ninaikkaatha neramathu - 7 books and stories free download online pdf in Tamil

நினைக்காத நேரமேது - 7

நினைவு-7

பிள்ளைகள் கவனிப்பு, வீட்டுப் பாடம், இரவு சமையல், சாப்பாடு என அன்றைய நாளுக்குரிய வேலைகள் நேரம் தவறாமல் தன் வருகையைப் பதிவு செய்தன.

சதிஷ் இரவுப் படுக்கைக்கு பிள்ளைகளை ஒழுங்கு படுத்திக் கூட்டிச் சென்றான்.

இரவு நேரம். தனிமை… வழக்கம் போல் பவளமல்லி செடித் திட்டில் திவ்யா! துணைக்கு கைபேசியில் ஒலிக்கும் பாடல்கள்.

"முழுநிலா எப்பவும் அழகு! பிறைநிலா இன்னும் அழகு... வளர்பிறை நிலாப் பக்கத்துல மின்னுற அந்த ஒற்றை நட்சத்திரம் மேலும் அழகு.

அது மின்னுறப்ப நிலவுக்கு மூக்குத்தி மாதிரி எனக்குத் தோனும்!" பிறைநிலவில் பார்வையைப் பதித்திருந்தவள் கூற,

"இப்ப எனக்கும் அப்படித்தான் தோணுது. உனக்கு நட்சத்திரம் மூக்குத்தியாத் தோணுது. எனக்கு அதுவே இடமாற்றமாத் தோணுது. மின்னுற நட்சத்திரம் மீது சிறு முத்தம்." எனத் தொடராமல் நிறுத்தியவனை, 

வான்பிறையில் தன் பார்வையைப் பதித்திருந்தவள், 'என்ன!?” என்பது போல் பார்க்க...

போர்டிகோ தூணில் கைகட்டி சாய்ந்து நின்றவனது பார்வை, நிலவில் இல்லாமல் தன் மீது இருப்பதை அறிந்து மென்மையாகச் சிரித்தாள். அவளவன் கூறியது, தன் மூக்கில் மின்னும் மூக்குத்தி என்பதை உணர்ந்து நாணம் கொண்டாள்.

அவன் முடிக்காமல் விட்டது கற்பனையில் தோன்ற… சட்டென ஏதோ ஒரு உணர்வு அவளை காற்றில் மிதக்கும் இறகாய் இழுத்துச் செல்ல, அதை முழுதும் அனுபவிக்க இயலவில்லை.

ஏதோ ஒன்று நெருடலாய்‌ மனதில் அன்று தன்னவனோடு நடத்திய உரையாடலோடு, அந்த உணர்வும் சேர்ந்து வர, ஆனால் இன்று அந்த நெருடல் இல்லை. 

கன்னியின் நினைவைப் பிறைநிலா, அவளது கண்ணனுக்கு எடுத்துச் சென்றதோ என்னவோ?

சாப்பிட்டுக் கொண்டிருந்த சத்யானந்தனுக்குப் புரையேற,

"யார்றா உன்ன இந்த நேரத்துல நினக்கறது?" என்ற தேவானந்தனின் கேள்வியில், 

'நாம எந்த முடிவும் எடுக்காம ரொம்ப காலம் கடத்துகின்றமோ?' என்ற எண்ணம் மங்கையர்க்கரசி மனதில் வந்து அமர்வதை தடுக்க முடியவில்லை.

***

 'உன்னைய யார்றா இந்த நேரத்துல நினைக்கிறது?" என்ற தாத்தாவின் கேள்விக்கு,

"என்னைய எல்லாம் யாராவது நினைக்கிறதுக்காக புரையேறனும்னா, இருபத்திநாலு மணி நேரமும் புரையேறனும் தாத்தா! அத்தனை பொண்ணுங்க என்னை நினைச்சுட்டு இருப்பாங்க!" என்று பெருமை பீற்றிக் கொண்டான் சத்யானந்தன்.

"எந்நேரமும் புரையேறுனா அதுக்குப் பேரு வியாதிடா... அதுவுமில்லாம நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட!" பேச்சோடு பேச்சாக பேரனை வாரிவிட, சிலிர்த்துக் கொண்டது இளங்காளை.

"ஓஹோ... உங்களுக்கு தான் வரிசை கட்டிட்டு நிப்பாங்களோ?”

“பின்ன இல்லையா சேலன்ஞ் பண்ணிப்போமா?” விடாமல் வம்பிற்கு இழுத்தார் தேவானந்தன்.

“என்ன தாத்தா! என் இமேஜ இப்படி டேமேஜ் பண்ணிட்டீங்க... காலேஜ் டேய்ஸ்ல இருந்து இப்ப வரைக்கும் எத்தனை பேர் எம்மேல க்ரஷ்ஷா இருக்காங்க தெரியுமா?"

"இருந்து என்னடா பிரயோஜனம்? சொல்லு! ஒன்னையாவது செலக்ட் பண்ணி இருக்கியா?"

"தாத்தா! நான் சொன்னத நீங்க சரியா கவனிக்கல. க்ரஷ்ஷா இருக்காங்கனு தான் சொன்னேன்."

"அதத்தான் சத்யா நானும் சொல்றேன். காலேஜ் படிக்கிறப்பயாச்சும், யாரையாவது லவ் பண்றேனு சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன். சொல்லல... சரி, பிஸினஸ் சர்கிள்ல யாரையாவது உனக்குத் தகுந்த மாதிரி செலக்ட் பண்ணுவேன்னு எதிர்ப்பாத்தா, அதுவுமில்ல! வேற வழி இல்ல, நாம தான் இவனுக்குப் பொண்ணுப் பாத்து வைக்கணும் போலன்னு பொண்ணு போட்டோஸ் காமிச்சா ஒன்னு கூடப் பிடிக்கலங்கற. என்ன தான்டா எதிர்பாக்குற?" தாத்தாவின் கேள்வியில் ஒருநொடி ஆழ்ந்த சிந்தனைக்குச் சென்றான் சத்யா.

"தெரியல தாத்தா! நீங்க சொன்ன மாதிரி எந்த பொண்ணயும் லவ் பண்ணனும்னு தோணல. காலேஜ் டேய்ஸ்ல, ஃப்ரென்ட்ஷிப் தாண்டி யார்‌கூடயும் பழகப் பிடிக்கல. பிஸினஸ் சர்க்கிள்ல, பாக்குற பொண்ணுங்க எல்லாம், என்ன மட்டும் விரும்பறவங்களாத் தெரியல! அவங்களுக்கு ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸ் அடையாளம் தேவைப்படுது. அப்புறம்... எனக்குத் தெரிஞ்சு நீங்க காட்ற போட்டோஸும் கிட்டத்தட்ட ரெண்டாவது வகையறா தான்."

"ஆமாண்டா! நமக்கு பொண்ணு விவரம் கொடுக்கறவங்க நமக்குத் தகுந்த மாதிரி தானே தருவாங்க!"

தாத்தாவும் பேரனும்‌ சாப்பிட்டவாறே பேசிக் கொண்டிருக்க, மங்கையர்க்கரசி இவர்களுக்கு தோசை ஊற்றிக் கொண்டே பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

"ஒரு பொண்ணப் பாத்தா, இவ நமக்கானவன்னு தோணனும்ல, அது மாதிரி எந்த ஒரு பொண்ணப் பாத்தாலும் தோணல... ஃபோட்டோ பாத்தாலும் தோணல."

தாத்தா சத்யாவை நெருங்கி கீழே குனிந்து அவன் காதருகில் சென்று, "ஏன்டா! டாக்டர் யாரையாவது பாக்கலாமா?" எனக்‌கேட்க,

"தாத்தா…!” எனப் பல்லைக் கடித்துக் கொண்டு அடிக்குரலில் அவன் அம்மாவுக்கு கேட்காதவாறு கத்தினான்.

தோழனாக தந்தை இருக்க வேண்டிய வயதில் தந்தையை இழந்தவன், ஆதலால் தாத்தாவே இங்கு தந்தையும், தோழனும் ஆகிப்போனார். 

"தாத்தா! நான் சொல்றது உங்களுக்குப் புரியல... ஒரு பொண்ணப் பாத்தா நமக்கு மட்டுமே சொந்தம்னு தோணனும். எந்தச் சூழ்நிலையிலும் இவள இழந்துடக் கூடாதுனு மனசு ஏங்கணும். அந்த இடத்துல அந்தஸ்து, அழகு, அறிவெல்லாம் ரெண்டாம் பட்சம் ஆயிடும் தாத்தா."

"இப்ப என்ன!? அவனுக்குக் கல்யாணம் ‌நடக்கணும், அவ்ளோ தானே? அதெல்லாம் காலாகாலத்துல தானா நடக்கும். இப்ப ரெண்டு பேரும் சாப்பிடுங்க!" எனக் கூறியவாறு மங்கையர்க்கரசி வர,

"நீ என்னம்மா!? இவன் கல்யாணப் பேச்ச எப்ப எடுத்தாலும் பட்டும் படாம பேசுற... ஒரு வேள உனக்கும், மகனுக்கும் இடையில, ஒரு பொண்ணு வந்துட்டா, உனக்கு உரிமை குறஞ்சுடும்னு, அந்தக் கால மாமியார் மாதிரி யோசிக்கிறயா?" எனக் கேட்டு தேவனானந்தன் சிரித்தார்.

"ஆமா... நான் சீரியல் மாமியா பாருங்க‌, இப்படி எல்லாம் யோசிக்க!”

“பின்னே என்னவாம்?” பெரியவர் மேலும் கிளற,

“நானே இவனுக்கானவ வர்ற காலம் எப்படா வரும்னு காத்திட்டிருக்கேன். வந்தவுடனே கரண்டியக் கையில் கொடுத்துட்டு சிவனேனு ஒதுங்கிற மாட்டேன்!"

 

"என்னங்கம்மா!? அது என்ன செங்கோலா! ஆட்சியைப் பிடின்னு கொடுக்க." சத்யா கேலி பேச,

"டேய் சத்யா! இது அதவிட பவர்ஃபுல் ஆயுதம்டா! நீ பேச்ச மாத்தாத... எனக்கு உன்னோட வயசுல எல்லாம், உன்னோட அப்பா ஸ்கூலுக்குப் போயிட்டான்."

"தாத்தா... பால்ய விவாகம் பண்ணிட்டு, நீங்க எல்லாம் வயசப் பத்திப் பேசக்கூடாது."

"ஆமாண்டா! எங்க தாத்தா கடைசி காலத்துல ஒத்தப் பேரனோடக் கல்யாணத்தைப் பாக்கணும்னு ஆசப்பட்டாரு. நானும் தாத்தாவோட கடைசி ஆசையை நிறைவேத்தணும்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப இருக்கற பிள்ளைக மாதிரி சம்பாதிக்கணும். லைஃப்ல செட்டில் ஆகணும்ங்கற எண்ணம் எல்லாம் அப்ப இல்ல. சொத்துக் கிடந்தது. சொந்தத்துல பொண்ணும் இருந்தது. ஈஸியா கல்யாணமும் முடிஞ்சது."

"தாத்தா, நான் என்ன கல்யாணம் பண்ண மாட்டேன்னா சொல்றேன்? எனக்கு இவ தான்னு எந்தப் பொண்ணப் பாத்தா தோணுதோ உடனே கல்யாணம் பண்ணிக்கறேன். அது நீங்க பாக்குற பொண்ணா இருந்தாலும் சரி. நான் பாக்குற பொண்ணா இருந்தாலும் சரி." எனக் கூறி‌விட்டு கைகழுவ சத்யா எழுந்து சென்றான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த தேவானந்தன், "நாலஞ்சு தலைமுறையாவே நம்ம குடும்பத்துல ஒரு பிள்ளதான் வாரிசுனு ஆகிப்போச்சு. இந்த தலைமுறையிலாவது அதை மாத்தி ஒரு நாலஞ்சு கொள்ளுப்பேரன் பேத்திகளப் பாக்கலாம்னா, சரிக் கொடுக்க மாட்டேங்கறானே!" எனத் தன் மருமகளிடம்‌ புலம்ப,

"கவலையை விடுங்க தாத்தா... நீங்க உங்க தாத்தா ஆசைய நிறைவேத்துன மாதிரி, நானும் எங்க தாத்தா ஆசைய நிறைவேத்துறேன். நாலஞ்சு என்ன? பதினாறும் பெற்று பெரு வாழ்வு மாதிரி பதினாறு பெத்துக்கறேன். போதுமா?"

"கேட்க சந்தோஷமாத் தான்டா இருக்கு. ஆனா! அடியேங்க பொண்டாட்டி இல்ல... புடி புள்ளயன்னா எப்படிடா!?" 

தாத்தா சொன்னதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவன், "தாத்தா, என்ன கிழவி மாதிரி பழமொழி எல்லாம் சொல்றீங்க?"

"கிழவனும் சொல்லாம்டா!"

"கிழவனா!? யாரது!?" எனக் கேட்டவனிடம்,

"போடா படவா..." எனக் கூறி விட்டு, சாப்பிட்டு முடித்தவர், கை கழுவி விட்டுத் தன் அறையை நோக்கிச் சென்றார்.

வாஞ்சையுடன் தன் தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்த மகனிடம், "தம்பி… தாத்தாகிட்ட சொன்னது இருக்கட்டும். கல்யாண வாழ்க்கையப் பத்தி நீ என்ன முடிவு பண்ணியிருக்க?" தாயின் அக்கறையோடு மங்கையர்க்கரசி வினவ…

"அவர் கிட்ட சொன்னது தாம்மா உங்க கிட்டயும் சொல்லப் போறேன். கல்யாணம்னு யோசிச்சாலே மனசு ஏதோ ஒன்ன எதிர் பாக்குது. மனசுக்கு நெருக்கமான உறவா அமையணும்னு ஆசப்படுது. தாத்தா சொல்ற மாதிரி ஏதாவது ஒரு பொண்ண செலக்ட் பண்ணலாம்னு நினைச்சாலே மனசுல ஏதோ ஒன்னு மிஸ்ஸான ஃபீலிங். எதனாலனு தெரியல. மொத்தத்துல ஆசப்பட்டு கல்யாணம் பண்ணனும். அனுபவிச்சு வாழணும். அவ்ளோதாம்மா!" எனக் கூறிச் சென்ற மகனையே பார்த்துக் கொண்டிருந்தார் மங்கையர்க்கரசி.

தனது அறைக்கு வந்தவன், காற்றோட்டமாக பால்கனி பக்கமாக சென்றான். கைகளைக் கட்டிக் கொண்டு, முன் இருந்த பால்கனி கம்பியில் சாய்ந்தவாறு நின்று கொண்டு, கீழே தெரிந்த தோட்டத்துப் பகுதியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இரவுப் பூக்களான மல்லி, முல்லை மலர்ந்து பரப்பிய மெல்லிய மணத்தை அவன் நாசி உணர, ஆழ்ந்து மூச்சு விட்டு நுரையீரல் நிரப்பினான்.

பார்வை செயற்கைத் தாமரைக் குளத்தில் படிந்தது. தாமரை மொட்டுக்கள், குவித்த கரமாய் கூம்பி நின்றன. தான் மலர சூரியன் வேண்டும்! நிலவு நீ வேண்டாம்! சென்று ஆதவனை வரச்சொல்! என்பதாய்...

தாத்தாவிடமும், அம்மாவிடமும் தனது எதிர்பார்ப்பைக் கூறினாலும், கல்யாணம் என்றவுடன் மனதில் ஒரு ஏக்கம் பிறக்கிறது. மனம் யாரையோ தேடச் சொல்கிறது. எங்கேயோ போகச் செல்கிறது. யாரை? எங்கே? என்றுதான் தெரியவில்லை.

உரிமைப்பட்டவளை அறிய முடியாமல் உடமைப்பட்டவன் மனம் ஏங்குகிறது.

அதே சமயம், அந்த இரவு நேரத்தில் திவ்யாவிடம் பேச வேண்டுமென சண்முகமும், லட்சுமியும் , அவளிருந்த இடத்தை நோக்கி வந்தனர்.

அவர்களைப் பார்த்து எழுந்து கொண்டாள்.

"என்னங்க ஆன்ட்டி, எல்லாரும் தூங்கிட்டாங்களா?"

"ம்ம்... தூங்கிட்டாங்கம்மா!"

"ரெண்டு பேரும் இருங்க... நான் போய் சேர் எடுத்துட்டு ‌வர்ரேன்!" என்று அருகில் சமையல் கூடம் சென்றவள், அங்கிருந்த சேர்களில் இரண்டை எடுத்து வந்தாள்.

அவள் செடித்திட்டில் அமர, அவர்கள் இருவரும் அவளை எதிர் நோக்கி சேரில் அமர்ந்தனர்.

"திவிம்மா, உங்கிட்ட கொஞ்சம் பேசணும்!" சண்முகம் ஆரம்பிக்க,

"இந்நேரம் என்னத் தேடி வரும் போதே தெரியும். சொல்லுங்க அங்கிள்."

"உன் வாழ்க்கையப் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க? இப்படியே எவ்வளவு நாளைக்கு யோசிப்ப?"

"நீ தேவையில்லாம பயப்படறியோனு தோணுது." லட்சுமி கூற,

"இது பயம் இல்ல ஆன்ட்டி... எதிர்பார்ப்பு!" என்றவளின் குரல் உறுதியுடன் ஒலித்தது.

''ஆனா எங்களுக்குப் பயமா இருக்கே திவிம்மா! பெத்தவங்க இருந்திருந்தா இப்படி ஆகுமான்னு ஒரு கேள்வி வரும். இல்ல, நீங்க பெத்த பிள்ளையா இருந்தா இப்படித்தான் வீட்ல வச்சு அழகு பாப்பீங்களானும் கேள்வி வரும்."

"யாரு கேப்பாங்க ஆன்ட்டி?"

"ஊருல நாலு பேரு கேக்க‌ மாட்டாங்களா? அப்படி இல்லைனா உன் சொந்தக்காரங்கள்ல யாராச்சும் ‌கேக்க மாட்டாங்களா?"

"யாரு சொந்தக்காரங்க? அம்மாவும் அப்பாவும் இறந்த அன்னிக்கே, வயசுப் பொண்ணு தனியா ஆகிட்டாளேனு கவலப்படாம, சொத்துக் கணக்குப் போட்டு பொண்ணக் கல்யாணம் பண்ண திட்டம் போட்ட அப்பா வழி சொந்தமா? இல்ல, பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கத் தோதா மாப்பிள்ளை ‌இல்லன்னு கவலப்பட்ட அம்மா வழி சொந்தமா?" கோபத்துடன் கனன்ற பேச்சில் பதில் சொல்ல முடியாது நின்றனர் இருவரும்.

பகிரப்பட்ட

NEW REALESED