Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

அக்னியை ஆளும் மலரவள் - 4


காரில் இருந்து இறங்கிய அக்னி வீட்டின் வாயிற்கதவினைப் பார்த்ததும், தான் வீட்டை விட்டுச் சென்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவனின் மூளையை சூழ்ந்து கொள்ள தனது கண்களை ஒரு நிமிடம் இறுக மூடி முகத்தினை இறுக்கமாக வைத்துக்கொண்டு வீட்டின் வாயிலிற்கு நடந்தான்.

இங்கே அன்னலட்சுமி பாட்டியின் அறைக்குச் சென்ற வேலாயுதம், அக்னி வீட்டிற்கு வந்ததைப் பற்றிக் கூற,
உடனே அன்னலட்சுமி பாட்டி தனது அறையை விட்டு வெளியே வந்தவர், தன் வயதினையும் மறந்து வேக வேகமாக நேராக வாசலுக்கு அருகில் சென்றார். அங்கே தனது பேரனைப் பார்த்ததும் அப்படியே அதே இடத்தினில் நின்றுவிட்டார்.

அக்னி அவரைப் பார்த்துக்கொண்டே தான் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே வந்தும் அவன் பார்வையை மாற்றவில்லை.

இங்கு அவனின் பாட்டியோ தனது பேரனின் தோற்றத்தினைப் பார்த்து ஸ்தம்பித்து அதே இடத்தில் நின்றுவிட்டார். காரணம், தன் பேரனின் தோற்றம் தனது கணவரைப் போலவே இருந்தது.

அவன் முகத்தில் இருக்கும் இறுக்கம், அவன் பார்வையில் இருக்கும் தீர்க்கம், நடையில் இருக்கும் கம்பீரம் அனைத்தும் தனது கணவரைப் போன்று இருந்தது என்று எண்ணியவர் இறந்த தனது கணவரே முன்னாள் வந்து நின்றதுபோல் இருந்தது அவருக்கு.

அக்னியைப் பார்த்ததும் அவரின் கண்கள் லேசாகக் கலங்கின. கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டே அவனை நெருங்கி அவன் பக்கம் வரவும் அக்னி சிறிது விலகி நின்று கொண்டான். அவரை அவனின் அருகில் நெருங்கவே விடவில்லை.

 தன் பேரனின் மனதினைப் புரிந்துகொண்டவர், அப்படியே நின்று விட்டார் அன்னலட்சுமி பாட்டி.

அக்னி அந்த வீட்டுக்கு வந்தது தெரிந்ததும், அந்த வீட்டினுள் இருந்த அனைவரும் ஹாலுக்கு வந்துவிட்டனர். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்துடன் அக்னியைப் பார்த்தனர். நம் அக்னியோ அங்கு இருந்த யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

அக்னியைப் பார்த்ததும் அவனின் தந்தை கிருஷ்ணன் தன் மகனைக் கண்கள் கலங்க பார்க்க... அவன் அவரை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

மெதுவாக தன் மகனை நெருங்கிய கிருஷ்ணன் “அக்னி, எப்படிப்பா இருக்க?” என்று குரலில் அத்தனை பாசத்துடன் தன் மகனின் நலனை விசாரித்தார்.

அக்னி தன் தந்தை கேட்டதற்குப் பதில் ஏதும் கூறாமல் அவனின் பாட்டியைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் தன்னிடம் பேசாமல் இருப்பது அவருக்கு வருத்தத்தைத் தந்தது. இருந்தும் முகத்தில் எதுவும் காட்டிக்கொள்ளாமல் தனது மகனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் கிஷ்ணன்.

தனது மகனின் கம்பீரத்தைப் பார்த்ததும் ஒரு தந்தையாகப் பெருமை கொண்டார். 19 வருடத்திற்குப் பிறகு தனது மகனைப் பார்க்கிறார். இந்த வீட்டை விட்டுச் சென்ற இரண்டு வருடத்தில் தனது மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அறிந்துகொண்டார். அதற்குப் பிறகு தனது மகனைப் தேடிச்செல்ல, அவர் எவ்வளவு தூரம் கெஞ்சியும் அவனைப் பார்க்க, அவரை அவன் அனுமதிக்கவே இல்லை. காலம் கடந்த பின்பு ஞானம் வந்து என்ன செய்ய, பெற்ற மகன் மீது நம்பிக்கை இல்லாமல் யாரோ ஒருவர் சொன்ன விஷயத்தை நம்பி அவர் அக்னிக்குக் கொடுத்த தண்டனைக்கு இன்றும் வருந்திக்கொண்டுதான் இருக்கிறார்.

“எதுக்கு என்னை இங்க வரச் சொன்னீங்க?” என்று தனது பாட்டியிடம் அக்னி கேட்டான்.

“வா கண்ணா, வந்து முதல் உட்காரு. உட்கார்ந்துகொண்டே பேசலாம்,” என்றார்.

அக்னி எதுவும் பேசாமல் தனியாக இருந்த ஒரு இருக்கையில் அமர,
அவன் உட்கார்ந்திருந்த தோரணையே அவ்வளவு கம்பீரமாக இருந்தது.

வைஷாலி ஆபீஸில் அடி வாங்கியும் அவனையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் மனதில், “இவன் எனக்குத்தான், உன்னை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் மாமா. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்,” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

அவனின் சித்தப்பா சித்தி இருவரும், “இவன் எதற்காக இங்க வந்தான்? இவ்வளவு நாள் எங்கே இருந்தானோ அங்கேயே இருக்க வேண்டியதுதானே?” என்று நினைத்தனர்.

அவனின் சித்தப்பா மகன் நவீன்குமாரோ, “எனக்குப் போட்டியே இருக்கிறதே இவன் ஒருத்தன் தான். இவன் இருக்கக் கூடாது. இந்தச் சாம்ராஜ்யத்துக்கு நான் தான் எல்லாமும் ஆக இருக்க வேண்டும்,” என்று எண்ணிக்கொண்டு அக்னியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அனன்யா அவனைப் பார்த்து யாரோ ஒருவனைப் பார்ப்பதுபோல் தான் பார்த்தாள். அவளுக்கு அண்ணன் என்று எந்தப் பாசமும் கிடையாது.

ஆகாஷ், ஆகாசினிக்குத் தனக்கு ஒரு அண்ணன் இருப்பதே தெரியாது. அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே இவன் இந்த வீட்டை விட்டுச் சென்றுவிட்டான். அதனால் யாரும் அவர்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் என்று சொல்லவில்லை. இப்போதுதான் முதல் முறை அக்னியைப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவன் மீது பாசமும் இல்லை, வெறுப்பும் இல்லை. அவர்கள் இருவரின் தாய்
மாதவிதான் அக்னியை கொடூரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அனைவரும் ஒவ்வொரு எண்ணத்துடன் அவனைப் பார்த்துக்கொண்டு இருக்க, அவன் யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

“சொல்லுங்க, எதுக்கு என்னை இங்க வரச் சொன்னீங்க?” என்று மீண்டும் தனது பாட்டியிடம் கேட்டான் அக்னி.

“என்னப்பா இப்படி வேண்டாதவங்ககிட்ட பேசுற மாதிரி பேசுற? உன்னை நாங்க பார்க்கணும்னு ஆசைப்படக் கூடாதா? நீ இந்தக் குடும்ப வாரிசு. என்னோட பேரன். இந்தக் குடும்பத்தை இதுக்கப்புறம் வழிநடத்தப்போறது நீதான்,” என்று அக்னியிடம் சிறிது வருத்தத்துடன் அக்னியின் பாட்டி பேச.

அவர் கூறியதைக் கேட்ட அக்னி பெரிதாக ஏதோ ஜோக் கேட்டதுபோல் சிரித்தான். சிரித்துவிட்டு, “நான் எதுக்கு உங்க குடும்பத்தை வழிநடத்தணும்? எனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை,” என்று கூறினான்.

“ஏன் கண்ணா இப்படி சொல்ற? நீ இந்த வீட்டுப் பையன்... என்னோட மகன் கிருஷ்ணனோட மகன். கிருஷ்ணன் தான் உன்னோட அப்பா. உனக்குப் புரியுதா இல்லையா அக்னி?” என்று கேட்டார்.

“எனக்கு யாரும் அப்பா கிடையாது. எனக்கும் இந்த வீட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என்னோட அம்மா எப்ப இறந்தாங்களோ, அப்பவே இந்தச் சொந்த பந்தம் அப்படின்னு யாரும் எனக்குக் கிடையாது.”

“ஏம்பா இப்படி எல்லாம் பேசுற? நீ இந்த வீட்டுப் பையன். இந்த வீடும் உனக்குத்தான் சொந்தம். இந்த வீடு கூட உன் பேர்லதான்பா இருக்கு,” என்றார் லட்சுமி பாட்டி( அன்னலட்சுமி ).

இதனைக் கேட்டதும் அனைவரும், “என்ன, இந்த வீடு இவன் பேர்ல இருக்கா?” என்று அதிர்ந்தனர்.

அவர்களின் அதிர்ந்த முகத்தை எல்லாம் அக்னியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். இருந்தும் எதுவும் கவனிக்காததுபோல்
“இங்க பாருங்க, உங்களைப் மாதிரி நான் ஒன்னும் வெட்டியா இருக்குறவன் கிடையாது. எனக்கு நிறைய வேலை இருக்கு. அதனால என்ன விஷயம்னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்,” என்றான் அக்னி.

“சரிப்பா, நேரா நான் விஷயத்துக்கு வர்றேன். உனக்கு 27 வயசு ஆகிடுச்சு. உனக்குக் கல்யாணம் பண்ணிட்டா, உன்னோட பொறுப்பை உன்கிட்ட ஒப்படைச்சிடுவேன். நீ என்ன சொல்ற? பொண்ணு கூட ரெடியாதான் இருக்கு. உன்னோட அத்தை பொண்ணு வைஷாலிதான் நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு. நம்ம குடும்பம் எப்பவும் ஒற்றுமையா இருக்கும்,” என்று தன்னுடைய முடிவை நன்றாக கம்பீரமாக நிமிர்ந்து அந்த வீட்டின் மூத்த பெண்மணியாகச் கூறினார்.

“நீங்க உங்க முடிவை சொல்லிட்டீங்க. இப்ப என்னோட முடிவை நான் சொல்லிடறேன், நீங்க கேளுங்க... எனக்கு 27 வயசு ஆகிடுச்சுதான். அதனால் கல்யாணமும் பண்ணிப்பேன். ஆனா, நீங்க பார்க்குற பொண்ணைக் கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்குப் பிடிச்ச பொண்ணா பார்த்துதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். எனக்குப் பிடிச்ச பொண்ணு எப்படி இருக்கணும்னு உங்களுக்குத் தெரியுமா? என் மேல உண்மையான அன்பா வச்சிருக்கணும், என்கூட இருக்கிறவங்ககிட்ட பாசமா நடந்துக்கணும், எனக்கு அவ இன்னொரு அம்மாவா இருக்கணும். இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு. அப்படி இருக்கிற பொண்ணைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். நீங்க பார்க்குற சாக்கடையை இல்லை,” என்று பொட்டில் அடித்தார் போல் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்டு அங்கு ஓரமாக நின்று இருந்த ஆதித்யாவுக்கே இவன் தன்னுடைய நண்பன் அக்னிதானா என்று சந்தேகம் வந்தது.

“அக்னி, நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை கௌரவம் இருக்கு. நமக்குத் தகுதியானவங்ககிட்டதான் நாம பழகணும். உன்னோட கல்யாணமும் நமக்குத் தகுதியானவங்க கூடத்தான் நடக்கணும். அதனால வைஷாலி கூடத்தான் உனக்குக் கல்யாணம். நான் முடிவு பண்ணிட்டேன், அதை நடத்தியும் காட்டுவேன்,” என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து தனது அறைக்கு நடந்தார்.

அவர் செல்வதை பார்த்து அவர் காதில் விழும்படி பேசினான் அக்னி.

“பார்க்கலாம், நீங்க நினைக்கிறது நடக்குதா இல்லை நான் நினைக்கிறது நடக்குதான்னு,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அவன் அங்கிருந்து சென்றதும், அக்னியின் அப்பா அவரின் அம்மாவிடம் பேசச் சென்றார்.

“அம்மா, நீங்க ஏன்மா அவன் கிட்ட அப்படிப் பேசினீங்க? இப்பதான் என்னோட பிள்ளை வீட்டுக்கே வந்தான். வந்த இன்னைக்கே அவனை சண்டை போட்டு அனுப்பிட்டீங்க. இது கொஞ்சம் கூட நல்லா இல்லைம்மா,” என்று வருத்தமாக கூறிவிட்டு அங்கிருந்து அவரின் அறைக்கு சென்றுவிட்டார்.

இங்கு காரில் அக்னி கோபத்துடன் உட்கார்ந்திருந்தான். ஆதித்யாதான் அவனிடம் எப்படிப் பேசுவது என்று தயங்கிக்கொண்டிருந்தான். ஒருவாறாகத் தைரியத்தை வர வைத்துக்கொண்டு,
“அண்ணா, நீங்க அங்கே பேசினது எல்லாம் உண்மையா? நீங்க கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களா?” என்று கேட்டான். தனியாக இருக்கும்போது மட்டுமே ஆதித்யனும் துருவனும் அக்னியை உரிமையுடன் அழைப்பர்.

“ஏண்டா அப்படி கேட்கிற? உண்மையா நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் தான். இது வரைக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்லாமத்தான் இருந்தேன். ஆனா இங்க வந்ததுக்கப்புறம் என்னோட முடிவை மாத்திக்கிட்டேன்.” என்றான்.

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா. கண்டிப்பா நீங்க எதிர்பார்த்த மாதிரி ஒரு பொண்ணு கிடைப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இதை உடனே நம்ம துருவன்கிட்ட சொல்லணும். அவனும் ரொம்ப சந்தோஷப்படுவான்,” என்று கூறினான்.

அதற்கு அக்னி ஒரு சிரிப்பை மட்டுமே கொடுத்தான். ஆதித்யா காரை அங்கிருந்து நேராக ஆபீசுக்கு விட்டான்.

*********

காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து, சாமி கும்பிட்டுவிட்டு, வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் மலர்.

அந்த வீட்டில் அவளைத் தவிர யாரும் எழுந்திருக்கவில்லை. 6 மணிக்குத்தான் வேலையாட்கள் எல்லாம் வருவார்கள்.
இன்று பெரியம்மாவின் உறவினர் வருவார்கள் என்று நேற்றே தனது பெரியம்மா சொன்னது நினைவு வந்தது. அதனால் அவசரமாகக் கோலத்தைப் போட்டுவிட்டு காலை உணவைச் செய்யச் சமையல் அறைக்கு சென்றாள்.

காலை உணவாக இட்லி, பூரி, பொங்கல், வடை, சாம்பார், சட்னி, குருமா, கேசரி என்று அனைத்தும் 8 மணிக்குள் செய்து வைத்துவிட்டு, அவள் காலேஜுக்குச் செல்ல வேண்டும் என்று அவசரமாகச் செய்ய ஆரம்பித்தாள். வேலையாட்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, அவர்களும் அவளுக்கு உதவி செய்தனர்.


                                                   தொடரும்…