Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 28

நினைவு-28

மங்கையர்க்கரசி கெஞ்சலான குரலில் பேச ஆரம்பித்தார். "கொஞ்சம் பொறுமையா சொல்றதைக் கேளுங்கண்ணா! திவ்யாவைப் பத்தி சொன்னா அவளோட பெத்தவங்களைப் பத்தியும் சொல்ல வேண்டிவரும். ஏற்கனவே தன்னால தான் ஆக்சிடன்ட் ஆச்சுனு நினைச்சுட்டிருக்கான். என்ன நடந்ததுன்னு நமக்குத் தெரியலை.

அவங்க இப்ப உயிரோடவே இல்லைனு தெரிஞ்சா, அந்த ஸ்ட்ரெசும் சேர்ந்துக்கும். தன்னால தான் ரெண்டு உயிர் போயிருக்குனு தெரிஞ்சா... மேலும் மன அழுத்தம் அதிகமாகும். அதுக்கும் மேல காதல், கல்யாணம் எல்லாத்தையும் ஞாபகப்படுத்தி அவனை ரொம்ப அழுத்தத்துக்கு உள்ளாக்க வேண்டாம்னு நினைக்கிறேன்." என்றவர்,

திவ்யாவிடம், "எனக்கு என் பையன் இப்படியே வேணும்மா... சில விஷயங்களை காலத்தின் முடிவுக்கு விட்டுருவோம். அவசரப்பட்டு முடிவெடுத்து, அதிகமா குழம்பிட்டான்னா, யாருக்கும் இல்லாம ஆகிருவானோனு பயமாயிருக்கும்மா!" என்று கரகரத்தார்.

அவருக்கு எங்கே தன்மகன் மீண்டும் அம்னீசியாவிற்கு சென்று விடுவானோ என்கிற பயத்தோடு, ஞாபகங்களை மீட்டெடுப்பதற்காக அதிகமாக யோசித்து வேறு மாதிரியாக குழம்பி விடுவானோ என்ற பயமும் சேர்ந்து கொண்டது.

அதனாலேயே எதையும் வலுக்கட்டாயமாக ஞாபகப்படுத்த வேண்டாம் என்றதும். திவ்யாவிற்கும் ஒரு தாயாக அவரது கவலை புரிந்தது. அவளுக்கும் கணவனது உடல்நிலையி அக்கறை உண்டுதானே! ஆனால் தன் காதல் எங்கே போனதென்ற ஏக்கம் பிறந்தது.

"ஆன்ட்டி, நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் ஆகாது. அவன் மனநிலை சரியில்லாம என்ன செய்யறோம், எங்கே இருக்கோம்னு தெரியாத நிலைக்குப் போகல... செலக்டிவ் அம்னீஷியாவுல தான் இருந்தான். சத்யா சொன்னா புரிஞ்சுப்பான். தேவையில்லாம பயப்படுறீங்க." என்று விஷ்வா கூற, 

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த திவ்யா, "வேண்டாம் விஷ்வாண்ணா!" என்று உறுதியாக மறுத்தாள்.

"எது வேண்டாம் சிஸ்டர்?" என்றான் கோபமாக. அவன் கோபத்தை மங்கையரக்கரசியிடம் காட்ட முடியாதவனாக!

"அவங்க உங்களை மரியாதையா கூப்பிட்டப்ப எப்படி இருந்தது விஷ்வா?" என்றாள் விரக்தியாக.

"யாரோ மூனாம் மனுஷன் கூப்பிடுற மாதிரி இருந்தது. அதுக்கு…?" என்று புருவம் சுருக்கியவனை,

"இப்ப என் நிலைமையும் அதுதான். எல்லோரும் நடந்தை சொல்லி என்னை அவங்க ஏத்துக்கலாம். ஒன்னு தாலி கட்டிட்டோமேனு கடமையா ஏத்துக்கணும். இல்லைனா என்னோட பேரன்ட்ஸ் இறப்புக்கு தானும் ஒருவகையில் காரணம் ஆகிட்டோமேன்னு பரிதாபத்துல ஏத்துக்கணும்," என்றவளிடம்,

"நீங்க என்ன சொல்ல வர்றீங்க சிஸ்டர்." என்று புரியாமல் கேட்டான்.

"கடமைக்காக, பரிதாபத்துல வாழ்ற வாழ்க்கை எனக்கு வேண்டாம் விஷ்வாண்ணா! என்னோட காதல் வேணும். கண்டிப்பா ஒருநாள் வெளிவரும். இப்ப கொஞ்சம் ஆழ் மனசுல புதைஞ்சு இருக்கு. உணரும்போது நான் அவங்க கூட இருப்பேன்." என்றவள்,

"அத்... ஆன்ட்டி! நான் கண்ணனை நேர்ல பாக்குற வரைக்கும் தான் என்னால வைராக்கியமா இருக்க முடியும். அதனால முடிஞ்ச வரைக்கும் நான் தள்ளியே இருந்துக்கறேன். நீங்களும் தான். அவங்களே என்னைத் தேடி வருவாங்க." என்று மங்கையர்க்கரசியிடம் கூறியவள்,

"வாங்க அங்கிள் போகலாம்!" என்று சண்முகத்திடம் கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்.

இவ்வளவு காலமாக விதி ஆடிய விளையாட்டிற்கு தாகசாந்தியாக அவர்களது காதலைப் பருகி இளைப்பாறியது. 

ஏனோ காதலில்லா வாழ்க்கையை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவளுக்கு உயிரோடு வாழும் வாழ்க்கையை விட… உயிர்ப்போடும் வாழ வேண்டும் என ஆசை கொண்டவள். உயிர் வாழ காற்றும் தண்ணியுமே போதும்.

அன்பு, பாசம், காதல், கொஞ்சம் ஊடல், கொஞ்சும் கூடல், வெறுப்பு, கோபம் என அனைத்துமான உணர்வுகளோடும் வாழ வேண்டும் என எண்ணியவள். கடமைக்கான வாழ்க்கையில் இதை எதிர்பார்க்க முடியாது.

‘வீட்டுல நீயும் இருக்க… நானும் இருக்கேன். நீ சாப்பிட்டியா... நான் சாப்பிட்டேன். அவ்வளவு தான்’ என்றிருக்கும். தன் பெற்றோரின் அந்நியோன்யமான வாழ்க்கையைப் பார்த்து வளர்ந்தவள். அதே மாதிரி வாழ ஆசைப்பட்டவள். அவனும் தன் வாழ்க்கையை உயிர்ப்பிக்க வந்தவனாகவே எண்ணினாள்.

அதே உயிர்ப்பை அவன் தன் மீது காட்டும் ஒவ்வொரு அக்கறையிலும், கோபத்திலும் கண்டவள். இப்பொழுது யாரோ எனப் பார்க்கும் அந்நியப் பார்வையை சந்திக்கும் சக்தி அவளுக்கில்லை. நேற்று இரவு வரை அவளை காதலோடு தாபமாகப் பார்த்த பார்வை எங்கே? இன்று யாரெனக் கேட்கும் வார்த்தைகள் எங்கே! சுனாமிப் பேரலையாய் அது விடியலோடு காணாமல் போயிருந்தது. 

கரியென அவனது மன ஆழத்தில் புதைந்த காதல், காலமாற்றம் எனும் அழுத்தம் கோண்டு ஒருநாள் வைரமென உறுதிப்பெற்று வெளிவந்து ஜொலிக்கும் என உறுதி கொண்டு, அவளுக்காக அவளவன் வருவான் என்ற நம்பிக்கையோடு வீடு வந்தாள்.

அவளது கண்ணன் நின்றிருந்த தோட்டம், சமையல்கூடம், மொட்டைமாடி என எங்கும் அவன் நினைவுகளே வியாபித்திருக்க, ஆதரவு தேடி எப்பொழுதும் போல் பவளமல்லி திட்டிற்கு வந்து விட்டாள்.

திவ்யா வீட்டிற்கு வந்து அழுவாள் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, அவளோ பெற்றொரின் இழப்பின் போது, துடைக்கும் கரங்களில்லை என தனக்குள் உறைந்து போனாளோ, அதேபோல் அணைக்கும் கரங்கள் அருகில் இல்லையென பாறையாக இறுகிப் போனாள். 

இன்னொரு இழப்பை ஏற்க அவளுக்கு சக்தி இல்லை எனத் தெரிந்து தாலி கட்டியவனோ, அவளது திடம் அனைத்தையும் உறிஞ்சிக் கொண்டு அவளை வெறுமையாய் விட்டுச் சென்றான்.

நடந்தவை அனைத்தையும் எண்ணிப் பார்த்தவளுக்கு தாளமுடியாத வேதனையும் அழுத்தமும் ஏற்பட்டது. அழுவதற்கும் தெம்பு வேண்டும். தனதறைக்குள் வந்தவளுக்கு, அவனில்லாத வீடும், மனம்போலவே வெறுமையாய் காட்சியளித்தது. 

ஆயர் பாடியில் கண்ணனில்லையோ

ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ

பாவம் ராதா….

யமுனையாற்றிலே 

ஈரக்காற்றிலே

கண்ணனோடுதான் ஆட

பார்வை பூத்திட

பாவை பார்த்திட

பாவை ராதையோ வாட…

"திவ்யா! இன்னைக்கு சத்யா சர் வர்றாருப்பா! இவரென்ன கெஸ்ட் ரோல் மாதிரி அப்பப்ப வர்றாரு?" தனது கேபினில் அமர்ந்தவாறே நந்தினியின் அறிவிப்பை காதில் வாங்கினாலும் திவ்யா நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

அலுவலகத்திற்குள் நுழைந்தவன், அனைவரின் காலை வணக்கத்திற்கும், சிறு புன்னகையுடன் தலையசைவை பதிலாக்கியவன் தோற்றம், ‘நான் எதிலும் பெர்ஃபெக்டாக்கும்’ என்று காட்டியது. லேப்டாப் பேக்கை மார்பின் குறுக்காக போட்டுக்கொண்டு, ஃபார்மல் சூட்டில், தேர்ந்த மாடல் போல் கால் வீசி நடந்து வந்தான்.

அவளவன் வருகை அவளுக்கு தெரியாதா என்ன? இனிமேல் இந்த அலுவலகம் பக்கமே வரக்கூடாதென்று முடிவு எடுத்தவன் ஒருவாரம் கழித்து இன்று மீண்டும் வந்திருக்கிறான்.

கண்களில் கண்ணாடியை உள்ளே வந்தும் கழட்டவில்லை அவன். கண்ணாடியினூடே அவன் பார்வை திவ்யா இருந்த கேபினுக்குத் தான் தாவியது. ஆலிவ்க்ரீன் காட்டன் சுடிதாரில், அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் கர்மமே கண்ணாக இருந்தாள். இல்லையில்லை இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தாள்.

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த நந்தினி, "திவி! இவரே இவ்ளோ ஹேன்ட்சம்மா இருக்காரே? ஒய்ஃப் எப்படியிருப்பா? ஆமா… முதல்ல இவருக்கு கல்யாணமாயிருச்சா?" என தனது வழக்கமான வேலையை அவளிடம் காண்பிக்க,

"ஆரம்பிச்சிட்டியா? ஏன்‌? ஜாதகம் வேணுமா?" என திவ்யா கேட்க,

"எதுக்கு?"

"இல்ல… பொண்ணுகிண்ணு பாத்துச் சொல்லப் போறியோ என்னவோன்னு கேட்டேன்."

"நல்ல ஐடியா திவி! இப்ப இதுதான் நல்ல பிஸினஸ்‌ தெரியுமா? ஜாதகம் கொடுத்தாலே கமிஷன்.

அதுக்கு பின்னாடி பொண்ணு பாக்க ஒன்னு, கல்யாணம்‌ முடிவாச்சுனா ஒன்னுன்னு அததுக்கு தனித்தனியா கமிஷன் தெரியுமா?"

"என்ன நந்தினி? சொந்த அனுபவமா!"

"ஆமாப்பா! இப்பதான்‌ என் தங்கச்சிக்கு பாத்துகிட்டு இருக்கோம்."

"ஓ! அதான் சத்யா சாரைப் பாத்ததும் மாப்பிள்ளை நினைப்பு வந்திருச்சாக்கும்!''

"அவங்க தகுதிக்கெல்லாம் நாம பாக்க முடியுமா? பணம் பணத்தோடுதான் சேருங்கற மாதிரி பாப்பாங்க... அரசி மசாலாவுக்கு ஈக்வலா ஒரு அரசன் மசாலா இல்ல பாப்பாங்க!"

"ஏன்? நாமெல்லாம் ஈடாக மாட்டோமா?" என்று கிண்டலாக திவ்யா‌ கேட்க,

"அதெல்லாம் ஆகாயக்கோட்டை திவி! தகுதின்னு ஒன்னு வேண்டாமா?"

'இப்படி கேட்டவளைத் தான் இழுத்துட்டுப் போயி தாலி கட்டியிருக்காங்க!' என்று தனது திருமணம் நடந்த பொழுதினை நினைத்த திவ்யா, உள்ளூர சிரித்துக் கொண்டாள்.

"நந்து... அவங்களைப் பாத்தா அப்படியெல்லாம் நினைக்கிற மாதிரி தெரியலையே..." என்று‌ இழுத்தவளை,

"திவி! நீ நிறைய நாவல் படிப்பியா?" என நந்தினி கேட்டாள்.

அவள் யோசனையாக, "ஏன்..." என இழுக்க,

"ஏன்னா... அதுல தான்‌ இந்த மாதிரி கதையெல்லாம் எழுதுவாங்க... பிஏ வை லவ் பண்றது, வீட்டுல வேலை பாக்குற பொண்ணை லவ் பண்றதுனு வரும்." என்றாள் நந்தினி.

"ஏன்? இந்த மறதிக் கேசு கதையெல்லாம் படிச்சதில்லையா? படிச்சிருந்தா முடிவு என்னனு சொல்லு. தெரிஞ்சுக்கலாம்." என்றவளை தனது கேபினிலிருந்து ரோலர் சேரை இழுத்தவாறு எட்டிப் பார்த்தவள், "இனிமே தேடிப் பாக்குறேன்." என்றாள்.

தனது அறைக்கு சென்றவன் மனம் மீண்டும் மீண்டும் அவளையே தேடியது. அன்று அவளை சந்தித்து விட்டு வீடு சென்றவன், என்ன முயன்றும் அவனால் அவள் முகத்தை மனக்கண் விட்டு அகற்ற முடியவில்லை.

எங்கும் நிறை பரப்ரம்மம் போல், எதிலும் மனம் ஈடுபட முடியாமல் அவள் நினைவே ஆட்கொண்டது. தன்மேலே அவனுக்கு கோபம் வந்தது. அதெப்படி? அடுத்தவன் மனைவி மீது இந்தளவுக்கு மனம் ஈடுபடலாம் என்ற‌ ஆதங்கம் வேறு. அந்த அளவிற்கா தனது மனம் தரம் தாழ்ந்து விட்டது என்ற நினைப்பே அவனை வேதனைப்படுத்தியது.

இதுவரை ஏதோவொரு வெறுமை உணர்வு ஊவாமுள்ளாய் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. எதையோ இழந்த உணர்வு அவனுக்குள் ஆட்டிப்படைக்க, இழந்ததும் எதுவென்றே தெரியாமல் தவித்தவனுக்கு, அவளது முகம் அவ்வெறுமையைப் போக்கியது.

இதுநாள் வரை மூளைக்குள் இறுக்கிக் கட்டிய கயிறென இறுக்கிப் பிடித்த ஏதோ ஒன்று பட்டென்று விடுபட்ட உணர்வு அவளைப் பார்த்ததில் இருந்து...

'சத்யா! இது நல்லதுக்கில்ல! தேவையில்லாம மனசை அலைபாய விடாதே! அவளென்ன அவ்ளோ பெரிய அழகியா? அடுத்தவன் பொண்டாட்டினு கூட தெரியாம இம்ப்ரஸ் ஆகறதுக்கு.' என்று மனசாட்சியிடம் கேள்வி கேட்க,

அது, 'ஆமாம்.' என்றது.

'என்ன பெரிய அழகி! கண்ணு கொஞ்சம் பெருசா இருக்கு. அதனால அழகாத் தெரியுது. ஒத்தக்கல்லு மூக்குத்தியோட மூக்கு கொஞ்சம் முத்தம் கேக்குற மாதிரியிருக்கு. உதடு கொஞ்சம்... இந்த கவிஞர்கள் எல்லாம் சொல்ற மாதிரி ஆரஞ்சுசுளை மாதிரி இருக்கு. ஆனா பின்ங்க் கலருல இருக்கு.

கலரு.. கொஞ்சம் மஞ்சளும் இல்லாம சந்தனக்கலரும் இல்லாம ரெண்டுங்கெட்டானா இருக்கு. உடம்பு கொஞ்சம், ஜீரோசைஸ் ஃபிகர்னு இல்லாம பூசுன மாதிரி இருக்கறதுனால, மத்ததெல்லாம் எடுப்பா கொஞ்சம் தாராளமா இருக்கு.' என்று சொல்லிக்கொண்டே போக,

'டேய்...டேய்...‌ கொஞ்சம் கொஞ்சம்னே கொஞ்சுற அளவுக்கு பாத்திருக்கியேடா! நீ சொல்றதை எல்லாம் பாத்தா அடுத்தவன் பொண்டாட்டியப் பாத்த மாதிரி தெரியலியே. உன் பொண்டாட்டியப் பாத்த மாதிரியே இல்ல, மேலேயிருந்து கீழே வரை பாத்திருக்கே.' என்று துப்பாத குறையாக மனசாட்சி கேள்வி கேட்டது.

அதை அடக்க வழி தெரியாமல் நண்பர்களை அழைத்துக் கொண்டு பார்ட்டிக்கும் சென்று வந்தான். இரவு வெகுநேரம் கழித்து வந்தவனை மங்கையர்க்கரசியின் பார்வை வித்யாசமாகப் பார்த்தது.