Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 39

39. இழந்தது

முடியும் என்பதற்காக அனைவராலும் இன்னொரு உயிரைக் கொன்றுவிட முடியாது. அதற்கு தன்னை மீறிய ஒரு தைரியம் தேவை. அதிலும் ஒரு மனிதனைக் கூட கொன்று விடலாம், அதற்கு மதம், அரசியல், இலட்சியம், கொள்கை என எதையாவது காரணம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், ஒரு நாய்க்குட்டியை எப்படிக் கொல்வது? 

மோகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு நாய்க்குட்டியை விட தன்னுடைய நோக்கங்கள் உயர்வானதா? உலகின் அத்தனை மர்மமான மரணங்களை கண்டறிவதை விடவும் ஒரு நாயைக் கொல்லாமல் காப்பாற்றுவது எவ்வளவு முக்கியமானது? என்றெல்லாம் அவனுள் எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது. ஆனால், அதே வேகத்தில் நேரமும் ஓடிக் கொண்டிருந்தது.

*

சிமுலேஷனுக்கு வெளியே இருந்த திருச்செந்தாழையும் மயில்வாகனமும் நாற்காலியில் எலக்ட்ரோட்கள் பொருத்தி வைக்கப்பட்டிருந்த மோகனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மோகனுடைய இடது கண்ணில் இருந்து ஒரு மெல்லிய கண்ணீர் பட்டென்று வழிந்தோடியது. அவர்களது கணினித் திரையில் பச்சை நிறப் பின்னணியில் ‘Candidate passed examination’ என்ற மெஸேஜ் வந்தது.

மோகன் மெல்லக் கண்களைத் திறந்தான். திருச்செந்தாழையும் மயில்வாகனனும் அவன் மீது பொருத்தப்பட்டிருந்த எலக்ட்ரோடுகளை எடுத்துக் கொண்டிருந்தனர். அவன் எழுந்து தன் கண்களை விரலால் துடைத்துக் கொண்டான். இரு கண்களும் செக்கச் சிவந்திருந்தன. திருச்செந்தாழை அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான். மயில்வாகனன் அவனிடம் ஒரு அட்டைப் பெட்டியைக் கொடுத்தான்.

மோகன் அதனைத் திறந்து பார்த்தான். அதில், ஒரு அழகிய கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு கருப்பு நிற முகமுடி இருந்தது.

“வா டேபிளுக்கு போலாம்” என்றான் மயில்வாகனன்.

மூவரும் அந்த டேபிளுக்கு சென்று அமர்ந்தனர். திருச்செந்தாழை அருகில் இருந்த ஒரு மரப்பேழையை திறந்து, அதிலிருந்து ஒரு கண்ணாடி புட்டியை எடுத்து வந்து அந்த மேஜையில் வைத்தான். அங்கிருந்த மூவர் முன்பும் ஆளுக்கொரு கண்ணாடிக் குவளைகள் இருந்தன.

அந்தக் கண்ணாடி புட்டியிலிருந்து மது போன்ற ஒரு திரவத்தை அனைவரது குவளையிலும் நிரப்பினான்.

“இது ஆயிரம் வருஷம் பழமையான சோம பானம். உன்னோட வெற்றியைக் கொண்டாடலாம். ச்சியர்ஸ்” என்று சொல்லிவிட்டு திருச்செந்தாழை அந்தக் கோப்பையை உயர்த்தினான். மயில்வாகனனும் தனது கோப்பையை உயர்த்தினான். மோகன் தனது கோப்பையை உயர்த்தியிருந்த போதிலும் அவனுள் இருந்த சோகம் இன்னும் மறையவில்லை என்பது அவனது குரலில் தெரிந்தது.

“ஏன் என்னை, அந்த நாய்க்குட்டியை கொல்ல வைச்சீங்க?” என்று கேட்டான் மோகன்.

“நீ இந்தக் கேள்வியை கேட்கலைன்னா தான் நான் ஆச்சரியப் பட்டுருப்பேன். மோகன். நாயைக் கொன்னதுக்கு கவலைப் படுற நீ, ஏன் அந்தப் பாம்பைக் கொன்னதுக்கு கவலைப் படலை? உண்மையை சொல்லனும்னா, நீ கொன்னது உண்மையான நாய்க்குட்டியை இல்லை. அது இன்னும் பத்திரமா தான் இருக்கு.”

அது உண்மையான நாய் இல்லை என்ற விஷயம் அவனுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவன் தன்னிடமிருந்த ஏதோவொன்றை நிரந்தரமாக தொலைத்து விட்டான்.

“ஒரு போர் அப்படித்தான் இயங்கும் மோகன். இதுல எதிரிகளை மட்டுமில்ல சமயத்துல நண்பர்களைக் கூட நீ கொல்ல வேண்டியது வரும். அதுக்கு உன்னை தயார் படுத்த தான் உன்னை அந்த நாய்க்குட்டியை கொல்ல சொன்னோம். 

ஆயுதங்கள் தான் போரோட வெற்றியைத் தீர்மானிக்குது. ஒரு படையோட ஆயுத பலம்ங்கிறது அதுல இருக்குற கத்தியோ துப்பாக்கிகளோ இல்லை. தலைமை சொன்னவுடனேயே தான் உயிரைக் கொடுக்கவும், இன்னொருத்தன் உயிரை எடுக்கவும் தயாரா இருக்குற வீரர்கள் தான். அது யார் உயிரா இருந்தாலும் சரி.

உன்கிட்ட சக்திகள் இருக்கலாம். திறமை இருக்கலாம். ஆனா, நீ ஒரு ஆயுதமா இல்லாட்டி உன்னைப் போருக்கு பயன்படுத்த முடியாது. உன்னை ஆயுதமா மாத்தத் தான் அந்த டெஸ்ட். நீ அதுல தோத்திருவேயோன்னு நினைச்சேன். நல்லவேளை நீ தேறிட்ட” என்றான் திருச்செந்தாழை.

“ஆனா, இதுல சந்தோசப்படுறதுக்கு ஒன்னுமில்லை சார். நான் என் மனசறிஞ்சு என் கையால ஒரு நாய்க்குட்டியை கொன்னுருக்கேன். இதை நான் எப்பவும் மறக்க முடியாது.” என்றான் மோகன்.

“யாராலையுமே அதை மறக்க முடியாது மோகன். ஒரு சில நேரத்துல கடினமான முடிவுகளை எடுக்கிறதுக்கு உறுதியான மனசு தேவை. அந்த உறுதி லேசுல வந்துராது. அதுக்காக நீ உன்னோட ஒரு பகுதியை வெட்டி வைக்கணும். இத்தனை நாள் நீ கத்துக்கிட்ட அறத்தை, இன்னொரு உயிரைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நீ வளர்த்துக்கிட்ட நல்ல எண்ணத்தையெல்லாம் அழிக்காம உன்னால அந்த உறுதியை அடைய முடியாது.

நான், திரு, நம்ம படையில இருக்குற மத்தவங்க. ஏன், நம்மோட எதிரிப் படையில இருக்கறவங்க கூட ஏதோ ஒரு இடத்துல இந்தக் கோட்டை தாண்டி வந்து தான், இப்போ இருக்குற நிலையில இருக்காங்க.

அதனால அழுகையை நிறுத்து போருக்குத் தயாராகு” என்றான் மயில்வாகனன்.

மோகனுக்கு அவர்கள் சொன்னதில் இருந்த உண்மை பட்டவர்த்தமாக தெரிந்தது. தான் இனி பழைய மோகன் இல்லை. அவன் முன் இரண்டு வாய்ப்புகள் இருப்பதை அவன் கண்டான். ஒன்று ஒரு கொலைகாரனாக வாழ்நாள் முழுக்க குற்றவுணர்வில் இருப்பது. இன்னொன்று, ஒரு வீரானாக நிமிர்ந்து நின்று தான் நம்பிய கொள்கைக்காக தன் கடமையை செய்வது.

அத்தனை வீரர்களும் செய்வது போல, குற்றவுணர்வை கொள்கை, கடமை என்றெல்லாம் சொல்லி நியாயப்படுத்துவதையே அவனும் தேர்ந்தெடுத்தான். தான் ஒரு இந்திர சேனையின் வீரன் என தனக்குத் தானே சொல்லிக் கொண்ட நொடியில் தன் முன் வைக்கப்பட்டிருந்த சோம பானத்தை எடுத்து, ஒரே மடக்காக குடித்தான். மெல்ல அவனது உடல் அந்த நாற்காலியோடு மேலெழுந்து மிதப்பது போல இருந்தது. அதில் எந்தவொரு மாயாஜாலமும் இல்லை. ஒரு உன்னத தேறலின் போதை மட்டுமே இருந்தது.

அவன் முன் ஒரு பீஃப் ஸ்டீக் பறிமாறப்பட்டது. அதை பசியாற உண்டு முடித்தான். வயிறு நிரம்பியதும், தான் செய்த அனைத்துமே சரி என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது.

உணவு உண்டு முடித்த பின்னர், மோகனை இந்திர சேனையில் இணைப்பதற்கான சடங்குகள் தொடங்கின. முதலில் அவனுக்கு அந்த இடத்திற்கு ஆக்சஸ் கொடுப்பதற்காக அவனுடைய கைரேகைகளும், கண் கருவிழி ஸ்கேனும் எடுக்கப்பட்டன. மயில்வாகனன் மோகனுடைய கையின் சுற்றளவை ஒரு மெஷரிங் டேப் வைத்து அளந்தான்.

பின்னர், அந்த அளவை எடுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தவன். கையில் ஒரு செம்புக் காப்புடன் திரும்பி வந்தான். 

திருச்செந்தாழையும் மயில் வாகனனும் தங்களுடைய கருப்பு முகமுடியை அணிந்து கொண்டு, மோகனை அந்த மேஜை நாற்காலியிலேயே அமர வைத்து அவனுக்கு அவனுடைய முக முடியை அணிவித்தனர். பின்னர், திருச்செந்தாழை மோகனுடைய வலது கையில் அந்தக் காப்பை அணிவித்தனர். 

இந்திரசேனையில் அவனுக்கென ஒரு அடையாள எண் தயாரானது. அவனுடைய அப்பாவின் தூதுவனாக இருந்த விஜி என்ற ஆலா பறவையே அவனுக்கும் தூதுவனாக அஸைன் செய்யப்பட்டது. அவனுக்கென ஒரு கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால், அந்தக் கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டவில்லை. பதிலாக அதன் சிறு முள்ளும் பெரு முள்ளும் ஓயாமல் ஊசலாடிக் கொண்டே இருந்தது.

“இந்த வாட்ச் ஒரு கம்யூனிக்கேஷன் டிவைஸ். இதுல வரது எல்லாமே மோர்ஸ் கோடுதான். இப்போதைக்கு இதுல எந்த மெசேஜும் வரல. ஆனா, கண்டிப்பா ஒருநாள். ஹைகாமண்ட்ல இருந்து மெஸேஜ் வரும். அதை நீ சரியா செஞ்சு முடிக்கணும். அதுக்குள்ள மோர்ஸ் கோடை கத்துக்கோ.” என்றான் மயில்வாகனன்.

“மோகன் இனிமேல் எங்களை சார் - னு கூப்பிடாத பேர் சொல்லியே கூப்பிடு. இங்க அது தான் முறை” என்றான் திருச்செந்தாழை.

மோகன் தலையை ஆட்டினான். அவ்வளவு தான், மோகன் இந்திர சேனையில் இணைந்த சடங்கு மிக இயல்பாக முடிந்தது.

“இன்னைக்குப் போய் ரெஸ்ட் எடு நாளையில இருந்து உனக்கு இங்க வேலை இருக்குது. காலையில் பத்து மணிக்கு இங்க வா. நீ எப்படி வரணும்னு விஜி மூலமா மெஸேஜ் தரோம்.” என்றான் திருச்செந்தாழை.

மோகன் அங்கிருந்து கிளம்பி மீண்டும் தனது கல்லூரிக்கே வந்தான். முக முடியை இந்திர சேனையிலேயே வைத்துவிட்டு வந்தான், தன்னுடைய செம்புக் காப்பையும், இந்திரசேனனயினர் கொடுத்த வாட்ச்சையும் தனது காலேஜ் பேக்கிற்குள் வைத்தான். 

*

அவனுக்கு கிமுஷேஷனில் 24 மணி நேரம் போயிருந்தாலும் உண்மையில் அவனுக்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரமே ஆகி இருந்தது. கிட்டத்தட்ட அறை நாளில் அவன் இந்திர சேனையில் இணைந்து விட்டான்.

மதிய உணவிடைவேளையில் தனது நண்பர்களைக் கண்டான்.

“மச்சி, காலைல இருந்து எங்கடா போன?” என்றான் டெஸ்லா.

“ ஒரு சின்ன வேலை டா அதான் வீட்ல இருந்தேன்.” என்றான் மோகன்.

“இப்படிச் சொல்லாம கொல்லாம லீவ் போடாதடா. ரிகர்ஸல் போயிட்டு இருக்கல்ல?” என்றான் மகேந்திரன்.

“மச்சி அவனை விடுடா. இன்னைக்கு மாயாகிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டியா?” என்றான் டெஸ்லா.

“ ஏன்டா, திடீர்னு அப்படிக் கேட்குற?”

“காலையில இருந்து உன்னையும் காணோம். மாயாவும் லீவு. அதான் நீ ப்ரபோஸ் பண்ணி, அது ஓகே ஆகி எங்கேயாவது அவுட்டிங் போயிட்டிங்களோன்னு நினைச்சேன்.” என்று சிரித்தபடி சொன்னான் டெஸ்லா.

“ஓ, மாயா இன்னைக்கு லீவா?”

“என்னது லீவா வா நீ தானடா அவளோட பாடிகார்டு, உனக்கே தெரியாதா அவ லீவன்னு?”

“மச்சான் ஒன்னு சொல்றேன். கேட்குறியா?”

“சொல்றா”

“இனிமேல் என்னையும் மாயாவையும் ஒன்னா வைச்சுப் பேசாத. இனிமேல் அது செட் ஆகாது.” என்று நிதானமாக ஆனால் உறுதியாக சொன்னான் மோகன்.

டெஸ்லா மோகனுக்குள் என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பி நின்றான்.