Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 30

நினைவு-30

மாலை விளக்கேற்றும் நேரம்

மனசில் ஒரு கோடி பாரம்

தனித்து வாழ்ந்தென்ன லாபம்

தேவையில்லாத தாபம்

தனிமையே போ… இனிமையே வா…

நீரும் வேரும் சேர வேண்டும்

காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது

காரணம் துணையில்லாமல் 

வாடிடும் வயது

ஆசை கொல்லாமல் கொல்லும்

அங்கம் தாளாமல் துள்ளும்

என்னைக் கேட்காமல் ஓடும்

இதயம் உன்னோடு கூடும்

விரகமே ஓ நரகமோ சொல்

பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பனி விழும் இரவு 

நனைந்தது நிலவு

இளங்குயில் இரண்டு 

இசைக்கின்ற பொழுது

பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது

வா… வா… வா…

தன்முன் தெரிந்த லட்சுமியின் காலடியைப்‌ பார்த்தும், பவளமல்லி திட்டில் அமர்ந்திருந்த திவ்யா நிமிரவில்லை. தன்நிலையிலேயே அசையாது அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் அமர்ந்து கொண்டவர், அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டார். 

இரண்டாம் சாமம், கொட்டும் பனி... வெட்டும் குளிர். வெண்பட்டாய்‌ நிலவொளி, ஏங்க வைக்கும் ஏகாந்தம். அப்பொழுதுதான் குளித்த ஈரத்தலையோடு கன்னியவள். அமர்ந்திருக்கிறாள்! என்னவென்று எப்படியென்று எடுத்துக் கொள்வது?

"திவ்யா தூங்கலையா?" சில சமயங்களில் தெரிந்தே கேட்கப்படும் அபத்தமான கேள்வியைத் தவிர்க்க முடியாமல் லட்சுமியும் கேட்டு, சிறியவளின் முகம் பார்த்தார்.

அவளின் தலை மட்டுமே பெண்டுலமாக அசைந்து பதிலுரைத்தது. அவளை சில கணங்கள் உற்று நோக்கியவர், "கண்ணா ஆஃபிஸ் வந்திருந்தானா?" மெதுவாக கேட்டார். அவளிடத்தில் பதிலொன்றுமில்லை.

அவளது நிலை கண்டு தாளாமல் லட்சுமி, அமைதியாக இருந்தவளிடம் மீண்டும் கேட்க, நிமிர்ந்து பார்த்தவளை,

"என்னடாம்மா?" என வலக்கரம் கொண்டு கன்னம் தாங்கிக் கொண்டார்.

கன்னிப்பெண்ணின் கண்ணீரில், சிறியவளின் முகத்தை தாங்கியவரின் கை சுட்டது பங்குனி மாதப் பாறையாக...

"என் வயசுக்கு தூக்கம் வரலைனா... வயசாகறது காரணம். உனக்கு தூக்கம் வரலைன்னா... வயசுதான் காரணம்." என்றவரின் மடியில் படுத்துக் கொண்டவள், அவளின் இரு கைகளையும் கொண்டு லட்சுமியின் இடுப்பைச் சுற்றி கட்டிக்கொண்டாள்.

பிள்ளை சுமக்காத வயிறாக இருந்தாலும், பாசம் சுமந்த மனது பாரம் சுமந்து படபடத்தது கன்னியவளின் நிலைகண்டு! 

அவளது தலையை வாஞ்சையாகத் தடவிய லட்சுமி, 

"நான் காய்க்காத பூ தான் திவிம்மா... ஆனா மணக்காத பூ இல்லம்மா!" என்றவரிடம்,

"இந்த ஒரு வாரமா கண்ணா தான் ஆஃபிஸ்க்கு வர்றாங்க ஆன்ட்டி..." என்றாள் மெதுவாக.

இதுநாள் வரை அவளவனை விட்டு, மங்கையர்க்கரசியின் அச்சத்தை மனதில் கொண்டு எட்டியே நின்றிருந்தவளிடம் இருந்த வைராக்கியம், அவனை அருகே பார்க்கும் பொழுது தளற, தன் காதலைக் கட்டுப்படுத்த முடியாமல் படாதபாடு படுகிறாள். 

இன்று காலை அலுவலகம் வந்தவன், இம்முறை அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. அனிச்ச மலராய் அந்த ஒற்றை முகத் திருப்பலிலேயே வாடிப் போய்விட்டாள் திவ்யா.

அன்று காலை அலுவகத்திற்கு வந்த சத்யானந்தன் நேராக எம்.டி. அறைக்கு சென்றவன் செய்த முதல் காரியம் திரைமுழுமையும் இழுத்து விட்டு கண்ணாடிக் கதவுகளை மறைத்தது தான்.

அவனது அறைக்கு மிக எளிதாக திரைபோட முடிந்தது அவனால். ஆனால் மனத்திரை எதுவென்று தெரியாமல் தவிக்கிறான். முடிந்த அளவு வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்… தன்னை அலைக்கழிப்பவளின் நினைவுகளை வெளியேற்றும் வழி அறியாது சிக்கிக் கொண்டு தவிக்கிறான்.

அவனுக்குத் தெரியவில்லை. பிடுங்கி எறிய அது வேரூன்றிய மரமில்லை... உடலோடும் உள்ளத்தோடும் கலந்த உணர்வது என்று! 

மதிய உணவு வேளைக்குப் பிறகு, திவ்யா அவனது அறைக்கதவு தட்டி அனுமதி கேட்க, அனுமதி அளித்தான். உள்ளே வந்தவள் தன்னவனை ஏறிட்டு முகம் பார்க்க அவனோ‌ நிமிர்ந்தும் பார்க்கவில்லை. வாடிய பயிர் முழுதாய் மக்கிப் போன உணர்வினைக் கொண்டாள்.

தனது மடிக்கணினியிலேயே கவனம் முழுவதையும் வைத்திருந்தான் சத்யா. ஆனால் முகம் மட்டும் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதைக் கண்டு கொண்டாலும் அமைதியாகவே இருந்தாள் திவ்யா. ஏனென்று கேட்கும் உரிமையில்லா நிலையை நினைத்து நொந்து கொண்டாள்.

இன்று காலையில் உணவு வேளையின் போதே தாத்தா இவனது திருமணப் பேச்சை ஆரம்பித்தார். 

"சத்யா, நாதன்‌ ஃபோன் பண்ணியிருந்தான் டா!" சாப்பிட்டுக் கொண்டே பேச்சை ஆரம்பிக்க,

"என்னவாம் தாத்தா?" என்றான்.

"எல்லாம் நல்ல விஷயம் தான். கம்பெனிய நம்மகிட்ட ஒப்படைச்சவன், உறவையும் புதுப்பிச்சக்கலாம்னு பாக்குறான்."

சத்யா கேள்வியாய் நிமிர்ந்து பார்க்க, "ராமநாதனோட மக வயித்துப் பேத்திய உனக்குப் பேசி முடிக்கக் கேக்குறான்டா! வெளிநாட்டுல வளந்த புள்ள... இப்ப லீவுக்கு தாத்தா வீட்டுக்கு வந்திருக்காம். உனக்கு சம்மதம்னா போய்ப் பாக்கலாம். இல்லைனா நீங்க ரெண்டு பேரும் மீட் பண்ண ஏற்பாடு பண்ணவா?" என்று வரிசையாக கேட்டுக்கொண்டே வந்தார்.

இவர்கள் பேச்சு மங்கையர்க்கரசிக்கு கிலியை ஏற்படுத்தியது. அவரின் மனதிற்குள் ருத்ரகாளியாக திவ்யா வந்து பயமுறுத்தினாள்.

'இவரு பேசறதைப் பாத்தா மருமக கையால அடிவாங்கின மாமியார்னு எனக்கு பேரு வாங்கிக் கொடுக்காம விடமாட்டார்‌ போலயே? ஏற்கனவே நேர்ல‌ சந்திக்கிற வரைக்கும் தான் வைராக்கியமா இருப்பேன்னு சொன்னா... இப்ப கூடவே வேற இருக்கா! என்னாகுமோனு நானே பயந்துகிட்டு இருக்கேன். இவரு வேற பீதியைக் கிளப்புறாறே?' என அவர் எண்ணிக் கொண்டிருக்க,

"அரசி என்னம்மா சொல்ற?" என மருமகளையும் கூட்டு சேர்த்தார் பெரியவர்.

"முதல்ல அவன் ஜாதகத்தைப் பாப்போம் மாமா... கல்யாண யோகம் வந்திருச்சானு பாப்போம். அப்புறமா எதுனாலும் பேசிக்கலாம்.‌'' என்றார்.

திருமணம் முடிந்த மகனுக்கு திருமண யோகம் பாக்க எண்ணியவராக... இப்போதைக்கு இந்த பேச்சைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் சற்று வீம்பு பிடித்தார். 

"அதைப் பாக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது. நம்ம ஜோசியர்கிட்ட சொன்னா இன்னைக்கே பாத்து சொல்லிறப் போறாரு! ஃபோன் போடவா?" என்று காரியத்தில் நின்றார் தேவானந்தன் தாத்தா.

"அதெல்லாம் சரித்தான் மாமா... அந்தப் புள்ள ஜாதகமும்‌ இவனுக்கு பொருந்தி வரனுமில்ல..." என்று அடுத்த முட்டுக்கட்டை வந்து விழ,

"என்னம்மா நீ? உன்‌ பேச்சு ஏதோ தட்டிக் கழிக்கிற மாதிரி இருக்கே... நீ எந்தப் பொண்ணையாவது உங்க சொந்தத்துல மனசுல வச்சிருக்கியா?" என்றார் சற்று கோபமாக.

ஏனெனில் இப்பொழுதெல்லாம் பேரனின் கல்யாணப் பேச்சை எடுத்தாலே மருமகள் ஏதாவதொரு காரணம் சொல்லி மறுப்பது கண்கூடாக மாமனாருக்குத் தெரிகிறது.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க சத்யாவின் கை சாப்பாட்டுத் தட்டில் அலைந்து கொண்டிருந்தது. மனமெல்லாம் அவனது மனமோகினியே அமர்ந்திருக்க பெண் பார்க்கவும் திருமணத்திற்கும் இவன் எவ்வாறு பதில் சொல்வான்?

"அப்படி எல்லாம் இல்ல மாமா... ரொம்ப நாளா இழுத்தடிக்குதே! அதான்‌, ஜாதகம் பாக்கலாம்னு சொன்னேன்."

"எங்கே… எது சொன்னாலும் அம்மாவும் மகனும் ஏதாவதொரு காரணம்‌ சொல்றீங்களே... இவன் என்னாடான்னா எனக்கு‌ ஃபீலிங் வரலைங்கறான், நீ என்னடான்னா கல்யாண யோகம் வரலைங்கற!" என்று வெகுவாய் சலித்துக் கொண்டார்.

இவர்கள் பேச்சு சத்யாவிற்கு சினமேற்ற, "இப்ப என்‌ன எனக்கு அறுபது வயசா ஆயிருச்சு? இப்ப உடனே கல்யாணத்தப் பண்ணி எதை சாதிக்கப் போறேன்?" என இருவரிடமும் கத்தியவன், அதே கோபத்தோடு அலுவலகம் கிளம்பி வந்திருந்தான். இதுவரை அவன் தனது வீட்டில் காட்டாத முகம் அது. 

'எல்லாம் இவளால் தான்‌...' என்று திவ்யாவின் மீதும் வெறுப்பு மண்டியது.

ஏனென்றால் தாத்தா திருமணப்‌பேச்சை எடுத்ததும் தன் கண்முன்‌ தோன்றியது அவளது வதனம் தானே! ‘பாம்பா பழுதா என்றே தெரியாமல் தன்னை ஆட்டிப் படைக்கின்றாளே!’ என்று மனதோடு குமைந்தான். 

எவ்வளவுக்கு எவ்வளவு அவள் மீது அவன் மனம் ஈர்ப்பில் ஈடுபடுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீயூட்டனின் மூன்றாம் விதியாய் அவள் மீது வெறுப்பும் மேலிடுகிறது.

அதன் காரணமே காலையில் வந்ததும் அறைக்கு திரையை இழுத்து அவளை காணாமல் ஒதுக்கியது. ஆனால் தானே வந்து சிக்கிக் கொல்வபளாக அறைக்குள் இவள் பிரவேசிக்க தவிர்க்க முடியாமல் அனுமதித்தான்.

உள்ளே வந்தவள் ஓரமாக இருந்த ஸ்டூலை இழுப்பது தெரிந்தது. 

"என்‌ன பண்றீங்க திவ்யா?"

"சார்... மேல் கபோர்ட்ல கொஞ்சம் ஃபைல்ஸ்‌ இருக்கு. எடுக்கணும்." என்றாள்.

"அதை நீங்க தான் செய்யணுமா? அட்டென்ட்டரைக் கூப்பிட்டு எடுக்க சொல்ல வேண்டியது தானே?" சற்றே எரிச்சல் வெளிப்படத் தொடங்கியது.

"அந்த ஃபைலை வச்சது நான்‌தான் சார். இடம் எனக்குத் தான் தெரியும். அட்டென்டர் குடவுன் லாக் ஸ்ட்ரக்காகிக்கிட்டு திறக்க முடியலைனு அதைப் பாக்கப் போயிட்டாரு!"

"இன்னும் லாக்க சரி பண்ணலயா? இந்த சூப்பர்வைசர் என்ன பண்றாரு?" எனக் கேட்டுக் கொண்டிருந்தவன், அவள் ஸ்டூலில் ஏற‌ முற்பட, இருக்கையில் இருந்து எழுந்து வந்தான்.

"தள்ளுங்க... எந்த ஃபைல் சொல்லுங்க.... நான் எடுத்துத் தர்றேன்." என கடுப்புடனே கேட்க,

‘ம்க்கும்... அதுக்குள்ள துர்வாசருக்கு கோபம் வந்திருச்சாக்கும்! இவங்க வளத்திக்கு ஸ்டூலே தேவை இல்ல.'‌ என நினைத்தவள்,

“**** கம்பெனி நேம் போட்ட ஃபைல் சார்!" எனக்கூற, அவன் எட்டியே எடுக்க, அதன் கூடவே வரிசையில் இருந்த மற்ற ஃபைல்களும் கீழே சரியத் தொடங்கியது.

அவனை விட்டு ஒரடி தள்ளி நின்றிருந்தவள், உடனே வேகமாக அவற்றை எட்டிப்‌ பிடிக்கவென, அவனை‌ நெருங்க வேண்டியதாய் போயிற்று. 

அவள் அருகே நெருங்க, தவறிய ஃபைல்களை பிடிக்க எத்தனித்தவன், அவளையும் சேர்த்துப் பிடித்திருந்தான். 

இடையோடு அழுத்தி கோதையைப் பிடித்தவன் கோப்புகளைத் தவற‌விட்டிருந்தான். கணநேரம் உரசிய உடல்கள் பரிமாறிய வெப்பம், இறுகிய பனியாய் இருந்தவளை, என்னவன் என்ற எண்ணம் கொண்டு இளக வைக்க, அவனுக்கோ எப்பொழுதோ நினைவில் புதைந்துபோன கஸ்தூரி மஞ்சளும் பூலாங்கிழங்கும் கலந்த வாசம் உள்ளுக்குள் தீமூட்ட... தணலில் நின்றதைப் போலானது இருவரின் நிலையும்!

இடைபற்றியவன் கைகள் எல்லைக் கோடு தாண்டும் தீவிரவாதியாக எத்தனிக்க, கன்னியவளோ எல்லைப் படையிடம் அகப்பட்ட அகதியாக உள்ளம் படபடத்தாள். காற்றில் விரித்த புத்தகமாக உணர்வுகள் பரபரத்தது.

தாலி கட்டியவன் தான். உடமைப்பட்டவன் தான்... உரிமை இருக்கிறது தான்... ஆனால் அவனுக்கு அந்த நினைப்பு இருக்கிறதா? எப்படி அனுமதிக்க முடியும். கூர்தீட்டிய வாளாய் மைதீட்டிய விழியில் மையலோடு அச்சமும் சேர்ந்தே தெரிந்தது.

இருந்தும் ஏனோ அவனுக்கு அந்த ஏகாந்தத்தை இழக்க விருப்பமில்லை என்பது போல் நின்றிருந்தான் தன்னை மறந்து! 

படக்கென கதவு திறக்கும் சத்தத்தில் தான் இருவரும் சுயம் பெற்று, தன்னிலை விலக, உள்ளே வந்த ராகவன் கண்களில் அக்காட்சி தப்பாது விழுந்தது. 

சட்டென்று விலகியவன்,‌ தனது இருக்கையில் வந்து அமர, விழுந்த ஃபைல்களை எடுத்து அதன் இடத்தில் அடுக்கி விட்டு வேகமாக வெளியேறினாள் திவ்யா.

ராகவன் வெளிச் செல்பவளையே ஓரக்கண்ணால் பார்க்க, "யெஸ் ராகவன்!" என்றான் சற்று உரக்க... அதே நேரம் அழுத்தமாக.

"சார்‌... இன்னைக்கு போற ஸ்டாக் லிஸ்ட் இது. நீங்க சைன் பண்ணிட்டா அனுப்பிறலாம்." 

"கொடுங்க ராகவன்!" என வாங்கியவன், கையழுத்திட்டுத் தர,‌ வாங்கிக் கொண்டுத் திரும்பி நடந்தவன் இதழ்களில் ஓநாயின் இழிப்பு.

"புருஷனை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு எத்தனை நாளைக்கு தான் கட்டுப்பாடா இருக்க முடியும்? ம்ம்ம்...‌ நாமளும் தான் ட்ரை பண்ணோம். ஊருக்கு தான் உபதேசம்‌ போல..." என அவன் வாய்விட்டு அலுத்துக் கொண்டது சத்யாவின் செவிகளில் தெள்ளென விழுந்தது.