Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 33

நினைவு-33

மங்கையர்க்கரசியின் பேச்சில் நியாயம் தென்பட்டாலும் தங்கள் வீட்டுப் பெண்ணிற்காக மட்டுமே யோசிக்கும் நிலையில் இருந்தார் சண்முகம்.

''நீங்க பயப்பட இது ஒன்னும் சின்னப் பிள்ளைக விளையாட்டு இல்லம்மா... ரெண்டு பேரோட வாழ்க்கை. நாங்க அப்படியே விட முடியாது. அன்னைக்கும் நீங்க சொன்னீங்களேனு தான் அமைதியா போனோம். இன்னைக்கு நீங்க வரலைன்னா நாங்க அங்க வந்திருப்போம்." என்று திட்டமாக கூறிமுடித்தார்.

இப்படியே எத்தனை நாட்களுக்கு விடமுடியும்? நேற்றைய திவ்யாவின் நிலை பார்த்து இன்று எப்படியும் மங்கையர்க்கரசியிடம் போய் பேச வேண்டும் என லட்சுமி கணவரிடம் கூறியிருந்தார்.

"எனக்கும் சீக்கிரம் சத்யாகிட்ட இதைப் பத்தி பேசிடணும். அவனோட தாத்தா தீவிரமா பொண்ணுப் பாக்க ஆரம்பிச்சுட்டாரு! ராமநாதன் சாரோட பேத்திய சத்யாவுக்கு பேசத் தயாரா இருக்காங்க... நேத்து அதுக்கு தான் ஜாதகம் பாத்தாங்க. அதுல தான் நேரம் சரியில்லை, கொஞ்சநாள் போகட்டும்னு சொல்லி இருக்காங்க!" என்றார் மங்கையர்க்கரசி.

இதைக் கேட்டு திவ்யாவிற்கு தான் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ஒருநாள் விளையாட்டாக, "காதலிக்கு மாப்பிள்ளை பார்க்கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்." என்று அவன் கூறியது நினைவு வந்தது.

'இன்று தன் கணவனுக்கு திருமணப் பேச்சு நடைபெறுகிறது எனக் கேட்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்திருக்கிறது.' என்று விரக்தியோடு நினைத்துக் கொண்டாள்.

"நல்லா இருக்கும்மா நீங்க சொல்றது... கல்யாணமான உங்க மகனுக்கு நீங்க பொண்ணு பாக்குறீங்க. ஆனா வயசுப் பொண்ண கல்யாணமாகியும் வீட்ல வச்சுறுக்கிறது எவ்வளவு சங்கட்டம் தெரியுமா? இப்பவே திவ்யாவோட சொந்தக்காரங்க எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க." சண்முகம் சற்று அழுத்தமாகப் பேச பதில் வார்த்தையின்றி மௌனம் சாதித்தார் மங்கையர்க்கரசி.

"..."

"எதுடா சாக்குனு இருந்தவங்ளுக்கு, நாமலே இந்தா புடிங்கனு வலிய பேசறதுக்கு இடம் கொடுத்த மாதிரி ஆகிப் போச்சு. நீங்க பெரிய இடம்மா... வெளிப்பேச்சு நாலு நிலை தாண்டி தான் உங்களை வந்து சேரும். ஆனா நாங்க அப்படி இல்ல. தெருவுல நாங்க வாசப்படி தாண்டி இறங்குறதுக்கு முன்னாடியே எங்களைப் பத்தினப் பேச்சு வீதிக்கு வந்துரும்." 

தனது ஆற்றாமையை சண்முகம் மங்கையர்க்கரசியிடம் கொட்டிக் கொண்டிருந்தார். நடுத்தர வர்க்கத்தினரின் அங்கலாய்ப்பு அது. 

அவரின் பேச்சைக் கேட்டு மங்கையர்க்கரசி குற்ற உணர்வில் குமைய, அவரது முகம் பார்த்த திவ்யாவிற்கு மாமியாரின் நிலமை தெளிவாகப் புரிந்தது.

"அங்கிள்... அவங்களை மட்டும் இதுல குறை சொல்ல முடியாது. கண்ணாவுக்கு நினைவு வரட்டும்னு நானும் தானே வீம்பா இருக்கேன். நாளைக்கு உண்மை தெரியும் போது, ஏன் சொல்லலைங்கற கேள்வி ஆன்ட்டிகிட்ட கேக்குறவங்க, ஏன் என்னைத் தேடி வரலைன்னு என்கிட்டயும் தானே கேப்பாங்க!

இப்படி ஏதாவது ஆகிட்டா நான் அவரைத் தேடி வரணும்னு தானே யாரையும் கேக்காம எனக்குத் தாலி கட்டுனாங்க. இப்ப ஆன்ட்டிக்கு இருக்குற அதே பயம் எனக்கும் கொஞ்சநாளா இருக்கு அங்கிள்.” என்று முடித்தாள்.

 தன்னவனை சந்தித்ததில் இருந்து திவ்யாவிற்கும் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சம் நெருடுகிறது தான். இவள் மீது அவன் கொண்ட காதலின் தீவிரம் இவளுக்கு நன்கு தெரியும்.

இவளை இழந்து விடக் கூடாதென்றே, அறுவை சிகிச்சைக்கு முன், முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று, அவளது சம்மதம் கூட கேளாமல் தாலி கட்டியிருக்கிறான்.

அப்படியிருக்க, எல்லாம் தெரிந்தும், தன்னவனைத் தேடிச் செல்லாமல், ஒதுங்கியிருப்பது எவ்வகை நியாயம் என்று மனசாட்சி கேள்வி கேட்கிறது. நாளை நினைவுவந்து என்னைத் தேடி ஏன் வரவில்லை என்று அவன் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது?

அவன் காதலுக்கு நியாயம் செய்துவிட்டே சென்றான். தன் காதலுக்காக தாம் என்ன செய்தோம் என்ற கேள்வி அவளுக்குள் எழுகிறது. அவனுக்கு நினைவில் இல்லையென்று இவளும் தானே காதலை அனாதையாக்கி விட்டாள்.

அவனது ஆழ்மனக் காதல் வேண்டும் என நினைத்தவள், அதை வெளிக்கொணரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லையே! மறைத்ததற்காக அன்னையை மன்னிக்கக் கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் தன் நிலைமையை நினைத்தால் தான் அச்சம் மேலிடுகிறது. 

மறந்தது அவன் தவறல்ல... ஆனால் மறைத்தது? சில விஷயங்களை ஆறப்போட்டு யோசிக்கும் பொழுது அது வேறொரு அவதாரம் எடுத்து நிற்கிறது. 

அன்று தன் நிலையில்‌ இருந்து முடிவு செய்தவள், இன்று தன்னவன் நிலையில் நின்று யோசிக்கும் பொழுது தான் செய்தது தவறோ என எண்ணம் மேலிடுகிறது.

"நீ எதையாவது நினச்சு குழப்பிகிட்டே தான் இருப்ப... தெளிவா முடிவு பண்ண மாட்ட." அவன் கூறிய வார்த்தைகள் இன்றும் அவளை அச்சுறுத்துகிறது.

கணவனின் செயல்களில் எல்லாம் மனைவிக்கும் பங்கு இருக்கிறதல்லவா? மறந்தது விதியின் செயல் என்றால், கணவனுக்குத் தன் காதலை நினைவூட்டத் தவறியது தன் தவறல்லவா? "புருஷன் முடிவு தான், பொண்டாட்டி முடிவாகவும் இருக்கணும்!" என்று கூறித் தானே தாலி கட்டினான்.

இப்பொழுதெல்லாம் சத்யாவின் கண்களில் தெரியும் கோபம் மேலும் அவளை மிரட்டிப் பார்க்கிறது. கண்ணனாகவும் அவனுக்கு கோபம் வரும்தான். ஆனால் அதில் அவளுக்கான அக்கறை தெரியும். இவனது கோபம் எவ்வகை எனத் தெரியவில்லை. 

பெண்ணவளுக்கு எங்கே தெரிகிறது... அவனது கோபமே அவள் மீது அவனுக்கு ஏற்படும் ஈர்ப்பு தானென்று! 

"இதுல மட்டும் மாமியாரும் மருமகளும் ஒத்துமையா இருக்கீங்கம்மா." என்று லட்சுமி நொடித்துக் கூற,

"நீங்களே எங்க ஒத்துமையைப் பாத்து ஒருநாள் கண்ணு வைப்பீங்க ஆன்ட்டி!" என்று லட்சுமியிடம் கூறி சிரித்தாள் திவ்யா.

"நாங்களும் அந்த ஒருநாள் எப்ப வரும்னு தாம்மா எதிர்பாக்குறோம்." என்றார்.

பேச்சு சற்று திசை மாறவும், தான் கொண்டு வந்திருந்த கயிற்றை எடுத்து மருமகளின் இடக்கையில் கட்டி விட்டார்.

"சீக்கிரம் நல்லநேரம் வரும்மா திவ்யா! நான் கிளம்பறேன்." என்றவர் வெளியேற, திவ்யாவும் அலுவலகம் புறப்பட்டுச் சென்றாள்.

"என்னைக்கு நல்லநேரம்‌ வர்றது? இப்படியே விட்டா ஒன்னும் சரிப்படாது. கண்ணனை நேர்ல பாக்கலாம்னு இருக்கேன் லட்சுமி!" சண்முகம் தன் முடிவை கூறிக் கொண்டிருந்தார்.

அவரும் சாப்பிட்டு வந்து சோஃபாவில் அமர, அலைபேசி அழைத்தது. யாரென்று எடுத்துப் பார்த்தார். புது எண்ணாக இருக்க, தொடர்பு கொண்டார்.

"சண்முகம் சார்... நான் புரோக்கர் பேசுறேன். அந்த இடத்துக்கு நல்ல பார்ட்டி கிடைச்சிருக்குங்க... நீங்க கேட்ட விலையைக் கொடுப்பாங்க. ரெண்டு மடங்கா பேசி வாங்கி தர்றேனுங்க சார், என்ன சொல்றீங்க?" எதிர் முனையில் புரோக்கர் கேட்க,

"ஏங்க… உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது. நாங்க என்ன அந்த இடத்தை விக்கறதாச் சொன்னோமா? ஏன் இப்படி அடிக்கடி ஃபோன் பண்றீங்க." சண்முகம் சற்று கோபமாகவே கேட்டார்.

"இல்லீங்க... நல்ல ரேட்டு படிஞ்சு வருது. காத்துள்ள போதே தூத்திக்கணும் இல்லையா... அப்புறமா யோசிச்சு என்ன பிரயோஜனம் சொல்லுங்க? அது சின்னப்புள்ள. அதுக்கு என்ன தெரியுமுங்க? நீங்க சொன்னா கேட்டுக்கப் போவுது."

"திவ்யாவே சொன்னாலும் அந்த இடம் விக்கறதா இல்லைங்க... இனிமே இதைப் பத்தி பேசறதுக்கு ஃபோன் பண்ணாதீங்க!" என்றவர் கோபமாக அழைப்பைத் துண்டித்தார்.

அவர்கள் பேசிக் கொண்டது திவ்யாவின் பெற்றோர் வாங்கி வைத்திருக்கும் இடத்தைப் பற்றித்தான். நகரின் முக்கிய இடத்தில் இருப்பதால் பல பேருடைய கவனத்தில் படுகிறது. அந்த புரோக்கரும் எப்படியாவது பேசி முடித்து விட்டால் கணிசமான தொகையைக் கமிஷனாகப் பார்க்கலாம் என்று பலமுறை சண்முகத்தை கேட்டுப் பார்த்தார். 

திவ்யாவிற்கு கார்டியனாக இருப்பதால் இவரையே நாட வேண்டி உள்ளது. அவளுக்கு அவ்விடத்தை விற்க விருப்பமும் இல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. 

பள்ளி ஆரம்பிக்கும் ஆசையில், விவசாயம் பார்க்க ஆளில்லாத பூர்வீக சொத்தை விற்று விட்டு, அவளின் பெற்றோர் வாங்கிப் போட்ட இடமது! அன்று நகரின் ஒதுக்குப் புறமாக இருந்தது.

இன்று நகரத்தின் முக்கிய எல்லைக்குள் வந்து விட்டதால், கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகள் பல அவ்விடத்திற்காக மோதிப் பார்க்கின்றனர். இவர்கள் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை.

சற்று நேரத்தில் இன்னொரு அழைப்பு வர, அதைப் பார்த்த சண்முகம் முகத்தில் சற்று அதிர்ச்சி. இருக்காதா என்ன?

கணவரின் முகத்தைப் பார்த்தவர், என்னவென்று சைகையில் கேட்க, "கண்ணா தான் ஃபோன்ல..." என்றார்.

"என்னானு கேளுங்க!" லட்சுமி பரபரப்பாகக் கூற, அழைப்பை ஏற்றார்.

"ஹலோ!"

"சார் நான் ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸ் எம்.டி. சத்யானந்தன் பேசுறேன். உங்க இடத்துக்கிட்ட தான் இருக்கோம். உங்கள நேர்ல சந்திக்கணும். இப்ப வரலாமா?"

சண்முகத்தின் முகத்தில் அவன் கூறியதைக் கேட்டு முறுவல் எட்டிப் பார்த்தது. கூடவே வருத்தமும் சங்கடமும் அவரின் மனதில் தோன்றியது.

என்னவென்று லட்சுமி தலையாட்டி கேட்க, "ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸ் எம்.டி சத்யானந்தன் பேசுறார் லட்சுமி!" என மனைவியிடம் கூறியவர்,

"சரி, வாங்க!” என அழைப்பை துண்டித்தார். சற்றுமுன் வந்த அழைப்பும் இடம் சம்பந்தப்பட்டது தான் எனத் தெரிந்தவர், இடம் தேவைப்படுவது கண்ணனுக்கு தான் என யூகித்துக் கொண்டவரின் முகத்தில் புன்னகை பூத்தது.

காலையிலிருந்து சுற்றி புரோக்கரும் இரண்டு மூன்று இடங்களைக் காண்பிக்க சத்யாவிற்கு இந்த இடமே பிடித்தது. இரண்டு கம்பெனிகளுக்கும் பொதுவான தூரத்தில் அருகிலேயே, தாங்கள் எதிர்பார்த்த அம்சங்களோடு இடம் விஸ்தாரமாக இருந்தது.

பைபாஸ் சாலைக்கு அருகில் அந்த இடம் அமைந்திருக்க, சரக்குகள் போக்குவரத்திற்கும் ஏதுவான இடம் என எண்ணினான். எனவே தானே நேரில் ஒருமுறைப் பேசிப் பார்க்கலாம் என கேட்டுக் கொண்டிருக்கிறான்.

"சார்... நான் ஏற்கனவே பல தடவை கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிஸ்க்காக இந்த இடத்தப் பேசிப் பாத்துட்டேன். இடத்துக்கு உரிமையானவங்க உயிரோட இல்ல. அவங்க பொண்ணுதான் இருக்கு. இவரு கார்டியன் தான். ஆனாலும் அசைய மாட்டேங்கறாரு!"

அவர் கவலை அவருக்கு... எங்கே பார்ட்டிகள் இருவரும் நேருக்கு நேராகப் பேசிக் கொண்டால் தனது கமிஷன் அடிபடுமே என்ற எண்ணம்.

சத்யாவிற்கோ இவ்விடத்தை விட மனமில்லாமல் ஏதோ ஒன்று அவனை இழுத்தது. எனவே தானே பேசிப் பார்ப்பது என முடிவெடுத்து விட்டான். 

கார் நின்ற இடத்தைப் பார்த்து விஷ்வா அதிர்ச்சி ஆக, புரோக்கருடன் சேர்ந்து மூவருமே கீழே இறங்கினர். 

தாலி கட்டிவிட்டு புது மாப்பிள்ளையாக இவ்விடத்தை விட்டுச் சென்றவன், அந்த நினைப்பு சிறிதும் இல்லாமல் புது மனிதனாக அவ்வீட்டிற்கு விஜயம் செய்கிறான். வந்தவன் தன் நிலையை உணர்ந்து கொள்வானா?

எச கேட்டா நீதானோ
நெரமெல்லாம் நீதானோ

தெனம் நீ தூங்கும் வரத்தான்
என் வாழ்க்கையே
விடுஞ்சு உன் பேச்சொலி கேட்டாத்தான்
எடுப்பன் மூச்சையே

உன்ன சுமக்கிற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொள்ளாதே கண்ணின் ஓரமா


உனக்காக வாழ நினைக்கிறேன்
உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்