Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 39

நினைவு-39

புது உறவுகள் வந்து சேர்ந்த மகிழ்ச்சி அந்த வீடெங்கும் எதிரொலித்தது. மலர்ந்த முகத்தோடு புன்னகை மன்னனாக வந்திருந்தவர்களை தனது பேச்சிற்கு தலையாட்ட வைத்திருந்தான் சத்யானந்தன்.

மகுடிக்கு மயங்கிய பாம்பாய் அவர்களும் அவனது பேச்சிற்கு எதிர்பேச்சின்றி அமைதியாய் நின்றனர்.

"முதல்ல... இந்த சார் மோர்னு கூப்புடுறத நிப்பாட்டுங்க... எனக்கு நீங்க மாமன் மகனுங்க தான். எப்பவும் மச்சானுங்க தான்! மலையேறப் ‌போனாலும் மாமன் மச்சான் தயவு வேணும்." என்று சத்யா கூறி விட்டுச் சிரிக்க, அவர்கள் தான் கொஞ்சம் கூசிப் போய் நின்றனர், இவன் வசதி, உயரத்தைப் பார்த்து. 

"அது வந்துங்க... உங்க அந்தஸ்து கௌரவம்..." என இழுக்க,

“மனுஷனுக்கு மனுஷன் நேர்மையா இருக்கிறது தான் அந்தஸ்து கௌரவம்னு நான் நினைக்கிறேன். அது எப்பவும் உங்ககிட்ட இருக்கும்னு எதிர்ப்பார்க்கிறேன்” என்று தெளிவாய் பேசியவனை மறுத்துப் பேச வார்த்தை வரவில்லை.

"சரி... சரி, சட்டுனு எப்படி சொந்தம் கொண்டாடறதுனு பாக்காதீங்க... நீங்க எல்லாரும் லட்சுமி அம்மாவோட சொந்தம். எங்க அம்மா பக்கம் எனக்கு இந்த மாதிரி சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல. அதனால தான் உங்களுக்கு என்னைய மாப்பிள்ளையா தத்து கொடுக்கறேன். மனசா ஏத்துக்கோங்க!"

சத்யானந்தன் சொன்ன விதம் அவர்களுக்கு சிரிப்பை வரவழைக்க, "சரிங்க மாப்ள!" என்றான் அவர்களில் சற்று பெரியவன்.

“மாமன் சீரு... மாப்பிள்ளை மரியாதை எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். கறாரா எல்லாத்தையும் வசூல் பண்ணிடுவேன் மச்சான்... கரெக்டா நடந்துக்கோங்க!” என்று பொய்யாய் மிரட்ட,

“நம்ம மாப்பிள்ளைக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறோம்... அதுக்கு தக்குனாப்புல தங்கச்சி வீட்டுல விருந்து சாப்பிட்டு கணக்கை நேர் பண்ணிக்கிறோம் மாப்ள...” என்று வந்திருந்த இளவட்டமும் கூட்டாக கேலியில் இறங்க அந்த இடமே கலகலத்தது.

"அப்படிச் சொல்லுகடா தம்பிகளா... போட்டு போடுறதுக்கு சரியான ஆளில்லாம இவன் அநியாயத்துக்கு அலம்பல் பண்ணிட்டு இருக்கான். ரொம்ப சந்தோஷம்ப்பா... அப்படியே என்னையும் தாத்தனா தத்து எடுத்துக்கோங்க... இவன் ஒருத்தனோடயே மல்லுக்கட்டிப் போரடிக்குது!"

“அதுக்கென்ன தாத்தா வாங்க சேர்ந்து ஒரு கை பார்த்திடுவோம்!”

தேவானந்தனும் அவர்களது கூச்சம் பார்த்து அவர்களை இலகுவாக்க, அவர் சொல்வதைத் கேட்டு அனைவரும் சிரித்தனர்.

சற்று நேரம் மற்ற விபரங்களை எல்லாம் அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்கிக் கூறியவன், “மீதியை விஷ்வா சொல்லித் தருவான்” எனக் கூறினான். 

பேசிக் கொண்டு இருந்தவர்கள், நிறைந்த மனதோடு மங்கையர்க்கரசியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு சத்யா... லட்சுமிக்கு பொறந்த‌ வீட்டு சொந்தத்தை மறுபடியும் தேடிக் கொடுத்துட்ட..." ஒரு பெண்ணாய் மங்கையர்க்கரசி சந்தோஷப்பட,

"அது என் கடமை‌ம்மா!" என்றான்.

"ஆனா உரிமைய இன்னும் கண்டுக்க மாட்டேங்கிறியே?"

மங்கையர்க்கரசி அலுத்துக் கொள்ள, அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை என்பது போல் கடந்து விட்டான் சத்யானந்தன். மருமகளைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார் என்று அவனுக்குத் தெரியும்.

நேற்றைய முன்தினம் திவ்யாவின் வீட்டில், அனைவரிடமும் கேள்விகள் கேட்டு தன் மிதமிஞ்சிய கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய பேரனை, தாத்தா தான் சற்று சமாதானப் படுத்தினார்.

தாத்தா சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் சற்று ஆசுவாசப்படடு நின்றதும், "சரிப்பா கெளம்பலாமா?" தேவானந்தன் கேட்க, அவன் திரும்பி தன்னவளைப் பார்த்தான். 

அவன் பார்வையே, "கிளம்பு." எனக் கட்டளையிட, அவளும் என்ன செய்வதென்று புரியாமல் பெரிதும் தடுமாறினாள்.

அதைப் பார்த்த சண்முகம், "கண்ணா! கல்யாணம் தான் அவசரமா முடிச்சுட்ட... யாருக்கும் தெரியாமப் போச்சு! அதனால தாலி பிரிச்சு கோக்குற சடங்கையாவது, திவ்யாவோட சொந்தங்கார மனுஷங்க, ஃபிரண்ட்ஸ்னு எல்லாருக்கும் சொல்லி சிறப்பா செஞ்சு, அவங்க வாய அடைக்கனும் கண்ணன்." என்று கூறியதும் அனைவருக்கும் சரியென்றே பட்டது.

சண்முகம் கூறுவதைக் கேட்டு பெரியவர் தேவானந்தனும், "அதுவும் சரித்தான்ப்பா... பேரன் கல்யாணத்த தான் பாக்கல.... அந்த ஃபங்சனையாவது கொஞ்சம் கிரான்டா பண்ணிறலாம்." என்று அதற்கான முன்னேற்பாடுகளை யோசிக்கத் தொடங்கி விட்டார்.

"அது வரைக்கும் திவ்யா இங்கேயே இருக்கட்டும். அடுத்த வாரத்துலயே ஒரு நல்லநாள் ‌பாத்து முடிவு பண்ணிறலாம்." லட்சுமியும் கூற, பெரியவர்கள் பேச்சுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் மனைவியிடம் பார்வையால் முறைத்துக்கொண்டே விடைபெற்றுக் கிளம்பினான்.

அவளின் நினைவு வந்ததும் தன்னால் அவன் முகத்தில் புன்னகை மலர, அந்தச் சிரிப்போடு அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றான். எப்படியும் அவள் வரமாட்டாள் என்று தெரிந்ததும் அவன் உள்ளம் தன்னால் சோர்ந்து போனது.

அலுவலகம் விட்டு வீடு வந்தவன், அன்னையைக் காணாமல் எங்கே என தாத்தாவிடம் விசாரிக்க,

“என் மருமக, அவ மருமகளை பாக்க போயிட்டா பேரா...” என்று திவ்யா வீட்டிற்கு காலையிலேயே மங்கையர்க்கரசி சென்று விட்டதாகக் கூறியிருந்தார்.

இரவு வீடு திரும்பிய அன்னையிடம் தன்னவளைப் பற்றி கேட்டு, "எப்படி இருக்கா... உங்க அருமை மருமக?" நக்கலாக விசாரித்தான் சத்யா.

"என்னடா தம்பி? பேச்சு ஒரு மாதிரியா இருக்கு? அதென்ன உங்க மருமக?"

"ஆமா… உங்களுக்கு மருமகளா நடந்துக்கணும்னு தான, உங்க பேச்சைக் கேட்டா... என் மனைவிங்கற நினைப்பு இருந்திருந்தா என்னைத் தேடில வந்திருப்பா?" என்று குற்றப்பாட்டு படித்தவனை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது?

"உனக்கு மட்டும் உன் பொண்டாட்டிங்கற நினப்பு, இப்பவும் இருக்காடா? தாலி கட்டியது தான் நினைப்புல இல்லைனா, மத்தது எல்லாமா மறந்திருச்சு?" அன்னையின் கேள்வியில் அத்தனை காரம்.

"அதை ஞாபகப்படுத்த வேண்டியவ தான் என்னைக் கண்டுக்கவே இல்லயே?" அங்கலாய்த்தான் அவன்.

"இப்ப நீ மட்டும் என்னவாம்? அவளை அங்கே விட்டுட்டு வந்து ரெண்டு மூனு நாளாச்சே... என்னா ஏதுன்னு அந்தப் பிள்ளய போயி பார்த்தியா இல்ல விசாரிச்சயா? இல்ல ஃபோன் ஏதாவது அந்தப் புள்ளைக்குப் பண்ணுனியா?"

"அதான், தாலி மாத்தறது, சடங்கு அதுஇதுன்னு அங்கேயே வச்சுக்கிட்டாங்களே? எப்படி இருந்தாலும் இங்க தான வரணும். அப்ப பாத்துக்கறேன்." என்று முறுக்கிக் கொண்டான்.

அன்றே தன்னுடன் அனுப்பவில்லை என்ற கோபம் அவனுக்கு.

"என்ன பேச்சு சத்யா இது? இங்க தான வரணும்னா என்னடா அர்த்தம்? தாலி கட்டியிருக்கேன், வந்துதானே ஆகணும்ன்னு சொல்ற மாதிரி இருக்கு. தப்புடா தம்பி!"

பேரனின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்த தாத்தா, "உனக்கு மனைவியா மட்டுமே வரணும்னு நினச்சுருந்தா, அப்பவே அந்தப் புள்ள வந்திருக்கும் சத்யா." என்றார்.

'இத்தனை நாட்களாக அவளை சந்தித்தில் இருந்து, இவள் தனக்கு சொந்தமில்லையே’ என எண்ணும்போது இருந்த மனக்குமுறலும் வேட்கையும், ‘தனக்கு மட்டுமே உடமையானவள் எனத் தெரிந்ததும் அடங்கி விட்டதோ! கிணற்றுத் தண்ணி… எங்கு போகுமென்ற நினைப்பு வந்து விட்டதோ!

தாத்தா சொல்வது சரிதானோ... தன்னைத் தேடி வராததால் அவள் மீது உரிமையைக் காட்ட வேண்டுமென கணவனாக நினைத்த எனக்கு, அவள் நிலையில் இருந்து… காதலனாக யோசிக்க மறந்து விட்டேனோ?' மனம் யோசித்துக் கொண்டிருக்க,

"என் மருமக சொன்னது சரியாத் தான்டா இருக்கு. நான்தான் உன் பொண்டாட்டினு அப்பவே அந்தப் பொண்ணு வந்திருந்தா கடனேன்னு தான் வாழ்ந்திருப்ப..." என்று நொடித்தார் மங்கையர்க்கரசி.

"இப்ப என்ன பண்ணிட்டேன்னு ரெண்டு பேரும் இந்தக் குதி குதிக்கறீங்க?" தன் தவறை மறைக்க, கோபம் காட்டினான் தாயிடம்.

"ஏன்டா கேக்க மாட்ட? இன்னைக்கு முச்சூடும், வாசல்ல சத்தம் கேக்கும் போதெல்லாம் வாசலையே பாத்துப் பாத்து பிள்ளைக்கு கண்ணு பூத்துப் போச்சுடா!"

"இன்னைக்கு மட்டும் என்னவாம்... அம்மணி ஸ்பெஷலா எதிர்பாத்திருக்காங்க?" கோபம் குறையாமல் கேட்க,

"ஏன் சத்யா? இந்த நாளக் கூட அந்தப் புள்ள தான் உனக்கு ஞாபகப் படுத்தணுமாடா? நீயா தெரிஞ்சுக்கிட்டு வருவேன்னு எதிர்பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம்." அன்னையின் வார்த்தைகளில் அத்தனை சீற்றமும், ஆதங்கமும் கொட்டிக் கிடந்தது. நிச்சயமாய் அன்னையிடம் இத்தனை காட்டத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

‘அப்படி எதை மறந்தோம்? இன்றைக்கு என்ன நாள்?’ என யோசித்தவனுக்கு, அந்தநாள் கரிநாள் நினைவிற்கு வர… ஒரு நிமிடம் தன்னவளை நினைத்து இயல்பாக துடிக்கும் இதயம் இயந்திரமாக வேகமெடுத்தது. 

"ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு சத்யா... அந்தப் புள்ள அப்பவே வந்திருந்தா, இந்த அளவுக்கு உனக்கு ஈர்ப்பு வந்திருக்குமா? இந்தப் பிரிவு தானேடா உனக்கான தேடல அதிகப்படுத்தி இருக்கு." 

அன்னையின் வார்த்தைகள் சுட்டிக்காட்டிய உண்மை, அவனுக்கு உறுத்தியது. காதலும் காந்தப்புலமும் ஒன்றுதான். எதிரெதிர் காந்த துருவங்களுக்கு இடைப்பட்ட ஈர்ப்பு விசை ஒரு குறிப்பிட்ட தூரம் தான்.

அந்த தொலைவிற்குள் இருக்கும் வரைதான் ஒன்றையொன்று ஈர்க்கும். எல்லைக்கு அப்பாற்பட்டு ஈர்க்க முடிவதில்லை. ஒட்டிய துருவங்கள் ஈர்க்க முற்படுவதும் இல்லை.

இவனும் அப்படித்தான்... தன் சிந்தனை முழுமையும், 'ஏன் என்னைத் தேடி வரவில்லை.' என்ற கோபப்புள்ளியில் மட்டுமே குவியம் செய்துவிட்டு, ‘தாலி கட்டியிருக்கிறேன்... மனைவியானவள் இங்கு தானே வந்தாக வேண்டும்’ என எண்ணிக் கொண்டான்.

இந்த இடைவெளி தான் தனக்கு, தன்னவளுக்கான தேடலையும், அவள் மீதான ஈர்ப்பையும் அதிகப்படுத்தியது என்பதை உணராமல். அவள் சரியாகத் தான் அவனை புரிந்து கொண்டிருக்கிறாள். இவன்தான் நித்தமும் தடுமாறிக் கொண்டிருக்கின்றான்.

ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்று கொண்டு அவள் தன்னைச் சுழற்றியிருக்கிறாள் என்பது இப்போது தான் அவனுக்கு தெளிவாகப் புரிந்தது. 

தன்னவளை நினைத்தவன் ஒருநொடியும் தாமதிக்கவில்லை. இந்த நாள் தனக்கு விபத்து நடந்த நாள்... அப்படியெனில் தன்னவள் தன் பெற்றோரை இழந்த‌ நாளும் இன்றைக்குத் தானே! ‘கடவுளே எத்தனை ரணமாய் வதைபட்டு துடிக்கின்றாளோ!’ என மனம் பதபதைத்துப் போனது.

"லட்சுமியோட அண்ணன் புள்ளைகளும் வந்து அவங்கள களத்து வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க! எனக்கும் அங்கே இருந்து வர மனசில்லாம தான் புறப்பட்டு வந்தேன்." அன்னையின் தகவல் காற்றோடு வந்து தான் அவன் செவியை எட்டியது. நின்று கேட்க அங்கே அவன் இருந்தால் தானே!

ரெக்கை கட்டிக்கொண்ட பறவையாய் மனம் சிறகினை விரித்து பறக்க ஆரம்பிக்க, அவன் உடல்மொழியும் அதற்கு ஏற்றார் போல விண்ணில் பாயும் ஏவுகணையாய் காரினை விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தது.

லட்சுமியின் அண்ணன் மகன்கள் வந்து அழைக்க, தயங்கி நின்ற லட்சுமியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததே மங்கையர்க்கரசி தானே!

"அவளோட கண்ணன் வந்து, அவன் பொண்டாட்டியப் பாத்துக்குவான். நீ தைரியமாக கிளம்பு லட்சுமி." என்று கூறிவிட்டுத் தானே இங்கே மகனிடம் வார்த்தை விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார் மங்கையர்க்கரசி. அவர் எண்ணி வந்ததும் நல்லவிதமாய் தான் செயலாகிக் கொண்டிருந்தது.

***