சூரியா என்ற பெயரை கேட்டவுடன் துள்ளி குதித்தாள் ரம்யா. அவளுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை பெயர் சூரியநாராயணன் சுருக்கமாக சூரியா. முழு பேர் பழையதாய் இருந்தாலும் இந்த சூரியா என்கிற பெயர் அவளுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. நேரில் சந்தித்து பேசலாம் என குடும்பத்தார் முடிவெடுத்தார்கள். போட்டோவில் பையனும் அவ்வளவு மோசமாக தெரியவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை கோவிலில் வைத்து சந்திக்கலாம் என பேசி வைத்தார்கள். பையனை கம்பேர் பண்ணும் போது இவள் சுமாராக இருப்பதாக குடும்பத்தார் மனதில் தோன்றியது. அதை சொல்லவும் செய்தார்கள். பையனுக்கு அப்பா இல்லை அம்மா மட்டும்தான் . நல்ல உத்தியோகம், கை நிறைய சம்பளம். உடன் பிறந்தவர்கள் இல்லை. ஸ்டைல் ஆக தான் அவனோடு காரில் செல்லும் காட்சியை நினைத்து பார்த்து மகிழ்ந்தாள் ரம்யா. அதெல்லாம் முக்கியமில்லை அதையும் தாண்டி சில விஷயங்கள் இருப்பதாக அவளுடைய ஃப்ரெண்ட் தீபிகா சொல்ல ஆமாண்டி அதுவும் வேணும் என்று ரம்யா ஆமோதித்தாள்.
ரம்யாவும் நல்ல வேலையில் இருந்தாள்.ரம்யாவுடைய ஜாதகம் சில பல சங்கடங்களை கொண்டிருந்தது அதனாலேயே கல்யாணம் தள்ளி போய் கொண்டிருந்தது. சூரியாவின் ஜாதகம் இவள் ஜாதகத்தோடு ஒத்து போனது கடவுள் செயல்.இவள் சற்றே மாநிறம். அது பெரிய குறை இல்லை. கல்யாணம் என்றாலே எதிர்பார்ப்புகள் இருக்கும் தானே. சண்டே கோவிலில் வைத்து அவளை பார்த்தான் சூரியா. மெதுவாக தன்னை அடக்கமானவளாக காட்டிக்கொண்டாள் ரம்யா. பரஸ்பரம் பேசி கொண்ட பின் சூரியா தனக்கு ரம்யாவை பிடித்திருப்பதாக தெரிவித்தான். ரம்யாவும் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தாள்.அவர்கள் போனில் தினமும் பேச துவங்கினார்கள். ஒரு மாதம் கழித்து நிச்சயதார்த்தமும் அடுத்த இரு மாதங்களில் கல்யாணமும் என பேசி முடிவானது. வரதட்சணை இல்லாமல் கல்யாணமா அந்த விஷயத்தில் தாராளமாகவே குடுக்க முன்வந்தார்கள் ரம்யா வீட்டார்.
சூரியாவும் ரம்யாவும் சேர்ந்து சினிமா, டிராமா என்று சுற்றினார்கள். அவன் விட்டு கொடுப்பவனாக இருக்கிறான் என்று ரம்யா தீபிகாவிடம் சொன்னாள். எல்லாம் இப்பவே பேசி வெச்சுக்க என்றாள் தீபிகா. கல்யாணம் முடிந்து ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு போய் செட்டில் ஆகி விட வேண்டும் என்பது இவளுடைய ஆசையாக இருந்தது. அவனுடைய அம்மாவை அவனால் பிரிந்து இருக்க முடியாது.சூரியாவுடன் ரம்யாவுக்கு நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது. இருவருடைய நெருக்கம் அதிகமானது. ரம்யா மகிழ்ச்சியில் திளைத்தாள். அம்மாவை விட்டு தனிக்குடித்தனம் போக வேண்டாம் என சூரியா தீர்மானமாக சொல்லிவிட்டான். இரண்டு மாதங்களில் கல்யாணம் என்பதால் ஏற்பாடுகள் தீவிரமாய் நடந்தன. கல்யாணத்துக்கு பிறகு ஒரு புது பிளாட் ஒன்றிற்கு குடி போவதற்காக அட்வான்ஸ் குடுத்து வைத்திருந்தான். ரம்யாவுக்கு அந்த வீடு பிடித்திருந்தது.
அப்போதுதான் திருஷ்டி படும் விதமாக சூரியாவுக்கு அந்த கார் விபத்து ஏற்பட்டது. இரண்டு சர்ஜரி செய்த பிறகும் வீல் சேர் கொண்டுதான் நடமாட முடிந்தது. ரம்யா துடித்து போனாள். 3 மாதம் கழித்து மற்றுமொரு சர்ஜரி செய்யலாம் என டாக்டர்கள் சொல்லி இருந்தனர். கல்யாணத்தை தள்ளி போட வேண்டாம் என்று பெரியவர்கள் சொன்னார்கள்.
சூரியாவை வீல் சேரில் பார்ப்பது மிகுந்த சிரமத்தை தந்தது ரம்யாவுக்கு. எப்படியோ இன்னும் ஒரு மூன்று மாதம் அதன் பிறகு எல்லாம் சரி ஆகி விடும் என்று நம்பினாள். அவனால் எழுந்து நடக்க கூட முடியவில்லை. இது சரியா வருமா என தீபிகா ரம்யாவை கேட்டாள். இந்த நிலையில் சூரியாவை கை விட முடியாதென்று ரம்யா திட்டவட்டமாக சொல்லி விட்டாள். கல்யாணம் சிம்பிள் ஆக நடைபெற்றது.நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் சூர்யா எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாள் . அவளுடைய கனவுகள் எல்லாம் அவனை பழைய நிலைக்கு கொண்டு வருவதிலேயே இருந்தது. அவனை பராமரிப்பதிலேயே நேரம் கழிந்தது.தன்னுடைய நகைகளை விற்றுதான் அடுத்த சர்ஜரி ஏற்பாடுகளை செய்திருந்தாள். ஆபரேஷன் தேதி குறித்திருந்தார்கள். இவளுக்கு ஒரு வேளை அவனுடைய கால்கள் இயல்பு நிலைக்கு திரும்பாவிடில் என்ன செய்வது என்று யோசிக்க கூட முடியவில்லை. எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொண்டாள்.
கடன்காரர்கள் இன்னும் ரெண்டு மாதமே டைம் தந்திருந்தார்கள். நல்ல வேளையாக அவனுடைய கால்கள் சர்ஜரிக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பின. பிஸியோதெரபி தொடர்ந்து செய்ய சொல்லி இருந்தார்கள் . அவன் வேலைக்கு போக இன்னும் சிறிது காலம் ஆகும் . ரம்யா லீவு முடிந்து வேலைக்கு போக தொடங்கினாள். சூரியா ஒருபுறம் தேறி வந்தான். அவனுடைய நண்பர்கள் உதவி செய்தார்கள். அதனால் கடன்காரர்கள் தொல்லையில் இருந்து தப்பி வந்தான். காரை விற்கும் சூழல் உருவானது. வேறு வழியில்லாமல் காரை விற்றான். சூரியா முழுமையாக குணமடைந்த பின் ரம்யாவுக்கு நெஞ்சார நன்றி தெரிவித்தான். ரம்யாவும் அவனும் அடுத்த வாரம் ஹனிமூன் போக திட்டமிட்டு இருந்தார்கள். ரம்யா அவன் ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டதாக நினைத்தாள். சூரியா அவளுடைய நகைகளை விற்க வைத்ததாக சொல்லி வருத்தபட்டான். போனா போகுது நீ திரும்ப கிடைச்சதே போதும் என்றாள்.
அடுத்த வாரம் ஹனிமூன் ஊட்டிக்கு போனார்கள். ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் ரம்யா? அதெல்லாம் ஒண்ணும்இல்லை ரொம்ப நாள் கழித்து உன் கூட வெளியே வருகிறேனே பழசெல்லாம் நினைவுக்கு வருது என்றாள்.
இனி ஒரு கவலையுமில்லை என்றான் சூரியா. ஊட்டி ட்ரிப் மகிழ்ச்சியாக இருந்த போதும் ரம்யா பழையபடி இருக்கவில்லை என உணர்ந்தான் சூரியா. அவளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்து அசத்த வேண்டும் என நினைத்தான். சூரியா வேலைக்கு போக தொடங்கி விட்டான். கடன்களும் மெதுவாக அடைக்க தொடங்கினான். திடீரென அவனுக்கு ரம்யா மேல் சந்தேகம் வந்தது. அவள் இத்தனையும் செய்கிறாள் என்றால் எதையோ என்னிடம் மறைக்கிறாளோ என நினைத்தான். ரம்யா அறைக்குள் புகுந்து எதையோ தேடினான் . அவனுடைய கண்கள் எதை அவள் மறைக்கிறாள் என்பதை அறிய முடியாமல் தவித்தன . அவனுக்கு சிகித்சை அளித்த டாக்டரை சந்தித்தான். நீங்க பயப்படுற மாதிரி ஒண்ணும் நடக்கல.
ஒரு சின்ன ஆக்சிடென்ட் தான் என்றார்.
ரம்யாவுக்கு ஒரு ப்ரெசெண்ட் வாங்க ஷாப்பிங் மால் போயிருந்தான். தீபிகாவை எதேச்சையாக பார்த்தான் . அவள் இவனை நலம் விசாரித்தாள். நீங்களாவது சொல்லுங்களேன் எனக்கு ஏதோ நடந்திருக்கு அதை ரம்யா மறைக்கிறா என்றான். அதற்குள் ரம்யாவே வந்துவிட்டாள். தீபிகா விடைபெற்றுக்கொண்டாள். மறுநாள் ஆபீஸ் லீவு போட்டு விட்டு மறுபடி அவனுடைய பழைய மெடிக்கல் records வாங்க போனான் . அப்போது அங்கு வந்த ரம்யா நீ ஏன் இங்க வந்த சூரியா என்றாள். உண்மைய சொல்லு உனக்கும் யாருக்கும் தொடர்பு எதை என்கிட்ட மறைக்கிற என்றான்.
உனக்குதான் சூரியா நடந்த விபத்துல ஆண்மை பறிபோயிடுச்சி என்றாள். சூரியா திகைத்து போய் நின்றான்.