Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 34

நினைவு-34

தன்போக்கில் வீட்டிற்குள் நுழைந்த சத்யானந்தனை இழுத்துப் பிடித்து, "டேய் சத்யா! எங்கே வந்திருக்க தெரியுமா?" அதிர்ச்சி விலகாமல் கேட்டான் விஷ்வா.

"லேன்ட் ஓனரைப் பாக்க வந்திருக்கோம். என்னமோ தெரியாதவனாட்டம் கேக்குற!" என்று மெத்தனமாக சத்யா பதில் பேசினான்.

புரோக்கர் கூறியதை எல்லாம் வைத்துக் கூட்டிக் கழித்துக் கணக்குப் போட, அது திவ்யாவின் இடம் எனப் புரிந்தது விஷ்வாவிற்கு.

'அதுக்கு உன் ஆஃபிஸூக்கு இல்லடா போயிருக்கணும். ஓனர் அங்க தானே இருக்கு. உனக்கு தான்டா மாமியார் வீட்டுக்கு வந்திருக்கோம்னு தெரியல.' விஷ்வாவின் மைன்ட் வாய்ஸ் சரமாரியாக நக்கலடித்துக் கொண்டிருந்தது.

வெளிய நின்று பேசிக் கொண்டிருந்தனர். கேட்டைத் திறந்த விஷ்வா, "எதுக்கும் வலது காலை எடுத்து வச்சு வாடா!" எனக் கூற,

"நானென்ன மாமியார் வீட்டுக்காடா வந்திருக்கேன்... வலது காலை எடுத்து வச்சு வர்றதுக்கு?" என்று சத்யாவின் வாய்மொழியே நிலைமையை உரைத்தது.

"‌யாரு கண்டா? எப்ப எது நடக்கும்னு நம்ம கையிலயா இருக்கு? பேசப்போற காரியம் சக்ஸஸ் ஆகனும்னா கூட வலதுகாலை எடுத்து வச்சு வரலாம்டா!" விஷ்வா சொல்ல,

"வரவர நீயும் எங்க அம்மாவும் அடுத்தவங்களுக்கு புரியக் கூடாதுனே ஒரே மாதிரி பேசுறீங்கடா!"

பேசிக் கொண்டே உள்ளே வந்த சத்யாவின் கால்கள் தன்னால் திரும்பியது வலப்புறமாக இருந்த பவளமல்லித் திட்டிற்கு தான். 

"வாங்கப்பா!" பொதுவாகவே மூவரையும் வரவேற்றார் சண்முகம். திட்டு நோக்கித் திரும்பிய கால்கள் சண்முகம் அழைப்பில் பலவந்தமாக முயன்று வீட்டுப் பக்கமாகத் திரும்பியது. 

ஒருமுறை சுற்றிலும் பார்வையை ஓட்டியவன், "இந்த வீடு சூப்பரா இருக்கு! இல்லடா? செடியும் கொடியுமா பாக்கவே மைன்ட் ரிலாக்ஸா ஃபீல் ஆகுதுல்ல... புதுசா வர்ற மாதிரியே இல்லடா!" சிலாகித்துக் கொண்டே வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தான்.

'என்னமோ இவனோட கார்டன் ஏரியால இல்லாத மாதிரி. டேய்... நீ செடியும் கொடியும் மட்டுமா ரசிக்கிற. அதை வளத்த புள்ளயும்ல ரசிச்சிருக்க...' நினைக்க மட்டுமே முடிந்தது விஷ்வாவிற்கு.

உள்ளே வந்து சோஃபாவில் அமர, வரவேற்ற லட்சுமியின் கண்களோ அவனையே பாசம் பொங்க ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தன. மகனாக நினைத்தவனாயிற்றே! கிட்டத்தட்ட யாசோதையின் நிலை.

விட்டுச் சென்ற கண்ணன் மீண்டும் கோகுலம் வந்திருக்கிறான். சமையல் கூடத்தில் இருந்த பாப்பாத்தியும், செல்லாத்தாளுமே வேகமாக அவனைப் பார்க்க வந்தனர். 

"வா கண்ணு... நல்லா இருக்கியா சாமி?" அவர்கள் வீட்டுப் பிள்ளை வீடு வந்து சந்தோஷம் அவர்கள் முகத்திலும். 

புரியாமல் பார்த்தவன், ‘எதார்த்தமானவர்கள்... வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்கின்றனர்’ என நினைத்துக் கொண்டான். 

"நல்லா இருக்கேன் ஆன்ட்டி." என்று சத்யா பதில் கூற,

"என்னது ஆண்ட்டியா? எப்பவும் போல ஆத்தானு கூப்பிடு கண்ணு." என்று பாப்பாத்தி கூறி அவனை குழப்ப வைத்தார்.

சண்முகம் ஒன்றும் பேசவில்லை. எப்படியும் இன்று பேச வேண்டும் என நினைத்தவர் தானே! எப்படியாவது தெரியட்டும் என விட்டு விட்டார். 

ஒருமுறை திவ்யா கூறியிருந்தாள். "நம்மால் எதுவும் செய்ய முடியலைனா தீர்வை அந்த பிரச்சினைகிட்டயே விட்டுட்டு, கைகட்டி ஒதுங்கி நின்னு வேடிக்கை மட்டும் பாக்கணும் அங்கிள்." என்று கூறியிருந்தாள்.

அதையே செயல்படுத்த முடிவெடுத்தார் சிரித்துக் கொண்டே.... 

"என்னடா விஷ்வா? இவங்க என்ன சொல்றாங்க?" சத்யா நண்பனின் காதைக் கடிக்க,

"நானும் உன்கூடத் தானேடா இருக்கேன். எனக்கென்ன தெரியும்?" என்று கழன்று கொண்டான் விஷ்வா. 

"ஏம் பாப்பாத்தி! தாலி கட்டின பொஞ்சாதி நினப்பே இல்லயாம்... உன்னையும் என்னையுமா நினப்புல வச்சுருக்கப் போகுது." என செல்லாத்தாள் கேட்க,

"ஆத்தா... நீங்க போயி வேலையப் பாருங்க. வந்தவுடனே புள்ளயக் குழப்பாதீங்க!" என்றார் லட்சுமியும். அவர் சொல்வதைக் கேட்டுத் தான் இன்னும் அதிகமாக குழம்பவே ஆரம்பித்தான். 

புரோக்கர் தான் வந்த காரியத்தில் கவனம் வைத்தவராக, "சண்முகம் சார், நான் சொன்ன பார்ட்டி இவங்க தான்... நீங்க கேக்குற விலையக் கொடுக்கத் தயாரா இருக்காங்க, என்ன சொல்றீங்க?" என்றார் நேரம் கடத்தாமல்.

"நாங்க தான் அதை விக்கிறது இல்லைனு சொல்லியாச்சே?"

"நானும் சொன்னேன் சார்... ஆனா அந்த இடம் சத்யா சார்க்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதனால தான் நேர்ல அவரே வந்திருக்காரு!"

"அவருக்குப் பிடிச்சதை யாரையும் கேட்காம அவரே எடுத்து தானே பழக்கம். இப்ப என்ன புதுசா அனுமதி கேக்குறாரு?"

சத்யாவிற்குத் தான், ‘நாம் எங்கு வந்திருக்கிறோம், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசுகிறார்களே’ என எண்ணியவனாக சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.

அதற்குள் லட்சுமி காஃபியுடன் வர மூவருக்கும் கொடுத்தார். காஃபியை எடுத்தவன் பார்வை எதிரில் இருந்த ஃபோட்டோவில் பதிய காஃபி டம்ளர் பாதியிலேயே நின்றது. 

பெற்றோரின் கழுத்தைக் காட்டியவாறு குதூகலத்துடன் சிறுபிள்ளையென சிரித்த முகமாக திவ்யாவின் புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவனுக்கு ஆச்சரியம்.

அதிர்ச்சி விலகாமல் சுற்றிலும் பார்வையைத் திருப்ப, மாலை போடப்பட்ட அவளது பெற்றோரின் படமும் பார்வையில் விழுந்தது.

'அப்ப திவ்யாவோட பேரன்ட்ஸ் உயிரோட இல்லையா?' என யோசித்தவன்,

"இது திவ்யாவோட வீடா?" என்றான்.

"ம்ம்... ஒருத்தனுக்கு மாமியார் வீடும் கூட!" என்றான் விஷ்வா.

"டேய்… நானே இவங்க பேசறதை எல்லாம் பாத்து ஏகப்பட்ட குழப்பத்துல இருக்கேன். நீ வேற ஏன்டா?" சத்யா பற்களைக் கடிக்க,

"ஒரு திருத்தம் சத்யா... பேசறதைப் பாத்து இல்ல... கேட்டுனு சொல்லணும்." என்று கடிக்க,

"டேய்ய்... டிவி காமெடி‌ எல்லாம் பாத்து ஏன்டா நேரம் காலம் தெரியாம கடிக்கிற? இல்ல… உன் பாஷைல சொல்லணும்னா கொல்ற!"

இவன் எரிச்சலாகி விட்டான் எனத் தெரிந்து, "சார், சிஸ்டர் வீட்ல இல்லையா?" தெரிந்தே விஷ்வா, சண்முகத்திடம் பேச்சை மாற்றினான்.

"இங்க யார்றா உனக்கு சிஸ்டர்?"

"லேன்ட் ஓனர்டா... இவங்க கார்டியன் தானே? புரோக்கர் சொன்னதைக் கவனிக்கலயா?"

"திவ்யா எப்படா உனக்கு சிஸ்டர் ஆனாங்க?"

"என் மச்சான் தாலி கட்டினதுல இருந்து டா!"

"டேய்… இங்க உனக்கு... உனக்கு யார்றா மச்சான்?"

"சிஸ்டருக்கு தாலி கட்டினான்ல... அவன் தான்.''

"டேய்ய்ய்… விஷ்வாஆஆ!"

"இப்ப எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற? நான் என்னமோ அந்த மச்சானே நீதான்னு சொன்ன மாதிரி!"

"டேய்! இந்தப் பொண்ணு நம்ம ஆஃபிஸ்ல தான்டா வேலை பாக்குது."

"அப்ப இன்னும் ஈஸியாப் போச்சு. நாம கேட்டா இல்லைனா சொல்லப் போறாங்க? வா... அவங்ககிட்ட நேரடியா போயி பேசுவோம்!"

சண்முகத்தைப் பார்த்து, "என்ன சார் சொல்றீங்க? இடத்தை பேசி முடிச்சுக்கலாமா?" எனக் கேட்க,

"இதுல பேசறதுக்கு என்ன இருக்கு? சத்யா சார்க்கு இல்லாததா?" சண்முகமும் கூற,

"அப்ப ரேட்டு என்னன்னு சொல்லுங்க சார்!" என காரியமே கண்ணாக புரோக்கர் குறுக்கே வந்தார்.

"அவருக்கு கொடுக்கறதுக்கு எதுக்கு விலை பேசணும். என்னைக்கு இருந்தாலும் மாப்பிள்ளைக்கு சீரா கொடுக்கப் போறது தானே?" என்ற சண்முகத்தின் பேச்சில் பட்டென எழுந்து விட்டான் சத்யா.

"சார்... நீங்க எல்லாம் ஏதோ பூடகமாவே பேசுறீங்க... இடம் கொடுக்க இஷ்டம் இல்லைங்கறதுக்காக, ஏதேதோ பேசறீங்க போல!"

"நான் எங்கேப்பா இடம் இல்லைனு சொன்னேன்? அதை நான் சொல்லவும் முடியாதே!"

"சார்… நீங்க பேசறதே எனக்குப் புரியல." அலுத்துக் கொண்டவனிடம்,

"அவரு அப்படி தாம்ப்பா... எதையும் பட்டுனு சொல்ல மாட்டாரு... சுத்தி வளைச்சு மூக்கத் தொடுவாரு. சாப்பாட்டு நேரம் தாண்டிப் போச்சு. உனக்குப் பிடிச்ச கொள்ளு சாறும் கொள்ளு துவையலும் செஞ்சுருக்கு. சாப்பிட்டுப் பேசலாம். வாங்க!" என லட்சுமி சாப்பிட அழைக்க,

“மாப்பிள்ளை விருந்து ஜாமாய்!” விஷ்வா சிரித்து விட்டான்.

சத்யாவோ, 'அது சரி… இவங்க என்னமோ பட்டுனு சொன்ன மாதிரி.' என அங்கலாய்த்துக் கொண்டான்.

"லட்சுமி, நீ சொல்றது எல்லாம் கண்ணனுக்குப் பிடிச்சது. சத்யானந்தன் சார்க்கு என்ன பிடிக்கும்? அவங்க நம்ம வீட்ல எல்லாம் சாப்பிடுவாங்களானு கேட்டியா?" என்று கேட்ட சண்முகத்தின் குரலில் வருத்தமும் ஏக்கமும் கலந்திருந்தது.

சத்யா திரும்பி விஷ்வாவைப் பார்க்க, அவனோ யாருக்கு வந்த விருந்தோ என அமர்ந்திருந்தான். 

"சார் நீங்க யாரோனு நினச்சு எங்க கிட்ட பேசுறீங்க போல?" சத்யா குழப்பமாக,

"யாரோனு ஆகிட்டதால தான் இது எல்லாம் பேச வேண்டியிருக்கு." என்றார் சண்முகம்.

"டேய் விஷ்வா! என்னடா நடக்குது இங்க?" குனிந்து விஷ்வாவிடம் கிசுகிசுத்தான்.

"இங்க ஒன்னுமே நடக்கலயேடா... சார் உக்காந்து தான் இருக்காரு. மேடம் கூட நின்னுட்டு தானே இருக்காங்க!"

'கண்ட கண்ட காமெடி ஷோ எல்லாம் பாத்துத் தொலையாதடான்னா... எருமை அதையே பாத்துத் தொலஞ்சுட்டு நேரம் காலம் தெரியாம உசுர வாங்குது.'- சத்யாவின் மைன்ட் வாய்ஸ்.

"எங்களையும் தான் கண்ட கண்ட கதையெல்லாம் படிக்காதீங்கனு சொல்றாங்க.... இந்தா நாங்க படிக்கல!" 

ரீடர்ஸ்: மைன்ட் வாய்ஸ்னு நினைச்சுக்கிட்டு சத்தமா சொல்லிட்டீங்க.'- ரைட்டரோட மைன்ட் வாய்ஸ்.

"வாங்க விஷ்வா ண்ணா!"

"யார்றா இது ஊடால?" என விஷ்வா அதிர்ச்சியாகத் திரும்ப,

பத்தாவது பொதுத்தேர்வுக்காக, ஸ்டடி லீவில் இருந்த சதீஷ் கீழே இறங்கி வந்தவன் விஷ்வாவை வரவேற்றவாறு உள்ளே வந்தான்.

'வாடா... உன் பங்கு மிச்சமிருந்துச்சா?' என நினைத்துக் கொண்டிருந்த விஷ்வாவிடம்,

"என்னங்க அண்ணா எப்பவும் ஆன்ட்டி கூடத்தான் வருவீங்க? இன்னைக்கி அண்ணா கூட வந்திருக்கீங்க. ஆமா... வந்திருக்கிறது கண்ணா அண்ணாவா? இல்ல, சத்யா சாரா?"

"ஏன்டா நான் பாட்டுக்கு ஆடியன்சா உக்காந்துட்டு இருக்கேன். என்னைய ஏன்டா கிரவுன்டுக்குள்ள இழுக்குற?"

"விளையாட்டை மட்டும் பார்க்காதீங்க. இறங்கி விளையாடுங்க.... ஆனால் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது."

"அதுதான் அபாயம் உன் ரூபத்துல வந்துருச்சே? நீ நடத்து ராசா!" விஷ்வா நிமிர்ந்து அமர்ந்து கைகட்டி அடைக்கலமாக,

"ம்கூம்…. கண்ணா அண்ணாவா இருந்தா ஒரு கேள்வி கேக்கலாம்னு நினைச்சேன்." என சதீஷ் அலுத்துக் கொண்டான்.

"என்னடா கேக்க நினச்ச?" விஷ்வா ஆர்வமாய் அவனிடம் கேட்க,

"இவரு ஆதிக்கா பெர்த்டேக்கே கேசரியோட முடிச்சுட்டாரு. அப்பவே கேட்டதுக்கு அடுத்த தடவை ஜமாய்ச்சுரலாம்னு சொன்னாரு ண்ணா.... ஆனா கல்யாணத்துக்கு ஒரு சாம்பார் சோறு கூடப் போடல... அட்லீஸ்ட் பந்தியில கடைசியில வைக்கிற ஐஸ்கிரீம் கூட வாங்கிக் கொடுக்கலண்ணே... சொல்லாம கொள்ளாம வேற போயிட்டாரு!"

"ஏன்டா அவன் அவனுக்கு என்ன பிரச்சினை... உனக்கு சோறு தான் முக்கியமா போச்சா?" லட்சுமி அவனைக் கண்டிக்க,

"யெஸ் ம்மா... வயிறு முக்கியம். மத்ததெல்லாம் அப்புறம் தான்."

இப்பொழுது சத்யா எரிச்சல் கோபம் கடந்து நிதானித்தான் திவ்யாவின் பெயரைக் கேட்டு.

ஒவ்வொருத்தரும் அவனது நினைவுப் படுகையில் படிந்த தூசிப்படலத்தை தட்டிக் கொண்டிருந்தனர். மீண்டும் சோஃபாவில் அமர்ந்து விட்டான். மூளை மீண்டும் இங்கு வந்ததில் இருந்து நடந்தனவற்றை ஓட்டிப் பார்க்க, எதுவும் புலப்படவில்லை.

யோசனையோடே அவனது பார்வைச் சுழற்சி மீண்டும் திவ்யாவின் பெற்றோரின் புகைப்படத்தில் பதிய, அதிலிருந்த மறைவு தேதி கண்ணிலும் பட்டு, கருத்திலும் பதிய, 'இருவரின் மறைவு தினம் ஒரே தினமா! அதுவும் அந்த தேதியிலா!' 

ஏற்கனவே அனைவரும் உலப்பிய நினைவுக்குளம் மீண்டும் கல்லெறியப்பட்டு குழப்ப வட்டத்தின் எண்ணிக்கையை அதிகமாக்கியது. 

***