அக்னியும் துருவனும் வந்த விமானம் கோயம்புத்தூரில் தரையிறங்கியதும், அவர்களுக்காக காத்திருந்த காரில் ஏறி, தங்களுக்கென இருக்கும் பங்களாவிற்குச் சென்றனர். அவர்கள் வருவதைப் பற்றி முன்னரே தெரிவித்திருந்ததால், அங்குள்ள வேலையாட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி, அவர்கள் வருகைக்காக ஒரு வேலையாள் வாசலிலே காத்துக்கொண்டிருந்தார்.
அவர்களின் கார் பங்களாவின் வாயிலுக்கு அருகில் வந்து நின்றது. வாயிலருகே நின்றிருந்த காவலாளி, கார் வந்து நின்றவுடன் கதவைத் திறந்துவிட்டார். கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டு, அங்கு அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த வேலையாள் வெளியே வந்து பார்த்தார்.
அக்னி வந்த கார் நேராக வீட்டின் வாசலில் வந்து நின்றது. அங்கிருந்த வேலையாள் உடனடியாக காரின் பின் கதவைத் திறந்துவிட, அதிலிருந்து இறங்கிய அக்னி வேகமாக வீட்டினுள் சென்றுவிட்டான். உள்ளே நுழைந்ததும், மாடியில் இருக்கும் அவனது அறைக்கு இரண்டு இரண்டாக படிகளை வேகமாக ஏறி, தன்னுடைய அறையில் அடைந்துகொண்டான்.
இங்கு வெளியே அவன் இறங்கி உள்ளே சென்றதும், துருவனும் பின்னாலேயே வேலையாளின் உதவியுடன் தங்களுடைய லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். துருவனின் பெட்டிகளை வேலையாள் எடுத்துக்கொண்டு துருவனின் அறையில் வைத்துவிட்டு, துருவனிடம் வந்து, “ஏதாவது உதவி வேண்டுமென்றால் என்னை அழையுங்கள்” என்று சொல்லிவிட்டு, தங்களுக்கென ஒதுக்கி இருக்கும் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இங்கே, துருவன் அக்னியின் பெட்டியை எடுத்துக்கொண்டு அவனது அறைக்குச் செல்ல, அங்கு அக்னி குளித்துக்கொண்டிருந்தான். அவன் குளித்துவிட்டு வந்து தூங்கட்டும் என்று, அவனை தொந்தரவு செய்யாமல் பெட்டியை வைத்துவிட்டு, தனது அறைக்கு வந்து அவனும் ஒரு குளியலை போட்டுவிட்டு படுத்துவிட்டான். அக்னியும் குளித்துவிட்டு வந்ததும் தனது படுக்கையில் விழுந்து அடுத்த நொடியே தூங்கிவிட்டான். அவன் தூங்கும்போது மணி இரண்டு ஆகிவிட்டது.
நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தவன். காலை 5 மணிக்கு யாரோ அவனை அழைப்பதுபோல் கேட்டது. அதுவும் தன் தாய் மட்டுமே அழைக்கும், 'தேவ்' என்ற குரல். உடனே தூக்கத்தில் தலையை இருபக்கமும் அசைத்துவிட்டு மீண்டும் தூங்கினான். மறுபடியும் அதேபோல், “சீக்கிரம் இங்கே வாங்க தேவ்... சீக்கிரம் வந்து என்னைக் காப்பாற்றுங்க!” என்று யாரோ ஒரு பெண் அலறுவது போல் கேட்டது.
உடனே அந்த அலறலைக் கேட்டு கண்கள் விழித்துக்கொண்டான். எழுந்து உட்கார்ந்து தலையில் கை வைத்துக்கொண்டு அந்தப் பெண் அலறியது காதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. தன் காதுகளை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு அமர்ந்திருந்தான். அந்தப் பெண்ணின் குரலும் தன் தாயின் குரலும் ஒரே மாதிரி இருப்பதுபோல் மனதுக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது.
எதனால் என்று அவனுக்கும் தெரியவில்லை. அதற்குப் பிறகு அவனுக்குத் தூக்கமும் வரவில்லை. பாத்ரூம் சென்று புத்துணர்ச்சி பெற்று வெளியே வந்து, துருவனை எழுப்பாமல், அவன் மட்டும் தனியாக ஜாக்கிங் சென்றான்.
இனிய காலை வேளையில், யாருமில்லாத அந்த சாலையில் ஜாக்கிங் செல்வது அவன் மனதிற்கு இதமாக இருந்தது. காலை ஏழு மணிவரை ஜாக்கிங் செய்துவிட்டு வீட்டிற்கு வந்து, அங்கிருந்த தோட்டத்தில் கொஞ்ச நேரம் நடந்துவிட்டு வீட்டிற்குள் சென்றான்.
அப்போதுதான் துருவன் எழுந்து ஹாலுக்கு வற அக்னி உள்ளே வருவதைப் பார்த்துவிட்டு, “நீ ஜாக்கிங் போகும்போது என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம் இல்ல அக்னி? ஏன் சொல்லாம நீ மட்டும் தனியாகப் போயிட்டு வந்த? சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன் இல்ல?”
“இல்லைடா, எனக்கு அஞ்சு மணிக்குத் தூக்கம் தெளிஞ்சிரிச்சி. அந்த நேரத்துல உன்னை தொந்தரவு பண்ணாம நான் மட்டும் ஜாக்கிங் போகலாமான்னு உன்னை விட்டுட்டு போய்ட்டேன். அதனால என்ன, சரிவிடு. நாளைக்கு உன்னை கூட்டிக்கொண்டு போறேன்”.
“சரி, ரெடியாகு. ஆபீசுக்கு லேட்டாகுது. சீக்கிரம் போகலாம். நானும் போய் ரெடியாகி வறேன்” என்று சொல்லிவிட்டு அவனது அறைக்குச் சென்றான்.
காலை 8 மணிக்கு அலுவலகம் செல்வதற்கு ரெடியாகி கீழே வந்தான் அக்னி. அவனுக்கு முன்பே துருவன் ரெடியாகி டைனிங் டேபிளில் உட்கார்ந்திருந்தான். அக்னி டைனிங் டேபிளுக்கு வந்ததும் இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பிறகு அங்கிருந்த காரில் ஏறி அக்னியும் துருவனும் அலுவலகத்திற்குச் செல்ல, அவர்களுடன் அவர்களின் பாதுகாவலர்களும் கிளம்பினர். ஆதித்யா அவர்களுக்கு எனத் தனியாகப் பாதுகாவலர்கள் வைத்திருந்தான். அவன் அவர்களுடன் வரவில்லை என்றாலும், அக்னியின் பாதுகாப்புக்கு எப்போதும் கூடவே ஆட்கள் இருப்பார்கள். ஏனென்றால் அவனுக்கு இங்கு மட்டுமே பிஸ்னஸ் கிடையாது, வெளிநாடுகளிலும் நிறைய பிஸ்னஸ்களும் இருப்பதால் அவனுக்கு எதிரிகளும் அதிகமாகவே இருக்கின்றனர்.
பாதுகாவலர்களின் உதவியுடன் அக்னி சென்று கொண்டிருந்த கார் போக்குவரத்து நெரிசலில் நின்றது. அப்போது தற்செயலாகத் திரும்பும்போது ஒரு பெண் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் பார்த்தான் அக்னி. அவள் சாப்பிடும்போது கைகளிலும் உருகியதையும் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அப்போது அவளது தோழி அவளை, “ஏய் மலரு! நீ என்ன சின்னப் பிள்ளையாடி? ஐஸ்கிரீம் கையில ஒழுகுது பார். ஒழுங்காக நல்லா சாப்பிடுடி” என்று திட்டிக்கொண்டிருந்தாள்.
ஆம், அங்கு நிற்பது நம்முடைய மலர்தான். மலர் காலையில் கல்லூரி செல்வதற்கு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, ஐஸ்கிரீமைப் பார்த்ததும் அடம் பிடித்து ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அச்சுதான் அவளைக் கண்டபடி திட்டிக்கொண்டிருந்தாள். தீபா அவளைச் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள்.
அங்கே சிறு குழந்தை போல் ஐஸ்கிரீம் சாப்பிடும் மலரைத்தான் அக்னயும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் குழந்தைபோல் ஐஸ்கிரீம் சாப்பிடுவது, தன் தோழிகளிடம் சிரித்து விளையாடுவது, அவள் சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழி என்று அவள் செய்யும் அனைத்தும் அக்னியை சற்றே அசைத்துத்தான் பார்த்தது.
“ஏய் மலர், பஸ் வந்துருச்சு வாடி” என்று அவளை இழுத்துக்கொண்டு இருவரும் பேருந்தில் ஏறினார்கள். அதுவரை அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த அக்னி, அவள் அங்கிருந்து செல்லும்போது தன்னை விட்டு ஏதோ செல்வதுபோல் உணர்ந்தான். மறுபடியும் அவளைப் பார்க்க வேண்டும் என்று கண்கள் துடித்தன. இந்த உணர்வு எதனால் என்று அவனுக்கும் தெரியவில்லை, ஆனால் அவளைப் பார்க்கும்போது ஏதோ ஒரு உணர்வு அவனை ஆட்கொண்டது.
துருவன் அவனை அழைத்துக் கொண்டே இருக்க, அக்னி அவன் பக்கம் திரும்பக்கூட இல்லை. அவள் ஏறிய பேருந்து அங்கிருந்து மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. துருவனுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை, “இவன் அப்படி நான் கூப்பிடறது கூட தெரியாமல் என்ன நினைப்பில இருக்கிறான்?” என்று.
"டேய் அக்னி" என்று அவனைத் தொட்டு உலுக்கினான். அவன் உலுக்கிய பின்புதான் அக்னி அவளது நினைவிலிருந்து வெளியே வந்தான். அவனுக்கே தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. "யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை எப்படி இப்படிப் பார்த்துக்கொண்டிருந்தேன்?" என்று. இருந்தும் அவளை விட அவனுக்கு மனம் இல்லை. உடனே, “டேய் துருவா! அந்தப் பஸ் பாலோ பண்ணு” என்றான்.
“என்னடா சொல்ற? டேய், நமக்கு 9:30-க்கு மீட்டிங் இருக்குடா. இப்ப போய் அந்த பஸ் பாலோ பண்ண சொல்ற? யாராவது உனக்குத் தெரிஞ்சவங்க அந்தப் பேருந்தில் போறாங்களா? அவங்களை அப்புறம்கூடப் பார்த்துக்கலாம். இப்போ ஆபீஸ் போகலாம்" என்று துருவன் அக்னியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவன் சொன்னதை காதில் கூட வாங்காமல், “நீ மட்டும் அந்தப் பஸ்சை இப்ப ஃபாலோ பண்ணல, உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று துருவனை முறைத்துக்கொண்டிருந்தான்.
அவன் முறைப்பைப் பார்த்துவிட்டு, “என்ன இப்படி முறைக்கிறான்? ஒருவேளை ரொம்ப முக்கியமானவங்களா இருப்பார்களோ?” என்று யோசித்துவிட்டு அந்தப் பேருந்தைப் பின்தொடர்ந்தான்.
கார் ஓட்டிக்கொண்டே அக்னியிடம், “ஆமா, அந்தப் பஸ்ல அப்படி யார் இருக்காங்க, நீ இவ்வளவு ஆர்வமா பார்க்குற அளவுக்கு?”.
“என்கிட்ட கேள்வி கேட்கிறேன்னு அங்க பஸ்சை விட்டு தொலைச்சுடாத” என்று திட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு எப்படியாவது மறுபடியும் அவளைப் பார்த்துவிட வேண்டும், அவளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவன் நினைத்துக்கொண்டிருக்க, இதில் இவன் வேறு குறுக்கில் கேள்வி கேட்க, அதில் எரிச்சல் அடைந்து அவனை திட்டிக்கொண்டிருந்தான்.
ஆனால் துருவன்தான் எதற்குத் திட்டுகிறான் என்று தெரியாமலே விழித்துக்கொண்டு காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.
துருவனுக்குத்தான் ஆச்சரியமாக இருந்தது, ஏனென்றால் அவனது நண்பனைப் பற்றி அவனுக்குத் தெரியுமே. தேவையில்லாமல் கூட யாரிடமும் பேச மாட்டான். ஆனால் இன்றோ, அவன் இயல்புக்கு மீறி பேசிக்கொண்டிருந்தான்.
அவன் இதை நினைத்துக்கொண்டு பஸ்சை விட்டுவிட்டான். அக்னிதான், “எங்கேடா பஸ்சைக் காணோம்?” என்று கேட்டான்.
அப்போதுதான் அவன் நினைவிலிருந்து வெளியே வந்தான்.
“ஐயோ, இவன் வேற அதுல யாரு இருக்கான்னு கேட்டதுக்கே அந்தத் திட்டு திட்டினான். இப்போ பஸ்சை வேற விட்டுட்டேன். என்ன பண்ணப்போறான்னு தெரியலையே?” என்று விழித்துக்கொண்டிருந்தான்.
பேருந்தை விட்டதும் கண்களை மூடிக்கொண்டு சீட்டில் தலையை சாய்த்துக்கொண்டான். ஏதோ உணர்வு தொலைந்ததுபோல் உணர்ந்தான். அவள் தனக்கு வேண்டும், அவள் தனக்குக் கிடைத்தால் கண்டிப்பாக நான் இழந்த என்னுடைய சந்தோஷம் மறுபடியும் கிடைக்கும். அவளைப் பார்க்கும்போது ஏன் என்னுடைய அம்மாவை நினைக்க தோன்றுகிறது என்று அவனுக்கே தெரியவில்லை. அவன் உள்மனதில் அவள் உறுதியாகத் தனக்குக் கிடைப்பாள் என்று சொல்வதுபோல் இருந்தது.
தன் நினைவிலிருந்து வெளியே வந்து, துருவனை ஒன்றும் சொல்லாமல் காரை அலுவலகத்திற்கு விடச் சொன்னான்.
சிறிது நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து, மீட்டிங்கை முடித்துவிட்டு, தன்னுடைய அறைக்குச் சென்று கண்களை மூடி கொஞ்ச நேரம் அமர்ந்திருந்துவிட்டு, தன்னை நிலைப்படுத்திக்கொண்டு தனது அலுவலக வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். பின்பு அதிலேயே தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டான்.
தனது அலுவலக வேலை எல்லாம் முடித்துவிட்டு அக்னியும், துருவனும் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் திடீரென அவர்களின் காரின் மீது விழுந்துவிட்டாள்.
கார் ஒரு பெண்ணின் மீது மோதியதை கணித்ததும் உடனடியாக நிறுத்திவிட்டு கீழே இறங்கிய துருவன் அந்தப் பெண்ணிடம் நெருங்க அந்தப் பெண் மயக்கமடைந்திருப்பது தெரிந்தது. உடனே சுற்றும் பார்த்தான். அவன் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை. இந்தப் பொண்ணை எப்படி அப்படியே விட்டுச் போறது என்று அக்னியிடம் கூற.
அக்னி அவனை முறைத்தான். அந்த முறைப்பிற்கு, “உனக்கு இது எல்லாம் தேவையா?” என்று கேட்பதுபோல் இருந்தது.
“டேய், பாவம் அந்தப் பொண்ணு. இந்த இருட்டுல எப்படி இப்படியே விட்டுட்டு போக முடியும்? ப்ளீஸ் அக்னி, அந்தப் பொண்ணை ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு நம்ம போயிடலாம்”.
அக்னியும், “சரி” என்று கண்களை மூடி, மறுபடியும் தன் காலையில் சந்தித்த தன்னுடைய ஏஞ்சலை நினைத்துக்கொண்டு அமர்ந்து விட்டான்.
இங்கு துருவன் அவளைத் தூக்கிக்கொண்டு வந்து, பின்னால் அக்னிக்கு அருகில் உட்கார வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான். பின்னால் கண்களை மூடி அமர்ந்திருந்தவன் தன் மீது ஏதோ விழுவதுபோல் இருக்க, கண்ணைத் திறந்து பார்த்தான்.
அவனது கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி. ஏனென்றால் அவன் பக்கத்தில் இருந்தது அவனது ஏஞ்சல். ஆம், அங்கு இருந்தது மலர்தான். வாடிய மலர்க்கொடியாய் கிடந்தாள். அவளை அந்த நிலைமையில் பார்த்ததும் ஒரு நிமிடம் என்ன என்றே அவனுக்குத் புரியவில்லை, அப்படியே அதிர்ச்சியில் இருந்தான்.
மலர் வருவாள்...
(மலர் எப்படி அங்கு வந்திருப்பாள்? என்ன நடந்திருக்கும்? என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். அப்படியே மறக்காமல் லைக் அண்ட் கமெண்ட் பண்ணுங்க.)