Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 15

15. ஒத்திகை


ஆன் டியூட்டி வாங்கி விட்டு கல்லூரியில் திரிகிற சுகம் லீவ் போட்டு விட்டு வீட்டில் வெப் ஸீரிஸ் பார்த்தால் கூட கிடைக்காது.

டெஸ்லா ஒரு இரண்டு நாட்களுக்கு டிராமாவில் எவ்வித பங்கும் கொள்ளாமல் வெறுமனே வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்தான்.

"டிராமாவுல யார் யார் இருக்காங்களோ அவங்களுக்கு மட்டும் தான் ஓ.டி" என மகேந்திரன் மிக உறுதியாக சொன்ன பிறகு டெஸ்லாவும் வேறு வழியின்றி நாடகத்திற்கு உதவ முன் வந்தான். நாடகத்தில் நடிக்கப் பல பேர் இருந்தாலும் பேக் ஸ்டேஜை ஒருங்கிணைக்க ஆட்கள் தேவை டெஸ்லா அதில் ஒருவனாக ஆனான்.

கீதா லேடி மேக்டெஃப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டாள். மாயா லேடி மேக்பெத் வேடத்தை ஏற்றாள். மிகக் கடினமான மிகச் சவாலான ஒரு வேடம். பொதுவாக மேடையில் இரண்டு வகையான பர்ஃபார்மெர்கள் உண்டு. ஒன்று தரையில் இருக்கிற அனைவரும் தன்னை ரசிக்க வேண்டும். தான் மேடையில் தோன்றுகிற போது அனைவரும் கை தட்டவேண்டும். ஆர்ப்பரிக்க வேண்டும் என நினைப்பவர்கள்.

கல்லூரி ஆண்டு விழாக்களில் எல்லாம் மேடையை கவனிப்பவர்கள் மிக சொர்ப்பம். முதல்வர், தாளாளர், சிறப்பு விருந்தினர்கள், சில பேராசிரியர்கள், சில மாணவர்கள் இவர்கள் மட்டும் தான் மேடையைக் கவனிப்பார்கள். உண்மையானக் கொண்டாட்டம் என்பது அரங்கத்தின் இறுதி வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்கு தான். மேடையில் யார் என்ன செய்தால் என்னவென்று பின்னாடி நின்று ஆடிக் கொண்டிருப்பது தான் பெரும்பான்மை. அவர்களையெல்லாம் ஆடாமல் நிறுத்தி கைதட்ட வைக்க வேண்டுமானால் அதற்கேற்ற உழைப்பைப் போட வேண்டும். முதல் வகையினர் அதற்கான உழைப்பைப் போட தயாராகவே இருப்பார்கள். கீதா, மகேந்திரன் போன்றோர் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், மாயா இன்னொரு வகையை சேர்ந்தவள். இந்த வகையைச் சேர்ந்தவர்கள். நேற்று நடித்ததை விட இன்று நன்றாக நடிக்க வேண்டும் என நினைப்பவர்கள். அவர்களுக்கு அவர்களே தான் போட்டி. வேறு யாருடனும் தன்னை ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள். மேடையில் நிற்கிற அந்த நொடி அந்தப் பாத்திரமாக மட்டுமே வாழ்பவர்கள். மாயா அந்த வகை நடிகை. அவளுக்கு இயல்பாகவே அது நிகழ்ந்தது. ஆக்ஷன் சொன்ன அடுத்த நொடி அவள் உடனே அந்தக் கதை உலகிற்குள் நுழைந்தாள். முதல் காட்சியில் ஒரு கொடூரமான பேராசைப் பிடித்த சூழ்ச்சிக்காரியாக, அடுத்த காட்சியிலே கொலை செய்ய வேண்டிய அரசனைப் பார்த்து தன் தந்தை என நினைத்து தயங்கும் பெண்ணாக, கணவன் உளறி மாட்டிக் கொள்ளப்போகும்போது அதனைத் தடுக்கிற சமயோசித புத்திக்காரியாக ஒவ்வொரு காட்சியிலும் மாயா லேடி மேக்பெத்தாக மிளிரினாள். அவளைப் பார்க்கையில் அனைவருக்குமே இது மாயா தானா அல்லது வேறு யாராவதா என்றே வியப்பு வருமளவிற்கு அவள் நடித்துக்கொண்டிருந்தாள்.

இந்த இரு வகையிலும் சேராமல் மூன்றாவது வகையினர் சிலர் உண்டு அது தான் மோகன் வகையினர். அவன் எதற்கு மேடையில் இருக்கிறான் என யாருக்கும் தெரியவில்லை. அவனுக்கு சுத்தமாக நடிப்பே வரவில்லை. ஒரு வரி வசனத்தைக் கூட அவனால் சரியாக பேச முடியவில்லை. ஏதோ ஒன்றை சொத சொதவெனப் பேசிக்கொண்டு, எனக்கு 32 பற்களும் உண்டு என்பதைப் போல எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

மாயாவைப் பார்க்கத்தான், அவளுடன் பேசத்தான், அவன் இந்த ரிகர்சல்களுக்கே வருகிறான் என்று மகேந்திரனுக்குத் தெரியும் இருந்த போதிலும் டிராமாவுக்கு என வந்த பிறகு கொஞ்சமேனும் அதனை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டுமென அவன் எதிர்பார்த்தான். ஆனால், மோகனால் அது முடியவில்லை. மாயா லேடி மேக்பெத் என்று முடிவான பின்னர் மோகனை மேக்பெத்தாக நடிக்க வைக்கலாம் என மகேந்திரன் நினைத்தான். ஆனால், மோகனின் நடிப்பைப் பார்த்த பின்னர் அவனை "ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிரு" என்று துரத்தி விடவே நினைத்தான். ஆனால், அவன் வாங்கிக் கொடுத்த கிரில் சிக்கன் மீது செய்திருந்த சத்தியத்தினால், அவனை மேடையில் சும்மா ஒரு தூணாகவாவது நிற்க வைத்து விடலாம் என மகேந்திரன் யோசித்தான். மோகனுக்கு மேக்பெத் பாத்திரத்தை தர முடியாததால் மகேந்திரனே அந்த வேடத்தை ஏற்றான்.

காட்சிகளையும் வசனங்களையும் எழுதி அதனை ஆட்டோ மொபைல் அருணிடம் கொடுத்து விட்டு, அவன் நடிக்காத காட்சிகளை அவன் இயக்கினான். மேடையில் அவன் தோன்ற வேண்டிய காட்சிகளை இயக்கும் பொறுப்பை அவன் அருணிடம் கொடுத்திருந்தான்.

ஏற்கனவே, இவர்கள் ரோமியோ ஜூலியட் கதையை டிராமாவாகப் போட்டு தன்னை ரோமியோவாக நடிக்க வைக்கவில்லை என சோகத்தில் இருந்த மோகனுக்கு மேற்கொண்டு சோகத்தில் ஆழ்த்தும் படி மகேந்திரன் அவனுக்கு சூனியக் காரி வேசத்தைக் கொடுத்தான்.

அந்த நாடகத்தில் அனைத்து சூனியக்காரிகளுக்கும் ஏதேனும் ஒரு சிறிய ஒருவரி வசனமாவது இருக்கும். ஆனால் மோகன் நடிக்கிற இந்த சூனியக்காரி வேசத்திற்கு ஒரு வசனம் கூட இல்லாமல் பார்த்துக் கொண்டான். மூஞ்சியில் வெள்ளைப் பவுடரைப் பூசிக்கொண்டு கூரிய தொப்பியையும் கருப்பு அங்கியையும் போட்டுக் கொண்டு ஒட்ட வைக்கப்பட்ட கூரிய நகங்களுடன், மேடையில் அங்கும் இங்கும் ஹு...ஹு.... என்று சொன்னபடி அங்கும் இங்கும் உலவச் சொன்னான். மோகனும் அந்த ரிகர்சலில் அனைவரும் நீண்ட நீண்ட வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கையில் அவன் ஹு....ஹு.... என அந்த அறையில் உலவிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த அனைவரும் மாயா உட்பட விழுந்து விழுந்து சிரித்தனர்.

ஆனால், மோகன் பிற எதனைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் இறையருகே நிற்கும் பக்தன் போல மாயா அருகில் நின்று கொண்டிருந்தான்.

காட்சிகள் நடக்க நடக்க பின்னணியில் திரைச்சீலைக்குப் பதிலாக ஒரு ப்ரொஜக்ட்டரை வைத்து அதில் பின்னணிக் காட்சிகளை மாற்றிக் கொண்டிருந்தனர். மதியம் வரை வகுப்புகள் மதியத்திற்கு மேலே நாடக ஒத்திகை என மொத்தக் குழுவும் பரபரப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இவையனைத்தையும் யாருக்கும் தெரியாமல் அந்த அறையின் மூலையில் இருந்த ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு சுருள் சுருளாக சுருண்ட மயிர்க் கற்றைகளும் நீண்ட வெள்ளைத் தாடியும் இருந்தது. கையில் ஒரு பெரிய வையின் கோப்பையை வைத்திருந்தார். வெள்ளை அங்கி ஒன்றை அணிந்திருந்தார். அவரது அங்கி அவரது மேல் உடலை மறைக்கவில்லை. ஆனால் அது அவருக்கு தேவையும் இல்லாமல் இருந்தது. நல்ல கலை நயம் மிக்க கல் தச்சன் ஒருவன் அவனது உளியைக் கொண்டு செதுக்கியது போன்ற ஒரு உடல். வயிறு படிக்கட்டுகள் போல இருந்தது. மார்புகள் இரண்டும் நன்கு அகலமாக பாலம் பாலமாக வெடித்து இருந்தது. அவர் தன் கோப்பையில் இருந்த வையினைக் குடித்துக் கொண்டு அந்த ரிகர்சல்லைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் குடிக்க குடிக்க அந்தக் கோப்பையில் வையின் ஊறிக் கொண்டே இருந்தது.

மாயா திடீரென அவரைப் பார்த்தாள். அவளுக்கு ஒரே நேரத்தில் பயமும் சந்தோசமும் ஏற்பட்டது. வந்திருப்பது டையேனைசஸ், வையின் மற்றும் நாடகங்களின் கடவுள். மாயா எப்போதெல்லாம் நன்றாக நடிக்கிறாளோ அப்போதெல்லாம் அவளைப் பாராட்ட டையோனைசஸ் அந்த அரங்கில் தோன்றுவார். இப்போது இங்கு வந்திருக்கிறார் என்றால் மாயா அவளுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் உலகிற்குள் சென்று விட்டாள் என்று பொருள். அந்தப் பாத்திரத்தின் நியாயங்கள் அந்தப் பாத்திரத்தின் அநியாயங்கள் அதன் சிந்தனை என அனைத்தையும் தான் அணிந்து கொண்டு தான் லேடி மேக்பெத் ஆக மாறி விட்டிருந்ததை நினைத்து அவளுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

அதுவும் இந்த டையேனைசஸ் பிற யாருடைய கண்களுக்கும் தெரியமாட்டார். எனவே, அவர் வந்திருப்பதால் தனக்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை என்பது அவளுக்குத் தெரியும். இது போக டையோனைசஸ்க்கு நாடகங்கள் என்றால் மிகப் பிடிக்கும். அவரே அங்கிருந்து மொத்த ஒத்திகையையும் பார்த்து அவர்களின் ஒத்திகைப் பற்றிய அவருடைய கருத்துக்களை குறிப்புகளாக எடுத்துக் கொடுப்பார். இதெல்லாம் மகிழ்ச்சியான விஷயம் தான் என்றாலும் ஒரு பிரச்சனை இருந்தது.

டையோனைசஸ் சிறு வயதில் இருந்தே மாயாவின் நண்பர். தன் தந்தைக்கு அடுத்த இடத்தில் அவள் அவரை வைத்திருக்கிறாள். அவரிடம் மாயாவால் எதையும் மறைக்க முடியாது. அப்படியே மறைத்தாலும் அதனை அவள் சொல்லாமலேயே டையோனைசஸால் கண்டுபிடிக்க முடியும். அவரிடம் எப்படியாவது மோகனைப் பற்றிய விஷயங்களை மறைத்து விட வேண்டுமென அவள் எண்ணினாள்.

கண்களாலேயே, "ஒரு நிமிஷம் இரு" என்பது போல டையோனைஸ்க்கு சைகை காட்டி விட்டு, நாடக குழுவினரிடம் "நான் இப்போ வந்தறேன்". என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

"நானும் கூட வரேன்" என்று உடன் கிளம்பிய கீதாவிடம்,

"இல்லை நான் பாத்துக்கிறேன் இப்போ வந்துறேன்." என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அந்த அறையை விட்டு வெளியேறிய பின், மாயா டையோனைசைஸை நோக்கி,

"டையோனைசைஸ் நீங்க என்னைத் தவிர வேற யார் கண்ணுக்கும் தெரிய மாட்டீங்க. ஆனா, நான் தனியா பேசிட்டு வந்தா எல்லோரும் என்னை பைத்தியம்னு நினைப்பாங்க. அதனால ஒரு மனுச உருவத்துக்கு மாறிக்கிறீங்களா?" என்றாள்.

"அதனால என்ன மாறிட்டாப் போச்சு" என்று சொன்னபடி அதே தலை முடியுடன், அதே உருவத்துடன் அந்த வெள்ளை நிற அங்கிக்குப் பதிலாக ஒரு நீல நிற டீ சர்ட்டும் ஒரு ஜீன்ஸ் பேண்ட்டும் கேஷுவல் ஷுவும் அணிந்து உண்மையாகவே ஆளே மாறி இருந்தார். ஆனால், அவர் கையில் வைத்திருந்த வையின் கோப்பை மட்டும் மாறவில்லை.

"டையோனைசைஸ், இதை மறந்துட்டீங்க" என்று அவரது வையின் கோப்பையைக் காண்பித்துக் காட்டினாள்.

"சாரி மாயா நான் மறந்துட்டேன். ஆனா, இப்போ இங்க என்ன டிரெண்ட்டுன்னு எனக்கு தெரியும். இங்க பாரு" என்று சொல்லி விட்டு அவர் தனது வையின் கோப்பையைப் பார்த்தார். அது உடனே ஒரு டின் பீர் குப்பியாக மாறியது.

"டையோனைசைஸ் இது காலேஜ். இங்க இந்த மாதிரி பீர் டின்னோட சுத்தக் கூடாது. ஒழுங்கா அதை வாட்டர் பாட்டிலா மாத்துங்க." என்றாள்.

"சரி" என்று சொல்லிவிட்டு, அவரும் தன் கையிலிருந்த பீர் டின்னை தண்ணீரைப் போல மாற்றிவிட்டு" இப்போ என்ன செய்யனும்? என்று மாயாவிடம் கேட்டார்.

"வாங்க நாம கேண்டீன்ல போய்ப் பேசலாம்" என்று சொன்னபடி அவரை அழைத்துக் கொண்டு மாயா கேண்டீனுக்குச் சென்றாள்.

அப்படி போகும் வழியில் பலரும் பலரும், மாயாவையும் டையோனைசைஸையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு சென்றனர்.

அதை உணர்ந்த மாயா, "நான் உங்களை என்னோட மாமான்னு சொல்லிக்கவா?" என்று கேட்டாள்.

"கண்டிப்பா, நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க, யார் கிட்ட அறிமுகப் படுத்துனாலும் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை" என்றார் டையோனைசைஸ்.

"உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா, என்னோட மாமான்னு சொல்லிட்டு பேரைக் கேட்டா டையேனைசைஸ்னு சொன்னா, எல்லோரும் வித்தியாசமா பார்ப்பாங்க, அதனால உங்கப் பேரை எல்லோர் கிட்டையும் ராகுல்னு சொல்லிடவா?" என்று கேட்டாள்.

"சொல்லிக்கோ, அதனால என்ன?" என்று போல டையோனைசைஸ் தனது தோள்களை உலுப்பினார்.

மாயா இனிமேல் அவரை ராகுல் என்றே அழைக்க முடிவெடுத்தாள்.

இப்படியாக கிரேக்க இசை மற்றும் நாடகத்தின் கடவுள் என நம்ப பட்டவர் நமது கதையில் ராகுலாக வந்து சேர்ந்தார்