Read Park Friends by Ramakrishnan Anantha in Tamil Short Stories | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

பூங்கா நட்புகள்

அந்த நகரத்தின் ஒரு பகுதியில்.... காலை சூரியன் உதயமாக காத்துக்கொண்டு இருக்கும் பறவைகள்... அந்த பகுதியை தூய்மை செய்யும் பணியாளர்கள்... வீட்டிற்கு பால் போடும் பால்காரர்... வீட்டு வேலைக்கு வரும் பெண்கள்... அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கார்களை துடைத்துக்கொண்டு இருக்கும் நபர்கள்.... அங்கும் இங்குமாக நடைபயிற்சி செய்யும் இளசுகள் மற்றும் பெரியவர்கள்... 

அங்கே ஒரு பூங்கா... வாசலில் விதவிதமான பாட்டிலில் கலர் கலராக உடலுக்கு ஏற்ற பானங்கள், இன்னொரு பக்கம் ஒரு 40 வயது மதிக்கதற்க ஒரு பெண்மணி வேர்க்கடலை, சோளம், கொண்டைக்கடலை, போன்றவற்றை வேகவைத்து விற்றுக்கொண்டு இருந்தாள்... அவள் அருகில் ஒரு ஆண் மற்றும் அவரின் மகள் பூ விற்பனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்....

பூங்காவின் உள்ளே.... 

அந்த பூங்காவில் பச்சைபசலேன்று மரங்களின் இலைகள், பூச்செடியில் பூத்திருக்கும் வண்ணவண்ண பூக்கள்... நடுவில் ஒரு பெரிய நீர் தேக்கம் அதன் நடுவில் தாமரை செடிகள்... இந்த நீர் தேக்கத்தை சுற்றி நடைபாதை சிமெண்டினால் போடப்பட்டிருக்கும்... அந்த பூங்காவின் வடகிழக்கு திசையில் ஒரு அறை, அதில் ஒரு மேஜை, நாற்காலி, பழைய நோட்டு புத்தகம், ஒரு பேனா, ஒரு நூல் கண்டு... ஒரு ஓரத்தில் ஒரு மோட்டார்... 

வழக்கம் போல் சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருக்க, கல்லூரியில் படிக்கும் ஆண்கள், பெண்கள் நடைபயிற்சி மற்றும் உடல்பயிற்சி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். சிறுவர்களை அழைத்து வந்த தாய்மார்கள், அவர்களின் மாமியார்,நாத்தனார் பற்றி வழக்கம் போல் பேசிக்கொண்டு தங்கள் நேரத்தை வீணடித்துக்கொண்டு இருந்தார்கள். 

நம்ம ஹீரோ சகாயம், 74 வயது, மிடுக்கான தோற்றம்... ஆங்கிலம் மற்றும் தமிழ் நன்கு அறிந்தவர். பூங்காவில் நுழைம்போது வாசலில் இருப்பவர்களிடம் ஒரு good morning போட்டு விட்டு, உள்ளே நுழைய அவரை பார்ப்பவர்கள் அனைவரும் ஒரு good morning அல்லது காலை வணக்கத்தை போட்டுவிட்டு தான் செல்கிறார்கள். பலரும் அவர் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி என்று நினைத்துக்கொண்டு இருந்தார்கள்... முறுக்கிய மீசை, தோற்றம், etc.... 

அவர் இரண்டு முறை அந்த பூங்காவில் உள்ள சிமெண்டு பாதையில் நடந்துவிட்டு, கடிகாரத்தை பார்க்கிறார்... மணி சரியாக 6.15... வாசலை பார்த்துக்கொண்டு யாரோ வருவதைப்போல் காத்துக்கொண்டு இருக்கிறார். திடீரென்று அவர் முகத்தில் ஒரு புன்சிரிப்பு... 

இரண்டு மனிதர்கள், சகாயத்தின் நண்பர்கள், கார்த்திக் மற்றும் பாலு. இந்த இருவரும் இவர் வயதை சார்ந்தவர்கள் தான். இவரை நோக்கி வருகிறார்கள். 

சகாயம், அவர்களை பார்த்து, "என்னையா ரெண்டுபெறும் ஜோடி சேர்ந்து வரீங்க". அதற்கு பாலு, "நாங்க சகாயம் என்ற ஒருவரை பார்க்க வந்தோம்" என்று கூற, மூவரும் சேர்ந்து சிரித்து அங்கே இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள். 

சகாயத்திற்கு ஒரே ஒரு மகன், சொந்தமாக தொழில் செய்கிறான். அவனுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை. தாத்தாவின் செல்ல குட்டி. கார்த்திக் திருமணத்தில் மனம்கொள்ளாமல் தனியாக வாழ்கிறார். வீட்டை சுத்தம் செய்வது இவரின் உடைமைகளை துவைப்பது, சமைத்து சாப்பிடுவது எல்லாம் இவர்தான். பாலுக்கு 1 பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள். இருவரும் கல்யாணம் ஆனவர்கள். மாப்பிள்ளை கனடாவில் வேலை செய்கிறார். அதனால் பாலுவின் பெண்ணை தந்தை வீட்டில் விட்டுவிட்டு அங்கே பணிபுரிகிறார். மகன் திருமணமான 3 ஆவது வருடத்தில் வாகன விபத்தில் இறந்துவிடுகிறான். பெண்ணிற்கும் மகனுக்கும் பிள்ளை இல்லை. மருமகளை தான் மகள் போல் பார்த்துக்கொள்கிறார்.

சகாயம், கார்த்திக் மற்றும் பாலுவுக்கு மனைவிகள் இல்லை. 

காலை எழுந்தவுடன், காபியோ தேனிரோ பருகிவிட்டு அடுத்த நொடி இந்த பூங்காவிற்கு attendance போட்டுவிடுவார்கள். இப்படியே 4 வருடங்கள் ஓடின. 

அந்த பூங்கவில் அமர்ந்து அரட்டை அடித்து கிண்டல் செய்து பேசிக்கொள்வார்கள். சனி மற்றும் ஞாயிறு, இந்த மூன்று பேரும் அதிக நேரம் இங்கே அமர்ந்து, பேசி, சிரித்து செல்வார்கள். எல்லோரும் நடந்து தான் அவர்கள் வீட்டிற்கு செல்வார்கள். 

ஒரு சனிக்கிழமை, கார்த்திக் வர நேரமாகியதால், சகாயமும் பாலுவும் நேராக அவர் வீட்டிற்கு சென்றார்கள். வீட்டின் கதவு பூட்டி இருக்கிறது. தொலைபேசியில் தொடர்புக்கொண்டால் "இந்த நம்பர் தற்காலிகமாக தொடர்பில் இல்லை" என்று வருகிறது. மூவரும் சிறுவயது முதல் நண்பர்கள் இல்லை, அந்த பூங்காவில் தான் அவர்களுடைய நட்பு தொடங்கியது. 

பக்கத்து வீட்டில் விசாரித்தால், அவர் யாரோ ஒரு பெண்ணுடன் ஆட்டோவில் சென்றார் என்று கூற, இவர்களோ, "யார் கூட இவன் போயிருப்பான்" என்று நினைத்து, சகாயம் பக்கத்து வீட்டுக்காரரிடம் "அந்த mental வந்தால் எங்களை தொடர்புகொள்ள சொல்லுங்கோ" என்று கூறி அவரவர் வீட்டிற்கு சென்றார்கள். 

ஒரு மணிக்கு ஒரு முறை பாலு சகாயத்திற்கு தொடர்புகொண்டு "அந்த mental தொடர்பில் வந்தானா" என்று விசாரித்துக்கொண்டு இருந்தான். 

மாலை ஆகியது, இரவு ஆகியது, சகாயத்தின் மருமகள், "அப்பா ஏன் இப்படி வருத்தம், ஒழுங்காக சாப்பிடுங்கள்" என்று கூற, அதற்கு சகாயம், "எங்கள் நட்பு இந்த மூன்று வருடங்கள் தான், ஆனால் என்னமோ மற்ற இருவரையும் பிரியும் தருணம் இப்போது எனக்கு இல்லை" என்று கூற, அவளோ, "அப்பா எனக்கு கல்யாணம் ஆகிய நாட்களிலிருந்து உங்கள் நட்பு எப்படி இருக்கும் என்று பார்க்கிறேன்.. அவருக்கு சொந்தம் பந்தம் என்று யாரும் இல்லை, எல்லாமே நாம் தானே" என்று கூற, மகன் வந்து, "அப்பா நம் வீட்டில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் முதல் ஆளாக வந்து உங்களுக்கும் எங்களுக்கும் பக்கபலமாக இருப்பார்". 

சகாயமோ இப்படி வருந்துகிறார். பாலு இரவு உணவிற்கு பின் ஒரு நடை சென்று அவனை பார்க்க சென்றார். பூட்டிய கதவு அப்படியே இருக்க, திரும்பி வருகிறார். 

அடுத்த நாள் காலை வழக்கம் போல் சகாயமும் பாலுவும் அந்த பூங்கா செல்கிறார்கள். பாலு சகாயத்தை பார்த்து, "இந்த படுவா பையன் எங்கே போனான் என்று நம்மிடம் சொல்லவில்லையே" என்று கூற, சகாயம், "அவன் வரட்டும் கச்சேரியை வெச்சிக்கிறேன்". 

இருவரும் மனமே இல்லாமல் அந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள். நேரம் 7.30 மணி, இருவரும், "வா வீட்டுக்கு போகலாம், அப்படியே அவன் வந்துவிட்டானா என்று பார்ப்போம்" என்று கூற இருவரும் அங்கே போகிறார்கள். 

கார்த்திக் வீட்டிற்கு வெளியே இரு கார்கள், மூன்று மனிதர்கள் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள். சகாயத்திற்கும் பாலுவிற்கும் அந்த காட்சியை பார்த்தவுடன் ஈ ஓடவில்லை. உள்ளே சென்றார்கள். அங்கே அவர்களுக்கு காத்திருந்தது ஓர் அதிர்ச்சி.... 

ஆச்சரியத்தில் ஆழ்ந்து போன சாகயமும் பாலுவும்.... 

சகாயம் அவனை கிள்ளிப்பார்த்துக்கொண்டான். நான் பார்ப்பது கனவா இல்லை, இது கனவு இல்லை என்று தீர்மானித்தான். பாலுவின் தோள்மீது தட்டிக்கொடுத்து "என்னடா நடக்குது" என்று கேட்க... கார்த்திக் மெல்ல இவர்கள் பக்கம் திரும்பி பார்த்து, "சாரி டா உங்கள் இருவரிடத்தில் சொல்லவில்லை" 

மணக்கோலத்தில் ஒரு பெண், அருகில் கார்த்திக் பட்டு சட்டை, பட்டு வேட்டியில். நீங்கள் நினைப்பதுபோல் இல்லை. 

கார்த்திக் சகாயத்தின் கைகளை பற்றிக்கொண்டு "இது நேற்று இன்று எடுத்த முடிவில்லை. நாம் மூன்று பேரும் தினமும் காலையில் அந்த பூங்காவில் சந்திப்போம், பின்பு எல்லோரும் அவர்களது வீட்டிற்கு சென்று தங்கள் மகன், மகள், மருமகள், பேத்தியுடன் நேரத்தை கழிப்பீர்கள். எனக்கு அப்படி யாரும் இல்லை... "

சகாயம், "எங்களை நீ அவ்வளவு தான் தெரிந்துகொண்டு இருக்கிறாய், என் மருமகள் சீமந்தர்திற்கு உன்னை என் வீட்டிற்கு அழைத்து என்ன கூறினேன்... நீ என் நண்பன் மட்டும் இல்லடா நீ எங்களில் ஒருவன், அதற்கு என் மருமகள் உன்னை அப்பா உங்க பொண்ணு நான் தான்" என்று தானே இன்று வரை உன்னை நினைத்து இருக்கிறாள். என் பேத்தி உன்னை தாத்தா என்று தானே அழைக்கிறாள்".

பாலு தன் பங்கிற்கு, " கார்த்திக் நாம எல்லோரும் எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, படித்து, இங்கே வந்து அந்த பூங்காவில் இணைந்து, ஒன்றாக கலந்து இருக்கிறோம். என் மகள் தினமும் இந்த பக்கம் தான் வேலைக்கு செல்கிறாள். அப்போது ஒருநாள் தவறாமல் அப்பா சென்றுவருகிறேன் எனது கூறிவிட்டு தானே போகிறாள்" 

கார்த்திக், "நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள் என்னை" என்று கூறும்போது வாசலில் இருச்சக்கரம் வரும் சத்தம். பாலுவின் மகள் உள்ளே நுழைந்து, அப்பா என்று அழைக்க, மூன்று பேரும் அந்த பக்கம் பார்க்க, அவளுக்கும் சிறிதளவில் ஆச்சரியம். கார்த்திக்கை பார்த்து, "இவங்ககிட்ட சொல்லிட்டீங்களா அப்பா" என்று கேட்க சாகயமும் பாலுவும் திருதிருவென்று பார்த்தார்கள். 

அவளும் " ரமேஷ் எங்க" என்று கேட்க உள்ளேயிருந்து ரமேஷ் எண்ட்ரி. எல்லோரும் முழிக்க, பாலுவின் மகள், " வாங்க எல்லோரும் ரமேஷ் தம்பதியை ஆசிர்வாதம் செய்யலாம்" என்று கூற, பாலு, "ஏம்மா ஏற்கனவே எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை நீ வேற இப்படி சொன்னா எப்படி, யார் இந்த ரமேஷ், கார்த்திக் ஏன் பட்டு உடையில் இருக்கிறான், எதுவுமே புரியவில்லை"

கார்த்திக் பாலுவுக்கு விடை கொடுக்க ஆரம்பிக்கிறான்....

கார்த்திக் அவன் வீட்டில் உள்ள சோபாவில் உட்கார சாகயமும் பாலுவும் அவன் அருகில் அமர்கிறார்கள். பாலுவின் மகள், ரமேஷ் அவனின் புது மனைவி எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்க, கார்த்திக் பேச தொடங்கினார். 

"நாம் மூவரும் காலையில் சந்திப்போம், பின்பு அவரவர் வீட்டிற்கு சென்றுவிடுவோம். எனக்கு குடும்பம் இல்லை, வேலையும் இல்லை. அதனால் மாலையில் மீண்டும் பூங்காவிற்கு போவேன். அப்படி ஒரு நாள் மாலை பூங்காவிற்கு சென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன். அப்பொழுது ஒரு 25 வயது பெண்ணும் 32 வயது பெண்ணும் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது. 

" அக்கா இந்த உதவி நீங்க தான் எங்களுக்கு செய்யணும் எனக்குனு யாரும் இல்லை, அம்மா, அப்பா எல்லோரும் சின்ன வயசுல போய்ட்டாங்க... அந்த வார்த்தை எனக்குன்னு யாரும் இல்லை என்றவுடன் நான் திரும்பி பார்த்தேன்"

" அவர்களிடத்தில் சென்று என்னமா உன் பிரச்சனை என்று கேட்க தோன்றியது... ஆனால் நீங்க யாரு இதுல தலையிடுவதற்கு என்று சொன்னால் நாம் என்ன பண்ணுவது", என்று மௌனமானேன். 

"இதேபோல் தினமும் மாலையில் நான் பூங்கா வந்தபொழுது இவர்கள் என்னமோ என்னிடம் மறைமுகமாக கூறுகிறார்களோ என்று இருந்தேன். பிறகு ஒரு நாள் அந்த 32 வயது பெண்மணி, அப்பா என்று என்னை அழைக்க நான் திரும்பி பார்த்தேன். பாலு அதுதான் உன் மகள் இங்கே நிற்கிறாளே அவளேதான்" என்று கூறினார். 

பாலு "என்னம்மா இது என்கிட்ட கூட இதைப்பற்றி கூறவில்லை, ஏதாவது பிரச்சனையில் கொண்டுசெல்ல போகுது, யார் இந்த பெண், அவளுக்கும் இந்த மணக்கோலத்தில் இருக்கும் பெண்ணிற்கும் என்ன சம்மந்தம்" என்று கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே போனார். 

கார்த்திக் இடைமறித்து," நான் தான் சொல்றேன்ல, அவளை எதுவும் சொல்லாதே, நான் எல்லாவற்றையும் கூறுகிறேன், பிறகு நீயும் சாகயமும் முடிவு செய்யுங்கள், நாங்கள் செய்தது சரியா தவறா என்று"

" உன் மகளும் அந்த பெண்ணும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்.. அந்த பெண் அதே இடத்தில் பணிபுரியும் இந்த ரமேஷை விரும்பினாள்.  ரமேஷ் middle class குடும்பம் தான். ஒரே பையன், நல்ல வளர்ப்பு, நல்ல குணம்.. இந்த பெண் யாருமில்லாததால் 18 வயது வரை அன்னை பெண்கள் இல்லத்தில் வாழ்ந்தாள். அங்கேயே இருந்துகொண்டு படித்து ரமேஷ், உன் மகள் பணிபுரியும் அலுவலகத்திற்கு வேலைக்கு வந்தாள். இங்கே ரமேஷை கண்டவுடன் காதல் மலர்ந்தது. ஆனால் எல்லாம் காதலர்கள் போல் கண்ட இடமெல்லாம் பைக்கில் சுற்றும் type இல்லை. காதல், பணிபுரியும் இடத்தில் சிறிது நேரம் அவர்களது வேலையை பாதிக்காமல், சிறிது நேரம் பணிநேரம் முடிந்தபின்."

இருவரும் கல்யாணம் பண்ண தங்களை தயார்ப்படுத்திக்கொண்டார்கள். ரமேஷ் வீட்டில் இவர்களது காதலை பற்றி கூற அவனின் அப்பா பெண்ணையும் பெண்வீட்டாரையும் வர சொல்லு பேசி முடிவெடுப்போம் என்று கூற, ரமேஷுக்கு தெரியும் இந்த பெண்ணின் நிலைமை. அதனால் அவன் தன் அப்பாவிடம் விவரத்தை கூற, அவரோ ஊர் பெயர் தெரியாதவர்களுக்கு  திருமணம் செய்துவைக்க முடியாது. நாளைக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அந்த பெண்ணிற்காக யார் வருவார்கள், என்பது போல் கேள்விகளை கேட்டு இருக்கிறார். ரமேஷ் எவ்வளவு சொல்லியும் அவர் தந்தை செவிசாய்க்கவில்லை" 

"ரமேஷுக்கு இந்த பெண்ணை அவளுடைய அழகை பார்த்து அல்லது அறிவை பார்த்து காதல் வரவில்லை, அவள் எப்பொழுதும் எளிமையாக இருக்கும் தோற்றம், மற்றவர்களிடம் பணிவாக பேசும் குணம் போன்றவற்றை பார்த்துதான் அவன் காதலை அவளிடம் வெளிப்படுத்தினான். இந்த பெண்ணும் பாலு உன் மகளும் நல்ல நண்பர்கள் அலுவலகத்திலும் வெளியேயும். அதனால் தினமும் நாம் செல்லும் அந்த பார்க்கில் வந்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது தான் நான் அங்கே தற்செயலாக வந்தேன்"

பாலுவின் மகள் இடைமறித்து, "அப்பா உங்களிடமோ சகாயம் அப்பாவிடமோ இதை பற்றி சொல்லாதற்கு மன்னிக்கவும். நாங்கள் கார்த்திக் அப்பா மாலையில் அங்கே வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு பின்பு தான் கார்த்திக் அப்பா அங்கே வருவதை பார்த்து அவரிடம் இந்த காதல் விவரத்தை கூறினோம். அவரோ இதில் என் பங்கு என்ன என்று கேட்டார்"

பாலுவின் மகள் தொடர்ந்தாள் "இவர்கள் பதிவு திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்தார்கள்.  இப்பொழுது இருக்கும் வீட்டில் அவள் வேறு சில பெண்களுடன் தங்கி வேலைக்கு வந்து செல்கிறாள். ரமேஷ் எவ்வளவு சொல்லியும் அவர்கள் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் இதற்கு என்ன வழி என்று யோசித்துக்கொண்டு இருந்தோம். அப்போது தான் நான் கார்த்திக் அப்பாவை பார்த்தேன். அவரிடம் இதைப்பற்றி கூறினேன்" 

கார்த்திக் இப்போது தொடர்ந்தார், "இவர்கள் தனியாக ஒரு வீட்டில் குடியமர்ந்து வாழ்க்கையை தொடர முயற்சி செய்தார்கள். ஆனால் உங்களுக்கு தான் தெரியுமே வீட்டுக்கு சொந்தக்காரர்கள் எல்லா விவரங்களையும் கேட்டுவிட்டு உங்கள் பெற்றோர் எங்கே என்ற கேள்வி வருகிறது. அதனால் நான் இந்த பெண்ணிற்கு அப்பாவாக கொஞ்ச நாள் நடிக்க முடியுமா என்று உன் மகள் கேட்டாள் பாலு. நான் யோசித்துவிட்டு சொல்கிறேன் என்று கூறிவிட்டேன். அன்று இரவு யோசித்து வேறு ஒரு முடிவை எடுத்தேன். இந்த பெண்ணிற்கோ யாரும் இல்லை, சகாயம், பாலு நான் எடுத்த முடிவைக்கேட்டு என் மேல் கோபம் கொள்ளாதீர்கள்" 

" அடுத்த நாள் காலையில் நாம் வழக்கம் போல் சந்தித்தோம் ஆனால் இதைப்பற்றி உங்கள் இருவரிடமும் நான் என் எண்ணத்தையும் கூறவில்லை. ஏனென்றால் முதலில் இந்த பெண் அல்லது ரமேஷ் மற்றும் பாலு உன்னுடைய மகள் என் எண்ணத்திற்கு என்ன கூறுவார்கள் என்று நினைத்தேன். அதனால் தான் உங்களிடம் கூறவில்லை"

சகாயம், "சரிங்க சார் அப்படி என்ன முடிவு எடுத்தீங்க" என்று கேட்க

கார்த்திக், "பாரு இப்பவே இப்படி என்னை புறம்கூறுகிறாய். ஆனால் நான் எடுத்த இந்த முடிவில் இருந்து நான் ஒருபொழுதும் பின்வாங்க மாட்டேன், நீங்களும் என்னை புரிஞ்சிபீங்க" 

"நான் ரமேஷ், இந்த பெண், பாலு மகள் எல்லோரும் ஓட்டல் சுவாதியில் 10 மணிக்கு சந்தித்தோம். என் முடிவை முதலில் இந்த பெண் வேண்டாம் என்றாள். பின்பு நான் என்னை பற்றி கூறியவுடன் சம்மதித்தாள்" என்று கூறினார் கார்த்திக். 

சாகயமும், பாலுவும், "சீக்கிரம் சொல்லி முடி" என்று சொல்ல

கார்த்திக், அந்த பெண்ணை அழைத்து தன் வலதுப்பக்கத்தில் நிற்கவைத்து, "இவளை என் மகளாக தத்து எடுத்துக்கொண்டேன், இன்று முதல் இவள் என் மகள்... இந்த முடிவில் உங்களுக்கும் சம்மதம் இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் ஒரு அனாதை, ஒரு நாளில் மூன்று மணி நேரம் தான் நான் உங்களோடு பூங்காவில் நேரத்தை கழிக்கிறேன், மீதமுள்ள 21 மணி நேரமும் இந்த நான்கு சுவர் தான் என் நண்பர்கள். எனக்கும் யாராவது என் கூட இருக்கணும் என்று அடிக்கடி தோன்றும். நாளைக்கு எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வெந்நீர் வைத்துக்கொடுக்க ஆள் இல்லை. இது இன்று திடீரென்று எடுத்த முடிவு தான் ஆனால் ரொம்ப நாள் இது மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதோ என்று எண்ணி இருந்தேன். மகளை மணக்கோலத்தில் பார்ப்பது, இதெல்லாம் என் மனதில் தினமும் ஓடிக்கொண்டே இருக்கும். அதனால் நான் என் மகள் மீராவுக்கு தகப்பன் ஸ்நானத்தில் இருந்து இந்த இருவருக்கும் பதிவு திருமணம் முடித்துவிட்டேன்" 

சகாயத்திற்கு அப்படி ஒரு கோவம் கார்த்திக் மேல. சகாயம் எழுந்து வெளியே வந்து வேகமாக நடந்து சென்றுவிட்டார். பாலு எழுந்து வந்து கார்த்திக்கை கட்டி அணைத்து "You are great, என் மகளுக்கு இதில் பங்கு உள்ளது என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது, ஆனால் சகாயம் ஏன் எழுந்து ஒன்றுமே சொல்லாமல் சென்றான், தெரியவில்லையே" என்று கூறிக்கொண்டு இருக்கும்போது, சகாயம் அவன் மகன் மற்றும் மருமகளை அழைத்து வந்து, "டேய் கார்த்திக், இவங்களும் உன்னோட குடும்பத்தில் இணைத்துக்கொள். நான் ஒருபொழுதும் என் குடும்பம், உன் குடும்பம் என்று பிரித்து பார்த்தது இல்லை. என்ன வீடு மட்டும் தான் தனித்தனியாக இருக்கிறது. நாம் எல்லோரும் ஒன்றுதான். இதோ என் மகன் மற்றும் மருமகள், எல்லோரும் ஒரே குடும்பம். கார்த்திக் உன்னை பற்றி நான் நினைக்காத பொழுது இல்லை"

அப்போது சகாயத்தின் மருமகள் நேராக அந்த பெண்ணிடம் சென்று "அக்கா மாமா வந்திருக்கோம், இனிமேல் எந்த கவலையும் உனக்கு வேண்டாம்" என்று சொல்ல அந்த பெண்ணின் கண்களில் கண்ணீர். அந்த பெண் சகாயத்தின் காலில் விழுந்தாள். சகாயம், "டேய் கார்த்திக், பாலு வாடா இந்த பக்கம், ரமேஷ் வாங்க மாப்பிள்ளை, நாம் எல்லோரும் இந்த தம்பதியை ஆசீர்வதிபோம்" என்று கூற, வீடே களைகட்டியது. 

கார்த்திக், பாலு, சகாயம் மூவரும் வெளியே வந்து நின்றுக்கொண்டு வானத்தை பார்க்கிறார்கள். பாலு, "கார்த்திக் நாம் அந்த பூங்காவில் தான் முதலில் சந்தித்தோம், முதலில் நீ பின்பு சகாயம். அங்கே பல மனிதர்களை நாம் சந்திக்கிறோம், அவர்களுக்கு பலதரப்பட்ட பிரச்சனைகள். இந்த பெண்ணிற்கும் ரமேஷிற்கும் என் மகள் மூலமாக ஒரு குடும்பம் கிடைக்கப்பெற்றது அந்த கடவுள் உன் ரூபத்தில் வந்தார் என்று தான் நான் நினைக்கிறேன்" 

"தினமும் பூங்காவில் சந்திப்போம், பல விஷயம் பேசுவோம். வாழ்க்கையில் நல்ல நபர்கள் கிடைப்பது அரிது, அதேபோல் நண்பர்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக இருப்பது மிக பெரிய பாக்கியம்." 

சகாயம், "வாங்க இன்று முதல் மாலையில் பூங்கா செல்வோம், கார்த்திக்கு ஒரு மகள் கிடைத்தாள் அது போல் ஒரு மகன் கிடைத்தாலும் கிடைக்கலாம்" என்று கூற மூவரும் பூங்காவை நோக்கி நடையை போட்டார்கள்.

முடிவுரை - நண்பர்களை நீங்கள் தேர்ந்தெடுங்கள், ஆனால் அவர்கள் உங்களை எப்படி நடத்துவார்கள் என்பதை நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தில் தான் இருக்கும்...