Read Anniya Vasam by Prasanna Ranadheeran Pugazhendhi in Tamil Short Stories | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

அந்நிய வாசம்

"ணே ! இந்த பஸ்சு புளியம்பட்டி போகுமா"... என கவ்விய குரலில் அருகில் இருந்த டீக்கடைக்காரனிடம் கேட்டான் ராமன் நாவரண்டது போலும் வெறும் வாயையை அவ்வபோது விழுங்கி கொண்டே இருந்தான் ராமன். வியாபாரத்தை நினைத்து நொந்து கொண்டே "போகும் போல தம்பி சிக்கிரம் ஏறு" என்று அந்த டீக்கடைகாரன் மறுமொழி கூறினான்.

ஏறு என்ற வார்த்தையை கேட்ட மறுகணம் அரக்க பரக்க ஒடிய பேருந்தை தொத்திக்கொண்டு ஏறினான் பேருந்து பின் வாசலின் முதல் படியில் இரண்டடி பின்னோக்கியிருந்தால் பேருந்தின் பின் சக்கரம் அவன் கழுத்தில் சஞ்சரித்திற்கும் என்ன செய்வது ஒரே மனித தலைகள் தான் தென்பட்டன அந்த ஜன கடலை முன்னேறி செல்வதற்குள் மூச்சையுற்றான். இடகை இருக்கி மேல் மாட கம்பியை பிடித்துகொண்டே வலக்கையில் பத்திரமாக தன் மஞ்சபை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டான். வியர்வை வாடை மூக்கை துளைத்தது மெல்லிசை மன்னனின் மென்கானம் அவன் காதில் வழிந்தோடியது.

ஒரு வழியாக அவிநாசியில் ஜன கூட்டம் கொஞ்சம் குறைந்தது உட்கார இடமும் கிடைத்தது அந்த கிழவர் "உட்காரு தம்பி" என சிரித்து கொண்டே வரவேற்றார். இப்போது தான் இராமனுக்கு மூச்சு சீரடைந்தது. மதுரை ஆரப்பாளையத்தில் அதிகாலை நாளு மணிக்கு திருப்பூர் பஸ்ஸில் ஏறிய போது அங்கலாய்க்க தொடங்கியவன் இப்போது தான் சற்று மனநிம்மதி அடைந்தான். பையில் இருந்த 2 ஐநூறு ருபாய் தாளை தொலைத்துவிட்டு தேடிய அந்த தருணத்தை நினைக்கும்போதே அவன் உடம்பே வௌவௌத்துவிட்டது அங்கும் இங்குமாக தேடி பரிதவித்த அந்த நொடிகளை அவன் எதிரிக்கு கூட அவன் பரிசளிக்க விரும்பமாட்டான்.
பணத்தை தொலைத்த அந்த காலை வேளையில் அவன் தேடாத இடமல்ல கேட்காத ஆளில்ல டீக்கடைக்காரன் பூக்கடைக்காரன் அவ்வளவு ஏன் பிச்சைக்காரனிடம் கூட விசாரனை செய்தான் ஆனால் பயன் ஒன்றுமில்லை.

நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என படைத்த இறைவனுக்கு இரண்டு வசைகள் அவனும் பாவம் என்ன தான் செய்வான் வந்த வழி போகலாம் என்றால் அவன் துனைவி அவனை பார்வையிலே எரித்திடுவாள் பின்னே அவளுக்கு தான் எவ்வளவு ஆசைகள் தன் கணவனை ஒரு தனவானாக எல்லோர் முன்னும் பெருமையுடனும் பெருமிததுடனும் காட்டி கர்வம் கொள்ளவேண்டுமேன்று அதற்காக வாயை கட்டி வயிற்றை கட்டி சேர்த்து பட்டறையில் இரும்புகளுடன் காலம் கழித்த அந்த ஆசாமியை தூர தேசம் அனுப்ப சித்தமானவள் தானே அவள்.

"திருப்புர் பனியன் கம்பேனில நிறைய வேல இருக்குதுனு அன்னிக்குஅவரு சொன்னார்ல நல்ல வேலையா பார்த்து உங்களுக்கு நல்ல சம்பளத்துல சேர்த்துடுவிடுவார் போய்டடு வாங்க மாமா" என்று அன்பழுத்ததுடன் கூறியவளாயிற்றே!

"நம்ம மூனு பொட்ட பிள்ளைகளையும் நல்ல இடத்துல தள்ளனும் மாமா!! நான் இங்க அப்பள கம்பேனில வேலை பார்த்து வய்த்து புழப்ப நடத்திக்குவேன் நீங்க அங்க நல்ல சம்பாரிச்சு சேர்த்து வச்சு கொண்டு வா மாமா" என அவனை உந்துதல் படுத்தியதே அவள் தான்.

அதனால் வீடு திரும்பும் எண்ணமே அவனுக்கு இருக்காது அப்படி திரும்பினால் அவள் கருணை கண்களில் அவன் எரிந்து போவான் என்று அவனுக்கு தெரியும்.

என்ன செய்வதென்றே தெரியவில்லை எச்சில் இலைக்கு அலையும் ஒரு நாயை போல அங்கும் இங்கும் வட்டமிட்டான். லேசாக தலை சுற்றியது அல்லையை மெல்ல கவ்வியது பசியாக தான் இருக்கும் மெல்ல பிளாட்பாரத்தில் உட்கார்ந்தான். அந்த பாவிக்கு தான் இவன் மீது எவ்வளவு பாசம் இவனை அலைய விட்டு வேடிக்கை பார்ப்பதே அந்த மேலோகவாசிக்கு வேலையாய் போயிற்று. இவனுக்கும் அது தேவை தான் எவ்வளவு கொடுத்தாலும் தாங்கி கொண்டு உளாவி கொண்டிருக்கிறானே.

கலைத்து சுருண்டு கிடந்த அவனை திடிரென ஒரு கை அனுகியது "என்ன ஆச்சுங்க காலைல இருந்து எதையோ தேடிட்டு இருந்தீங்க, காச தொலைச்சுடீங்கலா, எவ்ளோ வச்சுருந்தீங்க, நீங்க எங்க போனும் என அடுக்கடுக்கான கேள்விகள் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் வாயில் இருந்தல்ல கண்களில் இருந்து ஒவ்வொரு சொட்டாக வழிந்தது புழுதியை நனைத்தது அவன் கேள்விகள் கேட்க கேட்க ராமனின் கண்கள் முட்டியது பெண்களின் கண்ணீருக்கு எப்படி ஒரு மதிப்பு இருக்கிறதோ அதே போல ஆண்களின் கண்ணீருக்கும் ஓர் மதிப்பு இருக்கிறது அது பெண்களின் கண்ணீரை விட விலை மதிக்க முடியாததாம் சில ஆணியம் பேசும் ஆண்கள் அப்படி ஒரு மாயயை உருவாக்கியிருக்கலாம் யார் கண்டது.

அவன் கண்கள் கலங்க கலங்க அவன் இதயம் கணத்தது கண்ணீரை துடைக்க துடைக்க பொங்கி கொண்டே இருந்தது சட்டென வினாவியவன் தன் பையிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான் "அழாதிங்க சார் ! இந்தாங்க இத வச்சிட்டு ஊருக்கு போங்க என நீட்டினான்"
செய்வதரியாமல் கண்களை துடைத்தான் ராமன் "இந்தாங்க சார்! வாங்கிகோங்கோ உங்க தம்பியா இருந்தா வாங்க மாட்டீங்களா" என வலுகட்டாயமாக அவன் கையில் திணித்துவிட்டு சென்றுவிட்டான்.

கையில் ஏந்தியபடியே அவனை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான். அந்த ஆசாமி மறைய சில விநாடிகள் தான் பிடித்தது. மனிதகடவுள் போலும் சில மனிதகடவுள்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவன் பெயரை கூட அவன் கேட்கவில்லை, கேட்டு என்ன ஆக போகிறது மனிதகடவுளுக்கு பல பெயர்கள் இருக்கும். நன்றியும் அவன் மண்டையில் மறந்து போய்விட்டது, மறக்கட்டும் அந்த மூன்றெழுத்தா அந்த வழிபோக்கனுக்கு புண்ணியம் சேர்க்க போகிறது.

ஆனால் இவன் செய்த புண்ணியமா அல்லது இவன் பத்தினி செய்த புண்ணியமா என்று தெரியவில்லை எப்படியோ தலை தப்பித்தது. அமர இடமும் கிடைத்தது மெல்ல தன் பால்ய நினைவுகளை அசை போட நேரமும் கிடைத்தது.

"தம்பி பேர் என்ன ?" என்று அருகில் இருந்த கிழவன் கேட்ட போது தான் அவனுக்கு சுயநினைவு வந்தது. "ஹா"என எக்காள குரலில் இராமன் என்றான் "நல்ல பேர் தானுங்க தம்பி! எந்த ஊர் நீங்க??" என்றார் அந்த கிழவர் "நமக்கு மதுரை மேலூர் பக்கம் தெற்குத்தெருங்க" என்றான் "மதுரக்காரரா தம்பி நீங்க! நானும் என் பெண்சாதியும் மதுரை மீனாட்சிய பார்த்துபோட்டு வரலாம்னு ரொம்ப நாள நினைக்கோம் ஆனா பழிக்க மாட்டேங்குது...." என்று பொக்கவாய் தெரிய சிரித்து கொண்டே கூறினான் "ஆத்தா எப்ப அழைக்குறாங்கோ அப்ப போவாம்!! அது வரைக்கும் இந்த ஜீவன் காத்திட்டு இருக்கோனும் ம்ம்" என்று வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டே வந்தான் அந்த கிழவன்.

"தம்பிக்கு இங்க என்ன சமாச்சாரம்" என்று ராமனை நொய்த்து கொண்டே வந்தான். இராமனும் தன் மன சாந்திக்கு தன் வரலாறை கட்டவிழ்த்துவிட்டான் அவன் வரலாற்றை அவனென்ன அவன் கட்டியிருக்கும் வேட்டியே சொல்லும். தோலில் தூக்கி வளர்த்த தகப்பனின் ஞாபகமாக கட்டியிருக்கும் வெட்டியல்லவா அது அதனால் இரண்டு தலைமுறையை தாங்கி கசங்கி கொண்டிருக்கிறது அதை கேட்டால் சொல்லும் வயலில் நாத்து நட்டு களை பறித்த கறை பாலமேடு ஜல்லிகட்டில் மாடுபிடித்து தசை கிழிந்து உதிரம் நனைத்த வாடை அங்காளி பங்காளிகளுடன் கட்டி புழுதியில் புரண்ட கதை என ஆயிரமாயிரம் சொல்லும் இருந்தாலும் அவன் வாயில் இருந்து தான் வரட்டுமே.

"ஐயா! இங்க பனியன் கம்பேனில வேலைக்கு சேரலாம்னு போயிட்டு இருக்கேன்"

"ஏனுங்க உங்க ஊர்ல இல்லாததா"

"எங்க ஐயா ஊர்ல சொத்தெல்லாம் போச்சு விவசாயமும் போச்சு இப்ப இருக்குறது கூட இரவல் தான் அது போக நமக்கு படிபறிவுமில்ல அதான் இங்க வந்து பாக்கலாம்னு வாரேன்"

"உங்க சந்ததியும் அப்ப வாழ்ந்து கெட்ட குடும்பம் தானுங்களோ"

"ஆமாங்கய்யா எங்க அய்யன்க்கும் ஆத்தாளுக்கும் நான் மூனாவது பிள்ள இரண்டு பிள்ளைய முழுங்கிட்டு வந்தவனு சொல்வாங்க எனக்கு அப்புறம் ஒரு நாலு அதுல கடைசி மூனும் பொண்ணுங்க எங்க அய்யன் இருந்த வரைக்கும் நல்லா இருந்தோம் அவர் கண்ண மூடுனதுகப்பறோம் இப்படி சிதறி கிடக்குறோம்"

"என் பொன்டாட்டி பிள்ளைக மட்டும் இல்லன தறிகெட்டு போய்ருப்பேன்"

"அத சொல்லுங்க தம்பி? எல்லா வாழ்க்கைலயும் அவன் நல்ல தான் விளையாடுறானுங்க.... இப்டி தான் அம்பது வருஷத்துக்கு மின்னாடி நானும் என் பெண் சாதியும் மனசு பிடிச்சபோக வீட்ட விட்டு வெளிய வந்துடோம்ங்க அப்புறம் ஊர் ஊரா சுத்துனோமுங்க நாடோடி மாறி இப்ப ஒரு தென்னந்தோப்புல கூலிக்கு வேல பாக்ரோமுங்க எங்களுக்குனு பிள்ள குட்டியுமில்ல சில நேரம் குழிய தோண்டலாமானு தோனும்ங்க யாருக்கும் கஷ்ட கொடுக்கூடாது இல்லிங்களா!" என கூறிவிட்டு அந்த எம்பது வயது கிழவன் தன் பொக்க வாயை காட்டினார்.

இதை கேட்டுவிட்டு ராமானால் என்ன சொல்ல முடியும் கொஞ்சம் திடுக்கிட்டான் எதோ கூற வந்தான் அதற்குள் நடந்துநர் வந்துவிட்டான். "டிக்கெட் ! டிக்கெட் ! என்ன பெரியவரே ரொம்ப நாள காணல கிழவன் கேக்கமலேயே டிக்கெட் கிழித்து கொடுத்தான்... நீங்க?" என்று ராமனை பார்த்தான்.

"புளியம்பட்டி ஒன்னு கொடுங்க" என நூறு ரூபாய் தாளை நீட்டினான் அது தான் அவனிடம் இருந்த நூறு ரூபாய் கொஞ்சம் சில்லறைகளும் இருந்தது.

"புளியம்பட்டியா அதுலாம் போவாதுங்களே!" என்றான் அந்த நடந்துநர்.

"போகதா திருப்பூர்ல டிக்கடைககாரர் போகும் சொன்னாப்ல"

"டீக்கடைக்காரன் என்ன கலெக்டரா போவாதுனா போவாதுதானுங்க"

உடனே கிழவன் குறுக்கிட்டு " தம்பி! நீங்க புளியம்பட்டி போனுமா இந்த பஸ்சு போவாது தம்பி"

"அது கிழக்கா இருக்கு இது மேற்கால போகும்..."

"பேசாமா நீங்க மோண்டிபாளையத்துல இறங்கிகங்க நானும் அங்கன தான் இறங்குவேன் அங்கருந்து கொஞ்ச தூரம் தான் நாலு மைல் இருக்கும் நடந்து போகலாமுங்க இல்லன அங்கன பஸ்சும் வரும்"

ராமனும் தெரியாத ஊர் என்பதால் கிழவன் சொன்னபடியே செய்தான்.

பார்க்குமிடமெல்லாம் பச்சை பசேல் என பசுமை தன் போர்வை விரித்து நெடுஞ்சாண் கிடையாக கிடந்தது.

"ஐயா! இன்னும் எவ்ளோ நேரம்" ஆகுமென்றான் ராமன்

"அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் போனும்ங்க" என்றான் கிழவன்

கிழவருக்கு கண்கள் சொக்கியது அவரை பார்த்த ராமனும் கண் அயர்ந்தான்.

"என்ன இராமன் ! நல்ல வேலை பார்ப்பீங்களா"

"ம்ம் நல்லா வேலை பார்ப்பேன் சார்"

"சரி தம்பி இவர கூட்டிட்டு போய் வேலை சொல்லி கொடு"

பட்டாபிஷேகம் பெற்ற இராமர் போல இராமனின் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி.

ஆஹா எத்தனை அழகு அவன் கறை படிந்த எத்து பல்லின் சிரிப்பு தான் எவ்வளவு கள்ள கபடமற்றது.

அவன் பல்லித்த வாயை பார்த்து கொஞ்சம் பயந்து தான் போனார் அந்த கிழவர்.

"என்ன தம்பி தூக்கத்துல சிரிக்கிறீங்க எதுவும் நல்ல கனவுங்களா?"

"இனி எல்லா நல்லதே நடக்கும்ங்க தம்பி"

இதை கேட்ட இராமனின் உப்பு மிளகு தூவிய உச்சந்தலை மயிரிழை கூச்சத்தால் சிலிர்ததது.

வெயில் மெற்கின் வாசலை பார்க்கும் நேரமது உச்சியில் சூரியன் சுட்டெறித்தாலும் அந்த இரண்டு மணி வெயில் வெகுவாக அந்த இடத்தை படரவில்லை

இருவரும் தயாரானார்கள், இறங்கும் இடத்தை நெருங்கி விட்டதால் வந்த பரபரப்பு.

இறங்கும் இடமும் வந்துவிட்டது இருவரும் மெல்ல இறங்கி தங்களை ஆசுவாச படுத்தி கொண்டார்கள்.

வெயில் சற்று அதிகமாக இருந்ததால் இருவருக்கும் ஒரே களைப்பு இருந்தபோதும் இராமன் புளியம்பட்டிக்கு எப்படி போனும் என கேட்டு துளைத்தான் அந்த கிழவனை.

"தம்பி வெயிலு அடிக்குது கொஞ்ச நேரம் எங்க குடிசைக்கு வந்து உக்காருங்க பிறவு வெயில் தாள போங்கனு" என்றார் அந்த கிழவர்

"இல்லங்கய்யா இருக்கட்டும் நான் இன்னொரு நாள் வாரேன் இப்ப எப்புடி போனும் சொல்லுங்க"

"என்னங்க தம்பி சொன்னா கேக்கமாட்றீங்க இப்படியே நேரா போனும் தம்பி சாப்பாடு நேரம் பஸ்சு ஏதும் வராதே"

"இருக்கட்டும்யா நான் பார்த்து போய்கிறேன்... ஊருக்குள்ள போக தேவயில்ல ஊருக்கு வெளியா தான் வீடு கட்டிருக்காக. சரிய்யா வரேன்" என கூறி கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தான் அவன் நடை தளர்ந்தது அவன் நாவில் ஒரு சொட்டு தண்ணீர் கூட படவில்லை என்பதால் வந்த தள்ளாட்டம்.

மெள்ள நெருங்கி விட்டான் அதோ ஒரு பெட்டி கடை தெரிகிறது அங்கு அவன் வீட்டை கேட்டால் சொல்லிவிடுவார்கள் என அவன் கூறியது அவனுக்கு ஞாபகம் வந்தது.

"ணே இங்க கண்ணன் மதுரகாரர் வீட்டுக்கு எப்படிணே போனும்" என்று அங்கு புகைவிட்டபடி நின்று கொண்டிருந்தவனை கேட்டான்.

"கண்ணனா ! அப்படி யாரும் இல்லிங்களே"

"இல்லங்க மதுரகாரர் இங்க வந்து ஒரு அஞ்சாரு வருஷமிருக்கும் இப்ப கூட புதுசா வீடு கட்டிருகாங்க"

உடனே பெட்டி கடை வாசலை எட்டி பார்த்த அந்த தாத்தா "புதுசா வீடு கட்டுனவங்களா அட நம்ம டீபனு" என கூறி ஆச்சர்யபட்டார்.
அருகில் இருந்த அந்த ஆசாமியும் "டீபனா!" என ஆச்சர்யபட்டான்.

"அட ஆமாபா ஆவுங்க இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் அல்லேலூயா வானங்க அவனும் அவன் பெண் ஜாதியும் அப்ப பேர மாத்தி வச்சுடானுங்கள"

"அப்படியா கதை சரி சரி !" என அந்த பீடி வளித்து கொண்டே சொன்னான்.

ஆனால் இதை கேட்ட இடிந்து போன இராமன் அட பாவி என மனதில் நினைத்து கொண்டான் "போன வருஷம் ஊருக்கு வந்தப்ப கூட சொல்லவேயில்லையே"

"தம்பி ! அதோ பாரு நாலு வீடு தெரிதா அங்க மேற்கா பார்த்து இருக்குல வாழைமரம் கூட இருக்குல" அந்த வீடு தான்.

மெள்ள நகர்ந்த இராமனின் காதுகளில் அந்த பெட்டி கடை தாத்தா குரல் கேட்டு கொண்டு தான் இருந்தது.

"அந்த அம்மா இருக்கே அந்த பையல எப்படிலாம் ஆட்டி வைக்குதுங்கற ஊர்ல அவ்ளோ இடம் கிடந்தும் இங்க வந்து வீடு கட்டிருக்குங்க பாரு. நான் எவ்ளவோ சொன்னேன பா அந்த பையன் கேக்கவே இல்ல"

"அத சொல்லுங்கய்யா நமக்கெதுக்கு நம்மலே பொழப்பு நடத்த வந்துருக்கோம் பேசாம இருந்துட்டு போய்ருவோம்" என புகையை விட்டபடியே இராமனை பார்த்தான்.

வீட்டை நெருங்கும்போதே ஒரே சத்தம் அநேகமாக இரு துருவங்களும் முட்டி கொண்டு தான் இருக்கவேண்டும்.

"வீடு நல்ல தான் இருக்கு" என்று வீட்டுக்கு வெளியில் நின்று முனுமுனுத்து கொண்டே "கண்ணா! கண்ணா!" என உறக்க கத்தினான்.

சட்டென நிசப்தம் ராணியும் டீபனும் எட்டி பார்த்தனர் இராமனுக்கு கண்ணணும் கௌரியுமாக காட்சியளித்தார்கள்.

இராமன் வாயிலோ முப்பத்திரண்டும் தெரிந்தது ஆனால் அவர்கள் இருவர் வாயிலும் ஓரறிவு செல்ல கூட வழியில்லை.


மெள்ள கண்ணன் வெளிய வந்து பெருமூச்சு விட்டு கொண்டே "என்ன சொல்லாமா கொள்ளாமா இங்க"

"உனக்கு தான் தெரியும்ல ஊருல எல்லாமே நொடிஞ்சு போச்சு அதான்" என மென்னு முழுங்கினான்.

கண்ணன் வாயை திறப்பதற்குள் "என்னங்க என குரல்"

"ஒரு நிமிஷம்" என கூறி கண்ணன் உள்ளே நுழைந்தான் வந்தவனை உள்ளே வா என்று சொல்ல கூட அவனுக்கு வார்த்தையில்லை அதை அவன் எதிர்ப்பார்க்கவுமில்லை.

மெள்ள தன் மஞ்சள் பையை வீட்டின் மதில் சுவரில் வைத்தான் அதில் வெரும் இரண்டு சட்டை ஒரு வேட்டி இருந்தது மேலும் ஆசையாக வாங்கிய சேவும் அல்வாவும் இருந்தது.

சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தான் அவன் கண்ணுக்கு எட்டிய வரை மூன்று வீடுகளும் அந்த பெட்டி கடையும் தான் தெரிந்தது.

சத்தத்தை கேட்டு மீண்டும் வாசலை பார்த்தான் கௌரியின் சத்தம் தான் அது எட்டுதிக்கும் எதிரொலித்தது.

"என்னவாம் இங்க வந்து நிக்குது இதுக சகவாசமே வேணாம்னு தான இங்க வந்தோம் இப்ப இங்கயும் வருதுக நானே வாய கட்டி வயித்த இந்த வீட்ட கட்டிருக்கேன் இப்ப இங்கயும் வந்துருச்சுக. இப்ப என்ன தான் வேணுமாம்" என படபடவென பட்டாசை போல வெடித்து தள்ளினால் பட்டாசை பார்த்து விழிபிதுங்கிய சிறுவனை போல வெறித்தான் கண்ணன்.

"இல்ல இங்க வந்து வேல பாக்கலாமுனு நான் தான் ஒரு பேச்சுக்கு சொன்னேன் அதான்! ஆன இப்புடி வந்து நிப்பானு நினைச்சு கூட பாக்கல" என இழுத்தான்.
அதற்கு சிறிதும் இடைவெளியில்லாமல் பொறிந்தால் "உனக்கென பெரிய இவன் நினப்பா! உனக்கே இவ்ளோ நாள் நான் தான் சோறு போட்டேன் எதோ இப்ப தான் ஒவ்வெருத்தன் கைய கால பிடிச்சு ஒனக்கு வேல வாங்கிருக்கு இந்த லட்சணத்துல நீ வேல வாங்கி தரபோறியா இப்படிதான் ஊருல சொல்லிட்டு திரியிறீயா நீ இப்ப என்ன பண்ணுவியோ ஏதும் பண்ணுவியோ அந்த ஆள் இங்க இருக்க கூடாது. இதுகலாம் சாகாம இன்னும் சுத்திகிட்டு நம்ம உயிர வாங்குதுக... என்னய்யா இன்னும் கல் மாறி நிக்குற போ போய் சொல்லு போ"

"இல்லமா வந்துடாப்ல ஒரு இரண்டு நாள்" எனத் தயங்கினான் கண்ணன்.

"ம்ஹும் நாளைக்கு மொத பஸ்ல ஏத்திவிட்டு ஊருக்கு அனுப்பற போ" என்றால் கௌரி அல்ல அல்ல ராணி.

சரி என்று சொல்லாமல் மறுக்கவும் முடியாமல் தலையசைத்தவாரே வெளியே வந்தான கண்ணன். இராமன் வெகு தூரமாக சென்று கொண்டிருந்தான். எல்லாம் கேட்டுவிட்டான் காது கேட்காத செவிடன் கூட இவர்கள் உடல்மொழி கொண்டு கணித்துடுவான் இவனுக்கு தான் காது கேட்குமே செவிடாய் இருந்திருக்க கூடாது என்று கூட அவன் நினைத்திருப்பான். அவனும் மனிதன் தான் சோற்றில் உப்பு போட்டு உண்பவன் தான் மானம் என்ன அவனுக்கு மட்டும் என்ன கானல் நீரா காணமல் போக சென்றுவிட்டான் வெகு தூரம் சென்றுவிட்டான். கண்ணனும் வெகுவாக ஓட்டம் பிடித்தான் மதில் மேல் இருந்த பையை தட்டி விட்டதை கூட உணராமல் ஓடினான்.

இவன் கூப்பிடுவது அவன் காதில் விழவில்லை எப்படி விழும் எத்தனை துரோகம் எத்தனை அவமானம் எத்தனை வறுமை எத்தனை ஏச்சுக்கள் எத்தனை பேச்சுக்கள் அவன் காதில் அது மட்டும் தானே ஒலித்து கொண்டிருக்கும் இவன் கூவல்களா அவனுக்கு கேட்கபோகிறது.

பேருந்தும் வந்துவிட்டது அதோ கையையும் நீட்டிவிட்டான் அடகொடுமையே பேருந்தும் நின்றுவிட்டது அது எங்கே செல்கிறது என்று கூட அவன் கவனிக்கவில்லை எதற்கு கவனிக்க வேண்டும் இனி எங்கு சென்றால் தான் என்ன கையில் பணமில்லை என்பதையும் மறந்துவிட்டான் மறக்கட்டும் மனிதகடவுள்கள் அவனுக்காக வராமலா போக போகிறார்கள். ஏறி விட்டான் மெள்ள பேருந்தும் நகர்ந்தது.

துரத்திய கண்ணன் தோற்றான் துரத்தியதில் மட்டுமா!.

மேலும் கீழும் மூச்சிரைத்தது முட்டியை பிடித்தபடியே இராமன் ஏறிய பேருந்தை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் திரும்பி பார்ப்பானா என்று அவன் கண்கள் பரபரத்தது ஒரு வேளை அவன் திரும்பி பார்த்திருந்தால் அவன் அந்த இடத்திலேயே செத்திருப்பான் அப்படி ஒன்றும் நடக்கவில்லை பேருந்து அவன் கருவிழி பார்வையில் இருந்து மறைந்தது நெஞ்சம் சற்று கணத்தது கண்ணில் நீர் முட்டியது அவன் முகமே சுருங்கிற்று மெள்ள அவன் நடையும் தளர்ந்தது அருகில் இருந்த மைல் கல்லில் உட்கார்ந்தான் கண் எட்டும் தூரம் வரை ஜன நடமாட்டமே இல்லை காணல் நீர் தெளிவுற தெரிந்தது முட்டிய கண்ணீர் மடை திறந்த வெள்ளம் போல கரை புரண்டது.

"இந்த பாவத்த ஏழேழு ஜென்மத்துலயும் தொலைக்க முடியாது... நான் பெரிய பாவி ஆயிட்டேன்... எனக்குளா நல்ல சாவே வராது... இன்னொரு பிறப்பா நம்ம பிறக்கபோரோம்... ஒரே வயித்துல பெத்தெடுத்து நம்மள சீராட்டி வளர்த்த நம்ம ஆத்தா பாத்த அது ஈர குலையே நடுங்கிருக்குமே"

என தன் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டி தீர்த்தான் அந்த ராமன் லட்சுமன் போல இணை பிரியாமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் இருவரின் தாய் தன் உயிர் வாய் வழி பிரியும் போது கூட இதை சொல்லி விட்டு தான் போனாள். அவன் மன குமுறல் இன்னும் தீரவில்லை எப்படி தீரும் அவன் வாழும் வரை அவன் நெஞ்சை அது அரித்து கொண்டே தான் இருக்கும் அதுவரை அவன் பிதற்றல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் ஆம் நமக்கது பிதற்றல் தானே ஆனால் அவன் பிதற்றலை கேட்க யாரும் முன் வரவில்லை இருந்தும் அவன் அதை நிறுத்தவே இல்லை கண்ணீர் கசிய கசிய உளறிக்கொண்டே இருந்தான்.

"அண்ணே என்ன மன்னிச்சரு ணே என்ன மன்னிச்சுரு ணே"

- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி