Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 13

13. இந்திர சேனை

திருச்செந்தாழையும் மயில்வாகனனும் பேசிக் கொண்டே அந்த பாக்ஸ் பகுதியை விட்டு கீழே இறங்கினர்.

"என்ன திரு சொல்ற ஏற்கனவே இருக்கிற பிரச்சனையவே சமாளிக்க முடியாம திணறிட்டு இருக்கோம். இதுல இன்னொரு பிரச்சனையா"

"இப்ப வந்திருக்கிறது உண்மையிலேயே பெரிய பிரச்சனை தானான்னு முதல்ல எனக்கே தெரியல மயிலு. ஆனாலும் பிரச்சனையா இருக்க வாய்ப்பு இருக்குன்னு தான் சொல்றேன். அதை உறுதி படுத்தத் தான் நான் இப்போ இங்க அவசரமா வந்தேன்.

இருவரும் பேசிக் கொண்டே தரைத் தளத்திற்கு வந்தனர். மயில் வாகனன் பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருந்த பழைய அனலாக் மாடல் மீட்டர் பாக்ஸைத் திறந்தான். மீட்டர் பாக்ஸின் பின்புறம் ஒரு லிவர் இருந்தது. அவன் அந்த லிவரைப் பிடித்து இழுத்தான். மீட்டர் மாட்டியிருந்த பலகை முன்னுக்கு வந்தது. அந்தப் பலகையின் பின்புறம் ஒரு பயோ மெட்ரிக் சிஸ்டம் இருந்தது. அதில் மயில்வாகனன் தனது விரலை வைத்ததும் தரைக்குள்ளிருந்து ஒரு லிஃப்ட் மேலேறி வந்தது.

திருச்செந்தாழையும் மயில் வாகனனும் அந்த லிஃப்ட்டில் ஏறிக் கொண்டனர். மயில் வாகனன் மீண்டுமொருமுறை பொத்தானை அழுத்தியதும் அந்த லிஃப்ட் வேக வேகமாக கீழே இறங்கியது. ஆயிரம் அடிக்கு சென்ற பிறகு லிஃப்ட் நின்றது.

மயில்வாகனனும் திருச்செந்தாழையும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தனர். ஒரு மாய ஒளி உமிழும் மிதக்கும் கோளம் அவர்கள் முன் தோன்றி தனது லேசர் கண்களால் இருவரையும் ஸ்கேன் செய்தது. அடையாளத்தை உறுதி செய்த பின்னர், "வெல்கம் சீஃப்" என்று சொல்லி வரவேற்றது. அவர்கள் நடந்து உள்ளே சென்றனர்.

ஒரு பெரிய பானையில் மாய திரவங்கள் பொங்கி எழுந்து அதிலிருந்து மாயப் புகைகள் வெளியேறிக் கொண்டிருந்தன. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நீள நீள கண்ணாடிக் குழாய்களில் மரகதப் பச்சை நிற திரவம் சுருள் சுருளாக சுற்றிக் கொண்டிருந்தது. ஒரு சிறு மீன் தொட்டியில் ஒரு கட்டை விரல் அளவே உயரமுள்ள லில்லிப்புட் மனிதன் அடைக்கப்பட்டிருந்தான். அவன் ஏதோ மோசமான வசவுச் சொல்லைப் பயன்படுத்தி திட்டுகிறான் என்று கண்ணாடி வழியாகப் பார்க்கின்ற போதே தெரிகிறது. ஆனால் கண்ணாடி இறுக்கமாக மூடியிருந்ததால் அவன் வசவுகள் எதுவும் வெளியே கேட்கவில்லை. அந்த இடம் முழுக்க ஏதோ வினோத இயந்திரங்களின் 'ஹ்ம்ம்ம்...' என்ற ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது.

அந்த இடம் தான் தமிழகத்தில் உள்ள இந்திர சேனையினரின் ரகசிய தலைமை இடம். இந்திரசேனையினர் கூடிப் பேசவும், திட்டமிடவும், அவர்கள் தொடர்பான பிரச்சினைகளை விசாரிக்கவும், நகரைக் கண்காணிக்கவும் அந்த இடம் பயன்படுகிறது. அதுவும் இந்திர சேனையை சேர்ந்த எல்லோரும் அந்த இடத்தை உடனடியாக அணுக முடியாது. சொல்லப் போனால், அந்த ரகசிய இடம் அந்தத் தியேட்டருக்கு கீழே தான் இருக்கிறதென்பது கூட யாருக்கும் தெரியாது. திருச்செந்தாழை மயில் வாகனன் உட்பட ஒரு சில இந்திர சேனையின் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தான் அந்த இடம் தெரியும். அவர்களுக்கு மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் வழியாக வரக் கூடிய அந்த வழி தெரியும். பிற சேனை உறுப்பினர்களை சந்திக்க வேண்டுமென ஹை காமன்ட் நினைத்தால் மட்டும் தான் அவர்கள் அங்கு வர முடியும்.

ஏதேனும் சக இந்திர சேனை உறுப்பினர்களை விசாரிக்க வேண்டுமென்றாலும், அவர்களது உதவி தேவையென்றாலும் அவர்களுக்கு யாராலும் ஹேக் செய்ய முடியாத ஒரு தொலை தொடர்பு முறை வழியாக அழை வரும். அதன் பின்னர், ஒரு விஷேச முறையில் அவர்கள் இந்த இடத்தை அடைவார்கள். அந்த விஷேச முறையைப் பற்றி பின்னர் வரும் அத்தியாயங்களில் நாம் பார்க்கலாம்.

இது இல்லாமல் இன்னொரு வழி இருக்கிறது. திருச்செந்தாழையாலோ, மயில்வாகனனாலோ அல்லது அந்தப் பதவியில் உள்ள யாராவதாலோ கொல்லப்பட்டால். கொல்லப்பட்டவனின் உடலில் ஏதேனும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருந்தால் அவர்களே சுலபமாக அந்த இடத்திற்கு தங்களது புஷ்பக விமானத்தில் கொண்டு வந்து விடுவார்கள். உயிருடன் இருக்கிற மற்ற எவருக்கும் அங்கு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை.

இருவரும் உள்ளே சென்று ஒரு மேஜையில் அமர்ந்தனர். அமர்ந்தவுடன் அந்த மேஜை ஒளிரத் தொடங்கியது. அதன் மேற்பரப்பில் வெள்ளை ஒளி தோன்றியது. மயில்வாகனனும் திருச்செந்தாழையும் அவரவர் மேஜை டிராயரைத் திறந்தனர். அதில் இருவருக்கும் அவரவர்க்கான முகமுடிகள் இருந்தன. அந்த முகமுடிகளை இருவரும் அணிந்து கொண்டு பேசத் தொடங்கினர்.

இந்திரசேனையினர் பல்லாயிரம் வருடங்களாக சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பாதுகாப்பிற்காகவும் சேனையின் குறிக்கோள் வெற்றி அடைவதற்காகவும் யாரும் தங்களது அடையாளத்தையும் சக்திகளையும் வெளியே காட்டக் கூடாது என்பது விதி. இந்திர சேனையில் இருக்கின்ற யாருக்குமே தன்னுடைய சக சேனையினனின் மனித அடையாளம் தெரியக்கூடாது என்பது விதி. ஏனென்றால் சேனை என்பது ஆயுதங்களோ, பாசறையோ அல்லது தலைமையிடமோ அல்ல. வீரர்கள் தான் சேனை. வீரர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் முதலில் அவர்களது அடையாளத்தைக் காக்க வேண்டும். அதனால், எந்த சேனையினர் தலைமையிடம் அழைக்கப்பட்டாலும் அவர்கள் தங்களது முகமுடியை அணிந்தே வர வேண்டும். அந்த முகமுடியை அணிந்தவுடன் அவர்களது சொந்தக் குரல் மறைந்து அந்த முகமுடிக்கு உண்டான செயற்கைக் குரல் தான் வெளியே கேட்கும். அந்த மேஜையில் அமர்ந்த பிறகு சேனையின் செயல்பாட்டைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் தனிப்பட எந்தவொரு விஷயத்தையும் பேசிக்கொள்ள அவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மனித வாழ்வில் ஒருவன் மிகச் சாதரண குமாஸ்தாவாக இருக்கலாம். இன்னொருவர் அந்தக் குமாஸ்தாவை தினமும் டார்ச்சர் செய்கிற ஒரு மேலாளராக இருக்கலாம். ஆனால், இந்த இடத்தில் இருவரும் சமம். இருவரும் அந்த மேஜையில் சரிக்கு சமமாக அமர்ந்து சேனை சார்ந்த விஷயங்களை வியூகங்களை விவாதிக்கலாம். அந்தக் குமாஸ்தா இங்கு அந்த மேலாளரின் கருத்தை முற்றிலும் நிராகரிக்கலாம். ஆனால், அது எல்லாம் அந்த மேஜையில் மட்டும் தான். அதன் பின்பு யாருக்கும் யாருடைய அடையாளமும் தெரியப்போவதில்லை. அதனால் வழக்கம் போல காலை விடிந்தவுடன் அந்த மேலாளர் தனது குமாஸ்தாவை டார்ச்சர் செய்யலாம். மொத்தத்தில் மனித வாழ்வில் அவர்களுக்கு தனி அடையாளம் சேனையில் தனி அடையாளம். ஒரு அடையாளத்திற்கும் இன்னொரு அடையாளத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

இந்த விஷயத்திலும் மயில்வாகனனுக்கும் திருச்செந்தாழைக்கும் விலக்கு இருந்தது. ஏனென்றால், அவர்கள் இடைநிலைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததனால் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள பிற சேனையினரின் அடையாளத்தைத் தெரிந்து கொள்வது அவசியமாக இருந்தது. மேலும் அவர்களது எதிரிகளிடம் ஒரு வேளை இவர்கள் சிக்கிக் கொண்டால், உடனடியாக இவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் சக்தி இவர்களுக்கு இருந்தது. இது தலைமைப் பொறுப்பிற்கு வரும் போதே அவர்களுக்கு வழங்கப்படுகிற பல சலுகைகளில் ஒன்று. அவர்கள் நினைத்த மாத்திரத்தில் எவ்வித முயற்சியும் இன்றி எந்த வலியும் இன்றி அவர்களது உயிர் அவர்களிடம் இருந்து பிரிந்து விடும். இத்தனை சிக்கல்கள் இருப்பதனால் தான் இந்தப் பொறுப்பிற்கு தனக்கென எந்தவொரு மானுட பந்தமும் இல்லாத ஒருவரையே எப்போதும் சேனை தேர்ந்தெடுக்கும்.

இருவருக்குமே இன்னொருவரின் மனித அடையாளம் தெரியும் என்கிற போதும் மரபை மதிக்க வேண்டுமென்பதனால், முகமுடியை போட்டுக் கொண்டே விவாதிக்கத் தொடங்கினர்.

ஒளிர்ந்த மேஜையின் மேற்பரப்பை விரலால் தொட்டு அதனை இயக்கத் தொடங்கினான்.

"மயில் நான் இங்க முக்கியமா வந்தது ரெண்டு விஷயத்தைப் பத்தி பேச" என்றான் திருச்செந்தாழை.

"ம்... சொல்லு" என்றான் மயில்வாகனன்

திருச்செந்தாழை பேனா போன்று இருந்தக் கருவியை எடுத்து அந்த மேஜை மீது 1) என்று குறித்துக் கொண்டு நிதி திரட்டல் என்று எழுதினான். 2) என்று குறித்து அதில் வேறொன்றை எழுதினான். பின் 1) என்று குறிக்கப்பட்ட இடத்தை தொட்டான். அது இன்னொரு திரையைத் திறந்தது. அதில் நிதி திரட்டல் தொடர்பாக அவர்கள் இதற்கு முன் பேசிய விஷயங்கள் இன்னும் எவ்வளவு தொகை தேவை அந்த நிதியைத் திரட்ட இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது போன்ற விவரங்கள் இருந்தன.

அந்தத் திரையில் காட்டப்பட்ட விவரங்களில் இருந்து தேவையான ஐநூறு கோடியில் நானூறு கோடியை அவர்கள் திரட்டி விட்டார்கள் என்றும். இன்னும் நூறு கோடி ரூபாய் அவர்களுக்கு தேவையென்பதும் தெரிந்தது. அதுவும் அவர்களுக்கு இன்னும் இருபது நாட்கள் தான் மிச்சம் இருக்கிறது எனவும் தெரிந்தது.

"மயிலு நமக்கிருக்கிற டைம்ல இன்னும் நூறு கோடியை சேர்க்க
நமக்கு இன்னும் இருபது நாள் தான் இருக்கு. அதுக்கு நேத்து வரைக்கும் நமக்கு இருந்த ஒரே வாய்ப்பு சுனில் மட்டும் தான். ஆனா, அதோட சம்மரி அன்ட் சேலஞ்சஸ் பத்தி மறுபடியும் சொல்லு. நான் லிஸ்ட் பண்றேன். என்றான் திருச்செந்தாழை.

"அவன் கொடுக்கிற பணத்துக்குப் பதிலா அந்தச் சுனில் பய அவனுக்கும் புஷ்பக விமானம் வேணும்னு கேட்டான். இன்னும் அதுக்கு ஹைக்கமாண்ட் கிட்ட இருந்து அப்ரூவல் வரலை. அப்ரூவல் வந்து மாயன் டீம் புஷ்பக விமானம் செஞ்சு கொடுத்து, அதுக்குள்ள சுனிலுக்கு விமானத்தை ஆப்ரேட் பண்ண டிரெயினிங் கொடுத்து, அவனுக்கு லைசென்ஸ் வாங்கி, அப்புறம் அவங்கிட்ட ஹேன்ட் ஓவர் பண்ணி அவன் கிட்டயிருந்து பணத்தை வாங்குறது. இதையெல்லாம் இருபது நாளுல செஞ்சு முடிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் திரு" என்றான் மயில் வாகனன்.

மயில்வாகனன் சொன்ன அனைத்தையும் குறித்துக் கொண்ட திருச்செந்தாழை அவனை நோக்கி,

" இந்தப் பிரச்சனையெல்லாம் இல்லாமலேயே நாம இன்னொரு வழியிலே நூறு கோடி சேர்க்க ஒரு வாய்ப்பு வந்திருக்கு" என்றான் திருச்செந்தாழை.

மயில்வாகனன் மகிழ்ச்சியாக, "அது என்ன வாய்ப்பு?" என்றான்.

"ஒரே ஒரு கேஸ் அதை சால்வ் பண்ணுனா போதும். ஒரு பணக்காரன் பெத்துப் போட்ட பையனைக் கண்டு பிடிச்சா மட்டும் போதும்."

"அப்புறம் என்ன நம்ம பிரச்சனை தான் முடிஞ்சுதே. உனக்கு தான் கேஸை சால்வ் பண்றதெல்லாம் அசால்ட்டான வேலையாச்சே"

"நானும் முதல்ல நம்ம பிரச்சனையெல்லாம் முடிஞ்சதுன்னு தான் நினைச்சேன். ஆனா, அந்தக் கேஸை இன்வெஸ்ட்டிகேட் பண்ணும் போது தான். எனக்கு இன்னொரு சந்தேகம் வந்துச்சு. ஒரு வேளை நான் நினைக்கிறது சரியா இருந்தா? நமக்கு முன்னாடியே நம்ம எதிரி போரைத் தொடங்கிட்டான்னு தோணுது" என்றான் திருச்செந்தாழை.

மயில்வாகனன் அதிர்ச்சியுடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.