Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

அக்னியை ஆளும் மலரவள் - 10


  காரின் பின் சீட்டில் கண்களை மூடி அமர்ந்திருந்த அக்னியின் மீது ஏதோ விழுவதுபோல் இருக்க, கண்களைத் திறந்து பார்த்தான். பார்த்தவுடன் அவனது கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி. ஏனென்றால் அவன் பக்கத்தில் மயங்கிக் கிடந்தது, காலையில் யாரைப் பார்க்க வேண்டும் என்று பேருந்தைப் பின்தொடர்ந்து சென்றானோ அவள் தான். மயங்கி அவன் தோள் மீது சாய்ந்து கிடந்தாள்.

ஆம், அவன் பக்கத்தில் மயங்கிக் கிடந்தது மலர்தான். “இவள் எப்படி இங்கே?” என்று அதிர்ச்சியுடன் அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

 காலையில் அவன் பார்க்கும்போது சிரித்துக்கொண்டு, விளையாடிக்கொண்டிருந்த அந்தக் குழந்தைத்தனமான முகத்தில் இப்போது அழுத முகம், கன்னங்களில் கைத்தடம், உதட்டோரம் இரத்தம், தலை எல்லாம் கலைந்து ஒருமாதிரி பார்க்கவே பரிதாபமாகக் கிடந்தாள். காலையில் அன்று மலர்ந்து மலர்போல் இருந்தவள் இப்போது வாடிய மலராகக் கிடந்தாள்.

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்த அக்னியை, துருவன்தான் நினைவுபடுத்தினான்.

“அக்னி, ஹாஸ்பிடல் வந்துருச்சு. நீ காரிலேயே இரு. நான் அந்தப் பெண்ணை ஹாஸ்டல்ல சேத்துட்டு வந்துடுறேன்” என்று அவனிடம் சொல்லிவிட்டு, காரைவிட்டு கீழே இறங்கி, பின் கதவைத் திறந்தான்.

கதவைத் திறந்து அவளைக் குனிந்து தூக்குவதற்கு முன், அக்னி படுவேகமாக இறங்கி, அவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குள் சென்றான். 

துருவன்தான் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக்கொண்டு நின்றிருந்தான். பிறகு தன்னைச் சுதாரித்துக்கொண்டு அக்னியின் பின்னே சென்றான்.

உள்ளே சென்ற அக்னி, “டாக்டர், டாக்டர்!” என்று அந்த மருத்துவமனையே அதிரும்படி சத்தமிட்டுக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் அத்தனை பதற்றம். 

எங்கு “இவளும் தன் அம்மாவைப்போல் தன்னை விட்டுச் சென்றுவிடுவாளோ” என்று அவனுக்குள் பயம் வந்துவிட்டது. இன்றுதான் இவளைப் பார்த்தான், அதற்குள் அவள் தன்னைவிட்டுச் சென்றுவிடுவாளோ என்று பயம் கொள்ள ஆரம்பித்தான். இவனது சத்தத்தைக் கேட்டு, அங்கிருந்த மருத்துவர் விரைவாக வந்தார். 

 அங்கு வந்த டாக்டர் “என்ன ஆச்சு? என்ன பிரச்சினை?” என்று கேட்டார்.

“இவர்களுக்கு என்ன ஆச்சுன்னு சீக்கிரம் பாருங்கள். மயங்கி விழுந்துவிட்டா” என்று மருத்துவரிடம் கூற.

“சரி, உள்ளே கொண்டு வந்து படுக்கையில் படுக்க வையுங்க சீக்கிரம்” என்று மருத்துவர் சொல்லிவிட்டு அந்த அறைக்குள் உள்ளே நுழைந்தார். அவரது பின்னே நுழைந்த அக்னி, அவளைத் தூக்கிக்கொண்டு வந்து மெதுவாகப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு தள்ளி நின்று கொண்டான்.

“நீங்கள் வெளியே இருங்க. நான் என்னவென்று பார்த்துவிட்டு உங்களுக்கு சொல்றேன்” என்று அக்னியை வெளியே அனுப்பப் பார்த்தார். 

ஆனால் அவனோ, அவள் கையைப் பிடித்துக்கொண்டு, “இல்லை, இவளை விட்டுவிட்டு நான் வெளியே போக மாட்டேன். நான் இங்கே இருக்கேன், நீங்கள் அப்படியே அவளுக்கு என்னன்னு பாருங்க” என்று அதே இடத்தில் நின்று கொண்டான்.

இவன் மருத்துவரிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே துருவன் உள்ளே நுழைந்தான்.

 “சார், நீங்கள் வெளியே போனால்தான் எங்களால் அவங்களுக்கு என்னன்னா பாக்க முடியும். ப்ளீஸ், கொஞ்சம் புறிஞ்சிகோங்க” என்று டாக்டர் கூறிக்கொண்டிருந்தார்.

“அக்னி, நீ வெளியே வா. நீ வந்தா தான் அந்தப் பெண்ணுக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிப்பாங்க. ஏன்டா இப்படி நடந்துகொள்கிற? வெளியே வா” என்று அவனை இழுத்துக்கொண்டு வெளியே சென்றான்.

அவனை வெளியே இழுத்துக்கொண்டு வந்து அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைத்தான். தங்களுக்கு அருகே நின்றிருந்த ஒரு பாதுகாவலரை அழைத்து, தண்ணீர் பாட்டில் ஒன்று வாங்கி வரச் சொன்னான். அந்தப் பாதுகாவலரும் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு வந்து துருவனிடம் கொடுக்க.

தண்ணீரை வாங்கி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த அக்னியிடம் கொடுத்து தண்ணீர் குடிக்கச் சொன்னான். அக்னி தண்ணீர் அருந்திய பிறகு கொஞ்சம் நிதானமாக இருப்பதை உணர்ந்தான்.

 துருவன் அக்னியின் பக்கத்தில் உட்கார்ந்து, “என்னடா ஆச்சு? எதுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்துட்டு இப்படி ஒரு மாதிரி நடந்துகொள்கிற? உனக்கு அந்தப் பெண்ணு ஏற்கனவே தெரியுமா? சொல்லுடா, ஏன் இப்படி ஒரு மாதிரி நடந்துகொள்கிறாய்?” என்று அக்னியிடம் கேட்டான்.

அக்னி தலையை நிமிராமல் கீழே தரையையே பார்த்துக்கொண்டிருந்தான். துருவனும் விடாமல் அவனைக் கேட்டுக்கொண்டே அவன் முகத்தை நிமிர்த்தினான். நிமிர்ந்து அக்னியின் முகத்தைப் பார்த்த துருவன் அதிர்ச்சியடைந்தான். ஏனென்றால் அக்னியின் கண்கள் கலங்கியிருந்தது. இதுவரை கோபத்தை மட்டுமே காட்டிக்கொண்டிருந்த அக்னி முகத்தில், முதல்முறையாக ஒரு பெண்ணுக்காக கலங்குவதைப் பார்க்கிறான். துருவன் அவனிடம் எதுவும் கேட்காமல் அவன் முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது “எனக்கு அவள் வேண்டும்” என்று அக்னி வாயைத் திறந்தான். 

அவன் சொன்னதை நம்ப முடியாமல் அவன் முகத்தைத்தான் துருவன் பார்த்தவன், 
“நீ இப்போ என்ன சொன்ன? மறுபடியும் சொல்லு, எனக்குச் சரியாகக் கேட்கல. நீ சொன்னது எனக்கு வேற மாதிரி கேட்டுச்சு” என்று அவனிடமே கேட்டான்.

“உனக்குச் சரியாகத்தான் கேட்டிருக்கு. எனக்கு அவள் வேணும். என்ன பண்ணுவாயோ, ஏது பண்ணுவாயோ எனக்குத் தெரியாது. அவளோட மொத்த டீடைலும் எனக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் என் கைக்கு வந்து சேரனும்” என்று அவனிடம் சொல்லிவிட்டு மறுபடியும் தலையைக் கீழே குனிந்துகொண்டான்.

அவன் அப்படிச் சொன்ன பிறகு துருவனும் அவனிடம் ஒன்றும் கேட்காமல், மலரின் விவரங்களைச் சேகரிக்க ஒரு பாதுகாவலரை அனுப்பினான். பாதுகாவலரை அனுப்பிவிட்டு, அக்னியின் அருகில் உட்கார்ந்துகொண்டான்.

அக்னி கண்களை மூடிக்கொண்டு தலையில் கைவைத்து கீழே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். கண்களை மூடினாலே, காலையில் சிரித்திருந்த அந்தக் குழந்தைத்தனமான முகம்தான் அவன் கண்களுக்குத் தெரிந்தது.

இவ்வாறு இவர்கள் இருக்கும்போது மருத்துவர் அந்த அறையைவிட்டு வெளியே வந்தார். அவர் வருவதைப் பார்த்து அக்னிதான் முதலில் சென்று, “அவ எப்படி இருக்கிறா?“ என்று கேட்டான்.

“பயப்படும்படி ஒன்றுமில்லை. பயத்தில்தான் அவர்கள் மயக்கமாகி இருக்கிறாங்க. அவங்க இப்போ நல்லா இருக்கிறாங்க. நான் ஒரு மருந்து எழுதி தரறேன், அதை மட்டும் கன்னத்தில் தடவுங்க. கொஞ்சம் சோர்வாக இருக்கிறாங்க, ஏதாவது ஜூஸ் கொஞ்சம் கொடுங்க. இன்னும் 15 நிமிஷத்துல கண் முழித்துவிடுவாங்க. அவர்கள் கண் முழித்ததுக்கு அப்புறம் சொல்லுங்கள், நான் மறுபடியும் வந்து பாக்கிறேன்” என்றார்.

“டாக்டர். நான் போய் அவங்களைப் பார்க்கலாமா?“ என்று அக்னி கேட்டான்.

“நீங்கள் போய் பார்க்கலாம். ஒன்றும் பிரச்சினை இல்லை” என்று சொல்லிவிட்டு மருத்துவர் அங்கிருந்து சென்றார்.

அவர் சென்ற நொடி அக்னி அந்த அறையில் நுழைந்து கொண்டான். துருவன்தான் உள்ளே போகலாமா, வெளியே நிற்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
உள்ளே சென்ற அக்னி அவளுக்கு அருகில் நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்துகொண்டான். அவளுக்கு அருகே உட்கார்ந்து, அவள் கையை அவன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டு, அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான், “எப்பொழுது கண்களைத் திறப்பாள்?“ என்று.

வெளியே துருவன், அவள் கண் விழித்த பிறகு ஜூஸ் குடிக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னதால் ஜூஸ் வாங்கச் சென்றான். நண்பன் பதட்டப்படுவதிலேயே அவளுக்கு அவள் யார் என்று துருவனுக்குத் தெரிந்துவிட்டது. அதனால்தான் அக்னியைத் தொந்தரவு செய்யாமல் அங்கு இருந்த கேண்டினிற்கு சென்றான்.

இங்கே சரியாக 20 நிமிடங்களுக்குப் பிறகு மலர் மெதுவாகக் கண்களைத் திறந்தாள். கண்களைத் திறந்ததும் தான் எங்கே இருக்கிறோம் என்று சுற்றிப் பார்த்தாள். பார்த்த பிறகுதான் தெரிந்தது அவள் ஹாஸ்பிடலில் இருப்பது.

 “யார் தன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது?“ என்று யோசித்துக்கொண்டே வலதுபக்கம் திரும்பும்போதுதான், அவள் கண் விழித்தது முதல் அவளையே பார்த்துக்கொண்டிருந்த அக்னியைப் பார்த்தாள். அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு அவனை எங்கேயோ பார்த்ததுபோல் தோன்றியது. “எங்கே பார்த்தோம்?“ என்று அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் தன்னைப் பார்ப்பதைப் பார்த்த அக்னி, “எதுக்கு இப்படி என்னையே பார்த்துட்டு இருக்க? இதுக்கு முன்னாடி என்னை எங்கேயாவது பார்த்திருக்கியா?“ என்று கேட்டான் அக்னி.

“ஆமாம், உங்களைப் பார்த்திருக்கேன். ஆனால் எங்கேன்னுதான் எனக்கு ஞாபகம் வர மாட்டேங்குது” என்று மலர் கூற.

 அவனும் சிறு யோசனையுடன் தான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கும் அவளை எங்கே பார்த்ததுபோல் ஞாபகம், ஆனால் எங்கு என்றுதான் தெரியவில்லை. அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே மலர் பேசினாள்.

“சார், நீங்க தான் என்னைக் காப்பாத்துனீங்களா?“ என்று அக்னியிடம் கேட்டவள்.

 “எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. நான் ஓடி வரும்போது ஒரு கார் மீது மட்டும் விழுந்தது ஞாபகம் இருக்கு. அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு எனக்கு ஞாபகம் இல்லை. நீங்கதான் என்னைக் காப்பாற்றினீர்களா? ரொம்ப நன்றி, சார். இப்போது டைம் என்னன்னு சொல்ல முடியுமா உங்களால?” என்று அக்னியிடம் கேட்டாள்.

“இப்போது நைட்டு 10:30 ஆகுது. எதுக்கு இப்போது டைம் கேட்கிறாய்? உன்னை யாராவது தேடுவாங்களா? சரி, சீக்கிரம் டாக்டர் வந்து உன்னைச் சரிபார்த்ததும் இங்கிருந்து கிளம்பிடலாம். நானே உன்னை உங்க வீட்டில் இறக்கிவிடுறேன்” என்று அக்னி கூறினான்.

“என்னைய யார் தேடப்போறாங்க? நான் கொஞ்ச நேரம் வீட்டில் இல்லனாளே யார் கூடவாவது ஓடிப் போயிருப்பேன்னுதான் வீட்டில் பேசிட்டு இருப்பாங்க” என்று மனதில் நினைத்துக்கொண்டாள் மலர்.

அப்போது கதவைத் திறந்து கொண்டு துருவன் உள்ளே ஜூஸுடன் வந்தான். ஜூஸை அக்னியிடம் கொடுத்து மலரிடம் கொடுக்க கூற. அக்னியும் ஜூஸை கையில் வாங்கி மலரிடம் கொடுக்க, அவளும் மறுக்காமல் ஜூஸை வாங்கி குடித்தாள். 

ஜூஸை குடித்து முடித்துவிட்டு, குழந்தைபோல் இருவரையும் பார்த்து முழித்து கொண்டிருந்தாள். அடுத்து என்ன செய்வது என்று அவளுக்கும் தெரியவில்லை, அவர்களிடம் என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. 

அக்னியும் அவளிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவன் கேட்க நினைத்ததை துருவன் கேட்டுவிட்டான்.

“உன்னுடைய பெயர் என்னம்மா? எங்கிருந்து வர? அந்த நேரத்தில் நீ அங்கு எதுக்கு வந்த?“ என்று கேட்டான்.

“அண்ணா, என் பெயர் மலர்விழி. என்னை எல்லாரும் மலர்னுதான் கூப்பிடுவாங்க. இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க” என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்து கொண்டாள்.

அவர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, “ஏதோ இருக்கிறது” என்று அத்துடன் அவளிடம் கேள்வி கேட்கவில்லை.

“சரி சரி, நான் ஒன்னும் கேட்கல. நீ உடனே தலையைக் குனிஞ்சிக்காத. நிமிந்து என்னைப்பாரு” என்று உரிமையுடன் துருவன் அவளிடம் பேசினான்.

“சும்மா கேட்டேன். அதுக்கு எதுக்கு இவ்வளவு கோபமாக இருக்கிற?“ என்று கேட்டான்.

“நான் ஒன்றும் கோபமாக இல்லை. நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு கூறினாள்.

“பார்றா! கோபமா இல்லன்னு சொல்லிட்டு கோபமா மூஞ்சி வச்சிட்டு இருக்க. பார்க்கச் சகிக்கலை” என்று அவளை பார்த்து சிரிக்க.

அவளும் ஏதோ அவனிடம் பல நாள் பழகியதுபோல் நிமிர்ந்து அவனை முறைத்தாள். 

“என்னை முறைக்கிற கண்ணை பிடிங்கிபுடுவேன் பாத்துக்க” என்று அவளைக் கிண்டல் செய்துகொண்டிருந்தான். அவனுக்கு அவளிடம் வம்பு செய்வது பிடித்திருந்தது.

“பாருங்க, என்னைக் கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்காரு” என்று அக்னியிடம் முறையிட.

அக்னியும் இவ்வளவு நேரம் துருவனும் மலரும் பேசியதைத்தான் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தன்னிடம் செல்லமாகக் குறையிட்டதைப் பார்த்தபோது அவனுக்கு உள்ளுக்குள் ஜில்லென்று இருந்தது. உதட்டின் ஓரத்தில் சிறிதாகச் சிரிப்பும் வந்தது. உடனே அதனை மறைத்துக்கொண்டு துருவனைத் திரும்பி முறைத்தான்.

 “இப்போது என்ன சொல்லிட்டேன்? இந்த மாதிரி முறைக்கிறான்? இவனுக்குக் கண்டிப்பா இந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்து பைத்தியம் தான் பிடித்திருக்கு” என்று துருவன் நினைத்துக்கொண்டு அமைதியாக நின்று கொண்டான்.

அப்போது துருவனின் செல்போன் சத்தமிட்டது. எடுத்து யார் என்று பார்க்க, மலரின் விவரங்களை கொண்டுவர அனுப்பியவன்தான் அழைத்திருந்தான். உடனே போனை எடுத்து, “கேண்டின்கு வந்துவிடு” என்று சொல்லிவிட்டு, போனை வைத்தவன் அக்னியை ஒரு பார்வை பார்க்க, அவனின் பார்வை புரிந்து கொண்டான் அக்னி. முதலில் துருவன் மலரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல.

அக்னியும், “நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் உங்க வீட்டுக்கு போகலாம்” என்றான்.

அவளும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு, கண்களை மூடி படுத்துக்கொள்ள.
அக்னியும் அறையில் இருந்து வெளியே வந்து நேராக கேண்டின்கு சென்றான். 

அங்கு அவனுக்கு முன்பே துருவனும் அவர்களுடைய பாதுகாவலரும் காத்துக் கொண்டிருக்க. அங்கு சென்று துருவனுக்கு அருகில் அமர்ந்தான்.

அக்னி வந்து அமர்ந்ததும் தன் கையில் இருந்த கையில் ஃபைலை அவர்கள் பக்கம் நகர்த்தி வைத்தான் துருவன் அனுப்பிய பாதுகாவலன்.

அக்னியும் அதைத் திறந்து அதில் உள்ள விவரங்களைப் படிக்க ஆரம்பித்தான். படிக்கப் படிக்க அவனுடைய கண்கள் இரத்தம் போலச் சிவந்திருந்தது. அவனை அப்படிப் பார்க்க துருவனுக்கே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. 

அனைத்தையும் படித்து முடித்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் அவனுடைய காட்ஸிடம் “அந்த ஜெய்யை அங்கிருந்து தூக்கி நம்ம இடத்துக்கு கொண்டுவாங்க” என்றான் கோபமா. 

அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை, மலர் இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பாள் என்று. அவன் இருக்கும் கோபத்தில் கைகளை இறுக்கி அவன் முன்னால் இருந்த மேசையை ஓங்கி அடித்தான். மேசை மீது இருந்த காபி, கோப்பையுடன் மேசை இரண்டாக உடைந்தது. அந்த அளவுக்கு ஓங்கி அடித்திருந்தான்.

அக்னி இந்த அளவுக்குக் கோபப்படும் அளவிற்கு அந்தக் கோப்பில் என்ன இருக்கிறது என்று துருவனும் அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். படிக்கப் படிக்க அவனுக்குமே கோபம் வந்தது. “இப்படியும் ஒரு குடும்பம் இருக்குமா?“ என்று.


                      மலர் வருவாள்...