43. சுனில்
மோகன் இப்போதெல்லாம் அவனுடைய அத்தையிடம் மாட்டிக் கொள்ளாமல் பொய் செல்வது எப்படியென கண்டு கொண்டான். கல்லூரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு, தினமும் இந்திர சேனைக்கு சென்று விடுகிறான். அங்கே, அவனுக்கான போர் பயிற்சிகளும், அவன் கற்க வேண்டிய நூல்களும், தெரிந்து கொள்ள வேண்டிய ஆவணங்களும் கற்றுத்
தரப்படுகின்றன.
“ஒரு புத்தகத்தை படிச்சு புரிஞ்சிக்கிறது, போர்ப்பயிற்சி எடுக்கிறத விடக் கஷ்டம். படிக்கும் போது உன் கவனம் கொஞ்சம் களைஞ்சாலும், அந்தப் புத்தகம் என்ன சொல்ல வருதுன்னு தெரியாது. இந்தப் புத்தகத்துல தான் உன் வாழ்க்கையே இருக்குங்கிறது மாதிரி கவனத்தோட படி” என்று திருச்செந்தாழை சொன்னான்.
தங்களுடைய மாஸ்டரின் பையன் என்பதால், திருச்செந்தாழையும் மயில்வாகனனும் தங்களால் இயன்ற அளவு தாங்கள் கற்ற அனைத்தையும் அவனுக்கு கற்றுக் கொடுக்க நினைத்தனர்.
திருச்செந்தாழைக்கு முதலிலிருந்தே ஹரீஷுடைய கேஸை எடுத்துக் கொள்வதற்கு விருப்பம் இல்லை. ஆனாலும், இப்போது அவர்களுக்கு ஒரு பெரும் பணம் தேவை என்பதால் திருச்செந்தாழை இந்தக் கேஸை எடுத்துக் கொண்டான். ஆனால், இப்போது அந்தக் கேஸிற்கும் மோகனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி விட்டதால், அடுத்தபடியாக இந்தக் கேஸில் என்ன செய்வதென்று தெரியாமல் திருச்செந்தாழை குழம்பினான்.
மிக நிச்சயமாக ஹரீஷ் காணாமல் போனதற்கு பின்னால், ஏதோவொரு மாய உயிரிகளின் வேலை இருக்கிறது. அது நிச்சயமாக இந்திர சேனையினர் கிடையாது. அப்படியென்றால், அது ஜீயூஸ் படையாகவோ அல்லது கார்ட்டெல்லாகவோ தான் இருக்கும். ஆனால், ஹரீஷைத் தான் தேடுவது அவர்களுக்கு தெரிந்தால், அவர்களுடன் பிரச்சனை ஏற்படும். அதுவே போராக மாறிவிடும். தங்கள் படை தயாரவதற்கு முன் போரைத் தொடங்கினால், அது தோல்வியைத் தான் பெற்றுத் தரும் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது.
அதனால், இப்போதைக்கு ஹரீஷைத் தேடும் வேலையை விட்டு விட்டு, தங்களுக்குத் தேவையான பணத்தை ஈட்டுவதில் கவனம் செலுத்தினர். அவர்கள் முன் ஹரீஷ் கேஸ் இல்லாமல் பணத்தை ஈட்ட இன்னொரு வழி, கொஞ்சம் சிக்கலான வழி இருந்தது. ‘மகா நடிகன்’ சுனில் சுந்தரம்.
சுனில் சுந்தரம் இந்திர சேனையின் ஒரு அங்கத்தினன். செம்புக் காப்பு அணிபவன். மக்கள் முன் ஒரு பெரும் தமிழ் திரைப்பட நடிகன். இந்திர சேனைக்கு வெளியே பலரும் இன்று காப்பு அணிய அவனே காரணம். அவன் எண்பதுகளில் நடித்த ஒரு படத்தில் காப்புடன் அவன் தோன்றியதைப் பார்த்த இளைஞர்கள் இன்று வரை அவனைப் போலவே காப்பு அணிந்து கொள்கின்றனர்.
அவன் எந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தாலும், அவன் உண்மையிலேயே அந்த கதாபாத்திரம் மட்டும் தான் என பார்ப்பவரை நம்ப வைக்கும் அதிசய ஆற்றல் கொண்டவன். அவன் ஏதேனும் ஒரு படத்தில் பேயாக நடித்தால், அந்தப் படத்தில் வேலை செய்தவர்களுக்கு ஆயுள் முழுக்க பேய் பயம் வந்து விடும்.
அவனுக்கு பெண் தொடர்புகள் மிக அதிகம் என கிசுகிசு எழுதப்படுகிறது. ஆனால், அவன் தனது சொந்த வாழ்வில் மிகத் தனியனாக இருந்தான்.தினமும் புதிது புதிதாக கற்பதையே தன் வாழ்வென்று மாற்றிக் கொண்டவன்.
தமிழ் சினிமாவிற்கு நிறைய புதுபுது தொழில்நுட்பங்களை அவன் கொண்டு வந்திருக்கிறான். எப்போதோ வரப்போகிற இயற்கைச் சீற்றங்களையும் அழிவுகளையும் தன் படத்தில் முன்னரே காட்டிவிடுவான். அதனாலேயே, அவனைப் பலரும் இலுமினாட்டி என நம்பினர். அதி புத்திசாலித்தனம் கடின உழைப்பாலும் பயற்சியிலும் வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளாத மக்கள் அதற்கு அமானுஷ்ய தன்மையை ஏற்றுவது போல தான் இது.
அவனுக்கு ஒரு ஆசை இருந்தது. தனக்கென ஒரு புஷ்பக விமானத்தை வைத்துக் கொள்வது. போர்க் காலத்தில் பயிற்சி பெற்ற வீரர்களுக்கு சேனையே ஒரு விமானத்தைக் கொடுக்கும். ஆனால், போர் இல்லாத காலங்களில் வெள்ளி வீரர்களுக்கு மட்டும் தான் விமானம் பயன்படுத்த அனுமதி இருந்தது. ஆனால், ஒரு வெள்ளி வீரர் பரிந்துரை செய்தால் செம்பு வீரனுக்கும் விமானம் கொடுக்கலாம் என்ற ஒரு விதி இருந்தது. அந்த விதியைப் பயன்படுத்தி, திருச்செந்தாழை சுனிலுக்கு விமானம் கொடுக்க பரிந்துரை செய்ய அவனிடம் நூறு கோடி கேட்டிருந்தான்.
“இது தப்பில்லையா? ஏதோ லஞ்சம் வாங்கிட்டு ஒரு ஆளுக்கு வேண்டியதை செய்ற மாதிரி இருக்கு.” என்று தன் தரப்பை சொன்னான் மோகன்.
“இது தப்பு தான் மோகன். ஆனா, இந்தப் பணத்தை நாங்க எங்களுக்காக வாங்கல. சேனையோட ஒரு முக்கிய தேவைக்காக தான் வாங்குறோம்.” என்றான் திருச்செந்தாழை.
“சார், நம்ம கிட்ட தான் மலை மலையா தங்கம் இருக்கே. அப்புறம் ஏன், நாம இந்த மாதிரி ஒரு தப்பு பண்ணனும்?”
“நம்ம கிட்ட நிறையா தங்கம் இருந்தாலும் இப்போதைக்கு அதை நாம பயன்படுத்த முடியாது மோகன். சேனையோட தங்கத்தை நாம இப்போ வெளியில எடுக்கணும்னா அதுக்கு தங்க வீரன் ஒருத்தரோட அனுமதி வேணும். இப்போதைக்கு நம்ம படையில ஒரே ஒரு தங்க வீரர் தான் இஸ்ரேலில இருக்காரு. ஆனா, அவர் இந்தப் ப்ரபோஸலை ரிஜெக்ட் பண்ணிட்டாரு.”
“சேனைக்கு முக்கியமான ஒரு வேலையை அவர் ஏன் சார் ரிஜெக்ட் பண்ணுனாரு?, அவரு ரிஜெக்ட் பண்ணுன ஒரு விஷயத்தை நாம எப்படி சார் பண்ண முடியும்?” என்று கேட்டான் மோகன்.
“மோகன், இந்த வேலைக்கு நிறையா பணம் தேவைப்படும். ஆனா, நாம போடுற இவ்வளவு பணத்துக்கும் சரியான ரிசல்ட் கிடைக்குமான்னு கேட்டா, அது சந்தேகம் தான். நம்ம முயற்சி வேலை செய்யுமா இல்லை செய்யாதான்னு அதை பண்ணுனதுக்கு அப்புறம் தான் தெரியும். இதுல இவ்ளோ ரிஸ்க் இருக்கிறதுனால தான், நம்ம கமேண்டர் இதை ரிஜெக்ட் பண்ணிட்டாரு.
ஆனா, இந்த வேலையை நாம நம்ம கை காசு போட்டு பண்ண நமக்கு எந்த தடையும் இல்லை. அதுக்காக தான் இந்த சுனில் பின்னாடி அலைஞ்சுட்டு இருக்கோம்” என்று விளக்கினான் திருச்செந்தாழை.
புஷ்பக விமானம் மற்ற வாகனங்களைப் போன்றது இல்லை. அதை மனதால் மட்டும் தான் கட்டுப்படுத்த முடியும். ஆனால், சுனிலுக்கு மனதைக் குவிப்பதில் பிரச்சினை இருந்தது.
எப்படி அந்த பயிற்சியை அளிப்பது? என்று தெரியாமல் திருச்செந்தாழையும் மயில்வாகனனும் குழம்பிப் போயிருந்தனர். ஒரு சிலருக்கு மூளை எப்போதும் பரபரவென்றே இருக்கும். எதையாவது கற்பனை செய்து கொண்டே இருக்கும். அது தான் கலைஞனுடைய மூளை. சுனில் சுந்தரம் ஒரு மாபெரும் கலைஞன், அதனாலேயே அவனுக்கு இந்தப் பயிற்சியை அளிப்பது சவாலான ஒன்றாக இருந்தது. ஆனாலும், வேறு வழியில்லை என்பதால், திருச்செந்தாழை அவசர அவசரமாக ஹைகமேண்ட்டிடமிருந்து அனுமதி பெற்று, மாயன் குழுவினரிடம் ஒரு புஷ்பக விமானத்தை செய்யச் சொல்லி உத்தரவு கொடுத்தான். சுனில் சுந்தரத்திற்கு பயிற்சி கொடுக்க முடிவானது.
இது போன்ற பயிற்சிகளைக் கொடுக்க முதலில் புறாவிடு தூது கொடுக்கப்பட்டு அவர்கள் இந்திர சேனைக்கு அழைக்கப்பட்டு சிமுலேட்டரில் வைத்துத் தான் பயிற்சி கொடுக்கப்படும். ஆனால், சுனில் சுந்தரம் இப்போது நேரமற்ற மனிதனாக இருக்கிறான்.
சுனில் சுந்தரம் நடிக்கிற படங்களில் அவனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும். அதனாலேயே அந்தப் படங்களை அந்த டைரக்டரின் படம் என்று சொல்ல மாட்டார்கள். சுனில் நடிக்கிறான் என்று சொன்னாலே, அது சுனிலுடைய படம் மட்டும் தான். அவன் எடுத்த பல சோதனை முயற்சிப் படங்கள் அவனுக்கு நல்ல கலைஞன் என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்தாலும், அவனால் பல தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. அதனாலேயே அவனை சினிமா வட்டாரத்தில் இருந்த பலரும், “பூட்டு போடறவன்” என்றழைத்தனர். அதிலும், இன்டர்நெட்டின் வளர்ச்சிக்குப் பின், அனைவராலும் அனைத்துப் படங்களையும் பார்க்க முடியும் என்ற நிலை உருவான பின், அவனது புது முயற்சிகளுக்கான தோற்றுவாய் எங்கிருந்து பெறப்பட்டது என அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவன் முன் செய்த படங்கள் முதல் தற்போது பண்ணுகிற படங்கள் வரை எந்தெந்த காட்சிகள் எந்தெந்த ஆங்கிலப் படத்தில் இருந்து எடுக்கப்பட்டன என்பதை யூடுயூபர்கள் பேசத் தொடங்கினர். இதனாலேயே அவனது மார்க்கெட் சரியத் தொடங்கி, வேறு வழியின்றி ஒரு அரசியல் கட்சியையும் தொடங்கி விட்டான்.
யாரும் எதிர்பாராமல், திடீரென அவனது சினிமா வாழ்வில் ஒரு பெரும் வெற்றி அமைந்தது. சுனிலுடைய ரசிகன் ஒருவன் இயக்குனராகி ஒரு கண்டெய்னர் முழுக்க போதைப் பொருளும் பலி கொடுக்கப்பட்ட கதாநாயகியுமென ஒரு விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டு வந்தான். படம் இந்தியா முழுக்க பெரும் வெற்றி. அந்த ஒரு படத்திற்கு பின், இந்திய மொழிகள் அனைத்திலும் அவன் கேட்கிற சம்பளத்தை விட கூடுதலாய் கொடுத்து அவனை தங்கள் படத்தில் நடிக்க வைக்க தயாராக இருந்தனர். “அடடா, இந்த நேரத்துல கட்சி ஆரம்பிச்சுட்டோமே!” என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த அதிரி புதிரியான வெற்றிப் படத்தை வாங்கி வினியோகம் செய்த அரசியல் கட்சி சார்ந்த சினிமா வினியோக நிறுவனம் அடித்துப் பேசி நல்ல விலையில் சுனிலுடைய கட்சியையும் வாங்கி விட்டது. எப்படிப் பார்த்தாலும் சுனிலுக்கு, இதில் நல்ல லாபம் தான். மீண்டும் எண்பதுகளில் இருந்தது போல ஒரு பிஸியான நடிகனாக மாறிவிட்டான்.
இதனால் சுனிலை இந்திரசேனைக்கு அழைத்து பயிற்சி கொடுப்பது முடியாமல் போனது. அதனால், ஒரு முப்பது நிமிடங்கள் அவனது வீட்டிற்கே சென்று பயிற்சி அளிப்பதென முடிவு செய்தனர். சிமுலேட்டர் இயந்திரங்களை எடுத்துக் கொண்டு நாளை சுனில் வீட்டிற்கு போகப் போவதாக திருச்செந்தாழை கூறினான். சிமுலேட்டரை இயக்கக் கற்றுக் கொள்வதற்காக அவர்களுடன் மோகனையும் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.