Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 5

நினைவு-5

நண்பனின் முன்னேற்றம் கண்டு பொறாமைப்படாமல், அதுவும் தன்னால் கை கொடுத்து தூக்கி விடப்பட்டவன் என்ற எண்ணமும் சிறிதும் இல்லாமல் பேசும் நண்பனைப் பார்த்தவர்க்கு, நட்பு விஷயத்திலும் தான் கொடுத்து வைத்தவன் என்றே தோன்றியது.

தனது எம்.டி இப்படி மனம் விட்டு பேசுவதைக் கண்ட‌ திவ்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பெர்சனல் விஷயம் பேசும்போது தான் அங்கிருப்பது சரியா என்ற எண்ணமும் எழுந்தது.

அதற்குள் அவர்கள் ஆர்டர் ‌செய்திருந்த உணவு வகைகள் ‌வரவும் பேச்சு சற்று மாறியது.

"அப்புறம் தேவா! உன் பேரனைப் பத்தி சொல்லு. இப்ப பிசினஸ் வட்டாரத்துலயே அவன் தான் நம்பர் ஒன்னா இருக்காம் போல!"

"நம்பர் ஒன், நம்பர் டூ இதுல எல்லாம் எனக்கும் அவனுக்கும் நம்பிக்கை இல்லை ராமா! இன்னைக்கு நாமன்னா... நாளைக்கு இன்னொருத்தர். அதனால நாம செய்யறதை சிறப்பா செய்யணும். அவ்ளோதான்!"

"பரவாயில்ல தேவா! உனக்கு கை கொடுக்க பேரன் வந்துட்டான். என் பேரனுங்க இப்ப‌தான் காலேஜூ, ஸ்கூலுன்னு போறானுங்க... அதுவும் வெளிநாட்டுல..." என ராமநாதன் அங்கலாய்த்து கொள்ள,

"அதுக்குத் தான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்கறது." என்று மிதப்பாய் பதிலளித்தார் தேவானந்தன்.

"எது? நீ பண்ணினது காலாகாலத்துல பண்ணின கல்யாணமா?" என நண்பனிடம் கேட்டவர், அருகிலிருந்த திவ்யாவிடம்,

"திவ்யா! பொண்ணுக்கு கல்யாண வயசு எத்தனைன்னு கவர்மெண்ட் சொல்லுது?" என்று மிக முக்கிய கேள்வியாகக் கேட்டார்.

திடீரென்று தன்னைப் பார்த்து கேட்கவும் ஒரு கணம் திவ்யா‌ தயங்கினாள். 'ஒருவர் நிகழ்கால எம்.டி. இன்னொருவரோ வருங்கால எம்.டி. இவர்கள் சம்பாஷனையில் கலந்து கொள்ளலாமா? அஃபிஷியல்னா பரவாயில்ல. பேசத் தெரியாமல் ஏதாவது பேசி விட்டால் என்ன செய்வது?' என யோசித்துக் கொண்டே,

“இருபத்தியொன்னு சார்.” என்று பட்டும் படாமல் பதில் அளித்தாள்.

"பொண்ணுக்கே இருபத்தியொன்னு. ஆனா நம்ம தேவா கல்யாணம் பண்ணினது இருபது வயசுல..." என்று கூறிவிட்டு நண்பனைப் விஷமமாய் பார்க்க,

"பால்ய விவாகமா சார்?"  சட்டென்று அதிர்ந்து திவ்யா கேட்டதில், ராமநாதன் வாய்விட்டு சிரித்தார்.

'தேவையில்லாம வாய் விட்டுட்டோமோ?’ என ஒரு கணம் தயங்கியவள், தேவானாந்தனைப் பார்த்து, "சாரி சார். தெரியாம…" என இழுக்க,

"அடடே! இதுக்கு ஏம்மா... சாரி எல்லாம் கேக்குறே? இவங்களும் இதையே சொல்லி தாம்மா கிண்டல் பண்ணுவாங்க... இப்ப என் பேரனும் இதைச் சொல்லித் தான் கிண்டல் பண்ணுறான்." என்று தன்னை இலகுவாக்கிய தேவானாந்தனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

"என்னம்மா அப்படி பாக்குற?"

"இல்ல சார். புது எம்.டி. எப்படி இருப்பாரோனு ஒரு பயம் இருந்துச்சு. ஆனா இப்ப இல்ல சார்."

"அப்ப... என்னப் பாத்தா ஒரு எம்.டி.ங்கற பயம் வரலை." என்று தேவானாந்தனும் முறுக்கிக் கொண்டு கேட்ட,

"பயம் எதுக்கு சார் வரணும்? மரியாதை தான் வரணும். எனக்கு உங்க மேல‌ மரியாதை தான் வருது. பயம் வரல."

அவள் கூறியதைக் கேட்டு சிரித்தவர்,

"ரெம்ப தெளிவா பேசுறம்மா... இந்த நடை ,உடை ,வேஷம் எல்லாம் தொழில் வட்டாரத்துக்காக போடறதும்மா. இன்னும் உள்ளுக்குள்ள மக்களோட மக்களா வியாபாரம் பாத்த அதே மொளகா, வெங்காய கமிஷன் மண்டி தேவானாந்தன் தாம்மா!" என்றவரின் மீது திவ்யாவிற்கு மரியாதையும் தாண்டி பக்தியே வந்து விட்டது என்று சொல்லலாம்.

ஒருவரின் வெற்றி என்பது எவ்வளவு உயர்ந்தாலும் தன்னிலை மறவாதிருப்பது தானோ!

இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ராமநாதன்,

"தி கிரேட் ஆனந்தன் அண்ட் க்ரூப்ஸ் ஆஃப் கம்பெனியோட எம்.டி-க்கு ரொம்பத் தான்‌ தன்னடக்கம்." என்று கூற,

அதைக் கேட்டவளோ சட்டென்று திரும்பி தேவானந்தனைப் பார்க்க, அவள் உணர்வு என்னவென்று அவளுக்கே புரியவில்லை.

"சார்! அப்படினா லாஸ்ட் வீக், பிஸினஸ் மேகஸின்ல வந்தது..." என இழுக்க,

"என் பேரன் சத்யானந்தன் தாம்மா!" என்றதும் தான் தாமதம் அவளின் உள்மனம் அலைகடலென ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.

'என் கண்ணாவோட தாத்தாவா!?' மூச்சடைத்த எண்ணத்தை இயல்பாக்கிக் கொள்ளவே அவள் பெரும் பாடுபட வேண்டியதாயிற்று!

அதன் பின் அங்கு நடந்த பேச்சு வார்த்தைகள் எதுவும் அவள் கருத்தில் நினைவில்லை.

தன் கண்ணனைத் தவிர…

 

கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே

***

நண்பர்கள் இருவரும் கம்பெனி பற்றிய விவாதத்தில் ஈடுபட்டிருக்க,

திவ்யாவோ, தன் சுயம் மறந்து, சுற்றம் மறந்து தேவானந்தன் மீதே தன் பார்வையைப் பதித்திருந்தாள்.

அந்தக் கண்களும், அமைதி தரும் சிரிப்பும், அசத்தும் முக வெட்டும், இந்த வயதிலும் வாட்ட சாட்டமாக தோற்றமளித்த உடலமைப்பும் பெண்ணவளுக்கு 'அவர்' தன்னவனின், மூதாதையர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

எந்த முகத்தைப் பார்த்தால், தான் பலவீனப்பட்டு விடுவோமோ என அஞ்சி, விலகி இருக்கின்றாளோ, அம்முகத்தின் சாயலைக் கண்டவளுக்கு, இப்பொழுதே ஓடிச்சென்று தன் கண்ணனின் தோள் சேர மாட்டோமா?' என உள்ளம் பரபரத்தது.

தன் மனம் செல்லும் போக்கினை உணர்ந்தவள், சற்று நிதானம் அடைந்து, 'அதற்கும் காலம் கைகூடும். நிதானமாக இரு திவ்யா!' எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் எதிரில் இருப்பவர்கள் மீது வலிந்து கவனத்தைச் செலுத்தினாள்.

"அப்ப நீ சொல்றதப் பாத்தா, இன்னும் கொஞ்சம் வேலைக்கு ஆளுங்கள சேக்கணும் போல இருக்கே?" என்று தேவானந்தன் கூற,

"ஆமா தேவா! பேக்கிங் செக்க்ஷனுக்கு தான் ஆளுங்க தேவைப்படுவாங்க. நான் கொஞ்சநாளா ஆர்டர் அதிகமா எடுத்துக்கலை. ஆனா நீ வந்துட்டா... உன் லெவலுக்கு கம்பெனியை இம்ப்ரூவ் பண்ணும் போது வொர்க்கர்ஸ் தேவைப்படுவாங்க."

தேவானந்தன் இருந்த வரைக்கும், மிளகாய், மஞ்சள் போன்ற மசாலா பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து அப்படியே வாடிக்கையாளர்களுக்கு மாற்றி விட்டுக் கொண்டிருந்தனர்.

பின் காலமாற்றத்திற்குத் தகுந்த மாதிரி எடை வாரியாக பாக்கெட் போடவும் ஆரம்பித்தனர். தேவானந்தன் அதையும் தாண்டி, அவர் ஆரம்பித்த கம்பெனியில் எல்லா வகையான மசாலாப் பொடி வகைகளையும் தயாரித்தார்.

மூலப் பொருட்கள் தட்டுப்பாடாகும் சமயங்களில் ராமனாதனின் கம்பெனியிடமிருந்தும் கூட தொழில்ரீதியாக பெற்றுக் கொள்ளப்படும்.

இவரது மசாலா வகைகள் மக்களிடையே வெகு பிரசித்தம். அதன் பின் மகன் ரவியானந்தனின் விருப்பத்தின் பேரில் டெக்ஸ்டைல்ஸ் துறையிலும் கால் பதித்தனர். 

தந்தையின் திடீர் மறைவுக்குப் பின் டெக்ஸ்டைல்ஸ் துறையின் பொறுப்பை, சிறு வயதிலேயே, சத்யானந்தன் ஏற்றுக் கொண்டான். முதலில் தடுமாறினாலும் தாத்தாவின் வழி காட்டுதலுடன் விரைவில் தொழில் சூட்சமம் கற்றுக் கொண்டான். தற்சமயம் அவன் ஆசைப்பட்ட கன்ஸ்ட்ரக்ஷன் துறையிலும் கால் பதித்துக் கோலோச்சி வருகிறான்.

இப்படிப்பட்டவர்கள் பொறுப்பில் வரும் கம்பெனி, மேலும் விரிவாக்கம் பெரும்பொழுது ஆள் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பே!

"சார், நான் ஒன்னு சொல்லலாமா?" என திவ்யா மெதுவாகக் கேட்க,

"சொல்லும்மா!" என தேவானந்தன் ஊக்குவித்தார்.

"சர்! பேக்கிங் செக்ஷனுக்கு பெரும்பாலும் லேடீஸ் தான் வருவாங்க. அவங்களுக்கு பிரச்சனையே கரெக்ட் டைமுக்கு வீட்டுக்குத் திரும்பி போறது தான். அப்ப தான் வீட்ல போய் பிள்ளைகளையும், குடும்பத்தையும் கவனிக்க முடியும்.‌ போக்குவரத்துக்கு மட்டும் நாம ஏற்பாடு பண்ணிக் கொடுத்தோம்னா... நேரங்காலம் பத்திக் கவலைப்படாம வருவாங்க. அடிக்கடி வேலய விட்டு நிக்க மாட்டாங்க." என்று தனது யோசனயை முன்வைத்தாள்.

"சரிம்மா! இதப் பத்தி எம்பேரன் கிட்ட பேசிப் பாக்குறேன்!" தேவானந்தன் கூறிவிட்டு,  "சரி ராமா! கிளம்பலாமா?” என்று கேட்டார்.

இன்னும் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க மணி பனிரெண்டை நெருங்கியது. அவர்கள் பேச்சில் திவ்யா கலந்து கொண்டாலும், மனம் மட்டும் அலை மேல் படகாய் தத்தளித்துக் கொண்டிருந்தது.

"திவ்யா! உன் வண்டில‌ தானே வந்திருக்க?" ராமநாதன் கேட்க, சட்டென்று முழித்தவள்,

"ஆமா சர்... சர் ஒரு ஆப்ளிகேஷன், எனக்கு ஹாஃப் டே லீவு வேணும். நான் இப்படியே வீட்டுக்குக் கிளம்பலாம்னு இருக்கேன்!” தடுமாற்றம் இல்லாமல் கூற மிகவும் சிரமப்பட்டாள்.

"இதுக்கு எதுக்கும்மா லீவெல்லாம்? நீ வண்டியிலேயே அவ்ளோ தூரம் ஆஃபிஸுக்கு வந்துட்டு ,மறுபடியும் வீடு திரும்ப ரொம்ப கஷ்டமா இருக்கும். நீ நாளைக்கே ஆபிஸுக்கு வாம்மா."

தேவானந்தன் ‌கூறியதுபோல், இவர்கள் மக்களோடு மக்களாக வியாபாரம் செய்து பழகியவர்கள். கார்பரேட் கம்பெனிகள் மாதிரி மணிக்கணக்கு, நிமிடக்கணக்குப் பார்க்கும் கறார் பேர் வழிகள் கிடையாது.

"ரொம்ப தேங்ஸ் சர்! நான் கிளம்பறேன்" எனக் கூறி விட்டு இருவரிடமும் விடைபெற்றாள். நண்பர்களும் அப்பொழுதே அங்கிருந்து கிளம்பினர்.

சாலையில் வண்டியைச் செலுத்தியவளுக்கோ மனதில் பல வகையான எண்ணங்கள் வந்து நிழலாடியது. அனிச்சை செயலாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தாள்

அந்நேரத்தில் திவ்யாவை எதிர்பார்க்காத லட்சுமியும், சற்று பதற்றமாக, "என்னாச்சு திவ்யா, உடம்பு ஏதும் சரியில்லயா? இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட..." எனக் கேட்க

"ஆமா ஆன்ட்டி, இவ்ளோ தூரம் ‌வெயில்ல வண்டி ஓட்டிட்டு போயிட்டு வந்தது தலவலிக்குது. அதான் ரெஸ்டாரென்ட்ல இருந்து நேரா வீட்டுக்கு வந்துட்டேன்"

"உனக்கு தான் வெயில் சேராதுல்ல... உன் வேலைய மட்டும் பாக்க வேண்டியது தானே! ஏன் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கற?"

"எம்.டி. கூப்பிடும் போது எப்படி ஆன்ட்டி மறுக்க முடியும்?"

"அப்படி வேல பாத்தே ஆகனும்னு என்ன அவசியம் வந்தது? அந்த நிலமையிலயா உன்னைப் பெத்தவங்க விட்டுட்டுப் போயிருக்காங்க?"

லட்சுமி பேசிக் கொண்டே இருந்தாலும் கண்கள் என்னவோ திவ்யாவைத் தான் ஆராய்ந்து கொண்டிருந்தது.

'முகம் வாட்டமா இருக்கே… இது வெயில்ல வந்த வாட்டமா? இல்ல வேறெதுவுமா? பெத்தவங்க இழப்ப கூட கொஞ்சநாள்ல சமாளிச்சுத் தெளிஞ்சுட்டா... ஆனா, இவ வாழ்க்கையில முடிவெடுக்க‌ இவ்வளவு குழம்புறாளே?' என யோசித்துக் கொண்டே

"திவ்யா! சூடா காஃபி போட்டு எடுத்து வரவா? தலைவலிக்கு இதமா இருக்கும்." என வாஞ்சையுடன் கேட்டார்.

"வேணா ஆன்ட்டி... காஃபி குடிச்சா தூங்க முடியாது. ஒரு மாத்திரையப் போட்டுட்டு படுக்கறேன். தூங்கி எழுந்தா சரியாயிரும்” எனக் கூறிவிட்டு தனதறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.

வெளியிலிருந்து வந்தவளுக்கு உடை மாற்றி ஃப்ரெஷ் அப் ஆகும் எண்ணம் கூட இல்லை.

தனிமையின் போது துணைக்கழைக்கும் 'ஸ்பாட்டிஃபை' யையும் மனம் நாடவில்லை.

'வேலையைத் தொடரலாமா? வேண்டாமா? தேவானந்தன் சர் தான் பொறுப்பு என்றாலும், கண்ணனை நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம்.

‘அப்பொழுது கண்ணனின் அந்நியப் பார்வையைச் சந்திக்கும் சக்தி தனக்கு இருக்கிறதா?' எனப்‌ பலவாறாக மனம் குழப்பிக் கொண்டிருந்தது.

"நீ சரியான குழப்பவாதி... உன்னய இப்படியே‌ விட்டா எனக்கு சாதகமா யோசிக்கிறேன்னு, தேவையில்லாத முடிவத்தான் நீ எடுப்ப! உனக்கு இந்த மாதிரி அதிரடி முடிவு தான் சரி. நான் எந்த நிலையில் இருந்தாலும் உன்னை விட்டுக் கொடுக்க என்னால முடியாது." அன்று அவளவன் சொன்ன வார்த்தைகள் இன்றும் ஆழ்கடல் முத்தாய் அவள் மனதில் தளும்பிக் கொண்டிருந்தது.

"என் மகன் எனக்கு இப்படியே வேணும் திவ்யா! சில விஷயங்களை காலத்தின் கையில் விட்டுறுவோம். காலம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படலாம்." அன்று மங்கையர்க்கரசி தன்னிடம் கேட்டுக் கொண்டதும் நினைவில் வந்து ஆட்டம் காட்டியது.

மழைக்கு முன் தோன்றும் வெக்கையாய், மனதில் ஒரு வெப்பச்சலனம். வெப்பச்சலனத்தின் விளைவாய், கண்களில் கண்ணீர் மழை.

'என்ன நா செய்வே

உன்னோட சேர

என்ன நா செய்வே

வான் மேகம் தூர

என்ன நா செய்வே

என் தாகம் தீர

என்ன நா செய்வே

உன் கூட பாட

என்ன நா செய்வே

உன் கூட வாழ

என்ன நா செய்வே

உன் கூட வாழ

என்ன நா செய்வே

உன்னோட சேர....

அவளது மனம் அவளுக்காய் தன்னால் , ட்யூன் செய்தது.

***