Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 42

42. திற

மாயா அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தாள். எப்போதோ தன்னை தீண்ட வந்து கல்லாக மாறிப்போன அந்த நாயின் புகைப்படம். ஒரு சாதாரண மனிதனின் புகைப்படம் எப்படி ஜீயூஸ் படைக்கே சவாலாக இருந்த இவனிடம் வந்தது? என்பது அவளுக்குப் புரியவில்லை. இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் இவனைக் கொலை செய்யக் கூடாது என முடிவு செய்தாள்.

“குதிரையாரே, இந்த ஃபோட்டோ இவன் கிட்ட எப்படி வந்துச்சுன்னு விசாரிங்க” என்றாள் மாயா.

குதிரையார் வேகமாக வந்து, எல்ஃபேன்டஸ்மாவை நெஞ்சு மீது மிதித்தார். பின், அவனது தாடையிலேயே தன்னுடைய காலால் எட்டி எட்டி மிதித்தார். அத்தனை உதையை வாங்கிக் கொண்ட பின்னும், எல்ஃபேன்டஸ்மா வாயைத் திறக்கவேயில்லை.

அப்போது, அவளருகே வந்த எருமையார், “இவன் எல்லோருக்கும் எப்படி பயம் காட்டுறது? அதுக்காக எப்படி வலி கொடுக்கிறதுன்னு எந்நேரமும் யோசிக்கிறவன். அதனால, நம்ம விசாரணையோட எல்லா வலியையும் தாங்கிக்குவான். இவனை உடைக்கணும்னா, நமக்கு கொஞ்சம் நேரம் வேணும். அதை நாம இங்க பண்ண முடியாது. அதனால, இவனை நம்ம இடத்துக்கு தூக்கிட்டு போகணும்” என்றார்.

எருமையார் சொல்வதே சரியென்று மாயாவுக்கும் தோன்றியது. அதனால், அனைவரையும் அங்கிருந்து கிளம்பும்படி ஆணையிட்டாள். சிறிது நேரத்தில் மறைத்து வைக்கப்படிருந்த அவர்களுக்கான மாய விமானம் அங்கு வந்தது. அங்கிருந்து கிளம்புவதற்கு முன், அங்கிருந்த அனைத்து அறைகளையும் நன்றாக பரிசோதிக்கும் படி எருமையார் உத்தரவிட்டிருந்தார். ஜீயூஸ் படையினர் அங்கிருந்த அறைகளை சோதனையிட்ட போது, சில மரப் பெட்டிகளில் தங்க பிஸ்கட்களும், ஒரு அறையில் அறை முழுக்க குவித்து வைக்கப்பட்ட அமெரிக்க டாலரும் இருந்தது. அவற்றையெல்லாம் அவர்கள் பறிமுதல் செய்து கொண்டிருந்த போது, ஒரு அறையில் ஏதோ முனகல் சப்தம் கேட்டது. மாயாவும் முத்துக்குமரனும் சென்று பார்த்த போது, பதினெட்டு வயது சிறு பெண் அங்கே மயங்கிய படி முனங்கிக் கொண்டிருந்தாள். அவளது ஆடைகள் களைந்து இருந்தது.

அந்தப் பெண்ணையும் தங்களோடு கூட்டிச் செல்ல மாயா ஆணையிட்டாள். அவர்களது மாய விமானம் அங்கிருந்து கிளம்பியது.

*

எல்ஃபேன்டஸ்மா நாற்காலியுடன் கட்டப்பட்டு நிர்வாணமாக தலை தொங்கிப்போய் அமர்ந்திருந்தான். நாற்காலியில் அமரக்கூடிய இடத்தில் ஒரு பெரும் துளை இருந்தது. இதனால் அவனது விதைப்பை அந்த துளையில் கீழ்நோக்கி தொங்கி கொண்டிருந்தது. அவனது மூக்கின் நுனியில் இருந்து ரத்தம் சொட்டிக் கொண்டு இருந்தது. அவனது வலது கையில் பலமுறை ட்ரில்லிங் மெஷினால் துளையிடப்பட்ட சுவடு இருந்தது. அந்த நாற்காலியின் கைப்பிடியில் அவனுடைய சதைத்துணுக்குகளும் உறைந்த ரத்தமும் மரத்தூளுடன் சிதறிக் கிடந்தது. அவனுடைய கால் விரல்களின் நகங்கள் பிடுங்கப்பட்டிருந்தன. ஏற்கனவே நகம் பிடுங்கப்பட்ட அவனது வலது கைவிரல்கள் ஒவ்வொன்றாக ஒடித்து விடப்பட்டிருந்தன. ஒடிக்கப்படுகிற ஒவ்வொரு விரலுக்கும் அவனிடம் ஹரீஷைப் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த சித்திரவதை வைபோகத்தை எருமையாரும் மாயாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவன் கொஞ்சம் கூட அசையவில்லை. ஒரு மலையின் மௌனம் போல இருந்தான்.

“டேய், வலிக்காத மாதிரியே நடிக்காத. இதெல்லாம் இன்னும் கசகசன்னு ஆகுறதுக்கு முன்னாடி உண்மையை சொல்லு. ஹரீஷ் ஓட ஃபோட்டோ உன்கிட்ட எப்படி வந்துச்சு?”

எல்ஃபேன்டஸ்மா அலட்சியமாக சிரித்தான். மிச்சமிருந்த அவனது முன்னாள் அதிகாரத்தின் துளி அந்த சிரிப்பில் இருந்தது.

“ஏய் கொழந்த. நான் கிட்டத்தட்ட ஆயிரம் பேர சாகறதுக்கு முன்னாடி பாத்திருக்கேன். அந்த போதைக்காகவே நான் அந்த ஆயிரம் பேரை கொன்னுருக்கேன். என்னை நீ பயமுறுத்த முடியும்னு நினைக்கிறியா? ஒழுங்கா இந்த டிராமாவையெல்லாம் நிறுத்திட்டு என்னை கொஞ்ச நேரம் சந்தோஷப் படுத்து உன்னையும் உன் கூட்டத்தையும் உயிரோட விட்டறேன்” என்றான் எல்ஃபேன்டஸ்மா.

“இதெல்லாம் டிராமா இல்லை ஃபேன்டஸ்மா. நீ செஞ்ச பாவத்துக்கான சம்பளம். நீ எடுத்த உயிர்களுக்கான நீதி.

உனக்கு உண்மை புரியலைன்னு நினைக்குறேன். உன்னால என்னையும் என் மக்களையும் ஒன்னும் புடுங்க முடியாது. உனக்கு வேலை செஞ்ச யாரும் இப்போ இல்லை. நீ இப்போ யாருக்கு வேலை செய்யறேன்னு சொல்லு. உன்னை உடனே கொல்லுறோம். இல்லாட்டி, இங்க நிக்குறாரு பாரு எருமையாரு அவருக்கு உன்னை மாதிரி உடைக்க முடியாத பாறையை உடைக்கிறது ரொம்ப பிடிக்கும். அவர் ஆசைப்படுற வரைக்கும் அவர் உன்னை பாத்துக்குவாரு.” என்றாள் மாயா.

“கொழந்தை என்னோட ஆட்கள் யாருமே இப்போ இல்லைங்கிறது உண்மை தான். ஆனா, அதுக்காகவெல்லாம் உன் மிரட்டலுக்கு பயந்து என்னோட கஸ்டமரை காட்டிக் கொடுப்பேன்னு நினைக்காத. திருடனுக்கும் ஒரு அறம் இருக்கு. அது உனக்குப் புரியாது” என்றான்.

“நீ சொல்றது சரி, உன்னை மாதிரி கேடுகெட்ட ஆளோட அறமெல்லாம் எனக்குப் புரியாது. ஆனா, உனக்கு பயம் வந்திருச்சுன்னு மட்டும் எனக்குப் புரிஞ்சுருச்சு. அதை இனி நாங்க முழுசா வெளிய கொண்டு வருவோம். 

எருமையாரே பாத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு மாயா அந்த அறையை விட்டு வெளியேறினாள். எருமையார் ஒரு தடிமனான கயிறை எடுத்து அதன் முனையில் ஒரு பெரிய முடிச்சைப் போட்டார். பின் அதனை நன்கு வேகமாக சுழற்றி அவன் உட்கார வைக்கப்படிருந்த நாற்காலியின் அடியில் வேகமாக அடித்தார், அந்தக் கயிற்றின் முடிச்சு சென்று அவனது விதைப் பையில் சுட்டென்று அடித்தது. எல்ஃபேன்ட்டஸ்மா வலியில் கத்தினான்.

அந்த அறையை விட்டு வெளியேறிய மாயாவுக்கு எருமையார் எப்படியும் அவனை உடைத்து உண்மையை வாங்கி விடுவார் என்று தெரிந்திருந்தது. அவனுடன் கொண்டு வரப்பட்ட அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்காக மாயா இன்னொரு அறைக்குச் சென்றாள்.

ஜீயூஸ் படையினரின் தலைமையிடம் பூமிக்கு கீழே இருந்ததால் அங்கே வெளிச்சம் வருவதற்கு எந்தவொரு ஜன்னலும் இல்லை. அந்த மொத்த அரங்கே மாயத் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் தான் ஒளியூட்டப்பட்டிருந்தன. அதிலும் அந்தப் பெண் வைக்கப்படிருந்த அறை அதிக இருளாக இருந்தது. மாயாவின் கண்களுக்கு அந்த இருள் நன்கு பழகி இருந்தது.

மாயா தன் படையினர் நான்கு பேருடனும் தனது தந்தையுடனும் அந்த அறைக்குச் சென்றாள். அந்த அறையின் நடுவே வைக்கப்பட்டிருந்த மேஜையில் அந்தப் பெண் கிடத்தப்படிருந்தாள். அந்தப் பெண்ணால் எழுந்து நிற்கக் கூட முடியாது என்பது அவளைப் பார்த்த அனைவருக்கும் தெரிந்திருந்ததனால் அவளை யாரும் கட்டி வைக்கவில்லை.

மாயா, “பந்தங்களை கொளுத்துங்கள்” என்றாள்.

பந்தங்கள் கொளுத்துப்பட்டன. வெளிச்சம் அந்தப் பெண்ணின் முகத்தில் விழுந்தது. அதுவரை தூக்கத்திலோ அல்லது மயக்கத்திலோ இருந்த அந்தப் பெண், மெதுவாகக் கண் திறந்தாள். பின்னர், அந்த மேஜையில் இருந்து கீழே இறங்கி நின்றாள். அவளால், ஏதேனும் ஆபத்து வருமென அஞ்சிய வீரர்கள் தங்கள் ஆயுதங்களை தொட்ட போது, அந்தப் பெண் ஒரு அரை மயக்கத்தில் ஒரு இயந்திரம் போல தன்னுடைய பாவாடை நாடாவை அவிழ்த்தாள். அந்தப் பாவாடை கீழே விழுந்தது. *

முத்துக்குமரன் விரைந்து சென்று அந்தப் பாவாடையை எடுத்து அந்தப் பெண்ணின் இடுப்பில் மாற்றி நாடாவை இறுக்கமாக கட்டினார். அந்தப் பெண் எதுவும் புரியாமல் ஏதோ வித்தியாசமாக முத்துக்குமரனைப் பார்த்தாள்.

அப்பா என்பவனுக்கு உலகம் முழுக்க ஒரே முகம் தான். அவள் தன் அப்பாவின் முகத்தை அவரிடம் கண்டாள். அந்த நொடியே அவள் உடைந்து அழத் தொடங்கினாள். மாயா அவளது தோளைப் பற்றி, அவளை அந்த மேஜையில் அமர வைத்தாள்.

சிறிது நேர அழுகைக்குப் பின், அந்தப் பெண் அவளுக்கு நடந்த அத்தனைக் கொடுமைகளையும் சொன்னாள். அவளும் அவளது தந்தையும் எல்ஃபேன்டஸ்மாவை வேவு பார்க்க வந்தவர்கள். பின்னர் அவர்களிடம் மாட்டிக் கொண்டனர். பல விதமான சித்தரவதைகளுக்கு பின் அவளது தந்தை கொல்லப்பட்டார். அவளையும் அவர்கள் கொலை செய்யவே நினைத்தனர். பின், அவளது சக்திகளை தெரிந்து கொண்ட பின் கொலை செய்வதை விட ஒரு மோசமான தண்டனையை அவளுக்கு கொடுத்தனர்.

அந்தப் பெண்ணால் யாருடைய உருவத்திற்கும் மாற முடியும். அதனால் அவர்கள் அவளை ஒரு செக்ஸ் அடிமையாக வைத்துக் கொள்ள முடிவு செய்தனர். தாங்கள் விரும்பிய பெண்ணின் உருவத்திற்கு அவளை மாற வைத்து தங்களது அத்தனை வக்கிரங்களையும் தீர்த்துக் கொண்டனர். உலகில் உள்ள பெரும்பாலான நடிகைகள் மற்றும் மாடல்களின் உருவத்திற்கு மாற்றப்பட்டு அவள் சிதைக்கப் பட்டிருக்கிறாள். அதை விட இன்னும் கொடூரமாக பலர் அவளை பதின் வயது சிறுமியாக மாற்றி அவளை வன்புணர்வு செய்திருந்தனர்.

இந்தக் கதையைக் கேட்ட மாயாவுக்கு அவளும் தன்னைப் போன்றவள் தான் எனத் தோன்றியது. எல்ஃபேன்டஸ்மாவின் மொத்தக் கூட்டத்தையும் மொத்தமாக அழிப்பதற்கான அத்தனை நியாயங்களும் அவளுக்கு இருப்பதாக மாயாவுக்கு தோன்றியது. தங்களது விசாரணை முடிந்த பின்னர், அவனை இந்தப் பெண்ணுக்கு அவள் விருப்பப்படி பலியிட வேண்டுமென மாயா நினைத்துக் கொண்டாள்.

மாயா அவளிடம், “உன் பேரு என்ன?” என்று கேட்டாள்.

பல மாதங்களாக யாரும் தன்னிடம் பெயர் கேட்கவில்லை என்பதை அந்தப் பெண் உணர்ந்தாள். தன்னைப் புணர வருகிற அத்தனை பேரும், அவரவருக்கு விருப்பமான பெயர்களை வைத்தே அழைத்தனர். யாருமே அழைக்காததால் அவளுக்கே அவளது பெயர் சட்டென நினைவிற்கு வரவில்லை. சில நொடி தடுமாற்றத்திற்கு பின் தன் பெயரை அங்கையர் கன்னி என்று சொன்னாள். 

அதே நொடி எல்ஃபேன்ட்டஸ்மா பேசத் தொடங்கி விட்டான் என்கிற செய்தி அவளுக்கு வந்தது. அந்தப் பெண்ணிற்கு வேண்டியதைக் கொடுத்து அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அவள், எல்ஃபேன்ட்டஸ்மாவை பார்க்கச் சென்றாள். போகிற வழியில் அங்கையர் கன்னி என்பது ஒரு அசல் இந்திர மக்களின் பெயர் என்பதை எருமையார் மாயாவிடம் சொன்னார்.

***

* சகத் ஹசன் மான்ட்டோ எழுதிய ‘திற’ என்கிற கதையின் தாக்கத்தில் எழுதப்பட்டது. இந்தக் கதையை வாசிக்கும் வாசகர்கள், ‘திற’ கதையை வாசிக்க வேண்டுமென விரும்புகிறேன்.