14. எனெர்ஜி ஸ்க்ரீனிங்
திருச்செந்தாழை அந்த மேஜையின் திரையை மாற்றி அதில் ஹரீஷ் காணாமல் போயிருந்த இடத்தின் மேப்பைத் திறந்தான்.
"இங்கப் பாரு மயிலு இங்க தான் என் கிளையண்ட் ஓட பையன் காணாம போயிருக்கான். அவன் ஒரு பொறுக்கி. ஆனா, காணாமப் போன அன்னிக்கு அவனால மத்த யாருக்கும் எதுவும் கெட்டது நடக்கலை. அதே மாதிரி அவனை சாதரண மனுஷங்க யாரும் கொல்லலை, அவனைக் கடத்தலை"
"சரி, ஆனா இந்தக் கேஸ்க்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டான் மயில்வாகனன்.
"அந்தப் பையன் காணாமப் போயி ரெண்டு மணி நேரம் கழிச்சு அங்கவொரு மின்னல் வந்துருக்கு"
"மின்னல் வரதெல்லாம் சாதரண விஷயம் தான?"
"மத்த மாசத்துல மின்னல் விழுந்தா அது சாதாரண விஷயம். ஆனா, இப்போ விழுந்திருக்குனா, இதுல ஏதோ சிக்கல் இருக்குதுன்னு எனக்கு தோணுது."
"என்ன சிக்கல்?"
"இந்த மின்னல் ஒருவேளை இந்திர சேனையை சேர்ந்த யாராவது செஞ்ச வேலையா இருக்கும் இல்லாட்டி நம்மோட எதிரி செஞ்ச வேலையா இருக்கும்னு தோணுது."
"சரி, அதை எப்படி நாம இப்போ கண்டுபிடிக்கிறது."
"நம்ம கிட்ட இருக்கிற டேட்டா பேஸ்ஸை வைச்சு. நம்ம படையில யார் யாருக்கெல்லாம் மின்னல், இடி தொடர்பான சக்தி இருக்குதுன்னு லிஸ்ட் எடுக்கனும். அதுக்கப்புறம் ஒவ்வொருத்தரையா விசாரிக்கணும்" என்றான் திருச்செந்தாழை.
"இப்படி ஏதோ ஒரு சாதரண மனுஷன் காணாமல் போனதுக்கு நம்ம படையை சேர்ந்தவங்களையெல்லாம் விசாரிச்சா. அப்புறம் நாம அவங்கள சந்தேகப்படுற மாதிரி ஆயிரும்.
சந்தேகம் ரெண்டு பக்கம் கூர்மையான ஒரு கத்தி நாம நம்மோட படையை நம்பலைன்னா, நம்ம படையும் நம்மல நம்பாது. நம்பிக்கை இல்லாத ஒரு படையை வைச்சிட்டு ஜெயிக்க முடியாது" என்றான் மயில்வாகனன்.
"இல்லை மயிலு , இங்கப் பிரச்சனை அந்தப் பொறுக்கியை ஏதோ பண்ணுனது இல்லை. அதை நம்ம கிட்ட சொல்லாம பண்ணுனது.
இதை முறைப்படி நம்ம படையை சேர்ந்தவங்க நம்ம கிட்ட சொல்லியிருக்கணும். சொல்லியிருந்தா இதை நாம கவர் அப் பண்ணியிருப்போம். அதை சொல்லாததுனால தான் இப்போ இந்தப் பிரச்சனை பெருசாப் போயிருக்குது. இந்தக் கேஸ் என்கிட்ட வந்ததால சரி. இது ஒரு வேளை வெளியில தெரிஞ்சிருந்தா நம்ம படையைப் பத்தின மொத்த ரகசியமும் வெளியப் போயிருக்கும். அது எல்லோருக்குமே பெரிய பிரச்சனை தான.
அது மட்டுமில்லாம ஆள் ஆளுக்கு தலைமைக்கு தெரியாம அவங்கவுங்க சக்தியை பயன்படுத்துறது. தலைமைக்கு ஆபத்து. இப்படியே விட்டா படைக்குள்ள சீக்கிரமாவே ஒரு பெரிய கலகம் வந்திடும்.
நம்பிக்கை இல்லாத படை மட்டுமில்ல கட்டுப்பாடு இல்லாத படையை வைச்சும் ஜெயிக்க முடியாது." என்றான் திருச்செந்தாழை.
"சரி அவங்கள கண்டுபிடிச்சு என்ன பண்ணப் போற?"
"ஒரு வேளை இதை நம்ம ஆளுக செஞ்சிருந்தா, முதல்ல அவங்ககிட்ட ஹரீஷுக்கு என்ன நடந்ததுன்னு விசாரிக்கனும். அப்புறமா. அவங்களை பர்ஜ் பண்ணிறாலாம்னு யோசிக்கிறேன்" என்றான்.
மயில்வாகனனுக்கு இந்த முடிவில் விருப்பம் இல்லை. ஆனால், திருச்செந்தாழையின் கருத்தில் நியாயம் இருப்பதால், இதனை எப்படி மறுப்பது என யோசித்துக் கொண்டிருந்தான்.
"நீ சொல்றது சரிதான் திரு ஆனா, நாம இப்ப இருக்கிற நிலையில ஒரே ஒரு மெம்பரைக் கூட இழக்க முடியாது."
"சரி மயிலு முதல்ல விசாரிப்போம் அப்புறமா முடிவு பண்ணுவோம். ஆனா, இது எல்லாமே நம்மளோட சேனையைச் சேர்ந்தவங்க பண்ணுனா மட்டும்தான். ஆனா இதை ஒரு வேளை நம்மோட எதிரிக பண்ணியிருந்தா?"
"எனக்கு என்னமோ அதுக்கு வாய்ப்பு இல்லைன்னு தோணுது திரு. நாமெல்லாம் எந்தக் காரணத்துக்காக இப்படி அடையாளத்தை மறைச்சுக்கிட்டு வாழுறமோ அந்தக் காரணத்துக்காக தான் அவங்களும் அவங்களோட அடையாளத்தை மறைச்சுகிட்டு வாழுறாங்க. அவங்க கடைசியா வெளிய வந்து கிட்டத்தட்ட பதினைஞ்சு வருசமாச்சு. அதனால இதை அவங்க பண்ணியிருப்பாங்கனு என்னால நம்ப முடியல. இது ஏதோ நம்ம ஆளுக வேலை போல தான் தெரியுது. ஆனா, அதுக்காக அவங்கள பர்ஜ் பண்ண வேணாம்னு தோணுது." என்றான் மயிலு.
"இதை நம்ம ஆளுக செஞ்சிருப்பாங்களா இல்லை எதிரிக செஞ்சிருப்பாங்கலான்னு. இப்பக் கண்டுபிடிச்சிடலாம்"
என்று சொல்லிவிட்டு தன் முன் இருந்த மேஜையைத் தொட்டான். பின் அங்கு ஏற்கனவே இருந்த வரைபடத்தை சிறிதாக்கி விட்டு, இந்திரசேனையினரின் பெயர்ப் பட்டியலைத் திறந்தான். அதைப் பார்ப்பதற்கு ஒரு எக்ஸல் ஷீட் போல இருந்தது. பின்னர் அந்த எக்ஸல் ஷீட்டில் நிபுணத்துவம் என்று இருந்த காலம்ல் இடி மற்றும் மின்னல் என்று ஃபில்டர் செய்தான். பின்னர், நகரம் என்று போடப்பட்டிருந்த காலம்ல் அந்த நகரத்தின் பெயரை ஃபில்டர் செய்யப் போனான். அப்போது மயில் வாகனன் அவனைத் தடுத்தான்.
"ஒரு வேளை சம்பவம் நடந்த அன்னைக்கு வேற ஊர்ல இருந்து இங்க வந்து யாராவது பண்ணிட்டுப் போயிருந்தா என்ன பண்றது? அதனால ஊரை ஃபில்டர் பண்ண வேண்டாம்." என சொன்னான்.
"நீ, சொல்றதும் சரிதான் மயிலு. நாம மொத்த தமிழ்நாட்டுலையும் தேடிப் பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு அந்த எக்ஸல் ஷீட்டில் இருந்து ஒரு பட்டியலை எடுத்தான்.
அதில் கிட்டத்தட்ட 81 உறுப்பினர்கள் மின்னல் மற்றும் இடி தொடர்பான சக்திகளைக் கொண்டிருந்தனர்.
அந்த 81 உறுப்பினர்களின் பெயர்களையும் எடுத்து அவர்கள் சம்பவம் நடந்த அன்று ஹரீஷ் காணாமல் போன இடத்தில் யார் யார் அங்கு இருந்தார்கள் எனத் தேடினான். ஆனால், அந்த நேரத்தில் அந்த இடத்தில் லிஸ்டில் இருந்த எந்தவொரு உறுப்பினரும் இல்லை.
திருச்செந்தாழையின் முகம் இன்னும் தீவிரமடைந்தது.
"ஒரு வேளை இதை நம்ம ஆட்கள் செய்யலைன்னா, கண்டிப்பா இது எதிரிகளோட வேலையாத் தான் இருக்கும்." என்றான் திருச்செந்தாழை.
மயில்வாகனன் அவன் சொல்வதை மிகக் கவனமாக கேட்டு விட்டு,
"சரி, அதை இப்போ எப்படி கண்டுபிடிக்கப் போற?" என்றான்.
"அந்த நாளோட எனர்ஜி ஸ்கிரீனிங் பண்ணப் போறேன்" என்றான் திருச்செந்தாழை.
இந்திரசேனை என்கிற ரகசிய அமைப்பு பல்லாயிரம் வருடங்களாக தொடர்ந்து இயங்கி வருகிற ஒரு அமைப்பு. இத்தனை வருடங்களில் பலர் தங்களுக்குள்ளாகவே முரண்பட்டுக் கொண்டு அந்த அமைப்பில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். சிலர் தங்களது சக்திகளை வேண்டாமென்று அனைத்தையும் விட்டு விட்டு மிகச் சாதாரண மனிதர்களாக வாழ்ந்து இறந்திருக்கின்றனர். திருச்செந்தாழை போன்று பல இடைநிலை அதிகாரிகளால் சிலர் கிளீன் அப் செய்யப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் பிறகும் அந்த அமைப்பு இத்தனை வருடங்களாக அதே கட்டுக்கோப்புடன் இருக்கிறது என்றால் அதன் ஒவ்வொரு உறுப்பினர்களும் அதன் தலைமையும் தான் காரணம். அந்த அமைப்பின் லட்சியத்தின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையும்தான் காரணம்.
அந்த அமைப்பில் இருந்த பலர் இயல்பு வாழ்க்கையில் பல முக்கியமான பதவிகளில் இருந்துள்ளனர். இஸ்ரோ முதல் மாநாகர குப்பைக் கிடங்கு வரை, மிக உயரிய மருத்துவமனை முதல் நகரின் ஓரத்தில் இருக்கிற சுடுகாடு வரை அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஏதேனும் வேலையில் இருப்பார்கள்.
இஸ்ரோ 1962 ம் ஆண்டு தகவல் தொலைத் தொடர்புக்காக டெலஸ்டர் 1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அந்த செயற்கைக் கோளை ஏவுகிற அணியில் இந்திரசேனையை சேர்ந்த ராமசாமி என்கிற ஒரு உறுப்பினரும் இருந்தார்.
"இனி வரும் நாட்களில் அனைவரது பாக்கெட்களிலும் சிறு தந்திக் கருவியைப் போன்ற ஒரு கருவி இருக்கும். அதன் மூலம், இந்திரசேனையினரைப் போலவே சாதாரண மனிதர்களும் எங்கிருந்தாலும் ஒருவர் இன்னொருவரை மிகச் சுலபமாக தொடர்பு கொள்ள முடியும்" என்று சொன்ன போது சேனையின் விதியை மீறி அமைப்பில் இருந்த பலரும் சிரித்து விட்டனர். மாயங்களால் நிகழக் கூடிய ஒரு விஷயத்தை மனிதனின் அறிவால் செய்ய முடியாது என்று அவர்கள் நம்பினர்.
பூமிக்கு மேலே பூமியை வேவு பார்க்க இன்னொரு கருவி வரப்போகிறது. அதன் பலன்களை இந்திரசேனை பெற வேண்டும் என அவர் தான் முன்மொழிந்தார். பின்னர் செயற்கைக் கோளின் ஒவ்வொரு சாத்தியங்களையும் அவர் சொல்ல சொல்ல கடைசியாக அமைப்பினரும் அதனை ஏற்றுக் கொண்டனர்.
அடுத்த சில வருடங்களில் இந்திர சேனையை சேர்ந்த பலரும் உலகின் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் வேலைக்குச் சேர்ந்து, அந்தந்த நிலையங்களில் இருந்து ஏவப்படுகிற செயற்கைக் கோள்களை இந்திர சேனைக்காக பயன்படுத்தத் தொடங்கினர். சேனையைச் சார்ந்த ஒரு விஞ்ஞானிக்கு இன்னொரு விஞ்ஞானியை அடையாளம் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால், அவர்கள் அனைவரையும் இணைக்கின்ற புள்ளியாக சேனையின் அன்றைய தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் செயல்பட்டனர். ஒருவரை ஒருவரை பார்த்துக் கொள்ளாமல். ஆனால், ஒரு அசாத்திய ஒத்திசைவுடன் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் பல இன்று இந்திரசேனைக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
அந்த செயற்கைக் கோள்கள் பூமியில் மனிதர்களிடம் இருந்து வெளிப்படுகிற ஆற்றல்களைக் கண்காணித்து அந்தத் தகவல்களை தலைமை இடத்திற்கு அனுப்பி விடும்.
பொதுவாகவே சாதரண மனிதர்களை விடவும் இது போன்ற சக்திகளைக் கொண்டவர்களிடம் இருந்து அதிகப்படியான ஆற்றல் வெளியேறும். அந்தத் தகவல்கள் தன்னிச்சையாக தலைமை அலுவலகத்தின் மையக் கணினியில் சேமிக்கப்படும்.
இந்தத் தகவல்களை ஆராய்வதே எனர்ஜி ஸ்கிரீனிங். இதன் மூலம் அதீத சக்தி வாய்ந்தவர்களில் எங்கே யாருடைய ஆற்றல் வெளிப்பட்டாலும் உடனே கண்டறிந்து விடலாம். அவசர காலங்களில் அவர்களை சுலபமாக கண்டுபிடிக்க முடியும். அவர்கள் மீதான விசாரணைக்கு இதை ஒரு சாட்சியாக பயன்படுத்த முடியும். மிக முக்கியமாக இந்திரசேனையை சேர்ந்த யாராவது காணாமல் போயிருந்தால் அவர்களை மிக விரைவாக கண்டறிய முடியும்.
மேஜையின் மேற்பரப்பில் இருந்த பிற திரைகளை மூடிவிட்டு மீண்டும் அந் நகரத்தின் வரைபடத்தைத் திறந்தான். பின்னர், ஹரீஷ் காணாமல் போயிருந்த அந்த நாளின் நள்ளிரவில் இருந்து காலை ஆறு மணி வரை அந் நகரில் வெளிப்பட்ட ஆற்றலைப் பார்வையிட எனர்ஜி ஸ்கிரீனிங் பொத்தானைத் தொட்டான்.
உடனே வரைபடத்தில் நகரின் பல பகுதிகளில் சிவப்பு புள்ளிகள் வெளிப்பட்டன. அந்தப் புள்ளிகள் மிகச் சிறியதாக இருந்தன. ஏதேனும் சிறிதளவு ஆற்றல் வெளிப்பட்டிருந்தால் கூட அந்த வரைபடத்தில் தெரிந்து விடும். அதிக ஆற்றலைக் கொண்டவர்கள் தூங்கும் போது கூட சிறிதளவு ஆற்றலை அவர்களது உடல் வெளியேற்றும் அதனாலயே அந்த வரைபடத்தில் அங்கங்கு சில சிவப்பு புள்ளிகள் தோன்றின. ஆனால், ஹரீஷ் காணாமல் போயிருந்த வினோத்தின் வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு பெரும் சிவப்பு புள்ளி மின்னிக் கொண்டிருந்தது.
திருச்செந்தாழையும் மயில்வாகனனும் அந்த புள்ளியை வியப்புடன் பார்த்தனர். பின் மயில் வாகனன் அந்தப் புள்ளியைத் தொட்டு அதனைப் பெரிது படுத்தினான். அது ஒரு வீட்டைக் காட்டியது. அந்த வீடு யாருடையது யார் அங்கே இருக்கிறார்கள் என்று தேடினான். அந்த வீட்டின் முகவரியில்
'கலைவாணி மன நல மருத்துவர், என்று இருந்தது.