Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 3

நினைவு-3

பரம்பரை சொத்து முழுவதும் இழந்த நிலையில் தேவானந்தனின் தந்தையும் இயற்கை எய்திவிட, இதற்குமேல் யாரிடமும் வேலை கேட்கவும், உதவி கேட்கவும் கௌரவம் இடம் கொடுக்கவில்லை.

அப்பொழுது தான் மகன் ரவியானந்தனும் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். அத்தகைய கையறு நிலையில் தான், உடுக்கை இழந்தவனுக்கு கையாக வந்தார், பள்ளித் தோழரும், குடும்ப நண்பருமான இராமநாதன்.

பணமாக உதவி செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனத் தெரியும். எனவே தான் தேவானந்தனை ஒர்க்கிங் பார்ட்னராகக் கொண்டு இருவரும் தொழில் தொடங்கினர்.

தேவானந்தன் என்றைக்கும் உடல் உழைப்பிற்கு  தயங்கி நின்றதில்லை. ஏற்கனவே கமிஷன் மண்டி நடத்திய அனுபவம் கைகொடுத்தது. எங்கெங்கு நேரடியாகச் சென்றால் குறைந்த விலைக்கு பொருட்களை கொள்முதல் செய்யலாம் என நன்றாகத் தெரிந்து வைத்திருந்தவர், அதைக் கொண்டே தொழிலை நடத்தத் தொடங்கினார். அது ஏறுமுகமாகவே அமைந்தது.

இராமநாதன் அலுவலக உள்வேலைகளைப் பார்த்துக் கொள்ள, தேவானந்தன் வெளியே சுற்றித் திரிந்தார். நெல், மஞ்சள், வேர்க்கடலை, எள் முதலியவற்றை விவசாயிகளிடம் சென்று நேரடியாக கொள்முதல் செய்தார். இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிகளுக்கும் நல்ல லாபமே! 

உள்நாட்டில் மட்டுமே செய்து கொண்டிருந்த மொத்த வியாபாரம் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்தது. வியாபாரத்தின் நீக்கு போக்கு தெரிந்தவருக்கு எல்லாமே கை வந்த கலையாயிற்று!

எப்பொழுதும் லாபத்தில் நண்பர்கள் இருவருக்குமே சரிபங்குதான். இராமநாதன் பிள்ளைகளுக்கு இது உறுத்த ஆரம்பித்தது. முதலீடு போட்டவருக்கும், வெளியே சுற்றி எங்கெங்கு பொருள் கிடைக்கும் என்று தரகுவேலை பார்ப்பவருக்கும் சமபங்கு லாபமா‌ என கேள்வி கேட்கத் தொடங்கினர்.

பரம்பரைச் சொத்தில் சொகுசாக வாழ்ந்தவர்களுக்கு, ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு பணமுதலீடு மட்டுமே போதாது! உழைப்பும் அவசியம் ‌என்பது புரியவில்லை.

அப்பொழுது தான் வெளிமாநிலங்களில் இருந்தும் மிளகு, ஏலம், கிராம்பு என மசாலா பொருட்களை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்திருந்தனர்.

அலுவலகத்திற்கு அவ்வப்பொழுது வந்து சென்ற இராமநாதன் பிள்ளைகளும், "வெறும் பயலுக்கு வந்த வாழ்வைப் பார்!" என்று‌ சாடைபேச ஆரம்பித்தனர்.

நண்பனுக்காக தேவானந்தனும் பொறுமை காத்தார். நண்பனின் நிலையறிந்த இராமநாதனும், நண்பன் சுயமரியாதை மற்றும் சுயகட்டுப்பாட்டை இழக்குமுன் தானே அனுப்பி விடுவது உத்தமம் என, அவரது பங்கை பிரித்துக் கொடுத்து அனுப்பி விட்டார்.

‘நல்லோர்க்கு அழகு சொல்லாமல் செல்வது.’ தனக்கு உதவிய நண்பனுக்கும், அவர் பிள்ளைகளுக்கும் இடையில் தன்னால் பிரச்சினை வரவேண்டாமென்று விலகி விட்டார் தேவானந்தன்.

அப்பொழுது தான் ரவியானந்தனும் கல்லூரி முடித்திருந்த சமயம். தந்தையின் அனுபவமும், மகனின் உழைப்பும், இவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகியது.

இருவரும் ஒருவருக்கொருவர் யானைபலம். மகன் ரவியின் ஆசைக்கிணங்க டெக்ஸ்டைல்ஸ் துறையிலும் தடம் பதித்தனர். மகனுக்கு திருமணம் செய்து அழகு பார்த்தார். மிகவும் மனவுறுதி படைத்தவர்.

"எங்கப்பா தைரியம் யாருக்கும் வராது." என்று ரவியானந்தன் தன் மனைவி மங்கையர்க்கரசியிடம் பெருமை பேசுவார்.

அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் கண்கலங்கவும் மருமகளுக்கும், பேரனுக்கும் அதைத் பார்த்து தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

"இப்ப என்ன தாத்தா? நாம போய் அடுத்தவாரம் என் பெரியப்பாவை பாக்குறோம். நலம் விசாரிக்கிறோம். ஆனந்தன் அன்ட் க்ரூப்ல அவரையும் சேக்குறோம்." என வேகமாகக் சொல்லிச் சென்றவனிடம்,

"அது யாருடா… எனக்குத் தெரியாம உனக்கு பெரியப்பா?" என பேரனைப் பார்த்தார் தேவானந்தன்.

"நீங்க தானே தாத்தா சொன்னீங்க... அந்தக் கம்பெனி தான் உங்க தலச்சன் பிள்ளைனு. அப்படினா அந்தக் கம்பெனி எனக்கு பெரியப்பா தானே?" பேரன் வார்த்தையால் வாரிவிட்டு கண்சிமிட்டினான்.

"அட படவா! என்னையே கலாய்க்கிறயா நீ?" எனக் கேட்க, அங்கு சற்றுமுன் நிலவிய இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சி திரும்பியது.

***

"ம்மா! நான் இந்த முடியை பாதியா கட்பண்ணிக்கவா?"

குரல் கேட்டு அடுக்களையிலிருந்து கையில் கரண்டியோடு வெளிவந்தார் சரஸ்வதி.

ஈரத்தலையில் துண்டை கட்டிக் கொண்டிருந்த மகளைப் பார்த்து, "என்ன கேட்ட? இப்ப கேளு!" என்று வார்த்தையில் ஈட்டியை உரசியபடி கேட்க,

"இல்லம்மா... இவ்வளவு நீளமா முடிய வச்சுகிட்டு, தலைதேய்க்க கஷ்டமா இருக்குல்ல. அதான்…" என்று சமாளிப்பாக இழுத்தாள் மகள்.

"ஏன்டி! அவ அவ முடி வளரலைனு அமேசான் காட்டு எண்ணெய், ஆப்பிரிக்கா காட்டு எண்ணெய்னு வாங்கி தேய்க்கிறாளுக... அதையெல்லாம் தேய்ச்சா முடி வளராதுனு, தயாரிக்கிறவனுக்கும் தெரியும். விக்கிறவனுக்கும் தெரியும். அப்படியிருந்தும் கண்டதையும் வாங்கி தேக்கிறாங்க. இவ என்னடான்னா இருக்கிற முடியை வெட்டுறாளாம்." அவளது அம்மா நீட்டி முழக்க,

"நீங்கதானம்மா ஒழுங்கா தலைதேய்க்க தெரியுதா? தலைசீவத் தெரியுதானு எப்பப்பாரு திட்டிகிட்டே இருக்கீங்க." மூக்கால் அழுதாள் பெண்.

"மாசத்துல ஒன்னு ரெண்டு நாள்தான் நீயா தலைக்குளிக்கிற... மத்த நாளெல்லாம் நாந்தானே தேய்ச்சுவிடுறேன். தலையைச் சீவி என்னைக்காவது ஒழுங்கா பிண்ணிப் போட்டிருக்கியா? எப்பப்பாரு மொத்தமா சுருட்டி நட்டுவாக்காலியாட்டம் ஒன்ன தலையில மாட்டிகிட்டு திரியவேண்டியது."

"என்ன... தலையாய பிரச்சினை ஓடிட்டு இருக்குபோல அம்மாவுக்கும் பொண்ணுக்கும் இடையில." என்று கேட்டவாறே கேசவன் அங்கு வர,

"வந்துருவீங்களே! பொண்ண ஒன்னு சொல்றதுக்கு முன்னாடி சம்மன் இல்லாம ஆஜராகிற வேண்டியது." உதட்டினை பழித்துக் காண்பித்தார் சரஸ்வதி.

"இப்ப என்னதான்டி உன் பிரச்சினை? அங்க விட்டுட்டு இங்க பாயுற!"

"நான் என்ன சிங்கமா? புலியா? உங்க மேல பாயறதுக்கு. எல்லாம் உங்க அருமை மகளாலதான். ஒழுங்கா தலைதேய்ச்சு குளிக்க சொன்னா, தேய்க்க முடியல முடிய வெட்டிக்கிறேங்கறா! இன்னும் ஒருவேலை ஒழுங்கா செய்யத் தெரியுதா? இல்ல...அடுக்களையில ஊடமாட வந்து ஏதாவது வேலை கத்துக்கலாம்னு இருக்காளா?" மூச்சு விடாமல் அடுக்கிகொண்டே போனார் சரஸ்வதி.

"இப்ப அந்தப்பிள்ளை வேலை கத்துகிட்டு என்ன ஆகப்போகுது?" விடாமல் கேசவன் பெண்ணிற்கு வக்காலத்து வாங்க,

"இன்னும் உங்களுக்கு அவ சின்னப் பொண்ணுன்னு நினைப்பா? காலேஜ் முடிக்கப்போறா! கல்யாணம் பண்ணி போறவீட்ல என்ன வளத்திருக்காங்கனு கேக்க மாட்டாங்க? வாழப்போற வீட்ல மாமியாரா வந்து இவளுக்கு தலைதேய்ச்சு சாம்பிராணி போடுவாங்க?"

"ஐ! இந்த ஐடியா நல்லாயிருக்கே! அப்பா! மாப்பிள்ளை பாக்கும்போது ஒன் ஆஃப்தி கன்டிஷனா இதையும் சேத்துக்கோங்க... மாமியார் தான் தலைதேய்ச்சு விடணும்னு," எனக்கூறி விட்டு, "எனக்கு லேட்டாயிருச்சு. நான் காலேஜ் கிளம்பறேன்." எனக்கூறிச் சென்ற மகளைப் பார்த்து,

"ஹும்… அதது மாப்பிள்ளைக்கு கன்டிஷன் போட்டா, உங்க பொண்ணு மாமியாவுக்கே கன்டிஷன் போடுறா... யார் வந்து மாட்டப் போறாங்களோ?' என் அங்கலாய்த்துக் கொண்டே பாதியில் விட்டு வந்த வேலையைத் தொடர அடுக்களை சென்றார்.

அவர் கூடவே அடுக்களை சென்ற கேசவனும், எடுத்து வைத்த காய்கறிகளை நறுக்கியவாறே, "ஏன்டி இருக்கறது ஒரே பொண்ணு. அவளையும் எப்ப பாத்தாலும் நொய்நொய்ங்கற? அவளா ஏதாவது செய்ய வந்தாலும், ஏதாவது ஒரு குறையச்சொல்லி செய்ய விடமாட்டேங்குறே!"

"அதெல்லாம் அப்படிதான். நீங்களும் செல்லம் கொடுத்து, நானும் செல்லம் கொடுத்தா எப்படிங்க? பொம்பளப்பிள்ளையா இருந்தாலும் ரொம்ப பொத்தி பொத்தி வளக்க கூடாது. பூஞ்சையாப் போயிரும். என்னதான் படிச்சு வேலைக்கு போனாலும், கல்யாணத்துக்கு பின்னாடி அடுக்களை ராஜ்ஜியம் பொம்பளைங்க கையிலதான்.

கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு சுடுதண்ணி கூட வைக்கத் தெரியாததுகதான், கல்யாணத்துக்கு பின்னாடி புருஷனுக்கு அது பிடிக்கும், பிள்ளைக்கு இதுபிடிக்கும்னு சூப்பரா சமைக்க ஆரம்பிச்சுருவாங்க. அதனால்தான் நான் எந்த வேலையும் செய்ய விடறதில்ல. அதுக்காக அப்படியே விடமுடியுமா? அப்பப்ப அவ பொறுப்பையும். செய்ய வேண்டிய வேலைகளையும் சொல்லிக்கிட்டே இருக்கணும்." நீளமாக ஒரு பிரசங்கமே நடத்தி முடிக்க,

"வாவ்! சூப்பர் டி சரசு... பயாலஜி எப்ப இருந்து சைக்காலஜி பேசுது?"

"இந்த கெமிஸ்ட்ரி எப்ப இருந்து அடுப்படி வந்து லவ்வாலஜி பேசுச்சோ... அப்ப இருந்து அதுவும் சப்ஜெக்ட் மாறிப் பேசுது. அப்புறம் இது சைக்காலஜி எல்லாம் ஒன்னுமில்லை. பொண்ணப் பெத்த அம்மாக்களொட பேசிக் திங்காலஜி."

"சூப்பர்ஜி! சூப்பர்ஜி! அப்புறம்… என்ன அவ்ளோ ஈஸியா அடுப்படி கெமிஸ்ட்ரினு சொல்லிட்ட? புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து கிட்சன்ல வேலை பாத்தா தான்டி கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகும்." என மனைவியிடம் தலை சாய்த்து கண்ணடிக்க,

"ஐயே! பொண்ணுக்கே மாப்பிள்ளை பாக்குற வயசு வந்தாச்சு. இன்னும் கெமிஸ்ட்ரி பயாலஜினுட்டு. இனிமே ஸ்கூல்ல பிள்ளைகளுக்கு கெமிஸ்ட்ரி நடத்தறதோட நிப்பாட்டுங்க! இப்படி கிட்சன்ல வந்து நடத்தாதீங்க!"

"என்னடி பொசுக்குனு இப்படி சொல்லிட்ட! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனாதானேடி ஃபிசிக்கலா பையாலஜி கிரியேட்டாகும்."

"ஐயோ! அப்பவே எங்கப்பாகிட்ட சொன்னேன். நானும்‌ சயின்ஸ் டீச்சர். அவரும் சயின்ஸ் டீச்சர். கொஞ்சம் யோசிக்கலாம்ப்பா அப்படினு... அவர்தான் கேக்கலை. இப்ப பாருங்க! எனக்கு இப்ப‌யிது கிட்சனா சயின்ஸ் லேபான்னே தெரியல."

பெற்றோரின் நினைவுகளோடு, அழகாக தலைசீவி, இடைதாண்டிய கூந்தலை தளரப்பின்னி, பின்னலின் நுனியில் ரப்பர்பேண்டைச் சுற்றினாள் திவ்யா.

பெற்றோரின் புகைப்படத்தினருகே சென்றவள், "நல்லா பாத்துக்கோங்க. ஒழுங்கா பின்னியிருக்கேனா? என் ரூம் எப்படி நீட்டாயிருக்கா? நீங்க விட்டுப்போன இந்த கொஞ்ச காலத்துக்குள்ள பொறுப்பா மாறியிருக்கேனா? நான் பொறுப்பா‌ மாறணும்கறதுக்காக ரெண்டு பேரும் என்னைத் இப்படி தனியா விட்டுட்டு போயிருக்க வேணாம்."

கண்களில் கண்ணீரோடும் இதழில் வெற்றுச் சிரிப்போடும் தினமும் தன்பெற்றோரின் புகைப்படத்தின் முன் நடத்தும் சம்பாஷனை இது.

பெற்றோரை இழந்த ஆரம்ப காலங்களில் இதே கேள்வியை கண்ணீரோடும், கதறலோடும் கேட்டுக் கொண்டிருந்தாள். பின் விரக்தியாகக் கேட்க ஆரம்பித்து, தற்பொழுது வெறுமையான புன்னகையோடு கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

காலமே சிறந்த மருந்து சில மனக்காயங்களுக்கு. ஆனால் சிலவகையான துயரங்களுக்கு இனிமையான நினைவுகளே அருமருந்து. தன்னால் இதெல்லாம் செய்ய முடியுமா என்று அவளே வியந்ததுண்டு. ஆனால் செய்ய முடிகின்றது. காலத்தின் கட்டாயத்தால்!

திவ்யாவின் அறைக்கு அவளது அம்மா வரும் பொழுதெல்லாம், "துணிமணி எல்லாம் ஏன் இப்படிப் போட்டு வச்சுருக்கே? புக்ஸெல்லாம் அலங்கோலமா கிடக்குபாரு! படுக்கையை மடிச்சு வச்சுருக்கியா? எல்லாம் அப்படி அப்படியே போட்டு வச்சிருக்க! ஒதுங்க வைக்க மாட்டியா?" என வாய்பாட்டுக்குக் கேட்டுக் கொண்டேயிருக்கும். அவரது கை அவற்றையெல்லாம் செய்து கொண்டேயிருக்கும்.

இப்பொழுதும் அந்தக் குரல் அவளுக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது. இவளது கை தன்னால் அவற்றை ஒதுக்க வைக்கிறது. சமையலும் அதுபோலத்தான். கை காலைச் சுட்டுக் கொண்டு சிறுக சிறுக சமைக்க கற்றுக் கொண்டாள். 

அம்மா சொன்னது சரிதான். பிடித்தவர்களுக்காக என்றால் எதையும் சீக்கிரம் கற்றுக் கொள்கிறோம். அவளும் அப்படித்தானே! அவளவனுக்காக என்றுதானே சமைக்கவே ஆரம்பித்தாள்.

மனதில் எண்ணங்கள் கடந்த கால நினைவுகளில் அலையாடிக்  கொண்டிருக்க, கை தன்னால் தனக்குத் தேவையானவற்றை எடுத்து வைக்க, அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

காலையில் தோட்டத்தில் பறித்த ரோஜாப்பூவை எடுத்து தலையின் பின்னால் சொருகிக் கொண்டே மேஜை மீதிருந்த ஃபோட்டோவைப் பார்த்தாள்.

தன்னவனின் வலக்கரம் தன்தோளோடு அணைத்திருக்க… ஆதவனை நோக்கும் தாமரையாய்… அண்ணாந்து பார்த்தது அவள் முகம்.

நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை...

வான் இன்றி வெண்ணிலவு
வந்ததென்ன வீணே
நீ இன்றி நானும் இல்லை
கன்னி இளமானே


கானக் குயில்
தனிமையில் வாடுதிங்கே
வீணை ஒன்று
விரல்களைத் தேடுதிங்கே
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை