Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 36

நினைவு-36

அடுத்து என்ன செய்வதென்று அந்த குடவுனில் பதட்டத்துடன் திவ்யா யோசித்து கொண்டிருந்த சற்று நேரத்தில் கதவில் தட்டும் சப்தம் கேட்டது.

‘சரி... நிலைமையை யூகித்த்ஹு வெளியே இருந்து திறந்து விடுவார்கள், இனி பயமில்லை’ என்று நினைத்தாள். ஆனாலும் அது பொய்யாகிப் போயிற்று! நேரம் கடந்து கொண்டு இருந்ததே தவிர கதவு திறக்கப்படவில்லை.

மசாலா அரைக்கும் அரவை மெஷினும் அங்குதான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் சற்று நேரத்திற்கெல்லாம் மசாலாக்களின் நெடி துணியையும் மீறி நாசியைத் தாக்கியது. தும்மலும் இருமலும் நீயா நானா என்று போட்டி போட்டுக்கொண்டு அவளைத் தாக்கி, சற்று நேரத்தில் திவ்யாவின் நுரையீரலுக்கு மூச்சுத்திணறலை அறிமுகப்படுத்தியது.

 ***********************

"நந்தினி! திவ்யாவுக்கு கால் பண்ணுங்க! உள்ளே என்ன நிலமையில இருக்கானு கேக்கலாம்?" சத்யா தனது பதட்டத்தை வெளிக்காட்டாமல் நந்தினிக்குக் கட்டளையிட,

அவளும் பதட்டமாக தனது கைபேசியில் திவ்யாவின் நம்பரைத் தேட, "ம்ப்ச்... நம்பர் சொல்லுங்க... நான் கால் பண்றேன்" எனக் கேட்டான்.

நந்தினி திவ்யாவின் ஃபோன் நம்பரைக் கூற, இவனே அழைத்தான் அவனவள் எண்ணிற்கு.

கண்ணன் வரும் வேளை

அந்திமாலை நான் காத்திருந்தேன்

சின்னச் சின்னத் தயக்கம்

சில மயக்கம் அதை

ஏற்க நின்றேன்

கட்டுக்கடங்கா எண்ண

அலைகள் றெக்கை விரிக்கும்

ரெண்டு விழிகள் கூடுபாயும்

குறும்புக்காரன் அவனே

கண்ணன் வரும் வேளை

நான் காத்திருந்தேன். 

பாடல் வரிகள் ஒலித்தது என்னவோ நந்தினியின் கைப்பைக்குள்ளிருந்து தான். 

சாப்பிட்டவுடன் இவளிடம் தான் தனது கைபேசியை கொடுத்துவிட்டுச் சென்றிருந்தாள். பதட்டத்தில் அதுகூட நந்தினிக்கு நினைவில் இல்லை.

"சார்... அவளோட ஃபோன் எங்கிட்ட தான் இருக்கு." என்று கூறியவாறே எடுத்துப் பார்த்த நந்தினியின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் அகல விரிந்தது. திவ்யாவின் கைபேசியில் தெரிந்த தொடுதிரையின் காலர்பிக்சரைப் பார்த்து.

"ம்ப்ச்... இதையும் எடுத்துட்டுப் போகலயா?" சலித்துக் கொண்டான்.

"சார், இன்னொரு தடவை... கால் பண்ணுங்க!" நந்தினி தயங்கியபடியே கேட்க, சுட்டுப்பொசுக்காத குறையாகப் பார்த்து வைத்தான். 

"சார்... ப்ளீஸ்!"

அவளது முகமாற்றத்தைக் கவனித்து விட்டு அவனும் அழைப்பு விடுக்க, ஃபோனை சத்யாவிடமே கொடுத்தாள். 

பார்த்தவன் விழிகளும் நங்கூரம் போட்டது தொடுதிரையில். கையில் நழுவிய ஃபோனை இறுக்கிப் பிடித்தான்.

என்றாவது ஒருநாள் தன்னவன் அழைப்பான் என்றெண்ணி அவனுக்காகவே பிரத்யேகமாக செட் செய்யப்பட்ட பாடலும், காலர் பிக்சரும் தொடுதிரையில், 'கண்ணா' என்ற பெயரோடு தெரிந்தது.

இதோ அவளுடைய கண்ணன் அழைக்கிறான். இவனது அழைப்பை எதிர்பார்த்துக்‌ காத்திருந்தவளோ…. அபாயத்தில் இருக்கிறாள்.

அதிர்வலைகள் அவனது கையிலிருந்த கைபேசியில் மட்டுமல்ல... அவனது இதயக்கூட்டிலும். குழப்ப வட்டம் கரைமுட்டி நின்றது.

இத்தனை நாட்களாக தனது நிலைக்குக் காரணகர்த்தாவும், சற்றுமுன் திவ்யா வீட்டில் நடந்த பேச்சு வார்த்தைகளுக்கு எல்லாம் இதோ விளக்கம் என பொழிப்புரை எழுதிக் கொடுத்தது... திருமணத்தன்று எடுக்கப்பட்ட நிழற்படம்!

இறுக்கிய முடுச்சுகள் படபடவென விடுபட்ட உணர்வு அவனது மூளைக்குள். ‘எப்படி இது சாத்தியம்?’ என்ற சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் சத்தியமான உண்மை அவனது நினைவில் நினைவில்லாமல்...

வினாக்குறியோடு, வியப்புக்குறியும் சேர்ந்து கொள்ள, 'இவள் உன்னவள்.' என்ற அறிகுறியே இரண்டையும் மகிழ்ச்சிக்குறியாக்கியது.

தன் இடதுகை அவளின் தோளோடு அணைத்து நிற்க, மார்பில் தனது‌ கைவிரல் மோதிரத்தோடு புதுமஞ்சள் கயிறு துவண்டு கிடக்க, பூரித்த முகமாய் ஏறிட்டு தன்முகம் பார்த்தபடி தன்னவள் முகம். அந்த நிழற்படமே சொன்னது அவர்களின் நிஜமான நேசத்தை! பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு!

கண்களில் ஆனந்தக்கண்ணீர் சொரிய நின்றவன், இழப்பதாய் இருந்த பொக்கிஷத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் வார்த்தைகள் தொலைத்து நின்றான்.

அதற்குள் கதவின் லாக் உடைக்கப்பட, கதவின் அருகிலேயே சுருண்டு கிடந்தவளைப் பார்த்தவன் உள்ளம் பதறியது. 

"காரை டார்ன் பண்ணி வைக்கச் சொல்லுங்க நந்தினி!" என உத்தரவிட்டு தன் உயிரானவளைப் பார்க்க உள்ளே விரைந்தான்.

அவனது பதட்டத்தைப் பார்த்து, "என்னமோ தம் பொண்டாட்டி மாதிரி இவ்வளவு பதட்டமாப் போறாரு?" ராகவன் பேச்சில் எள்ளல் துள்ள,

"நீங்க சொன்னது தான் உண்மையா இருக்கும்னு நினைக்கிறேன் ராகவன்!" என்றாள் நந்தினி அதிர்ச்சி விலகாமல்.

துவண்டு கிடந்தவளைப் பார்த்தவன், வாரி அள்ளிக் கொள்ள, அவனது‌ சட்டைக்காலரைப் பற்றியவள், பெருமூச்சு வாங்க,

"வர்... வர்றதுக்கு... இவ்... வளவு... நேரமா... கண்ணன்?" மூச்சு வாங்கியவாறே மயங்கிச் சரிந்திருந்தாள் அவன் மார்பின் மீதே! 

"தியா!" என்றது அலறியிருந்தது அவனது இதழ்களும் அவனே அறியாமல்.

 ********************

முகம் முழுதும் சிவந்து, கன்னம் முழுதும் கண்ணீர்க் கோடுகளின் தடம் பதிந்திருந்தது. வெளுத்துப்போன தாலிக்கயிறு அவளது மார்பு மீது படர்ந்து கிடக்க, அதைப் பார்த்தவன், 'தாலி கட்டியிருக்கிறேன்... ஆனால் நினைவில் இல்லை. எங்கே? எப்படி? எப்பொழுது?' என யோசிக்க,

அவளது இடக்கையில் கட்டியிருந்த சாமிக்கயிறு, "தாலி கட்டின உன்னைத் தவிர, இவள் உன் மனைவி என்பது எங்க எல்லோருக்கும் தெரியும்." என்று கேலி பண்ணி சிரிப்பது போல் இருந்தது அவனுக்கு.

திவ்யாவை அருகில் இருந்த மருத்துவமனையிலேயே முதலுதவிக்கென சேர்த்திருந்தான். மூச்சுக் காற்றுக்கென ஆக்சிஜன் பொருத்தப்பட்டு படுத்திருந்தவளையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘மனைவியா? எனக்கா!’ 

‘இவளா என் மனைவி?’

‘இவள்தான் என் மனைவி!’ என்று நிமிடத்திற்கு ஒரு பரிமாணம் காட்டிக் கொண்டிருந்த மனமும் ஸ்திரமாய் ஒரு நிலையில் இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்தது.

அதற்குள் சண்முகமும் மற்ற அனைவரும் வந்திருக்க, யாரிடமும் எதுவும் பேசவில்லை.

"கண்ணா!" என அருகில் வந்த லட்சுமியை கை காட்டி நிறுத்தினான்.

"எதுவா இருந்தாலும் முதல்ல இவ கண்ணு முழிக்கட்டும்! பேசிக்கலாம்!" என்றான். முகத்தில் அவ்வளவு இறுக்கம்.

விஷ்வா காரை ஓட்ட திவ்யாவின் வீட்டிற்கு அனைவரும் திரும்பினர். அது மல்டிப்ளக்ஸ் ஹாஸ்பிடல் இல்லை என்பதால் தேவைக்கான வைத்தியம் மட்டுமே பார்த்து விட்டு, மறுநாள் மீண்டும் வரச் சொல்லி அறிவுறுத்தி விட்டு திவ்யாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்

பின் இருக்கையில் லட்சுமியின் மடியில் படுத்துக்கொண்டு வந்தவளை, காரை விட்டு இறங்கியவன், காரின் பின் கதவைத் திறந்து தூக்க முற்பட, "நானே இறங்கி வர்றேன்." என்றவளை, வழிவிட்டு விலகி நின்றான். 

இறங்கியவள் தடுமாற, தாங்கிப் பிடிப்பான் என நினைக்க, அவனோ கை கட்டி வேடிக்கை தான் பார்த்தான். ‘ச்சோ கோபம் போல... எல்லா நேரமும் மூஞ்சிய தூக்குறாரு!’ என்று சலித்துக் கொண்டது மனைவியின் மனம்.

"ரெண்டு பேரும் வெளியவே நில்லுங்க திவிம்மா!" இருவரிடமும் கூறிவிட்டு உள்ளே சென்ற லட்சுமி, சிறிது நேரத்தில் ஆரத்தி தட்டோடு வெளியில் வந்தார். 

இருவருக்கும் ஆராத்தி சுற்றி திருஷ்டி கழித்தவர், "ரெண்டு பேரும் வலது காலை எடுத்து வச்சு உள்ள வாங்க!" என இருவரையும் உள்ளே அழைக்க, திரும்பி அவன் பார்த்த பார்வையை, விஷ்வா அசட்டு சிரிப்போடு எதிர்கொண்டான். 

"ம்மா! கொஞ்சம் நிக்கச் சொல்லுங்க!" என சொல்லிக்கொண்டே வேகமாக சின்னப்பெண் தேவி வர, 

"ஏன்டீ... புள்ளைகள வாசல்லயே நிப்பாட்டுற?" லட்சுமி அதட்ட,

"ஆரத்தி தட்டுல மாமா காசு போடணும்ல... மச்சினிச்சி காசு எங்களுக்கு வேணும்." தேவி ஆரத்தி பணம் கேட்டு நின்றாள்.

"கண்ணா, எப்போடீ உங்களுக்கு மாமன் ஆனான்? அவன் எனக்கு எப்பவும் மகன் தான். உங்களுக்கு அண்ணன் தான்." தாயாக லட்சுமி பேச,

"அதெல்லாம் செல்லாது... செல்லாது. அவரு எப்ப, அப்பாவ மாமான்னு கூப்பிட்டாரோ அப்பவே நாங்க எல்லாம் மச்சான்ஸ், கொழுந்தியாள்ஸ் தான்." சதீஷ், தேவியின் பேச்சிற்கு கொடி பிடித்தபடி வந்தான். சிறியவர்களின் அடாவடியைப் பார்க்க சூழ்நிலை சற்றே இறுக்கம் தளர்ந்தது.

"ஆமா... நீங்க வேணா கண்ணாவ மகனா வச்சுக்கோங்க. நாங்க சத்யானந்தனை மாமாவா வச்சுக்கறோம்." தேவி அவனைப் பாகம் பிரிக்க,

"ஆமாமா... கண்ணா அண்ணா கஞ்சூஸ்! அஞ்சு ரூபாய்க்கும் ஆயிரம் கணக்கு பாப்பாங்க... சத்யா மாமா தான் கெத்து!" சதீஷ் கூறிவிட்டு தேவிக்கு ஹைஃபை கொடுக்க,

"அடப் பக்கிகளா... தட்டுல போடுற ஒரு நூறு ரூபாய்க்கு எம்மகனையே முறைய மாத்துறீங்களா?" லட்சுமி அங்கலாய்த்தார்.

"ம்மாஆ… என்னாது நூறு ரூபாயா? நாங்க கேட்டது உங்க மகன் கண்ணாகிட்ட இல்ல... எங்க மாமா தி க்ரேட் சத்யானந்தன் கிட்ட... என்ன மாமா... நான் சொல்றது கரெக்டா?" சதீஷ் அவனையும் சப்போர்டடுக்கு அழைக்க, அவனோ நொடிநேரம் விழித்தான்.

"டேய் சத்யா! ஒரு மச்சினிச்சி, ஒரு மச்சான்னாலே களைகட்டும். உனக்கு ஒவ்வொன்னும் ஏழெட்டு இருக்குடா. உம்பாடு திண்டாட்டம் தான்." விஷ்வா, தன் நண்பனை கேலி பேசி நிலைமையை சகஜமாக்க முயற்சித்தான்.

தன் வாலட்டில் இருந்து சில ஐநூறு ரூபாய்களை எடுத்து தட்டில் போட்டுவிட்டு, ‘இப்ப திருப்தியா?’ என்று சிறுவர்களைப் பார்க்க,

“அது எங்க சத்யா மாமா!” என்று கட்டை விரலைக் காட்டினர்.

"சரி... சரி, இப்பயாவது பிள்ளைகள உள்ளே விடுங்க!" லட்சுமி அதட்ட, தன்னவனோடு தன் வீட்டில் அடியெடுத்து வைத்தாள் திவ்யா.

"ஐய்ய்…! கண்ணா அண்ணா வந்திருக்காங்க!" சில பொடுசுகள் கூச்சலிட்டனர்.

"ஃபாரின்ல‌ இருந்து எப்பண்ணா வந்தீங்க?" சில சிறுசுகள் அவனிடம் கேள்விகளைக் கேட்க, 

"ஏன்... எங்ககிட்ட சொல்லாம போனீங்க? உங்ககிட்ட பேசமாட்டோம்." சில வாண்டுகள் செல்லக்கோபம் காட்டி முகம் திருப்ப, அவனோ திரும்பி திவ்யாவைப் பார்த்து முறைத்தான். 

‘ஐயோ நான் என்ன பண்ணேன்!’ என்று பயந்த பார்வையை அவள் பதிலாகக் கொடுக்க,

"சிஸ்டர்... நீங்க போய் ரெஸ்ட் எடுங்க! மத்ததெல்லாம் காலையில பேசிக்கலாம்." விஷ்வா அவளை உள்ளே அனுப்ப முயற்சி செய்ய, அவளோ தன்னவனைப் பார்த்து தயங்கி நின்றாள். 

"அதான் உடன்பிறப்பு சொல்றார்ல... ரூமுல போய் ரெஸ்ட் எடு!" என்று விரட்டாத குறையாக சத்யா சொல்ல, அவளும் தயக்கத்துடனே தனதறைக்குச் சென்றாள். 

"டேய் சத்யா... தேவையில்லாம கோபப்படாதடா! சிஸ்டர் ஏற்கனவே இவ்ளோ நாளா உன்னப் பிரிஞ்சு நொந்து போயிருக்காங்க."

விஷ்வாவின் சொல் கேட்டு தனக்குள் குமைந்து போனான் சத்யா. தன்னவளின் நிலைமை பற்றி தனக்கு இன்னொருவர் சொல்லித் தெரிய வேண்டியுள்ளது. என்ன வாழ்க்கையோ என்று வெறுத்துப் போனது அவனுக்கு!

"என்னது தேவையில்லாம? ம்ம்ம்... என்னைப் பத்தி யாருமே யோசிக்கல... இல்லடா?"  அவனின் குரலில் மிளகாயின் காட்டம்!

"அப்படி இல்லடா..." விஷ்வா விளக்கம் சொல்ல வர, 

"வேணாம் டா… என் நிலமைய சொல்லி உங்களுக்குப் புரிய வைக்க முடியாது விஷ்வா! இவளுக்கான்னு நீங்க எல்லாம் இருந்திருக்கீங்க. ஆனா நான்...?" ஆற்றாமையோடு சொல்லிவிட்டுச் செல்பவனை இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.