Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 14

நினைவு-14

தனித்திருந்தவன் தன்னைச் சுற்றி மீண்டும் ஆழ்ந்து கவனிக்க, அது மருத்துவமனை என்பதும், தனக்கு சிகிச்சை நடைபெறுகிறது என்பதும் மெதுமெதுவாகப் புரிய ஆரம்பித்தது.

எனினும் எவ்வளவு யோசித்தும் தான் யாரென்பது மட்டும் அவனுக்கு சுத்தமாய் பிடிபடவில்லை. ஆழ்ந்து யோசிக்க யோசிக்க தலைவலி தான் மிஞ்சியது.

‘கடவுளே இதென்ன சோதனை? நான் யார்!” உள்மனதின் அலறல் அவனது மனதை வண்டாய் குடைந்து பாடாய்படுத்தியது.

அது அரசு மருத்துவமனை. துணைக்கும் யாருமில்லை. உடனிருப்பவர்களின் உந்துதலை, பணியாளர்களுக்கான சிறப்பு கவனிப்புகளைப் பொறுத்து தான் நோயாளிக்கும் சிறந்த கவனிப்பும் இருக்கும். அதிலும் அந்த மருத்துவமனையில் பிரசவம், குடும்ப கட்டுப்பாடு மற்றும் ஆரம்பகட்ட சிகிச்சைகள் மட்டுமே நடைபெறும் வகையில் இருந்தது.

சிறப்பு சிகிச்சைக்கோ, மேல்மட்ட அறுவை சிகிச்சை முதலியவற்றிற்கு நோயாளிகள் கோவை ஜி.எச்.தான் அனுப்பி வைக்கப்படுவர். விபத்து நடந்த இடம் அவினாசிக்கும் கோவைக்கும் இடையில் என்பதால் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

மருத்துவருக்கும் அவன் நிலைமை சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனினும், செவிலியரிடம், "ரெண்டு நாள் போகட்டும் பார்க்கலாம்." எனக் கூறி விட்டார்.

நேரந்தவறாமல் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முதல்நாளில் இருந்த அமைதி அவனுக்கு மறுநாள் இல்லை. சிந்தித்தல் அவனை மன உளைச்சலுக்கு ஆட்படுத்தியது. அதன் விளைவு அவனுக்குக் கோபமும், ஆதங்கமும் நிதானமின்மையையும் ஏற்படுத்தியது. 

எந்த ஒன்றையும் விரும்பி ஏற்றான் இல்லை. தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்‌ என்ற ஆர்வம் சில சமயங்களில் கோபக்காரனாகவும், இயலாமை சில சமயங்களில் அவனைக் குழந்தையாகவும் ஏங்க வைத்தது.

இந்த நிலைமையில் தான் சண்முகம் மற்றும் திவ்யாவைப் பார்த்தவன் இவர்கள் மூலம் தன்னைப் பற்றி அறிந்து கொள்ள முடியுமா? என்ற எண்ணமும், ஒருவேளை தன்னைத் தெரிந்தவர்களோ, உறவோ, ரத்த சம்மந்தமோ என்ற எதிர்பார்ப்பும் தோன்றியது.

அவனைப் பார்த்தவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரு வாரமாக ஷேவ் செய்யப்படாத முகம். ஒருவாரம் படுக்கையில் இருந்ததினால் சோகை படர்ந்த நிறம். அவற்றையும் மீறிய ஏதோ ஒரு தெளிவும், வசீகரமும் அவன் முகத்தில். அமைதியாக அறையை விட்டு வெளியேறத் திரும்பினர்.

"சர்! ப்ளீஸ்... இந்த நிமிசத்துல இருந்து எனக்கு தெரிஞ்சவங்கனு பார்த்தா நீங்க ரெண்டு பேருதான். வேற யாரும் எனக்கு ஞாபகத்துல வரல. இங்க இருந்து வெளியே போனாலாவது ஏதாவது தெரியுமானு தெரியல. அதுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண முடிஞ்சா பண்ணுங்க." எனக் சண்முகத்தின் கையைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டவனிடம்,

"நாங்க டாக்டரைப் பார்த்துவிட்டு வந்துர்றோம் தம்பி. அப்புறம் பேசலாம்" என பட்டும் படாமல் கூறிவிட்டு வெளியேறினர். 

அவனின் ஏக்கப் பார்வை, இளகிய மனம் கொண்ட சண்முகத்தையும், தன்னுடைய துக்கத்தைத் தனியாக அனுபவிப்பவளுக்கு அவனின் யாருமற்ற தனிமையும், வெவ்வேறு விதமாக இருவரையும் பாதித்தது. அவன் மீதிருந்த பார்வையை விலக்க முடியாமல் தான் அங்கிருந்து சென்றனர்.

மருத்துவரை சந்தித்தவர்கள் வந்த வேலையை‌ முடித்துக் கொண்டு அவனைப் பற்றி விசாரித்தனர்.

மருத்துவரோ, ''ரெண்டு மூனு நாளா கவனிச்சதுல அந்தப் பையனுக்கு அம்னீஷியாவா இருக்கலாம்னு சந்தேகமா இருக்கு." என்று கூறினார்.

"அதுக்கான ட்ரீட்மெண்ட் கொடுக்கலையா டாக்டர்?" என திவ்யா கேட்க,

"அதுக்கு கோயம்புத்தூர் ஜி.எச்.க்கு தான் போகணும். அங்க தான் தலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கானு ஸ்கேன் பண்ணி பாக்க முடியும். ஹெட் இன்ஜூரி ஏதாவது இருக்கான்னு பாக்கணும். அதுக்கப்புறம் தான் சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்கணும்." என்று மருத்துவர் விரிவாகக் கூற,

"அப்ப அங்க கொண்டு போக வேண்டியது தானே டாக்டர்." வேகமாகக் கேட்டாள் திவ்யா.

"இது ஆக்ஸிடென்ட் கேஸ் மா! இன்னும் யாரும் தேடி வரல. ஹாஸ்பிடல் மாத்துனா போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணனும். நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு. உறவுக்காரங்க யாராவது வந்துட்டா எல்லாம் அவங்க பாத்துப்பாங்க.” என்றார் தன் பொறுப்பு மறந்தவராக.

"யாரும் தேடி வரலைன்னாலோ, இல்ல தேடிவர லேட்டாச்சுன்னாலோ என்ன டாக்டர் பண்ணுவீங்க?" வெகு தீவிரமாகக் கேட்டாள்.

மருத்துவரின் பதில் அவளுக்கு அத்தனை எரிச்சலைக் கொடுத்திருந்தது. ஆனாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளவில்லை.

"அதை அப்புறம் தாம்மா யோசிக்கணும். நினைவு வரலைனா ட்ரீட்மென்ட்க்கு வேற ஹாஸ்பிடல் தான் அனுப்பணும்." என்றார் விட்டேத்தியாக.

இங்கு வேறு ஹாஸ்பிடல் எனக் குறிப்பிட்டது மனநல மருத்துவமனை என்பது தாமதமாகத் தான் அவர்களுக்குப் புரிந்தது. அங்கு சென்று விட்டாள் கதையே மாறிவிடும் அபாயம் கூட இருக்கிறதல்லவா! இவரிடம் பேசுவது வீண் என்ற எண்ணத்துடன் இருவரும் வெளியேறினர்.

"என்ன அங்கிள் இவரு இப்படி பேசுறாரு? அங்க அவரைப் பார்க்கவும் ரொம்ப பாவமா இருக்கு." என்று திவ்யா கூற,

"அதை நீ சொல்றியாம்மா?" 

"எதை ஆங்கிள்?"

"இல்ல... ஒரே சமயத்துல பெத்தவங்க ரெண்டு பேரையும் இழந்து நிக்கிற. நீ அந்தப் புள்ளயப் பாத்து பரிதாபப்படுற! அதை வச்சு கேட்டேன்."

"இறந்து போறதுங்கறது முடிவு தெரிஞ்ச சோகம் அங்கிள். ஆனா தொலைஞ்சு போறதுங்கறது அப்படி இல்லை. தான் யாருன்னு தெரியாம இருக்கிறதெல்லாம் கொடுமை இல்லையா?" என்றாள் திவ்யா.

இறப்பைப் பொறுத்த வரையிலும் துக்கம் என்பது முடிவு தெரிந்த ஒன்று. ஆனால் குடும்பத்தில் ஒரு நபர் மாயமாதல் என்பது என்றுமே நிகழ்கால துக்கம். அவர் கிடைக்கும் வரைக்குமோ அல்லது அவரைப் பற்றிய தகவல் அறியும் வரைக்குமே அது நீடிக்கும்.

‘நல்லா இருக்காங்களா இல்லையா?’

‘ஏதாவது ஆபத்துல சிக்கி இருக்காங்களா?’

‘உயிரோடு இருக்காங்களா?’ இப்படி ஆயிரமாயிரம்‌ கேள்விகள் உற்ற சொந்தங்களின் மனதிற்குள் ஓடும். அதுவும் காணாமல் போன நபர் பெண்ணாக இருந்து விட்டால் பெற்றவர்களின் நிலைமையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

"இவரு குடும்பத்துல இருக்கறவங்க நிலைமைய நினைச்சா இன்னும் கவலையா இருக்கு. இவரோடு நிலைமை தெரியாம அவங்களும், அவங்களுக்கு தகவல் கொடுக்க முடியாம இவரும் இங்க இப்படி இருக்கறது ரொம்பவுமே கொடுமை அங்கிள்." என்று அவனை நினைத்து அனுதாபத்துடன் பேசினாள்.

"எனக்கும் அதுதாம்மா‌ யோசனையா இருக்கு. அவனுக்கும் சின்ன வயசு. நம்மகிட்டே இருந்து ஏதாவது உதவி கிடைக்கும்னு வேற நம்பிக்கிட்டு இருக்கான்." சண்முகமும் அவருக்கேற்ற அனுதாபத்துடன் பேசி முடித்தார்.

இருவரும் பேசிக் கொண்டே அவனிருந்த அறையைக் கடக்க, ஜன்னல் வழியாக இவர்களைக் கண்டவன், "சர்..." என்று கத்தி அழைத்தான். அவன் பார்வை முழுதும் வாயிலை நோக்கி இவர்களை எதிர்பார்த்தே இருந்தது.

குரல் கேட்டவர்கள் இருவரும் அறைக்குள் செல்ல, "ஏதாவது விபரம் தெரிஞ்சதா... நான் வெளியே போக முடியுமா?" பெரும் தவிப்புடன் கேட்க, இல்லையென்று இருவருமே பரிதவிப்புடன் மறுப்பாகத் தலையசைத்தனர்.

அவர்களுக்கும் அவன் நிலைமையை எப்படி விளக்குவது என்று விளங்கவில்லை.

"சர்... என்னை எப்படியாவது டிஸ்சார்ஜ் பண்றதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணுங்க... எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல." என்று இவர்களிடம் கெஞ்சல் குரலில் மன்றாடினான்.

ஹாஸ்பிடல் வாசமும், வாசனையும் யாருக்குதான் பிடிக்கும். அதிலும் அவனது பரிதவித்த நிலை இருவரையும் உலுக்கிப் போடுவதாக இருந்தது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். எதுவும் செய்ய முடியாதென்று அவனைப் பார்த்து கையை விரிக்க முடியவில்லை.

"சரிப்பா... நான் என்ன பண்ணனும்னு விசாரிச்சுட்டு, உனக்கு ஏதாவது உதவ முடியுமானு பாக்குறேன். அது வரைக்கும் அமைதியா நிதானமாக இரு! பதட்டப்படாம யோசிச்சா உனக்கே கூட உன்னைப் பத்தின ஞாபகம் திரும்புறதுக்கு வாய்ப்பிருக்கு. எதுக்கும் டென்ஷனாகாதே!" என்று ஆறுதல் கூறினார் சண்முகம்.

அவன் எதிர்பார்ப்பதும் இது போன்ற ஆறுதலைத் தானே. சிறு ஈரம் போதும். வறண்ட நிலத்தில் புல் தழைய... அது போலத்தான் சண்முகத்தின் வார்த்தைகள் அவனுக்கு நம்பிக்கையை விதைத்தது. அது அவன் முகமலர்ச்சியிலும் பிரதிபலித்தது.

வெளியேற முற்பட்டவர்களிடம், "சர் உங்க பேரு?" எனக் கேட்டான்.

"இந்தப் புள்ள பேரு திவ்யா... என் பேரு சண்முகம்." என்று இருவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"இப்போதைக்கு எனக்குத் தெரிந்த இரண்டு பெயர்கள்." என விரக்தியான புன்னகையுடன் கூறிக் கொண்டான்.

"உங்க அப்பா அம்மா எப்படி இருக்காங்க?" என திவ்யாவைப் பார்த்து விசாரிக்க, சட்டென்று அவள் கண்களில் நீர் கோர்த்தது.

“ஐயோ என்னங்க?” என்று அவன் ஆதங்கப்பட,

"அவங்க இப்ப இல்லை." எனக் கூறினாள் வெறுமை கலந்த குரலில்.

“கடவுளே... வெரி சாரிங்க!” என்றதோடு பேச்சினை முடித்துக் கொண்டான். வேறென்ன சொல்வதென்று அவனுக்கும் புரியவில்லை.

'ஐயோ... என்னை விட மோசம் போலிருக்கே இவங்க நிலமை... எனக்கு சுயம் மட்டும்தான் தெரியல.' என எண்ணிக் கொண்டான். இருவருக்குமே அடுத்தவர் துன்பம் பெரிதாகப்பட்டது.

தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொள்ளுதே இதயமும்...

தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே...

வெளியே வந்தவர்கள், ஒரு செவிலியரை அழைத்த விபரம் கேட்க, "யாராவது கார்டியனாப் பொறுப்பேத்துகிட்டு, போலீஸ் ஸ்டேஷன்லயும், ஹாஸ்பிடல்லயும் எழுதிக் கொடுத்துட்டு அவரை கூட்டிட்டுப் போலாம்." என்று கூறினார்.

சண்முகத்திற்கும் இது ஒன்றும் புதிதல்ல. லட்சுமியிடம் பேசிவிட்டு அடுத்து செய்வது பற்றி யோசிக்கலாம் எனப் பேசிக்கொண்டு இருவரும் வீடு திரும்பினர்.

சண்முகத்தின் வீடு ஐந்து ஏக்கர் நிலத்தின் நடுவே அமைந்த களத்துவீடு. லட்சுமியின் பிறந்த வீட்டு சீதனமாக அவருக்கு நிலம் வழங்கப்பட, அதிலேயே வீட்டைக் கட்டிக் கொண்டு விவசாயமும் செய்து வருகின்றனர்.

சண்முகத்திற்கு குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்த சொத்து, சாலையோரம் என்பதால் அதில் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுவிட்டு, அதில் ஒன்றில்தான் அவர் ஹார்டுவேர் வியாபராத்தை நடத்தி வருகிறார். மீதி இடத்தை தென்னை மரங்களை நட்டு பெரிய தோப்பாக்கி விட்டார்.

திவ்யாவுடன் வீட்டுக்கு வந்தவர் அவளை சாப்பிட வைத்து பாப்பாத்தியுடன் ஸ்கூட்டியில் திவ்யாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். எந்தப் பொழுதிலும் திவ்யாவை அவர்கள் தனியாக விடுவதில்லை. எப்போதும் ஒரு பாதுகாவலாக அவளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துக் கொன்டிருந்தனர்.

பிள்ளைகளோடு சண்முகமும் லட்சுமியும் இரவு உணவு வேலையை முடித்து விட்டு, படுக்கைக்கு அனுப்பினர். இருவரும் வீட்டுத் திண்ணையில் வந்து காற்றோட்டமாக அமர்ந்தனர்.

சண்முகம் இன்று மருத்துவமனையில் நடந்ததைப் பற்றியும், அவனைப் பற்றியும் கூறிக் கொண்டிருந்தார்.

"ஏங்க... அந்தப் பையனுக்கு எத்தனை வயசு இருக்கும்?"

"நமக்கு கல்யாணம் ஆன பிறகு காலாகாலத்துல குழந்தை பிறந்திருந்தா அந்தப் பையன் வயசு தான் இருந்திருக்கும் லட்சுமி"

இதைக் கேட்டவுடன் லட்சுமிக்கும் மனம் வெகுவாக கனத்துப் போனது. எதைப் பற்றியும் யோசிக்கவே இல்லை. அவனுக்கு எந்த முறையிலாவது தங்களால் இயன்ற உதவியைச் செய்து விட வேண்டுமென்றே யோசிக்க ஆரம்பித்து விட்டார். 

அன்பு செய்ய உறவு தேவையில்லை. அன்பு கொண்ட மனம் அன்பு செய்தலைக் தவிர வேறு எதையுமே யோசிக்காது.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

***