Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

அக்னியை ஆளும் மலரவள் - 11


“நீ கோபப்படுற அளவுக்கு இந்த ஃபைலில் அப்படி என்ன இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே துருவன் அதனை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தான். 


அவன் படிக்கப் படிக்கத்தான் அக்னியின் கோபத்திற்கான காரணம் புரிந்தது. அதை படித்து துருவனுக்கே கோபம் வந்தது. “இப்படியும் ஒரு குடும்பமா?” என்று நினைத்தான்.


“இந்தப் பொண்ணோட முகத்தைப் பார்த்தால் குழந்தைத்தனமாக இருக்கிற மாதிரி இருக்கு. இந்தப் பெண்ணைப் போய் இப்படி கொடுமைப்படுத்த எப்படி அங்கு இருப்பவர்களுக்கு மனசு வந்துச்சு? பெத்த அம்மா, அப்பா இந்தக் கொடுமையைப் பார்த்து சும்மா இருந்தது மட்டும் இல்லாமல், அவர்களும் அதே கொடுமையைச் செய்திருக்கிறாங்க. எப்படித்தான் இவர்களுக்கு மனம் வந்தது பெற்ற பிள்ளையை இவ்வளவு கொடுமைப்படுத்துவதற்கு?” என்று நினைத்த துருவன்.


“டேய் அக்னி, என்னடா இது! இந்தக் குடும்பம் இவ்வளவு கேவலமாக நடந்திருக்கு அந்தப் பொண்ணு கிட்ட. பாவம் அந்தப் பொண்ணு. அதனாலதான் நம்ம கிட்ட என்ன சொல்றதுன்னு தெரியாம, 'இதுக்கு மேல கேட்காதீங்க'னு சொல்லிட்டு தலையைக் குனிந்து இருந்திருக்கு போல. நீ கோபப்படாத, நாம ஏதாவது பண்ணலாம்”. 


துருவன் அவ்வாறு கூறியதும் அக்னி அவனைத்தான் பார்த்தான். அவன் பார்வையைப் புரிந்துகொண்டு துருவனும்

“என்ன பாக்குற, அந்தப் பொண்ணைப் பார்க்கும்போது உன் கண்ல தெரிய உணர்வை புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை... இத்தனை வருஷமா உன் கூடவே இருக்கேன், உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா? உனக்கு அந்தப் பொண்ண புடிச்சிருக்குன்னு எனக்கும் தெரியும். அந்த நரகத்தில் இருந்து அந்தப் பொண்ணை நீதான் கூட்டிக்கொண்டு வரனும். சீக்கிரம் நம்ம வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வா” என்று அக்னியிடம் கூறிவிட்டு, அங்கிருந்து மலர் இருக்கும் அறைக்குச் சென்றான்.


துருவன் அங்கிருந்து சென்றதும், அக்னி அங்கிருந்த பாதுகாவலரைப் பார்த்து, “இன்னும் ஒரு மணி நேரத்தில் அவன் நம் இடத்தில் இருக்கணும். இந்தக் குடும்பத்தில் இருக்கிறவர்களை நான் தனியாகப் பார்த்துக்கிறேன். அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கனுமோ, கண்டிப்பா அது அவங்களுக்குக் கிடைக்கும்” என்று கூறிவிட்டு, அவனும் மலர் இருக்கும் அறைக்குச் சென்றான்.


அக்னி அறைக்குள் செல்லும்போது, அவள் படுக்கைக்குப் பக்கத்தில் துருவன் அமர்ந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கு முன்பு தன்னிடம் குழந்தையாகப் பேசிக்கொண்டிருந்தவள் இவ்வளவு கொடுமையை அனுபவித்தாள் என்று நினைக்கும்போது அவனுக்குக் வேதனையாக இருந்தது. அந்த நொடியிலிருந்து அவளைத் தன் தங்கையாக ஏற்று கொண்டான். அவளுக்குக் கிடைக்காத பாசத்தை அவளின் அண்ணனாக இருந்து கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, அவள் தலையை அன்பாகக் கோதிவிட்டான். இவை அனைத்தையும் அக்னி பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.

அக்னியைப் பார்த்ததும் நாற்காலியில் இருந்து எழுந்து அவனிடம் சென்று அவன் தோளில் தட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டான் துருவன்.


அவளுக்கு அருகில் சென்று, “உனக்கு இத்தனை கொடுமைகளைச் செய்த அந்தக் குடும்பத்தை நான் சும்மா விட மாட்டேன். நீ என்னுடைய ஏஞ்சல். என்னோட அம்மா, என்னோட அம்மு, என்னோட வாழ்க்கையே நீதான். இப்பவே உன்னை அந்த வீட்டிலிருந்து கூட்டிட்டு வரமாட்டேன், ஆனால் கண்டிப்பாக இங்கிருந்து நான் சென்னைக்கு போகும்போது உன்னைக் கூட்டிட்டுதான் போவேன். அதற்குள் அங்கு இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக நான் பாடத்தைக் கற்றுக்கொடுத்தே தீருவேன். உன்னை என்ன ஆனாலும் அந்த நரகத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தே தீருவேன். அதற்கு முன்னாடி உன் குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேரையும் ஒரு வழி பண்ணாமல் விட மாட்டேன்” என்று கூறிவிட்டு, அவள் அருகில் சென்று அவளது தலையை மெதுவாகக் கோதிவிட்டு, அழுத்தமாக அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவன் அவளது நெற்றியில் முத்தமிடும்போது அவள் தூக்கத்தில் அழகாகச் சிரித்தாள். அதைப் பார்த்ததும் அக்னியின் மனம் நிறைந்தது. “இந்தச் சிரிப்பு எப்பவும் உன் முகத்தில் இருக்கிற மாதிரி நான் பாத்துக்குவேன், அம்மு” என்று சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தான்.


வெளியே வந்த அக்னி துருவனிடம், “நீ அவங்க வீட்டுக்கு போன் பண்ணி, 'அவங்க வீட்டுப் பொண்ணு ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கு' அப்படின்னு சொல்லி, அவங்களை ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்லு.”


“அப்புறம் அவங்க கிட்ட, நான் தான் காரை தெரியாமல் உங்க வீட்டு பொண்ணு மேல மோதிட்டேன். அந்தப் பொண்ணு மேல எந்தத் தப்பும் இல்லை. ரொம்ப நேரம் மயக்கமாக இருந்ததனாலதான் அந்த பொண்ணனோட டீடைல்ஸ் எதுவும் கிடைக்கல, என்னை மன்னிச்சிடுங்க அப்படின்னு சொல்லு. அவர்களும் மலரை விட்டு கூட்டிட்டு போய்டுவாங்க” என்று துருவனிடம் கூற.


“டேய், ஏன்டா பாப்பாவை மறுபடியும் அந்த நரகத்துக்கு அனுப்பி வைக்கணும்னு சொல்ற? உனக்குக் கொஞ்சமாவது புத்தி இருக்கா இல்லையா?“ என்று கோபமாகக் கேட்டான்.


“நான் சொல்வதை மட்டும் செய். இப்ப நாம நடந்ததைச் சொன்னாலும், அவங்க நம்ப மாட்டாங்க. அந்த ஜெய் வேற ஏதாவது சொல்லி தப்பித்துவிடுவான். அவனை நம்ம இடத்திற்குத் தூக்கிட்டு வரச் சொல்லி இருக்கிறேன். அங்க வச்சு அவனுக்குக் கொடுக்க வேண்டியதை நாம கொடுத்து, மறுபடியும் அவனை அந்த வீட்டுக்கே நாம அனுப்பி வைக்கலாம். அவன் கூடவே அந்த வீட்டுக்கு நானும் போவேன். அதற்கு நான் வேற வழி யோசிச்சு வச்சிருக்கேன். நான் ஆபீஸ் வேலையா தான் இங்க வந்தேன், ஆனால் அது எனக்கு இப்போது தேவையில்லை. இனி நீதான் ஆபீஸ் வேலை எல்லாத்தையும் பாத்துக்கணும். நான் மலர் கூட மலர் வீட்டுக்கு போகப்போறேன்” என்று தன்னுடைய திட்டத்தைத் துருவனிடம் கூறினான்.


“டேய் அக்னி, சூப்பர் டா! கண்டிப்பாக நீ நினைச்சது நடக்கும். நீ பாப்பாவைச் சீக்கிரம் கூட்டிட்டு வந்துருவனு நம்பிக்கை எனக்கு இருக்கு. நான் போய் டாக்டர் கூட்டிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.


அக்னையும் மலர் இருந்த அறைக்குள் நுழையும் பொழுது மலர் கண் விழித்திருந்தாள். உள்ளே வரும் அக்னியைப் பார்த்து லேசாக சிரிக்க. அவனும் அவளுக்கு அருகில் போய் அமர்ந்து, “வீட்டுக்குக் கிளம்பலாமா?” என்று கேட்டான்.


அதுவரை லேசாக சிரித்துக் கொண்டிருந்தவள், உடனே முகம் வாடிவிட்டது. அது எதனால் என அக்னிக்கும் தெரியும். தெரிந்தும் தெரியாததுபோல், “என்ன ஆச்சு? ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு? ஏதாவது பிரச்சினையா? எங்கேயாவது வலிக்குதா?” என்று கேட்டான்.


 “இல்லை, இவ்வளவு நேரம் கழிச்சு நான் வீட்டுக்கு போனா ஏதாவது சொல்லுவாங்களான்னு பயமாக இருக்கு. என்ன பண்றது?“ என்று கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி அவனிடம் கேட்டாள். 


“சரி, அதுக்கு என்ன பண்றது?” என்றவன், சிறிது நேரம் யோசிப்பது போல் யோசித்து விட்டு “சரி நாம இப்படிப் பண்ணலாம்” என்று அவன் தீட்டிய திட்டத்தைச் கூறினான்.


அவளும், “அதுபோல நடந்தால் திட்டாவது கொஞ்சம் குறைவாக விழும்” என்று சரி என்று உடனே ஒத்துக் கொண்டாள்.


“சரி, உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கிறேன். என் மேல் உனக்கு நம்பிக்கை இருந்தால் என்னன்னு சொல்லு. உங்க வீட்டில் உனக்கு ஏதாவது பிரச்சினையா?“ என்று பட்டென கேட்டுவிட்டான். அவளுக்குத்தான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பார்த்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத ஒரு மனிதனிடம் எப்படித் தன்னைப் பற்றிச் சொல்வது என்று யோசித்தாள்.


அவள் யோசிப்பதைப் பார்த்த அக்னி, “பரவாயில்லை விடு. உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லை என்றால் விடு” என்று சொல்லிவிட்டு, “எனக்கு உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. உனக்கு உதவலாமேன்னு கேட்டேன், ஆனால் உனக்குத்தான் என்மேல் நம்பிக்கையே இல்லையே” என்று வருத்தமாக இருப்பது போல் தன் முகத்தை வைத்துக் கொண்டான்.


“அப்படி எல்லாம் இல்லை. எனக்கு உங்க மேல் நம்பிக்கை இருக்கு. யாருன்னு தெரியாத ஒரு பொண்ணு உங்க கார் மேல விழுந்ததை பார்த்துட்டு அப்படியே விட்டுட்டுப் போகாமல், என்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்து சேர்த்தது மட்டும் இல்லாம, இவ்வளவு நேரம் கூட இருந்து எல்லாம் பண்றீங்க. உங்கள் மேல எனக்கு நல்ல மதிப்பு இருக்கு. அப்படி இருக்கும்போது நான் போய் அப்படி நினைப்பேனா உங்களைப் பத்தி?” என்றாள்.


“சரி, இப்ப சொல்லு உன்னைப்பத்தி” என்று நேரடியாக அவளது கண்களைப் பார்த்து கேட்டான். அவளும் ஏதோ ஒரு உந்துதலில் அவளைப் பற்றி முழுவதையும் சொன்னாள்.


“எனக்குன்னு யாருமே இல்லை. கூடப் பிறந்தவங்க, அப்பா, அம்மா, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி எல்லாரும் இருந்தும் நான் அனாதையாக வாழறேன். எனக்கு அங்க இருக்கிறது நரகத்தில் இருக்கிற மாதிரி இருக்கு. இப்ப பெரியம்மாவோட அண்ணன் பையன், அவனோட நண்பன்னு புதுசா வந்திருக்கிறவங்க வேற ஒரு மாதிரியா பார்க்குறாங்க. எனக்கு உடம்பெல்லாம் அருவருப்பாக இருக்கு” என்று தேம்பித் தேம்பி அழுதாள்.


அவள் அழுவதை அதற்கு மேல் அக்னியால் தாங்க முடியாமல், அவளின் அருகில் அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டான். அவளும் அவன் நெஞ்சில் தலை சாய்த்துக்கொண்டு இருக்கி அவனை அணைத்துக் கொண்டாள்.


“விழி, என்னைப் பார்” என்று அவளை அழைத்தான். அவனது விழி என்ற அழைப்பில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இதுவரை யாரும் அவளை 'விழி' என்று அழைத்ததில்லை. அவனது 'விழி' என்ற அழைப்பு அவளின் இதயத்துக்குள் ஏதோ ஒரு உணர்வைத் தந்தது. அது அவளுக்குப் பிடித்தும் இருந்தது. அவனும் அவளது விழிகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். “உன்னை எனக்குப் பிடித்திருக்கு விழிம்மா” என்று பட்டெனச் சொல்லிவிட்டான். கேட்ட அவள் தான் அவனை அதிர்ந்து பார்த்தாள்.


உடனே அவனிடமிருந்து விலகி அமர்ந்து மீண்டும் அவனையே பார்த்தாள். “உங்களை எனக்குப் பிடிக்கல” என்று முகத்தில் அடித்தது போல் சொல்லத்தான் நினைத்தாள், ஆனால் ஏதோ ஒன்று அவளை அதை அவனிடம் சொல்லத் தடுத்தது.


 “ஏன் விழி, உனக்கு என்னைப் பிடிக்கலையா?“


“உங்களை எனக்கு யாருன்னே தெரியாது. ஆபத்திலிருந்து என்னைக் காப்பாத்துனிங்க. பார்த்து ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்தான் இருக்கும். அதற்குள்ளேயும் உங்களுக்கு என்னைப் பிடித்திருக்குன்னு சொல்றீங்க. நான் எப்படி உங்களை நம்புறது?” என்று கேட்டாள்.


“நீ உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. நீ யோசிச்சுப் பொறுமையாகப் பதில் சொல்லு. நான் நீ வீட்டுக்குப் போறதுக்கான எல்லா ஏற்பாடும் பண்றேன்.“


“அப்புறம் முக்கியமாக இன்னொரு விஷயம், இனிமேல் அந்த வீட்டுக்குள்ள உன் கூட நானும் இருக்கப்போறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.


“என்ன? அவரும் என் கூட வரப்போறாரா?“ என்று அதிர்ச்சியாகப் போகும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.


வெளியே வந்த அக்னி துருவனிடம் அவளது வீட்டுக்கு போன் பண்ண கூற. துருவனும் மலரின் வீட்டின் லேண்ட்லைனுக்கு போன் செய்தான்.


          மலர் வருவாள்...