அழகான காலை வேளையில் ஒரு பத்தொன்பது வயதுப் பருவ மங்கை, ஒரு இடத்தினை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும், பாசத்திற்கு ஏங்கும் வளர்ந்த குழந்தை என்று. அவளின் மனதிற்குள்ளும், “தன்னிடமும் யாராவது இதுபோல் உண்மையான பாசத்தைக் காட்ட மாட்டார்களா?” என்று அங்கே 14 சிறுமிகளுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்கும் உறவுகளை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது “மலரு” என்ற குரல் வீட்டினுள் இருந்து கேட்க, அவளும் தன் நினைவுகளிலிருந்து வெளியே வந்து உள்ளே சென்றாள்.
இவள் தான் நமது நாயகி மலர்விழி. பெயருக்கு ஏற்ப அவளின் மனமும் மலர்களைப் போல மென்மையானது. அழகான விழிகள், ஆப்பிள் கண்ணங்கள், செர்ரி உதடுகள், கருநீல இடைதாண்டிய கூந்தல் என எல்லோரும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரம்மன் செதுக்கிய சிலை. அன்பு, அடக்கம், அழகு என எல்லாம் அதிகம் கொடுத்த கடவுள், அவளின் வாழ்க்கையில் துன்பங்களையும் அளவுக்கு அதிகமாக அள்ளி கொடுத்துவிட்டார்.
தென்னிந்திய மான்செஸ்டர் என அழைக்கப்படும் மரியாதை மிக்க கொங்கு மண்டலத்தில், பாலக்காட்டுக்கும் பழனிக்கும் இடையில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்து, இயற்கை பசுமை மாறாமல் இருக்கும் ஊர் பொள்ளாச்சி. எவ்வளவு கஷ்டம் கவலை இருந்தாலும், “என்னிடம் விட்டுவிட்டு, நான் காட்டும் காட்சியை ரசித்து வாழ்” என்பது போல் இருக்கும். பசுமை மட்டுமே காட்சியளிக்கும் ஊர் பூஞ்சோலை கிராமம்.
அந்த ஊரின் மிகப் பெரிய குடும்பம் சக்ரவர்த்தி குடும்பம்.
சக்ரவர்த்தி, அவரின் மனைவி காமாட்சியம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள்.
முதல்மகன் மூர்த்தி, அவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகன்கள்: அருள்வாணன் (28), மதிவாணன் (25).
இரண்டாவது மகன் சண்முகம், அவரின் மனைவி கவிதா. இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண். மகேஸ்வரி (24), அவளின் கணவன் சக்திவேல். இவர்களின் இரண்டு வயது மகன் பிரதீப். மலர்விழி (19), மதியழகன் (17).
மூன்றாவது மகன் மாதவன், அவரின் மனைவி சீதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். கார்த்திக் (23), சுவேதா (19).
தேவகி, அவரின் கணவர் மாணிக்கம். இவர்களுக்கு வெற்றி செல்வன் (26), வைஷாலி (20).
சண்முகம், அவரின் மனைவி கவிதா தம்பதியர்க்கு முதல் பெண் குழந்தை பிறந்த பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு குழந்தை இல்லாமல் ஆண் வாரிசுக்காக கோயில் கோயிலாக வேண்டிக்கொண்டதன் பலனாக மீண்டும் கருத்தரிக்க, ஆண் வாரிசு பிறக்கும் என்று ஆசையாக இருந்தனர். ஆனால் அவர்களுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறக்க, தம்பதியர்க்கு அது பிடிக்காமல் போய்விட, அவர்கள் அந்தக் குழந்தையைக் கையில் தூக்கக்கூட முற்படவில்லை.
குழந்தை பிறந்து இருபதாம் நாள் சண்முகம் மாடியில் இருந்து கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு காயமாக, “இவள் பிறந்த நேரம்தான் இப்படி ஆகிவிட்டது” என்று அவளை மொத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டனர்.
சிறு வயதிலிருந்தே அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரிதாக அவளைக் கண்டுகொள்வதில்லை.
அவளின் தாத்தா பாட்டியைத் தவிர யாருக்கும் அவளைப் பிடிப்பதும் இல்லை. அந்தக் குடும்பத்தில் உள்ள சிறுவர்களுக்கும் அவளைப் பிடிப்பதில்லை. அனைவரும் அவளை “ராசி இல்லாதவள்"” என்று திட்டித் தீர்ப்பார்கள்.
இவளின் பதினெட்டாம் வயதில் அவளின் தாத்தா பாட்டி ஒரு விபத்தில் இறந்துவிட, அதற்குப் பிறகு இவளின் நிலைமை இன்னும் கொடுமையானது. அந்தக் குடும்பத்தின் சம்பளமில்லா வேலைக்காரியானாள் மலர்விழி.
“என்ன பாட்டி கூப்பிட்டீங்களா?” என்று அந்தக் குடும்பத்தில் பல வருடமாக வேலை பார்க்கும் சாரதா பாட்டியிடம் மலர் கேட்டாள்.
“ஆமா கண்ணு, உன்னைச் செல்வியம்மா அவங்க ரூமை சுத்தம் பண்ணச் சொன்னாங்க” என்றார் பாட்டி.
“சரி பாட்டி, நான் போய் சுத்தம் பண்ணிட்டு வரேன். அதுக்குள்ள நீங்க காய்கறிகளை நறுக்கி வையுங்க. நான் போய் ரூமை சுத்தம் பண்ணிட்டு வரேன் பாட்டி” என்று அங்கிருந்து மலர் சென்றாள்.
மலர், அவளின் பெரியம்மா அறையைச் சுத்தம் செய்து காலை உணவைச் சமைத்தவள், காலேஜ் கிளம்பச் சென்றாள். அவள் BA இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள்.
மலர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் காலேஜில் படிக்கிறாள். பன்னிரண்டாம் வகுப்பில் அந்த மாவட்டத்தின் முதல் மாணவியாக வந்ததால், அவளுக்கு அந்தக் காலேஜில் இலவசமாகக் கிடைமத்தது. அவளுக்கு எது எப்படியோ, அவளைப் படிக்க அனுப்பி இருக்கிறார்கள். அதே காலேஜில்தான் சுவேதாவும் படிக்கிறாள். மலர்விழியின் தோழிகள் தீபா மற்றும் அர்ச்சனா.
அச்சுவின் அப்பா கந்தசாமி, அம்மா முல்லை. அவர்களுக்கு ஒரு மகள்.
அர்ச்சனாவிற்கு மலர் என்றால் உயிர். இருவரும் சிறு வயதிலிருந்தே ஒன்றாகப் படிக்கிறார்கள். தீபா அவர்களுடைய காலேஜ் தோழி. தீபாவுக்கு யாரும் இல்லை. ஆசிரமத்தில் வளர்ந்தவள்.
காலை உணவை எடுத்து வைத்தவள் அனைவரையும் அழைத்தாள்.
முதலில் வந்தது சுவேதா தான். வந்ததும் மலரைப் பார்த்து, “ஏய், அதுதான் சாப்பாட்டை எடுத்து வச்சிட்டல்ல? அதுக்கப்புறம் நீ எதுக்கு இங்க நிக்கிற? உன்னோட மூஞ்சியைப் பார்க்க யாருக்கும் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும் இல்ல? அப்புறம் என்ன போய் தொலை” என்றாள் சுவேதா.
அவள் பேசுவதை அமைதியாகக் கேட்டுவிட்டு, சமையல் அறை பக்கத்தில் ஒரு சிறிய அறையில் அடைந்துகொண்டாள். இது தினமும் நடப்பதால், அவர்கள் சாப்பிட்டுச் செல்லும் வரை வெளியே செல்ல மாட்டாள்.
அவர்கள் அனைவரும் சாப்பிட்டுச் சென்ற பிறகு மலரும் காலேஜுக்குச் சென்றாள். மலர் காலேஜுக்குள் நுழையும்போதே அச்சுவைப் பார்த்துவிட்டாள்.
“ஏன்டி இவ்ளோ நேரம்? உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா?” என்றாள் ஆச்சு.
“என்னாச்சு மேடமுக்கு? காலையிலேயே இவ்வளவு கோபம்?” என்று கேட்டாள் மலர்
“இன்னைக்கு முல்லை எனக்குப் பிடிக்காத உப்புமாவைச் செஞ்சிருக்கா” முகத்தினைத் தூக்கி வைத்துக்கொண்டு அச்சு கூறினாள்.
அதைப் பார்த்துச் சிரித்த மலர், “சரி விடுடி, ஏதோ ஒரு நாளைக்குத் தான செய்றாங்க. அதுக்கு எதுக்கு இவ்ளோ கோபப்படுற?” என்றாள்.
“சரி வா உள்ள போகலாம். இன்னைக்குத் தீபா வரமாட்டன்னு நேத்தே சொல்லிட்டா” என்று கூறிய ஆச்சு மலருடன் பேசிக்கொண்டே இருவரும் உள்ளே சென்றனர்.
மலர், தீபா, அர்ச்சனாவைத் தவிர வேறு யாருடனும் பேச மாட்டாள் என்பதைவிட, சுவேதா அவளுடன் பேச அனுமதிக்க மாட்டாள் என்பதே உண்மை. ஏதாவது ஒன்று செய்து அவளை அவமானப்படுத்துவதிலேயே குறியாக இருப்பாள். அதனாலேயே மலர் வேறு யாருடனும் பேச மாட்டாள்.
***********
அதே நேரம் சென்னையில் உள்ள அரண்மனை போல் இருக்கும் வீட்டின் ஒரு அறையில் இருந்து போனில் கத்திக்கொண்டிருந்தான் ஒருவன்.
“எனக்கு எப்படியாவது அவன் கையில கிடைக்கணும். இல்லைன்னா நீ உயிரோட இருக்க மாட்ட!” அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, உடனே போனை கட் செய்தான்.
போன் கட் ஆனவுடனே தனது ஆஃபீஸ் செல்வதற்கு கிளம்பச் சென்றான்.
ஆறடி உயரம், இறுக்கமாகவே இருக்கும் முகம், கூர்மையான கண்கள், கூர் நாசி, ட்ரிம் செய்யப்பட்ட தாடி, அழகான முகம். ஆனால் அவற்றில் புன்னகை என்பதே பார்க்க இயலாது.
சிறுவயதில் ஏற்பட்ட காயங்கள் அவனை அவ்வாறு மாற்றி விட்டது. அவனுக்கு ஏற்பட்ட காயங்களால் வெறித்தனமாக உழைத்து இன்று மிக பெரிய பிஸ்னஸ்மேனாக உயர்ந்து நிற்கிறான். அவனை எதிர்ப்பவர்களைப் பார்வையாலேயே எரிப்பான். துரோகம் செய்பவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்.
இன்று தனக்குத் துரோகம் செய்தவனைத்தான் அவனுடைய ஆட்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவன் தான் நமது நாயகன் அக்னி ருத்ரதேவன் (27).
இவனின் பாட்டி அன்னலட்சுமி. கொஞ்சம் கண்டிப்பானவர். இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள்.
முதல் மகன் கிருஷ்ணன், அவரின் மனைவி மீனாட்சி. அன்பானவர். கிருஷ்ணன் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த மீனாட்சியை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் ஒரே மகன் அக்னி ருத்ரதேவன். அவனின் நான்கு வயதில் அவனின் தாய் இறந்துவிட்டார்.
அதற்குப் பிறகு கிருஷ்ணன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரின் பெயர் மாதவி. பணக்கார, திமிர் பிடித்தவள். அவருக்கு அக்னியைச் சுத்தமாகப் பிடிக்காது. கொஞ்சம் கொஞ்சமாகக் கிருஷ்ணனிடம் இருந்து அக்னியைப் பிரித்துவிட்டாள்.
அக்னியும் அவனின் தாய் இறந்ததிலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான். அவனின் தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதும் மொத்தமாக விலகிவிட்டான்.
கிருஷ்ணன், மாதவிக்கு ஆகாஷ் (20), ஆகாஷினி (20) என்ற இரட்டையர்கள்.
இரண்டாவது மகன் கண்ணன். அண்ணனுக்கு எதிர்மறையானவர்; அவருக்கே அனைத்து அதிகாரமும், சொத்துக்களும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர். அவரின் மனைவி மரகதம் கணவருக்கு ஏற்றவர்.
மீனாட்சி இறந்த பிறகு, அக்னியை அவன் செய்யாத தப்பிற்குக் கொடுமை செய்து அந்தக் குடும்பத்தை விட்டே அனுப்பிவிட்டார்கள். அதில் அவனின் தந்தையும் ஒருவர். அதைப்பற்றிக் கதையின் போக்கில் பார்க்கலாம்.
கண்ணன், மரகதம் இவர்களின் மகன் நவீன்குமார் (25), மகள் அனன்யா (20). பெற்றோர்களைப் போலவே இவர்களின் குணமும்.
மூன்றாவது மகள் சகுந்தலா. ரொம்ப திமிர் பிடித்தவர். கல்யாணம் ஆகியும் கணவருடன் அதே வீட்டில் வாழ்கிறார்கள். அவரின் கணவர் கேசவன். அவர் ரொம்ப அமைதியானவர். மனைவி எது சொன்னாலும் தலையாட்டுவார், இல்லை என்றால் சோறு கிடையாது.
இவர்களின் ஒரே மகள் வைஷாலி (21). அம்மாவுக்குத் தப்பாமல் பிறந்தவள். யாருக்கும் அடங்காதவள். அன்னலட்சுமி பாட்டிக்கு அடங்குவாள்; அதற்கும் காரணம் அக்னி. பாட்டியை கைக்குள் போட்டுக்கொண்டால் அக்னியை அடையலாம் என்று கொஞ்சம் அடக்கி வாசிப்பாள்.
இவர்கள் அனைவரும் தான் ஹீரோவின் குடும்பத்தார்கள். ஆனால் அவர்களுடன் இல்லாமல் தனியாக இருக்கிறான்.
தனது அறையிலிருந்து படிகளில் இறங்கும் அவனின் காலடி சத்தத்திலேயே அங்குள்ள வேலையாட்கள் அமைதியாகினர். நேராக டைனிங் டேபிளில் அமர்ந்தவன், வேலையாட்கள் உணவினைப் பரிமாற அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
அவனுக்காக அவனின் PA துருவன் வீட்டின் வெளியே காத்திருந்தான். PA மட்டும் இல்லை, அவனின் நண்பனும் கூட துருவன். அவனுடன் காரில் ஏறினான். அவர்களுடன் அக்னியின் பர்சனல் கார்ட்ஸ் தலைவன் மற்றும் அக்னியின் நண்பனுமான ஆதித்யா சென்றான். நண்பனாக இருந்தாலும், அக்னியை விட ஆதி ஆறு மாதம் இளையவன் என்பதால், அண்ணன் ஸ்தானத்தில் வைத்திருக்கிறான்.
அவர்களுடன் அவனின் பாடிகார்ட்ஸ் நான்கு கார்களில் முன்னும் பின்னும் பாதுகாப்பிற்குச் சென்றார்கள்.
காரில் ஏறியவுடன், “அவனைக் கண்டுபிடிச்சாச்சா?” தன் இரும்பு குரலால் துருவனிடம் கேட்டான் அக்னி.
“கண்டுபிடிச்சாச்சு அக்னி. நம்ம இடத்துல தான் இருக்கான்.” என்றான் துருவன்.
“நேரா நம்ம இடத்துக்குக் காரை விடு ஆதி” என்றான் அக்னி.
நேராக அவர்களின் குடோன் இருக்கும் இடத்திற்குச் சென்றார்கள்.
ஒரு பாழடைந்த குடோனில் அக்னியின் கம்பெனியில் வேலை செய்யும் அந்தக் கம்பெனியின் அக்கவுண்டிங் மேனேஜர் சதாசிவத்தைக் கட்டிவைத்திருந்தனர்.
அவர்களின் கார் அந்தக் குடோனுக்குள் புகுந்தவுடன் முதலில் உள்ளே சென்ற துருவன், “என்ன சிவம், ரொம்ப ஜாலியா இருக்க போல?” என்று நக்கலாகக் கேட்டான்.
“ப்ளீஸ் துருவன் சார், என்ன விட்ருங்க. தெரியாம பண்ணிட்டேன். இனிமே அந்த மாதிரி யாருகிட்டயும் நடந்துக்க மாட்டேன். தயவு செய்து என்ன விட்டுடுங்க” என்றான்.
அக்னி: “அதை நீ தப்பு பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்” என்று கூறியபடியே அங்கு வந்தான் அக்னி. அவன் கண்களில் அப்படி ஒரு நெருப்பு.
அவனைப் பார்த்தவுடன் சதாசிவத்திற்குத் தன்னுடைய மரணத்தைக் காண்பது போல் இருந்தது.
மலர் வருவாள்...