Read Mellidai Varudal by Prasanna Ranadheeran Pugazhendhi in Tamil Short Stories | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

மெல்லிடை வருடல்

“காதலிக்கிறேன்! உன்ன காதலிக்கிறேன்! ம்ஹும், எப்படி சொல்லலாம்” கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசி கொண்டிருந்தான் இனியன். “கவிதையா ஒரு லெட்டர் எழுதி கையில கொடுத்துட்டு ஓடி வந்துருவோமோ ச்ச தப்பு எதாவது சொல்லிட்டு தான் கொடுக்கனும்” என பல குழப்பங்களுடன் ஒரு காகிதத்தில் கவிதையை எழுத தொடங்கினான்.

காதலுக்கு கவிதையை யோசிக்க கவிஞனாக இருக்க வேண்டியதில்லை காதலனாக இருப்பதே போதும் போலும்.

ஜன்னல் வழியே மென்கரு மேகங்களில் ஓளிந்திருந்த அந்த வெள்ளி நிலவினையே உற்று வெகு நேரம் பார்த்து கொண்டிருந்தான்.

சட்டென அவள் முகம் தோன்றியது. அது ஒரு மாயை தான் காதலர்களுக்கு இடையில் நடக்கும் மாயை அதனால் தோன்றியிருக்க வாய்ப்புண்டு யார் கண்டது.

காகிதத்தை எடுத்து கிறுக்க தொடங்கினான் ஆம் காதல் கிறுக்கல்கள். அவள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வர்ணிக்க எண்ணினான் போலும் ஆகவே அவள் கேசாதிபாதம் பாட தயாரானான்.

“நான் கம்பனும் அல்ல கண்ணதாசனும் அல்ல கண்ணமாவை எண்ணி காலங்கழித்த எம் பாரதியும் அல்ல கவிதை பாட… காதலை சொல்ல மூன்றேழுத்துகள் போதும் முன்னூறு வரிகள் தேவையில்லை…
என் காதலை சொல்ல உள்ளம் துடிக்கிறதடி ஆனால் அதை சொல்லும் முன்பே நான் இறக்கிறேனடி உன் பார்வையில்.
ஆம்! உன் கண்கள் எனை கொல்லுதடி…
பெண்ணே! எனை முழுவதுமாக ஆட்கொள்ள வருவாயா
உன்னுள் தொலைத்திட எனை அனுமதித்துடுவாயா
என் நலிந்த காதலை ஏற்றுக்கொள்வாயா”

என எழுதி முடித்து ஒரு பெருமூச்சுவிட்டான், வீட்டில் யாருக்கும் தெரியாதவாரு அதை பத்திர படுத்தினான். வலைதள உலகில் கூட காதலை கடிதத்தில் சொல்லுவது ஒரு சுகம் தான் அது எல்லோருக்கும் வாய்பதில்லை.

விடியலும் வந்தது, வழக்கத்துக்கு மாறாக அவனுக்குள் பல பரபரப்பு காதல் கடித்தை அவளிடம் கொடுக்க எடுத்து தன் சட்டை பையில் வைத்துக்கொண்டான்.

மூன்று நாட்கள் அவளை காணாத தவிப்பு. திருப்பதிக்கு சென்றிருக்கிறாள் என்று அவள் தோழியிடம் கேட்டதில் இருந்து அவன் மனம் நிலை கொள்ளவில்லை ஆகயால் இன்று அவன் தன்னிச்சைகள் அளவுக்கதிகமாகவே செயல்பட்டன.

பேருந்து நிலையமே அவன் காதல் சரணாலயம் இருவரும் ஒரே கல்லூரியில் வெவ்வேறு துறையில் படிக்கின்ற போதிலும் அவள் கல்லூரி பேருந்திலும் அவன் அரசு பேருந்திலும் போவது வழக்கம் இருந்தாலும் அவள் பேருந்துக்காக காத்திருக்கும் அந்த வேளை அவன் வாழ்க்கையில் மிக அழகிய தருணங்கள்.

மணி எட்டு தான் இருந்தும் அவன் பேருந்து நிலையத்திற்க்கு வெகு சீக்கிரம் வந்துவிட்டான். நெஞ்சம் படபட வென அடித்தது அதை அவனால் உணர முடிந்தது.

அவளை காண தவம் கிடந்தான் ஆனால் வந்ததோ அவன் நண்பன் காவியராஜன். இவன் அசைவுகளை மெல்ல கவனித்தான் ஆனால் அவனை இனியன் கவனிக்கவில்லை. எப்படி கவனிப்பான் அவன் தான் ஆனந்த தொல்லையில் லயித்து இருக்கிறானே.

“என்னடா ரொம்ப டென்சனா இருக்க என்ன ஆச்சு” என்றான் காவியன்

“ஒன்னுல்லயே” என படக்கென்று பதில் சொன்னான்

“இல்லயே எதுவுமே சரி இல்லையே” என சந்தேகித்து கொண்டே மணியை பார்த்தான்.

மணி சிரித்துக்கொண்டே “இன்னைக்கு லவ்வ சொல்ல போரானு நினைக்கிறேன்”

“லவ் பண்றானா யாரடா, என்னடா ! எங்கிட்ட சொல்லவே இல்ல யாருடா அது” என வெண் புகையை விட்டபடியே மணியிடம் ஆச்சரியத்துடன் விசாரித்தான்.

“அட! அவ தான்டா அன்னைக்கு காலேஜ்ல அத்தன பேர் முன்னாடி கண்ணத்துல பளாருனு அடிச்சால, அவள தான் லவ் பண்றான்”

“நீ ஏற்கனவே அவ மேல கோவத்துல இருந்தியா அதான் சொல்லவேனாம்னு சொன்னான்”

“அவளா ! அவள போய் என்னடா டேய்… ஏன்டா இவனுக்கு புத்தி இப்படி போகுது அவ சரியான திமிரு புடிச்சவ” என சிரடொழியை அணைத்தவாரே கத்தினான் காவிய ராஜன்.

“டேய் காதல்னா அப்படி தான் லவ் பண்ணிருந்தா தான் அதலாம் தெரியும்… சும்மா எதவது பேசாத” என்றான் மணி

“ஆமா எனக்கு லவ் பத்தி ஒன்னும் தெரியாது ஆனா அவள பத்தி நல்ல தெரியும், அன்னைக்கு நடந்தத இன்னைக்கு நினைச்சாலும் செம டென்ஷன் ஆகுதுடா மணி”

“அன்னைக்கு நீ பக்கத்துல இருந்தும் எப்படிடா அவன அடிச்சா” என மணி அன்று நடந்ததை மெள்ள கிளரினான்.

இந்த உரையாடல் எல்லாம் இனியன் காதில் விழக்கூட இல்லை அவன் காதலை எண்ணி களித்திருந்தான்.

“அன்னிக்கு கல்சுரல்ஸ் பொண்ணுகலாம் சேலை கட்டிட்டும் நம்மளாம் வேட்டி கட்டிட்டு சுத்திட்டு இருந்தோம்”

“அன்னைக்கு எல்லா இடத்துலயுமே கூட்டாமா தான் இருந்துச்சு அப்ப தான் இனியா டீ சாப்பிட கேன்டீன் கூப்டான்”

“அங்க போனப்ப தான் அவ அவன அறைஞ்சா”

“அட அது தெரியும்டா அப்ப நான் டிராமா ப்ராக்டிஸ் போய்டேன் இல்லனா இதலாம் நடக்கவே விட்டுருக்க மாட்டேன்” என்றான் மணி கோவமாக.

“யார் நீ!! அன்னைக்கு அந்த ஆண்டவனே பக்கத்துல இருந்திருந்தாலும் அடி வாங்கிருப்பான்”

“அதான் எப்படி நடந்துச்சு” என ஆர்வத்துடன் கேட்டுவிட்டு இனியனை பார்த்தான் ஒரு அசைவும் இல்லை.

காவியனும் அவனை பார்த்துக்கொண்டே சொல்ல வாயெடுத்தான் அதற்குள் குடை சாய்ந்தபடி அரசு பேருந்து வந்தது.

“டேய் பஸ் வந்துருச்சு வாடா” என காவியனும் மணியும் ஒருமித்த குரலில் இனியனை அழைத்தார்கள்.

இனியனோ “இல்லடா நான் அடுத்த பஸ்ல வரேன் நீங்க போங்க” என்றான்.

மணிக்கோ அவனை வற்புறுத்த மனமில்லை “விடுடா அவன் இஷ்டம் போல வரட்டும்”

சரியென்று தலையசைத்தபடியே இனியனை பார்த்துகொண்டிருந்தான் காவியன். பேருந்து மெள்ள நகர்ந்தது மணி மீண்டும் நச்சரிக்க தொடங்கினான் “என்னடா நடந்துச்சு, சொல்லுடா” ஆனால் காவியனோ ஜன்னல் வழியே இனியனை பார்த்து கெண்டிருந்தான்.

இனியனுக்கு வியர்த்து கொட்டியது கால் கடுத்தது அருகில் இருந்த கல்லின் மேல் அமர்ந்தான்.

மூச்சிறைக்க ஓடி வந்தாள் அவள், இனியனை பார்க்க தான் அப்படி ஓடி வந்திருக்கிறாள். இனியனை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லை. அவளை பார்க்க அவனுக்கும் வெட்கம் தாழவில்லை.

அவள் மூச்சின் இளஞ்சூடு அவன் மார்பு மயிரழைகளை பொசுக்கியது. மெல்லிய நிசப்தம் பரவியது அவள் மூச்சிறைத்த சப்தமும் அடங்கியது.

“இனியன்! அன்னைக்கு நடந்தது பத்தி எனக்கு நிறைய குழப்பம்… ம்ம்ம் சங்கடமும் தான்…”

“நான் எதும் தப்பு செஞ்சுட்டேனானு எதோ உறுத்திட்டே இருக்கு, நேத்து உங்க அம்மா எங்கிட்ட வந்து பேசுனாங்க… எனக்கு ரொம்ப எம்பாரஸிங்கா ஆயிடுச்சு”

“அவங்க பேசுனத கேட்டதுல இருந்து எனையவே எனக்கு பிடிக்கல”

“அப்படி என்னங்க சொன்னாங்க என் அம்மா”

“என் மகன நீ செருப்பால அடிச்சிருந்தா கூட வாங்கிருப்பான் ஏன் தெரியுமா அத அவன் தான் செஞ்சான் ஆனா அத தெரியாமா செஞ்சான் அதுக்கு அவன் மன்னிப்பும் கேட்டுட்டான் ஆனா நீ மன்னிக்கல யாரா இருந்தாலும் மன்னிக்க மாட்டாங்க தான் ஆனா அவன தப்பானவனு மட்டும் நினைச்சிறாதனு சொன்னாங்க”

“சாரிங்க என் அம்மா உங்ககிட்ட பேசுனது பத்தி எனகெதும் தெரியாது சாரி”

“சாரி! நான் தான் சொல்லனும் ஜயம் வெறி சாரி ம்ம் சாரி”

ஒன்றுமே புரியவில்லை இனியனுக்கு.

அடுத்த பஸ்சும் அவனை கடந்துவிட்டது ஆனால் அவன் இந்த தருணங்களை நினைத்தபடியே அங்கு இன்னும் உட்காந்திருக்கிறான் அவள் வருகைக்காக.

மணியோ காவியனை துளைத்து கொண்டிருந்தான்.

“டேய் அன்னைக்கு கேண்டீன்ல என்ன தான்டா ஆச்சு”

“உச் அன்னைக்கு என்ன டீ வாங்க சொல்லிட்டு அவன் தண்ணீ குடிக்க போனான்”

“அங்க ஒரே கூட்டாமா இருந்துச்சு அப்ப தான் அவ அங்க தண்ணீ புடிச்சுட்டு இருந்தா, நான் அப்ப டீ வாங்கிட்டு அவன்ட்ட கொடுக்க வந்தேன்”

“ம்ம் அப்புறம் என்னாச்சு”

“கொடுக்கும் போது அந்த குமரன் எங்க இருந்து குதிச்சான் தெரில கரக்டா இனியன் முதுகுல விழுந்தான் அதுல அவன் கொதிக்குற டீய அவ மேல கொட்டிடான் அது மட்டுமா பேலன்ஸ் இல்லாமா அவ இடுப்ப வேற புடிச்சிட்டான்”

“ஏண்டா அவனுக்கு பேலன்ஸ்க்கு கை வைக்க வேற இடமே கிடைக்கலயா”

“உச் அவன் கைப்பட்ட அடுத்த செகண்டே ஒரே அறை தான் விட்டா அத்தனை பேரு முன்னாடியும்”

“எவ்ளோ சொல்லியும் கேக்கல சாரி சொல்லியும் ம்ஹூம் அவன் கண்ணே கலங்கிருச்சு தெரியுமா”

“கடைசி அவன ரெண்டு மாசம் சஸ்பென்ட் வேற பண்ண வச்சுட்டா”

“இவ்ளோ நடந்தும் எப்படிடா லவ்லாம்”

“டேய் அதுக்கப்புறம் அவங்க அம்மா அவட்ட பேசி அந்த பொண்ணு சாரி சொன்ன கதைலாம் உனக்கு தெரியாது”

“அப்டியா அதலாம் ஏண்டா எங்கிட்ட சொல்லவே இல்ல”

“அவள உனக்கு சுத்தாமா பிடிக்கல சொன்னா கோபப்படுவனு தான் சொல்லல”

“போங்கடா டேய்”

“டேய்! அவன் அவள ரொம்ப லவ் பண்றான்டா அவளும் அவன பாக்குறானு தான் நினைக்கிறேன் அவன் ஒவ்வொரு தடவயும் லவ் சொல்ல போகும்போது கரக்டா நீ வந்துருவ அதான் இன்னைக்கு அவன் கிட்ட இருந்து உன்ன கூட்டிட்டு வந்துட்டேன், புரிஞ்சுக்கடா…”

அன்று முழுவதும் இதே பேச்சு தான் இனியன் கல்லூரிக்கு வராததை கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை காதலின் தொல்லை அவனை தொலைத்திருக்கும் என விட்டுவிட்டார்கள்.

இரவு இனியனின் தாய் அலைப்பேசியில் தொடர்புகொள்ளும் வரை அப்படி தான் நினைத்தார்கள் இருவரும்.

ஆனால் அவன் கல்லூரிக்கும் செல்லவில்லை வீட்டிற்கும் போகவில்லை.

எல்லா இடத்தையும் சல்லடையிட்டு தேடினார்கள் ஆனால் அவன் அகபடவே இல்லை. அது ஒரு மழை காலம் மின்னலும் மாரியும் பிண்ணி பினைந்திருந்த நேரமது.

மழையில் சொட்ட சொட்ட இருவரும் தேடினார்கள் ஒரு கட்டத்தில் எங்கு தேடுவதென்றும் அவர்களுக்கு தெரியவில்லை அப்போது தான் அவன் அவர்கள் கண்ணில் தென்பட்டான்.

“டேய் மணி இவன் அவ தம்பி தான!”

“ஆமாடா! இவன் கிட்ட கேட்டு பார்ப்போம்”

“டேய் தம்பி! எங்க ப்ரண்ட பார்த்தியா… உங்க அக்காவ பஸ் ஸடாப்ல இறக்கிவிட வரும்போதுலாம் பாத்துருப்பியே எங்க கூட இருப்பானே அவன பார்த்தியா”

“உயரமா தாடி வச்சு இருப்பாரே அவரா”

“ஆமா அவனே தான்”

“காலைல இருந்து எங்க வீட்டுப்பக்கம் சுத்திட்டு இருந்தாரு எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தாரு அப்புறம் ஆள காணோம்”

“உங்க அக்காவ எதும் பார்த்தானா”

“அக்காவயா! உங்களுக்கு நடந்தது எதும் தெரியாதா”

என தழுதழுத்த குரலில் சொல்ல ஆரம்பித்தான். மழையும் விட்டபாடில்லை அவன் சொல்லி முடிக்கையில் அவர்கள் மூவரையும் முழுவதுமாக நனைத்திருந்தது.

மழைத்துளி ஒவ்வொன்றும் காவியன் மற்றும் மணியின் கண்களின் ஓரத்தில் வழிந்தோடியது.

யார் கண்டது அது மழைத்துளி தான் என்று.

மெள்ள அவர்களின் இருசக்கரம் நகர்ந்தது மீண்டும் தேட தொடங்கினார்கள் அப்போது மணி பதறிய குரலில் ஓலமிட்டான்.

“டேய் டேய் நிறுத்துடா அந்த இருக்கான்டா”

வேப்ப மர கிளையின் கிழ் நின்று கொண்டிருந்தான் அவனையும் முழுவதுமாக நனைத்திருந்தது மழை.

காவியனும் மணியும் எவ்வளவோ வற்புறுத்தினார்கள் ஆனால் இனியனுக்கோ அவளை பார்க்காமல் அவன் காதலை சொல்லாமல் நகர மனம் வரவில்லை.

இறுதியாக “சரிடா நாளைக்கு நானே அவங்ககிட்ட உன்ன நேர்ல கூட்டிட்டு போரேன்” என்று காவியன் சொல்லும்போது தான் ஒருவாராக அவன் மனம் மாறினான்.

“ஏறுடா அம்மா உன்ன தேடிட்டு இருக்காங்க” என மணி கூறியும் அவன் அவ்விடம் விட்டு அகலவில்லை

இருந்தும் அவனை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

வழக்கம் போல பொழுது புலர்ந்தது நேற்றைவிட அதிகமாகவே இருந்தது அவனது பதட்டமும் களிப்பும்.

அவளுக்காக எழுதிய அந்த காதல் கடித்ததையும் பத்திரமாக எடுத்துக்கொண்டான் , வெண்பனியால் சிவந்த ஒரு ரோஜா மலரை மட்டும் வாங்கி கொண்டான் அதை இதையத்தின் அருகே பத்திரபடுத்திக்கொண்டான் காவியனும் அழைத்து செல்ல வந்துவிட்டான்.

நீண்ட பயணம், இனியனுக்கு ஒன்றும் விளங்கவில்லை எங்கே அழைத்து செல்கிறான் என கேட்கவுமில்லை ஏனென்றால் அவன் மூளையின் ஒவ்வொரு செல்களும் காதலால் நிரம்பியிருந்தது.

ஒருவழியாக இருவரும் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஒரே மயான அமைதி சுற்றும் முற்றும் யாருமே இல்லை. அந்த இடமே மரங்களாலும் டிசம்பர் பூக்களாலும் நிரம்பியிருந்தது ஆங்காங்கே மேடு பள்ளங்களாக இருந்தது.

“உன் காதல சொல்லவேண்டிய நேரம் வந்திருச்சு… போ போய் சொல்லு” என காவியன் சொல்லும்போது வார்த்தைகள் அவன் தொண்டைகுழியில் சிக்கி தவித்தது.

இனியன் காவியனை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் ஆனால் காவியனோ சட்டென திரும்பி இரண்டடி பின் நகர்ந்தான்.

“போ சொல்லு என்று மட்டும் சத்தம் வந்தது”

ஒரு நீள் நிசப்தம் பரவியது, இனியன் மெல்ல முன்னேறினான்.

ரோஜாவையும் கடிதத்தையும் எடுத்து கொண்டு மண்டியிட்டான் எச்சிலை முழுங்க முற்பட்டான் தொண்டை அடைத்தது இருந்தும் மென்னொலி கேட்டது.

“உன்ன பாக்காம என்னால இருக்க முடில யார பார்த்தாலும் நீ தான் எங்க பார்த்தாலும் நீ தான்… உங்கிட்ட பேசிட்டே இருக்கனும்னு தோனுது உன் கூட இருக்கனும்னு தோனுது உன் கூட வாழனும்னு தோனுது உன்ன அனு அனுவ நேசிகனும்னு தோனுது உன்ன உள்ளங்கைல வச்சு தாங்கனும்னு தோனுது ஏன் தெரியுமா ஏன் தெரியுமா” என ஓங்கார குரலில் கதறினான்.

இதை கண்ட காவியன் கண்கள் குளமாகிருந்தது மெள்ள நெருங்கி இனியனின் தோளில் கை வைத்தான்.

உடனே இனியனுக்கு கண்ணீர் பீறிட்டு தாரை தாரையாக கொட்டியது ஓங்கி பூமி தாயை அடித்து கொண்டே “ஏன்னா நான் உன்ன காதலிக்கிறேன் நான் உன்ன காதலிகிறேன்” என கதறினான் அவளை விதைத்த அந்த மண் குவியலில் கண்ணீர் கடல் ஓடியது. ரோஜாவில் உள்ள நீர் துளிகள் கூட இன்னும் காயவில்லை அந்த கடிதத்தின் மையின் வாடை கூட மாறவில்லை இரண்டும் மண்ணில் வீழ்ந்தன அவளுக்கு சேர வேண்டியவை தானே அவளிடமே சேர்ந்துவிட்டது.

அவன் காதலின் மேல் அந்த கல் நெஞ்சகாரனுக்கு என்ன தான் வஞ்சமோ அவளை விபத்தின் மூலம் அல்ப ஆயுளில் அழைத்து கொண்டான். ஆனால் அவன் காதலை சொல்வதை யாராலும் தடுக்க முடியாது. காதலிக்கிறேன் என ஆசை தீர சொல்லிவிட்டான் அதை உறங்கி கொண்டே அவளும் கேட்டு கொண்டே இருந்தாள் என்ன ஒன்று நேரில் கேட்க அவள் இல்லை இருந்தும் ‘காதலிக்கிறேன்’ என்ற வார்த்தை மட்டும் அங்கு எக்காளமிட்டு ஒலித்து கொண்டே இருந்தது.

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி