இரவு முழுக்க யோசித்தும் அவனால் ஒரு வரி கூட எழுத முடியவில்லை. ஏதேதோ யோசித்தும் கல்பனாவின் நினைவாகவே இருந்தது. கல்பனா இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள் என்பதே சதா அவனுடைய யோசனை ஆக இருந்தது. 25 வருடங்களுக்கு முன் கூடப்படித்தவள் இப்போது எப்படி இருப்பாள் என்பது ஒரு தேவையில்லாத கேள்வி. இத்தனைக்கும் பின் எந்த ஒரு காரணமும் இல்லை. அவள் இவனிடம் பேசியது கூட இல்லை. என்னவோ அவளைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. சமீபத்தில் ஒரு நாள் தீடீரென காயத்ரி ஏதோ உடல் நல குறைவு ஏற்பட்டு இறந்தது இவனை ரொம்பவும் பாதித்தது . காயத்ரியின் இறுதி சடங்கிற்கு போயிருந்தான். அவளுடைய பிள்ளைகள் இவனை விசாரித்து சற்று முன்னதாக வந்திருந்தால் அம்மா சந்தோஷப்பட்டு இருப்பாள் என்றனர். ஏதோ ஒன்றுக்காக எல்லோருமே இறுதிக்கட்டத்தில் ஏங்குகின்றார்கள், அது காட்டப்படாத அன்புக்காக இருக்கிறது. எப்படியாவது கல்பனாவிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவள் அதை விரும்பாமல் போகலாம். ஆனால் அவள் நல்ல நிலையில் இருக்கிறாள் என்ற செய்தி மனத்திருப்தி தரும். முதலில் கேள்விப்பட்ட செய்தி கல்பனா அமெரிக்காவில் இருக்கிறாள். யார் யாரையோ பிடித்து அவளுடைய பேஸ்புக் முகவரி தேடி எடுத்தான்.
அவள் ப்ரோஃபைல் பிக்சர் கூட சரியாய் வைத்திருக்கவில்லை. இவன் மெசேஜ் ஒன்றை அனுப்பினான். அதிகபட்சம் இவனுக்கு தெரிந்த ஹாய் எப்படி இருக்கிறாய் கல்பனா என அனுப்பினான். இவனுக்கு அதிகம் பேஸ்புக் பற்றி தெரிந்திருக்கவில்லை. அவள் பிளாக் செய்துவிட்டாள் . ஏமாற்றமாய் போயிற்று . இந்த 40 வது வயதில் இந்த அவமானம் எல்லாம் தேவையா என பிள்ளைகள் கேலி செய்தனர். இவனுக்கு பிடித்தால் பிடிவாதம் தான். எப்படியாவது அவளின் நிலையை தெரிந்து கொள்ள துடித்தான். அப்போதுதான் அவன் நண்பன் ஃபேக் ஐ டி பற்றி சொன்னான். இவனுக்கு அதில் உடன்பாடில்லை. தெரிந்தவர்களிடம் ஃபேக் ஐ டி கொண்டு பேசுவது எதற்காக என்றான். உனக்கு அவளிடம் பேச வேண்டுமா இல்லையா என்றான். நிச்சயம் பேச வேண்டும். அப்போ நான் சொல்கிற மாதிரி ஃபேக் ஐ டி தயார் செய் அவள் நிச்சயம் பிளாக் செய்ய மாட்டாள் என்றான். அவன் பேச்சை கேட்டு போலீஸ் கேஸ் ஆகிவிட்டால் என்றெல்லாம் பயந்தான் . ஒரு வழியாக மனதை திடப்படுத்திக்கொண்டு தென்றல் என்ற மற்றொரு பெயரில் ஃபேக் அக்கவுண்ட் ஓபன் செய்தான்.
என்ன பேசுவது என்று தெரியாமல் ஹாய் மட்டும் அனுப்பிவிட்டு காத்திருந்தான். அவள் பிளாக் செய்யவில்லை. இது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அவளிடம் இருந்து நீ இன்னும் திருந்தவில்லையா கிரண் என்ற மெசேஜ் வந்தது. இவனுக்கு ஒன்றும் புரியவில்லை எப்படியோ கண்டுபிடித்து விட்டாள். சாரி என ரிப்ளை அனுப்பினான். அவளிடம் இருந்து வேறு எந்த மெசேஜும் இல்லை. இவன் அத்தோடு நிறுத்திக்கொண்டான். வேறு வேலைகளில் பிஸி ஆனான். அதன் பிறகு இரண்டு வாரங்களுக்கு பிறகு அவளே மெசேஜ் செய்திருந்தாள் கொஞ்சம் பிஸி பிறகு அழைக்கிறேன் என்றும் சொல்லி இருந்தாள். இவனுடைய நண்பனிடம் சொல்லி சந்தோஷப்பட்டான். ரொம்ப சந்தோஷப்படாதே என்றான் . க்கும் உனக்கு பொறாமை என்றான். கொஞ்ச நாட்கள் கழித்து துணிந்து அவளுடைய ஃபோன் நம்பர் கேட்டான். மறுபடி அவள் இவனை பிளாக் செய்து விட்டாள் . இவனுக்கு அவளுடைய மனநிலை புரியவில்லை. என்ன மாதிரி சூழ்நிலையில் இருப்பாள் என்றும் புரியவில்லை.
இவன் அவளுடைய ஃபோன் நம்பர் கிடைக்குமா என ஃபிரண்ட்ஸ் சர்கிள் மூலமாக முயற்சி செய்தான். அவள் டீச்சர் ஆக பணிபுரிகிறாள். நன்றாகத்தான் இருக்கிறாள் என்ற செய்தி கிடைத்தது. ஒரு வழியாக அவளுக்கு ஃபோன் செய்தான். போனை அவளுடைய கணவர்தான் எடுத்தார். அவள் போனை அன்று வீட்டிலேயே தவற விட்டுவிட்டு போய் விட்டதாக சொன்னார். என்ன விஷயம் சொல்லுங்கள் என்றார். இவனும் நடந்ததை எல்லாம் சொன்னான். விழுந்து விழுந்து சிரித்தவர் அது நான்தான் உங்களிடம் பேசியது. அவள் வந்தவுடன் பேச சொல்கிறேன் இதுதான் உங்களுடைய நம்பரா என்று உறுதிப்படுத்திக்கொண்டார். உங்கள் பெயர் என்ன என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டார். இவனுக்கு சங்கடமாய் இருந்தாலும் ஒரு வழியாய் அவர்கள் நல்ல முறையில் இருக்கிறார்கள் என்பது நிம்மதி கொடுத்தது . அவளே அழைத்தாள் அவர் இப்போது தான் சொன்னார் கிரண் எனக்கு ரொம்ப சந்தோஷம் நீயாவது என்னை நினைத்துக் கொண்டாயே என்று என்றாள்.
அதன் பிறகு அடிக்கடி ஃபோன் செய்வாள். அவளுடைய கணவரிடமும் பேசினான்.
கல்பனா இன்னமும் அப்படியேதான் இருக்கிறாள் . மேலும் சில நண்பர்களின் ஃபோன் நம்பர் மற்றும் முகவரி கேட்டாள். அவளுடைய மகள் திருவையாறு கச்சேரியில் பாட வருகிறாள் என்ற செய்தி கேட்டு சந்தோஷப்பட்டான் . அவர்கள் திருவையாறில் தங்க போகிறார்கள் அப்போது அவளை சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தாள். இவனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. ஒரு மாதம் முழுக்க அவர்களின் உறவினர் வீட்டில் அங்குதான் தங்குகிறார்கள். இன்னும் மூன்று மாதங்கள் இருந்தது. அவள் அதிகம் பேசவில்லை. ஒரு வேளை கச்சேரிக்கு தயாராய் இருக்க பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கலாம் என எண்ணினான். மூன்று மாதங்கள் வேகமாய் ஓடிவிட்டது. அவள் தஞ்சாவூர் வந்ததும் இவனிடம் பேசினாள். இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கிறது நீ கொஞ்சம் வந்து உதவ முடியுமா என்றாள். அவன் திருச்சியில் இருந்தான். வீட்டில் ஏதோ சொல்லிவிட்டு அவளை தஞ்சாவூரில் போய் பார்த்தான். அவளுடைய மகளையும்,கணவரையும் அறிமுகபடுத்தி வைத்தாள். இவன் மகிழ்ச்சியில் திளைத்து போனான்.
கச்சேரிக்கு எல்லா ஏற்பாடுகளையும் அவளோடு சேர்ந்து செய்தான்.மனதளவில் அவள் அவனை நெருங்கிய நண்பனாகத்தான் நினைத்திருக்கிறாள் எனும் போது இவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அவளஉடைய கணவரும் இவனிடம் மரியாதையாக பழகினார். கல்பனாவின் கச்சேரி முடிந்ததும் அவர்கள் பழையபடி மாறிவிடுவார்கள் என நினைக்கும் போது வருத்தமாய் இருந்தது. அவர்கள் இருவரும் பாடுவதை நாள் பூராவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவன் இடைக்கிடையில் தன் சொந்த வீட்டு வேலைகளையும் பார்த்து வந்தான். ஒரு நாள் அவசியம் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தான். அவள் தான் மட்டும் வருவதாக சொன்னாள். அன்று சிவராத்திரி ஆதலால் அவனுடைய வீட்டில் எல்லோரும் குலதெய்வம் கோவிலுக்கு போயிருந்தார்கள். இவளை வரவேற்றவன் நான் ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன் என்றான். பழைய காலேஜ் ஆல்பம் கொண்டு வந்து காட்டினான். மதியம் இருவரும் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டார்கள். நான் படிக்கிற காலத்தில் உன்னையெல்லாம் எப்படி மிஸ் பண்ணினேன் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது என்றாள். அவள் அவனோடு நெருங்கி நின்று செல்பி எடுத்துக்கொண்டாள்.
கச்சேரி சிறப்பாக நடைபெற்றது. நாங்கள் நாளை இரவு சென்னைக்கு போகிறோம் என்றாள். அவர்களையும், அவர்கள் மகளையும் பிரிவது ரொம்ப கஷ்டமாய் இருந்தது. அவளுடைய கணவர் குடும்பத்தோடு அவசியம் அமெரிக்கா வருமாறு கேட்டுக்கொண்டார். இவன் ஏதோ யோசனையில் வீடு வந்து சேர்ந்தான். கச்சேரி போட்டோக்களை அனுப்பி இருந்தாள். என்னடா எங்களையெல்லாம் மறந்து விட்டாய் என்றான் நண்பன். அப்படியெல்லாம் இல்லை அவள் நன்றாக இருப்பதை அருகில் இருந்து பார்த்ததில் சந்தோஷம் என்றான். இவனுடன் எடுத்த போட்டோக்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருந்தாள் கல்பனா.அவளுடைய கணவருக்கு ஃபோன் செய்த போது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அவன் உடனே கல்பனாவுக்கு ஃபோன் செய்தான் அதுவும் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது, ஏதோ பிஸி ஆக இருக்கலாம் என நினைத்தான். திடீரென கல்பனாவிடம் இருந்து மெசேஜ் வந்தது.மிஸ் யு கிரண் என்று. இவன் நண்பனை விசாரிக்க சொன்னான். கல்பனா விவகாரத்துக்கு அப்ளை செய்து இருப்பதாக சொன்னான். இவன் அவளுக்கு ஃபோன் செய்தான் மெசேஜ் செய்தான் இரண்டுக்கும் ரிப்ளை இல்லை. மூன்று மாதங்கள் கழித்து எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று போன் செய்தாள். என்ன காரணம் என்று கேட்டான். அவன் உன்னை சந்தேகப்படுகிறான் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றாள். நீ கவலைப்படாதே நான் பேசுகிறேன் அவரிடம் என்றான். நானும் உன்னை விரும்பியதை ஒத்துக்கொண்டேன் என்னால் அதை மறுக்க முடியவில்லை ஐ லவ் யு கிரண் என்றாள். இவனும் சிறிது யோசித்து ஐ லவ் யு டூ கல்பனா என்றான்.