ninaikkatha neramethu - 13 books and stories free download online pdf in Tamil

நினைக்காத நேரமேது - 13

நினைவு-13

இரவு நேரமாதலால் அங்கு நடந்த விபத்து அறியப்பட சற்று தாமதமானது. அதற்குள் அவ்வழி சென்ற நம்நாட்டு இரு குடிமகன்கள், கீழே கிடந்தவனை, உயிர் சோதனை செய்வது போல் சென்று, யாரும் அறியா வண்ணம், விபத்திற்கு உள்ளானவனின் செயின், பர்ஸ் முதலியவைகளை கைப்பற்றிக் கொண்டனர்.

மோதிரம் சற்று இறுக்கமாக இருந்ததால், கழற்றுவதற்குள் கூட்டம் சேர ஆரம்பிக்க, நல்லவர்களாக நூற்றியெட்டுக்கு அழைப்பை விடுத்து விட்டு, சற்றுத் தொலைவில் கிடந்த அவனுடைய பேக்கையும் எடுத்துக் கொண்டு நழுவினர்.

'இருட்டறதுக்குள்ள வந்துடறதா சொன்னாங்க... இன்னும் காணோம். வீட்ல புள்ள தனியா பயந்துகிட்டு இருப்பாளே, சீக்கிரம் வரணும்னு எண்ணம் இருக்கா? நம்மகிட்ட மட்டும் இப்படியிரு அப்படியிருனு ஆயிரத்தெட்ட சொல்ல வேண்டியது.' திவ்யாவின் மனம் இன்னதென்று முறையில்லாமல் வெடுவெடுத்துக் கொண்டிருந்தது.

பெற்றோர் வரத் தாமதமானதால் வந்த படபடப்போ? இல்லை அவர்களுக்கு நேர்ந்த முடிவை உள்ளுணர்வு உணர்த்தியதோ? ஏதோ ஒன்று அவளை அலைக்கழித்தது

ஃபோனில் அழைப்பு மணி ஒழிக்க, அழைப்பை ஏற்றவள், கேட்ட‌ செய்தி தந்த அதிர்ச்சியில் வேரறுந்த மரமாக விழுந்தவளை, சண்முகம் வந்து தான் கதவை உடைத்து மயக்கம் தெளிவித்தார்.

சித்தம் கலங்கிய நிலையில் இருந்தவளை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இரவு நேரமாதலால், மறுநாள் தான் எல்லா சம்பிரதாயங்களையும் முடித்து விட்டு, அவளது பெற்றோரை, அவர்களாக இருந்தவர்களை அதுவாக ஒப்படைத்தனர்.

சண்முகமும், லட்சுமியும் திவ்யாவை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வரைக்கும் கூட அவளுக்கு, அது தனக்கு வந்த தவறான தகவலாகத் தான் இருக்கும், எப்படியும் இது என்னோட அம்மா அப்பா இல்லை என்று தான் சொல்லப் போகிறோம் என எண்ணிக் கொண்டு தான் வந்தாள். இன்னும் அவள் மூளை அந்தச் செய்தியை கிரகிக்கவில்லை.

"யாருங்க இங்க ஆக்ஸிடென்ட் கேஸோட சொந்தக்காரங்க?" என்ற குரலுக்கு, விபரம் தெரிந்து வந்திருந்தவர்கள் திவ்யாவை கைகாட்ட,

அவளிடம் கொடுக்கப்பெற்ற பொட்டலத்தைப் பிரித்தவள் மூளை நிதர்சனம் உணர, "அம்மாஆஆஆ..." என்று அலறியவளின் அலறலைக் கேட்ட கல்லும் கரைந்திதிருக்கும் உயிர் இருந்திருந்தால்.

இரத்தக்கறை படிந்திருந்த அம்மாவின் நகைகளைப் பார்த்தவளுக்கு, இந்த நகைகளை அணிந்து கொண்டு அலங்காரத் தேராக தந்தையோடு கிளம்பிய அன்னையின் முகம் மட்டுமே அவள் நினைவில் வந்து நின்றது.

"ஏம்ப்பா? ஏற்கனவே ஆக்ஸிடென்ட் கேசு... அவங்க பாடியக் கொடுக்கவும் இவ்ளோ நேரமாகிப் போச்சு. இனி வீட்டுக்கு எடுத்துகிட்டு போய் ஏன் அங்கிட்டு இங்கிட்டும் அலைக்கழிக்கணும். நேரடியா மின்சார மயானத்துக்கு கொண்டு போயிறலாம். அங்கேயே சாங்கியம் பண்ணிட்டு எல்லாம் முடிச்சறலாம்." என்று வந்த சொந்தங்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுக்க,

எதையும் சிந்திக்கும் நிலையில் திவ்யா‌ இல்லாததால் அதன்படியே செயல்படுத்தப்பட்டது. சில நெருங்கிய சொந்தங்களோடு வீட்டிற்கு வந்தவள், வீட்டின் வெறுமையில் கதறியழ, தேற்றுவார் யாருமில்லை.

"மூனாநாளே காரியம் வச்சுறலாம். பையனா இருக்கான்... மத்த சாங்கியமெல்லாம் பண்ணுறதுக்கு?" என்று முடிவெடுத்து, காரியம் வரை உடனிருந்தவர்களும்,

“நம்ம பையனக் கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா, நம்ம கூட வச்சுக்கலாம்.” என்று தந்தைவழி சொந்தமும், 

“நம்ம வீட்ல என்ன மாப்பிள்ளையா இருக்கு? இவளக் கூட்டிட்டுப் ‌போயி எவனுக்கோ இந்த சொத்துக்களோட தாரை வாக்கறதுக்கு நாம ஏன் காவக் காக்கணும்?” என்று தாய்வழி சொந்தமும் பேசிக் கொண்டனர்.

இந்த வீடும், காலிமனையும், நகைகளும், பெற்றோரின் சர்வீஸ் பணமுமே அவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

திவ்யாவுடன் ஆதரவாக இருந்த சண்முகம் மற்றும் லட்சுமியின் காதுகளில் இவர்கள் பேச்சு விழ, "என்ன மனுசங்க?" என்ற வெறுப்பு இருவருக்கும் வந்தே விட்டது.

"எதுவா இருந்தாலும் முப்பது நாள் முடியப் பேசிக்கலாம். இப்ப நீங்க கிளம்புங்க." என்று அனைவரையும் நாசுக்காக வெளியேற்றினர்.

லட்சுமி ஒருவாரம் வரை உடனிருந்தார். சண்முகமும் அவர் வீட்டிற்குச் சென்று, பிள்ளைகளுக்குத் தேவையானதை செய்து விட்டு, செல்லாத்தா மற்றும் பாப்பாத்தி பொறுப்பில் ஒப்படைத்து விட்டு வருவார். கடையில் வேலை செய்வோரும் அவருக்கு உதவியாக இருந்தனர்.

திவ்யா சற்று தெளிய ஆரம்பித்தாள். ‘இனி நமக்கென்று யாருமில்லை’ என்ற எண்ணமே அவளின்‌ உணர்ச்சிகளை இறுக வைத்தது. கண்களும் இனி கண்ணீர் இல்லை என, சற்று ஓய்வு கேட்டது. 

"திவ்யா! புள்ளைக தேடுறாங்களாம்மா... நான் கிளம்பட்டுமா?" என்ற லட்சுமியை நிமிர்ந்து பார்த்தவள், 'இவருக்கும் நமக்கும் என்ன உறவு? ஆனால் இவர் கொடுத்த ஆதரவு கூட சொந்தங்கள் கொடுக்காதது ஏன்?' என‌ நினைத்துக் கொண்டாள்.

‘தன்னால் இனி இவர்களுக்கு சிரமம் வேண்டாம்’ என எண்ணிக் கொண்டாள்.

"நீங்க கிளம்புங்க ஆன்ட்டி... நான் பாத்துக்கறேன். வெளிய போன அம்மா அப்பா இன்னும் வீடு வரலைனு நினச்சுக்கிறேன்." என்று கூறியவளைக் கட்டிப்பிடித்து லட்சுமி கதறி விட்டார். 

அவளும் கலங்கினாள் தான். ஆனால் பிரயோஜனம் என்ன. துடைக்கும் கைகளில்லையே! அந்த எண்ணமே அவளை இறுக வைத்து உறுதியாக்கியது.

"நைட்டுக்கு செல்லாத்தா ஆன்ட்டியோ இல்லைனா பாப்பாத்தி ஆன்ட்டியோ துணைக்கு அனுப்பி வைக்கிறேம்மா. முப்பது நாளைக்கு அப்புறமா என்ன பண்றதுனு பாக்கலாம்னு அங்கிள் சொல்லி இருக்காங்க திவ்யா." என்று கூறியவரை அனுப்பி வைத்து விட்டு, கதவைப் பூட்டியவளுக்கோ, எந்த உணர்ச்சியுமற்ற ஏகாந்த நிலை. தனிமையையே துணையாகக் கொள்ளத் தயாரானாள்.

அன்பு காட்ட யாருமில்லை எனத் தனக்குள் இறுகியவளை, காதல் கொண்டு இளக வைத்தான் ஒருவன். அவனும் அவளுக்கு பாலைத்தினையைக் கற்பித்துக் கொண்டிருக்கிறான்.

காத்தோடு காத்தானேன்

கண்ணே உன்மூச்சானேன்

நீரோடு நீரானேன்

உன் கூட மீனானேன்.

 இலை மறைவில்

 மலர்ந்திருந்தோம்.

 மழைத் துளியில்

 கலந்திருந்தோம்…

***

"நீங்க சொல்லுற மாதிரி எல்லாம் பண்ண முடியாது சார்." மருத்துவமனை பணியாள் விளக்கிக் கொண்டிருக்க,

"நான் வெளிய போகுறதுக்கு என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க போதும்." அவன் கத்தினான்.

"அது பெரிய டாக்டர் கிட்ட தான் கேக்கணும். நானும் ரெண்டு மூனு நாளா இதைத் தானே சார் சொல்லிட்டு இருக்கேன்." பணியால் சற்றே இறங்கி வர,

"என்னால இங்க இருக்கவே முடியாது. யோசிச்சு யோசிச்சே தலையே வெடிச்சுரும் போல இருக்கு." இயலாமையில் வெடித்தான் அவன்.

"அதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும்? நான் வெறும் நர்ஸ் மட்டும்தான் சார். பேஷண்ட டிஸ்சார்ஜ் பண்ணுறதெல்லாம் டாக்டர் தான் முடிவு செய்யணும்."

"அவர் தான் வரவே மாட்டேங்கறாரே!"

"சார் இது கவர்மெண்ட் ஆஸ்பத்திரி. நீங்க நினைச்ச நேரமெல்லாம் வரமாட்டாங்க."

"ப்ளீஸ்... என் நிலைமை புரியலையா உங்களுக்கு? இங்கேயே இருந்தா பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு. என்னைய வெளிய விடுங்க..." என்று 

மெதுவாக ஆரம்பித்து உச்சஸ்துதியில் கத்தினான் பொறுமையிழந்து.

மருத்துவமனை வராண்டாவில் நடந்து கொண்டிருந்த சண்முகமும் திவ்யாவும் அந்தச் சத்தம் கேட்டு, அறையின் உள்ளே ஏதேச்சையாக எட்டிப் பார்க்க, அங்கு அவர்கள் பார்த்தது, மருத்துவமனை உடையில் தலையை இருகைகளால் தாங்கியபடி, காலில் கட்டோடு, கட்டிலில் அமர்ந்து இருந்தவனைத் தான். 

வாரிசுச் சான்றிதழுக்காக அரசு மருத்துவர் கையெழுத்து வாங்குவது தொடர்பாக, அன்று இருவரும் மருத்துவமனை வந்திருந்தனர்.

இவர்களைக் கண்ட அந்த செவிலியர், சிறிது யோசித்து விட்டு, "இவரப் பாக்கதான் வந்தீங்களா?" எனக் கேட்டார். அன்று பெற்றோரின் இழப்பால் கதறியழுதவள் முகம் அவருக்கு நன்கு பதிந்து இருந்தது.

"சார் ஏதாவது விபரம் வேணும்னா இவங்களைக் கேளுங்க." என்றவரை,

சண்முகமும்‌ திவ்யாவும் ஒன்றும் புரியாமல் பார்க்க, "நீங்க... இவரப் பாக்க தானே வந்தீங்க? உங்க அப்பா அம்மா ஆக்ஸிடென்டான அன்னைக்குதான் இவருக்கும் ஆக்ஸிடென்ட் ஆச்சும்மா." என்று கூறியவர்,

அவனைப் பார்த்து,  "ஏதாவது தெரியணும்னா இவங்களை கேட்டுத் தெரிஞ்சுக்குங்க." என்று கூறி விட்டு‌, அவனுக்குரிய மருந்து மாத்திரைகளை வைத்து விட்டு வெளியேறி விட்டார். 

ஒருவேளை இவர்களுக்கு இவனைத் தெரிந்திருக்கும். அதனால் பார்க்க வந்திருப்பதாக எண்ணிக் கொண்டார். அவர்களைப் பார்த்தவனது முகத்தில் இருந்த ஆர்வமும் இவர்களைக் குழப்பியது.

"நான் யார்னு உங்களுக்குத் தெரியுமா?" இந்தக் கேள்வியில் தெரிந்த பரிதவிப்பும், ஆர்வமும் மேலும் இவர்களைக் குழப்ப ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

‘நீ யார்?’ என்று கேட்பவர்களைப் பார்த்திருக்கிறோம். 'நான்‌ யார் தெரியுமா?' என்ற அகம்பாவக் கேள்வியையும் கேட்டிருக்கிறோம்.

ஆனால் 'நான் யாரென்று சொல்லுங்களேன்.' என்று பரிதவிப்பாகக் கேள்வி கேட்பவனைப் பார்த்தவர்களுக்கு, திருவிழாவில் தொலைந்த சிறுபிள்ளையாக, ‘யாராவது என் பெற்றோரைக் காட்டுங்களேன்’ என்றிருந்தது.

முகத்தில் தெரிந்த முதிர்ச்சி, பார்வையில் இல்லை. பார்வையில் சிறு அலைபாயல். எதையோ தேடும் அலைக்கழிப்பு.

விபத்து நடந்த இரவு, ஆம்புலன்ஸில் ஏற்றி வரப்பெற்றவர்களில் இறந்தவர்கள் மார்ச்சுவரிக்கும், காலில் எலும்பு முறிவுடன் மயக்க நிலையிலும் இருந்தவனை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கும் எடுத்து செல்லப்பட்டனர். 

அவனைப் பரிசோதித்துப் பார்த்ததில் இடது கனுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை அறியப் பெற்று, அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவன் மயக்கம் மட்டும் தெளியவில்லை.

உடலில் வேறு எங்கும் பெரிய காயமோ பாதிப்போ எதுவுமில்லை. காலில் எலும்புமுறிவும், சிறிது நாள் ஓய்வில் சரியாகும் நிலைமைதான். எனினும் நினைவு மட்டும் திரும்பவில்லை.

மூன்று நாட்களாக கண்விழிக்காமல் இருந்தவனது நிலைமை கோமாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தை மருத்துவர்களுக்கு ஏற்படுத்திய நிலைமையில் தான், நான்காம் நாள் கண் விழித்தான்.

அவனைத் தேடியும் யாரும் வரவில்லை. இந்த நிலைமையில் அவனுக்கான சிகிச்சை மந்த நிலையில்தான் நடந்தது.

கண் விழித்தவனுக்கு இருக்கும் இடமும் தெரியவில்லை. இருக்கும் நிலைமையும்‌ பிடிபடவில்லை. காலின் வலி மட்டும் அவனுக்கு அடிபட்டிருப்பதை உணர்த்தியது. அமைதியாகவே இருந்தான்.

செவிலிப்பெண் வந்து அவன் விழித்திருப்பதைக் கண்டு ஆச்சரியத்துடன், "கண்ணு முழிச்சிட்டிங்களா?" எனக் கேட்க பதில் பேசவில்லை.

தன்னைச் சுற்றி இருப்பவைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

அவன் அமைதியாக இருப்பதைக் கண்ட செவிலியரும், "சார்… உங்க பேரென்ன? அட்ரஸ் ஃபோன் நம்பர் சொல்லுங்க. உங்க ஃபேம்லிக்கு இன்ஃபார்ம் பண்ணனும்." என்று சற்று சத்தமாகப் கேட்டார்.

அப்பொழுதுதான், 'பேரா! ஃபேமிலியா!' என யோசித்தான். 

அவனின் அமைதி அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அவரும் இவன் கண் விழித்ததை மருத்துவருக்கு தெரிவிக்க சென்றுவிட்டார்.

மருத்துவரும் வந்து சோதனை செய்தவர், "உன் பேரென்னப்பா?" எனக் கேட்டார்.

அவனிடமிருந்து பதில் வராமல் போக, ''தம்பி... உனக்கு ஆக்ஸிடென்ட் ஆகி நாலுநாள் ஆச்சு. கால்ல அடிபட்டிருக்கு. இன்னைக்கு தான் கண்ணு முழிச்சிருக்க. உன்னைத் தேடியும் யாரும் வரல. உன்னப் பத்தின விவரங்களை சொன்னா, உன் சொந்தக்காரங்களுக்கு தகவல் சொல்லி விடலாம்." எனப் பொறுமையாக சிறுபிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரை ஏறிட்டுப் பார்த்தவன், மருத்துவர் கூறிய விபரங்களை சேகரித்து யோசித்துப் பார்த்தான். எனினும் எவ்விபரமும் அவன் நினைவுக்கு வரவில்லை.

அவரைப் பார்த்து இடவலமாகத் தலையாட்ட, என்னவென்று மருத்துவர் கேட்க, "எனக்கு… எதுவும்… நினைவுக்கு வரல." என்று கூறினான். நான்கு நாட்களாக பேசாத குரல்வளை பிசிரடிக்க, இறுகிய குரலில் தட்டுத்தடுமாறி பதிலுரைத்தான்.

மருத்துவரும் சற்று சிந்தித்துவிட்டு, "இப்ப தான கண்ணு முழிச்சிருக்க. கொஞ்சம் நேரம் போகட்டும். அப்புறம் வந்து பாக்குறேன்." என்று கூறிச் சென்று விட்டார்.

 

பகிரப்பட்ட

NEW REALESED