத்தி புண்ணியத்துல தப்பிச்ச என்றார். மஞ்சு ஓடி விட்டாள். இவளுக்கு திலீபன் பற்றிய கவலை இருந்தது. ஊரை விட்டு கிளம்பும் வேளையில் திலீபன் சடலம் கிணற்றில் மிதப்பதாய் பேசிக்கொண்டார்கள். இவள் மனம் மஞ்சுவையும், திலீபனையும் நினைத்து வேதனைப்பட்டது.

கொஞ்ச நாட்கள் அவர்கள் நினைவாகவே இருந்தது. சமர் இவளை தேடிக்கொண்டு வீட்டுக்கே வந்து விட்டான். என்ன சமர் இவ்வளவு தூரம் என்றாள் ஹரிதா உனக்குத்தான் என்னிடம் சொல்லிவிட்டு போகவேண்டும் என்று தோன்றவில்லையே என்றான். இப்போ என்ன விஷயம். அதுதான் உனக்கு தெரியுமே நான் உன்னை சினிமாவுக்கு கூப்பிட்டது தப்புத்தான். அதுக்காக சாரி கேட்க வந்தியா? இல்லை இன்னும் நீ என் மேல கோவமா இருக்கியா ? எனக்கென்ன உன் மேல கோவம். அப்போ நாளைக்கு மீட் பண்ணுவோம் . நான் வரலை . நான் tution ல உனக்காக காத்திருப்பேன் என்றான். இதென்ன வம்பா போச்சு என நினைத்தாள். சமர் உன் வீட்டுக்கே வந்துட்டானா அவனை இனிமே ஒண்ணும் பண்ண முடியாது என்றாள் சௌமியா . அதில்லைடி அவனை எனக்கு பிடிக்காம இல்லை ஆனா அதைபோய் லவ் அப்படின்னு சொல்லுறானே அப்படின்னு வருத்தம் என்றாள் ஹரிதா.
எல்லாம் நல்லதுக்குத்தான். அவன் இன்னும் ரெண்டு மாசத்திலே காலேஜ் போயிடுவான் . அப்புறம் நீயே நினைச்சாலும் அவனை பார்க்க முடியாது. முடிஞ்சா அவன் கூட பழகி பார் என்றாள் சௌமியா.

ஹரிதா மறுநாள் எந்த நினைப்பும் இல்லாமல் டியூஷன் போனாள் .அவன் வந்திருக்கவில்லை. பிருந்தா சமரை இனிமே இங்கே வர வேணாம்னு சொல்லிட்டேன். அவனுக்கு பொண்ணுங்கண்ணா அவ்வளவு லேசா போயிடுச்சு என்றாள் . என்னாச்சு மேடம் என்றாள் ஹரிதா. அவனுக்கு ரொம்ப துளிர் விட்டு போச்சு இங்க வர பொண்ணுங்ககிட்ட ப்ரபோஸ் பண்ணியிருக்கான். அதை என்கிட்டயே பெருமையா சொல்லுறான். ஹரிதா அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தாள். நல்லா வேணும் அவனுக்கு இனி எங்கே வருவான் அப்படியே போனா சரி என்று மனதுக்குள் சொல்லி கொண்டாள். ஹரிதா ஒரு விஷயம் சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ இந்த வயசுல படிப்புதான் முக்கியம் ஓகே வா .. ஓகே மேடம்.ஹரிதா வெளியே வந்த போது தெருமுனையில் ஸ்கூட்டரில் உட்கார்ந்திருந்தான். வா வந்து வண்டியில் ஏறு உன்னிடம் முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்றான். அதுக்கு வேற ஆளை பாரு சமர் என்றாள். டீச்சர் இப்போதான் சொன்னாங்க. ஓ அப்படியா விஷயம் நீ நினைக்கிற மாதிரி மோசமான ஆள் இல்லை நான். என்னவோ எனக்கு உன்னை பிடிச்சிருக்கு அதை சொன்னாலும் நீ கேட்க மாட்டேன் என்கிறாய் என்றான். அவ்வளவுதான் போதும் நீ ஒரு ஃப்ளர்ட் என்று கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தாள்.

எக்ஸாம் நெருங்கி கொண்டிருந்தது. இவளுக்கு ஊர் வம்பு பேச நேரம் இல்லை. எப்படியாவது நல்ல மார்க் வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்பு இருந்தது. மேற்கொண்டு என்ன செய்தால் சமரை தவிர்க்க முடியும் என அவள் யோசிக்கவில்லை.சௌமியா வந்து இரண்டு நாட்கள் சயின்ஸ் சொல்லிக் கொடுத்து விட்டு போனாள். ஹரிதா மனம் பாடப்புத்தகங்களிலேயே லயித்து கிடந்தது. இடையில் சின்னதாய் ஒரு பிரேக் எடுத்து வரலாம் என பிருந்தா டீச்சர் வீட்டுக்கு போனாள். அங்கே சமருடைய வண்டி கிடந்தது. உள்ளே போகலாமா வேண்டாமா என யோசித்தாள். பிறகு தைரியத்தை வரவழைத்து கொண்டு போனாள். கதவு திறந்துதான் கிடந்தது. மேடம் என கூப்பிட்டு கொண்டே காலிங் பெல் அடித்தாள் . அவன்தான் வெளியே வந்தான். மேடம் இல்லையா ? அவங்களுக்கு உடம்பு சரியில்லை . சரி பார்த்துட்டு போறேன் என்றாள். அதெல்லாம் வேண்டாம் அவங்களுக்கு ரெஸ்ட் வேண்டும் என்றான் சமர். சரி நான் வந்து பார்த்ததா சொல்லு என்றாள். என்னவோ நடக்குது என எண்ணிக்கொண்டே வாசல் வரை வந்து விட்டாள் . மாடியில் இருந்து இருவரும் தன்னை பார்த்து சிரிப்பதாய் தோன்றவே மேலே பார்த்தாள். யாரும் அங்கே இல்லை.

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்ததாய் தோன்றியது ஹரிதாவுக்கு. தான் அங்கு போய் இருக்க கூடாதென நினைத்தாள். கனவுகளில் பிருந்தா டீச்சர் சமரோடு .. சே சே அப்படிஎல்லாம் இருக்காது. அப்படி தரம் கெட்டு விட மாட்டார்கள். அப்படியே இருந்தால் தான் என்ன செய்ய முடியும். நம் வயசுக்கு உள்ளதைத்தான் செய்ய முடியும். சௌமியாவிடம் இதை பற்றி சொன்னாள். உனக்கும் தெரிஞ்சு போச்சா இதெல்லாம் இப்போ சர்வசாதாரணம். படிக்கிற வேலையை மட்டும் பாரு என்றாள் . டீச்சர் ஃபோன் பண்ணியிருந்தாள் ஹரிதாவுக்கு . அன்னைக்கு நீ வந்ததா சமர் சொன்னான். எனக்கு கொஞ்சம் உடம்பு முடியலை டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போயிருந்தான். ஓ சரி மேடம். நீ எப்போ வேணும்னாலும் இங்கே வா எக்ஸாம் வருதில்ல என்றாள். சரி மேடம் நான் சந்தேகம் இருந்தா நிச்சயம் வரேன் என்றாள்.
ஹரிதா எதற்காக மேடம் இப்படி ஒரு விளக்கத்தை தர வேண்டும் என யோசித்து பார்த்தாள். சௌமியா சொன்னது உண்மையாக இருக்குமோ என யோசித்தும் பார்த்தாள். ஒன்றும் பிடிபடவில்லை.
நாளைக்கு போய் டீச்சர் நேரில் பார்ப்போம் என நினைத்தவாறே உறங்கி போனாள்.

மறுநாள் ஈவினிங் 7 மணி போல போனாள்.பிருந்தா டீச்சர் இவளை பார்த்ததும் அழத்தொடங்கினாள். எல்லோரும் என்னை தப்பா பேசுறாங்க என்றபடி இவள் கையை பிடித்துக்கொண்டாள்.