Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 1

நினைக்காத நேரமேது...

நினைவு-1

அன்றைய நாளின் ஏகாந்த காலை. அந்த வானம் தன் இடையினில் உடுத்தியிருந்த கருப்புநிறத் தாவணியை கலைந்து, நீலவண்ணச் சேலையை அணிந்து கொண்டிருந்தது.

பறவைக் கூட்டங்கள் ஒலி எழுப்பிக் கொண்டே, சந்தோஷ சிறகசைப்புடன் அந்த கடலைக் கடந்து கொண்டிருந்தன. எழுந்தான் செங்கதிரோன், அவன் திசைப்பட்ட இடம் எல்லாம் விழுந்தது தங்கத்தூறல்.

வெளியெல்லாம் ஒளியின் வீச்சு. அந்த இயற்கை பல மாயா ஜாலங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. அன்றைய விடியலை ரசித்தபடி சுறுசுறுப்புடன் வந்தாள் திவ்யா.

ஐந்தரை அடி சந்தனச்சிலையாக, சாக்லேட் நிற சல்வாரில் வெள்ளை நட்சத்திரப் பூக்கள் மின்ன, இடையைத் தொட்ட கூந்தல் அசைந்தாட அழகின் இலக்கனாமாக வந்து நின்றாள். 

"குட்மார்னிங் அங்கிள்." என்ற உற்சாகக் குரல் கேட்டு‌ நிமிர்ந்தார் சண்முகம்.

ஐம்பதுகளைக் கடந்த பண்பட்ட தோற்றம். பார்வையில் அத்தனை தீர்க்கம். தோட்டத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தவரின் முகம் திவ்யாவின் குரல் கேட்டு தன்னால் மலர்ந்தது.

 "குட்மார்னிங் திவ்யா! என்னம்மா கிளம்பியாச்சா?" என்று அன்போடு கேட்க,

"ஆமா அங்கிள்! ரொம்ப நேரம் வெயில்ல நிக்காம சீக்கிரமா செடிகளுக்குத் தண்ணி விட்டுட்டு உள்ள போங்க... பிள்ளைகள் எல்லாம் வெயிட் பண்றாங்க பாருங்க!" அவருடைய அடுத்தட பணியை நினைவூட்டினாள்.

அந்த பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலை எப்போதும் அவளுடையது. தற்சமயம் அவளின் வேலைப்பளுவினை உத்தேசித்து அவரிடம் மாற்றி விட்டிருந்தாள். அதைக் கொண்டே அவள் ஞாபகப் படுத்தினாள்.

"மறக்கலம்மா... எனக்கு அதைத் தவிர வேறென்ன வேலை? நீ சாப்டியா? லன்ச் எடுத்துக்கிட்டயா?" அக்கறையுடன் கேட்க,

"எடுத்துக்கிட்டேன் அங்கிள்... இந்த ஒரு வாரம் மட்டும் பாத்துக்கோங்க... அடுத்த வாரத்துல இருந்து எப்பவும் போல போனாப் போதும். இந்த வாரம் மட்டும்ந்தான் சீக்கிரமா போக வேண்டியிருக்கும்."

"நான் பாத்துக்கிறேன். நம்ம பிள்ளைக எல்லாம் சமத்து... நீ‌ பத்திரமாப் போயிட்டு வாம்மா!" தந்தையின் வாஞ்சையோடு அனுப்பி வைத்தார்.

"பை அங்கிள்." எனக் கூறியவள் தனது ஸ்கூட்டியை‌ எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

திவ்யா... அரிவைப் பருவத்தின் ‌இறுதியில் இருப்பவள். புயலென சுழட்டி அடிக்காமல் தென்றலென வருடும் இதமான‌ அழகு. எப்பொழுதும் புன்னகை தவழும் முகம். நளினம் நேர்த்தி என்று அனைத்தையும் தனக்குள் அடக்கிய பவ்யமான தோற்றம்.

தற்சமயம் ஒரு ஏற்றுமதிக் கம்பெனியில் ஷீஃப் அக்கவுண்டன்டாகப் பணிபுரிகிறாள். அடுத்த வாரத்தில் இவள் வேலைப் பார்க்கும் கம்பெனி இன்னொருவருக்கு கைமாறுகிறது. அதன் காரணமாக இவளின் வேலை அதிகமாக‌ இருப்பதால் நேரம் காலம் பார்க்காமல் கிளம்பி அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது.

இன்று செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டுக் கொண்டே ஸ்கூட்டியை பார்க்கிங்கில் விட்டுவிட்டு அலுவலகம் நோக்கிச் சென்றாள்.

"என்ன சாந்தி அக்கா? வேலை எல்லாம் ஜரூரா நடக்குது போல?" 

அந்த காலை நேரத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்பவர் மட்டும் வந்து, தனது பணியைச் செய்து கொண்டிருந்தார்.

"ஆமாம்மா... ஏம்மா... முதலாளி மட்டும் தானே மாறுறாங்க? என்னமோ கம்பெனியே மாறிப் போற மாதிரி வேலை வாங்குறாங்க?” என்று சாந்தி சலிப்பாய் முகம் சுருக்கிக் கொண்டாள்.

"என்னக்கா‌ பண்றது? புதுசா ஒப்படைக்கிறவங்க கிட்ட எல்லாம் கரெக்டா ஒப்படைக்கணும்ல..." என பேசிக்கொண்டே கம்யூட்டரை இயக்கி தன் வேலையில் கவனமானாள்.

“என்னமோ போங்க... இந்த பழக்க வழக்கமெல்லாம் எங்களுக்கு ஒன்னும் தெரியுறதில்ல. ஆபீஸுக்கு வந்தோமா வேலையை முடிச்சோமான்னு போயிட்டே இருக்கேன்.” சாந்தி அவள் போக்கில் புலம்பிக் கொண்டே வேலையை தொடர ஆரம்பித்தாள்.

நேரம் ஒன்பது மணியைத் தொட ஒவ்வொருவராக பணிக்கு வர ஆரம்பித்தனர்.

"ஹாய் திவ்யா! குட்மார்னிங்!" என்று வந்து அமர்ந்தாள்‌ நந்தினி. இந்த அலுவலகம் சேர்ந்ததில் இருந்து திவ்யாவிற்கு இருக்கும் நெருங்கிய தோழி இவள்.

தோழியின் குரல் கேட்டு ‌நிமிர்ந்தவள், “ஹாப்பி மார்னிங் நந்து!” புன்னகை முகத்துடன்‌ பதில் வணக்கம் சொல்ல,

"உன்னோட இந்த சிரிச்ச முகத்தைப் பாத்துட்டு வேலை ஆரம்பிச்சா இந்த நாள்‌ இனிய நாளா இருக்கும்." நந்தினி பேசிய நேரத்தில்,

"ஏம்மா... அப்ப எங்க முகத்துல எல்லாம் முழிச்சா நல்லா‌ இருக்காதா?" என‌ சாந்தி‌ வெகுவாய் முகம் சுருக்கிக் கேட்க,

"ஐய்யய்யோ... அக்கா! உங்க முகத்துல முழிச்சா இன்னும் ரொம்ப்ப்ப்ப... நல்லா இருக்கும்," என ‘ரொம்ப’ வில் அழுத்தம் கொடுத்துக் கூறியவளைப் பார்த்து,

"நீ பொழச்சுக்குவ..." எனக் ‌கூறி விட்டு சென்று விட்டாள் சாந்தி.

"திவி... என்ன சாந்தியக்கா செம கடுப்பா இருக்காங்க போல?"

"ஆமா... வேலை அதிகமா இருக்காம், நான் வந்ததும் புகார் பாடி முடிச்சாச்சு!"

"அப்புறம்... சம்பளம்‌ சும்மாவா தருவாங்க? இவ்ளோ நாளா மேம்போக்கா வேலை பாத்தாங்கள்ல... கொஞ்ச நாளைக்கு நல்லா வேலை‌ பாக்கட்டுமே! அதுக்கப்புறமா வர்ற புது எம்.டியோட பாடு. ஆமா… திவி, புது எம்.டி பத்தி ஏதாவது தெரியுமா?" அடுத்து வரவிருக்கும் புதிய நிர்வாகியைப் பற்றிய ஆவலில் நந்தினி விசாரிக்க,

"இல்லப்பா... ஆனா நம்ம‌ எம்.டி‌யோட பழைய‌ பார்ட்னர்னு நினைக்கிறேன்."

"ஐய்யே… அப்ப ஓல்டியா?" என்றவள் திவ்யா பார்த்த பார்வையில், 

"புரியுது! ஏன் கல்யாணம் ஆயிட்டா சைட் அடிக்கக் கூடாதா? ஆம்பளைங்க மட்டும் தான் கல்யாணத்துக்கு அப்புறமும் சைட்டு, ஜாலினு‌ இருப்பாங்களா? எனக் கூற

"உன்னைத் திருத்த முடியாது." என்று சலித்துக் கொண்டாள் திவ்யா.

"ஏம்ப்பா... ரசிக்கறது‌ தப்பா?" என நந்தினி அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க.

"நீ என்னமோ பண்ணு.... யாரு வந்தா நமக்கென்ன? நாம‌ நம்ம வேலையை மட்டும் பாப்போம்.'' எனக்‌ கூறிவிட்டு அவரவர் வேலையில் ஒன்றிப் போயினர்.

இதுதான் திவ்யா... தானுண்டு, தன் வேலையுண்டு என அமைதியுடன் இருப்பாள். அனாவசியமாக எதிலும் தலையிட மாட்டாள்.

சட்டென‌ சலசலப்பு அடங்க, அந்தக் கம்பெனியின் எம்டி இராமநாதன் உள்ளே நுழைந்தார். அனைவரின் வணக்கத்திற்கும் சிறு தலையசைவைப் பதிலாகத் தந்து விட்டு தனது அலுவலக அறையை நோக்கிச் சென்றார்.

உடல்நிலை‌ பின்னடைவு காரணமாக மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வு எடுத்தே ஆக வேண்டும் எனக்கூறி விட, பிள்ளைகளும்‌ வெளிநாட்டில் செட்டிலாகி விட்டதில் அவரது தொழிலை ஏற்று நடத்த ஆளில்லாமல் போய்விட்டது. இதன் காரணமே மனதை கல்லாக்கிக் கொண்டு தனது கம்பெனியை விற்க முடிவு செய்து விட்டார்.

தனது அறையில் வந்து அமர்ந்தவரின் முகத்தில் ஒரு வெறுமை படர்ந்திருந்தது. தனது மகிழ்ச்சி, வருத்தம், வெற்றி, தோல்வி என அனைத்தையும் கொண்டாடிய இடம். தனது வீட்டில் இருந்ததை விட அதிக நேரங்களை செலவழித்தது இந்த அலுவலக அறையில் தான்.

இராமநாதன் தன் நண்பருடன் சேர்ந்து ஆரம்பித்த கம்பெனி இது. தனது பிள்ளைகளால் தன் நண்பனின் சுயமரியாதைக்குப் பங்கம் வரும் எனத் தெரிந்தவுடன், தானாகவே முன்வந்து அவரது பங்குகளைப் பிரித்துக் கொடுத்து அனுப்பி விட்டார். 

பழைய நினைவுகளில் இருந்து மீண்டவர் இன்டர்காமில் திவ்யாவிற்கு அழைப்பு விடுத்தார்.

அறைக்கதவைத் தட்டிவிட்டு, உள்ளே வந்தவள், "குட்மார்னிங் சர்!" என வணக்கம் வைக்க,

"வாம்மா... உக்காரு, எல்லா டீடெயில்ஸும் ரெடி பண்ணிட்டியா?"

"ரெடியா இருக்கு சார். நம்மகிட்ட இருக்கிற ஸ்டாக்கோட விபரம், வரவேண்டிய ஸ்டாக்கோட டீடெய்ல்ஸ், பெண்டிங் அமௌண்ட், நாம கொடுக்க வேண்டிய அமௌண்ட், எக்ஸ்போர்ட் பண்ணின விபரம் எல்லாம் டே பை டே டேட்டாவா கம்ப்யூட்டர்ல போட்டு வச்சுட்டேன் சார். உங்களுக்கும் அனுப்பிட்டேன் செக் பண்ணிக்குங்க!"

"உன் வேலைய செக் பண்ண வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் உன் திருப்திக்காக பாத்துர்றேன்." என்றபடி கணிணியில் பார்வையைப் பதித்தார்.

பதில் சொன்னவரின் முகத்தைப் பார்த்தாள். அதில் தெரிந்த‌ வெறுமை அவளை என்னமோ செய்தது. வயதை கருத்தில் கொள்ளாமல் எந்நேரமும் சுறுசுறுப்போடு சுற்றிக் கொண்டிருப்பவரின் சோர்வைப் பார்த்து மனம் வருந்தியது.

“என்ன சார் கம்பெனி கை மாத்துறா விசயமா ரொம்ப ஃபீல் பண்றீங்களா?”

“ஃபீல் பண்ணாமா இருக்க முடியுமாம்மா? என் வாழ்க்கையோட முழு அர்த்தமே இந்த தொழில் தானே!” என்று சோகமாய் சிரித்தார்.

“என்னைக்காவது ஒருநாள் வேலையில இருந்து ஓய்வெடுத்து தானே ஆகணும். அப்படி நினைச்சுக்கோங்க சார்!” திவ்யா அவருக்கு ஆறுதல் கூற,

“என் பிள்ளைகளோட பிள்ளையா இதையும் வளர்த்துட்டேன்... உணர்வோட இருக்கறவங்க காட்டுற அலட்சியம் இது காட்டாது. அதனாலேயே இந்த தொழிலை விட்டுப் பிரிய எனக்கு மனசு வரல. அவ்வளவு கஷ்டமாயிருக்கு.” என்று நொந்த குரலில் பேசினார்.

"ஏன் சார்? கவர்மென்ட்ல வேலை பாக்குறவங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல ஓய்வு கொடுத்து அனுப்பிடறாங்க. நீங்க என்னடான்னா எழுபது வயசுல ஓய்வெடுக்க‌ சொன்னா வயலின் வாசிக்கறீங்களே." தாங்கமுடியாமல் அவரை சலுகையுடன் அதட்டிக் கேட்டாள்.

திவ்யா இங்கே வேலைக்கு சேர்ந்து குறுகிய‌ காலமேயானாலும், வேலையில் அவளுக்கு இருந்த ஆர்வமும் பணியின் மீதான நேர்த்தியும், அமைதி ததும்பும் முகமும் அவள் மீது அவருக்கு ஒரு பிரியத்தைத் தோற்றுவித்து இருந்தது. அதனால் அவளிடம் சற்று சகஜமாகப் பேசுவார்.

"ஏம்மா, எழுபது எல்லாம் ஒரு வயசா?"

"இல்லவே இல்ல‌ சார்... வயசுங்கறது உடம்புக்குதான். மனசுக்கு இல்ல." எனத் தலையை ஆட்டிக் கூறியவள், அவர் பார்த்த பார்வையில்,

"புரியுது சார்... புதுசா ஏதாவது சொல்லி மொக்கை வாங்கறதை விட எல்லோரும் சொல்றதையே நாமளும் சொல்லிட்டுப் போயிருவோம் சார். அப்புறம், ஓய்வுனா ஏன் சார் சும்மா ‌இருக்கிறதுனு எடுத்துக்கணும். நமக்குப் புடிச்ச விஷயங்களை செய்யறதுக்கான நேரம்னு எடுத்துக்க வேண்டியதுதானே சர்!" தோள் குலுக்கி இலகுவாய் சொன்னவளை பார்த்து சகஜமானார்.

அவள் கூறியதைக் கேட்டு சிரித்தவர், “கம்பெனியை விட்டுட்டுப் போறோம்னு ஒரு பக்கம் கவலையா இருந்தாலும், என் நண்பனுக்கே கொடுக்கறதுல ஒரு பக்கம் சந்தோஷம்மா... அவனும் நானும் சேர்ந்து தான்‌ இந்தக் கம்பெனியை ஆரம்பிச்சோம்." மலரும் நினைவுகளில் லயித்துப் பேசினார்.

"அவ்ளோ தான் சார்... ஒரு விஷயம் நடந்தா அதுல இருக்கிற நல்லதை எடுத்துப்போம். நமக்குப் பிடிச்ச ஒன்னு நமக்குப் பிடிச்சவங்ககிட்ட இருக்குனு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்." எனக் கூறி‌விட்டு எழுந்து கொண்டாள்.

"சரிம்மா... உன்கிட்ட பேசினதுக்கு அப்புறம் மனசு கொஞ்சம் பரவாயில்லை. நீ போய் வேலையப்‌ பாரும்மா!" என்றவர் கணினிப் பக்கம் தனது பார்வையைத் திருப்ப,

"ஓகே சார்... மனசப் போட்டுக் குழப்பாம உங்க உடம்ப பாத்துக்கங்க... அப்போதான் மனசும் ஆரோக்கியமா இருக்கும். மன நலமும் உடல் நலமும் ரெண்டு கண்களா பாவிச்சா தான் ஒய்வு காலத்துல நம்ம இஷ்டம் போல ஊர் சுத்த முடியும்." என்று கண்சிமிட்டிக் கூறியவள் தன் இருக்கைக்குத் திரும்பினாள்.

ஏதோ தன்னால் முடிந்தளவிற்கு ஒரு ஜீவனை மனப்புழுக்கத்தில் இருந்து விடுவித்த மகிழ்ச்சியில் அன்றைய நாளின் மீதி வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

பிரிவு என்பது மிகவும் கொடுமையானது. அது உறவாக இருந்தாலும் சரி உடமையாக இருந்தாலும் சரி. சில சமயங்களில் மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

காத்திருப்போம்... மாற்றம் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது என்பதற்காக.

***