38. குக்கி
மோகனை உற்று நோக்கிக் கொண்டிருந்த இரு கண்களும் மெல்ல மெல்ல பதுங்கி வந்து திடீரென அவன் முன் பாய்ந்து வந்து நின்றது. மோகன் விறுக்கென எழுந்து நின்றான். பின்னர், தான் கவனித்தான் பொசு பொசுவென்ற முடியுடன் உருண்டை வடிவில் ஒரு நாய்க்குட்டி வந்து நின்றது. இரு உள்ளங்கைகளுக்குள் அடங்கி விடக் கூடிய அளவே இருந்த அந்த நாய்க்குட்டி, வெள்ளை நிறமும் பழுப்பு நிறமும் சரி விகிதத்தில் கலந்து இருந்தது. ஏதோவொரு இசைத் துணுக்கிற்கு அசைவது போல அந்த நாய்க்குட்டி தன் வாலை ஆட்டிக் கொண்டு நின்றது.
எதிரே இருப்பது எவ்வித ஆபத்தும் இல்லாத ஒன்று என்பதை உணர்ந்து கொண்ட மோகன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அந்த நாய்க்குட்டியை நோக்கி தனது உள்ளங்கையை நீட்டினான். அது அவன் விரல்களை முகர்ந்து பார்த்து விட்டு அவன் உள்ளங்கையை நக்கியது. பின்னர், அவன் தன்னிடமிருந்த மீனை அதற்கு கொடுத்தான். அந்த மீனை தின்று விட்டு அந்த நாய் வாலாட்டியது. அவன் அந்த நாய்க்குட்டிக்கு ‘குக்கி’ எனப் பெயரிட்டான்.
மெல்ல மெல்ல பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. மோகன் தான் வரைந்து வைத்திருந்த இலக்கில் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து கொண்டிருந்தான். குக்கி அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருந்தது. மோகன் பலமுறை முயன்றும் அவனால் அந்த இலக்கை சரியாக அடிக்க முடியவில்லை. மிகவும் சலிப்புத் தட்டிய போது, அந்த நாய்க் குட்டியோடு விளையாடத் தொடங்கினான். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து தூரமாக வீசினான். அந்த நாய்க்குட்டி அந்த குச்சியை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் அவனிடமே கொடுத்தது.
பின்பு மீண்டும் கொஞ்ச நேரம் இலக்கில் பயிற்சி எடுத்தான். சில நேரங்களில் சரியாக இலக்கை அடிக்கிறான். சில நேரங்களில் அடிக்க முடிவதில்லை. துல்லியம் அவனுக்கு இன்னும் கைக்கூடவில்லை.
முழுவதுமாக அங்கு இருள் சூழ்ந்து கொண்டது. மோகன் தன்னுடைய பயிற்சியை நிறுத்தி விட்டு, மதியம் பிடித்திருந்த மீனில் மிச்சம் வைத்திருந்ததை எடுத்து அவனும் உண்டு, அதில் கொஞ்சம் குக்கிக்கும் கொடுத்து விட்டு, ஒரு மரத்தின் வேரில் தலையை வைத்துக் கொண்டு, குக்கியை தனது நெஞ்சில் வைத்துக் கொண்டு, வானில் இருந்த நட்சத்திரங்களைப் பார்த்தபடி மல்லாக்க படுத்துக் கொண்டான்.
“எதுக்கு நம்மள இந்தக் காட்டுக்குள்ள அனுப்புனாங்க. ஏதோ பெருசா ஆபத்தை சமாளிக்கணும். உயிரைக் காப்பாத்திக்கணும்னு நிறையா சொன்னாங்க. ஆனா, இங்க ஒன்னுமே இல்லையே.” என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவன் அங்கே படுத்துக் கொண்டிருந்த போது அவனுக்கு அவனுடைய அத்தை நியாபகமும் மாயாவின் நியாபகமும் ஒன்றாக வந்தது.
“இந்தத் தேர்வில் எப்படியாவது வென்று இந்திர சேனையில் இணைய வேண்டும். அப்புறம் அப்பா அம்மாக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்கணும். அத்தை ஆசைப்படி இன்ஜினியரிங் முடிக்கணும். ஒரு நல்ல எம்.என்.சியில வேலைக்கு சேரணும். மாயாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவளை மாதிரியே குழந்தை பெத்துக்கணும்” என்றெல்லாம் எதிர்காலத்தைப் பற்றி ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்த அவன் மீது ஏதோ ஊர்வது போலத் தெரிந்தது. அவன் கால்களில் ஏதோ நெளிந்து கொண்டிருந்தது.
அதை அவன் கைகளில் பிடித்த போது வழவழப்பாக இருந்தது. துணுக்குற்ற மோகன் அதைக் கையில் பிடித்து வீசிவிட்டு எழுந்து நின்றான். அவன் மார்பின் மீது படுக்க வைத்திருந்த நாய்க்குட்டி பொத்தென்று தரையில் விழுந்து பின் எழுந்து நின்றது. அவனது மயிர் கூச்செறிந்திருந்தது. அவன் அவனுடைய வாழ்வின் மிகப்பெரிய பயத்தை முதன்முறையாக நேரில் சந்தித்தான். அவன் முன் ஒரு பெரிய கருநாகம் சுருண்ட படி படமெடுத்து நின்றது. அந்த நாகம் அவனுடைய தொடை அகலத்திற்கு மொந்தமாய் இருந்தது.
மோகன் தன் பயத்தையும் மீறி ஒரு முடிவெடுத்தான். திருச்செந்தாழை சொல்லிக் கொடுத்தது போல காற்றில் குறைவான மின்தடை கொண்ட துகள்களை இணைத்து அதன் இறுதிப் புள்ளியை அந்த கருநாகத்தின் தலையின் மீது வைத்து தன்னுடைய மின்னலைச் செலுத்தினான். ஆனால், அந்த மின்னல் அந்த நாகத்தின் தோலை மெல்ல உரசி, அதற்கும் பின்னால் இருந்த மரத்தில் சென்று பட்டது. மோகனுடைய தாக்குதல் கருநாகத்தின் மொத்தக் கோபத்தையும் கிளறி விட்டது. மோகன் மிக வேகமாக அருகிலிருந்த ஒரு மரக் கம்பை எடுத்து அந்தப் பாம்பை அடித்தான்.
ஆனால், அந்த அடி அதன் தலை மீது படாமல், உடல் மீது பட்டது. அந்த நாகம் மிகுந்த கோபத்தோடு சீறிக் கொண்டு மோகனை நோக்கி வந்தது. அந்த நாகம் இத்தனை நாட்களாக சேர்த்து வைத்திருந்த மொத்த விஷத்தையும் தன் மீது கொட்டப் போகிறது என்று மோகன் நினைத்துக் கொண்டிருந்த நொடியில்,
“பௌ பௌ” என்ற குறைத்த படி அந்த நாய்க்குட்டி அந்தக் கருநாகத்தின் வால் மீது குதித்தது. அந்தக் கருநாகம் நாய்க்குட்டியை நோக்கி சீறத் திரும்பிய அந்த ஒரு நொடி மோகனுக்குப் போதுமானதாக இருந்தது.
தன் கையிலிருந்த கம்பைத் திருப்பி கூரான முனையால் அந்த நாகத்தின் தலையில் ஓங்கிக் குத்தினான். அவன் குத்திய வேகத்தில் அந்த மரக்குச்சி பாம்பின் தலையைத் தாண்டி மண்ணில் புதைந்தது. மரணிக்கிற அந்த நேரத்தில் அந்தக் கருநாகம் தன் உடலை பின் பக்கமாக வளைத்து, மெல்ல எழுந்து, வால் நுனி மோகனைத் தொடுமளவிற்கு எழுந்து நின்றது. அப்போது தான், அவன் அந்தப் பாம்பின் நீளத்தை கண்டு கொண்டான். அந்த வாலின் நுனி மோகனைத் தொடாமல் அந்தப் பாம்பின் உடல் பொத்தென மண்ணில் விழுந்தது.
மோகன் அந்த நாகத்தின் உடலைப் பார்த்தவாறு வந்து தன் உயிரைக் காப்பாற்றிய அந்த நாய்க்குட்டியை தன் கைகளால் எடுத்துக் கொண்டு முத்தமிட்டான். நேரம் நள்ளிரவைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. அடுத்து என்ன ஆபத்து வருமெனத் தெரியவில்லை. அடிக்கும் போது அடித்து அந்தப் பாம்பை வீழ்த்திவிட்டான். ஆனால், அந்தப் பாம்பு தன் மீது ஊறியதை நினைத்துப் பார்த்த போது இன்னும் அவனுள் அட்ரினல் ஊற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.
அந்த நாய்க்குட்டியை கையில் வைத்துக் கொண்டு விடிவதற்காக காத்திருந்தான். அவனால், அதற்கு மேல் தூங்க முடியவில்லை. அந்த நாய்க்குட்டியை அவ்வப்போது தடவிக் கொடுத்து விட்டு முத்தம் கொஞ்சிக் கொண்டிருந்தான். இந்தக் காட்டை விட்டு தேர்வு முடிந்து வெளியேறுகிற போது இந்த நாய்க் குட்டியை தன்னுடன் அழைத்துச் சென்று வளர்க்க வேண்டுமன நினைத்தான். அத்தை நிச்சயமாக இந்த நாய்க்குட்டியை வளர்ப்பதற்கு தடை சொல்ல மாட்டாள். இவ்வளவு க்யூட் ஆன நாய்க்குட்டியை வைத்துக் கொள்ள வேண்டாமென சொல்வதற்கு யாருக்கும் மனது வராது. ஒருவேளை மாயாவுக்கும் நாய்க்குட்டிகள் பிடித்திருக்கலாம், இந்த நாய்க்குட்டியை வளர்ப்பதால் கூட மாயாவுக்கு தன் மீது காதல் வரலாம். “சே, எங்க உட்கார்ந்து என்ன யோசிச்சிட்டு இருக்கேன்?” என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். ஆனாலும், அவன் மனம் கட்டின்றி பாய்வதை அவனால் நிறுத்த முடியவில்லை. மாயாவை நினைத்துக் கொண்டு, அந்த நாயின் தலையில் ஒரு முத்தமிட்டான்.
நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. விடியல் வந்த பின்னர், நேரம் சற்று வேகமாய் செல்வது போல இருந்தது. தேர்வு நேரம் முடிய முடிய அடுத்து என்ன ஆபத்து வருமோ? என்று அவனது அனைத்துப் புலன்களும் விழிப்படைந்து கொண்டே இருந்தது. ஆனால், அவன் நினைத்தது போல அவனுக்கு எந்த ஆபத்தும் வரவில்லை.
தேர்வு முடிய இன்னும் இரண்டு நிமிடங்களே இருந்தது. “இந்த இரண்டு நிமிடங்களை மட்டும் தாண்டிவிட்டால், பின்னர் இந்தத் தேர்வில் வென்று விடலாம். அதன் பிறகு இந்திரசேனையில் இணைந்து தந்தைக்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிந்து விடலாம்” என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவன் சட்டைப் பையில் வைத்திருந்த செம்பருத்திப் பூவிலிருந்து திருச்செந்தாழையின் குரல் கேட்டது. அதே நேரத்தில் அவனுடைய கைக்கடிகாரத்தில் பச்சை எண்ணில் ஓடிக் கொண்டிருந்த நேரம் அப்படியே நின்றது.
“மோகன், இவ்வளவு நேரம் நீ இந்தக் காட்டுல தாக்குப் பிடிச்சதுக்கு என்னோட வாழ்த்துகள். இதுதான், இந்த தேர்வுல உன்னோட கடைசி ரவுண்டு. உனக்கு இன்னும் ரெண்டு நிமிஷம் டைம் இருக்கு. அதுக்குள்ள நீ உன் கையில இருக்குற நாய்க்குட்டியை கொல்லணும்.” என்றான் திருச்செந்தாழை.
திருச்செந்தாழை தன்னை என்ன செய்யச் சொல்கிறான் என்பதே மோகனுக்குப் புரியவில்லை. அதற்குள்ளாக அந்த செம்பருத்தி மலரில் இருந்து இன்னொரு கமெண்ட் வந்தது.
“இந்த டெஸ்ட்டை இதுக்கு மேல எப்படிக் கொண்டு போகணும்னு இனி நீ தான் முடிவு பண்ணனும். இந்த நாய்க்குட்டியைக் கொன்னுட்டு நீ இந்திரசேனையில பதவியேத்துக்கலாம். இல்லாட்டி, உன் வாட்சல இருக்குற சிகப்பு பட்டனை அழுத்தி, இந்த நாய்க் குட்டியோட நீ இந்த டெஸ்ட்ல இருந்து வெளியேறலாம். ஆனா, நீ ஒரு முறை இந்த டெஸ்ட்ல இருந்து வெளிய போயிட்டா அப்புறம் நீ எப்பவும் இந்திரசேனையில சேர முடியாது. முடிவு உன்னோட கையில தான் இருக்கு.
யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நௌ …” என்று திருச்செந்தாழை சொல்லி முடிக்கவும், மீண்டும் அந்தக் கைக்கடிகாரத்தில் நேரம் ஓடத் தொடங்கியது.
மோகன் தனது தலையில் கை வைத்து தரையில் மண்டியிட்டு அமர்ந்து அழத் தொடங்கினான்.