Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 37

37. பயிற்சி

மோகனுக்கு சிமுலேஷனில் தேர்வுகள் தொடங்கியது. திருச்செந்தாழையும் மோகனும் ஒரு அடர்ந்த காட்டின் நடுவே நின்றனர்.

“மோகன் உன்னோட டெஸ்ட் சிம்ப்பிள் தான். இந்தக் காட்டுக்குள்ள நீ இருபத்தி நாலு மணி நேரம் உயிரோட இருக்கணும். 

இந்தா இதைக் கையில கட்டிக்கோ” என்றபடி மோகனிடம் ஒரு கைக்கடிகாரத்தை நீட்டினான்.

மோகன் அந்தக் கைகடிகாரத்தை வாங்கி அணிந்தவுடன், “மோகன், இந்தக் கடிகாரம், இந்த சிமுலேஷன்ல நீ இருக்கிற நேரத்தைக் காட்டும். நான் சிமுலேஷன்ல இருந்து வெளியில போனதும் இதுல டைம் ஸ்டார்ட் ஆகும். ஒரு நாள் முடிஞ்சதும் இந்தக் கடிகாரத்துல பச்சைக் கலர்ல லைட் எரியும். அப்படி பச்சைக் கலர்ல எரிஞ்சுட்டா நீ இந்த டெஸ்ட்ல தேறிட்டேன்னு அர்த்தம், சிமுலேஷன்ல இருந்து வெளிய வந்ததும் நீ இந்திர சேனையில ஒருத்தன்.

உன்னால ஒருவேளை இங்க தாக்குப் பிடிக்க முடியாட்டி, இந்த சிவப்பு பட்டனை நீ ஒருமுறை அழுத்துனா போதும், நீ சிமுலேஷன்ல இருந்து வெளியில வந்து நீ உன்னோட வீட்ல இருப்ப. ஆனா, அதுக்கு அப்புறம் உனக்கும் இந்திரசேனைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. நீ எப்பவும் இங்க வர முடியாது. புரிஞ்சுதா?” என்றான் திருச்செந்தாழை.

மோகன் “ஆமாம்” என்பது போல தலையை ஆட்டினான்.

திருச்செந்தாழை தொடர்ந்தான், “நீ முதல்ல இருந்த சிமுலேஷன் மாதிரி தான் இதுவும் இங்க இருக்கிறது எல்லாமே உனக்கு உண்மை மாதிரி தான் தெரியும். நீ கையில கட்டியிருக்கிற வாட்ச் ஸ்டார்ட் ஆகுற வரைக்கும் தான் நீ சிமுலேஷன்ல இருக்கன்னு உனக்குத் தெரியும் . ஒருமுறை வாட்ச் ஸ்டார்ட் ஆகிட்டா இது ஒரு சிமுலேஷன்ங்கிறத மறந்துருவ, இது ஒரு உண்மையான உலகம் மாதிரி தான் உனக்குத் தோணும்.

அதனால, இங்க நீ இறந்துட்டா நிஜ உலகத்துலயும் நீ இறந்திருவ. உன்னோட உடம்புக்கு எதுவும் ஆகாது. ஆனா, உன்னோட மனசு நீ இறந்துட்டேன்னு நம்பிருச்சுனா, அப்புறம் உன்னோட மூளை செயல் இழந்திரும். அப்புறம் நீ வெஜிடெபில் ஸ்டேட்டுக்கு போயிருவ. 

இங்க உனக்கு நேரத்துக்கு பசிக்கும், நீ செய்ற வேலையைப் பொறுத்து உனக்கு உடம்பு வலிக்கும், உனக்கு தூக்கம் வரும். 

ரொம்ப கவனமா இந்த டெஸ்டை முடிச்சுட்டு வா. ஆல் தி பெஸ்ட்” என்று சொன்னபடி திருச்செந்தாழை அங்கிருந்து கிளம்ப முற்பட்டான்.

“சார், எனக்கொரு சந்தேகம்” என்றான் மோகன்.

“சொல்லு.” என்றான் திருச்செந்தாழை.

“என்னால ஏன் அன்னைக்கு மிஸ்டர் மயில்வாகனனை சரியா அடிக்க முடியலை. நான் அன்னைக்கு அந்த மயிலை அட்டாக் பண்ணனும்னு நினைக்கலை. ஆனா, அது ஏன் அன்னைக்கு அப்படி ஆச்சுன்னு?”

“கரெக்ட், இந்த மாதிரி ஒரு பரீட்சைக்கு வரும் போது தன்னோட பலம் என்ன பலவீனம் என்னன்னு ஒருத்தன் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். உன்னோட பலம், உன்னால மின்னலை உருவாக்க முடியும். ஆனா, பலவீனம் அதை எப்படி ரொம்ப சரியான இலக்குல அடிக்கிறதுன்னு உனக்குத் தெரியல.”

“ஆமாம்” என்றான் மோகன்.

“நீ மின்னல் விழுகிறத பாத்திருக்கியா? பொதுவா மின்னல் நேரா விழுகாது ஒரு மாதிரி கோணலா தான் விழுகும். அது ஏன்னு யோசிச்சிருக்கியா?”

“இதுக்கு முன்னாடி கவனிக்கணும்னு கூட தோணுனது இல்லை.”

“சரி, நான் சொல்றேன். ஒரு சிம்ப்பிளான ஃபிஸிக்ஸ் தான். மின்னல் எப்பவுமே பாஸிட்டிவ் சார்ஜ் பகுதில இருந்து நெகட்டிவ் சார்ஜ் பகுதிக்கு ட்ரான்ஸ்பர் ஆகும் போது, எந்தப் பாதையில குறைவான மின் தடை இருக்குதோ. அதுல தான் பயணம் செய்யும்.

ஒரு மின்னல் வானத்தில இருந்து பூமிக்கு வரும் போது காற்றுத் துகள்கள் வழியா தான் வர முடியும். ஆனால், காற்றுல நிறையா வகையான வாயுக்கள், தூசு, புகை எல்லாம் கலந்து இருக்கு. அது எங்கேயும் சமமா இருக்காது. அதனால தான் ஒரு மின்னல் அதுக்கு எளிமையான வழியில பயணம் பண்ணி வரும் போது நமக்கு கோணல் மானலா தெரியுது.

உனக்கு மின்னலை உருவாக்குற திறமை உன்னோட பிறப்புலேயே இருக்கலாம். ஆனா, அந்த மின்னலை நீ விரும்புற இடத்துல அடிக்க நீ தான் கத்துக்கணும்.” என்றான் திருச்செந்தாழை.

“அதை எப்படி பண்றதுன்னு நீங்க எனக்கு சொல்லித் தர முடியுமா?”

“கண்டிப்பா சொல்லித் தரேன். நீ உன்னோட மின்னலை உருவாக்குறதுக்கு முன்னாடி காற்றுல எங்க மின்தடை அதிகமாக இருக்கு எங்க மின்தடை குறைவா இருக்குதுன்னு கவனிக்கனும். மின்தடை கம்மியா இருக்குற இடங்கள் வழியா ஒவ்வொரு புள்ளியா உருவாக்கனும். உன்னோட இலக்குல கடைசி புள்ளியை வைக்கணும். அப்புறமா, நீ உருவாக்குன மின்னலை அந்தப் புள்ளிகள் வழியா செலுத்தனும். அப்படி பண்ணுனா நீ உருவாக்குற மின்னல், நேரா போனாலும் இல்லை கோணயா போனாலும் உன்னால உன்னோட இலக்கை கண்டிப்பா அடிச்சிற முடியும்.” 

“இவ்ளோ வேலையையும் எப்படி உடனே பண்றது? இதையெல்லாம் நான் மனசுக்குள்ள புள்ளி வைச்சு கோலம் போடுறதுக்குள்ள, எதிரி என்னை கிழிச்சு வீசிட்டு போயிற மாட்டான்னா?” என்றான் மோகன்.

திருச்செந்தாழை மெல்ல புன்னகைத்தபடி, “உனக்கு பைக் ஓட்டத் தெரியுமா மோகன்?”

“தெரியும்”

“பைக் ஓட்டணும்னா மொதல்ல ஸ்டார்ட் பண்ணனும், கியர் போடணும், கிளட்ச்சை மெல்ல விட்டு வண்டிய மூவ் பண்ணனும், அப்புறம் கீறை மாத்தி ஆக்ஸிலேட்டரை கொடுத்தா தான வண்டி ஓடும். இத்தனையும் நீ மொதல் தடவை செய்யும் போது பார்த்து பார்த்து கவனமா செஞ்சிருப்ப. ஆனா, இப்ப வண்டி ஓட்டும் போது உன்னால அனிச்சையாவே இதையெல்லாம் செய்ய முடியுதுல்ல. அது போலத் தான். கொஞ்ச நாள் நீ பயிற்சி பண்ணப் பண்ண இந்த வித்தையையும் நீ அனிச்சையாவே செய்யத் தொடங்கிறுவ. 

நான் சொன்ன ஒவ்வொரு ஸ்டெப்ஸையும் நீ மெதுவா பண்ணி பழகு. அந்த வித்தை உனக்கு கைக்கூடும்.”

என்று சொல்லி விட்டு, அருகே இருந்த ஒரு செம்பருத்தி செடியைப் பார்த்தான். உடனே, அங்கிருந்த செம்பருத்தி மலரொன்று செடியிலிருந்து பிடிங்கிக் கொண்டு திருச்செந்தாழையின் கைக்கு வந்தது. அந்த செம்பருத்தி மலரை மோகனிடம் கொடுத்து விட்டு, 

“உன் அப்பா எனக்கு சொன்னது. அதை நான் உனக்கு சொல்றேன். எந்த விஷயத்தை கத்துக்கும் போதும் மெதுவா கத்துக்க. உன்னால ஒரு விஷயத்தை மெதுவா செய்ய முடியாட்டி, உன்னால அந்த விஷயத்தை வேகமாவும் செய்ய முடியாது.

நான் வரேன். பார்த்துக்க” என்று சொல்லி விட்டு திருச்செந்தழை கிளம்பினான். 

மோகன் திருச்செந்தாழை கிளம்பிய திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். திருச்செந்தாழை அந்த சிமுலேஷன் அறையை விட்டு வெளியேறிய பிறகு மோகனிடமிருந்த கைக்கடிகாரம் தொடங்கியது. அதுவொரு சிமுலேஷன் என்ற நினைவு அவன் மனதில் இருந்து நீங்கியது. இந்தக் காட்டில் எப்படியாவது இந்த ஒரு நாளை தாக்குப் பிடிக்க வேண்டும் என்ற முடிவோடு அவன் திருச்செந்தாழை கொடுத்த செம்பருத்தி மலரை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கானகத்தைப் பார்த்து நின்றான்.

பின் மெல்ல அந்தக் காட்டிற்குள் நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்த சில நொடிகள் கழித்து திரும்பிப் பார்த்தான். அவன் வந்த வழி மறைந்திருந்தது. சுற்றிலும் பச்சை நிற மரங்கள் மட்டுமே இருந்தது. அந்த இடத்தை காடு என்று சொல்வதற்கு பதிலாக மரங்களால் ஆன கடல் என்றே சொல்லாம். உள்ளே சென்ற மோகன் அந்தக் கடலில் கரைந்து போனான்.

அந்த அளவிற்கு ஒரு அமைதியை அவன் இதற்கு முன் தன் வாழ்வில் அறிந்ததே இல்லை. காற்றில் மூங்கில் மரங்களின் இலைகள் மெல்ல அசைகிற சப்தம் ஒரு இசை போலக் கேட்டது. குளிர்ந்த காற்று அவன் மீது வீசியது.

கீழே கிடந்த ஒரு சிறு கல்லை எடுத்து அங்கிருந்த ஒரு மரத்தில் ஒரு பெரிய வட்டம் அதனுள் ஒரு வட்டம் பின்னர் அதனுள் ஒரு சிறிய வட்டமென வரைந்தான். அந்த மரத்திலிருந்து சரியாக பத்து காலடிகள் எடுத்து வைத்து நடந்து சென்று தரையில் ஒரு வட்டத்தை வரைந்து கொண்டான். பின்னர் அந்த வட்டத்தில் நின்று கொண்டு மரத்தில் இருந்த இலக்கை நோக்கி மின்னலை செலுத்தினான். அந்த மின்னல் மரத்திலேயே படாமல் பக்கவாட்டில் வேறெங்கோ சென்று விழுந்தது.

மீண்டும் முயற்சித்தான் ஆனால், இம்முறை திருச்செந்தாழை சொன்னது போல காற்றின் துகள்களை கவனித்து அதில் மின்தடை குறைவாக உள்ள ஒவ்வொரு துகள்களிலும் ஒவ்வொரு புள்ளிகளை உருவாக்கி இறுதிப் புள்ளியை தனது இலக்கின் மீது வைத்து மின்னலை செலுத்தினான். ஆனாலும், அந்த மின்னல் இலக்கை அடையவில்லை. அடுத்த புள்ளியை கணிக்கிற போது முதலில் கணித்த புள்ளி மறைந்து விடுகிறது. 

அவன் மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தான். இலக்கிற்கு அருகே அவன் நெருங்கி விட்டதைப் போன்று தோன்றுகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அதை அடைய முடியவில்லை. எந்த இடத்தில் தவறுகிறோம்? என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், முயற்சி செய்து கொண்டே இருப்போம். மிக நிச்சயமாக தன்னால் இலக்கை அடைய முடியுமென முயற்சித்துக் கொண்டே இருந்தான்.

அவனுடைய இலக்கிற்கு இடது புறம் விழுகிறது. வலதுபுறம் விழுகிறது. சுற்றிலும் விழுகிறது. ஆனால், மின்னல் அவன் நினைத்த இலக்கில் மட்டும் விழவில்லை.

அப்போது திடீரென அவன் உருவாக்கிய மின்னல் இலக்கின் மீது விழுந்தது ஆனால், அதுவொரு விபத்து. அது அவனே அறியாமல் விழுந்தது. அதனால், அதனை ஒரு பொருட்டாக எண்ண முடியாது. மோகன் தளர்ந்து போகாமல் தன்னுடைய பயிற்சியை தொடர்ந்தான்.

சுற்றிலும் மரங்கள் இருந்ததால் வெயிலேறிப் போனது தெரியவில்லை. ஆனால், பசித்தது. இங்கே எங்காவது சாப்பிடக் கிடைக்குமா என்று காட்டிற்குள் தேடிப் போனான். அவனால் அங்கொரு பழ மரத்தையோ செடியையோ கண்டறிய முடியவில்லை. அருகில் எங்கேயோ ஓடை ஓடுகிற சப்தம் கேட்டது. அவன் அந்த ஓடையருகே சென்றான். அது ஆழம் குறைவானதொரு ஓடை. அங்கே மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன.

முதலில் அங்கே கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்து அதன் முனையைக் கூர்மையாக்கி, ஒரு மீனைக் குறிவைத்துக் குத்தினான். அந்த மீன் தப்பிவிட்டது. அவனுடைய குறி அந்த லட்சணத்தில் இருந்தது. ஒரு சில முயற்சிகளுக்கு பின்னர், இது தனக்கு சரிபட்டு வராது என்பதை உணர்ந்து கொண்டான். பின்னர், தன்னுடைய சட்டையைக் கழட்டி அதை விரித்து மீனைப் பிடிக்க முயன்றான். இம்முறை அவனால், ஒரு சில மீன்களைப் பிடிக்க முடிந்தது.

பிடித்த மீன்களை எடுத்துக் கொண்டு ஒரு மரத்தின் அடியில் வந்தமர்ந்தான். முகத்தில் சிறு புன்னகையுடன் பிடிபட்ட மீன்களை சுட அங்கிருந்த சில சுள்ளிகளைப் பொறுக்கி அதனைக் குவித்து வைத்து தனது சக்தியின் மூலம் அதனைப் பற்ற வைக்க நினைத்தான். வழக்கம் போல அவனது குறி தவறி வேறெங்கோ இருந்த ஒரு சுள்ளி பற்றிக் கொண்டது. பின்னர் அந்த சுள்ளியை எடுத்து தனது குவியலைப் பற்ற வைத்து, தான் பிடித்த மீன்களை அதில் சுட்டு அருகே இருந்த ஒரு மர வேரில் சாய்ந்து அமர்ந்த படி, சாப்பிடத் தொடங்கினான். அந்த மீனின் சுவை அவனுக்கு ஒரு இளைப்பாறுதலைக் கொடுத்தது. 

அப்போது அவனை இரு கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன.