Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

கொஞ்சம் போர் கொஞ்சம் காதல்

சியம்காவ் மலை முகடுகளும் அம்மர்கோ மலை முகடுகளும் போர் தொடுத்து கொண்டிருந்த நேரம் அது. அந்த முகடுகளினிடையே சால்சாச் நதி வெள்ள பெருகெடுத்து வழிந்தோடியது. அவன் உதடுகள் இரண்டும் அவள் இதழ்களின் மேல் கிடத்தப்பட்டிருந்தது. அவள் கண்களும் அவன் கண்களும் சல்லாப்பித்து கொண்டிருந்தன. முகத்தில் வியர்வை துளிகள் வழிய இதழில் காதல் கசிந்து கொண்டிருந்தது. அவன் வலது கை அவள் கன்னங்களை வருடி கொண்டிருந்தது அவன் இடக்கையோ அவள் இடுப்பின் அளவினை அளந்து கொண்டிருந்தது. அவள் இரு கைகளும் அவன் பின்னந்தலையில் பின்னப்பட்டிருந்தது. சுற்றி தன் தளபதிகள் வீரர்கள் நண்பர்கள் நலம்விரும்பிகள் பாதுகாவலர்கள் என யாரையும் அந்த காதல் ஜோடி கண்டுகொள்ளவில்லை. இரண்டு நிமிடங்கள் வரை நீடித்தது அந்த காதல் போர் முத்தம்.

சுமார் இருபத்தியெட்டு மணி நேரம் நான்கு நிமிடம் நாற்பத்தைந்து விநாடிக்கு முன்.

அந்த சாலைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நாலப்பக்கமும் குண்டுகள் முழங்கி கொண்டிருந்தது.
தெருவெல்லாம் குருதி ஆறு ஓடி கொண்டிருந்தது. எட்டுத்திக்கும் மரண ஓலங்கள், ஆண்களின் அலறல்கள் பெண்களின் கதறல்கள். ஆர்ப்பரித்து ஓடிய இரத்த வெள்ளங்களில் பல்லாயிரக்கணக்கான சடலங்கள். மூக்கை பழுது பார்க்கும் பிணவாடைகள். கைக்கடிகாரங்கள் அணிந்திருந்த கைகள், திருமண மோதிரங்கள் அணிந்திருந்த விரல்கள், விலையுயர்ந்த காலணி அணிந்திருந்த கால்கள், பால்சுரந்த கொங்கைகள் என அங்குமிங்குமாக சிதறிகிடந்தது ஏராளம் ஏராளம். வான் மழை கூட பெய்ய மறுத்த அந்த நிமிடங்களில் வானூர்திகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது அது ஒரு மூடர் கூட்டத்தின் இரத்த வெறி கொண்ட ஆறாண்டு போர் .

இன்னும் அந்த சத்தம் ஓயவில்லை, நேரம் சரியாக இருபத்தாறு மணி நேரம் நான்கு நிமிடம் நாற்பத்தைந்து விநாடிக்கு பின் நகர்ந்து கொண்டிருந்தது .

மேசையில் அமர்ந்தபடி அங்கு நடப்பவைகளை மெல்ல கவனித்து கொண்டிருந்தாள் அவள். அது வரை அவள் அங்கு சுற்றி நடந்தவைகளை பொருட்படுத்தவில்லை சுற்றி இருப்பவர்களை பற்றியும் கவலை கொள்ளவில்லை. அவளின் பதினாறு ஆண்டு கால காதலுக்கு கிடைக்க போகும் பரிசை எண்ணி மட்டும் திக்குமுக்காடி போய் இருந்தாள்.

மெள்ள நகர்ந்து தன் அலமாரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை எடுத்து பார்த்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு புகைப்படங்களும் ஒவ்வொரு கதைகள் சொல்லும். படம் பார்த்து கதை சொல் என்பதை போல அவள் மனம் அவளுக்கு கதை சொல்ல ஆரம்பித்தது. அவளும் அவனும் தன் செல்ல நாய்குட்டிகளுடன் எடுத்த புகைப்படங்கள், சூரிய குளியலின் போது கதிர்கள் சொட்ட எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவனை அனு அனுவாக ரசித்து அவளே படம் பிடித்த புகைப்படங்கள் என எத்தனை எத்தனை. அத்தனையும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். பொக்கிஷ குவியலில் ஒரு புகைப்படம் மட்டும் நனைந்து இருந்தது அது அவள் கண்களால் ஏற்பட்ட பிழையாக இருக்ககூடும். அந்த புகைப்படம் மெள்ள நினைவுகளால் சூழ்ந்து மேலும் ஈரமாக்கியது.

சரியாக பதினாறு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. தன்னவனை முதல் முதலாக பார்த்த தருணம் அது.

மெச்சுப்படிகளுக்கு கீழே தன் மாஸ்டரின் அருகில் அமர்ந்து கைகளை பிசைந்து கொண்டு உட்கார்ந்து இருந்த பொழுது. எந்த வித சலனமும் இன்றி கால் நோகாமல் மெதுவாக அடிமேல் அடி வைத்து வந்த அந்த போர் வீரனை கண்டு அவள் அன்று சொக்கி தான் போனாள். வகிடெடுத்து வழித்து வாரிய தலைமயிர், புருவம் உயர்த்திய சீரிய கண்கள், அளவான சிரிப்போடு இதழ்கள், மரண வாடையின் நெடி வீசும் நடை. அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஆனால் அவளை அவன் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. ஏமாந்து போனாள். அவனை அவள் கண்கள் சுற்றி சுற்றி வந்தது. அப்போது அவளுக்கு பதினேழு வயது. காதல் அனுக்கள் கசிந்து மோனோமைன்களை கிளர்ச்சி அடைய செய்திருந்தது. அவன் சட்டை செய்யாமல் போனது அவளை என்னவோ உண்டு பண்ணியது அட்ரினலினுடன் செரொட்டோனின் துவந்த யுத்தம் நடத்தி கொண்டிருந்தது. வேகமாக வெளியே வந்தவள் தன் கைப்பையில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தாள். குபு குபு வென்று புகைத்து தள்ளினாள். ஆகா அவள் புகைக்கும் அழகை இரசித்து கொண்டே இருக்கலாம். தன் உதடுகளில் வைத்து வைத்து எடுத்தாள். சிரொடொளியின் பிம்பத்தில் அவன் தெரிந்தான். அவளை ஏற இறங்க பார்த்தான். அந்த பார்வைக்கான அர்த்தம் அவளுக்கு அன்று புலப்படவேயில்லை. மெள்ள சிரித்தாள். அவன் அந்த புன்னகைக்கு பதில் கூறாமலே அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

அன்றிரவு தன் தோழிகளிடம் அவனை இப்படி தான் குறிப்பிட்டாள் "ஜென்டில்மேன் வித் ஃப்ன்னி முஷ்டாக் ஹா ஹா"

அவன் ஓர் போர் வீரன், நூற்றுக்கணக்கான போர்களை பார்த்தவன் ஆயிரக்கணக்கான எதிரிகளை பார்த்தவன் லட்சக்கணக்கான பெண்களை பார்த்தவன். அதைவிட காதல் தோல்வியை பார்த்தவன், முதல் காதலில் தோல்வியுற்றவன். அவனை அவ்வளவு எளிதாக அனுகிட முடியாது என அவளுக்கு தெரியும் ஆனால் அவள் வயதுக்கு தான் அது புரியாமல் போனது.

அவன் மேலும் அவளை ஈர்த்தான் அது அவன் வசிகரமா அல்லது அவள் பலவீனமா என்று ஆராய்வது தேவையற்றது. ஏனேன்றால் அது காதலின் இலக்கண விதி. அன்று முதல் அவனை பின் தொடர்வதையே வாடிக்கையாக்கி அவனை மனப்பதையே லட்சியமாக்கினாள். முதலில் நட்பாக தொடர்ந்தது அவர்களது உறவு. அத்தி பூத்த சந்திப்புகளின் போது இருவரும் பரஸ்பரம் தங்கள் மனதில் உள்ளதை மனம்விட்டுப் பேசுவார்கள். ஒரு முறை அவனுக்கு எழுதிய கடிதத்தில் "உங்களுடன் சேர்ந்து திரையரங்கில் படம் பார்த்தேன் என்பதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் நட்பு கிடைத்தது என் பாக்கியம். அடுத்து உங்களை எப்போது பார்ப்பேன் என மனம் ஏங்குகிறது". பின்பு மாலை நேர சந்திப்புகள் அதிகமானது அந்த சந்திப்புகளில் காதல், ஆன்மிகம், வரலாறு, சினிமா, போர் ஆகிய உரையாடல்கள் நிறைய கலந்திருந்தது.

அவர்கள் நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அவன் பெர்சனல் பக்கங்களை அவ்வப்போது ஆவலோடு கேட்டு தெரிந்து கொள்வாள் அப்படிதான் அவன் முதல் காதலை பற்றியும் அறிந்து கொண்டாள். இதில் என்ன ஒரு அற்புதம் என்றால் அவனை அவன் முன்னாள் காதலி பார்த்தும் அதே பதினேழு வயதில் தான், பதினேழு அவன் வாழ்க்கையை புரட்டி போட்டது. அவன் முன்னால் காதலி அவன் சொந்த சகோதரியின் மகள் அதனால் காதலில் விழுவதற்கு இருவருக்கும் பெரிதாக காரணம் ஏதும் தேவைபடவில்லை. இருவரும் பரஸ்பரம் தங்கள் காதலை பரிமாறி சரசம் கொண்டிருந்தார்கள். தன் தாயையே தள்ளி வைக்கும் அளவிற்கு அவன் மேல் பிரியம் கொண்டிருந்தாள். அவளுக்குகாக எதுவும் செய்ய துணிந்திருந்தான். ஆண்டுகள் பல கழிந்தன அவள், அவன் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறி போனாள். அவள் அவனையே மிஞ்சும் அளவிற்கு கட்டளைகளையும் அதிகாரங்களையும் வீசி எறிந்தாள். இரவு பகல் பாராது அவள் ஸ்பரிசத்தின் சூட்டிலேயே வாழ்ந்தான் அந்த போர் வீரன். அவன் போதை பொருள் எதுவும் கொண்டு இருந்ததில்லை ஏனென்றால் அவன் அவளை எப்போதும் தன்னுடன் கொண்டிருந்தான்.

அப்போது தான் அவர்கள் வாழ்வில் வில்லன் நுழைந்தான். நாட்கள் செல்ல செல்ல காதல் எல்லை கடந்தது. அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு தானே. அந்த காதலே அவர்கள் இருவருக்கும் எதிரியாக உருவெடுத்தது. அவன் காட்டும் காதல் அவளுக்கு காவலாகவும், சந்தேகமாகவும், அடக்குமுறையாகவும் அதிகாரமாகவும் தெரிந்தது. அவள் சுதந்திரம் பறிபோனதை போல உணர்ந்தாள். காதலில் அடைப்பட்ட பிறகு எப்படி விடுதலை கிடைக்கும். அந்த சிறுக்கிக்கு அது பிடிபடவில்லை. அவள் உள்ளம் சுதந்திரத்தை நாடியது. நாட்கள் சென்றன வேகமாக அவள் சுதந்திரம் முழுவதுமாக பறிபோனது. அவனுக்கோ காதல் அதிகமானது அவளிடம் தீர காதலில் திளைக்க மனம் ஏங்கியது. போர் தொழில் பழகிய கைகள் ரோஜா பூக்களை கொய்ததை கண்டு எதிரிகள் எள்ளி நகையாடினர். அவனை வீழ்த்த பல திட்டங்களை தீட்டினர். அவனோ போர் வீயூகங்களை மறந்து போனான். அவளுடன் இருந்த அந்த நாட்கள் இன்பத்தேனை அவன் வாழ்வில் அள்ளி தெளித்தது. அவை அனைத்தும் ஒரு நாள் விஷமாக மாறி தன் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போடும் என்று அவன் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

விரக்தியும் வேதனையும் அவளை வாட்டி எடுத்தது அது அவளை எத்தனையோ முறை தற்கொலைக்கும் தூண்டியது. ஆனால் தன்னை மாய்த்துக் கொள்ளும் உரிமை கூட தனக்கு இல்லை என்று நினைத்து தான் மேலும் வெதும்பி போனாள். துக்கம் தாளாமல் துடித்தாள், அவள் கோபமும் ஆத்திரமும் ஒரு நாள் எல்லை கடந்தது.

அன்று இருவருக்கும் மிகப்பெரிய வாக்குவாதம் நடந்தது. அந்த உரையாடல் தங்கள் காதலை முடிவுக்கு கொண்டு வர போகிறதென்று இருவரும் அறியவில்லை. வார்த்தைகள் தடித்தன. அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை பாவம் அவளும் பெண் தானே எவ்வளவு தான் தாங்குவாள். தீர்க்கமாக முடிவெடுத்தாள், வாசல் வரை வெளியே சென்றவனை அழைத்து நான் சாகப் போகிறேன் என்றாள். அவன் அவளை திரும்பி பார்த்து புன்னகைத்தான். அவன் வெளிவந்த சிறிது நேரம் தான் தாமதம். 'டிஷ்' என்று பயங்கர சத்தம் மாளிகை முழுவதும். அவன் திரும்பி வந்து பார்த்த பொழுது தான் குடியிருப்பதாக நினைத்த இடத்தில் ஆழ் துளை. இரத்தம் வழிந்தோடி அவன் பூட்ஸை நனைத்தது. அதற்கும் சுதந்திரம் இல்லை அவன் காலோடு நின்று கொண்டது.

அவளை அப்படி பார்க்க அவனால் முடியவில்லை. அவள் நினைவில் பல நாட்கள் அவள் கல்லறையில் சில நாட்கள் என நாட்களை கடத்தினான். கண்களில் கண்ணீர் கசிவதை உணர்ந்தவன் முழுவதுமாக அடக்கி கொண்டான் அந்த துக்கத்தையும் கோபத்தையும் தன் எதிரிகளிடம் காட்ட ஆயத்தமானான்.

போரை காதலிக்க தொடங்கினான் எதிரிகளை சரசம் கொள்ள நினைத்தான். போர் பிரகடனங்களே அவன் காதல் கடிதங்கள் ஆனது. எதிரிகளின் மரணங்களே அவன் காதல் பரிசுகள் ஆனது. எதிரிகளின் கதறல்கள் அவன் காதல் கவிதைகள் ஆனது. ஆயுத்தங்களும் போர் கருவிகளும் அவன் காதல் அனைப்புகள் மற்றும் முத்தங்கள் ஆனது.

இப்படி ஒரு போர் வீரனை அவள் காதல் கொள்ள செய்வது மட்டுமல்லாமல் அவனை மனக்க வேண்டும் என்று சூளுரைப்பது அவள் சிறுபிள்ளைத்தனம். ஆனால் அவள் காதலை அளக்காமல் பொத்தாம் பொதுவாக அப்படி கூறி விடவும் முடியாது. இந்த பூமி வானத்தை உரச ஆசைப்படலாம் சூரியனை உரச ஆசைப்படலாமா!. அவன் முன்னாள் காதலியின் மறைவிற்கு அவளும் ஒரு காரணம் என அவள் காதுகள்படவே பேசிய வாய்கள் நிறைய. ஆனால் அவள் ஆசை கொண்டாள் யார் யாரோ என்னனவோ சொன்னார்கள் எதுவும் அவள் செவிகளை எட்டவில்லை. அவள் காதல் மயக்கத்தில் இருக்கிறாள் என்பதால் அல்ல அவள் தான் கொண்ட காதலில் தீர்க்கமாக இருப்பதால். தன் தங்கைக்கு எழுதிய கடிதத்தில் கூட அப்படி தான் எழுதியிருந்தாள் 'நான் ஒரு மாமனிதனை பார்த்தேன், அவர் மீது காதல் வயப்பட்டேன் அவரை நான் திருமணம் செய்ய போகிறேன்'. அவன் மீது கொண்ட காதலில் அவ்வளவு தீர்க்கமாக இருந்தாள் என்பதை இந்த வரிகளே இந்த உலகிற்கு பறைசாற்றும் .

நாட்கள் சென்றன மாதங்கள் ஓடின வருடங்கள் பறந்தன. அவள் கனிப்பு சரியாக தான் இருந்தது. பார் போற்றும் போர் வீரனாக இருந்தாலும் அடிப்படையில் அவனும் சராசரி ஆண் தானே என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது. அது சரியாகவும் போய் தொலைந்தது. தன் முன்னாள் காதலியின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு சரியான துணை அப்போது அவனுக்கு தேவைப்பட்டது . காதல் தோல்வியை கண்ட அனைவரும் செய்யும் பத்தாம் பசிலி தனம். காதல் போதையை கடந்த ஒரு தெய்வீக நிலை, அந்த போதையை அடைந்தவன் அதில் இருந்து வெளி வந்ததாக இன்று வரை சரித்திரம் இல்லை. அந்த போதையை மீண்டும் இவள் மூலம் கண்டான் . பேச்சில் இனிமையை கண்டான், உள்ளத்தில் அன்பை கண்டான், பார்வையில் அழகினை கண்டான், படுக்கையில் பேரன்பை கண்டான். ஆனால் அவர்கள் இருவரும் ஒருபோதும் கலவி கொண்டதில்லை. காதலர்களுக்கு தேவையானதாக இருக்கலாம் ஆனால் காதலுக்கு அது எப்போதும் தேவையற்றது தான்.

அவன், அவள் மீது காதல் எப்போது கொண்டான் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இருந்தாலும் அவளை எங்கு சென்றாலும் தன்னுடன் அழைத்து சென்றான். இவர்களுக்கிடையில் நெருக்கம் அதிகமாக, அவளை தன்னுடனே தங்க வைத்தான். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்று இவர்களின் குடும்பத்தார்களுக்கு கூட ஓர் விடை தெரியாத கேள்வியாக இருந்தது.

எப்போதும் அவளை தனிமையில் தன்னுடன் வைத்திருக்கவே விரும்பினான். முதல் காதலில் செய்த அதே போக்கு இவளிடமும் தொடர்ந்தது. ஆனால் அது எதற்காக என்று அவள் நன்கு அறிந்திருந்தாள். வரலாற்றில், தான் ஒரு லௌகீக வாழ்க்கையில் இருப்பதை கண்டு எதிரிகள் ஆசுவாசப்படுத்தி கொள்வார்கள். அது தன்னை வீழ்த்துவதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் எண்ணினான். அதுமட்டுமல்லாமல் இப்படிப்பட்ட போர் வீரனுக்கு லட்சக்கணக்கான பெண் ரசிகைகள் இருந்ததை அவனே பல மேடைகளில் கண்டிருக்கிறான். தனக்கு ஒரு காதலி அல்லது மனைவி இருப்பது அந்த பித்து பிடித்த இரசிகைகளுக்கும் பாமர மக்களுக்கும் தெரிந்தால், அவனுடைய அதிகாரங்கள் செல்லுபடியாகாது என்று நினைத்தான். அதுவும் ஒரு வகை அரசியல் சூட்சமம். தனக்கென யாரும் இல்லையென்று மக்கள் தங்கள் மனதில் பதித்துவிட்டால் தான் அவர்கள் வீட்டில் ஒருவனாக மாறிவிடலாம் என்ற சாணக்கிய தந்திரம் தான் அது.

எதுவானாலும் அவள் அன்பு அவனை ஓர் ஆத்மார்த்தமான காதலன் ஆக்கியது. எத்தனை அடக்குமுறைகளையும் அதிகாரங்களையும் அவள் மீது செல்லுத்தினாலும் அவள் அதை அன்புடன் கையாண்டாள். ஒருகட்டத்தில் அவளை இப்படி தான் உருவகபடுத்தி வைத்திருந்தான். 'அவள் என்னிடம் அடங்கி ஒடுங்கி என் காலடியில் கிடப்பது என் மீது கொண்ட பயத்தினால் அல்ல என் மீது கொண்ட அளவற்ற காதலினால்'.

அதனால் தான் புகையையும் மதுவையும் அரவே வெறுக்கும் அவன் கேப்ஸ்டன் சிகரட்டுகளை அவள் விரல்களில் தவழ உதடுகள் புகைக்கும் பொழுது அதை வெகுவாக இரசித்தான். அவளையும் கூடத்தான், அவளை அவன் ரசிக்காத நாளே கிடையாது அதிலும் அவள் பாப் கட் ஹேர் ஸ்டைல், வட்ட முகம் அதை தாங்கி நிற்கும் புன்னகை, குட்டை பாவாடை, சாயம் பட்ட உதடுகள், சூரிய குளியல்கள் கண்ட சிவந்த மேனி என கண்களை கொள்ளையடிக்கும் அளவிற்கு கொள்ளை அழகு அதை கண் கொட்டாமல் ரசித்து கொண்டே இருப்பான்.

ஆனால் அந்த அழகும் சில நேரங்களில் அவனுக்கு ஆபத்தாகி போனது. அது அவன் வாங்கி வந்த சாபமா அல்லது அவன் காதலிகள் பெற்ற வரமா என்று தெரியவில்லை. அவளும் இரண்டு முறை அவனால் தற்கொலைக்கு தூண்டப்பட்டாள்.

அன்று அவன், அவளை கண்டு கொள்ளவில்லை போர் வேலைகளில் மும்முரமாக இருந்தான். எதிரிகளை பழிதீர்க்கும் தலையாய கடமையை செய்து கொண்டிருந்தான். போரை காதலிக்க தொடங்கியவனை தன் பக்கம் திருப்ப அவன் முன்னாள் காதலி செய்ததை போலவே தன் தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து தன் நெஞ்சில் வைத்து சுட்டுக் கொண்டாள். அவர்கள் காதல் செய்த புண்ணியமா என்று தெரியவில்லை உயிர் பிழைத்தாள். அது தான் அவளுக்கு முதல் அனுபவம். தற்கொலை பழகி போனதா என்று தெரியவில்லை மீண்டும் ஒரு முறை அதை பரிட்சயித்து பார்த்தாள். இந்த முறை அது காதல் கவன ஈர்ப்பு போராட்டமாக இருந்தது. போர் சூழல் காரணமாக வீட்டிற்கு வாராமல் தன் சக பெண் வீராங்கனைகளுடன் சுற்றி திரிந்ததால் மூன்று மாதங்கள் அவளை காண அவன் வரவில்லை. முப்பத்தைந்து தூக்க மாத்திரைகளை கையில் வைத்துக் கொண்டு அவன் வரவிற்காக காத்திருந்தாள். அவன் வராமல் போயிருந்தால் அன்றே அந்த காதலி வரலாற்றில் இடம் பெற்றிறுப்பாள். ஆனால் வைராக்கியம் கொண்ட காதல் கிறுக்கி ஆயிற்றே அவனை மனக்காமல் இந்த உயிர் உடம்பை விட்டு போகாது என்று உயிரை கையில் பிடித்து வைத்திருந்தாள். அது தான் அவளுக்கு இரண்டாவது அனுபவம். இன்று இது மூன்றாவது முறை.

நினைவுகளின் அசைவில் அந்த நனைந்த புகைப்படத்தை எடுத்து முத்தமிட்டாள். சிறிது நேரம் அவள் நெஞ்சாங்கூட்டில் வைத்து அனைத்து கொண்டாள். இரண்டு முறை தோற்றாலும் மூன்றாம் முறை தோற்கமாட்டேன் என கர்வம் கொண்டாளா என தெரியவில்லை. முகம் முழுவதும் அப்படி ஒரு பிரகாசம்.

அன்று போர் உச்சத்தை அடைந்திருந்தது. குண்டுகள் மழை பொழிந்த வண்ணம் இருந்தன. அவள் அருகே வந்தவன் கையில் இருந்த புகைப்படத்தை கீழே வைத்து விட்டு

"அவ்வளவு தான் எல்லாம் முடிந்துவிட்டது. நீ தப்பித்து சென்று விடு. இங்கே இனி இழக்க ஒன்றுமில்லை." என்றான் அந்த போர் நாயகன்.

உலகநாடுகளின் கண்களுக்கு சிம்மசொப்பனமாய் இருந்தவன் இன்று தழுதழுத்த குரலில் அவளுக்கு கட்டளையிட்டான்.

அவள் அவனருகே வந்து காதுகளில் கிசுகிசுத்தாள்.

"உன்னை விட்டு எங்கும் செல்லமாட்டேன்"

தன் வாழ்நாளில் முதன் முதலாக கண்களில் கண்ணீரை தவழவிட்டான். இது வரை எத்தனை எத்தனையோ துன்பங்கள் நேர்ந்த போதிலும் கல்லாக இருந்தவன் இன்று காதல் கடலில் கரைந்து ஓடுகிறான். அந்த கண்ணீர் துளிகள் யாவும் அவளுக்காக அவன் சேமித்து வைத்த காதல் துளிகள்.

அவள் காதலுக்கு முன் தன் காதல் எந்த விதத்திலும் சளைத்தல்ல என்று நிரூப்பிக்க கூட அவன் அன்று அதை செய்திருக்கலாம். ஆம் யாரும் எதிர்பாராத அந்த காரியத்தை செய்தான். அவளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தவன் தன் வரலாற்றில் நிகழாத ஒன்றை நிகழ்த்திக் காட்டினான். அவளை மெள்ள நெருங்கி அவள் ஸ்பரிசத்தை தன் சூட்டினாள் நனைத்து இறுக அனைத்து அவள் மூச்சை நிறுத்தும் வண்ணம், சியம்காவ் மலை முகடுகளும் அம்மர்கோ மலை முகடுகளும் போர் தொடுக்க சால்சாச் நதி வெள்ள பெருக்கெடுக்க. கண்கள் நான்கும் சல்லாப்பித்து கொள்ள. இதழில் காதல் கசிய. சுற்றி தன் போர்தளபதிகள் வீரர்கள் நண்பர்கள் நலம்விரும்பிகள் பாதுகாவலர்கள் என யாரையும் பார்க்காமல் ஓர் நீண்ட நெடிய காதல் போர் முத்தத்தை கொடுத்தான்.

அவன் எழுதிய அந்த கடைசி குறிப்பில் இப்படியாக குறிப்பிட்டிருந்தான் 'நான் இப்போது, இந்த மண்ணை விட்டு பிரியும் தருணத்தில், அவளை என் மனைவியாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளேன், பல ஆண்டுகால நட்பிற்குப் பிறகு, என்னுடைய தலைவிதியை என்னுடன் பகிர்ந்து கொள்ள கிட்டத்தட்ட எதிரிகளால் முற்றுகையிடப்பட்ட இந்த போர் வீரனை மனந்து மரணத்திலும் என்னுடன் என் மனைவியாக சேர வேண்டும் என்பதுவே அவளுடைய விருப்பம். அதை நான் நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறேன்.'

இதுவரை அவளுக்கென்று அவன் எதுவும் செய்ததில்லை. அவள் காதலுக்கு அவன் தகுதியானவனா என்று கூட அவன் அவ்வப்போது நினைத்ததுண்டு ஆனால் இன்று அவள் காதலுக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்க தயாரானான்.

இதோ திருமண ஏற்பாடுகள் தடைபுடலாக நடந்து கொண்டிருக்கிறது. அவள் சூளுரை இன்று நிறைவேற போகிறது. அவளுக்கு அப்போது வயது முப்பத்தி மூன்று அவனுக்கோ ஐம்பத்தி ஆறு எவ்வளவு வயது இருந்தால் என்ன. காதலுக்கு கண்கள் கிடையாது மொழி கிடையாது மதம் கிடையாது தேசம் கிடையாது இனம் கிடையாது இல்லை அது இருக்கக்கூடும் யார் கண்டார்.

யாரும் அறியாத ஆள் அரவமற்ற இரகசிய மாளிகையின் பாதாள அறையில் மகா சாம்ராஜ்யத்தின் நாயகன் தன்னிகரில்லா போர் தலைவன் இராஜ போர் உடையில் வீற்றிருக்க, இராஜ விருந்து காத்திருக்க, பட்டத்து இராணி கருப்பு கவுனை அணிந்து வர, சிவப்பு ரோஜாக்களின் இசை கமழ, நண்பர்கள், வீரர்கள் புடைசூழ திருமண ஒப்புதலில் இருவரும் கையெழுத்திட்டனர்.

அவளுக்கு அப்படி ஒரு பேரானந்தம் அவள் கால்கள் தரைகளில் இல்லை பிறந்த பலனை அடைந்த களிப்பில் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது.

அவள் வழக்கம்போல தன் பெயரை தன் குடும்ப பெயருடன் எழுத அதை பார்த்து அவன் புன்னகைத்தான். அவனை மெல்ல தன் தோள்களில் இடித்து அந்த பெயரை அடித்து தன் பெயருடன் தன்னவன் பெயரையும் கையெழுத்திட்டு தன்னவனை கரம்பற்றினாள் அந்த காதல் சண்டாளி.

அவன் முதன் முதலில் அவளை நேரில் சந்தித்தபோது, கேட்ட கேள்வி ஒன்று அவனுக்கு இன்றும் நினைவிருக்கிறது. அதை அவள் இன்றும் தொடர்ந்து செய்வது தான் அவள் காதல் சூத்திரமே. அந்த கேள்வியை மறுபடியும் கேட்க ஆசைபட்டான் அந்த போர் நாயகன்

"ஏன் இப்படி விழுங்குவது போல பார்க்கிறாய்? "

அன்று எப்படி அவளுக்கு தலை கால் புரியவில்லையோ இன்றும் அதே உணர்வு. மெல்ல சிரித்தவள் மீண்டும் அவனை விழுங்க தொடங்கினாள்.

காதலிலும் போரிலும் கருணையை எதிர்பார்க்க கூடாது என்பது இராஜ நியதி. அது பொய்த்து போகும் அளவிற்கு மிக பெரிய பொய்யாக இருக்க கூடும் என்று நினைத்ததுண்டு. ஆனால் அதை மெய்பிக்க இந்த காதல் ஜோடிகள் முடிவெடுத்தனர். எதிரிகளின் கருணை தங்களுக்கு தேவையில்லை என உறுதியாக இருந்தார்கள். இராமயண போரில் இராமனின் கருணையை இராவணன் எதிர்பார்க்கவில்லை. இராமனும் அவனுக்கு கருணை வழங்க சித்தமில்லை.

அவன் அசுரர்களை கொல்லும் இராவணனும் இல்லை, தேவர்களை காக்கும் இராமனுமில்லை. அவன் இரண்டுக்கும் மத்தியில் இருக்கும் ஆச்சரியம்.

அவன் சந்தித்த போர்களிலயே மிக கொடுமையான போரும் இது தான் கொண்ட காதலிலே மிக இனிமையான காதலும் இது தான். அதை இவ்வளவு சீக்கிரம் இழக்கிறோம் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

தேனீர் கோப்பையை ஏந்தியவாறு தன் சகாக்களிடம் தன் கடைசி உரையாடல்களை நிகழ்த்தி கொண்டிருந்தான். 'இப்போது கூட ஒன்றுமில்லை தப்பித்து விடலாம்' என்று கூறியவனை. சிரித்துக் கொண்டே முதுகில் தட்டிக் கொடுத்து

"நான் கோழை என்று நினைத்துவிட்டாயா?

எல்லாம் இழந்து போர்களத்தில் நிராயுதபாணியாக நின்ற பிறகு பயந்தோடி வாழ்ந்து வயதாகி சாவாது யாருக்கு என்ன லாபம்.

அவளுக்காகவா?"

தேனீர் கோப்பையை உயர்த்தியவாரே அவளை கைகாட்டினான். அவள் சிரித்துக்கொண்டே மதுக்கோப்பையே முத்தமிட்டு கொண்டிருந்தாள்.

"ம் லட்சியத்தை நோக்கிய கனவு தகர்ந்த பிறகு அதை நினைத்து எதிரியிடம் போராடி அவனிடம் வீர மரணம் அடைய எனக்கு விருப்பமில்லை.

இந்த பயணம் இதோடு நிற்கபோகிறது நான் ஆரம்பித்த பயணத்தை நான் முடிப்பது தான் சரி.

ஒரு காரியத்தை செய்வதற்கு முன் எவ்வளவு வேண்டுமானாலும் யோசிக்கலாம் ஆனால் முடிவை எடுத்த பிறகு அதற்கு..." சிரித்துக் கொண்டே சகாக்களை இறுக அணைத்துக் கொண்டான்.

அவள் என்றோ எழுதியதை இன்று அவள் நிறைவேற்ற காத்திருக்கிறாள்.
அவனை முதன்முதலாக சந்தித்த போது அவள் டைரியில் இப்படி தான் எழுதியிருந்தாள்.

'நீ எங்கு சென்றாலும் நான் உன்னை பின் தொடர்ந்து வருவேன். அது உன் இறப்பாக இருந்தாலும் சரி'.

அங்கு திரண்டிருந்த அனைவர் முன்னிலையிலும் தன் ஆசை காதலியின் கையை பற்றி முத்தமிட்டான். அந்த பாதாள மாளிகையின் உள் அறைக்கு சென்றான். திரைச்சீலை வேகமாக அவர்களை அள்ளி அணைத்து கொண்டது.

அந்த திரைச்சீலைகுள் நடந்த உரையாடல் இந்த உலகிற்கு தெரிந்திருந்தால் இப்படிபட்ட காதலர்களை அப்படி செய்திருக்க விட்டிருக்காது விதி யாரைவிட்டது. சேராத காதல் தான் சொர்க்கத்தில் சேரும் என்று யாரோ சொல்லி போனார்கள் அது எவ்வளவு உண்மை. சேராத காதல் தான் காவியமாகும் கவிபாடும் இந்த காதலும் ஒரு காவியம் தான் அது நிச்சயம் வரலாற்றில் பல கவிதைகளை பாடும்.
'நான் ஏன் போர் வீரன் ஆனேன்
நான் ஏன் கோபம் கொண்டேன்
நான் ஏன் வன்மம் கொண்டேன்
நான் ஏன் குரோதம் கொண்டேன்
நான் ஏன் காதலையும் கொண்டேன்.

கொடுமைக்கார தந்தையின் வயிற்றில் பிறந்தேன். இந்த உலகத்தில் எதனாலும் ஈடு செய்ய முடியாத தாயின் அன்பை இழந்தேன். இருந்த ஓரிரு நண்பர்களையும் பிரிந்தேன். நான் பிறந்து வளர்ந்த சாலைகளில் ஒரு துண்டு பிரட்டுக்காக பசியில் வாடினேன். மாலை நேரங்களில் சோற்றுக்காக இரயில் நிலையங்களில் ஓவியங்களை விற்றேன். ஹூம். வாழ்க்கையில் திரும்பிய பக்கம் எல்லாம் தோல்வி தோல்வி. தோல்வியே நான் விரும்பி அணியும் உடையாகிபோனது. வாழ்க்கையை தொடர்வதே அர்த்தமற்றது என்றிருந்தேன். வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என்று நினைத்த போது தான் இந்த மண் எனக்கு எல்லாம் கொடுத்தது. இந்த மண்ணுக்கு நான் நிறைய கடமைபட்டிருக்கிறேன் அந்த கடமையை நிறைவேற்ற தான் லட்சியம் கொண்டேன். இராணுவத்தில் சேர்ந்தேன் யார் யாரையோ எதிரியாக நினைத்து அழித்தேன்.

ஹா ஹா ஹா...

ஹும்

அன்று நுண்கலைக்கழகத்தில் சென்று ஓவிய கலை பட்டம் பெற ஆசைப்பட்டவனை இந்த உலகம் அடித்து உதைத்து தடுக்காமல் இருந்திருந்தால்....

உன்னை நான் அன்றே சந்தித்திருந்தால்...

ஹா ஹா ஹா...

வாழ்க்கை எவ்வளவு அழகானதாக இருந்திருக்கும்." என்று ஜன்னலின் வழியே குண்டு மழை பொழிந்த வானத்தை பார்த்து கொண்டு அவளிடம் கேட்ட அந்த கேள்விகளுக்கு அவளிடம் பதில்கள் இல்லை. விடையில்லாமல் கேள்விகள் எப்போதும் பிறப்பதில்லை. அந்த கேள்விகளுக்கு அவள் பதில் கூறவில்லை என்றாலும் காலம் பதில் சொல்லும்.
முப்பது மணி நேரம் நான்கு நிமிடம் நாற்பத்தைந்து விநாடியை கடந்திருந்தது. மதியவேளை என கதிரவனும் நிரூபித்தான். ஒரு நீண்ட நிசப்தம் நிலவியது. அவன் நீண்ட பெருமூச்சு விட்டபடி அவள் அருகே வந்து அமர்ந்தான். தொண்டை குழியில் எச்சிலை விழுங்கி கொண்டு அவனை பார்த்தாள். சயனைடு குப்பிகள் அவள் உள்ளங்கைகளை முத்தமிட்டு கொண்டிருந்தது. தோட்டாக்கள் அவன் தூப்பாக்கியினுள்ளே இருந்து புடைத்து வெளி வர துடித்திருந்தது. காதல் ஜோதியை பற்ற வைக்க காலம் காத்திருந்தது. அவன் கன்னசைவின் கட்டளைக்காக காத்திருந்தாள். காதல் சாசனம் வெகு சீக்கிரமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

தன் பதினேழு ஆண்டு கால தோழி பதினான்கு ஆண்டு கால காதலி நாற்பது மணி நேர மனைவி தன் கண் முன்னே சாகபோவதை அவன் எப்படி பொருத்துக் கொள்வான். கண்களை மூடிக் கொண்டு தூப்பாக்கியை வலது நெற்றி பொட்டில் வைத்து காத்திருந்தான். அவள் சரிந்து விழும் சத்தம் கேட்டது மதுக்கோப்பை ரோஜாவின் மேல் விழுந்து நனைத்து கொண்டிருந்தது. 'டப்' என்று அந்த காதல் சத்தம் ஏனோ அது இந்த உலகிற்கு கேட்கவில்லை. கேட்க மறுத்ததா அல்லது மறைத்ததா என்று தெரியவில்லை.

அவர்கள் உடல்கள் உடனே அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. தீயினை கொண்டு அந்த காதலை சாம்பலாக்கினார்கள். பின்பு அந்த காதல் ஆழ புதைந்து அடுங்கி ஒடுங்கி அமைதியானது இன்னும் சில காதல் துகள்கள் மட்டும் காற்றில் கலந்து காதல் விதைகளை தூவிச் சென்றது.

சித்திரை திங்களில் சூரிய உதயத்திற்கு பின் வெளியான அன்றைய நாளிதழ்களில் இப்படியாக எழுதியிருந்தது 'இறந்துவிட்டான்'. ம்ஹூம் ஆனால் அது ஒரு வரலாற்றுப் பிழை. அவர்கள் இப்படி தான் எழுதியிருக்க வேண்டும் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த காதலன் 'அடோல்ப் ஹிட்லர்' தன் காதலி 'இவா பிரான்' னுடன் மன்னிக்க 'இவா ஹிட்லர்' உடன் காதலில் கரைந்துவிட்டான் என்று.

- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி