Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 43

நினைவு-43

அவினாசி வீட்டின் மொட்டைமாடி. அதன் ஒருபுறம் சத்யானந்தனின் படுக்கையறை. வசதியான அழகான சிறியதாக தனக்கென அமைத்துக் கொண்ட குருவிக்கூடு. என்ன… கொஞ்சம் பெரிய, நவீனரக குருவிக்கூடு. தனது ரசனைக்குத் தகுந்தவாறு அமைத்துக் கொண்ட படுக்கையறை  அது.

அங்குதான் முதலிரவுக்கென்று திவ்யாவை உள்ளிருந்த படிக்கட்டின் வழியாக மேலே அழைத்து வந்து விட்டுட்டு வெளியே வந்தார் லட்சுமி.

நாள் நட்சத்திரம் பார்த்து அனைத்து சடங்கையும் நடத்திவிட தீர்மானித்து எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டனர் பெரியவர்கள். 'விவரம் புரிந்த சின்னஞ்சிறுசுகள் சூழ்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்வர்' என்ற நம்பிக்கையில் அனைத்தும் நிகழ்ந்தேறி வருகிறது.

'எந்த ஏற்பாடும் இல்லாமல் அறை இயல்பாக இருக்கட்டும்' என அன்னையர்களிடம் மகன்  கூறிவிட, அதற்கு பரிசாக விஷ்வாவின் முறைப்பையும் பெற்றுக் கொண்டான்.

“வாழ்க்கையில ஒருநாள்... இதெல்லாம் அனுபவிக்கணும் மாப்ள!” என்று கன்னத்தில் இடிக்காத குறையாக கூறிவிட்டுச் சென்றான் நண்பன்.

அறையில் விட்டுவிட்டு லட்சுமி வெளியே சென்றதும், திவ்யா அறையில் பார்வையை ஓட்டினாள். பார்வைக்கு மிகவும் நேர்த்தியாக இருந்தது. ‘இதெல்லாம் நமக்கு சுட்டுப் போட்டாலும் வராதே’ என நினைத்துக் கொண்டாள்.

மத்தியில் பெரியபடுக்கை, இடப்புறம் கார்னர் ஷோஃபா ஒன்று திண்டோடு மூலையில் இருந்தது. வலப்புறம் கண்ணாடியுடன் கூடிய வார்ட்ரோப். அதை ஒட்டி குளியலறை. ஒரு மூலையில் விளக்கோடு கூடிய மேஜை ஒன்று. கீழிருந்து படியேறி உள்ளே வரும் இடத்தில் சிட்அவுட்.

அறையின் சுவற்றில் ஆங்காங்கே ஆலிலை கண்ணன், ஊஞ்சலாடும் ராதாகிருஷ்ணன் என ரசனையான சில தஞ்சை ஓவியங்கள் அலங்கரித்தன. அறைக்கு வெளியே வெட்டவெளியாக மொட்டைமாடி. அதில் ஸ்டாண்டோடு கூடிய நீள ஊஞ்சல் ஒன்று.

ஊஞ்சலில் படரவிடப்பட்ட மல்லிக்கொடி. அன்றலர்ந்த மல்லியின் மணம் காற்றில் ஏகமாகப் பரவியிருந்தது. அதை பார்த்துக் கொண்டே வெளியே வந்தாள். வெளிக்காற்று முகத்தில் இதமாக உரசிச் சென்றது. வளர்பிறை நிலா வெளிச்சம் மெலிதாகப் பரவியிருந்தது.

சத்யாவும் அவள் வெளிவருவாள் என்றுதான், கைகளைக் கட்டிக் கொண்டு, மாடி கைப்பிடிச் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவன், அவளையே புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்தவளின் விழிகள் ரசனையாக சட்டென விரிந்தது. இதுவரை ஃபார்மல், கேசுவல் உடைகளில் பார்த்தவனை இன்று ஷார்ட்ஸும், ஸ்லீவ்லெஸ் பனியனுமாக பார்க்கிறாள்.

மேலே வந்து அப்பொழுது தான் குளித்துவிட்டு மாற்றியிருப்பான் போல. மெலிதாக சோப்பின் வாசம் காற்றில் கலந்திருந்தது. உடற்பயிற்சியிலும் அசராத உழைப்பிலும் முறுக்கேறிய புஜங்களும், உரமெறிய தோள்களும். சலசலத்த காற்றிற்கு இயைந்து ஆடிய கேசமும் என நிலா வெளிச்சத்தில் மூச்சுவிடும், செதுக்கிய சிற்பமாய் நின்று கொண்டிருந்தான்.

''என்னதான் சைட் அடிக்கலாம்னு பெர்மிஷன் கொடுத்தாலும் இப்படியா, பாக்குறது?" என சிரித்தவாறே கேட்க,  பார்வையை விலக்க முடியாமல், வேறுபுறம் மாற்றிக் கொண்டாள்.

"என்னைய சைட்டடிக்கிற ஏகபோக உரிமை உனக்கு மட்டும் தான்னு, கழுத்துல மூனு முடிச்சு போட்டு பாத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன். வெக்கப்படாம பாரு!" என்று கிண்டலடித்தான்.

"என்னயக் கல்யாணம் பண்ணிட்டு நீங்க தான் ரொம்பக் கஷ்ட்டப்பட போறீங்க." என்றாள் அவன் பக்கமாகத் திரும்பாமலே வறண்ட குரலில்.

“இப்படியொரு கல்யாண வாழ்த்தா! நாட் பேட்... அக்செப்டட்!” என கூறிவிட்டு சிரிக்க, சரேலெனத் திரும்பிய அவள் முகம் சட்டென கூம்பியது.

"ஹேய்ய்! நான் விளையாட்டாதான் சொன்னேன்." என்றான்.

"ஆனா, நான் உண்மையைத் தான் சொன்னேன்... என்னைப் போல ஒரு மன அழுத்தக்காரிய சகிச்சுட்டு பார்த்து பார்த்தே நீங்க உங்க சந்தோசத்தை புதைச்சுக்கப் போறீங்களே... அதை நினைச்சு தான் என் மனசு தாங்கல...” என்று வருத்தமாய் அவள் கூற,

"என் பொண்டாட்டிய நான் சகிச்சுகிறேன். இதுல உனக்கென்ன  கஷ்டம்?" என்றான் அவனும்.

"என்னோட இந்த நிலைமை வாழ்நாள் முழுக்க என்னை தொடருமோன்னு பயமா இருக்கு கண்ணா!” என்றாள் தலை குனிந்தவாறே நிமிர்ந்து அவன் முகம் பார்க்காமல்.

"தியா!" என்ற மென்மையான அழைப்பைக் கேட்டு குனிந்திருந்தவள் நிமிர்ந்தாள். இரு கைகளையும் விரித்து வாவென தலையாட்டி அழைக்க, தாவி வந்து காலைக்கட்டிக் கொள்ளும் குழந்தையென ஓடிச்சென்று கைகளுக்குள் அடங்கிக் கொண்டாள் தவிப்போடு. எத்தனை நாள் ஏக்கம் இது. அழகாய் அடங்கிக் கொண்டாள் ஆடவன் கைவளைக்குள்.

"ஏன் கண்ணா? எனக்காக இவ்ளோ மெனக்கெட்டு இருக்கீங்களே?'' கண்கள் நீர்பூக்க, தன்னை நிமிர்ந்து பார்த்துக் கேட்டவளை,

"இதுக்காகத் தான்." என்றான் தன்னைக் கட்டிக்கொண்டு நின்றவளிடம்.

"என்ன?" என்பதுபோல் அவள் புருவம் சுருக்க,

“நான் யாருன்னு தெரியாத காலத்துல என்னை அரவணைச்சு என்னை நம்பி வாழ வந்த உன்னை எப்படி தியா விட்டுக் கொடுப்பேன் சொல்லு?” என அவளை மென்மையாக அணைத்துக் கேட்டவனின் நெஞ்சில், தலைவைத்துக் கொண்டாள்.

மெலிதாக முதுகு குலுங்கியது. ஆதரவாக தடவிக் கொடுத்தான். அவளது பரிதவிப்பு புரிந்தது. உணர்ச்சிவசப்படுகிறாள் என்று தெரிந்தது.

அவளது மனநிலையை எப்படியாவது மாற்ற வேண்டுமென்று உத்தேசித்து, “ஆனா உனக்காக நான் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடலடி... இப்பவும் ஒன்னும் செய்யாம இருந்தா எப்படி?” என்றான் கேலிபோல்.

அதில் அவளது அழுகை மெதுவாய் கட்டுப்பட்டு அவனை ஆராய்ச்சியாக நோக்கியது. இனி பேசித்தான் ஆகவேண்டும் என்ற நிலைமையில் அவனும் என்ன செய்வான்?

“நாம நல்லா பிரண்ட்சா இருப்போம்டா... நாள் நட்சத்திரம் சொல்லி நம்மை தனியா விட்டாலும் இன்னும் கொஞ்சநாள் தள்ளி இருப்போம் சரியா?”

“இதுவும் எனக்காகத் தானா கண்ணன்?” என்று அவள் கேட்டதும் சட்டென்று மௌனமானான். ‘எல்லாம் உனக்காக’ என்று சொல்லி அவளை சங்கடப்படுத்த அவனும் விரும்பில்லை என்பதை அவளுமே தெரிந்து கொண்டாள்.

“நமக்காக... நம்ம வாழ்க்கைக்காக!” என்று அர்த்தமாய் சிரிக்க,

"உங்களை புரிஞ்சுக்க முடியுது. நான் காத்திருக்கத் தயார், ஆனா ஒரு ஆம்பளையா உங்களுக்குள்ள இருக்கிற  ஆசை... வீட்டுல இருக்கிற பெரியவங்க?" என்று தயங்கி நிறுத்தினாள்.

"ம்ம்... நீ சொல்ல வர்றது புரியுது. எனக்கு முன்னாலேயே உன்னை நல்லவிதமா புரிஞ்சுகிட்டவங்க... அதனால நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்போம். நாம நடிக்க வேணாம். இந்த அறைக்குள்ள நடப்பது நாம சொல்லாம வெளியே  தெரியப் போறதில்லை. அது போதுமே தியா?" என்று கேட்டான்...

‘ம்ம்... பக்காவாகத்தான் யோசித்துப் பிளான் செய்திருக்கிறான்’ என்று தோன்ற திவ்யாவிற்கு சிரிப்பு கூட வந்தது. அடக்கிக் கொண்டு, "ம்ம்... நீங்க சொல்றதும் சரிதான். அப்படியே இருப்போம்" என்றாள்.

“எப்படி இப்படியேவா?” என்று விசமமாய் கேட்க, அப்பொழுதுதான் அவனைக் கட்டிக்கொண்டிருப்பது உரைக்க, “உங்களை...” என பல்லைக் கடித்தாள்.

 "ஹஹா... இப்ப தான் என் தியாக்குட்டி ஃபர்ஸ்ட்நைட் மோடுக்கே ட்யூன் ஆகுறா... கம்ப்ளீட் பண்ணு, என்னை... " எனக் கேலி செய்ய, மெதுவாக அவன் கைகளை விடுவித்தாள்.

ஆனால் அவன் விடுவதாக இல்லை. மீண்டும் அவளது கைகளை எடுத்து தனது கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, இடையோடு கட்டிக் கொண்டான். “இப்ப போய் தூங்கலாம். ஒரே அலுப்பா இருக்கு." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான்.

வாவென்று கைநீட்டி அழைக்க சிறுபிள்ளையென எந்த உணர்வும் இன்றி, ஓடிவந்து கைக்குள் அடங்கியவள், இன்னும் சிறுபிள்ளையாகத்தான் தெரிந்தாள் அவனுக்கு.

அவளிடம், தனக்காக இவ்வளவு செய்தவனுக்காக, தானும் ஏதாவது செய்தாக வேண்டுமே என்கிற துடிப்பைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. மணாட்டியின் கண்களில் மையல் தெரியவில்லை மணாளனுக்கு.

ஒருவித மோனநிலையில் அவளை இறுக்க கட்டிப்பிடிக்க, மூச்சிற்கு தவித்துப் போனாள் திவ்யா. அவளின் உஷ்ண மூச்சின் சத்தம் வேகமாய் மார்பில் எதிரொலிக்க, சடுதியில் அரண்டு, "அடியேஏஏஏய்ய்…" என்றழைத்து, அவளை விட்டு இரண்டடி நகர்ந்தவன், திரும்பிப் பார்த்து அடிக்குரலில் அழைத்தான்.

அவளை உலுக்கி எடுத்து  "மூச்ச நல்லா இழுத்து விடுடி... மூச்சு அடச்சுக்கப் போகுது." என்று அதட்டல் போட, அப்பொழுதுதான் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டு ஆசுவாசப்பட்டாள்.

"லேசா உரசினதுக்கே, மூச்சு நின்னு போச்சு. இதுல நீ எல்லாம் சமாளிப்பான்னு நான் கனா கண்டு என்ன செய்ய?"  என கேட்டுவிட்டு நகர்ந்தான்.

அடிவயிற்றில் இனம்புரியா உணர்வில், ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பரபரவென பிரசவிக்க, மூச்சு தட்டுத்தடுமாற, சென்றவன் முதுகையே தவிப்பாய்ப் பார்த்தாள்.

'ஐயோ, தியா! இப்படியா உணர்ச்சிவசப்பட்டு மனசில இருக்கிற ஆசைய வெளிப்படுத்துவ... மானத்தை வாங்கிட்டயேடி!' என்று மனசாட்சி கொட்டு வைக்க,

'சரிதான் போ.., என் புருஷன் கிட்ட நான் வழிஞ்சுட்டு நிப்பேன், உனக்கென்ன?' என அசால்ட்டாய் தட்டிவிட்டாள். 

திரும்பி நின்றவன், சிரித்துக்கொண்டே, மெலிதாக விசிலடித்து அழைக்க, அவளும் பாவமாய்த் திரும்பி பார்க்க, சத்யாவிடம் இருந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு.

"இப்ப தான்டீ எனக்கு உயிரே வந்துச்சு... கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்டடி! " என்றவன், அவள் முகத்திலிருந்து பார்வையை திருப்பி, "வெறும் உடல்கள் இணையுறது தாம்பத்தியம் இல்லை தியா... காதலும் நமக்கான புரிதலும் ஒரே நேர்க்கொட்டுல இணையணும். அப்படிப் பார்த்தா நமக்குள்ள எப்பவோ தாம்பத்தியம் தொடங்கியாச்சு! அதுதான் இனிமை. என் அப்பா அம்மாவோட காதலையும் புரிதலையும் பார்த்து வளர்ந்தவன் நான். வலுக்கட்டாயமான, ஒரு விபத்து மாதிரி நமக்குள்ள உறவு வேண்டாம்னு நினைக்கிறேன். வேற எதுவும் தவறா நினைக்காதே ப்ளீஸ்!" என்றான் கெஞ்சுதலாக.

"இதுக்கு நீங்க என்கிட்டே சொல்லணும்னு அவசியமே இல்ல கண்ணா... இதையும் ஒரு அனுபவமா கடந்து வருவோம். ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்க கிடைச்ச சந்தர்ப்பமா இதை நினைச்சுக்கலாமே!”

"லவ் யூ டி... ரொம்ப தாங்க்ஸ்"

"சின்னப் பையனா இந்த தாங்க்ஸ், ப்ளீஸ் எல்லாம் சொல்லக்கூடாது கண்ணா!” என்று கூறிவிட்டு தலை சாய்த்து சிரித்தாள் திவ்யா.

“ஆர் யூ ஓகே தியா?”

“டபிள் ஓகே!” என்று கண்சிமிட்டி சிரிக்க, அந்த சிரிப்பு சத்யாவையும் தொற்றிக் கொண்டது.

"சரி, இப்போ நான் எங்கே படுக்கறது?" என்று திவ்யா கேட்க,

“இவ்ளோ பெரிய கட்டில் இருக்கு, பத்தாதுக்கு நான் இருக்கேன். வா... பூப் போல உன்னை தாங்கிக்கிறேன்!” என்று அவன் மார்பை தட்டிக் காண்பித்தான்.

"ஓகே டன் கண்ணா!" என்று தோள்களைக் குலுக்கி சிரித்தவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

பிறகு திவ்யாவின் நகைகளை கழட்டி லாக்கரில் வைக்க உதவினான். அவனே கட்டிலில் இருந்த தலையணைகளைத் தட்டிப் போட்டான்.

பாத்ரூம் எங்கே என்று கேட்டு போய்விட்டு வந்து கட்டிலில் உறங்க எத்தனித்தவள், "குட்நைட் கண்ணா!" என்றாள்.

"குட்நைட் சரி... இந்த பாலை ஏன் வேஸ்ட் ஆக்கணும்? ஃபர்ஸ்ட்நைட்ல புருஷன் பொண்டாட்டி தான் பாலைக் குடிச்சு வாழ்க்கையைத் தொடங்கணும்னு ஏதாவது சட்டமிருக்கா என்ன?" என்று கேட்க, திவ்யா அவனைப் புரியாமல் பார்த்தாள்.

"இல்ல தியா... இந்த பாலைக் குடிச்சு நம்மளோட நட்பு பயணத்தைத் தொடங்குவோமே?" என்றான்.

குறும்பாக தனது நெற்றியில் தட்டிக் கொண்டவள் "ஷ்ஷ்... யப்பா சாமி... முடியலை. பால் குடிக்கிறதுக்கு இவ்வளவு டயலாக்கா? உங்க கூட இனி ஒரே ரூம்ல வேற இருக்கணும். கடவுளே நீதான் என் காதுக்கு நிறைய பவர் குடுக்கணும்" என்று விட்டத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டவளைக் கண்டு வாய்விட்டு சிரித்தான் சத்யானந்தன்.

"இது எனக்குத் தேவைதான்" என்றபடி அவனே பாலை டம்ளரில் ஊற்றி எடுத்து வந்து கொடுத்தான்.

திவ்யா குடித்து விட்டு கொடுத்ததும் எடுத்துச் சென்று வைத்துவிட்டு வந்து, "குட்நைட் தியாக்குட்டி" என்றபடி அவனது இடத்தில் படுத்தான்.

சற்றுப் பொறுத்து, "தூங்கிட்டியா தியா?" என்ற சத்யாவின் குரல் கேட்டு, "இல்ல சொல்லுங்க" என்றாள்.

"இல்ல... உனக்கு ரெஸ்ட் கொடுக்கலாம்னு நினைக்கிறேன், வீட்டுல உனக்கு போர் அடிக்காம இருக்க எதாவது கோர்ஸ் எடுத்து பண்றியா?” என்று கேட்டான்.

படுத்திருந்தவளுக்கு திக்கென்றது. ‘இதென்ன புதுக்கதை? கொஞ்சம் விட்டா என்னை முழுநேர நோயாளியாக்கிடுவாங்க போலிருக்கே! நமக்கு பிடிக்காததை பிடிச்சு செய்யச் சொல்றாங்களே!’ என்ற குழப்பத்துடன் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கினாள்.

"என்னடி பதில் சொல்லாம முழிக்கிற?”

"படிக்க மட்டுமே செய்யணுமா கண்ணா!” என்றாள் தயக்கமாக.

"வேறன்ன செய்யப்போற?”

"ம்ம்..." என்றவள் போர்வையை இழுத்து தலைவரை மூடிக்கொண்டு, "எனக்கு பிடிச்ச வேலையைச் செய்யப்போறேன்” என்றாள்.

"அப்படியென்ன வேலை?”

"சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குற வேலை"

"அடிப்பாவி!

"தூங்குங்க கண்ணன்... விக்ரமன் படத்து ஹீரோ மாதிரி பக்கம் பக்கமா பேசுறீங்க... கேட்குற என் காது வலிக்குது" என்று நக்கலடித்தாள்.

"அடிப்பாவி, நீ இவ்வளவு பேசுவியா?" என்றவன் மீண்டும் மனம் விட்டுச் சிரித்தான்.

இருவரின் மனதிலும் இனம்புரியாத நிம்மதி. அந்த இரவுக்கான தேடல் உறவாக இல்லாமல் நட்பாக முடிந்ததில் இருவருக்கும் வருத்தமில்லை.

குறும்பு பேசிவிட்டு தலை வரை மூடிக்கொண்டு படுத்திருந்தவளைக் கண்டு புன்னகைத்துவிட்டு அதே மனநிலையோடு நிம்மதியாக கண்மூடினான்.