Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 25

நினைவு-25

இரவு உணவுவேளை முடிந்து அவரவர் இடத்தில் அடைக்கலமாக, வெகுநேரம் கழித்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தான் கண்ணன். அவன் நினைத்தது போலவே திவ்யா பவளமல்லி திட்டில் தனியாக கவலையுடன் அமர்ந்திருந்தாள்.

கீழே இறங்கி அவளருகில் வந்தான். கண்களில் கண்ணீர் அவள் அழுததைக் கூற, அவனுக்கோ காரணம் புரியவில்லை.

"தியா..." வார்த்தைக்கும் வலிக்குமோ என்றிருந்தது அவனின் அழைப்பு.

"வாங்க!" என்ற அழைப்பு அவளின் உணர்ச்சியற்ற குரலில்.

"உன் கண்ணன்கிட்ட எதுக்கு தியா தயங்குறே? நானும் காலையில இருந்து பாக்குறேன். ஏதோ உன் மனசுல கெடந்து உழட்டுது. எதுவாயிருந்தாலும் உன் கண்ணன்கிட்ட சொல்லக்கூடாதா?" ஆற்றாமையாக‌ அவன் ‌கேட்க,

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் கண்கள் மேலும் கண்ணீர் வழிந்தது.

"இப்படி எதுவும் சொல்லாம அழுதா எப்படிம்மா? ஒருவேளை நான், என் விருப்பத்தை சொன்னது பிடிக்கலயா?"‌ என்றவாறு அவளருகில் அமர்ந்தான்.

கண்களில் ஏக்கத்தோடு அவள் பார்க்க, "சொன்னாத் தானே தெரியும். இன்னும் என்னை நீ கண்ணானு கூப்பிடல." என்று குறைபட்டவனிடம்,

"நீங்க கண்ணாவா மட்டும் இருக்கல... சத்யானந்தனாவும் இருக்கீங்க!" என்றாள், தொண்டை அடைக்க.

"அதுக்கு..." என்றான் யோசனையாக.

"இல்ல… உங்க உயரம் அதிகமாயிருக்கு..." என்று திக்கித் திணறியவளை புருவம் சுருக்கிக் பார்த்தவன்,

"ஆமா... ஆறடிக்கும் மேல. அதுக்கு…" என அவன் கேள்வியாய் நிறுத்த, திவ்யா அமைதியாகவே தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

"அதுக்காக நான் இப்ப ஒன்னும் பண்ண முடியாது. இனிமேல் எனக்கு ஈக்வலா நீயும் வளற முடியாது. Y ஆக்ஸிஸ்ல முடியாது. வேணும்னா Xஆக்ஸிஸ்ல ட்ரை பண்ணிப்பாரு! உனக்கும் அது ஈஸி. நான் வேணா போனா போகுதுன்னு அட்ஜஸ் பண்ணிக்கிறேன்." என்று அவளை கேலி பேசினாலும், இன்னும் அவள் முழுதாக மனம் திறக்கவில்லை என்பதை உணர்ந்தான்.

"இப்பவும் போனாப் போகுதுன்னு தான் ஏத்துக்க வேண்டியிருக்கும்." என்றாள் வெறுமையான குரலில்.

"இதுக்கும் மேல எனக்கு பொறுமையில்லை திவ்யா! உன் மனசுல என்ன ஓடுதுன்னு பட்டுனு சொல்லு!" என்று சற்று கோபம் காட்ட,

"தகுதிக்கு மேல ஆசைப்படறேனோன்னு..." என்று அவள்‌ முடிக்கும் முன்,

"யாரோட தகுதிக்கு மேல." என்றான். குரலில் அவ்வளவு அழுத்தம்.

"இதுல என்ன சந்தேகம்? என் தகுதிக்கு மேலதான்!"

"இப்ப எதுல உன் தகுதி கொறஞ்சு போச்சு?"

"காலையில உங்கம்மா கேட்டதை மறந்துட்டீங்களா? என்னடாயிது பிச்சைக்கார வேஷம்னு கேட்டாங்கள்ல?"

"ஆமா! அதுக்கென்ன?"

"உங்க தகுதி தெரியலியா? இல்ல, தெரியாத மாதிரி நடிக்கறீங்களா? இன்னைக்கி ஹாஸ்பிடல்லயும் ஆனந்தன் அன்ட் க்ருப்ஸ் ஃபேமிலிக்கு கிடைச்ச மரியாதையைப் பாத்தீங்கள்ல... அதுவும் எல்லாம் வெளிய தெரியாம சீக்ரெட்டா!" என்றவளுக்கு அவனது அந்தஸ்தை பார்த்த மிரட்சி அப்பட்டமாய் கண்களில் தெரிந்தது.

"காசு பணத்தை வச்சு தகுதியை எடை போடுவேன்னு நான் எதிர்பாக்கல திவ்யா? நான் உன்னோட தகுதின்னு நினைக்கிறது அடுத்தவங்களுக்காக அக்கறை காட்டுற உன் மனசை தான். அப்படிப் பாத்தா நான்தான் உனக்கு தகுதி இல்லாதவன்." என்று கண்ணன் பேச இடையிட்டால் திவ்யா.

"கண்ணனா நீங்க இப்படி பேசலாம். சத்யானந்தனும் இதையே பேசுவாறான்னு தெரியலே... ஏதோ ஒரு வீக் மூவ்மென்ட்ல அவசரப்பட்டுட்டோமோனு நீங்க நினச்சுட்டா என்னால தாங்கிக்க முடியாது கண்ணன்." என்று தழுதழுத்தவளிடம்,

"நாளைக்கு எவ வர்றானு நானும் பாக்குறேன்! அப்ப தெரியும் இந்த திவ்யா யாருன்னு கேட்ட என்னோட தியா எங்க போயிட்டா? இவ்ளோ நாளும் வேற யாராவது உரிமைப்பட்டவங்க இருப்பாங்களோனு குழம்பிட்டிருந்த... இப்ப தகுதி அதுஇதுனு பினாத்துற! எப்பவும் தெளிவாயிருக்க மாட்டியா?"

"இப்ப நான்‌ எது சொன்னாலும் பினாத்தற மாதிரிதான் இருக்கும்." என்று கண்ணீர் வடித்தவளின் நிலை கண்ணனுக்கு நன்கு புரிந்தது.

தன்னுடைய பொருளாதார உயரம், அந்தஸ்து அவளை மிரட்டுகிறது என அறிந்து கொண்டான்.

"சரி… அப்படினா ஆப்ரேஷனை கொஞ்சநாள் தள்ளிப் போடலாம்!" என்றான் எதையோ யோசனை செய்தவனாக!

"எதுக்கு தள்ளிப் போடணும். ஏற்கனவே லேட்டாயிருச்சுனு டாக்டர் சொன்னது தெரியாதா?" என்று கோபமாய் அக்கறை காட்ட,

"அது எனக்கும் தெரியும். உன்ன இப்படியே விட்டுட்டு போகமுடியாது. நீ வேற உன் தகுதிக்கும், என் தகுதிக்கும் செட்டாகாதுன்னு சொல்லிட்ட!"

"அதுக்கு...''

"அதுக்கென்னவா? உன் தகுதிக்கேத்த மாதிரி ஒரு இன்ஜினியரோ இல்ல கவர்மென்ட் வேலை பாக்குற மாப்பிள்ளையோ பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டு ஆப்ரேஷன் பண்ணிக்கிறேன். உன்னைப் பெத்தவங்களும் அதைத்தானே செஞ்சுருப்பாங்க!"

"ச்ச்சீ... என்ன இது தத்துபித்துனு உளர்றீங்க!" என்றவளின் கடுகடுப்பு முன்னைவிட அதிகமாய் இருந்தது.

"ஓ! இப்ப இவ்ளோ நேரம் அம்மணி பேசுனதுக்கு பேரு என்னவாம்? யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு? தன்னோட காதலிக்கு மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்றது!"

"நிப்பாட்டுங்க கண்ணன்! கேக்கவே சகிக்கலை! அதெப்படி உங்க இடத்துல இன்னொருத்தரை நினைச்சுப் பாக்க முடியுது?" என்றாள் ஆவேசமாக.

'அப்படி வா வழிக்கு.' என்று நினைத்தவன்,

"ஆமா... நானும் வேணாம். அதுக்காக நீ இப்படியேவா இருக்க முடியும்?"

"அது என்பாடு... நான் பாத்துக்கறேன்! என் தகுதிக்கு யாரு பொருத்தமானவங்கனு நீங்களே சொல்றீங்க... அப்படின்னா நான் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு இருக்கேன்னு தானே அர்த்தம்." என்று மீண்டும் அவள் கண்கள் கலங்கி நின்றாள்.

அந்தச் சூழ்நிலையில் பொறுமையை இழுத்துக் கொண்டு நிற்பது பெரிய அவஸ்தை ஆகிப் போனது கண்ணனுக்கு! இவளுக்கு இருக்கின்ற குழப்பத்திற்கு பேசி புரியவைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான்.

‘எங்கே என்னை இழந்து விடுவோமோ என்ற பயமே இவளை வாட்டுகிறது’ என்பதை புரிந்து கொண்டான். அடுத்த ஒரு இழப்பை தாங்க இவள் தயாராக இல்லை என்பதை தெரிந்தவன்,

"தியா!" என்றான்.

"ம்ம்…"

"என் மேல நம்பிக்கை இல்லயா? இல்ல நம்பிக்கை வர்ற மாதிரி நான் நடந்துக்கலயா?" அழுத்தமாய் கேட்டான்.

"ஐயோ… இல்ல கண்ணன். உங்கமேல நம்பிக்கை இருக்கு. சத்யானந்தனும் இதையே சொல்லணும்னு நினைக்கிறது தான் பேராசையா தெரியுது."

மீண்டும் மீண்டும் அவள் அங்கேயே சுற்றி வருவது அவனுக்கு சற்று எரிச்சல் மூட்டினாலும், அவளது பயம் உணர்ந்து மௌனம் காத்தான்.

"சரி… எதுனாலும் ஆப்ரேஷன் முடிஞ்சு பாத்துக்கலாம். இப்பவே எதுக்கு இத்தனை குழப்பம். ரொம்ப லேட்டாயிருச்சு போய் படு!"

"நாளைக்கு ஹாஸ்பிடல் போயிருவீங்கள்ல... அப்படியே உங்க வீட்டுக்கும்..." என்று முடிக்க முடியாமல் திவ்யா கண்ணீர் வார்க்க,

"நீயும் கூடவே வந்துரு... நாளைக்கே எல்லார்கிட்டயும் சொல்லிடலாம். ஏற்கனவே விஷ்வாவுக்கு தெரிஞ்சுருச்சு!"

"தெரியும். நீங்க ரெண்டு பேரும் பேசியதை கேட்டேன். உங்களுக்கு மனைவியோ, காதலியோ இருக்காங்களோனு விஷ்வாகிட்ட கேட்டது தெரியும்."

'அடிப்பாவி!' என நினைத்தவன்,

"தெரிஞ்சு தான் என்னைய இப்படி வாட்டி எடுத்துட்டிருக்கியா தியா?" என்றவன், இதழ்க்கடையோரம் சிறு முறுவல் பூக்க, தலைகுனிந்து அமர்ந்திருந்தவளின் கன்னம் தொட்டுத் திருப்பினான். 

நேருக்குநேர் முகம் பார்த்தவள், இரவுநேரத் தனிமையில் அவன் பார்வையின் மாற்றம் எதையோ உணர்த்த, புரிந்தவள் கண்தாழ்த்த, "தியா..." எனும் அழைப்பில் நிமிர்ந்து அவளவன் கண்பார்த்தாள்.

"நேத்து காலையில காதலை சொல்லிட்டு, இன்னைக்கு பிரிவைப் பத்தி பேசுற இந்த வாய்க்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?" என்று குறும்பு பார்வை பார்த்தவனிடம்,

"வேண்டாம்... ஏதோ வேற மாதிரி போகுது... சரியில்ல…" என்றாள்.

"ஏய்...! நான் எது மாதிரியும் போகல... நீ சொன்ன பின்னால் தான் தண்டனைக்கான ஐடியாவே கிடைச்சுது." என்று கூறி சிரித்தான்.

"நம்பிட்டேன்!" என்று எழுந்து செல்ல முயன்றவளின் கைபற்றி இழுக்க, உதறியவளை, எழுந்தவன் பின்னிருந்து இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவன் மார்போடு ஒட்டி நின்றவளின், இதயத்துடிப்பு சட்டென்று எகிற, எதையும் செய்யமுடியாத நிலையில் அவனுக்குள் கட்டுண்டு நின்றாள்.

"பெயரளவுல கண்ணனா இருந்ததால தானே நம்பிக்கை வரல… என் தியாகிட்ட உரிமை எடுத்து கொஞ்சம் லீலையும் பண்ணியிருக்கணுமோ?" என்று காதருகினில் கேட்ட அவனது கரகரத்த குரலில் பெண்ணின் மனம் தன் சுயமிழக்க,

"ப்ளீஸ் கண்ணா!" என்றாள் கெஞ்சலாக!

"ஆமா! நான் சரியா டீல் பண்ணாததுனால தானே எம்மேல நம்பிக்கை வரல..."

"அதுக்கு…" என்றவளின் குரல் இப்போது சற்றே உயர்ந்திருந்தது.

"இனிமே எல்லாமே அதிரடி முடிவு தான்." என்று கண்சிமிட்டினான்.

"உங்ககிட்ட நான் இதை எதிர்பாக்கல கண்ணா!" என்றாள் அவன் பேச்சில் அச்சம் கொண்டவளாக.

"இனிமே எதிர்பாராததை எதிர்பாருங்க அம்மணி!" என்றபடியே அவளை சட்டென முன்புறமாக சுழற்றியவன், ஒருகணம் அவனவள் விழி கலந்தான்.

நிலவொளியின் ஏகாந்தமும், பாவையவளின் படபடத்த விழிகளும், அவனை கிறங்கடிக்க, அவளவனின் கண்வீச்சு தாங்காமல் கன்னியவள் கண்மூடிக் கொண்டாள்.

முதன்முதலாக, ‘நீ என்னவள்’ என்ற முத்திரையை அவள் இதழ்களில் பதித்து, உரிமைப் பத்திரம் பதிவு செய்தான். ஆரம்பகட்ட அரிச்சுவடி பாடத்தில் ஆசிரியனும் மாணாக்கனாய்த் தடுமாற, திமிறியவளோ காளையவன் கைச்சிறையில் கைதியாகிவிட, கன்னியவள் இசைவில்... கணங்கள் கணிசமாய் கரைந்து கொண்டிருந்தது.

மோகம் தாபம் இவற்றிக்கெல்லாம் அர்த்தம் இன்றுதான் அறிந்தும் தெரிந்தும் கொண்டனர் இருவரும். தடையில்லா பயணமாய் அவனது கைகள் அவளின் மேனியில் ஊர்வலம் போகத் தொடங்கியது. தடுப்பதற்கு வழியில்லாமல் அவளின் இரு கைகளையும் அவன் முதுகிற்கு பின்னால் விட்டுவிட்டு காற்றும் புகமுடியா வண்ணம் அவளை இறுக்கி அணைத்திருந்தான் கண்ணன்.

“லவ் யூ தியா!” கிறக்கத்துடன் பேசிய உதடுகள், கழுத்தில் புதையுட்னு இன்னும் கீழிறக முயற்சிக்க, வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கினாள் திவ்யா.

பெண்ணவளின் உடல் நடுக்கம், இடம், சூழ்நிலை, சுயம் உணர்த்த, அவளை மெதுவாக விடுவித்தவன், கண்ணீர் கசிந்து மடல் மூடியிருந்த பூவிழி மீது சிறு இதழொற்றல்‌ தந்து அவளை சுயம் மீட்டான்.

விழி மலர்த்தியவளின் விழி நோக்கியவன், புருவம்‌ உயர்த்தி கண்சிமிட்டி,

இப்ப நம்புறீங்களா அம்மணி? இல்லன்னா இன்னும் ஸ்ட்ராங்கா உங்களுக்கு புரிய மாதிரி நம்பிக்கை வரவைக்கட்டுமா?” என்று விஷமமாகக் கேட்க,

“தோடா... இடம் குடுத்தா மடத்தை பிடுங்குற கதையா இருக்கே... இதுக்கு மேல எந்த நினைப்பு வந்தாலும் பிச்சு பிச்சு!” இயலபிற்கு திரும்பி, அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள், உள்ளே ஓடி விட்டாள்.

முதன்முறையாக தன்னவளின் ஸ்பரிசம், அவனது ரத்தத்தில் ஊறி அந்த உணர்வு மூச்சோடு கலந்து விட்டிருந்தது. உல்லாச மனநிலையோடு அவளுடனான இந்த பொழுதை மீண்டும் அசைபோட்டு பார்த்து மகிழ்ந்தான். இவன் ஜடமாய் மாறினாலும் இந்த உணர்விற்கு மற்றும் அழிவென்பதே கிடையாது என்னுமளவிற்கு இதயத்தில் ஆழ ஊடுருவி இருந்தது.

பவளமல்லி திட்டில் அமர்ந்து, தன் தலைகோதி சுயம் மீட்டவன், சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். ஏதோ முடிவு செய்தவனாக முகத்தை அழுந்த துடைத்தவன், பின் படுக்கைக்குச் சென்றான் கண்ணன் என்கிற சத்யானந்தன். 

***

நீல வானும் நிலமும் நீரும்   

நீயெனக் காண்கிறேன்
உண்ணும்போதும் உறங்கும்போதும்                     

உன் முகம் பார்க்கிறேன்
கண்ணன் வந்து நீந்திடாது                           

காய்ந்து போகும் பாற்கடல்
உன்னையிங்கு ஆடை போல                                  

ஏற்றுக் கொள்ளும் பூவுடல்

வேறில்லயே ப்ருந்தாவனம்
விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
ஸ்வர்க்கம் இதுவோ!