Moutiyam books and stories free download online pdf in Tamil

மௌட்டியம்

லாந்தர் வெளிச்சத்தில் வியர்க்க விருவிருக்க செக்கோடி தெற்காலே இருந்த‌ ஒத்தையடி பாதையில் வெறிக் கொண்டு மட்டும் தேடி கொண்டிருந்தான் தருமன். நெற்றி முகமெல்லாம் வியர்வை உதிர்ந்து கொட்டியது. இரண்டு பக்கமும் கருவேலங்காடு சூழ்ந்திருந்ததால் தேடியது கிடைப்பதில் சிக்கல் இருந்தது. ஆளரவம் இல்லாத நிசப்தமான அந்த சாயங்கால வேளையில் யாரையோ கண்ணில் விளக்கெண்ணெயை விட்டதை போல தேடினான்.

"என்னணே இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க" அவ்வழியே சைக்கிளில் வந்த ஊர்க்காரன் கேட்டான்.
"என் மவன தேடிட்டு இருக்கேன் டா"
"ஏன் ணே என்னாச்சு"
"வீட்டில இருந்த இரண்டு பவுண் சங்கிலிய எடுத்து ஓடிட்டான்டா"
"என்னணே சொல்ற எதுக்கு அத எடுத்துட்டு ஓடுனான்"
"அடேய் அத சொல்லலாம் இப்ப நேரமில்லை அந்த நாய்க்கு என்ன நொரண்டு இருந்த எடுத்துட்டு ஓடுவான் ஓடுகாலி பய" தருமன் ஆத்திரத்துடன் சொன்னான்.

"ஏய் தருமா உன்ன எங்கலாம் தேடுறது! இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க...
நீ என்னத்த வேனா பண்ணிட்டு போ.
வர்ற ஞாயித்துகிழம என் ஒறம்பரை எல்லாம் ஒட்டுக்க வராங்க அதுனால அந்திக்கு காட்டு முயலா நாலு புடிச்சுகிட்டு வா சாராயத்துக்கு நல்ல இருக்கும் அப்படியே அணில் கிடைச்சாலும் பிடிச்சுக்கிட்டு வாடா.‌ நீபாட்டுக்கு பொடக்காலி பக்கம் வந்து நின்றாத. என் தென்னந் தோப்பு வந்துட்டு சேதி சொல்லி அனுப்பு... விளங்குச்சா டா"
"ஆகட்டும்ங்க. நீங்க சொல்லிட்டா மறுபேச்சு ஏது"
"இந்த நக்கல் மயித்துக்கு ஒன்னும் குறச்சலில்ல" கிளம்பியவன் முனுமுனுத்தவாறே 'பன்றி மேய்கிற நாய்க்கு தருமனு பேரு' தலையில் அடித்து கொண்டு புல்லட்டில் பறந்தான் பண்ணாடி.

"அவன விட்டு தள்ளுணே சல்லிபயன். நீ போய் தேடு நான் பொறத்தாண்ட வரேன்" சொல்லிக் கொண்டே சைக்கிளை மிதித்தவன் 'ஆமா! இவனுக்கு ஏது இரண்டு பவுண் சங்கிலி. இவனே ஒரு அன்னாடங்காட்சி‌‌. ம்ம் என்னமோ இடிக்குதே'. கையில் இடித்த சைக்கிள் ஹாண்ட் பாரை தள்ளி விட்டு யோசித்தான்.

"அன்னைக்கு கடைசியா செக்கோடில இருந்து ஒரு லாரில ஏறி பொம்மிடிக்கு போனதா செவலை சொன்னான். பொம்மிடி ஸ்டேஷன்ல இருந்து மெட்ராஸ்க்கு இரயில் ஏறுனத பார்த்ததா பரமசிவன் சொன்னான். எட்டு வருசமா எத்தனையோ நாள் அவனும் வந்துருவான் வந்துருவான் நினச்சு மனசு கிடந்து அடியா அடிச்சிச்சு. ஆனா அவன் வரவே இல்லை‌. அவன் மேல திருட்டு பட்டம் கட்டி ஏன் என் புருஷன் விரட்டுனானு இன்னமும் புரியல. என் புருஷன் நாண்டுகிட்டதுக்கு அப்புறம் அந்த ஊருல இருக்கவே பிடிக்கல. புழப்புக்கு இங்க வந்தேன் என் மவன் சாயல்ல யாரையாவது பார்த்த மனசு துடிக்கும். இப்பயும் அப்படி தான் என் மவன் சாயல்ல ஒரு தம்பிய பார்த்தேன் பிடிக்குறதுகுள்ள இப்படி ஆயிடுச்சு. என் மவன் பேரு மகிழ்ச்சி. எப்போதும் சிரிச்சிட்டே இருக்கனும்னு வச்சேன். அவன் குணத்துல தங்கம். யாருக்கும் எந்த கெடுத்தலும் நினைக்காத வெள்ளந்தி பய. அவன் எங்க இருந்தாலும் ராசாவாட்டம் இருக்கனும் ! இருப்பான். அது தான் என் ஆசை. அவன ஒரு மட்டும் பார்த்துட்ட என் கட்ட வெந்துரும்". சென்னை தார் ரோட்டில் மகனை தேடி அலைந்து மயங்கி கிடந்தவளை இவ்வளவு வியாக்கியானமாக பேச வைத்தது புத்திர சோகம் தான். மூக்கம்மாள் மொத்தத்தையும் சொல்லி முடிக்கும் போது காவிரி அவள் கண்களில் தாரை தாரையாக கொட்டியது. அதை கேட்டுக் கொண்டே தன் ஹாண்ட் பேக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தாள் அவள். மூக்கம்மாள் பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்த போது பாந்தமாக அவளை மடியில் வைத்து மயக்கத்தை கலைத்தவள் இவள் தான்.

மூக்கம்மாளையே உத்து உத்து பார்த்து விட்டு மனதுக்குள் புன்னகையை பூத்தப்படி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு தன் அஞ்ஞாதவாச வரலாறை சொல்ல தொடங்கினாள். மகாபாரதத்தில் பாண்டவர்களின் அஞ்ஞாதவாசத்தில் ஊர்வசியின் சாபத்தால் அர்ஜூனன் செய்த வாசம் கொஞ்சம் கொடுமையானது தான். பிருஹன்னலையாக ஓராண்டு காலம் அர்ஜூனன் சந்தித்த துன்பங்கள் ஏராளம். அதை போல இவளும் தான் ஆனால் ஓராண்டு சாபமாக அதை சுருக்கிட முடியாத பெரும் சாபத்தை அவள் பெற்றிருந்தாள்.

"நானும் அப்படித்தான். எனக்கு பதினஞ்சு வயசு இருக்கும் போது வீட்ட விட்டு ஓடி வந்தேன். பிறப்பால ஆம்பளயா புறந்தா நான் என்ன காரணமோ பெண்ணா உணர ஆரம்பிச்சேன்.

மஞ்சள் தேச்சேன், வளையல் போட்டேன், சேலை கட்டுனேன். ஒரு நாள் அப்படி தான் சேலை கட்டி பார்க்கும் போது என் ஐயன் பார்த்தாரு அப்புறம் அடிச்சாரு. திட்டுனாரு. நான் எவ்வளவோ சொன்னேன் என் ஐயன் என்ன புரிஞ்சுக்கவே இல்லை.

'நீ ஆம்பளடா உன்ன நீ மாத்திக்கனு சொன்னாரு' அவருக்கு புரியல முடியாதுங்கறதுக்கும் முடியலைங்கறதுக்கும் உள்ள வித்தியாசம்.

எவ்வளவோ பேசியும் முடியாம ஓஞ்சு போனவரு கடைசியா என்ன காரியம் பண்ணணும் முடிவு செஞ்சாரு. அதான் கவுரவக் கொலை. இத தெரிஞ்சுகிட்டு வாழனுங்குற ஆசையில அன்னைக்கு நான் சென்னைக்கு ஓடி வந்தேன்". கண்ணில் நீர் கமழ அவள் கூறி முடிக்கையில் மூக்கம்மாளின் கண்களிலும் நீர் கசிந்து இருந்தது. அவள் கண்ணனின் சூழ்ச்சிக்காகவோ பீஷ்மனின் வீழ்ச்சிக்காகவோ இந்த தோற்றத்தை அடையவில்லை. குரோமோசோம்களின் எதோ சில குரோதத்தினால் நிகழ்ந்தவை என்று அவளால் யாரிடமும் புரிய வைக்க முடியவில்லை.

அன்று சென்னைக்கு ஓடி வந்தவள் தன்னை பெண்ணாக பாவித்து கொஞ்சம் சுதந்திரத்துடன் சுற்றித் திரிந்தாள். 'பெண்ணுக்கு ஏதுடா சுதந்திரம்' என்பதை போல அவளை துரத்தினார்கள். ஒரு முறை அவளை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ய இரண்டு தடித்த ஆண் மிருகங்கள் துணிந்தது. யாரோ பின் தொடர்வதை உணர்ந்தவள் நடையில் வேகத்தை கூட்டினாள். அவளை பின் தொடர்ந்து குண்டு கட்டாக தூக்கி சென்றவர்கள் அர்த்த சாமத்தில் அவள் ஆடையை உருவி எடுத்து அம்மணமாக்கினார்கள். மனதால் பெண் என்ற போதும் உடம்பால் ஆண் தானே. இதை அறிந்த போது வெறுத்து போனவர்கள் தன் காம இச்சையை தணிக்க முடியாத கோபத்தில் அவள் முகம் தாவாக்கட்டையை உடைத்தார்கள். தன் சூட்டை தணிக்காத அவள் மர்ம உறுப்பில் எட்டி எட்டி இருவரும் உதைத்ததை அவள் இன்னமும் மறக்க வில்லை. நிர்வாணமாக முகமெல்லாம் இரத்த வெள்ளத்தில் அனாதையாக கிடந்த அவளை சொறி நாய் ஒன்று ஆசுவாசப்படுத்தியது. வாலுல்ல சொறி நாய்.

மூன்று வருடங்கள் கழித்து சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தில் தன் பெண்மையை முழுமையாக அனுபவிக்க அவள் பிரயத்தனமானாள் ‌‌. கையில் லட்ச ரூபாயை வைத்து கொண்டு எங்கெங்கோ அலைந்தாள். கடைசியாக மும்பையில் பாலின மாற்றம் சிகிச்சையை செய்வதை தெரிந்து கொண்டு, வாயை கட்டி வயித்தை கட்டி பிறப்பு அடையாளங்களை மாற்றிக் கொள்ள லட்ச ரூபாயோடு மும்பைக்கு வந்தாள். மும்பையின் முழுமூச்சு அவளை மூர்ச்சை அடைய செய்தது. அப்போது தான் சம்பித் என்ற ஏஜென்டை சந்தித்தாள். மும்பையில் குறைந்த செலவில் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து தருவதாக ஆசை காட்டி கூட்டி சென்றான். ஆசை வார்த்தை என்றாலும் அதில் ஒரு உண்மை இருந்தது. அவன் சொன்னபடியே எல்லாம் நன்றாக முடிந்தது. சிகிச்சை முடித்து இரண்டு நாட்கள் கழித்து அவள் கண் விழிக்கும் போது மற்றுமொரு நரக வாசலை அவள் வந்தடைந்திருந்ததை அவள் அறிந்திருக்கவில்லை. காமத்திபுராவின் பரபரப்பான சிவப்பு விளக்கின் வெளிச்சத்தில் அடைக்கப்பட்டிருந்தாள். அரை மயக்கத்தில் இருந்த அவளின் காதுகள் கேட்டது இதை மட்டும் தான் 'இதலாம் இங்க போனி பண்ண முடியாது! இத சோனாகச்சிக்கு அனும்ச்சு விடு அங்க தான் வெந்தது வேகாதது எல்லாம் போனியாகும். ஜாவோ ஜாவோ!'‌.

கொல்கத்தாவின் தங்க மரம் அவளை வரவேற்றது. சிவப்பு கம்பளத்துடன் தான். அந்த சிவப்பில் எத்தனை பெண்களின் இரத்தம் கலந்திருந்ததோ தெரியவில்லை. சோனாகச்சியின் வீதிகள் அவ்வளவு அழகாக இல்லை. எத்தனையோ‌ பெண்களின் அழுகுரலும் ஓலமும் கேட்கும் ஒரு மயான பூமியாக தான் காட்சி அளித்தது. அங்கிருக்கும் பத்தாயிரம் பெண்களில் அவள் எந்த தெருவில் எந்த வீட்டில் எந்த அறையில் கிடத்தப்பட்டிருந்தாலோ தெரியவில்லை. பிறப்பிலிருந்து தன்னுடன் ஒட்டியிருந்த ஒவ்வாத சதை பிண்டத்தை அறுத்தெரிந்த இடத்தில் காயம் கூட ஆறவில்லை அதற்குள் ஒரு மிருகம் அவளை வேட்டையாட வந்தது ‌‌. எவ்வளவோ போராடி பார்த்தாள். அந்த மிருகத்தை அவளால் அடக்க முடியவில்லை. அது வேட்டையாடி சென்றது. இரத்தம் வழிய அங்கே இரண்டு நாட்கள் கிடந்தாள். யாரும் சீண்டவில்லை. அப்போது தான் சுவாதியை பார்த்தாள்.

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு இப்போதைய தெலங்கானாவில் உள்ள கர்ஜாவெள்ளி கிராமத்தில் இருந்து ஓடிவந்து சோனாகச்சிக்கு தஞ்சம் புகுந்தவள். பதினான்கு வயதில் அறுபது வயது கிழவனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டு இரண்டு பிள்ளையையும் பெற்றெடுத்தாள். அந்த குடிகார கிழவனுக்கு தான் அரும்பாடுபட்டு சம்பாரித்த பணத்தையும் கொடுத்து சுகத்தையும் கொடுத்து வயிற்றை கழுவி வந்தாள். அவன் கொடுமை எல்லை மீறி போக ஒரு நாள் அவன் தலையில் கல்லை தூக்கி போட்டுவிட்டு பஞ்சம் பிழைக்க கொல்கத்தாவுக்கு வந்தாள். தன் பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கி பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தை மட்டும் மனதில் வைத்து கொண்டு சோனாகச்சியில் தன் தொழிலை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறாள். அனுதினமும் ஐந்து முதல் ஆறு வாடிக்கையாளர்களை அவள் சந்திப்பதுண்டு. ஒவ்வொருவரும் பல அனுபவங்களை கற்றுக் கொடுத்தார்கள். கொடுக்கிறார்கள். அங்கே தான் பல மொழிகளை கற்றுக் கொண்டாள் வாழ்க்கையையும் கற்றுக் கொண்டாள்.

அன்று சுவாதி மட்டும் இல்லாமல் போயிருந்தால் அவள் இன்னேரம் செத்து பினமாகி போயிருப்பாள். அவளுக்கு சுவாதி தான் வைத்தியம் பார்த்து தன் பிள்ளைகளுக்காக சேமித்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தாள். அன்று முதல் சுவாதியை தன் அக்காவாக நினைத்து வருகிறாள். சுவாதியும் தன் தங்கையை போல இன்னமும் பாசம் காட்டி கொண்டு இருக்கிறாள். இந்த தொழிலை விட்டுவிட்டு தன்னுடன் வந்துவிடு என்று எத்தனை முறையோ சுவாதியிடம் கேட்டாளும். எதையோ நினைத்து கொண்டு 'தேவடியாள் கூட பரவாயில்லை நாலு செவுத்துக்குள்ள ஒருத்தனுக்கு தான் உடம்ப காட்றோம் இந்த சினிமா நடிகையெல்லாம் இருக்காளுகளே ஊருக்கே காட்டனும் எவ்வளவு கொடுமை இல்ல அவளுகளையெல்லாம் நினைக்கும் போது நம்ம ஜீவன் ஏதோ மரியாதயா இருக்குனு தோனும்' தன் இயலாமைக்கு தானே சப்பைக்கட்டு கட்டி சிரிப்பாள். சுவாதி கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு டெல்லிக்கு வந்தவள். மயுர் விஹாரில் உள்ள கொல்லத்தை பூர்விகமாக கொண்ட மலையாளியின் டிபன் கடையில் வேலை பார்த்து வந்தாள். வேலை பார்க்கும் நேரம் போக மற்ற நேரங்களில் புத்தகங்கள் படித்தாள், தையல் கற்றுக் கொண்டாள், இரவு நேர பிளாட்பாரங்களில் கோல்கப்பேவும் குல்பியும் விற்பாள். படிப்பில் தீராத ஆசை கொண்டிருந்தாள். சில சமயங்களில் 'இந்த கஷ்டங்களை அனுபவிப்பதற்கு‌ அப்போதே ஐயன் கையாலே செத்துருக்கலாம்' என்று அவள் நினைப்பதுண்டு. இருந்தாலும் படித்து நான்கு பேர் மதிக்கும்படி வாழ வேண்டும் என்று தான் தன் உயிரை இன்னமும் அந்த உடல் சுமக்கும் படி செய்து கொண்டிருக்கிறாள். தமிழ் படித்தாள், இலக்கியம் படித்தாள், பாரதியாரை படித்தாள் ஜே கே வின் பெண்களை படித்தாள் கார்ல் மார்க்ஸையும்‌ படித்தாள். கை நிறைய காசை சேமித்து பட்ட படிப்பு படிப்பதற்கு சென்னை வந்தாள்.

"என்னடா இப்படி ஓடிட்டே இருக்கோமே எப்ப தான் நம்ம விடியல பார்க்க போறோம்னு ஆதங்கமா இருக்கும் . அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சது இந்த ஜாதி, மதம், இனம் ஆம்பள பொம்பள இந்த வித்தியாசத்தை எல்லாம் உடைச்செறியனும்னா படிச்சா மட்டும் தான் முடியும்னு முடிவு பண்ணேன். பாரதியார் சொல்லுவார்ல்ல 'மௌட்டியந் தனைக் கொல்'. இங்க நேரயா பேர்கிட்ட அறியாமை இருக்கு அதலாம் மாத்தனும்னா படிக்கனும். அதுக்காகவே நான் படிச்சேன், பிச்சை எடுத்து படிச்சேன், வேலை பார்த்து படிச்சேன், இரா பகலா படிச்சேன், அடிச்சாங்க படிச்சேன், விரட்டுனாங்க படிச்சேன், ஒடுக்குனாங்க படிச்சேன். படிக்கிறத மட்டும் நிறுத்தவே இல்லை. அதோ அந்தா தெரியுதா அந்த கம்பேனில தான் அக்கவுண்டென்டா இருக்கேன். மாசம் பதினெட்டாயிரம் கைக்கு வரும் என் செலவு சேமிப்பு போக என்ன மாறி இருக்குற திருநங்கை குழந்தைகளுக்கு உதவி பன்றேன். சந்தோசமா இருக்கேன். சொல்லி விட்டு தன் முந்தானையால் கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

மூக்கை உறுஞ்சிக் கொண்டு "உங்க பையன் திரும்பி வந்தா ஏத்துபீங்களா மா" என்றாள்.

"என்னம்மா இப்படி கேட்டுட்ட
என் பையன் உசுரோட தான் இருக்கான்னு தெரிஞ்சா கூட இந்த கட்ட சந்தோசமா வேகும்."

"எப்படி வந்தாலுமா?"

"அவன் என் குலசாமி மா"

"கவலபடாதிங்க உங்க பையன் கண்டிப்பா உங்க கிட்ட வந்து சேருவான்"

"உன் பேரு என்னமா"

"என் பேரா என் பேரு

ம்ம் ம்ம்

ஆஆன்

மோனிகா"

கழுத்தில் தொங்க விட்டு இருந்த அடையாள அட்டையின் மகிழ்ச்சியை மொத்தமாக மறைத்தாள் அந்த மகிழ்ச்சி. இல்லை மோனிகா"

- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி
பகிரப்பட்ட

NEW REALESED