41. மரணத்தின் அன்னை
முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க, மாயா தனது மேல் பற்களால் தன்னுடைய கீழ் பற்களை கடித்துக் கொண்டாள். அப்போது, எல் டையாப்ளோ மாயாவின் அருகே வந்தான். தனது பற்களால் சுருட்டைக் கடித்தபடி,
“இவன் யாருன்னு தெரியுமா?” என்று கேட்டான்.
நந்தனை தன் முன் நிறுத்திய போதே தனது கண்ணில் ஏற்பட்ட ஒரு சிறு அசைவை அவர்கள் கவனித்திருப்பார்கள் என்பது மாயாவிற்கு தெரிந்திருந்தது. அதனால், இப்போது நந்தனை தெரியாது என்று சொன்னால் தனது பொய்யை அவர்கள் கண்டு கொள்வார்கள் என்பதை மாயா அறிந்திருந்தாள்.
“தெரியும். ஜீயூஸ் ஆர்மியோட சீனியர் அதிகாரி. ஆர்மிக்குள்ள சிலர் எனக்கெதிரா பிரச்சனை பண்ணுன போது, இவர் தான் எனக்காக வந்து பேசுனாரு”
“ரொம்ப நல்லதா போச்சு.” என்று சொல்லிவிட்டு எல் டையாப்ளோ மாயாவின் கையில் ஒரு கனமான இரும்பு ராடைக் கொடுத்தான்.
“சான்ட்ரா, நீ இதுவரைக்கும் எங்ககிட்ட சொன்ன எல்லாத்தையும் நாங்க நம்புறோம். ஆனா, அதுக்கு நீ சொன்னதை நீ நிரூபிச்சுக் காட்டணும். உன் எதிரில நிக்குறவன், இப்போ நம்மளோட எதிரி. இவனை நீ இப்போ கொல்லனும். அதுவும் இந்த ஆயுதத்தை வைச்சு” என்று சொன்னான் எல் டையாப்ளோ.
மாயா ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. யோசிக்கிற ஒரு நொடி கூட போதும், அவளது மொத்த திட்டமும் தோற்றுப் போவதற்கு வாய்ப்பு இருந்தது. அந்த ராடைப் வாங்கி ஓங்கி நந்தனின் மார்பின் மீது அடித்தாள். நந்தன் ஆடாமல் அசையாமல் நின்றான்.
நந்தனுக்கு அடுத்த நடக்கவிருந்த அனைத்தும் புரிந்தது. இது போர். பலி கொடுக்காமல் தொடங்குகிற எந்தவொரு போரிலும் வெற்றி கிடைப்பதில்லை. இந்தப் போரில் இன்று தன்னையே பலியிட நந்தன் முடிவு செய்தான்.
அவனை அடிக்கிற ஒவ்வொரு அடியிலும் மாயாவின் இதயம் வலிக்கவே செய்தது. ஆனாலும், அவள் நந்தனை அடித்துக் கொண்டே இருந்தாள். தலையிலே அடித்து ஒரே அடியாக கொன்று விட்டால், தன் மீது சந்தேகம் வருமென்பதால், அவனது மார்பிலும் முதுகிலும் அடித்து அடித்து அவனது விலா எலும்புகளை உடைத்துக் கொன்றாள். ஒளியற்ற கண்களுடன் கீழே சடலமாக கிடந்த நந்தனின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்திலிருந்து வடிந்த நந்தனின் சூடான ரத்தம் அவளது மார்பின் மீது விழுந்தது.
“வொன்டர்ஃபுல் சான்ட்ரா” என்று சொன்னபடி அருகில் வந்த எல் டையாப்ளோ அவளிடம் டிஷு பேப்பர் பெட்டியைக் கொடுத்தான். அவள் அதிலிருந்து காகிதத்தை எடுத்து தன்னுடைய முகத்தை துடைத்தாள். ஒரு துளி கண்ணீர் அவளுக்கு வரவில்லை. ஆனால் அழுதாள். அது கண்ணீர் வராத அழுகை. கண்ணீர் வராத அழுகை கொண்டு வரக் கூடிய பேரழிவு அந்தக் கார்ட்டெல்லுக்காக காத்திருந்தது.
அப்போது அங்கே நாற்காலியில் அமர்ந்திருந்த பலரும் எழுந்து நின்றனர். அது எல்ஃபேன்டஸ்மா வருவதற்கான அறிகுறி. அந்த அரங்கத்திற்குள் எல்ஃபேன்டஸ்மா தோன்றினான்.
உலகிலேயே மிக ஆபத்தான ஒருவன் எப்படி இருப்பான் என்று அதுவரை மாயா உருவகித்து வைத்திருந்த உருவத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு உருவமாக எல்ஃபேண்ட்டஸ்மா அங்கு தோன்றினான்.
குச்சியான ஒரு தேகம். ஐந்தடி உயரம். அவன் அணிந்திருந்த கோட் சூட்டின் எடை கூட தாங்காமல் அவன் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடுவான் என்பதைப் போலவே அவன் இருந்தான். அவனது வலது கையில் வைரத்தால் செய்யப்பட்ட ஒரு உறையை அணிந்திருந்தான்.
உண்மையிலேயே ஒல்லியாக இருக்கின்ற கேங்ஸ்டர் மிகவும் குரூரமானவன். அவன் வளர்கிற போதே அவன் உருவத்தை வைத்து பலர் கேலி செய்திருப்பார்கள். அந்தக் கேலிகளில் இருந்து வெளியேறி தான் வலிமையானவன் என்பதை நிரூபிப்பதற்காகவே அவன் தன்னுடைய மனிதத் தன்மைகளையெல்லாம் கழட்டி வைத்துவிட்டு ஒரு பெரும் அரக்கனாக மாறியிருப்பான். அவனது இருபுறமும் ஆறரை அடி உயரத்தில் தலா நூற்றைம்பது கிலோ எடையுடன் இரண்டு மெக்ஸிகன் வெள்ளையர்கள் அவனுக்குப் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர்.
ஆனால், அந்தப் பாதுகாவலர்கள் வெறும் ஒரு தோரணைக்கு மட்டும் தான். எல்ஃபேண்ட்டஸ்மாவிற்கு யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை. அவன் தன்னளவிலேயே ஒரு பெரும் அழிவு சக்தி. அவன் தன் முஷ்டியை மடக்கி ஒரு குத்து குத்தினால் போதும், எதிரே நிற்பவரின் உடலில் ஓட்டை விழுந்து விடும், அந்த அளவிற்கு ஆபத்தானவன். அவனுடன் சண்டையிட்ட யாருமே, இப்படித்தான் தங்களை வீழ்த்தினான் என்று சொன்னதில்லை. சொல்வதற்கு அவர்கள் யாருமே உயிருடன் இல்லை. அவனைப்பற்றிய அத்தனை ஆபத்துகளும் வெறும் செவிவழிக் கதைகளாக மட்டுமே கார்ட்டெல்லினுள் பரவி இருந்தது. அதுவே மாயாவிற்கும் சொல்லப்பட்டு இருந்தது.
அவன் மாயாவை நோக்கி வந்தான்.
“சான்ட்ரா. நௌ யூ ஆர் பார்ட் ஆஃப் ஃபேமிலி. வெல்கம்” என்று சொல்லிவிட்டு, வைர உறை அணிந்திருந்த கையை நீட்டினான்.
ஒரு பெரும் வெடிப்பிற்கு ஒரு சிறு தீப்பொறி போதுமானது. சிரியஸ் மாயாவிற்கு செய்து கொடுத்திருந்த மாய வாளை ஒரு வினாடிக்குள் ஒரு விரல் சொடுக்கில் தனது கைக்குள் கொண்டு வந்தாள். ஒரு மின்னல் வீச்சு மட்டுமே அனைவரது கண்களுக்கும் தெரிந்தது. எல்ஃபேன்டஸ்மாவின் இடது கை தரையில் விழுந்தது. மாயா பின்னர் வாளை வேகமாக ஒரு சுழற்று சுழற்றி தரையில் குத்தினாள். தரையில் குத்தி நின்ற வாளிலிருந்து பல வண்ண ஒளிகள் மேலெழுந்து சுற்றி இருந்தவர்களின் கண்களை கூசச் செய்தன. அவர்களது கண்கள் தெளிவான போது, ஜீயுஸ் படையின் குதிரையார் கையில் ஒரு அகலமான வாளைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால், சில நூறு ஜீயூஸ் வீரர்கள் நின்று கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் சண்டை முடிவிற்கு வந்தது. சொல்லப்போனால் ஜீயூஸ் படைக்கே வெற்றி என்று முடிவான பின்பு சண்டை தொடங்கியது போல இருந்தது. இருபுறமும் இணையான ஆட்கள் இருந்தனர். இருபுறமும் இணையான ஆயுதங்கள் இருந்தன. ஆனால், கார்ட்டெல் ஆட்களை விட ஜீயூஸ் படையினருக்கு நியாயமான காரணம் இருந்தது. அவர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட தங்களது சகாக்களுக்காக சண்டையிட்டனர். அதிலும், இப்போது நிகழ்த்தப்பட்ட நந்தனின் கொலை அவர்களது வெறியைக் நூறு மடங்கு ஊதிப் பெருக்கியது.
எல்ஃபேன்டஸ்மா தரையில் மண்டியிட்டு அமர்ந்த படி கதறிக் கொண்டிருந்தான். அவன் ஒரே குத்தில் அனைவரையும் கொன்று விடுவான் என்று தெரிந்திருந்த கார்ட்டெல் உறுப்பினர்களுக்கே அது எந்தக் கை என்று தெரியவில்லை. அவனது ஆற்றல் முழுக்க அவனது இடது கையில் இருந்த போதிலும், எதிரிகளை குழப்பவே அவன் தனது வலது கைக்கு வைர உறை மாட்டியிருந்தான். ஆனால், மாயா அதனைச் சரியாக ஊகித்து அவனது இடது கையை வெட்டியிருந்தாள். அதனை, மிகச் சரியான திட்டம் என்று கூட சொல்லிவிட முடியாது. அனைத்தையும் இழந்த சூதாடி எப்படியாவது வெல்ல வேண்டுமென வைக்கிற முரட்டு முட்டாள் தனமான பணயம் போல தான் இருந்தது. ஆனால், வெற்றி எப்படியோ மாயாவின் பக்கம் வந்து விட்டது.
சண்டையில் உயிரோடு எஞ்சிய சிலரின் கழுத்தில் கத்தியை வைத்தபடி ஜீயூஸ் படையினர் நின்று கொண்டிருந்தனர். தங்களை மட்டும் உயிரோடு விட்டால், தாங்கள் அனைவரும் மாயாவின் படையில் இணைவதாக அவர்கள் இறைஞ்சிக் கொண்டிருந்தனர். அப்போது எருமையார் வந்து மாயாவிடம் அவளுடைய மரகத கொண்டை ஊசியைக் கொடுத்தார். தனது முடியை வாரி முடிந்து அந்த மரகத ஊசியை தனது கொண்டையில் குத்தியபடி, அவள் தன்னுடைய மாய வாளை தனது தோளில் சாய்த்தபடி பிடித்துக் கொண்டு எல்ஃபேன்டஸ்மாவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
எல்ஃபேன்டஸ்மாவும் தன்னை உயிரோடு விட்டால், தன் இருப்பில் இருக்கக்கூடிய அனைத்து தங்கத்தையும் தருவதாக வாக்களித்தான். மாயாவைப் போன்ற ஒரு மதியூகி மிக நிச்சயமாக அவர்களுக்கு உயிர் பிச்சை கொடுத்து தனது படையை பெருக்கிக் கொள்ளவும், தனது கருவூலத்தை நிறைத்துக் கொள்ளவும் தான் நினைப்பாள் என்பதை அரசியல் அறிந்த எருமையார் உணர்ந்து கொண்டார். அனைவரும் அடுத்து அவள் என்ன செய்வாள் என்று பார்த்துக் கொண்டிருந்த போது, எருமையார் மட்டும் அவர்களை அவள் எந்த நிபந்தனையுடன் விடுவிப்பாள் என யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது மாயாவின் இடது கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் வந்தது. அது நந்தனுக்காக. அவள் ஜீயூஸ் படையின் தலைவியாக ஆன நொடியே அவள் அந்தப் படையினர் அனைவருக்கும் தாயாக மாறிப் போனாள். அவள் கையாலேயே அவள் மகவுகளில் ஒன்றான நந்தனைக் கொலை செய்ய வைத்ததை அவள் எதற்காகவும் மன்னிக்க மாட்டாள் என்பதை அந்தக் கண்ணீர் உணர்த்தியது.
மாயா மெல்ல நடந்து முன்னால் கேங்ஸ்டராக இருந்த மீகேயில் அருகே வந்தாள். மீகேயிலுடைய இடது நெற்றியில் இருந்து வியர்வை வழிந்து அவனது காதைக் கடந்து சொட்டியது. அவன் நடுங்கிக் கொண்டிருந்தான்.
“நீ தான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, எனக்கு பாம்பு பிடிக்க தெரியுமான்னு கேட்ட?” என்று கேட்டுவிட்டு மாயா தனது மெடுஸா உருவத்திற்கு மாறினாள். அவளது கூந்தல் முழுக்க சிறு சிறு பாம்புகளாக மாறி நெளிந்து கொண்டிருந்தது. அவளது கண்கள் முழு சிவப்பாக மாறியது. சட்டென மீகேயிலின் ஆண் குறியைப் பிடித்து அதனைக் கொத்தோடு பிடிங்கி வீசினாள். அது பறந்து சென்று எல்ஃபேன்டஸ்மா முன் பொத்தென்று விழுந்தது.
“எல்லோரையும் கொல்லுங்க” என்று மாயா கட்டளையிட்ட அடுத்த நொடி பிடிபட்ட கார்ட்டெல் ஆட்கள் அனைவரது கழுத்தும் அறுக்கப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டனர். மாயா எல்ஃபேன்டஸ்மாவை கொல்வதற்காக தனது வாளை உயர்த்திய நொடியில்,
“ஒரு நிமிஷம். அவன் நமக்கு உயிரோட வேணும்.” என்றபடி முத்துக்குமரன் அவளைத் தடுத்தார். அவரது கையில் ஹரீஷின் புகைப்படம் இருந்தது.