Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 42

நினைவு-42

அவினாசி... சத்யானந்தனின் பூர்வீக வீடு. அவனது தந்தையின் காலத்தில் கஷ்டஜீவனத்தின் போது கை நழுவிப் போயிருந்த வீட்டினை மீண்டும் வாங்கி தனது தாத்தா தேவானந்தன் பெயருக்கே மாற்றிக் கொடுத்து புதுப்பித்து இருந்தான்.

‘பார்த்தாயா என் பேரனின் சாமர்த்தியத்தை!’ என்று பெரியவரும் மீசையை முறுக்கிக் கொண்டு பேரனைப் பற்றி பெருமை பேசாத நிமிடம் இல்லை. இப்பொழுது அந்த வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க, அவரின் பேச்சினை கேட்கவென ஒரு கூட்டமே அவரைச் சுற்றியிருந்தது.

தாலிமாற்ற முகூர்த்தம் குறிக்கப்பட்டதும், “இடம் மட்டும் நம்ம அவினாசி வீடுதான்” என்று சத்யானந்தன் உறுதியாகக் கூறிவிட, அனைவரும் இங்கே கிளம்பி வந்து விட்டனர்.

கொங்குமண்டல தொட்டிக்கட்டு வீடு. நடுவில் திறந்தவெளி முற்றத்தோடு, நாலாபுறமும் அறைகள் என விசாலமான அந்தக் காலத்து காரைவீடு. வாசல் நிலைப்படியே அவ்வீட்டில் வாழ்ந்தோரின் செல்வச்செழிப்பை கம்பீரமாய் கட்டியம் கூறி நிமிர்ந்து நின்றது.

பெரிய பெரிய உத்திரக்கட்டைகள் கொண்டு மச்சடைத்தும், கடைந்தெடுத்த தேக்கு மரத் தூண்கள் பளபளவென மல்யுத்த வீரனின் தோள்களைப் போல வாளிப்பாயும் பளபளத்தன. 

திறந்தவெளி முற்றம்... இந்த முற்றம் தன் சந்ததியினரின் எத்தனை விசேஷங்களைப் பார்த்திருக்கும்! எவ்வளவு மழை, வெயில், பனி என எத்தனை பருவகால மாற்றங்களை உள்வாங்கி இருக்கும்... எத்தனை வயல் வெள்ளாமைகளுக்கு களமாகி இருக்கும்!

தன் தலைமுறையினருக்கு சிறுவயதில் எத்தனை பேருக்கு விளையாட்டுக் கூடமாய் மாறியிருக்கும். கூட்டுக்குடும்ப கொண்டாட்டங்கள் எத்தனை எத்தனை கண்டு களித்திருக்கும்.

நிலா வெளிச்சத்தோடு எத்தனை நிலாச்சோறு விருந்து இந்த முற்றம் பார்த்திருக்கும். எத்தனை பிள்ளைகள் இந்தத் தூண்களில் மறைந்து கண்ணாமூச்சி ஆடியிருப்பர்.  இத்தனைகளையும் தன்னகத்தே கொண்டு அடங்கியதைத் தான் பரம்பரை பெருமை பேசும் வீடு என்று சொல்வர்.

அத்தனை சிறப்புகளை கொண்ட வீடு இன்று தனது நிகழ்கால தலைமுறையின் எதிர்கால வாழ்விற்கு, அஸ்திவாரம் போடத் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

திருமண வைபவத்திற்கு சற்றும் குறைவில்லாமல் இன்றைய விசேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் தேவனாந்தன். எளிமையாக நடத்த வேண்டுமென்று முடிவெடுக்கப் பட்டாலும் மனதின் ஆசை நிகழ்காலச் சூழ்நிலையை புறந்தள்ளி விட்டது.

வெகுநாட்களாகக் காத்திருந்த, ஒரே பேரனின் விசேஷம் ஆயிற்றே! பூர்வீக ஊர் என்பதால் அவருடைய பால்ய கால நட்புகள் ஒருபக்கம், பங்காளி, மாமன் மச்சான் ஒருபக்கம் என வீடு சொந்தங்களால் நிறைந்து காணப்பட்டது.

திவ்யாவும் அத்தனைக்கு மோசமில்லாமல் மிக சகஜமாகவே நடமாடிக் கொண்டிருக்க, சத்யாவும் விமரிசையாக நடத்துவதற்கு ஒப்புதல் அளித்துவிட, இன்றைய தினம் ஏக தடபுடலாகிக் கொண்டிருக்கிறது.

லட்சுமியின் அண்ணன் மகன்கள் முன்னின்று எடுத்து நடத்த, திவ்யாவின் சொந்தங்கள் அத்தனை பேரையும் பேருந்து ஏற்பாடு செய்து பூர்வீக வீட்டிற்கு வரவழைத்திருந்தான் சத்யா.

மனைவியை கௌரவப்படுத்தும் முறைமைகளில் இதுவும் ஒன்றல்லவா! ஒவ்வொன்றாய் பார்த்துப் பார்த்து சிரமேற்கொண்டு செய்ததில் கணவனாக அவளின் மனதில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டான்.

விசேஷத்திற்கு வந்திருந்த நந்தினி, திவ்யாவை முறைத்துக் கொண்டே வீம்பாகத் திரிய, அவளை சமாதானப் படுத்தவென பின்னால் தொற்றிக் கொண்டு அலைந்தாள் திவ்யா.

"நந்தினி சாரிடி... உன்கிட்ட மறைக்கனும்னு எல்லாம் இல்ல. எல்லார்கிட்டயும் சொன்னதையே உன்கிட்டயும் சொல்ல வேண்டியதாப் போச்சு. என் சூழ்நிலை அப்படி." என்று கெஞ்சிக் கொண்டு நின்றாள்.

"பேசாத எங்கிட்ட... அப்ப மத்தவங்களும் நானும் ஒன்னு. அப்படித்தான?" என்று முட்டைக்கண்ணை உருட்டினாள் நந்தினி. தோழியாக நெருங்கிப் பழகியவள்‌ தன்னிடம் மறைத்து விட்டாளே என்ற ஆதங்கம் அவளுக்கு.

"இப்ப என்ன? நங்கையா வீம்பக் காட்டுறியா?" அமைதியாக இருந்தால் இவளிடம் வேலைக்காகாது என, சற்று குரல் உயர்த்தியவள்,

"நாத்தி அதிகாரத்த நீ எப்படி வேணாலும் காமி... ஆனா பேசாம‌ மட்டும் இருக்காத நந்து! எனக்கிருக்கிற ஒரே ஒரு ஃப்ரெண்ட் நீ மட்டும்தான்... என்னப் பாத்தா பாவமா இல்லையா?" முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு கேட்க,

"யாரு... நீயா‌ பாவம்? சரியான அமுக்குணிடி நீ! ஆமா... புள்ள எங்கயாவது படிக்குதா? எந்த ஸ்கூல்ல சேர்த்திருக்க? முதல்லயே சொல்லிரும்மா... இன்னொரு அதிர்ச்சிய இந்த நெஞ்சு தாங்காது." பட்டென்று நெஞ்சில் கை வைத்து சொன்னவளைப் பார்த்து திவ்யா சிரிக்க,

"சிரிக்காதேடி... இப்படி சிரிச்சே, ஊமைக்கோட்டானாட்டம் எல்லாத்தையும் மறச்சுட்ட! சும்மாவா சொல்லி இருக்காங்க, ஊமையா இருக்கவங்கள நம்பக்கூடாதுனு." என்று வார்த்தைக்கு வார்த்தை வெடித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

"நானொன்னும் ஊமை இல்லயே? அப்ப என்னை நம்பலாம்." சளைக்காமல் பதில் பேசினாள் திவ்யா.

"சோத்துல பூசணிக்காய மறச்ச மாதிரி புருஷனையே மறச்சவளாச்சே! உன்னை நம்ப முடியாது"

"அது எப்படி நந்தூஉஉ... சோத்துல பூசணிக்காய மறைக்கிறது?" 

"எனக்கெப்படித் தெரியும்? நீதான் அதுல எக்ஸ்பர்ட் ஆச்சே!"

"மறச்சதுக்குத் தண்டனையா வேணும்னா எங்களுக்கு பொறக்கப் போற பிள்ளைகளுக்கு அத்தை சீரெல்லாம் நீயே செஞ்சுறேன். கூடக் கொறையா இருந்தாலும் மனங்கோணாம வாங்கிக்கறேன். பத்தலன்னாலும் கேட்டு வாங்கிக்கிறேன்!" என அவளுக்கு அத்தை உரிமையைக் கொடுக்க, முறுக்கிக் கொண்டிருந்தவள் நொடியில் கோபம் மறந்து சிரித்து விட்டாள்.

“அடிப்பாவி... அசரவே மாட்டியா?” என்று மீண்டும் தர்க்கத்தை ஆரம்பித்த நேரத்தில்,

"என்னம்மா... இன்னும் ரெடியாகலயா?" என கேட்டுக் கொண்டே மங்கையர்க்கரசி அங்கே வந்து நின்றார்.

"இதோ ரெடியாகிட்டேன் அத்தை." என்றவளைப் பார்த்தவர், 

"அப்படியே எங்கண்ணே பட்ரும்போல இருக்க!" என்று மருமகளின் தோற்றத்தை மெச்சியவராக கன்னம் தடவி நெட்டி முறித்து,

"கீழே எல்லாம் ரெடி பண்ணியாச்சு... இறங்கி வாங்கம்மா!" என அழைத்து விட்டு சென்றார்.

“குடுத்து வச்சவடி நீ! மறுமகள பூவாட்டம் தாங்குற மாமியார் உனக்கு.. எனக்கும் வந்து வாய்ச்சுருக்கே!” நந்தினி பெருமூச்சு விட,

“அப்படியா? சொல்லவே இல்ல... அண்ணனுக்கு போன் பண்ணி கேக்கவா?” திவ்யா மீண்டும் வம்பிற்கு இழுக்க,

“அடியே... என் குடும்ப வாழ்க்கையில தீவட்டி வைக்கிறது எத்தனை நாள் கனவு உனக்கு! உங்கண்ணன் மலையேறினா அதை விட கொடுமை எனக்கு வேற எதுவுமில்ல.. நீ கெளம்பு தாயே!” என்று விரட்டி கீழே அழைத்து வந்தாள் நந்தினி.  காங்க... 

மயில்கழுத்து வண்ண சாமுத்ரிகா பட்டில், சர்வலட்சணங்களோடு தளரப் பின்னிய இடைதாண்டிய கூந்தலில், முல்லைச்சரம் தோள்வழிய, சந்தனச்சிலையென தன்னவனின் கண்ணையும், கருத்தையும் ஒருசேர கவர்ந்தவளாக இறங்கி வந்தாள் திவ்யா. 

அன்னமென வந்தவளும் பட்டு வேஷ்டி சட்டையில், சபையில் தாத்தாவோடு நின்றுகொண்டு வந்தவர்களை உபசரித்துக் கொண்டு, தன்மீது வைத்த கண்ணை எடுக்க முடியாமல் தடுமாறியவனைத் தான் கண்களில் நிரப்பிக் கொண்டு இறங்கினாள்.

வீடு முழுக்க பூந்தோரணமும், மாவிலைத் தோரணமுமாய் மங்களகரமாய் காட்சியளித்தது. முற்றத்தில் புதுமணத் தம்பதிகள் அமர்வதற்காக மனை போடப்பட்டு அதன்மீது புது வெள்ளைத் துணி விரிக்கப்பட்டிருந்தது. சண்முகம் மற்றும் லட்சுமி சார்பாக பிறந்தவீட்டு சீர்வரிசைத் தட்டுக்களை பிள்ளைகள் கொண்டு வந்து வைத்து சபை நிறைத்தனர்.

மனையில் இருவரும் வந்து அமர, பழுத்த சுமங்கலிகள் வந்து செயினில் தாலி உருக்கள் கோர்த்து வைக்க, முன்நிற்க சங்கோஜப்பட்ட லட்சுமியையும், மங்கையர்க்கரசியையும் முன்னுக்கு அழைத்து, தாலிச்செயினை எடுத்துத் தருமாறு பணித்தான் புதல்வன்.

இத்தனை நாட்களாக திவ்யாவின் கழுத்தில் மஞ்சள் கயிற்றோடு கோர்த்திருந்த மோதிரமும் உருக்களோடு சேர்த்து கோர்க்கப்பட்டிருக்க, தாலிச்செயினை தனது அன்னைகளின் கைகளில் இருந்து நிறைந்த மனதோடு வாங்கிக் கொண்டான்.

பின் தன்னவளின் கண்களுடன் கண்கள் கலந்தவாறே, ஒவ்வொரு மணித்துளிகளையும் தனது நினைவுப் பெட்டகத்தில் பொக்கிஷமாக சேமித்தவனாக... சகதர்மினியின் சங்கு கழுத்தில் மங்கலநாணை அனுவிக்க, தன்னவளின் கண்களில் இருந்தும் ஒருசொட்டுக் கண்ணீர் ஆனந்தமாக அவன் கை மீது பட்டுத் தெறித்தது. 

சந்தோஷமோ துக்கமோ கண்கள் முதலில் தூதுவிட்டு அழைப்பது என்னவோ கண்ணீரைத் தானே! ஆதரவாய் ஆறுதலாய் அவளின் கைகளை இறுகப் டான் சத்யானந்தன். 

நந்தினி குங்குமச்சிமிழை எடுத்துக் கொடுக்க, மாங்கல்யத்திலும், நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்தவன், அவளது கன்னம் தாங்கி, தன்னவளை நோக்கிக் குனிந்து நெற்றியில்‌ அழுந்த முத்தமிட… 

"ஹோ ஓஓ..." என சந்தோஷக் கூக்குரல் பிள்ளைகள் மத்தியில் இருந்து கிளம்பியது.

சபையின் முன்‌ காளையவன் செய்கை, கன்னியவளின் நலுங்கு வைத்த கன்னத்திற்கு நாணச்செம்மை பூச, அடுத்த நொடியே நிமிர முடியாமல் முகம் புதைத்தாள் தன்னவனின் தோள்மீதே!

“காதல் மன்னனாகிட்ட டா மாப்பிள்ளை!” என்று கேலி பேசியவாறு, இந்த அழகான காட்சியையும் விஷ்வா தனது கைபேசியில் தவற விடாமல் சேமித்தான்.

"சதீஷ்! விருந்து ஓகேவா?" சாப்பிட்டு முடித்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம், சத்யா விசாரித்தான். பின்னே மச்சான் முறுக்கில் நிமிடத்திற்கு நிமிடம் வாரி விட்டுக் கொண்டிருக்கிறான் அல்லவா!

இவனுக்கு துணையாக பத்துக்கும் மேற்பட்ட உடன் பிறவா சொந்தங்கள் வேறு வரிசை கட்டிக் கொண்டு நிற்க, அந்த பெரிய மனிதர்களை(!) திருப்திபடுத்தியே தீருவதென அசராமல் களத்தில் இறங்கி விட்டான் சத்யானந்தன்.

"கண்ணா அண்ணா போட்ட கேசரிக்கு, சத்யா மாமா போட்ட விருந்து எவ்வளவோ மேல்!" என்று சப்பை கொட்டினான் சதீஷ்.

கல்யாண‌ விருந்தாக பனியாரம், ஆப்பம், சந்தகம் முதற்கொண்டு ஆனபண்டம் அத்தனையும் இலையில் வரிசை கட்டி நின்றதை மூக்குப்பிடிக்க ஒருகை பார்த்தவன் தான் இவ்வாறு கூறியது.

"ஏன்டா கொங்கு நாட்டு சமையல் அத்தன வகையும் போட்டுருக்கேன். ஏதோ போனாப் போகுதுன்னு சொல்ற மாதிரி சொல்ற!"

"நாங்க பொண்ணு வீட்டுக்காரங்க மாமா... அப்படித்தான் பவுசு காட்டுவோம்."

"ஏன்டா... இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான்டா செய்வாங்க! இங்க நாங்க அடக்கித்தானடா வாசிக்கிறோம்."

"மாமா... எந்தக் காலத்துல இருக்கீங்க? பொண்ணு கிடைக்காத நைன்டிஸ் கிட்ஸ் கிட்ட கேட்டுப் பாருங்க… பொண்ணு வீட்டுக்காரங்கன்னா எவ்வளவு கெத்துன்னு தெரியும்." என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டான் சதீஷ். 

வந்தவர்களைக் கவனித்து அனைவரையும் வழியனுப்பி விட்டு, கடைசிப் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு முடித்த விசேஷ வீட்டுக்காரர்களாக, அலுப்புதீர கூடத்தில் சேர்களைப் போட்டு அமர்ந்து பேசிவிட்டு அவரவர் அறைகளில் சென்று முடங்கிக் கொண்டனர்.

தனியாக விட்டுச் சென்றிருந்த இருவருக்கும் இடையே மீண்டும் ஒரு அமைதி வந்து ஆக்கிரமிக்க, இருவரும் பேசா மடந்தையாக அமர்ந்திருந்தனர்.

மௌன நிமிடங்கள் நீண்டு கொண்டே போகவும் தொண்டையை செருமி, "உன் ஹெல்த் சரியாகட்டும் தியா ரிசப்சன் இதை விட கிராண்டா வைக்கலாம்.” என்று அவளின் கைகளை தன் கைகளில் வைத்துக் கொண்டு சொன்னான் சத்யா.

“அப்புறம் தியா... இன்னும் கொஞ்சநாள்...” என்று நிறுத்தியவன் ஒரு நிமிடம் யோசித்து, தற்போது தயங்கி நிற்பதில் பிரயோஜனமில்லை என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தான்.

***

உன்னைச் சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்க வைத்து
அடையாளம் நீ கொடுத்தாய்

உன்னைச் சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்சத் தாலி மின்ன மெட்டி கேலி பண்ண
பக்கத்தில் நான் கிடப்பேன்

கண்ணில் மீனை வச்சி புத்தும் புதுத் தூண்டில்
போட்டது நீயல்லவா

கள்ளத்தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நான் அல்லவா

உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்