Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 4

நினைவு-4

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா

யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

நிழற்படத்தை எடுத்து தன்னவனின் முகம் வருடியவளின் மனம் நிஜம் உணர, கரை தாண்டத் தொடங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் திவ்யா.

அவள் சகஜமாவதற்கும் நொடிநேரம் பிடித்தது. பின்னர் எப்பொழுதும் போல் புகைப்படத்திற்கு ‘பை’ சொல்லி மெல்லிய முத்தம் பதித்து முடித்து, தன்னறையை விட்டு வெளியே வந்தாள்.

அந்த காலை நேரத்தின் வழமையாக பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்கு தயாராகி விட்டு, சாப்பிடுவதற்கு வந்து அமரத் தொடங்கி இருந்தனர்.

சதிஷோடு சேர்ந்து திவ்யாவும், அவர்களுக்கெல்லாம் தட்டு எடுத்து வைக்க, தண்ணி வைக்க என்று சிறுசிறு உதவிகளை செய்ய ஆரம்பித்தாள்.

அங்கு வந்த லட்சுமி, "திவ்யா! உனக்கு டைமாச்சு பாரு! நீ முதல்ல சாப்பிட்டுக் கிளம்பும்மா! நானும் அங்கிளும் இதெல்லாம் பாத்துக்கறோம்." என்று வந்த நிற்கவும், 

"சரி ஆன்ட்டி!" என்றவாறு தட்டில் தனக்குத் தேவையானவற்றை எடுத்து‌ வைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.

இட்லியைப் பிட்டு, சாம்பாரில் தோய்த்து வாயில் வைத்தவள், "ஆன்ட்டி, இன்னைக்கு சாம்பார் வச்சது பாப்பாத்தி ஆன்ட்டியா?" என்று கேட்டாள்.

"எப்டிக்கா... ஒரு வாய் வச்சவுடனே யார் சமையல்னு கரெக்டா சொல்லிர்றே?" சதீஷ் ஆச்ச்சரியத்துடன் கேட்க,

"அதுவாடா சதீஷு? நம்ம மூனு ஆன்டிகளோட சமையலும் ஒவ்வொன்னும் ஒவ்வொரு கைப்பக்குவம். ஒன்னையொன்னு அடிச்சுக்கவே முடியாதுடா." என்று கூறியவள்,

"பாப்பாத்தி ஆன்ட்டி! இன்னைக்கு சாம்பார் சூப்பர்! ரெண்டு இட்லி சேத்து உள்ள‌ போச்சு." என அவரது சமையலுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க,

"என்ற ஊட்டுக்காரரு கூட இப்படி சொன்னது இல்ல கண்ணு.... நீ சாப்புடறப்ப எல்லாம் சொல்லிடுற கண்ணு!" என்றார் பூரிப்புடன் திவ்யாவைப் பார்த்து கூறினார் பாப்பாத்தி.

"அவரு எப்படிச் சொல்லுவாரு? அவருக்குத்தான் உண்மை தெரியும்ல?" சதிஷ் கேலியில் இறங்க,

"டேய் சதிஷ்! சமைக்கறவங்க, நம்ம சமைக்கறத எல்லாரும் நல்லா சாப்பிடணும்னு தான்டா நினைப்பாங்க...

ஏதாவது ஒன்னு ரெண்டுநாள் அப்படியிப்படி தான் இருக்கும். நல்லா இருக்கும் போதெல்லாம் கம்னு திங்க வேண்டியது. என்னைக்காவது ஒருநாள் உப்பு உரப்பு கூடியிருச்சுனா காச்மூச்சுனு கத்த வேண்டியது. ஒருநாள் சூப்பரா இருக்குதுனு சொல்லிப்பாரு... மறுநாள் ‌டபுள்‌ டேஸ்ட்டா உனக்கு கிடைக்கும்." திவ்யா உற்சாகத்துடன் கூறவும்,

"சூப்பரா பேசுறக்கா... யாருகிட்ட கத்துக்கிட்ட?" அவளைப் பார்த்து வினாவினான் சதீஷ்.

"எங்க அப்பா கிட்ட இருந்து தான். அவரு எங்கம்மா சமையல ஒருநாள் கூட குறை சொன்னதில்லை."

"ஆன்ட்டி அவ்ளோ சூப்பரா சமைப்பாங்களா க்கா?!"

"ஆமாடா! ஆனா... அதைவிட சூப்பரா எங்கப்பா எங்கம்மாவை லவ் பண்ணினாருடா!" பேசிக்‌கொண்டே சாப்பிட்டு முடித்தவள், தனது ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

லட்சுமியிடமும், சண்முகத்திடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள். கேட் அருகே வந்தவுடன் ,தனது கைபேசி அழைப்பு விடுக்க, எடுத்துப் பார்த்தவள், தொடுதிரையில் எம்.டி.என்றிருக்க… அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ! குட் மார்னிங் சார்! சொல்லுங்க சார்!”

"குட் மார்னிங் திவ்யா! கிளம்பிட்டியாம்மா?" எதிர்முனை கேள்வி கேட்க,

"இதோ! இப்பத்தான் சார் ‌வண்டியை ஸ்டார்ட் பண்றேன்!"

"சரிம்மா! இப்ப நீ ஆஃபிஸுக்கு போக வேண்டாம். *** ரெஸ்டாரன்ட்க்கு வந்துருமா! தேவானந்தன்... அதாம்மா என் ஃபிரெண்டு நம்ம கம்பெனியப் பத்தின சில டீடெயில்ஸ் கேட்டிருந்தாரு. நீயும் கூட இருந்தா கொஞ்சம் உதவியா இருக்கும். ஒன்னும் பயப்படத் தேவையில்லம்மா. ஓபன் ரெஸ்டாரன்ட் தான்மா."

"ஐயோ! என்ன சார்? நீங்க ‌இருக்கும் போது எனக்கென்ன‌ பயம். நேரா அங்கேயே வந்துடுறேன் சார்." என‌ அழைப்பை துண்டித்தாள்.

மீண்டும் வீட்டிற்குள் சென்று சண்முகத்திடம் தகவலைத் தெரிவித்து விட்டு ரெஸ்டாரன்ட் நோக்கி வண்டியை செலுத்தினாள்.

சென்றவள் மீதே பார்வையைப் பதிந்திருந்த மனைவியிடம், "என்ன லட்சுமி. கிளம்பிப் போற திவ்யாவையேப் பாத்துட்டு இருக்க?" என்ற கணவனிடம்,

"இன்னும் எத்தனை நாளைக்கு, இந்தப் பிள்ளை இப்படியே இருக்கும்?" என்று கவலையுடன் விசாரித்தார் லட்சுமி.

"ஏன்! அந்தப் பிள்ளைக்கு என்ன குறைச்சல்?"

"குறைச்சல்னு ஒன்னும் இல்லீங்க. எல்லாம் அதிகப்படியா இருக்கு. அதுதான் பயமாவும் இருக்கு. குச்சிக்கு சேலை கட்டினாலே சுத்தி சுத்தி வருவானுக... விக்ரகம் மாதிரி இருக்கா. தங்கச் சிலையாட்டம், இவ வெளிய போயிட்டு வர்ற வரைக்கும் மனசு திக்திக்னு இருக்குங்க."

"எனக்கு மட்டும் அந்த பயம் இல்லைனு நினைக்கிறியா?" எனக் கேட்டு சண்முகமும் பெருமூச்சு விட,

"பயந்தா மட்டும் போதுமா? உரியவங்ககிட்ட ஒப்படைச்சுட்டா நிம்மதியா இருக்கலாமில்ல... இன்னைக்கு வந்ததும் இதைப் பத்தி பேசணும்ங்க! இப்படியே விட்டுட்டு இருக்க முடியாது." எனக் கூறிவிட்டு உள்ளே சென்ற மனைவியைப் பார்த்தவர்,

'இவ பயப்படுறதும் சரி தான். திவ்யா பயப்படுறதும் சரி தான். இதுல யார் பக்கம் பேசறதுனு தெரியலையே!' என எண்ணியவாறே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் வேலைக்கு ஆயத்தமானார்.

***

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்திருந்த இராமநாதன் குறிப்பிட்டிருந்த ரெஸ்டாரன்ட்டின் பார்க்கிங் ஏரியாவில் தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றாள்.

குரோட்டன்ஸ் செடி வகைகளும், வெறும் நிழலுக்காகவும் அழகுக்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்ட நெடிந்துயர்ந்த பெயரே தெரியாத மரவகைகளுடன் குளுமையாக காட்சி தந்தது.

திறந்த வெளிப்பகுதியில் குடில் போன்ற அமைப்புடன் நான்கு இருக்கைகளுடன் கூடிய ஒரு மேஜை என்ற அமைப்பில் பல குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன

மற்றொரு புறம் ஒரு உயர்தர ரெஸ்டாரன்ட்டிற்கே உரிய செயற்கை அருவியுடன் கூடிய நீரூற்றுகளும் அதில் அழகாக நீந்தும் மீன்களும் ஆங்காங்கே நளினமாக அழகுற உருவாக்கப்பட்ட சிலைகளுமாக காட்சி அளித்தது

அவற்றை எல்லாம் பார்வையிட்டவாறே, ''இவங்க எந்த டேபிள்னு தெரியலியே?' என எண்ணியவாறே தனது பார்வையை சுழற்றியவள், ராமநாதன் அமர்ந்திருந்த மேஜை கண்ணில் பட அவரை நோக்கிச் சென்றாள்.

"எக்ஸ்கீயுஸ் மீ சார்! குட்மார்னிங்!" என்றதும் அவர் முன் நின்றவளை நிமிர்ந்து பார்த்த ராமநாதன்,

"வந்துட்டியாம்மா! வந்து உட்காரும்மா!" என திவ்யாவுக்கு ஒரு இருக்கையைக் காட்டினார்.

நன்றி சொல்லி விட்டு அமர்ந்தவள், "சாரி சார்! கொஞ்சம் லேட்டாயிடுச்சு!" எனக் கூறவும்,

"பரவாயில்லைம்மா... நானே கிளம்பிட்டு தானே உன்னைக் கூப்பிட்டேன். தேவா ஃபோன் பண்ணினதும், நான் மட்டும் தான் வரலாம்னு நினச்சேன். அப்புறம் தான் உன் ஞாபகம் வந்தது. உங்க ரெண்டு பேரையும் அறிமுகப்படுத்தி வச்சுட்டா, அவருக்குனு தனியா ஒரு செகரட்ரிய அப்பாயின்ட் பண்ணிக்கிற வரைக்கும் நீ அவர்கூட இருந்து பாத்துப்பேன்னு தான் உன்னையும் வரச் சொன்னேன்."

"அது தானே சார், என் வேலையே... நீங்க சொல்லணுமா?"

இவர்கள் பேசிக் கொண்டிருக்க, தேவானந்தன் வருவதைக் கண்ட ராமநாதன், எழுந்து சென்று சிறு பிள்ளையைப் போல் தனது நண்பனை கை பிடித்து அழைத்து வந்தார்.

நண்பனைக் கண்ட குதூகலம் அவர் முகத்தில். அதற்கும் குறையாத சந்தோஷம் தேவானந்தனிடமும் தென்பட்டது.

இந்த வயதிலும் தனி கம்பீரம் கொண்ட தோற்றம். முகத்தில், ‘நான் எல்லாம் கண்டவனாக்கும்!’ என்ற அனுபவத்தின் சாயல். அந்த அனுபவம் தந்த நிதானமான பார்வை.

இந்த சந்திப்பை தேவானந்தன், இராமநாதன் கம்பெனியிலேயே நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று அவரை நெருடுகிறது. இன்னும் முழுமையாக கம்பெனி பரிமாற்றம் நடைபெறாத நிலையில், அங்கு கால் வைக்க அவருக்கு விருப்பம் இல்லை.

இன்னும் சின்ன சின்ன ஃபார்மாலிட்டிஸ் முடிக்க வேண்டியுள்ளது. நண்பனின் எண்ணமறிந்த ராமநாதனும், அவரை வற்புறுத்தவில்லை.

சந்தித்துக் கொண்ட நண்பர்கள் இருவரும் நலம் விசாரிப்பில் தொடங்கி, குடும்பம், பிசினஸ் என சுற்றம் மறந்து பேச ஆரம்பித்து‌ விட்டனர். தொழில் ரீதியாக இருவரும் பிரிந்த பிறகு சந்தித்துக் கொள்ளாமல் இல்லை.

பிசினஸ் மீட்டிங், பொது விசேஷங்கள் என சந்திக்கும் பொழுது பொதுவான நல விசாரிப்புகள் இருந்தது தான். ஆனால் தனிப்பட்ட முறையில் இவ்வாறு சந்தித்துக் கொண்டது இல்லை. சுற்றம் மறந்து பேசும் நண்பர்களையே திவ்யா பார்த்துக் கொண்டிருந்தாள்.

வயது, தகுதி, கௌரவம் என அனைத்தையும் மறந்து தனது இயல்பை வெளிக்கொணரும் சக்தி தோழமைக்கு மட்டுமே உண்டு .

ராமநாதனும், நண்பனைக் கண்ட மகிழ்ச்சியில், திவ்யா இருப்பதையே மறந்து விட்டார். சட்டென்று ஞாபகம் வந்தவராக, "அடடே! தேவா! உன்னைப் பாத்த சந்தோசத்துல, இந்தப் பொண்ண மறந்துட்டேன் பாரு. இது திவ்யா. நம்ம கம்பெனில அக்கவுண்ட்டன்ட்டா இருக்கு." என அறிமுகப்படுத்தி வைக்க,

சட்டென்று எழுந்து திவ்யா, கை குவித்து வணக்கம் வைத்தாள். அடுத்து இவர்தான் எம்.டி என்கிற பதட்டம் வேறு. 

பதிலுக்கு வணக்கம் கூறிய தேவானந்தன், "உட்காரும்மா! என்ன சாப்பிடுறே?" எனக் கேட்க,

சற்று சகஜமாகியவள், "எனக்கு காஃபி மட்டும் போதும் சார். நான் இப்ப தான் சாப்பிட்டு வந்தேன்." மெதுவாக பதிலளித்தாள்.

"சரிம்மா!" எனக் கூறிவிட்டு நண்பனின் விருப்பத்தைக் கேட்டு இருவருக்கும் உணவு வகைகளை‌ ஆர்டர் செய்தார்.

"அப்புறம் தேவா... எப்ப கம்பெனிக்கு வந்து பொறுப்பெடுத்துக்க போற?" என்று ராமநாதனே பேச்சை ஆரம்பிக்க,

"அடுத்த வாரம் ஒரு நல்லநாள் வருது ராமா... அன்னைக்கே சின்னதா நம்ம அளவுல மட்டும் ஒரு பூஜைக்கு ஏற்பாடு பண்ணிட்டு பொறுப்பெடுத்துக்கறேன்.  அதுக்கப்புறமா அஃபிஷியலா நம்ம பிசினஸ் வட்டாரங்களுக்கு தெரியப்படுத்திக்கலாம்!"

"நீ சொல்றதும் சரிதான் தேவா... உன் இஷ்டப்படியே செய்! என்னோட பிஏ மூனு‌ மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகி போயிட்டாங்க. கொஞ்சநாள் தானேன்னு நான் பிஏ அப்பாயின்ட் பண்ணிக்கல.

அடுத்து வர்றவங்க அவங்களுக்குத் தகுந்த மாதிரி செலக்ட் பண்ணிக்கட்டும்னு விட்டுட்டேன். அந்தப் பொறுப்பையும் திவ்யா பொண்ணுதான் பார்த்துக்குது. அதனால தான் உனக்கு அறிமுகப்படுத்தலாம்னு வரச்சொன்னேன். பிஏ செலக்ட் பண்ணிக்கிற வரைக்கும் திவ்யா உனக்கு உதவியாக இருக்கும்." நண்பன் கூறியதைக் கேட்ட தேவானந்தன்,

"வேலைக்கு ஆள் செலக்ட் பண்றதெல்லாம் என் பேரனுடைய‌ வேலை ராமா! அதுல நான் தலையிட மாட்டேன். பொறுப்பெடுத்துக்கறது மட்டும்தான் என் வேலை. நிர்வாகப் பொறுப்பு அவனோடது."

"உன் பேரன் என்ன சொல்றான் தேவா?" என ராமநாதன் கேட்க,

"அவனுக்கு முதல்ல இஷ்டமில்லை தான். அப்புறமா நான் எடுத்துச் சொல்லவும் அம்மாவும் பையனும் புரிஞ்சுக்கிட்டாங்க ராமா!"

"நம்மளை புரிஞ்சுக்கற உறவுகள் கிடைக்கிறதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும் தேவா! அதுக்கும் வரம் வாங்கி வந்திருக்கணும்” என்று பெருமூச்செறிந்தார்.

"அதுல நான் எப்பவுமே கொடுத்து வச்சவன் தான் ராமா!"

"உன் அருமை என் பிள்ளைகளுக்குத் தான் தெரியலை. ஆனா நீ வெளியேறிய பிறகு தான் அவங்களுக்கும் புரிஞ்சுது. நம்ம அப்பா முதல் போட்டதால மட்டுமே இந்த கம்பெனி வளரல... உன் உழைப்பும் முக்கிய காரணம்னு. அதுவும் நல்லதுக்கு தான் தேவா! இல்லைனா உன் திறமை முழுசும், நன்றிக் கடன்ங்கிற பேருல இந்த ஒரு கம்பெனிக்குள்ளேயே அடங்கிப் போயிருக்கும். உன்னோட வளர்ச்சியைப் பாத்து எவ்வளவு பெருமைப்பட்டிருக்கேன் தெரியுமா?"

நண்பனைப் பார்த்த சந்தோசத்தில், தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்த ராமநாதனைப் பார்த்த தேவானந்தனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

💕