Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 44

நினைவு-44

எல்லா விசேசங்களும் முடிந்து இருவரும் வாழ ஆரம்பித்து ஒருவாரத்திற்கு மேல் கடந்து விட்டது. மறுவீட்டு விருந்திற்கு லட்சுமி வீட்டிற்கும், மாமன் வீட்டு விருந்திற்காக லட்சுமியின் அண்ணன் வீட்டிற்கும் சென்று வந்து ஒரு சுற்று பெருத்தாற் போல் தான் இருந்தனர் இருவரும்.

உற்ற நண்பனான விஷ்வா மணமக்களை அழைத்து, விருந்து துணிமணி என சிறப்பாக கவனித்து திக்குமுக்காட வைத்து விட்டான்.  

அடுத்து நந்தினி வீட்டு விருந்து, ‘உனக்கு நான் விட்டவள் இல்லை’ எனும் விதமாக இருந்தது.

"இப்படியே மாத்தி மாத்தி விருந்துக்கு போயிட்டு இருந்தா அவ்வளவு தான், நான் வெடிச்சு போயிருவேன்.‌ நாளையிலிருந்து எப்பவும் போல ஆபீசுக்கும் சைட்டுக்கும் கிளம்புறேன்மா." என்றான் சத்யானந்தன்.

"டேய்... இன்னும், நம்ம கோயிலுக்குப் போகலியே?" என மங்கையர்க்கரசி கேட்க,

"அதெல்லாம் அடுத்த வாரம் பாத்துக்கலாம்மா. புரோடக்சன் எப்படியிருக்குன்னு போயி பாக்கணும். தீபாவளி சீசன் ஸ்டார்ட் ஆகிடுச்சு, ஆர்டர்ஸ் அதிகமா இருக்கும். அதெல்லாம் கவனிச்சா தான் அடுத்த வருஷம் ஸ்மூத்தா ரன் பண்ண முடியும். கல்யாணத்த சாக்கா வச்சு ஒரு வாரமா வீட்ல இருந்தாச்சு. போதும்" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

"ஏன்டா... அப்பப்ப போய்ட்டு தான வந்த?" என்றார் மங்கையர்க்கரசி. முழுநேரம் போக முடியவில்லை எனினும் அவ்வப்பொழுது அவசர அலுவலுக்கு சென்று கொண்டுதான் இருந்தான்.

"ஏன்டா மாப்ள? ஹனிமூன் மாதிரி எங்கயாவது போயிட்டு வரலாம்ல." விருந்திற்கு வந்தவனிடம் விஷ்வா கேட்க,

"போலாம்டா... ஆனா அதுக்கு இப்ப தோது இல்ல. மசாலா கம்பெனியை ஸ்டடி பண்ணனும்டா! அதுக்கேத்த மாதிரி ஆர்டர் எல்லாம் போட வேண்டியது இருக்கு. வேல பாக்குறவங்களுக்கும் போனஸ் எல்லாம் போடணும். எதுனாலும் தீபாவளி முடிஞ்சுதான் பாக்க முடியும்." என்று பொறுப்பான தொழிலதிபராகப் பேசினான்.

இத்தனை பேச்சிற்கும் திவ்யாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. கணவன் சொல்லே தாரக மந்திரமாக தலையாட்டிக் கொண்டிருந்தாள்.

“தங்கச்சி உனக்கு ஒன்னும் வருத்தமில்லையே?” விஷ்வா பொறுப்பான தமையனாக கேட்டு வைக்க,

“அப்படியெல்லாம் இல்லண்ணா!” என்று பதில் வர,

“பாசப்பயிர வளத்தது போதும்டா!” என கிண்டலடித்தான் சத்யா.

"உன்னை மாதிரி பிசினஸ் மேக்னட்டுக்கு டைம் கிடைக்கதுடா பேராண்டி... நாம தான் டைம் ஒதுக்கணும்”, என தேவானந்தனும் கடிய,

"நீங்களே இப்டி சொன்ன எப்படி தாத்தா? மாசச் சம்பளம் வாங்குறவனா இருந்தா டான்னு ஒண்ணாந்தேதி சம்பளம் வந்துரும். எந்த ராசா எந்த தேசம் போனா நமக்கென்னன்னு, யாரையும் பார்க்க தேவையில்ல. ஆனா, நாங்க எல்லாம் நேரங்காலம் பாக்காம உழைச்சா தான் நம்மை நம்பி இருக்கிறவங்களுக்கு சம்பளத்தை திருப்தியா கொடுக்க முடியும்.” என பொதுவாக பதில் கூறினான்.

"நானே ராஜா, நானே மந்திரினு நகர்வலம் வர்ற, ஆனந்தன் குருப்ஸ் ஓனரோட தன்னடக்கத்தை மெச்சினோம் மாப்ள... இவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்மா. நீதான் இவன வழிக்குக் கொண்டு வரணும்." என விஷ்வா, திவ்யாவிடம் கூற,

"அதெல்லாம் பாத்துக்கலாம்ண்ணா." என அவளும் சிரித்துக் கொண்டே பதில் கூறினாள்.

"அதெல்லாம் அவளுக்கு நல்லாவே தெரியும்டா விஷ்வா... சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கியே நல்லா யோசிப்பா... இல்ல தியா." எனக் கேலி செய்து இவனும் சிரித்தான்.

"வீட்டுக்கு வாங்க, உங்களுக்கு இருக்கு." என கணவனை கண்களால் மிரட்ட, மிரட்டியவளைப் பார்த்து, குடும்பமே வாய்விட்டுச் சிரித்தது.

'இப்ப என்ன சொல்லிட்டோம்னு எல்லாரும் இப்படி சிரிக்கறாங்க... தப்பா எதுவும் சொல்லிட்டோமோ?' என சங்கோஜமாக யோசித்தாள்.

புது இடத்தில் பயந்து பயந்து, எதைப் பேசினாலும் தப்பாகி விடுமோ என எண்ணும் புதுப்பெண்ணின் ஆரம்பகட்ட சின்ட்ரோம் இது. ஒரு வழியாக விருந்துகளை முடித்துக் கொண்டு வழமைக்குத் திரும்பினர்.

காலையில் எழுந்து, கீழே இறங்கி வந்தவன், "ம்மா. எம் பொண்டாட்டி எங்கே?" என கேட்க,

"அடுப்படியில..." என்ற மங்கையர்க்கரசி டைனிங் டேபிளில் அமர்ந்து ஃபோன் பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்னம்மா? எம் பொண்டாட்டிய வேல பாக்க விட்டுட்டு, ஜாலியா ஃபோன் பாக்க ஆரம்பிச்சாச்சு போல?" என அம்மாவை வம்பிழுக்க,

"ஆமான்டா, அப்படியே ஊஞ்சல் ஒன்னு வாங்கிப் போடு... அதுல ஆடிட்டே ரெஸ்ட் எடுத்துக்கிறேன்" என்றார்.

"உங்களுக்கு இல்லாததாம்மா!" என பேசிக்கொண்டே மகன் சமையல்கட்டு பக்கம் செல்ல, மங்கையர்க்கரசி எழுந்து வெளியே தோட்டத்துப் பக்கம் சென்று விட்டார்.

காலையில் எழுந்து குளித்து விட்டு வந்தவள், அடுக்களையில் இருந்த மாமியாரிடம் தான் சமைப்பதாகக் கூற, "சமைக்கத் தெரியுமா?" என கேட்டார்.

"ம்ம்ம்! சுடுதண்ணி எல்லாம் பக்காவா போடுவேனே!" சிரித்துக்கொண்டு பதில் கூறினாள் திவ்யா.

"அத, உன் புருஷனுக்கு போட்டுக் கொடு... நமக்கு நல்லதா வேற சமையல் பண்ணு." எனக்கூற,

"அதெல்லாம் நல்லாவே வரும் அத்தை. எங்கம்மா தலையில கொட்டி கொட்டி சொல்லிக் கொடுத்தது ஓரளவுக்கு ஞாபகத்துல இருக்கு. அதோட அம்மாவுக்கு உடம்புக்கு முடியாத நேரத்துல நானும் அப்பாவும் தான் சமையல்." என்றவள், "என்ன டிஃபன் முடிவு பண்ணியிருக்கீங்க?" பொறுப்பான மருமகளாக கேட்க,

"பூரியும் குருமாவும் தான். தோசமாவு கூட இருக்கு." என்றார், மருமகளுக்கும் காஃபியை கொடுத்தவாறே.

"நீ குருமாவுக்கு ரெடி பண்ணு... ஊற வச்ச பட்டாணி ஃப்ரிட்ஜ்ல இருக்கும். நான் மாவப் பிசைஞ்சு வைக்கிறேன்." என்றவர், மாவை பிசைந்து, உருட்டி வைத்துவிட்டு வெளியே வந்து விட்டார்.

"கல்யாணத்துக்கு விசாரிக்க யாராவது வரப்போக இருப்பாங்க. ஒரு வாரத்துக்கு சேலையே கட்டிக்க திவ்யா." என மாமியார் கூறிவிட, இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக இடுப்பில் சேலை நிற்கும் அளவிற்கு கட்டிப் பழகியிருக்கிறாள்.

இன்றும்‌ உடலைத் தழுவிய சேலை, நழுவும் நிலையில் தான் இருந்தது. காய் நறுக்கும் வேலையை விட புடவையை ஏற்றிவிடும் வேலை மும்முரமாக நடக்க, இந்த வேலை ஒத்துவராது என விட்டுவிட்டாள்.

சேலையுடனான அவளது போராட்டத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே, அடுக்களை வந்தவன் எதுவும் பேசவில்லை.‌ காஃபியை கலந்து அவனிடம் நீட்ட, வாங்கிக் கொண்டவன், அங்கேயே மேடை மீது சாய்ந்து நின்று, பருக ஆரம்பித்தான், காஃபியையும், கட்டினவளையும் தான்!

உதிக்கும் சூரியனாய் உச்சித்திலகம்! குடையாய்த் தாழ்ந்த      விசிறி இமை! கவிழ்ந்த வினாக்குறியென நாசி! அதில் முற்றுப்புள்ளியாய் ஒற்றைக்கல் மூக்குத்தி! வெல்வட்டாய் கன்னம்! வழுக்கியது அவன் பார்வை! அசையாமலே அழைப்பு விடுத்த கனிந்த கீழுதடு! புல்லின் நுனியாய்     நீர்பூத்த மேலுதடு! புது மெருகோடு மின்னும் தாலிச்சரடு தழுவிக் கிடந்த சங்கு கழுத்து!                     

புதைந்து கொள்ளத் தூதுவிடும் வஞ்சகமில்லா இளமையும்… வஞ்சிக்கப்பட்ட இடையும்! எச்சரிக்கை... இது விபத்துப் பகுதி! என தடைவிதிக்கப்பட்ட… நாபிப்பள்ளத்தாக்கு! விரும்பியே விழுந்து, விருப்பமே இல்லாமல் எழுந்தது அவனது பார்வை!

மயிலிறகாய் வருடிய அவனது பார்வையில், மஞ்சள் பூசிய முகம் தாழம்பூ நிறத்திலிருந்து செந்தாமரை நிறத்தை பூசிக் கொண்டிருக்க, அவனைத் திரும்பிப் பார்க்காமலே ஜிவ்வென அவளது காதோரம் சூடேறியது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், குறுஞ்சிரிப்போடு அவளுக்கு இடப்புறமாக கைவிட்டு, இடையை உரசியவாறே தட்டில் இருந்த கேரட்டை எடுக்க,

'அடப்பாவி! இத முன்னாடியே எடுக்கலாமேடா! எதுக்கு கை அங்க சுத்திகிட்டுப் போகுது.' என மனசாட்சி கழுவி ஊற்றியது.

சாதாரணமாகத் தான் காட்டிக்கொண்டாள், கேரட்டை எடுத்தவன், சுண்டுவிரல் கொண்டு, புடவை அவனுக்கு கரிசனம் காட்டிய இடத்தில், பட்டும் படாமல் கோலம் போடும்வரை.

அவன் விரல் உரசியதும் நறுக்கிய காய், சட்டென நழுவியது, கத்தியை விட்டு. மூச்சுத் தடுமாற, சுவாசிக்க மறந்து நின்றவளைத் தான், கேரட்டைக் கடித்துக் கொண்டே நையாண்டி செய்துவிட்டு வெளியேறினான்.

விருந்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் கண்ணியமாக ஒதுங்கி இருக்கிறான். ஆனால் பார்க்காமல் பார்க்கிறான். குறுகுறுக்கிறது அவளுக்குள். தீண்டாமல் தீண்டுகிறது பார்வை. செல்கள் ஒவ்வொன்றும் சூடேறுகிறது. இரவில் சமத்துப் பிள்ளையாக தூங்கி விடுகிறான். இல்லையில்லை! கண்மூடி படுத்துக் கொள்கிறான்.

இவள் தான் முன்பு போல் அவனருகில் சகஜமாக படுக்க முடியாமல் தவித்துப் போகிறாள். தவிக்கவிட்டு சிரித்துக் கொள்கிறான். கண் அசந்த பின்னிரவு நேரத்தில், பின்கழுத்தில் சூடாக மூச்சுக்காற்று பரவ, இடையணைத்து கொள்கிறான். தவித்தவள், கொதித்துப் போகிறாள். சுகமாக குளிர்காய்கிறான். எதுவும் செய்யாமல், ஏதோ செய்கிறான்.‌ என்னவென்று விளங்கவில்லை பேதைக்கு.

ஏதோ செய்கிறாய்

என்னை ஏதோ செய்கிறாய்

என்னை என்னிடம் நீ

அறிமுகம் செய்கிறாய்

ஏதோ செய்கிறாய் என்னை

ஏதோ செய்கிறாய்...

அதன்பிறகு எங்கே சமையலில் கவனம் சென்றது. உப்பாவது, புளிப்பாவது. என்ன சமையல் செய்தோம் என்ற நினைப்பே இல்லாமல் முடித்து வைத்தாள். அவனும் குளித்து விட்டு மீண்டும் கீழே வர, மாமியார், தாத்தா, கணவனோடு சாப்பிட அமர்ந்தாள்.

பூரியையும், வெஜிடபிள் குருமாவைம் பரிமாறிக் கொண்டு, தாத்தாவும் பேரனும் சாப்பிட ஆரம்பிக்க, எதுவும் சொல்லாமல் சாப்பிடும் மகனையே வைத்தகண் வாங்காமல் பார்த்தார் மங்கையர்க்கரசி.

"என்னம்மா புதுசா பாக்குற மாதிரி பாக்குறீங்க?" என்றான் நிமிர்ந்தே பார்க்காமல்.

"ஏன்டா, குருட்டுக் கோழி தவிட்ட முழுங்குற மாதிரி ஒருநாள் முழுங்குவேன்னு சொன்னேன்ல... இன்னைக்கி அதுதான்டா நடக்குது. எத்தன வக்கணை சொல்லுவ எஞ்சமையலுக்கு... இப்ப ஒன்னுமே சொல்லாம சாப்பிடுற?"

தான் சமைத்ததை ருசி பார்ப்பதற்காக வாயில் வைத்து விட்டு, துப்பவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் அவஸ்தைப் பட்ட திவ்யாவும் அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

அவளது சமையல் ஒன்றும் அவ்வளவு மோசமாக இருக்காது. விடுமுறை நாட்களில் எல்லாம் அவளை சமைக்க விட்டே பழக்கப்படுத்தி இருந்தார் திவ்யாவின் அம்மா. கைப்பக்குவம் நன்றாகவே வரும். ஆனால் இன்று அவளுக்கே வாயில் வைக்க முடியவில்லை. எல்லாம் அவளது கண்ணன் லீலை!

"இன்னைக்கி சமையல் நல்லா வந்திருந்தா தான் கவலப்பட்டிருப்பேன். என்னடா... ஒரு‌ ரியாக்ஷனும் இல்லியேனு..." என அவன் சிரித்துக் கொண்டே மனையாளைப் பார்த்து கண்சிமிட்ட, பதட்டமாக அவளின் பார்வை மாமியாரை பார்த்தது.

அந்த நேரம் யாரோ வரும் சத்தம் கேட்க அனைவரும் வாசல் பக்கம் பார்வையை பதித்தனர். லட்சுமியும் சதீஷும் வந்தனர். அவர்களின் கையில் பெரிய கட்டைப்பை பார்சல் இருந்தது.

இருவரையும் குடும்பமே சேர்ந்து வரவேற்றது. “வாடா மாப்ள... நான் பெற்ற இன்பம் உனக்கும் கிடைக்கட்டும். உக்காந்து சாப்பிடு!” என்று சதீஷை அருகில் அமர வைத்துக் கொண்டான் சத்யா.

"வாங்க அண்ணி... அண்ணா வரலியா?" என சண்முகத்தை விசாரித்தார் மங்கையர்க்கரசி.

"கடைக்கு கிளம்பி போயிட்டார். சன்டேங்கறதால குழந்தைங்க எல்லாம் லேட்டா தான் எந்திருச்சு சாப்பிடுங்க... அதுக்குள்ள இங்கே வந்துட்டு போயிடலாம்னு நானும் இவனும் கிளம்பி வந்துட்டோம்” என்று பதிலளித்தார் லட்சுமி.

"சாப்பிடு சதீஷ்!” என்று தேவானந்தன் கூற,

"வேண்டாம் தாத்தா. இன்னைக்கு வெளியிடத்துல சாப்பிடுறதில்லன்னு விரதம்'' என நக்கலோடு அவன் மறுக்க,

“படவா... தப்பிச்சுட்ட நீ!” என்று தேவ்னாந்தன் சிரித்தார்.

"சரிடா... எம் பொண்டாட்டி சமச்சது எனக்கே பத்தல... நீங்க வேற நல்ல டிபனை செஞ்சு சாப்பிடுங்க” என்றவனை பல்லைக் கடித்து முறைத்தாள் திவ்யா.  

"என்ன சொல்ற கண்ணா?” என்று லட்சுமி கேட்க,

"அவரை விடுங்க ஆன்ட்டி... அதென்ன பையில?'' என்று லட்சுமி கையில் இருந்த பையை பார்சலை காண்பித்து கேட்டாள் திவ்யா.

"விரால்மீன் கொழம்பும்மா. இன்னைக்கி சன்டேங்கவும், உங்க அங்கிள் காலையிலேயே மார்க்கெட் போய்ட்டு வந்துட்டாங்க. எனக்கு உன் ஞாபகம் வந்துடுச்சு... நீ விரும்பி சாப்பிடுவியே! அதுதான் கொழம்பு வச்சு எடுத்துட்டு வந்தேன். பெரியவரும் கண்ணனும் கூட லீவு நாள்ல ஆற அமர சாப்பிடுவாங்கள்ல...” என்று லட்சுமி கூறியதில் அவரின் பாசம் நன்றாகவே தெரிந்தது.

“அப்ப எனக்கு மாமியாரா உங்க பிள்ளைக்காக தூக்குச்சட்டியை தூக்கிட்டு வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க” என்று திவ்யா பொய்யாய் முறுக்கிக் கொள்ள,

"என் வயித்துல பாலை வாத்தீங்க அண்ணி.... திவ்யா நம்ம வீட்டு சமையலை ஓரம் கட்டு. மாமா... நாம நல்ல சாப்பாடு சாப்பிடுவோம். உங்க பேரன் மட்டும் அவன் பொண்டாட்டி சமைச்சதை ஒத்தையில மொக்கட்டும்" என்றவர், மகனின் முகம் பார்த்தார் நக்கலாக.

"ஏன் அண்ணி... நீங்க என்ன செஞ்சீங்க?" லட்சுமி கேட்க,

"அதொன்னுமில்லமா... எங்கம்மாவுக்கு வயசாச்சேனு எம் பொண்டாட்டி பத்திய சாப்பாடு செஞ்சுருக்கா... அது புடிக்கல அவங்களுக்கு." சத்யா வக்கணையாக கிண்டலடிக்க,

“அதுக்கு என்னையும் பலியாடு ஆக்கிட்டாங்க... இதுதான் பெரிய கொடுமை” என்று தேவானந்தனும் சேர்ந்து கொண்டார்.

"வயசான காலத்துல தான் கண்ணா நல்லா சாப்பிடணும். அப்படி வாயக்கட்டி, வயித்தக்கட்டி நாள்கணக்க நீட்டிச்சு என்ன செய்யப் போறோம்? எனக்கு எது ஒத்துக்கலைன்னு, எப்ப என் உடம்பு சொல்லுதோ அது வரைக்கும் நல்லா சாப்பிட வேண்டியது தானே!" என்றார் லட்சுமி.

"சரிம்மா, நான் கெளம்புறேன். நீங்க சாப்பிடுங்க... மதியத்துக்கு சிறப்பா சமைச்சு இதே மாதிரி லட்சுமி அம்மாவுக்கு கொடுத்து விடுங்க” என்று சத்யா சொன்னதும்,

"அதான் மீன் கொழம்பு கொண்டாந்துட்டாங்கள்ல... மதியம் மட்டன் பிரியாணி போட்டு கொடுத்து விடுறேன். நீயும் சீக்கிரமா வா!” என்றார் மங்கையர்க்கரசி.

"சரிம்மா... அப்படினா, ஒன்னு பண்ணுங்க... மீன்கொழம்ப இப்ப சாப்பிடுங்க... மதியத்துக்கு எல்லாரும் ஹோட்டல் போயிக்கலாம். சதீஷ் வீட்டுக்கு போன் பண்ணி எல்லாரையும் ரெடியா இருக்கச் சொல்லுடா... நான் கார் அனுப்புறேன். ஒருநாள் ஜாலியா வெளியே போயிட்டு வருவோம்.” என்றவன் வெளியே கிளம்பினான்.

 ***