Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 32

நினைவு-32

காலை ஜாகிங் முடித்துவிட்டு வியர்க்க விறுவிறுக்க வீடு வந்தான் சத்யானந்தன். தன் பேரனின் மீது பார்வையை ஓட்டியவாறே அவனது தாத்தா அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே தனது நடைப் பயிற்சியை செய்து கொண்டிருந்தார்.

இதமான இளங்காலையில், சூரியனின் இளங்கதிரின் செவ்வொளி பட்டு, முறுக்கேறிய புஜங்கள், வெண்கலச் சிலை என மின்ன, இடுப்பில் வலக்கை ஊன்றி, நெற்றி வியர்வையை இடக்கை ஆட்காட்டி‌ விரல் கொண்டு துடைத்து சுண்டிய பேரனின் தோரணையைப் பார்த்தவர், "அழகன்டா!" என்று சிலாகித்தார் பெரியவர்.

"தாத்தா! என்னைய சைட் அடிச்சது போதும்!" எனக்கூறி சிரித்தவன்,

"நீங்க எத்தனை எட்டு போட்டாலும் எவனும் லைசென்ஸ் தர மாட்டான்." என எட்டுவடிவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவரை பேரனும் கேலி பேசினான்.

"டிக்கெட் வாங்க வேண்டிய வயசுல லைசென்ஸ் வாங்கி நான் என்னடா பண்ணப் போறேன்? நான் லைசென்ஸ் வாங்குறது இருக்கட்டும். நீ எப்ப ராமநாதன் பேத்தியப் பாக்கப் போற?" 

பேரன் மனது மாறுவதற்குள் அடுத்தகட்ட வேலையை துரிதப்படுத்த எண்ணினார் தேவானந்தன்.

"வயசாகிட்டா புத்தி மழுங்கிப் போகும்ங்கறது சரியாத்தானிருக்கு மாமா... காலங்காத்தால என்ன தத்துப்பித்துனு உளறிக்கிட்டு? வாயக் கழுவுங்க! ஏற்கனவே நேத்து ஜோசியர் வேற நேரம் சரியில்லைனு சொல்லி இருக்காரு!" என மாமனாரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தவாறே மங்கையர்க்கரசி பெரியவருக்கு சத்துமாவுக் கஞ்சியும், மகனுக்கு காஃபியும் எடுத்து வந்தார்.

மருமகள் ஜாதகத்தைக் காரணம் காட்ட, உடனே ஜோசியரை வரவழைத்து பேரனது ஜாதகத்தைப் பார்க்க, குடும்பத்தில் ஒருவருக்கு நேரம் சரியில்லை எனக் கூறிச் சென்றிருக்கிறார்.

"ஏம்மா நெருப்புன்னு சொன்னா வாயா வெந்து போகும்? அதெல்லாம் கொள்ளுப் பேரனைப் பாக்காம நான் போக மாட்டேன். நீ பயப்படாதேம்மா!" என்று தைரியம் சொல்ல,

"ம்மா... இவரு தேக்கு மாதிரி, வயசு ஏற ஏற வைரம்பாயுற கட்டை!" சத்யனும் சமாதனம் கூறினான்.

"டேய்! தேக்குகட்டை நாட்டுக் கட்டைனு சொல்லிட்டு பேச்சை மாத்தாதே... நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடா!" என்று தாத்தா எகிற,

"பாத்தீங்களா? என்னமோ வயசாயிருச்சுனீங்க... அவரு நாட்டுக் கட்டையப்பத்திப் பேசுறாரு?" என்று வாரிவிட்டான் பேரன்.

"டேய்! தேவையில்லாம பேச்சை மாத்தாதே... கேட்டதுக்கு பதில் சொல்லு!"- விடாப்பிடியாக தாத்தா நிற்க,

"இன்னைக்கு புதுக் கம்பெனில கொஞ்சம் ‌வேலை‌ இருக்கு தாத்தா! விஷ்வாவை வரச்சொல்லி இருக்கேன். குடவுன் பத்தல... வேற இடம் பாக்கணும்."

"ஏன்டா... என்னமோ வாங்கும்போது இதை வாங்கி என்ன ஆகப்போகுதுனு கேட்ட? நீங்களாச்சு... உங்க தோஸ்த்து கம்பெனியும் ஆச்சுன்னு கழட்டி விட்ட... இப்ப என்னடான்னா அந்த ஆபிஸே கதின்னு கிடக்குற!" என்று அங்கலாய்த்து பேரனின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார்.

"நீங்க தானே தாத்தா... அதுதான் எங்களோட முதல் விதைன்னு‌ சொன்னீங்க. அதான் விதையை விருட்சமாக்க ஆக வேண்டியதைப் பாக்குறேன்."

"குடும்பத்தை விருட்சமாக்குற வழியைப் பார்றான்னு சொல்றேன். இவன் என்னடான்னா கம்பெனியை விருட்சமாக்கப் போறானாம்." என்று தாத்தா அலுத்துக் கொள்ள,

"அந்தக் கம்பெனிக்கு போனாதான்‌ நம்ம குடும்ப விருட்சம் தழையும்." என மங்கையர்க்கரசி பதிலுரைத்தார்.

"வரவர என் மருமக பேசுறது ஒன்னும் புரிய மாட்டேங்குதுடா! உனக்கு ஏதாவது புரியுது?" என்று பேரனைப் பார்த்து பெரியவர் கேட்க,

"உங்க மருமக தானே... அப்படித்தான் இருப்பாங்க!" என்றவன் காபியைக் குடித்து விட்டு காபி கோப்பையை அம்மாவிடம் கொடுத்தவன், வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

மீண்டும் தாத்தா பெண் பார்க்கும் பேச்சை ஆரம்பித்து விடுவார் என்று எண்ணியவனாக. அன்று ஏதோ ஒரு வேகத்தில் சம்மதம் கூறிவிட்டானே ஒழிய, மீண்டும் திருமணப்பேச்சில் மனது ஈடுபட மறுக்கிறது.

குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பியவனை, பூஜை அறையில் இருந்து கொண்டு மங்கையர்க்கரசி அழைத்தார்.

"தம்பி! இங்க வா!"

"என்னங்கம்மா?"

"நேத்து உன் ஜாதகம் பார்த்ததுல நம்ம குடும்பத்துக்கு நேரம் கொஞ்சம் சரியில்லைனு நம்ம ஜோசியர் சொல்லி இருக்காருப்பா... இந்தக் கயிறு நம்ம குலசாமி கோயில்ல பூஜை பண்ணி வர வச்சது. கையைக் காமி!" எனக் கூறியவர் மகனின் வலதுகையில் ஒரு கயிறைக் கட்டி விட்டார்.

மகனுக்கு இதில் நம்பிக்கை இல்லை எனினும் அம்மாவிற்காகக் கட்டிக் கொண்டான். இவனின் தும்மலுக்கே தாய் துடிக்கின்றாள் அல்லவா!

"அந்த ஆக்சிடன்ட் ஆனதுல இருந்து ரொம்பத்தான் பயந்து போயிருக்கீங்க ம்மா!"

"இல்லையா பின்னே... நீ நாடோடி மாதிரி சுத்திக்கிட்டு, எங்க இருக்கேனே தெரியாம இருப்ப... அம்மா பயப்பட மாட்டாங்களா?" ஹாலில் கேட்டது விஷ்வாவின் குரல்.

"வாடா... மச்சா!" எனத் திரும்பியவன்,

"இப்பத் தான் நான் எங்கயும் போறது இல்லையேடா... ஆக்சிடன்டாகி கோமா ஸ்டேஜ்கு போனதுல இருந்து, இவங்க பயத்துனாலயும், தாத்தா உடல்நிலையும் யோசிச்சு எல்லாத்தையும் விட்டாச்சே!" என்றான். 

சத்யா கோமா ஸ்டேஜ் எனக் கூறவும் விஷ்வா, மங்கையர்க்கரசியை திரும்பிப் பார்த்தான்.

சத்யானந்தன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தெளிந்தவன் இவ்வளவு நாட்களாக என்னவாயிற்று எனக் கேட்க, கோமா நிலையில் ஒன்றரை மாதமாக இருந்ததாக கூறிவிட்டார். எதையும் அதிகமாகக் கிளற வேண்டாம் என்று எண்ணிக்கொண்டு எல்லாவற்றையும் முடிந்தளவிற்கு மறைத்து விட்டனர். 

இதய அறுவைச்சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்த மாமனாரிடமும், அவரது உடல்நலம் கருதி, பேரன் அட்வன்சர் ட்ரிப் முடித்து இப்பொழுது தான் வந்ததாகக் கூறப்பட்டது.

தொடர்பு எல்லைக்கு வெளியே மாட்டிக் கொண்டதால், ஃபோனில் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், நமக்குக் கிடைத்த விபத்து தகவல் தவறானது எனவும் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கூறிவிட்டார்.

பேரன் விபத்தில் சிக்கினான். இறப்பு வரை சென்று வந்தான். அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டான் எனத் தெரிந்தால், விபத்து என கேள்விப்பட்டதற்கே நெஞ்சுவலி வந்து மயங்கியவர் நிலை என்னவாகுமோ என அவரிடமும் அனைத்தும் மறைக்கப்பட்டது.

திவ்யாவிடம் கூறியது போலவே முடிவை காலத்தின் கையில் விட்டுவிட்டார். ஆனால் அதற்கு பலியாக அந்த பேதைப்பெண்ணை தவிக்க விட்டு விட்டார். அந்த குற்ற உணர்வும் அவரைக் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க தேவானந்தனும் குளித்து விட்டு வந்தார். அவரிடமும் ஒரு கயிறை மருமகள் கொடுக்க, அவரின் கையிலிருந்த மீதி இரண்டு கயிற்றைப் பார்த்தவர், "ஒன்னு உனக்கு. இன்னொன்னு யாருக்குமா?" என்றார்.

"ஏன் மாமா? கயிறக் கூட கணக்குப் பாத்தா வாங்க முடியும்? கோயில்ல இருந்து ஒன்னு எக்ஸ்ட்ரா வந்திருக்கும்." என்றார் மங்கையர்க்கரசி.

"எல்லாம் உங்க குடும்பத்து ஆளுக்காகத் தானிருக்கும் தாத்தா!" என்ற விஷ்வா, "இல்லையா ஆன்ட்டி?" என மங்கையர்க்கரசியிடமும் கேட்டான்.

"இப்ப இவனும் சேந்துட்டான்டா... உங்க‌ அம்மா மாதிரியே புரியாமப் பேசுறதுக்கு." என்றார் தாத்தா.

"புரிஞ்சவங்களுக்கும், புரியாதவங்களுக்கும் இடையில மாட்டிக்கிட்டு முழிக்கிற என்ன மாதிரி ஃப்ரென்டு கேரக்டர் இருக்கே... ரொம்ப பாவம்டா சாமி!" என விஷ்வா நொந்து கொள்ள,

"ம்மா... முதல்ல இவனுக்கு டிஃபன் எடுத்து வைங்க... பசியில லூசு மாதிரி உளர ஆரம்பிச்சுட்டான் பாருங்க!"

"நான் லூசா? நீங்க எல்லாம் நல்லா வருவீங்கடா... ஆன்ட்டி, நீங்க வாங்க! டிஃபன் எடுத்து வைங்க!" என்றவாறு டைனிங் ஹால் நோக்கிச் செல்ல, அவனைப் பார்த்து‌ மூவரும் சிரித்தனர். 

"சத்யா, இப்ப இருக்குற குடவுன்ல என்னடா பிரச்சினை?" பூரிக்கும் குருமாவுக்கும் சமரசம் பேசிக் கொண்டே விஷ்வா கேட்க,

"பிரச்சனை எல்லாம் ஒன்னும்‌ இல்லடா... தாத்தா காலத்துல இருந்த மாதிரியே இப்பவும் இருக்குடா! ஃப்ரீஸர் எல்லாம் சரியா வேலை செய்யல... வேர்ஹவுஸ்கு உள்ளே  போனாலே காரல் நெடி அடிக்குதுடா! கைமாத்தப் போற கம்பெனி தானேன்னு சரியா கவனிக்கல போலடா!"

"அப்படி எல்லாம் இருக்காது சத்யா... ராமநாதனுக்கு உடல்நிலை சரியில்லாததால கவனிக்காம விட்டுருப்பான்." தாத்தா குறுக்கிட,

"ஃப்ரென்டை விட்டுக் கொடுக்கறாரா பாரு!" என்று சிரித்தான் சத்யா.

"எல்லாத்தையும் இப்ப உள்ள அட்வான்ஸ் டெக்னிக்குக்கு மாத்தனும்டா. நீதான் அக்ரோ ப்ராஸஸிங் தெரிஞ்சவனாச்சே... அதான் எப்படிப்பட்ட இடம் வேணும்னு பாத்து சொல்லுவேன்னு உன்னைய வரச் சொன்னேன்."‌ என்றான் நண்பனிடம்.

"அரசி மசாலாக் கம்பெனில இருக்குற மாதிரியே மாத்திரலாமா சத்யா?"

"ஆமான்டா... இரண்டு கம்பெனிக்கும் சேர்த்து ஒரே குடவுனா மாத்திரலாம்னு இருக்கேன். இங்கேயும் இடம் பத்தல... புரோக்கர் கிட்ட சொல்லி இடம் பாக்க சொல்லியிருக்கேன். இன்னைக்கு ரெண்டு மூனு இடம் காட்றதா சொல்லிருக்காரு... ரெண்டு கம்பெனிக்கும் பொதுவான தூரத்துல இருக்கணும்டா! நீயும் கூட வந்தா எது வசதிப்படும்னு சொல்லுவ!" என்று நண்பனின் முகம் பார்த்தான் சத்யா.

"மாத்திரலாம்டா... இப்ப சோலார் மெத்தட்லயே ஸ்பைசஸ் எல்லாம் ட்ரை பண்ற சிஸ்டம் வந்துருச்சு சத்யா... ட்ரையிங் சிஸ்டமும் அது மாதிரியே மாத்திறலாம்."

பேசிக் கொண்டே மூவரும் சாப்பிட்டு முடிக்க, மூவரும் வெளியேறும் வரை மங்கையர்க்கரசி காத்துக் கொண்டிருந்தார். மூவரும் கிளம்ப, டிரைவரை அழைத்து காரை எடுக்கச் சொன்னவர், திவ்யாவின் வீட்டிற்கு வந்தார். அவளும் அப்பொழுது தான் அலுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். 

உள்ளே வந்தவரை லட்சுமி வரவேற்க, அவரது வரவேற்பு என்னவோ கடனே என்றுதான் இருந்தது. அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் பாராமுகம் காட்ட மாட்டார். அவருக்கே திவ்யாவின் நிலையைப் பார்த்து மங்கையர்க்கரசி மீது ஏனோ சற்று கோபம். அவரது அச்சத்தினால் தானே திவ்யா விலக வேண்டியதாய் போயிற்று! 

ஆனால் திவ்யாவிற்கு அவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தன்னவனின் பாராமுகம் தான் அவள் விலகி இருப்பதற்கான அதிமுக்கிய காரணம். 

அறையை விட்டு கிளம்பி வெளியே வந்தவள், மாமியாரைப் பார்த்து, "வாங்க ஆன்ட்டி." என சந்தோஷமாகவே வரவேற்றாள். 

‘நான் ஒதுங்கி இருந்து கொள்கிறேன்.’ என்று திவ்யா கூறினாலும், மங்கையர்க்கரசி மருமகளை அப்படியே விட்டு விடவில்லை. அடிக்கடி வந்து பார்த்து விட்டுச் செல்வார். 

"எப்படி இருக்கீங்க ஆன்ட்டி? காஃபி போடுறேன்." என்று அவள் அடுக்களைப் பக்கமாகத் திரும்ப,

"அதெல்லாம் வேண்டாம் திவ்யா... இப்ப தான் சாப்பிட்டு வந்தேன். இப்படி வந்து உக்காரும்மா!" என தனதருகில் அழைத்தார்.

அவளும், அவரருகில் சென்று அமர, "நம்ம ஜோசியர் இப்ப நம்ம குடும்பத்துக்கு நேரம் சரியில்லைனு சொன்னாரு திவ்யா... அதுக்காக குலசாமி கோயில்ல மந்திரிச்ச கயிறு. உனக்கும் கொடுக்கணும்னு தான் வந்தேன் மா!"

"பரவாயில்லம்மா... மருமகளா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலைனாலும், உங்க குடும்பத்து ஆளுதான்னு நினைப்பாவது இருக்கே!" என்று குத்தல் மொழியுடன் கேட்டுக் கொண்டே சண்முகமும் வர,

"என்னங்க அண்ணா... நீங்களும் இப்படிப் பேசுறீங்க? அன்னைக்கு இருந்த சூழ்நிலைக்கு மறைக்கணும்னு தோணுச்சு. இப்ப என்னடான்னா, மறைச்சதை எப்படி சொல்றதுன்னு பயத்துலேயே தவிச்சுக்கிட்டு இருக்கேன்." தனது ஆற்றாமையை கோடிட்டு காட்டினார் மங்கையர்க்கரசி.

ஒரு விஷயத்தை மறைத்து விட்டு அதை எப்படி பெற்றோரிடம் தெரிவிப்பது என பயப்படும் சிறுபிள்ளை என, அவர் மகனுக்கும், மாமனாருக்கும் பயம் கொள்வது அப்பட்டமாகத் தெரிந்தது.