Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 37

நினைவு-37

வெகு நாட்கள் கழித்து அன்றைய இரவு உணவினை வெகு சந்தோசமாய் உண்டான் சத்யானந்தன். அங்கிருந்த பொழுதுகள் எல்லாம் பிள்ளைகளுடன் கேலியும் கிண்டலுமாய்ப் போனது. மங்கையர்க்கரசியும் விபரம் அறிந்து மருமகளைப் பார்க்க பதட்டத்துடன் வந்திருந்தார். அப்பொழுதும் தன் தாயிடமும் சத்யா எதைப் பற்றியும் விரிவாக கேட்டுக் கொள்ளவில்லை.

எதுவும் நினைவில் இல்லை எனினும் பிள்ளைகள் பேச்சுவாக்கில் ஒவ்வொன்றாகக் கூற ஓரளவிற்கு நடந்தவற்றை ஊகிக்க முடிந்தது அவனால்.

பிள்ளைகளோடு சாப்பிட்டு முடித்தவன், திவ்யாவின் அறைக்குச் செல்ல, அங்கு உணவும், மருந்தும் லட்சுமி கொடுத்துக் கொண்டிருக்க, அவளோ மறுத்துக் கொண்டிருந்தாள்.

“மூச்சு முட்டுது ஆன்ட்டி... என்னால முழுங்க முடியல!” என்று சிரமப்பட்டவளை பார்க்க பாவமாகத் தான் இருந்தது.

“இப்படியே சொல்லிட்டு இருந்தா வியாதி குணமாகிடுமா? மெதுமெதுவா முழுங்க டிரை பண்ணச் சொல்லுங்க!” என்று மறுத்தவளை ஜாடைப் பேச்சில் ஒரு பார்வையால் அடக்கியவன், அருகே வந்து மாத்திரைகளை உடைத்துக் கொடுக்க, லட்சுமி அசந்தே போனார்.

‘இனி என் கவனிப்பும் கூட தேவையில்லை. கணவன் இருக்கிறான்’ என்று நம்பிக்கையோடு நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.

கணவனின் கண்டிப்பான பார்வையில் மாத்திரையை வாங்கியவள் மறுக்க முடியாமல் முழுங்கி விட்டு படுத்துக் கண்மூடிக் கொண்டாள். அவனை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இப்பொழுது அவளிடம் இல்லை.

‘பின்னே... இழுத்து விடும் மூச்சினையும் கோபத்தோடு வெளியிடுபவனை எப்படித்தான் எதிர்கொள்வது?’ என்கிற பெரிதான தயக்கம் தான் திவ்யாவிற்கு!

மங்கையர்க்கரசியும், விஷ்வாவும் காலையில் தாத்தாவுடன் வருவதாகக் கூறி அன்றிரவு கிளம்பிச் சென்றனர்.

இரவு அவரவர் படுக்கைக்குச் சென்றுவிட, தூக்கம் தொலைத்த நிலையில் பவளமல்லித் திட்டிற்கு வந்தான் சத்யானந்தன். என்னதென்ற காரணமில்லாமல் அந்த இடம் அவனை சுண்டியிழுத்தது.

"என்னங்க ண்ணா... உங்க மீட்டிங் பாய்ன்ட்டுக்கு வந்தாச்சு போல?" சதீஷ் கேட்டுக்கொண்டே அவன் அருகில் வந்தான்.

"சதீஷ், ஒழுங்கா கூப்பிடு! இப்ப அண்ணனா? மாமனா?" சத்யா கேட்டுவிட்டுச் சிரிக்க,

"அது அந்தந்த நேரத்தைப் பொறுத்தது." என்று மெத்தனமாய் பதிலளித்தான்.

"இப்ப என்ன நேரம் சதீஷ்?"

"இப்ப கதை சொல்லும் நேரம். உங்க லவ் ஸ்டோரிய உங்களுக்கே சொல்லப் போறேன். உங்களுக்குள் காணாமல் போன பக்கங்களைத் தேடித் தரப் போகிறான்... உங்கள் சதீஷ்." பாரதிராஜா ஸ்டைலில் கை எடுத்து வணக்கம் வைத்துச் சொல்ல,

"இன்ட்ரஸ்டிங்!" என்று ஆர்வமாய் பார்த்தான் சத்யா.

"எக்ஸாட்லி..." அவன் கைகளை விரித்து, தோள்களைக் குலுக்கி சொன்னவிதம் சத்யாவிற்கு அடக்க முடியாத சிரிப்பை வர வழைத்தது.

"ஆமாண்ணா... இப்ப அக்காவும் தூங்கியிருக்க மாட்டாங்க. ஏன்னா இந்த நேரமெல்லாம் இங்க தான் ஆகாசத்தை பார்த்துட்டு உக்காந்திருப்பாங்க... உங்களப் பாக்க பயந்து தான் தூங்குற மாதிரி படுத்திருப்பாங்க." என்று அருபெரும் ரகசியத்தை போட்டுடைத்தான் சிறுவன்.

"ஏன்டா... நான் அவ்ளோ ரூடாவா நடந்துருக்கேன்?"

"அவ்ளோ ரொமான்டிக்கா நடந்திருக்கீங்க... முறைச்சுப் பாத்தே ரொமான்ஸ் பண்ண ஆளு நீங்களாத் தான் இருப்பீங்க ண்ணா..." விடலைப் பருவத்திற்கே உரிய துடுக்குத்தனத்தோடு சதீஷ் கூற, அவன் சொல்வதைத் கேட்டு வாய்விட்டுச் சிரித்தான். 

அவன் இங்கு வந்ததில் இருந்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூற, ஆச்சரியத்துடன் அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டான். மெல்ல மெல்ல கண்ணனாக அவனது பரிணாமத்தை புரிந்து கொண்டவன் இதோ மறுநாள் அனைவரையும் அமர வைத்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

“கோமாவுக்குப் போகல...”

“அம்னீசியாவால எல்லாத்தையும் நான் மறந்துருக்கேன்...”

“இவளை லவ் பண்ணி கல்யாணம் வரைக்கும் போயிருக்கேன்” என்று புலம்பாத குறியாக கேட்டுக்கொண்டே வர,

'ஆலமரமும் சொம்பும் தான் மிஸ்ஸிங்.' என விஷ்வா நினைத்த பொழுதில்,

 "அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்?" என சட்டென்று கோபப்பட்டான் சத்யா.

"ம்ம்ம்…. நீ சொல்றது எல்லாம் கரெக்ட்னு அர்த்தம்." என அனைவரின் இறுக்கத்தையும் கலைக்கும் விதமாக விஷ்வா பதிலுரைத்தான்.

"டேய் விஷ்வா... நீ பேசாத! அம்மா தான் விவரம் புரியாதவங்க... உனக்கு எங்கடா போச்சு? நீயாவது சொல்லி இருக்கலாம்ல." என தன் கோபத்தின் முனையை விஷ்வாவை நோக்கித் திருப்பினான்.

"டேய் தம்பி! நான் தான்டா சொல்ல வேண்டாம்னு சொன்னேன். விஷ்வாவ ஏன் கோபிக்கிற?" மங்கையர்க்கரசி இடையிட்டார்.

"உங்ககிட்ட என் கோபத்தை காட்ட முடியலம்மா... அதான் அவங்கிட்ட காட்டுறேன். உங்க பயம் என்னம்மா? எங்க மறந்ததை ஞாபகப்படுத்தினா ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸாகி ரெண்டுக்கும் இடையில குழம்பி சட்டையை கிழிச்சிட்டுத் திரிஞ்சிறுவேன்னு நினைச்சுட்டீங்களா?" கோபத்தின் வீரியம் வார்த்தைகளில் வெளிப்பட்டது.

"என்னப்பா இப்படியெல்லாம் பேசுற?" என‌ மங்கையர்க்கரசி மகனின் கோபம் தாளாமல் கண்ணீர் வடிக்க, சத்யாவிற்கு தான் மனம் நொந்து போனது. 

"கவலைப்படாதீங்க ம்மா... அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. ஏன்னா இவளைப் பாத்ததுல இருந்து இவ பக்கம் மட்டும் ஏன் நம்ம மனசு அலைபாயுதுன்னு தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும். அடுத்தவன் பொண்டாட்டி மேல ஈர்ப்பு வருதேன்னு மனசளவுல எப்படியெல்லாம் எமோஷனல் ஸ்ட்ரெஸ் ஆனேன் தெரியுமா? அதுல எல்லாம் குழம்பாத மூளை... பெருசா உண்மை தெரிஞ்சு யோசிக்கறதால குழம்பிடாது."

அவனும் தான் அவளைப் பார்த்தில்‌ இருந்து நரக வேதனை என்றால் என்ன என்பதை அனுபவித்துக் கொண்டிருக்கிறானே! அவளைத் தன் மனதை விட்டு விலக்கவும் முடியாமல், அவனால் விலகவும் முடியாமல் எவ்வளவு கொடுமை அது! 

அவளது கண்களில் இவனுக்கான மையல் தெரியும் பொழுதெல்லாம் அவளையும் தவறாக எண்ணி… இப்பொழுது நினைத்தாலும் உள்ளம் கூசிப் போகிறதே! ச்ச்சே... என எண்ணும்படியாக எத்தனை மன உளைச்சலை அனுபவித்திருக்கிறான்.

"வேணும்னா நீங்க பாக்குற சினிமா, சீரியல்... இல்லைனா படிக்கிற கதைகள்ல வர்ற மாதிரி இன்னொரு தடவை ‌எங்கேயாவது போய் மண்டைய உடைச்சுக்கிட்டு வரவா? அப்பவாவது பழைய ஞாபகம் வருதான்னு பாக்கலாம்." என்று நக்கலோடு வேதனையைக் கொட்டினான் சத்யானந்தன்.

அன்னையிடம் தன் கோபம்‌ முழுமையும் கொட்டிக் கொண்டிருக்க, மருமகளின் கண்ணீர் கண்டு தாளாதவராக, தேவானந்தன் பேரனை முறைக்கத் தொடங்கி விட்டார்.

"டேய் நிறுத்துடா! பெரிய இவனாட்டம் பேசிட்டே போற? வெளி உலகம்‌ தெரியாம உலகமே வீடுன்னு இருந்த பிள்ளைடா என் மருமக... எங்கே நீ தனக்கும் இல்லாம, திவ்யாவுக்கும் இல்லாம‌ போயிருவியோன்னு பயந்துருக்கு... எந்தப் பொண்ணா இருந்தாலும் தான் பெத்த பிள்ளையோட நல்லதை மட்டும் தான் பாப்பாங்க!" என மருமகளுக்கு மாமனார் வக்காலத்து வாங்க,

"தாத்தா, அவங்க உங்ககிட்டயும் தான் மறைச்சுருக்காங்க!" என சமாதானமடைய மறுத்தான் பேரன்.

"அதுக்கு உங்க தாத்தா உடல்நிலை தான் காரணம் சத்யா... உங்க அப்பா எப்பவுமே சொல்லுவாரு. எங்க அப்பா வெளில பாக்கத் தான்‌ சிங்கம் மாதிரி கம்பீரமாத் தெரிவாரு, ஆனா குழந்தை மாதிரி ரொம்ப பூஞ்சை மனசுன்னு....

அதே மாதிரி தான் உன்னோட ஆக்சிடென்ட் பத்தி கேள்விப் பட்டவுடனே நெஞ்சுவலி வந்து விழுந்துட்டாருடா! இதுல உனக்கு அம்னீஷியா. பழசெல்லாம் மறந்துட்டேனு சொல்லி மேலயும் பயமுறுத்து வேண்டாம்னு தாம்ப்பா சொல்லல." என்று தெளிவுரை விளக்கவுரை எல்லாம் கொடுத்தார் மங்கையர்க்கரசி.

"அதுக்குப் பின்னாலயாவது சொல்லி இருக்கலாம்ல." என்று விடாக்கண்டனாக நின்றான் சத்யா.

"ஆக்சிடென்ட்டையே மறச்சதால எல்லாத்தையும் மறைக்க வேண்டியதாப் போச்சு." என்று கரகரத்து விட்டார் மங்கை.

மாமனாரின் உடல்நலம் கருதி ‌மகனின் விபத்தை ‌மறைத்தவர், அதன் பிறகு‌ வந்த நாட்களிலும், விபத்தைப் பற்றிக்‌ கூறினால், அனைத்தையும் கூற வேண்டியது வரும். எப்பொழுது மகனுக்கு நினைவு திரும்புகிறதோ அப்பொழுது அவரே தெரிந்து கொள்ளட்டும் என விட்டு விட்டார். 

ஆக மொத்தம் அவருமே அதீத மன உளைச்சலில் தவித்திருக்கிறார். ‘உன்னைப் போல எனக்கும் வேதனையும் வருத்தமும் உண்டு’ என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் மங்கையர்க்கரசி.

"ம்மா... நிஜ‌ வாழ்க்கையில எல்லாம் சினிமால வர்ற மாதிரி மறுபடியும் அடிபட்டாலோ, ஆக்சிடென்ட் ஆனாலோ அம்னீசியால நடந்தது எல்லாம் நினைவு திரும்பாதும்மா... நாம தான் நினைவுப் படுத்தணும். படுத்திக்கணும்... அதுக்கு தான் தெரபி ட்ரீட்மென்ட் இருக்கு. முடியலையா அப்படியே விட்டுறணு ம்மா! இதுதான் என் வாழ்க்கைன்னு முடிவோட நம்பிக்கையா வாழத் தொடங்கிடனும்." என்றான் ஆற்றாமையோடு.

"அவங்களுக்கு தான் விபரம் புரியாம பயந்துகிட்டு இருந்தாங்கனா, உங்க ரெண்டு பேத்துக்கும் அறிவு வேலை செய்யலயா?" என திவ்யாவிடமும், விஷ்வாவிடமும் மீண்டும் தன் கோபத்தைத் திருப்ப,

"ஏன்டா ‌கேக்க‌ மாட்ட? முதல்நாள் இழுத்துட்டுப் போயி கோயில்ல வச்சு தாலியக் கட்டிட்டு, ஆப்ரேஷன் முடிஞ்சதும் சிஸ்டர் இருக்க பக்கம் கூடத் திரும்பலயேடா! மூன்றாம்பிறை ஸ்ரீதேவியாவது சீனுவுக்கு‌ ஒரு சாப்பாடு பொட்டலத்தயாவது தூக்கிப் போட்டாங்க... ஆனா அந்த ரூம்ல எல்லோர் கூடவும் சிஸ்டரும் தான் நின்னாங்க. யாருன்னு தானடா கேட்ட நீ!" விஷ்வா கேலி போல் கூறினாலும் அதில் இருந்த வேதனை அவனையும் சுட்டது.

அவன் திவ்யாவின் முகம் பார்க்க, 'இப்படி ஒரு பார்வை மட்டுமாவது அன்று பார்த்திருந்தால் கூட உன்கூடவே வந்திருப்பேனே.' என்றது அவளது நேசப்பார்வை.

"இப்ப என்ன? உன்ன லவ் பண்ணியது என் நினப்புல இல்ல... அதுதானே உன் பிரச்சினை! ஆனா உன்னப் பாத்துல‌ இருந்து நீ எனக்கு சொந்தமில்லயோன்னு மனசு தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும். இந்த நினைப்பு பொய்யில்ல..."  என்றுவிட்டு சற்று அமைதியானவன், இழுத்து மூச்சு விட்டு,

"எனக்கு எங்க அம்மா கருவறையில் இருந்தது கூடத்தான் நினப்புல இல்ல... அதுக்காக நான் அவங்க மகன் இல்லைனு ஆகிறுமா? இல்ல, எனக்கு அவங்க மேல பாசம் வராதா?" ஆழ்ந்த குரலில் அவன் கூற அந்த வார்த்தைகள் அவனவளை கீறிப்பார்த்தது.

சொற்களைக் கற்களாய் வீசி, தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான். ‘நான் உன்னைக் காதலித்த காலம், உன் மனக் கருவறைக்குள் இருந்த காலம். எனக்கு எப்படி நினைவு இருக்கும். அன்பும், காதலும் என்ன வாங்குற பொருளா? இந்தானு எடுத்துக் காமிக்க? இதைவிட சிறப்பாக எப்படி அவன் கொண்ட காதலை அவளுக்கு விளக்கிக் காட்டிவிட முடியும். உயிரும் உருவமுமாக பிரசவித்தது அன்னை என்றால், தன்னைக் காதலாக மனக்கருவறை சுமந்து உணர்வு கொடுத்தவள் நீயடி!’ என்றான்.

அவன் சொல்கேட்டு மனம் தாளாமல் கண்ணீர் வடிக்க, அதைப் பார்த்து கோபம்தான் வந்தது அவனுக்கு.

அவனின் காதல் அதிகப்படியாக வெளிப்படுவது எப்பொழுதும் அவள் மீது அவன் காட்டும் கோபத்தில் தானே! அதைப் புரிந்து கொள்வாளா அவனவள்!

***

மனம் எதிலோ அலைகிறதே
மௌனத்திலே சுகம் பெறவோ
சொல்லாமலே
சொன்னால் என்ன
பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே

ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது
உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது
இன்பம் இனி என்றும்
புது சுரங்களும் பிறக்கட்டும்

விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்