அக்னியைப் பார்த்ததும் சதாசிவத்திற்கு முகம் எல்லாம் வேர்க்க ஆரம்பித்தது “சார், தெரியாம பண்ணிட்டேன். என்ன விட்டுடுங்க சார்.” என்று கதறினார்.
“எவ்வளவு தைரியம் இருந்தா என் அலுவலகத்தில் இருந்துகிட்டுப் பொண்ணுங்க மேல கை வெச்சிருப்ப?” என்று பக்கத்தில் இருந்த கம்பியை எடுத்து சதாசிவத்தின் கையில் ஓங்கி அடித்தான்அக்னி.
ஒரே அடியில் அவன் கை எலும்புகள் நொறுங்கிவிட்டன.
“டேய் துருவா! அவனுக்கு ஒரு வாரத்துக்குச் சாப்பாடு, தண்ணி எதுவும் கொடுக்காம, அவனுக்கான தண்டனையைக் கொடுங்க. அப்பவும் அவன் உயிரோட இருந்தா நம்ம டெவில் கிட்ட அனுப்புங்க. அவன் பார்த்துப்பான்” என்றான். (டெவில், அக்னி வளர்க்கும் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட நாய்).
“ஆதி, நீ போய் அந்தப் பெண்ணை அட்மிட் பண்ண மருத்துவமனையில் கூட இருந்து பார்த்துக்க” என்றான்.
“சரிங்க பாஸ், நான் பார்த்துக்கிறேன். நீங்க இப்ப கிளம்புங்க. உங்களுக்கு 11 மணிக்கு மீட்டிங் இருக்கு. நானும் மருத்துவமனைக்குப் போய்ட்டு அலுவலகத்துக்கு வந்துடுறேன் பாஸ்” என்று ஆதி அங்கிருந்து கிளம்பினான்.
அக்னியும் துருவனும் சென்ற கார் அங்கிருந்து, நேராகப் பதினைந்து மாடிகள் கொண்ட “ARD Construction” என்ற கட்டிடத்திற்கு முன்பாக வந்து நின்றது.
அக்னி இறங்கியதும் லிஃப்ட்டுக்குள் நுழைந்து கொண்டான். லிஃப்ட் 15வது தளத்தில் வந்து நின்றதும், அங்கு இருந்த அனைவரின் கண்களும் அவனைத்தான் பார்த்தன... அதிலும் பெண்களின் கண்கள் அவனை மட்டுமே பார்த்தன.
ஆனால், அவனின் கண்கள் யாரையும் நிமிர்ந்துக்கூடப் பார்க்காமல், அவனுக்குக் காலை வணக்கம் கூறிய அனைவருக்கும் ஒரு தலை அசைப்பு மட்டுமே தந்துவிட்டு, நேராக “அக்னி ருத்ரதேவன் CEO” என்ற அறையினுள் நுழைந்து கொண்டான்.
துருவன் காரைப் பார்க் செய்துவிட்டு உள்ளே வந்தவன், ரிசப்ஷனில் இருந்த கவிதாவிடம் நாளை “அக்கவுண்டிங் மேனேஜர் போஸ்டிங்” நேர்காணலுக்குச் சொல்லிவிட்டு, அவனுடைய கேபினுக்குச் சென்றுவிட்டான்.
சரியாக 10:55க்கு அக்னி அறைக்கு வந்த துருவன், அக்னியிடம் மீட்டிங்கிற்கு நேரமாவதை ஞாபகப்படுத்தினான். அடுத்த நொடி அக்னியும் துருவனும் மீட்டிங் அறைக்குச் சென்றனர்.
மீட்டிங் அறையில் “இப்ப நீங்க எல்லாரும் எதுக்கு மீட்டிங்கிற்கு வந்திருக்கீங்கன்னு தெரியுமா?” என்று அக்னி கேட்டான்.
அனைவரும் தெரியாது என்று தலை அசைத்தனர்.
“நம்மளோட கோயம்புத்தூர் பிராஞ்சில் ஒரு சின்னப் பிரச்சினை. அதனால நான் அங்க போக வேண்டியதா இருக்கு. திரும்ப வரதுக்கு மூணு மாசம் ஆகும்... நான் வர வரைக்கும் ஆதித்யா இங்க பார்த்துப்பாரு. இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பணும். அதுக்குள்ள நம்மளோட ஒரு ப்ராஜெக்ட் இன்னும் ரெண்டு வாரத்துல முடிக்க வேண்டியது இருந்தது... அதை இன்னும் ஒரே வாரத்துல முடிக்கணும். அதனால, நீங்க எல்லாரும் டே அண்ட் நைட் வேலை செய்ய வேண்டி இருக்கும். அதைச் சொல்றதுக்குத்தான் இந்த மீட்டிங். ஓகே, மீட்டிங் முடிந்தது, எல்லாரும் போய் வேலையைப் பாருங்க” என்று அக்னி கூறியவுடன் அனைவரும் அந்த அறையில் இருந்து வெளியேறினர்.
“அக்னி, உங்க பாட்டி போன் பண்ணாங்க. உன்னை வீட்டுக்கு வரச் சொன்னாங்க” என்று துருவன் சிறிது தயங்கிக்கொண்டே கூறினான்.
“எனக்கு அங்க போறதுக்குப் பிடிக்கலைன்னு உனக்கே தெரியும். அப்புறம் எதுக்காக அங்க போகச் சொல்ற?” என்று சிறிது கடுப்புடன் அக்னி கூற.
“எனக்கும் உன்னை அங்க அனுப்ப விருப்பம் இல்லைதான். என்ன பண்றது? இந்த ஒரு தடவை மட்டும் போய்ட்டு வாடா” என்றான் துருவன்.
“சரி, வர ஞாயிற்றுக்கிழமை போறேன்... அங்க ஏதாவது நடந்து எனக்குக் கோபம் வந்துச்சுன்னா, அதுக்கப்புறம் நான் பொறுப்பு இல்லை” என்றான்.
“ம்... போய்ட்டு வா. நீ வந்ததுக்கு அப்புறம் நாம கோயம்புத்தூர் போகலாம். சரி, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து சென்றான்.
துருவன் வெளியே சென்றதும், அக்னியும் சிறிது நேரம் அமைதியாகக் கண்ணை மூடி அமர்ந்திருந்தவன், பிறகு தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
*******
இங்கே கல்லூரி முடிந்ததும், மலரும் அச்சுவும் ஒன்றாகவே வீட்டிற்குச் சென்றனர். அச்சுவுக்குக் காலையில் ஒரு வேளை வகுப்பு இருந்ததால், மலருடன் செல்லவில்லை. தினமும் இருவரும் ஒன்றாகத்தான் செல்வார்கள்.
“ஏ மலரு! இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெளியில எங்கயாவது போலாமா?” என்று கேட்டாள் அச்சு.
“ஏண்டி! எங்க வீட்டுல என்னோட நிலைமை தெரிஞ்சும் எப்படிடி இப்படிக் கேட்கிற?” என்று முறைத்தாள் மலர்.
“உன்னைத்தான் அங்கு இருக்க யாரும் கண்டுக்க மாட்டாங்களே. அப்புறம் என்ன உனக்கு பிரச்சினை?“ என்று கேட்டாள் அச்சு.
“கண்டுக்க மாட்டாங்கதான். ஆனா, நான் எங்கயாவது போய்ட்டேன்னு தெரிஞ்சா அவ்வளவுதான். நான் வரலைப்பா, நீ வேணா போய்ட்டு வா” என்று சிறிது வருத்தத்துடனே மலர் கூற.
"“உன்னோட நிலைமை எப்ப தாண்டி மாறும்?” என்று வருத்தப்பட்டாள் அச்சு.
“என்னோட நிலைமை எப்பவும் மாறாது... மாறும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை” என்றால் மலர்.
“இந்தக் கதையில எல்லாம் வருமே, ஹீரோயின் கஷ்டப்படும்போது ஹீரோ வந்து காப்பாத்துற மாதிரி... அந்த மாதிரி உன்னோட கஷ்டத்தைப் போக்க ஒரு ஹீரோ வந்தா எப்படி இருக்கும்? அய்யோ, அதை நெனச்சுப் பார்த்தாலே செம்மையா இருக்கே!” என்று அச்சு மேலப் பார்த்துக்கொண்டு கனவு காண ஆரம்பிக்க,
உடனே அவள் தலையில் ஒரு கொட்டு விழுந்தது.
என்ன என்று பார்க்க, அங்கே மலர்தான் அவளை முறைத்துக்கொண்டிருந்தாள்.
‘இவ என்ன இப்படி முறைக்கிறா? நாம ஒண்ணும் தப்பா கனவு காணலையே’ என்று (மனதுக்குள்) யோசித்துவிட்டு, “ஏண்டி, என்ன கொட்டுன?” என்று கேட்டாள்.
“என்னடி, பகல் கனவு போல? இதுல அது நடந்தா செம்மையா வேற இருக்குமோ? அப்படியே மண்டையில இன்னும் ரெண்டு போட்டேனா... ஏண்டி அறிவுகெட்டவளே! அதெல்லாம் கதையிலதான் நடக்கும். அது எல்லாம் உண்மையா இருந்தா நான் இத்தனை வருஷம் கஷ்டப்பட்டப்போ எங்க போனாரு உன்னோட ஹீரோ?” என்றாள் உதட்டைச் சுளித்துக்கொண்டு.
“ஏண்டி, அதை என்னோட தலையில கொட்டாமச் சொல்ல வேண்டியதுதானே? எதுக்குடி இப்படி கொட்டுன? வலிக்குதுடி” என்று அச்சு அழுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள்.
“ரொம்ப வலிக்குதா? சாரிடி என்று அவளிடம் மன்னிப்பு கேட்டவள். சரி, எனக்கு நேரமாகுது. வீட்டுக்குச் சீக்கிரம் போகலைன்னா அதுக்குத் தனியா திட்டு விழும். நான் கிளம்புறேன்” என்று வேகமாக அடி எடுத்து வைத்து வீட்டை நோக்கி நடந்தாள் மலர்.
மலர் அங்கிருந்து செல்வதை அச்சு வருத்தத்துடன் பார்த்துக்கொண்டு, “எனக்குத் தெரியும் மலர், உனக்கு நடக்கிறது என்கிட்டச் சொன்னா நான் வருத்தப்படுவேன்னு. என்கிட்ட நிறைய மறைக்கிற” என்று நினைத்துக்கொண்டு, அங்கிருந்து அவளின் வீட்டிற்குச் சென்றாள்.
மலர் வீட்டிற்குச் சென்றதும், வாசலிலேயே அவளின் பெரியம்மா நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள் மலர்.
“வாங்க! மகாராணி இப்பதான் காலேஜ் முடிஞ்சதா என்ன?” என்று பணிவாகக் கேட்டவர்... அடுத்த நொடி, “இன்னும் வரைக்கும் எங்கடி போய் ஊரைச் சுத்திட்டு வர?” என்று பேய்போல் கத்தினார்.
“இ..இல்லை மே..மேடம், பஸ் வர லேட்டா ஆகிடுச்சு” என்று மலர் வார்த்தையைத் திணறினாள்.
“போய் சீக்கிரம் வேலையைப் பாரு. அப்படியே ஆடி அசைஞ்சிட்டு இருக்காத... அப்படியே மேலே இருக்கிற கெஸ்ட் ரூமை சுத்தம் பண்ணிடு. நாளைக்கு என்னோட அண்ணன் பையனும் அவனோட நண்பனும் வராங்க. காலையில கொஞ்சம் ஸ்பெஷலா சமைக்கணும்... அப்புறம் வர்றவங்ககிட்ட கொஞ்சம் தள்ளியே இரு. உன்னோட தரித்திரம் எங்களுக்குப் புடிச்சுக்கிட்ட மாதிரி அவங்களுக்கும் புடிச்சுக்கப் போகுது. நான் என்ன சொல்றேன்னு உனக்குப் புரியுதுதானே? பார்த்து நடந்துக்கோ. அவ்வளவுதான் சொல்லுவேன்... மீறி ஏதாவது தப்பு நடந்தால், அப்புறம் இந்த வீட்டுக்குள்ளக்கூட இருக்க முடியாது” என்று மிரட்டினார்.
“சரிங்க மேடம்” என்று சொல்லிவிட்டு, அவளுக்கு என இருக்கும் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து அதன் மேலே சரிந்து அமர்ந்துகொண்டவள், தன்னுடைய நிலைமையை எண்ணி அழுதுகொண்டிருந்தாள்.
இப்படியே அமர்ந்திருந்தால் அதற்கும் திட்டு விழும் என்று நினைத்துக்கொண்டு, தன் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அங்கே அவளின் அக்கா குடும்பம் வந்திருந்தது. அவர்களைப் பார்த்தவுடன் அவர்களிடம் சென்றாள்.
“அக்கா! மாமா எப்ப வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?” என்றாள்.
“ம்... நாங்க நல்லாதான் இருக்கோம். நீ என்ன, நாங்க வந்ததுகூடத் தெரியாத மாதிரி உள்ள இருந்து வர? நீ காலேஜில் இருந்து வரும்போதே இங்கதான் இருந்தோம். எங்களைப் பார்த்துட்டுப் பார்க்காத மாதிரி எப்ப வந்தீங்கன்னு கேட்கிற” என்று முகத்தை சுழித்தால் மகேஷ்.
“உண்மையா உங்களை நான் பார்க்கலை அக்கா, என்னை மன்னிச்சிடுங்க. இருங்க, உங்களுக்குக் காஃபி போட்டு எடுத்து வரேன்” என்று அங்கிருந்து சென்றாள்.
“ஏண்டி! அந்தப் பிள்ளையை இப்படித் திட்டற? அந்தப் பிள்ளையும் இந்த வீட்டுப் பொண்ணுதானே? இப்படி எல்லாரும் கரிச்சுக்கொட்டிகிட்டே இருக்கீங்க.” இன்று மகேஷின் கணவர் தன் மனைவியை திட்ட.
“என்ன! கொழுந்தியா மேல ரொம்பப் பாசம் பொங்குது போல?” என்று தன் கணவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
“ஏண்டி! ஏன் அந்தப் பிள்ளையைத் திட்டறேன்னு கேட்டது ஒரு குத்தமா? அவ உன்னோட தங்கச்சிதானே? கொஞ்சம்கூடவா பாசம் இல்லை?” என்று கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, மலர் காஃபியுடன் அங்கு வந்தாள்.
காஃபியை அவள் அக்காவிடம் கொடுக்கும்போது, “பிரதீப் மலரின் அக்கா மகன் விளையாடிக்கொண்டிருந்த பந்து மலர் மேலே பட்டு, கையில் வைத்துக்கொண்டிருந்த காஃபியை அவள் அக்காவின் மேல் கொட்டிவிட்டாள்.”
அவ்வளவுதான், ஓங்கிவிட்டாள் ஒரு அறை. மலரின் கன்னம் திகுதிகுவென எரிந்தது.
“ஏண்டி! எவ்வளவு தைரியம் இருந்தா என்மேல காஃபியைக் கொட்டி இருப்ப? இந்தப் புடவை எவ்வளவு விலை தெரியுமா?" என்று பார்வையாலேயே எரித்தாள் தன் தங்கையை.
“அக்கா, தெரியாம கொட்டிட்டேன்... என்னை மன்னிச்சிடு. பந்து மேல பட்டதால உங்க மேல கொட்டிட்டேன்” என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
அப்போது வீட்டில் இருந்த அனைவரும் அவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்துவிட்டனர்.
“என்னாச்சு மகேஷ்? எதுக்கு இப்படிக் கத்திட்டு இருக்க?” என்று கேட்டார் மலரின் அம்மா.
“அம்மா! உன்னோட பொண்ணு என்மேல காஃபி கொட்டிட்டா. இங்க பாரு, எப்படி என்னோட சேலையை ஆக்கிருக்கான்னு” என்று தன் அம்மாவிடம் காட்டினாள்.
அவரும் என்ன நடந்தது என்று கூட கேட்காமல் "“ஏண்டி சனியனே, வீட்ல இருந்து ஏன் எங்க உசுரை வாங்கிட்டு இருக்கற? எங்கயாவது போய் தொலைஞ்சுட வேண்டியதுதானே?” என்று அவர் பங்குக்கு ஒரு அறை விட்டார்.
அந்த அறையை தாங்கிக்கொள்ள முடியாமல் மலர் கீழே விழுந்தாள். விழும்போது அங்கே இருந்த டீபாயின் மேல் விழுந்து, அவளின் நெற்றி மேல் காயம் ஏற்பட்டு இரத்தம் வர ஆரம்பித்தது. அதைப் பார்த்தும் அங்கிருந்தவர்கள் சிறிது இரக்கப்பட்டுக்கூட அவளைத் தூக்கவில்லை.
மலர் கீழே விழுந்ததை பார்த்த மகேஷின் கணவன் சக்தி “அத்தை! பிரதீப் பந்து விளையாடிட்டு இருக்கும்போது அந்தப் பந்து மலர் மேல பட்டுச்சு. அதுக்குப் போய் ஆளாளுக்கு அவளை அடிக்கிறீங்க. இது உங்களுக்கே நல்லா இருக்கா?“ என்று கேட்டான்.
“உங்களுக்குத் தெரியாது மாப்பிள்ளை! இவ தெரியாமலாம் போட்டுருக்க மாட்டா. வேணும்னுதான் போட்டுருப்பா. சனியன் எனக்குன்னு பொறந்து இருக்கு பாரு. எங்கயாவது போய் தொலைஞ்சுட வேண்டியதுதானே?” என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார் மலரின் தாய் கவிதா.
தொடரும்…