Where's humanity? books and stories free download online pdf in Tamil

எங்கே மனிதன்?

உறக்கம் தெளிந்து கண்கள் வெளிச்சத்தைக் கண்டது. காலை கடன்களை முடித்து விட்டு வானொலிக்கு உயிர் கொடுத்தேன்.

"Corona virus தொற்று பெருமளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சுகாதார துறை அமைச்சு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு --- "

வெறுப்போடு வானொலியை முடுக்கினேன். என் சிந்தனை துளிகள் தூவத் தொடங்கியது.

"ச்சே.. எங்க பார்த்தாலும் corona... இந்த நாசம் புடிச்ச கிருமி எப்பதா போகுமோ... பெரும் தலைவலி..."
வெறுப்பும் சினமும் என்னை முழுமையாகக் கவ்வியது. மக்கள் கொத்துக் கொத்தாய் மடிகின்றார்களாம். அதனைக் கொண்டு என்ன செய்வது? அழுது புரண்டாலும் மான்றோர் வருவதில்லை என்று சொல்லும் அளவிற்கு அறிவு சார்ந்த நம் முன்னோர்கள் இருந்தனர். இருந்தும் என்ன பயன்? இறந்த சவங்களுக்கு ஆதரவு பேசும் வகையில் ஊரடங்கு பேரடங்கு எனப் பல சோதனைகள்.

என்னைக் கேட்டால் நான் சொல்வது ஒன்றுதான். மடிந்தோர் மடியட்டும். மறைந்தோர் மறையட்டும். உயிரோடு இருக்கும் நாம் மறைந்து என்ன செய்வது. மக்களை வீதியில் விட்டால்தான் என்ன? உலகமே அழிந்து விட போவது இல்லை. ஒரு வேளை கிருமி தொற்றினாலும் என்ன குழப்பம் நேர்ந்து விடும்? பணம் கொண்டவன் தரமான சிகிச்சை பெற்று வாழட்டும், இல்லை என்றால் போகட்டும். ஆரிலும் சாவு, நூறிலும் சாவு, எல்லா ஊரிலும் சாவு. அப்படி இருக்க, எதற்காக இப்படி அனைவரையும் வீட்டிலேயே முடக்கி வைத்திருக்கின்றனர்...

பிள்ளையைப் பார்த்து நான்கு மாதங்கள் ஆகி விட்டது. வெகு தூர அளவு பயணம் என்றால் அபராதமாம். அது கூட தகும். ஆனால், சிறைக்கு ஏற்றப் படுவார்களாம். பெரும் அவஸ்தை.

அறிவியல் புரட்சியும் நாகரீக வளர்ச்சியும் முன்னேற்றம் கண்டிருந்தாலும் ஏது பயன்? இந்தக் கிருமிக்கு ஒரு முடிவு செய்ய வழி இல்லாமல் போய்விட்டது. தொழில்நுட்பம் தந்தது வீடியோ அழைப்பு வசதி (video call). என்ன பயன்? பிள்ளையின் தலையை வருடி விட்டு சாப்பிட என்ன வேண்டும் எனக் கேட்க முடியுமா?

எல்லாம் என் விதி. உலகைப் படைத்தான் அந்த இறைவன். பின்னர், படைத்தான் மனிதனை. பணக்காரன், பிச்சைக்காரன் என வகை பிரித்தான். அவன் நெஞ்சிலும் கள்ளம் இருக்கிறது. இல்லை என்றால் ஒரு பகுதி மக்களை மாளிகையிலும் மறு பகுதி மக்களைக் குடிசையிலும் வைதிருப்பானா? அவன் வைத்தான். அவனுக்கு என்ன? அகப்பட்டவர் நாம் அல்லவா?

மொத்தத்தில் என் மனதில் ஒரு பெரும் வெறுப்பு தோன்றி வளர்ந்து இருந்தது. எதைக் கண்டாலும் வெறுப்பு. பணம் இருந்தால் எதயும் சாதிக்கலாம் என்றுதான் நினைத்து இருந்தேன்.

கைப்பேசியை எடுத்து முகநூல் பக்கத்திற்குச் சென்றேன்.

"BLACK LIVES MATTER"

முதலில் அதனைப் பற்றி அறியாமல்தான் இருந்தேன். பின்னர், தெரிந்துக் கொண்டேன். அமெரிக்காவில் கருப்பினதிற்கு எதிராய் செயல்கள் நடந்து அங்கே ஒரு பிரச்சனை. காவல் துறையினர் கையிலேயே மக்களின் மரணம். நெஞ்சை உலுக்கியது.

"JUSTICE FOR UWA"

இது ஒரு புது சம்பவம் என நினைத்து அதைப் பற்றியும் அறிய விரும்பினேன். ஊவா என்ற நைஜீரியா நாட்டு பெண் தேவாலயத்தில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாராம். ஐயோ.. என்ன அநியாயம்? முன்பு பெண்களுக்கு அநீதி நேர்ந்தால் அப்பெண்ணைப்பற்றியே குறை கூறினர். பெண்கள் இப்படி இருக்கக்கூடாது, இங்கு செல்லக்கூடாது, இதனால்தான் இவளுக்கு இந்தக் கதி என்றெல்லாம் கூறினோம். ஆனால், இப்போது? கோவிலிலே ஆண்டவனுக்கு எதிரே படித்துக் கொண்டிருந்த பெண் அவள். அவள் செய்த குற்றம் என்ன? பெண்ணாய் பிறந்ததா?

மனதில் சங்கடம் குடியேறியது. சகித்துக்கொண்டேன். மனதில் நிம்மதி பூர்ணமாய் வற்றியது.

திடீரென்று, கைப்பேசி அலறியது.

"சொல்லுங்க அம்மா..," என்று சொன்னபடி பதிலுக்கு காத்திருந்தேன்.
"அம்மா... பையன் சொல்ல சொல்ல கேட்காம குட்டாளிகளோட ஒரே விளையாட் டாய் இருந்தா... இன்னிக்கு உடம்பு சரியில்லான்னு சொன்னான். ஹாஸ்பிடல் க்குக் கொண்டு போனேன். அவங்க..." சோவென அழுதாள்.

"அம்மா.. சொல்லுங்க.. என்ன ஆச்சி?"
"அவனுக்குக் corona.."

"அம்மா.. அழாதே... அது எல்லாம் சரியா போகும்" என்று ஆறுதல் கூறி கைப்பேசியை வைத்தேன்.

உலகம் இருண்டது போல் தோன்றியது. குறவலியை யாரோ இறுக்கியது போல் ஆனது.

எங்கே சென்றது என் கருத்து? இந்தக் கிருமி பெரிய பிரச்சனை அல்ல என்று நினைத்தேன்...

புரிந்தது... மற்றவர்களுக்கு நிகழும் சோதனைகளையும் வேதனைகளையும் நாம் கண்டு அதைக் குறைத்து எடை போட்டு விடுகிறோம். ஆனால், அதே நிகழ்வு நம்மை அணுகும்போதே அதன் விளைவை நாம் உணர்கிறோம். இதுதான் உண்மை.

மனிதநேயம் புவியில் எந்த அளவிற்கு வளர்ச்சியும் உச்சமும் பெற்று இருக்கிறது என்பது ஒரு கேள்வி குறிதான். ஆனால், சுயநலம் பெருமளவு வளர்ந்து உள்ளது.

பொதுநலம் நம் சுயநலமாக மாறும் ஒரு நேரம் வரும் என்றால் அப்பொழுதுதான் மனிதநேயம் உதிக்கும். அதுவரை பொறுமையாகக் காத்திருப்போம். ஆனால், இந்தக் காத்திருப்பு நெடு காலம் வாழ்ந்தால் மனிதனும் அழிவான்; மனிதனின் பூமியும் அழியும். புரட்சியும் சுழற்சியும் மட்டும் இருந்தால் மனிதனைக் காப்பாற்ற முடியாது. ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் காட்டும் நேசத்தைக் காட்டிலும் அதிகமாய் மனிதனாய்ப் பிறந்த நாம் காட்டுவோம்; உணர்வோம்.