Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 18

நினைவு-18

மறுபடியும் திவ்யா சோக மோடுக்குப் போக அதைக் காணச் சகிக்காதவனாய், கேலி பேச ஆரம்பித்தான் சத்யானந்தன்.

"ஏங்க! காஃபி கொடுத்து டெஸ்ட் பண்ணுனீங்க… வேற எதுவுமில்லையா என்னை எலியாக்க?" என்றவனிடம்,

"சாரி கண்ணன்! ஒரு நாளைக்கு ஒரு டெஸ்ட்டுதான். எலி தாங்க வேண்டாமா? அதுக்கு ஏதாவது ஆகிட்டா இன்னொன்றுக்கு நான் எங்கே போறது? வான்டடா இப்படி வந்து சிக்குற எலி கிடைக்கறது ரொம்ப ரேர் கண்ணன்."

அவள் கூறியதைக் கேட்டு அவன் சிரிக்க, அவளும் சிரித்தாள், வெகு நாட்கள் கழித்து மனம் விட்டுப் பேசியதில்.

எடுத்து வந்த பொருட்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த பாப்பாத்தியும், திவ்யாவின் சிரிப்பைக் கேட்டு, 'மறுபடியும் இந்தப்புள்ள பழைய மாதிரி கலகலப்பாக மாறணும்.' என்று எண்ணிக் கொண்டார்.

காஃபியைக் குடித்துவிட்டு கிளம்பியவன், பாப்பாத்தியை அழைத்து, "தேவையில்லாம வெளிய வராதிங்க ஆத்தா! கேட்டை நல்லா பூட்டிக்கோங்க! அவங்க சொந்தக்காரங்க யாராவது வந்துருவாங்க. திவ்யாவை வேற நல்ல ட்ரெஸ்ஸா போட்டுட்டு இருக்கச் சொல்லுங்க!" என்று நாசூக்காகக் கூறிவிட்டுச் சென்றான்.

அவன் கூறியதை திவ்யாவிடம் கூற, 'அப்படியே சரஸ்வதி டயலாக்.' என எண்ணிக் கொண்டாள். அன்னையின் அக்கறையுடன் முதலடி எடுத்து வைத்தான், அவளது நெஞ்சத்தில்.

மறுநாள் அவளது உறவினர்கள் கடமைக்காக வந்திருக்க, சண்முகமும், லட்சுமியுமே அனைத்தையும் முன்னிருந்து கவனித்துக் கொண்டனர். ஆள்விட்டு சமையல் செய்தனர். அன்று பெற்றோருக்காக விரதமிருந்தாள் திவ்யா.

கண்ணனும் பிள்ளைகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். வந்ததும் அவன் கவனித்தது அவள் உடையைத்தான். இளமஞ்சள் நிற சல்வாரில், துப்பட்டாவை பின்குத்தி, பின்புறம் முடிந்திருந்தாள். சாமி கும்பிட, வேலை செய்ய இடையூறாக இருக்குமென்று.

‘உனக்கு ஏன்டா இவ்வளவு அக்கறை?’ என்று மனசாட்சி கேள்வி கேட்க, ‘தாயில்லாப்பிள்ளை’ என சமாதானம் சொன்னான். ‘நம்பிட்டேன்’ என்றது மனசாட்சி.

திவ்யாவின் பெற்றோரின் புகைப்படத்தின் முன்பு, தளுகை போட்டு, பிடித்த பதார்த்தங்களை படையலிட்டு, சாமி கும்பிட்டனர். 

திவ்யாவும் விரதத்தை முடிக்க, அனைவருக்கும் பந்தி பரிமாறப்பட்டது.

சாப்பிட்டு முடித்தவர்கள், "என்னம்மா கல்யாண முடிவு என்ன? துக்கம் நடந்த வீட்டுல ஒரு நல்லது நடக்கணும்னு சொல்லுவாங்க... அது ஏன் இந்தப் புள்ளயோட கல்யாணமா இருக்கக் கூடாது?” எனத் தந்தை வழி அத்தை ஒருவர் ஆரம்பித்தார்.

சண்முகமும் லட்சுமியும் அனைத்தையும் கவனித்துக் கொண்டாலும், சாமி கும்பிடும் பொழுது, சொந்தங்களை முன்விட்டு இவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.

பிள்ளைகளை சாப்பிட விட்டு கண்ணனும், லட்சுமியும் கவனித்துக் கொண்டிருந்தனர். 

"என்னங்கம்மா! இந்த இடத்துல வந்து இப்படிக் கேக்குறாங்க!" என்று கண்ணன் மெதுவாகக் கேட்க,

"அட! நீ இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி? இவங்க எல்லாம், இந்த கேள்வியை சுடுகாட்டுக்குப் போயிட்டு வந்தன்னைக்கே கேட்டாங்க கண்ணன்." என்றார் ஆதங்கமாக.

"என்ன மனுஷங்க இவங்க?" என்றவன் திவ்யாவைப் பார்க்க, அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. கும்பலில் ஒருவன் இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"பையன் படிக்கலைனு பாக்காதம்மா. அதான் நீ ரெண்டு டிகிரி படிக்கிறயில்ல. உங்க அம்மா, அப்பாவுக்கு வர்ற காசவச்சு ஒரு கடைகண்ணிய வச்சுக் கொடுத்துட்டா அவன் சம்பாரிச்சுட்டுப் போறான். நீயும் ஒத்தையில இருக்க வேண்டாம்," என்று கூசாமல் பேச,

"இப்ப புரியுதா கண்ணா? அவங்க எங்க வர்றாங்கனு?"

"நல்லா புரியுது. தேவதைய வளத்து தேவாங்குகிட்ட கொடுக்க சொல்றாங்க!"

"ஷ்ஷ்… கண்ணா, மெதுவா பேசு! யார் காதுலயாவது விழுந்துறப் போகுது."

அவர்கள் திவ்யாவின் பதிலை எதிர்பார்த்திருக்க, "காசு கொடுத்து உங்க பையனுக்கு புருஷன் போஸ்டெல்லாம் தரமுடியாது. வேணும்னா சம்பளம் கொடுத்து செக்யூரிட்டியா வச்சுக்கலாம். சம்மதம்னா சொல்லுங்க." என்று அவள் கூறியதைக் கேட்டவர்கள்,

"பெரியவங்க கிட்ட பேசுற மாதிரியா பேசுற? வாத்தியாரா இருந்து உன்னைய எப்படி வளத்து வச்சுருக்காங்க?" என்று ஆளுக்கொன்றாக பேச ஆரம்பித்தனர்.

"என்னைய நல்லாதான் வளத்திருக்காங்க... பெரியவங்க பெரிய மனுஷத் தன்மையோடு நடந்துக்கணும். எரியற வீட்டுல புடுங்கற வரைக்கும் லாபம்னு பேசுற உங்ககிட்ட எல்லாம் இப்படித்தான் பேசமுடியும். இந்தமாதிரி காரியத்துக்கு வந்தால் சொல்லிட்டுப் போகக் கூடாது. வந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்" என்றாள். ‘எல்லோரும் கிளம்புங்க’ என்பதை சொல்லாமல் சொல்லி.

கண்ணன் மனதிற்குள், 'சபாஷ்' என‌ மெச்சிக் கொண்டான். சண்முகமும், லட்சுமியுமே பேசாமலிருக்கும் போது தான் பேசினால் சரிவராது என எண்ணியவனாய்.

"இனி நமக்கென்ன இங்க வேல? வாங்க போகலாம்." என்று கிளம்பியவர்கள், "இந்தக் கூட்டம் வந்து சேந்துருக்குல்ல... இதுகளோட சேந்துகிட்டு இவளும் தறிகெட்டு அலையப்போறா!" என்று கூறிச் சென்றார்கள்.

அதைக் கேட்ட லட்சுமியோ நெஞ்சம் பதற, "என்னங்க வாழவேண்டிய பொண்ண இப்படி பேசிட்டுப் போறாங்க?" என்று வருத்தப்பட,

அந்த வார்த்தைகளைக் கேட்ட கண்ணனோ கைகளை இறுகக்கட்டி கண்கள் சிவக்க நின்றிருந்தான் இயலாமையுடன்.

"விடு லட்சுமி! உத்தமர்கள் வாக்கே சில சமயங்கள்ல பழிக்க மாட்டேங்குது. இவங்க பேச்செல்லாம் கணக்குல வச்சுகிட்டு." என்றார்.

"திவ்யா! இங்க வாம்மா!" என அழைத்தவர், “அடுத்து என்ன செய்யறதா முடிவு பண்ணியிருக்க?" எனக் கேட்க,

"தெரியலை அங்கிள்." என்றாள். இதுவரை தனியாக எந்த முடிவும் எடுக்காதவளாய்.

"வீட்டை வாடகைக்கு விட்டுட்டு, நீ காலேஜ் ஹாஸ்டல்ல தங்கிக்கிறயாமா? நானும்‌ ஆன்ட்டியும் அப்பப்ப வந்து பாத்துக்கறோம்." எனக் கேட்க,

"எனக்கும் அந்த யோசனை வந்துச்சு அங்கிள். ஆனா வர்றவங்க இதே மாதிரி வீட்டை மெயின்டெய்ன் பண்ணுவாங்களா?"

"அதைப் பாத்தா எப்படிம்மா? உன் பாதுகாப்பு தானே நமக்கு முக்கியம்."

"ஆமாமா! ஏரியாவே ரொம்ப மோசமாயிருக்கு." என்றான் கண்ணன். என்னவோ காலங்காலமாக இங்கேயே இருந்தவன் போல.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க சண்முகத்தின் கைபேசி அழைத்தது. எடுத்து பேசியவரின் முகமாற்றம் அவ்வளவு உவப்பானதாக இல்லை. இணைப்பை துண்டித்தவரை என்னவென்று அனைவரும் நோக்கினர்.

''என் மச்சினன் புள்ளைக அத்தை வீட்டுக்கு விருந்துக்கு வந்திருக்கானுகளாம்." என்று கூற லட்சுமியின் முகம் வாட்டம் கொண்டது.

கண்ணன் புரியாமல் பார்க்க, "இப்ப நம்ம வீட்டுலயா அங்கிள் இருக்காங்க?" என திவ்யா கேட்டாள்.

"ஆமாம்மா! எப்படா எல்லோரும் வெளிய கிளம்புவோம்னு பாத்துட்டு இருந்திருப்பாங்க போலம்மா."

"ரொம்ப பிரச்சினை வேணாம் அங்கிள். பிள்ளைகள் மனசையும் பாக்கணும். இவங்க அடிக்கடி வந்து தகராறு பண்றதால பாதிக்கப்படப் போறது, இந்த பிள்ளைக தான். நம்மால தான் இவங்களுக்குக் கஷ்டம்னு நினைக்க ஆரம்பிச்சுட்டா, நீங்க செய்ததெல்லாம் வீணாப் போயிரும் அங்கிள்." என்று கூறிய திவ்யாவைப் பார்த்து,

"பார்ரா! திவிமா நீ இவ்ளோ பேசுவியா? இப்பதான் சின்னபிள்ளையாச்சே, என்ன பண்ணப் போகுதோனு நினைச்சேன்? பரவாயில்லைமா, கேசவன் பொண்ணுங்கறத நிரூபிச்சுட்ட."

"ஹலோ! இங்கே நானும் இருக்கேன். நான் யாருங்கற குழப்பத்தை விட, இது ரொம்ப குழப்புது." என்று கண்ணன் கூற,

"சொத்தும், சொந்தங்களும் தான் பிரச்சினை கண்ணன்." என்று கூறினார்.

"அங்கிள்! நான் ஒன்னு சொல்லவா? இப்பதான் தோணிச்சு."

"சொல்லுமா!"

சற்று யோசித்தவள், "இல்லை அங்கிள்... அங்கே போய் பாத்துட்டு பேசிக்கலாம்." என்றாள்.

செல்லாத்தா மற்றும் பாப்பாத்தியிடம் பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு, லட்சுமி, திவ்யா வண்டியில் ஏறிக்கொள்ள, சண்முகமும் கண்ணனும் ஒரு வண்டியில் கிளம்பினர்.

சண்முகம் வீட்டை அடைந்தவர்கள், லட்சுமியின் அண்ணன் பிள்ளைகள் நான்கைந்து பேருடன் அங்கிருப்பதைக் கண்டனர். 

"வாங்க அத்தை! இடத்தைக் காலி பண்ணுவிங்கேனு பாத்தா, இன்னும் கூட்டம் சேத்துகிட்டே போறீங்களே! ரோட்டுல கிடந்தது, போனது வந்தது எல்லாம் திங்கறதுக்கு இது என்ன வாரிசில்லாத சொத்தா?" என்று கண்ணனைப் பார்த்துக்கொண்டே பேச ஆரம்பிக்க,

"அதான் கோர்ட்ல கேஸ் நடக்குதுல? மறுபடியும்‌ ஏன் வந்து தொல்லை பண்றீங்க?" என லட்சுமி கேட்டார்.

"தீர்ப்பு வர்ற வரைக்கும் உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம், பொதுவுல கெடக்கட்டும்னு ஆர்டர் வாங்கியிருக்கோம்ல. இன்னும் காலி பண்ணலைனா என்ன அர்த்தம்?" என்றான் அண்ணன் மகன்களில் ஒருத்தன்.

"திவ்யா! என்னங்க பிரச்சினை?" என்று கண்ணன் மெதுவாகக் கேட்டான்.

"இது ஆன்ட்டியோட தாய்வீட்டு சொத்து. அவங்களுக்கு வாரிசு இல்லாததால, அவங்களோட அண்ணன் பிள்ளைக சொத்தைக் கேக்குறாங்க கண்ணன்."

"சொத்து இவங்க பேருலதானே இருக்கும். அவங்க எப்படி கேக்க முடியும்?" என்றான் புரியாதவனாக.

"அது தான் இல்லை" என விளக்கம் கூற ஆரம்பித்தாள்.

லட்சுமிக்கு சீதனமாக வாய்வார்த்தையாக அளிக்கப் பெற்ற சொத்து‌ இது. நானிருக்கும் வரைக்கும் சொத்து பிரியக்கூடாது என அவரது தந்தை விரும்பியதால், மூன்று மகன்கள், மற்றும் மகள் லட்சுமிக்கு வாய்வார்த்தையாகவே பிரித்து விட்டார்.

அவர் காலமானபிறகு சொத்தை பத்திரம் எழுத முற்பட்ட பொழுது, வெறும்‌ நிலமாக அளிக்கப்பட்ட சீதனம், சண்முகம் உழைப்பால் பொன்விளையும் பூமியாக மாறிய நிலம், லட்சுமியின் சகோதரர் பிள்ளைகளை உறுத்தியது. 

"அத்தைக்கு நேரடி வாரிசு கிடையாது. அதுக்கடுத்தபடி அந்த சொத்துக்கு நாங்க தானே வாரிசு. ஒருவேளை மாமா ரெண்டாங் கல்யாணம் பண்ணி, அதனால அவங்களுக்கு வாரிசு இருந்திருந்தா கூட விட்டுருக்கலாம்." என்று தன் தந்தைகளிடம் விவாதம் செய்தனர்.

"பொம்பளப் புள்ளைக்குக் கொடுத்ததை கேக்க கூடாதுடா... நம்ம வீட்டுல பொறந்த பொண்ணு மனசு நொந்தா நமக்குதான் ஆகாது." என்ற பாட்டி கூற,

"நாங்க என்ன சொத்து இல்லைன்னா சொல்றோம். வேற இடத்தைக் கொடுக்கிறோம்னு‌ தானே சொல்றோம்" என்று பொட்டல் காட்டை கைகாட்டினர்.

வழக்கு நீதிமன்றம் சென்றது. வாரிசு உரிமையில் அவர்கள் கேட்க, அனுபவ பாத்தியதை கொண்டு இவர்களும்‌ வழக்கு தொடுத்துள்ளனர். யாருக்கு நிலம் என்று தீர்ப்பு வரும் வரைக்கும் யாரும் அனுபவிக்கக் கூடாது என்று அடிக்கடி இது மாதிரி வந்து தகராறு செய்கிறார்கள். 

சண்முகமும் மனைவி மற்றும் மச்சினர்கள் முகத்திற்காக சற்று நயந்து போகிறார். அவரும் இந்த வெள்ளாமை எடுத்தவுடன் வெளியேறுவதாக கூறியிருக்கிறார்.

இன்று வந்தவர்களும் மேலும் கண்டவாறு பேசிவிட்டு, சீக்கிரம் வெளியேறுமாறு கூறிவிட்டு சென்றனர்.

சண்முகமும் லட்சுமியும் ஓய்ந்து அமர, "அங்கிள் நான் சொல்ல நினைச்சதை சொல்லவா?" எனக்‌ கேட்டாள்.

என்னவென்று அவர் நிமிர்ந்து பார்க்க, "எல்லோரும் எங்க வீட்டுக்கு வந்துருங்க அங்கிள்... கேஸ் முடியற வரைக்கும் தானே? இத்தனை பேரைக் கூட்டிக்கிட்டு எங்கேனு போவிங்க? உங்க தோப்புக்குனாலும் வீடு வசதி வேண்டாமா?" எனக் கேட்டாள்.

"அது சரிப்படாதுமா! பெத்தவங்க இல்லாத சின்ன பொண்ணை ஏமாத்திட்டதா உன் சொந்தகாரங்க பேசுவாங்கமா!"

"அங்கிள் இது உங்களுக்காக சொல்லலை. என்னோட சுயநலம்னு வச்சுக்கோங்க!" என்றாள்.

லட்சுமியும் ஓய்ந்து போய்‌ திண்ணையில் அமர்ந்த, சண்முகத்தை அந்த நிலையில் பார்க்க இயலாதவராய், "எல்லாம் என்னாலதான்... நீங்களாவது ரெண்டாங் கல்யாணம் பண்ணியிருந்தா, இந்த நிலமை வந்திருக்குமா?" என்று கூறி வருத்தப்பட,

சண்முகம் அவரைக் கோபமாகப் பார்த்துவிட்டு, "குறை என்மேல இருந்திருந்தா நீ வேற கல்யாணம் செஞ்சிருப்பியா?" எனக் கேட்டார்.

"சீச்சீ… அசிங்கமா பேசாதிங்க!"

"ஏன்? நான் இன்னொரு கல்யாணம் பண்ணி பிறக்குற குழந்தைகளை நீ வளக்கிற மாதிரி, நானும் உனக்கு பொறக்குற குழந்தைய வளத்துட்டு போறேன்."

"ஐயோ! கேக்கவே நாராசமா இருக்கு." என்று லட்சுமி காதுகளை பொத்திக் கொண்டார்.

இவர்கள் வாக்குவாதத்தில் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட பிரியம் வெளிப்பட்டதே ஒழிய வெறுப்பு தெரியவில்லை.

"ஏம்மா! நாங்கெல்லாம் உங்க பிள்ளைக இல்லையா?" என்று அவரருகில் அமர்ந்த கண்ணன் அவரது கைகளைப் பிடித்துக் கேட்க,

"ஐயோ! கண்ணா! நான்‌ அப்படி சொல்ல வரலை தம்பி." என்று லட்சுமி பதற,

"இதை நீங்க இத்தனை வருஷமா வளத்த பிள்ளைக முன்னாடி சொல்லியிருந்தா, அவங்க மனசு என்ன பாடுபட்டிருக்கும்?" என்றான் கண்ணன்.

"இல்லை கண்ணா! என்னால இவரை இப்படிப் பாக்க முடியல... எனக்காகக் தான இவரு, என் அண்ணன் பிள்ளைககிட்ட தணிஞ்சு போறாரு. அதுதான் கஷ்டமாயிருக்கு."

திவ்யாவும் சண்முகம் அருகில் அமர்ந்து, "அங்கிள் வீட்ல எடுத்த முடிவை இப்ப சொல்லட்டுமா?"

சண்முகம் என்னவென்று பார்க்க, "பிள்ளைக முன்னாடி இது மாதிரி அடிக்கடி நடக்கிறது நல்லதில்ல. மனசு டக்குனு நாம இவங்களுக்கு சொந்தமில்லையோனு ஏங்கிரும். கேஸ் எப்படியும் நாம தான் ஜெயிப்போம். அது வரைக்கும் எல்லோரும் எங்க வீட்டுக்கு வந்துருங்க!"

"ஆமாம்மா! எப்படியும் பிள்ளைக பக்குவப்படப்பட புரிஞ்சுக்குவாங்க. ஆனால் பிஞ்சு மனசுல இவங்க பேசுறதெல்லாம் பதிய வேண்டாமே!" என்று கண்ணனும் கூற,

"அது எப்படிம்மா முடியும்?" என்றார் சண்முகம்.

"அங்கிள்! இது உங்களுக்காக சொல்லலை. என்னோட சுயநலமும் இருக்கு. யாருக்கோ வீட்டை வாடகைக்கு விடுறதுக்கு, நீங்களே வந்து தங்கிட்டா… நானும் சேஃப், என்வீடும் சேஃப். எப்படி என் ஐடியா?" எனக் கேட்டவளை,

"தேறிட்ட திவிம்மா!" என்றார் சண்முகம்.

ஒருவழியாக பேசி இருவரையும் சம்மதிக்க வைத்து, பிள்ளைகள் ஏற்கனவே அங்கு இருக்க, ஆடைகள் மற்றும் முக்கியமானவற்றை மட்டும் மறுநாள் வந்து எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர்.

‘ஷ்ஷ்ஷ்… அப்பாடா! இவங்க ரெண்டு பேரையும் ஒரு இடத்துல கொண்டு வந்து சேக்கறதுக்கு எவ்வளவு வேலை பாக்க வேண்டியிருக்கு’ என்று விதி அலுத்துக் கொள்ள,

"சரி...சரி… நீ கிளம்பு! இனி நாங்க பாத்துக்கறோம்." என்று மன்மதன் வந்தான் ரதியோடு.

***