மலரியின் அக்கா, ஸ்வேதா வருவதைப் பார்த்து, “நீயே வந்துட்ட, எங்க அந்த மகாராணி இன்னும் வீட்டுக்குக் வரல?” என்று கேட்டாள்.
“அப்படியா? அவ எனக்கு முன்னாடி வந்திருக்கணுமே. இன்னும் வரலனா எங்க ஊர் சுத்திட்டு இருக்கிறாளோ எனக்கு எப்படி தெரியும்? அவ இப்படித்தானு சொன்னா நீங்கதான் யாருமே நம்பல. இப்ப பாருங்க, நான் கூட வீட்டுக்கு வந்துட்டேன், இந்த மகாராணி இன்னும் வீட்டுக்கு வரல. எங்க எவன் கூட சுத்திக்கிட்டு இருக்கிறாளோ!” என்று சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.
அதை அங்கே ஹாலில் உட்கார்ந்துகொண்டிருந்த அனைவரும் கேட்டனர். மலரின் அம்மாதான், “இந்த அடங்காப்பிடாரியை வீட்ல வச்சுக்கிட்டு இம்சையா இருக்கு. எங்கேயாவது போய் தொலைன்னாலும் போய் தொலைய மாட்டேங்குது. ஒரு பொட்டப் பிள்ளை நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதில்லை. இன்னும் கூட எங்க இருக்கான்னு தெரியல. நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்களா? பாருங்க, ஸ்வேதா கூட வந்துட்டா. நம்மள பார்த்து ஊரே சிரிக்கிற மாதிரிதான் பண்ணப்போறான்னு நான் சொல்லிட்டே இருந்தேன். இப்ப பாருங்க, அது மாதிரிதான் ஆகி இருக்கு” என்று மலரின் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“அந்த தரித்திரத்தை நான் அப்பவே உன்னைக் கொல்லச் சொன்னேன். நீதான் கேட்கல. இப்ப வந்து அவ இப்படி நடக்கிறா, அப்படி நடக்கிறான்னு சொல்லிட்டு இருக்காதே. வாயை மூடு! அவ எக்கேடு கெட்டுப் போறா. அப்படியே போய் தொலைஞ்சாலும் நமக்கு நல்லாதான் விடு. நமக்கு பிடித்த தரித்திரம்மாவது விடும்’ என்று கத்திவிட்டு சண்முகம் அவரின் அறைக்குச் சென்றுவிட்டார்.
மலர் சொன்னதுபோல் தான், அவள் யாருடனாவது ஊர் சுற்றிக்கொண்டு ஓடிவிட்டாள் என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதில் மதியழகன்தான், “ஒருவேளை நேத்து ராத்திரி நாம பேசினதுனாலதான் அக்கா இங்கிருந்து போயிருச்சு போல. எப்படியோ இங்கிருந்து போய் சந்தோஷமாக இருந்தா சரி” என்று மகிழ்ச்சியாக இருந்தான்.
அவள் பெரியம்மாவிற்குத்தான் சம்பளம் இல்லாத வேலைக்காரி போய்விட்டாள் என்றும், அவளை வேலை வாங்க முடியவில்லை என்றும் வருத்தமாக இருந்தது. மற்றபடி வீட்டைவிட்டு போனதால் சந்தோஷமாகத்தான் இருந்தார்.
அருள்வாணன், மதிவாணன் இரண்டு பேருக்குமே அவள் மேல் பாசமும் இல்லை, வெறுப்பும் இல்லை. ஏதோ இந்த வீட்டுப் பெண் என்று எப்போதாவது பேசுவார்கள் அவ்வளவுதான். பாசமாக எல்லாம் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அவள் இருந்தாலும் பிரச்சனை இல்லை, இல்லை என்றாலும் பிரச்சனை இல்லை. அதனால் அவர்கள் பாட்டுக்கு இருந்தார்கள். ஸ்வேதாவோ “ஒரு வழியா சனியன் ஒளிஞ்சிருச்சு” என்று சந்தோஷமாக இருந்தாள்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கைலாஷ், ஜெய்யைத் திரும்பிப் பார்த்தான். கைலாஷ் விழிப்பிலேயே, ஒருவேளை இவன்தான் காரணமாக இருப்பானோ என்ற சந்தேகத்துடன் பார்த்துவிட்டு, கைலாஷ், ஜெய்யை ஒரு அறைக்கு இழுத்துச் சென்றான்.
ஜெய்யை இழுத்து வந்த கைலாஷ், “மலர் காணாமல் போனதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லையே? எனக்கு என்னமோ உன் மேல் தான் சந்தேகமாக இருக்கு. உண்மையச் சொல்லு, மலர் எங்கே?” என்று கோபமாக ஜெய்யைக் கேட்டான்.
“டேய், இப்ப எதுக்கு கோபப்படுற? ஆமா, மலரை நான் தான் கடத்தினேன். ஆனால் அவள் என்கிட்ட இருந்து தப்பிச்சுப் போயிட்டா. அவள் இந்த வீட்டு வேலைக்காரிடா. எதுக்குடா இவ்வளவு டென்ஷனாக்குற? அவள் காணாம போனா யாரும் கண்டுக்க மாட்டாங்க. அதனால தைரியமாக இரு. நீயும்தான பார்த்த, அவ யாரோ ஒருத்தன் கூட ஓடிப் போயிட்டான்னு இந்த வீட்டில் எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. அப்படியே விடு, நீ எதுவும் கண்டுக்காத” என்றான்.
“வாயை மூடு! எனக்கு மதியத்துக்கு மேல தான் உண்மை என்னன்னு தெரிஞ்சது. அவளை இன்னொரு முறை வேலைக்காரின்னு சொல்லாதே. அவள் சண்முகம் மாமாவுக்கும் கவிதா அத்தைக்கும் பிறந்த பொண்ணு. அவள் ராசி இல்லாதவள்னு அவளை வேலைக்காரின்னு சொல்லிட்டு இருக்காங்க. மத்தப்படி அவளும் இந்த வீட்டுப் பொண்ணுதான். நமக்குத் தெரியக்கூடாதுன்னு மறைச்சிட்டு இருக்காங்க. புரியுதா இல்லையா உனக்கு?” என்று கோபமாகக் கத்தினான்.
“அதான் நீயே சொல்ற இல்ல? அவளை இந்த வீட்டிலிருந்து ஒதுக்கி வச்சிட்டாங்கன்னு. அதுக்கப்புறம் யாருடா கண்டுக்கப் போறாங்க? அதனால விடு, பிரச்சனை வந்தால் பின்னாடி பார்த்துக்கலாம்” என்றான் சாதரணமாக.
“இங்க பாரு, பிரச்சனை வந்துச்சுன்னு வச்சுக்க, நானும் அதில் தலையிட மாட்டேன். நீதான் உன்னுடைய பிரச்சனையைப் பார்த்துக்கணும்” என்று கூறிவிட்டு, “சரி, என்னதான்டா அவளைப் பண்ணுன? எங்க அவ?” என்று கேட்டான்.
“டேய், நேத்து ராத்திரி நான் மலரைப் பார்க்கப் போகலாம்னு வெளியில் வந்தேன்டா. அப்பதான் மதி அந்த அறைக்குள்ள போனத பார்த்தேன். அப்பதான் தெரிஞ்சது, அவன் யாருக்கும் தெரியாமல் அவளிடம் பேசுறது. அதனால்தான் அவனை வைச்சு அவ கிட்ட பொய் சொல்லி அவளை வெளியே வரவச்சேன். காலேஜ்ல இருந்து அவளும் என்னை நம்பி வெளியே வந்து நல்லா மாட்டிகிட்டா. உடனே கடத்திட்டு போய் வேலையெல்லாம் முடிச்சிருக்கணும். பொறுமையா இருந்தது என்னோட தப்பாப் போச்சு” என்று கோபமாகக் கத்திக்கொண்டிருந்தான்.
“என்னடா சொல்ற”
“ஆமாடா. காலையில நான்தான் ஒரு பதினோருரை மணி இருக்கும். அப்பதான் காலேஜுக்கு போய் அவ கூட இருக்கிறவங்களுக்கு யாருக்கும் தெரியாம, மதிக்கு ஆக்சிடென்ட் ஆகிடச்சி உன்னைப் பார்க்கணும்னு சொல்றான். அவன் உன் கிட்ட நல்லா பேசுவானாமே. என்கிட்ட உங்க வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் உன்னைக் கூப்பிட்டு வரச் சொன்னான்னு பொய் சொன்னேன். அவளும் அவனுக்கு ஆக்சிடென்ட்ன்னு சொன்ன உடனே, வர்றேன்னு சொன்னா. நானும் அவளை வெளியில் கூட்டிக்கொண்டு வந்தேன். அவளும் என்னை நம்பி வெளியே என் கூட கார்ல ஏறனா. உடனே என் கையில் இருந்த மயக்க மருந்து கலந்த கைக்குட்டையை அவளது முகத்தில் வைச்சு அவளை மயக்கமடைய வச்சுட்டேன். அதுக்கப்புறம் என்னோட ஃப்ரெண்ட் குடோனுக்கு கொண்டுபோய் அவளை வச்சிருந்தேன். அவளுக்கு மயக்கம் தெளியவே நைட்டு எட்டு மணிக்கு மேல் ஆகிடச்சி. அவ கண் முழிச்சதுக்கு அப்பறம் அவளிடம் சாதாரணமாகத்தான் பேச ஆரம்பிச்சேன்.
ஆனால் அதற்குள்ளே அவள் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சுட்டா அதனால கன்னத்தில் இரண்டு அறைதான் அறைஞ்சேன். மறுபடியும் மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டா. சரி, அவளுக்கு மயக்கம் தெளியறதுக்குள்ள நான் கடைக்கு போய் சாப்பாடு வாங்கிட்டு வரலாம்னு போன நேரத்தில் எப்படியோ தப்பிச்சுப் போயிட்டாடா. இப்ப எங்கே இருக்கான்னு தெரியல.”
இவன் உள்ளே அனைத்தையும் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த வீட்டின் லேண்ட்லைனில் ஃபோன் அடித்தது.
ஃபோனை எடுத்தது மதிவாணன் தான் அவன் ஹலோ என்று ஆரம்பிப்பதற்குள் அந்த பக்கம் இருந்து, “ஹலோ, இது மலர்விழி வீடுங்களா?” என்று எதுவும் தெரியாததுபோல் துருவன் பேசினான்.
மதிவாணன் முதலில் யோசித்துவிட்டு, “ஆமாம், இது மலர்விழி வீடுதான். நீங்க யாரு? இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்கிறீங்க? மலர் வீட்டில இல்லை” என்றான்.
“அது எனக்குத் தெரியும் சார். அது என்னன்னா, நான் தெரியாமல் உங்க வீட்டுப் பொண்ணு மேல கார விட்டுட்டேன். எனக்கு அந்தப் பொண்ணு யாருன்னு முதலில் தெரியல. இப்ப கண் முழிச்சதுக்கு அப்புறம் தான் அந்த பொண்ணோட விவரம் சொண்ணுச்சி. நீங்க கொஞ்சம் ஹாஸ்பிட்டலுக்கு வர முடியுமா?“ என்று துருவன் பொறுமையாக பேசினான்.
“சரி சார், எந்த ஹாஸ்பிடல்னு சொல்லுங்க” என்று கேட்க. துருவனும் மருத்துவமனையின் பெயரைச் சொல்லி வரச் கூறினான்.
“சரி” என்று இவனும் ஃபோனை வைத்துவிட்டு, “அப்பா!” என்று மூர்த்தியை அழைத்தான்.
“என்ன மதி? யார் ஃபோன்ல?“ என்று கேட்க.
“அப்பா, ஹாஸ்பிடலிருந்து ஃபோன் பண்ணி இருக்காங்க. மலருக்கு ஏதோ ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம். அவ இப்பதான் கண்ணை முழிச்சாலாம், அதனால ஹிஸ்பிடல்க்கு நம்மளை வரச் சொல்றாங்க” என்று கூறினான்.
அவன் கூறியதைக் கேட்ட கவிதாதான், “அந்தச் சனியன் உயிரோடுதான் இருக்கா?“
(பெற்ற மகளுக்கு ஆக்சிடென்ட் ஆகியிருக்கு அவள் எப்படி இருக்கிறாள் என்று கேட்காமல் அவள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறாளா என்று கேட்கிறாள் இந்த தாய் என்ன சொல்ல.)
மலரின் பெரியப்பாவிற்குதான் ஏதோ கொஞ்சம் மனசு இருந்திருக்கும் போல். “அவ இப்போது எப்படி இருக்கா?“ என்று கேட்டார்.
“இப்போது நல்லா இருக்காளாம். அவளைக் கூட்டிக்கொண்டு போக நம்மளை யாராவது வரச் சொல்றாங்க. என்னப்பா பண்றது?”
“நீ, போய் சித்தப்பாவ கூட்டிட்டு வா” என்றார்.
அவனும் சென்று அறையில் இருந்த அவன் சித்தப்பாவை அழைத்து வந்தான்.
“சொல்லுங்க அண்ணா, வரச் சொன்னீங்களா? என்ன விஷயம்?“ என்று கேட்டார்.
“சண்முகம், அது வந்து... மலருக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சாம். அதனால்தான் அவ வீட்டுக்கு வரல. நாமதான் ஏதோ தப்பாகப் பேசிட்டோம். இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கிறாள் போல, அவளைக் கூட்டிட்டு வரதக்கு ஹாஸ்பிடலிருந்து இப்பதான் ஃபோன் பண்ணாங்க. நீயும் மதியும் போய் கூட்டிட்டு வந்துடுங்க” என்றார்.
“அண்ணா, அந்தச் சனியன் அப்படியே ஒளியட்டும் விடுங்க. எதுக்கு அவளை மறுபடியும் வீட்டுக்குக் கூட்டிட்டு வர நினைக்கிறீங்க?” என்று கேட்டார்.
“இங்க பாரு சண்முகம், ஆயிரம் இருந்தாலும் அவ உன்னோட பெண். ராசி இல்லைனு நாம கண்டுக்காம இருந்தா தெரிஞ்சவங்க யாராவது அவள் எங்கேனு கேட்டா நமக்குத்தான் அசிங்கம். வீட்டில அவளை வேண்டானு ஒதுக்கி வச்சிட்டிங்க, அது வேற விஷயம். இப்போது இந்த விஷயம் வெளியில் தெரிஞ்சா நமக்குத்தான் அவமானம். அதனால போய் கூட்டிட்டு வா”
“சரிங்க அண்ணா” என்று வேறு பேச்சு எதுவும் சொல்லாமல் மதிவாணனுடன் மருத்துவமனைக்குச் சென்றார்.
இதையெல்லாம் அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தது ஜெய் தான். பயந்துவிட்டான். “எங்கே நம்மைப் பற்றிச் சொல்லிவிடுவாளோ?“ என்று.
உடனே அவர்களுக்கு முன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று கைலாஷிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
“எப்போது இவன் வெளியே வருவான்? தூக்கலாம்” என்று காத்துக்கொண்டிருந்த அக்னியின் ஆட்கள், குண்டுக்கட்டாய அவனைத் தூக்கிவிட்டனர்.
“இங்கே மருத்துவமனையில் அவங்க வர்றேன்னு சொல்லி இருக்காங்க அக்னி. இப்போ உன்னோட திட்டம் என்ன?” என்று துருவன் கேட்க.
“அவர்கள் வரும்போது நான் இங்கே இருக்க மாட்டேன். நீதான், தெரியாமல் இடிச்சுட்டேன்னு ஏதாவது ஒன்னு சொல்லி சமாளிச்சு, அவங்க மலரைக் கூட்டிட்டு போற மாதிரிப் பார்த்துக்க.
நாளைக்கு நான் வேற ஒரு வழியா அந்த வீட்டுக்குள்ள போயிடுவேன். அவங்க வரைக்கும் நான் உள்ளே இருக்கேன். அவங்க போனதுக்கு அப்புறம் நான் வரேன். நானும் அவங்க என்ன பண்றாங்கன்னு, அங்கிருந்து பார்த்துட்டுதான் இருப்பேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.