Read Duty to the last ... by BoopathyCovai in Tamil Moral Stories | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

கடைசி வரை கடமை...

செப்டம்பர்-24

ஹுசைனிவாலா (இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லை) – பஞ்சாப்.

இரண்டடுக்கு இரும்பு முள்வேலி உலக வரைபடத்திலிருந்து இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனியாகப் பிரித்துக் காட்டுகின்றது.

நேரம் நள்ளிரவு 12.45-ஐக் கடந்திருந்தது. கடும் பனிப்பொழிவின் காரணமாக, ஹுசைனிவாலா சர்வதேச எல்லை முழுவதும் ஒரு பனிப்பிரதேசம் போல காட்சியளித்திருந்தது. அந்தக் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், துப்பாக்கியேந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் நாலாப்புறமும் ரோந்துப் பணியில் தீவிரம் காட்டியிருந்தனர்.

பதுங்குக் குழிகளில் ஏறி இறங்கியவாறே, தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தான் ஜாஃபர் காதிம் என்ற அந்த இருபத்தைந்து வயது இராணுவ இளைஞன்.

“ஜாஃபர்... ஜாஃபர்...” என்று மேலே இருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பி மேலே பார்த்த ஜாஃபர் புன்னகைத்தான்.

மேலே அவன் நண்பன் வீர் பிரதாப்சிங் ஆர்யா, கையில் 9MM உயர் ரக ரைபிள் துப்பாக்கியுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். அவன் தலையில் கட்டியிருந்த முண்டாசு, அவனை ஒரு சீக்கிய இளைஞன் என்று இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டியிருந்தது.

BSF பயிற்சி முகாமில் ஒன்றாகப் படித்து, எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களாக பணியமர்த்தப்பட்டிருந்த அவர்கள் இருவரும், அந்த கனமான இராணுவ உடைக்குள் தங்களை கச்சிதமாகப் பொருத்தியிருந்தார்கள்.

“டேய் ஜாஃபர் … வா...! சீக்கிரம் போகலாம். ” என்றான் ஆர்யா.

“ ஆர்யா! ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு. ” என்று பதுங்குக் குழியில் இருந்து கைகளை மேலே வைத்து ஏறுவதற்காக முயற்சித்தான் ஜாஃபர்.

அவன் கையைப் பிடித்து மேலே தூக்கிய ஆர்யா,

“ஜாஃபர்... நேரம் ரொம்பக் குறைவாக இருக்கு... நாம போக வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கு. சீக்கிரம் வா...” என்று ஜாஃபரைத் தட்டிக் கொடுத்தவாறே அந்த இடம் முழுவதையும் கண்களால் அலசிக் கொண்டே முன்னேறியிருந்தான் ஆர்யா.

அந்த மயான அமைதியிலும், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களின் காலடிச் சத்தம் மட்டும் தனியாகத் தெரிந்தது.

சற்று நேர இடைவெளியில், தண்ணீர் குடிக்கும் இடம் வந்தது. பாதுகாப்புப்படை வீரர்கள் ஒவ்வொருவராக அங்கு வருவதும் போவதுமாக இருந்தனர்.

அங்கு வந்த இளைப்பாறிய ஜாஃபர், ஆர்யாவைப் பார்த்து பேசத் தொடங்கினான்.

“ஆர்யா... ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு நெனெச்சேன். உங்களோட பாரம்பரிய தற்காப்புக் கலையைப் பற்றி நான் நெறையா கேள்விப் பட்டிருக்கேன். அதைப்பற்றி தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு.“

அவனைப் பார்த்து புன்னகைத்த ஆர்யா,

“ஜாஃபர்... அந்த தற்காப்புக் கலையோட பெயர் “கட்கா”. சீக்கியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலை. “

“அதில் அப்படியென்ன சிறப்பு இருக்கு ஆர்யா?” என்றான் ஜாஃபர்.

“ "கட்கா” – இது ஒரு ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற தற்காப்புக் கலை. எப்படிப்பட்ட அபாயக் கட்டத்தில் இருந்தாலும், நம்மை நாம் தற்காத்துக் கொண்டு, அதிலிருந்து மீண்டு வருவதற்கான யுக்திகள் இந்தக் கலையில் இருக்கு ஜாஃபர்... " என்று முடித்தான் ஆர்யா..

“ஓஹோ! அப்படியா...?”

“ஆமாம் ஜாஃபர்... உன்னோட வலிமையை உனக்கே உணர்த்துவதுதான் இந்தக் “கட்கா” கலையோட சிறப்பு. எப்பேர்ப்பட்ட வீரானாக இருந்தாலும் அவனை எதிர்கொள்ள தேவையான மன வலிமையை நாம் வளர்த்துக்கொள்ள உதவும் தற்காப்புக் கலை தான் இது.”

“ஆர்யா...! கண்டிப்பாக நானும் அந்தக் கலையைக் கத்துக்கணும்னு ஆசைப் படறேன்.”

“ஹ்ம்ம்..! நிச்சயமாக ஜாஃபர்! ...”

சற்று வெதுவெதுப்பாக இருந்த தண்ணீரைக் குடித்திருந்த அவர்கள் இருவரும், ஒரு ஐந்து நிமிட ஓய்வுக்குப் பிறகு கிளம்பத் தயாராயிருந்தார்கள். மூடுபனியின் வீரியம் இன்னும் அதிகரித்திருந்தது. சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தியபடி வேக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள் இருவரும்.

அடுத்த சில மணி நேரங்களில், சீனியர் கமாண்டன்ட் சஞ்சய் மிஸ்ராவின் இராணுவ வாகனம் இவர்களைக் கடந்து சென்று முன்னே நின்றது. அதிலிருந்து இறங்கிய அவர், அங்கிருந்த இராணுவ வீரர்களை நோக்கி பேச ஆரம்பித்திருந்தார். அங்கு கூடியிருந்த அனைவர் மனதிலும் ஒரு வித ஆச்சர்யம் கலந்திருந்தது. உடனே, அவரை நோக்கி நெருங்கிய ஜாஃபரும் ஆர்யாவும்,

“ BSF – கான்ஸ்டபிள் வீர் பிரதாப்சிங் ஆர்யா ரிப்போர்ட்டிங் சார்...! “

“ BSF – கான்ஸ்டபிள் ஜாஃபர் காதிம் ரிப்போர்ட்டிங் சார்...! “

என்று சல்யூட் அடித்தவாறே நின்றார்கள்.

அவர்களின் சல்யூட்டை ஏற்றுக் கொண்ட சீனியர் கமாண்டன்ட் சஞ்சய் மிஸ்ரா, அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்த கம்பீரமான தொனியில் பேச ஆரம்பித்தார்.

“MY DEAR BOYS, THIS IS AN IMPORTANT OFFICIAL CONFIRMATION. EVERYBODY KNOWS THAT, COMING SEPTEMBER-28 IS THE BIRTHDAY OF THE GREAT MARTYR AND THE FREEDOM FIGHTER BHAGATH SINGH.

நாம் இப்ப நின்னுகிட்டு இருக்கிற இந்த மண், விடுதலைப் போராட்டத் தியாகி-மாவீரன் பகத்சிங்கோட உடல் தகனம் செய்யப்பட்ட ஹுசைனிவாலா மண். இந்த மண்ணில் நின்று நம் தாயகத்தைக் காக்கும் பாக்கியம் நமக்குக் கெடைச்சதுல நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.

வர்ற 28-ஆம் தேதி, மாவீரன் பகத்சிங் பிறந்தநாளன்று, மரியாதைக்குரிய நம்முடைய பாரதப் பிரதமர் பிரதீப் சவான் அவர்கள், ஹுசைனிவாலா எல்லையில் அமைந்திருக்கின்ற பகத்சிங் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்த இருக்கிறார்.

SO, எல்லையில் பயங்கரவாத ஊடுருவல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கு. எனவே, நாம இன்னும் கொஞ்சம் உன்னிப்பாக செயல்பட்டு அதை முறியடிக்க வேண்டும். இது ஒரு சவாலான காரியம் . LET’S DO IT AND GUARD THE NATION SAFELY.” என்று அவர் பேசி முடித்திருந்தார்.

“YES சார்...!” என்ற கர்ஜனை கூட்டத்தில் இருந்து மிக பலமாக எதிரொலித்திருந்தது. அடுத்த ஐந்தாவது ஆவது நிமிடத்தில் எல்லாரும் அவரவர் பணிகளுக்குத் திரும்பியிருந்தார்கள்.

2

காலை பத்து மணி செய்திகளுக்காக, டிவி திரையைப் பார்த்துக் கொண்டே, காக்கிச் சட்டைக்குள் மாறியிருந்தார் ஹுசைனிவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மா. நாற்பது வயதைக் கடந்திருந்தும் தோற்றத்தில் இன்னும் இளமயாகத் தெரிந்தார். சற்று நேரத்தில், டிவி திரையில் இருந்து பஞ்சாப் டுடே செய்தி சேனலின் செய்தி வாசிக்கும் பெண், அழுத்தம் திருத்தமாக பஞ்சாபி மொழியில் பேச ஆரம்பித்திருந்தாள்.

வணக்கம். இன்றைய முக்கியச் செய்திகள்

“பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா சபை முழு ஆதரவு.”

“செப்டம்பர்-28. விடுதலைப் போராட்டத் தியாகி – மாவீரன் பகத்சிங் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடம் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம், ஹுசைனிவாலா எல்லையில், மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் பிரதீப் சவான், பகத்சிங்கின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார்.”

“அதையொட்டி ஹுசைனிவாலா இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு பலப்படுத்தப் பட்டுள்ளது.”

“பயங்கரவாதிகள் நாச வேலையில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக இந்திய புலனாய்வுத் துறை நிறுவனமான NIA (நேஷனல் இண்டலிஜென்ஸ் ஏஜென்சி)

தெரிவித்துள்ளதையடுத்து, ஹுசைனிவாலா எல்லையோர கிராமங்களில் 24 மணி நேர தீவிர போலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.”

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய இராணுவம் நடத்திய “SURGICAL - STRIKE”-க்கு ஆதாரம் கேட்ட எதிர்கட்சிகளுக்கு, இந்திய இராணுவ தலைமை தளபதி கடும் கண்டணங்களைத் தெரிவித்துள்ளார்.”

“பாகிஸ்தானால் தன் அப்பா இறக்கவில்லை. போர் தான் அவரைக் கொண்டிருக்கிறது” என்று பதிவு செய்திருந்த டெல்லியைச் சேர்ந்த இராணுவ வீரரின் மகளுக்கு ஆதரவும் எதிர்ப்பு அலையும் வலுத்து வருகின்றது.”

“சமீபகாலமாக சினிமா நடிகர்களின் ஆதிக்கம் அரசியலில் அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து.

என்று வேக வேகமாக வாசித்து முடித்திருந்தாள்.

டிவியைப் பார்த்துக்கொண்டே ஒரு வழியாக காலை சிற்றுண்டியை முடித்திருந்த இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மா, பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, அண்ணார்ந்து குடிக்க முற்பட்ட அடுத்த வினாடி, அவர் பாக்கெட்டில் இருந்த செல்போன் கதறியது.

எடுத்து, ” ஹலோ...” என்றார்...

மறுமுனையில் சப்-இன்ஸ்பெக்டர் குர்தாஸ் சிங் லைனில் இருந்தார்.

“ஹலோ சார் .... நான் குர்தாஸ் சிங் பேசுறேன்...”

“சொல்லுங்க குர்தாஸ் என்னாச்சு...? ஏதாச்சும் EMERGENCYயா…?” என்றார் ஆச்சர்யம் கலந்த குரலில்...

“எஸ்… சார்... IT’S AN EMERGENCY....”

“எஸ்… ப்ளீஸ்....சொல்லுங்க...”

“சார்.... இந்தியப் பிரதமர் கலந்து கொள்கிற நிகழ்ச்சியில தாக்குதல் நடத்தப் போறதா ஒரு சர்ச்சைக்குரிய ஆடியோ ஆதாரம் கெடைச்சிருக்கு சார்... ”

“என்ன…??? ” என்றார் ஒரு வித பயம் கலந்த ஆச்சர்யத்துடன்.

“ஆமாம் சார்... அதுவும் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கெடைச்சுது.”

சற்று நேரம் யோசித்த விகாஷ் சர்மா,

“இஸ் இட் ...?” நல்லா செக் பண்ணீங்களா…?” . அது சும்மா சாதாரண மிரட்டலா…? இல்ல சீரியஸ் ஆனா மேட்டரா குர்தாஸ்...? ”

“இல்ல சார்.... இது சாதாரண மிரட்டல் மாதிரி தெரியலை சார். ஒரு செல்போன் TOWER இன்ஜினீயர், அவரோட போன்ல RECEIVE ஆன CROSS TALK CALL DETAILS-ஐ ரெக்கார்ட் பண்ணி கொண்டு வந்துருக்கார் சார்... விஷயம் கொஞ்சம் விபரீதமாகத்தான் சார் இருக்கு. ”

சற்றே முகம் மாறிய போலிஸ் இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மா,

“ஓகே.. குர்தாஸ்... நான் கெளம்பிட்டேன்... நான் இன்னும் சரியா பதினைந்து நிமிடத்துல ஸ்டேஷன்ல இருப்பேன்... அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருங்க …” என்றவர் அடுத்த மூன்றாவது நிமிடத்தில் போலிஸ் ஜீப்பில் ஏறியிருந்தார். போலிஸ் ஜீப் வேகமெடுத்திருந்தது.

3

செப்டம்பர்-25.

ஹுசைனிவாலா எல்லை.

அதிகாலை மூன்று மணி. கண்காணிப்பு கோபுரத்தின் மேல் அமர்ந்திருந்த அந்த இராணுவ வீரன், எல்லையின் ஒவ்வொரு நிகழ்வையும் தன் குறிப்பேடுகளில் உடனுக்குடன் பதிவு செய்து, கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தான்.

தலையில் மாட்டியிருந்த ஹெட்லைட்டின் வெளிச்சத்தால், எல்லையை ஒட்டிய பகுதிகளை பைனாகுலர் வழியாக பார்த்துக் கொண்டே முன்னேறியிருந்தான் ஜாஃபர். அவனை இடைவெளி விட்டுப் பின் தொடர்ந்திருந்த ஆர்யா, சந்தேகத்திற்கிடமான பகுதிகளை அலசி ஆராய்ந்து கொண்டே வந்து கொண்டிருந்தான்.

“ஆர்யா... இன்னிக்கு நியூஸ் பாத்தியா?” .

“ஹ்ம்ம்.. பார்த்தேன்... என்ன விஷயம் ஜாஃபர்…???”

“டெல்லி எக்ஸ்-ஆர்மி மேஜரோட பொண்ணு, அவங்க அப்பாவ பாகிஸ்தான் இராணுவம் கொல்லலை... போர் தான் கொன்னுடுச்சுன்னு வருத்தத்தோடு சொல்லிருக்கு...” என்றான் ஒருவித எரிச்சலோடு.

“ஆமாம் பார்த்தேன் ஜாஃபர்...! அந்தப் பொண்ண நெனைச்சா இன்னும் வேடிக்கையாத்தான் இருக்கு. அவங்க அப்பா இந்த நாட்டுக்கு ஆற்றுன தியாகம் சொல்லில் அடங்காது.”

“அதைவிட இந்திய ராணுவம் நடத்திய “SURGICAL - STRIKE”-க்கு ஆதாரம் கேட்குறானுங்க ஆர்யா...! இதை யார்கிட்ட சொல்ல ஆர்யா?

“விடு ஜாஃபர்... அரசியல்வாதிகள்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்??”

“அது எப்படி ஆர்யா..?? இங்க இத்தனை பேர் கடும் குளிரையும், சுட்டெரிக்கும் சூரியனையும் பொருட்படுத்தாம நாட்டுக்காக எல்லையில் பாடுபட்டு உயிர்த் தியாகம் பண்றாங்க... ஆனா அதைக் கொஞ்சம் கூட மதிக்காம, நாக்கில நரம்பில்லாம பேசுறாங்களேடா... இதுக்காகவாடா நாம இவ்வளவு கஷ்டப்படறோம்…???”

“ஜாஃபர்... விடு! நீ இதையெல்லாம் பெருசா எடுத்துக்காதே..! எல்லாரும் ஒரே மாதிரி இருக்கணும்னு நாம எதிர்பார்க்க முடியாது. மாவீரன் பகத்சிங்கின் உடல் புதைக்கப்பட்ட மண்ணில் இப்ப நாம நின்னுட்டு இருக்கோம். அதை மட்டுமே மனதில் நிறுத்திக் கொண்டு, பலனை எதிர்பாராது நாம் நம் கடமையை செய்வோம். எல்லோரும் நம்மைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு நாள், சீக்கிரம் வரும்... மனசை தளரவிடாதே.... ” என்ற ஆர்யா பைனாகுலர் வழியாக தன் பார்வையை செலுத்தியிருந்த அடுத்த கணம் ,

எதிர்முனையிலிருந்து பயங்கர சப்தத்துடனும், அசுர வேகத்துடன் வந்த ஒரு தோட்டா, ஜாஃபரின் வலது தோள்பட்டையை உரசிச் சென்றது. ஒரு நிமிடம் சுதாரித்துக்கொண்ட இருவரும், ஓட ஆரம்பித்து பதுங்குக்குழிகளில் பொத்தென்று விழுந்தார்கள். இருவருக்கும் கை கால்களில் பலத்த அடி.

வலியைப் பொறுத்துக் கொண்டு இருவரும் எழுந்து மேலே பார்த்த நொடி,

எதிர் முனையிலிருந்து பயங்கரவாதிகள் மூன்று பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டபடியே முன்னேறி வந்துகொண்டிருந்தார்கள்.

சற்றும் எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த நமது இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் தங்கள் பங்கிற்கு பதில் தாக்குதலில் தீவிரம் காட்டியிருந்தனர்.

ஜாஃபரின் தோள்பட்டையில் இருந்து ரத்தம் பீறிட்டு கிளம்பியிருந்தது. வேறு வழியின்றி தன் தலையில் கட்டியிருந்த முண்டாசை கழற்றியிருந்த ஆர்யா அவன் தோள்பட்டையில் இறுக்கமாகக் கட்டினான்.

இருபுறமும் கடுமையான துப்பாக்கிச் சண்டை. நாலாப்பக்கமும் தோட்டாக்கள் சிதறிய வண்ணம் இருந்தது. சற்று நேரத்தில் போர்க்களமாக மாறியிருந்த அந்த இடம், ஒரு கட்டத்தில் பயங்கரவாதிகளின் கைகள் ஓங்கி இருந்த சமயம்,

ஜாஃபரின் காதில் ஏதோ முணுமுணுத்து விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்த ஆர்யா, தீவிரவாதிகளின் பார்வை தன் மேல் படும்படியாக, பந்தயக் குதிரைபோல் எதிர்திசையில் வேகமாக ஓட ஆரம்பித்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பயங்கரவாதிகள், ஆர்யாவை நோக்கி தங்கள் தோட்டாக்களை செலுத்தியிருக்க, ஆர்யாவின் வேகம், தோட்டாக்களின் வேகத்தை விட பன்மடங்கு அதிகமிருந்தது. "கட்கா" கலையில் கற்ற மன உறுதி, அவனை விடாமுயற்சியுடன் ஓட வைத்தது.

பயங்கரவாதிகளின் கவனம் சிதறியிருந்த சமயம், ஜாஃபரின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டா, அங்கிருந்த ஒருவனின் தலையை பதம் பார்த்திருந்தது. அடுத்த சில நொடிகளில், மற்ற இருவரையும் எல்லைப் பாதுகாப்புப் படை வீர்கள் சுட்டு வீழ்த்தியிருந்தார்கள்.

தீவரவாதிகளின் உடல்களைக் கைப்பற்றியிருந்த பாதுகாப்புப் படையினர் அந்த இடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள். நிம்மதிப் பெருமூச்சோடு ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஜாஃபரும் ஆர்யாவும் கை கால்களில் ஏற்பட்டிருந்த காயங்களின் வலியை மறந்து ஆரத்தழுவியிருந்தார்கள். காயமடைந்தவர்களை மருத்துவக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல இராணுவ வாகனம் தயார் நிலையில் இருந்தது. மற்றவர்களுடன் ஜாஃபரும் ஆர்யாவும் அதில் ஏறியிருந்தார்கள். அடுத்த சில மணி நேரங்களில் இந்த செய்தி நாடு முழுவதிலும் உள்ள மீடியாக்களில் ப்ரேக்கிங் நியூஸ் ஆக ஓடிக்கொண்டிருந்தது.

4

இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மாவின் போலீஸ் ஜீப் அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஹுசைனிவாலா காவல் நிலையத்தை வந்தடைந்தது. அதிலிருந்து அவசர அவசரமாக இறங்கிய அவர், அங்கே நின்றுகொண்டிருந்த கான்ஸ்டபிள்களின் சல்யூட்டை ஏற்றுக்கொண்டு வேக வேகமாக உள்ளே சென்றார். உள்ளே பதற்றமான முகங்களுடன் ஒரு நான்கைந்து பேர், கம்ப்யூட்டர் திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மாவைப் பார்த்ததும்,

“குட் மார்னிங் சார்...! நாங்க உங்களுக்காகத் தான் வெயிட்பண்ணிட்டு இருக்கோம்... ” என்று அந்த கும்பலில் இருந்து வெளிப்பட்டார் சப் இன்ஸ்பெக்டர் குர்தாஸ் சிங்.

“குட் மார்னிங் குர்தாஸ்... இதுவரைக்கும் எதாச்சும் க்ளு கெடைச்சுதா...?”

“இல்ல சார்... அதுக்குத்தான் ட்ரை பண்ணிட்டு இருக்கோம்...”

“ஹ்ம்ம்... ஓகே... அந்த கம்ப்ளைன்ட் குடுத்த ஆள் எங்க...? ”

“சார்... இவர் தான் அந்த செல்போன் டவர் இன்ஜினீயர் சிவ்ராம்ஜி... ” என்று பக்கத்தில் நின்றிருந்தவனை அடையாளம் காட்டினார் குர்தாஸ் சிங்.

“ம்.. சிவ்ராம்ஜி... உங்களுக்கு எப்படி இந்த ஆடியோ ஆதாரம் கெடைச்சுது..?”

“சார்... நான் ஏர்டாக் மொபைல் நெட்வொர்க்ஸ்ங்கற ஒரு தனியார் கம்பெனியில டவர் இன்ஜினீயரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். மாதத்துக்கு ஒரு முறை வந்து ஹுசைனிவாலா எல்லைக்குப் பக்கத்தில இருக்கிற எங்க கம்பெனி டவர்ல, RADIATION AND FREQUENCY செக் பண்ணுவேன். என்னோட மொபைல் நம்பர, டவர்ல CONFIGURE பண்ணி கால் DETAILS ரெகார்ட் பண்ணி செக் பண்றது தான் சார் வழக்கம்.

இன்னிக்கும் அதே மாதிரி செக் பண்ணும்போது தான் சார், எனக்கு இந்த CROSS TALK கால் ரீசிவ் ஆச்சு. யாரோ ரெண்டு பேரோட குரல், இதுல தெளிவா பதிவாயிருக்கு . அவங்க பேசுன விஷயங்கள் கொஞ்சம் விபரீதமா இருந்ததால, அதை ரெகார்ட் பண்ணி கொண்டு வந்துட்டேன் சார்... ” என்று முடித்தான்.

அவன் சொல்வதைத் தெளிவாகக் கேட்ட இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மா,

“ஓகே… குர்தாஸ்... நான் அந்த ஆடியோவ கேக்கணும்... சீக்கிரம் PLAY பண்ணி காட்டுங்க... ” என்றார் விகாஷ் ஷர்மா..

“எஸ்... சார்...” என்ற குர்தாஸ் சிங் மேசையில் மேல் வைக்கப் பட்டிருந்த கம்ப்யூட்டரில் சில பட்டன்களைத் தட்டினார்.

கம்ப்யூட்டர் திரையில் அந்த ஆடியோவின் சப்த அதிர்வுக் கோடுகள் ஏறி இறங்கியவண்ணம் இருந்தது. ரெகார்ட் செய்யப்பட்ட அந்த ஆடியோ ஆதாரம் PLAY ஆக ஆரம்பித்தது.

“நம்ம திட்டம் எப்படி போயிட்டு இருக்கு...?” என்ற ஒரு ஆணின் கரகரப்பான குரல், ஒரு முனையில் தெளிவாகக் கேட்டது.

"இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல... எல்லாம் தயார் நிலையில் இருக்கு..." என்று மறுமுனையில் இருந்த மற்றொரு ஆண் குரல் பேச ஆரம்பித்தது.

"அப்ப, இந்தியப் பிரதமருக்கான கடைசிநாள் குறிச்சாச்சு... சரியா...??

“ஆமாம்...! உறுதியாக... ”

“போன தடவ மாதிரி மிஸ் ஆயிராதே...?"

"இல்ல.. இந்த தடவ மிஸ்ஸே ஆகாது. செப்டம்பர்-28, இந்தியப் பிரதமரோட கடைசி நாள். பயங்கரவாதத்திற்கு எதிரான அவருடைய நடவடிக்கைகளுக்கு பரிசா, அவரை நாம் சொர்க்கத்திற்கே அனுப்ப போற நாள்... ஹா...ஹா .... " என்று சிரித்தது மறுமுனையில் இருந்த குரல்.

ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு,

"ஹ்ம்ம்... இப்ப நீ எங்க இருக்க..? இருக்கிற இடம் SAFE தானே ...?"

"நான், நம்ம இடத்துல இருந்து தான் பேசிட்டு இருக்கிறேன். இதுவரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை ... SAFE தான்... "

"போலீஸ் கெடுபுடி ரொம்ப அதிகமா இருக்கிற மாதிரி தெரியுதே...???"

"அவங்களால நம்ம இடத்தை கண்டு பிடிக்க முடியாது. கவலைய விடுங்க." என்றது மறுமுனையில் இருந்த குரல்.

"ஹ்ம்ம்...எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. எந்த நேரத்திலும் அவுங்க உங்கள ஸ்மெல் பண்ணலாம்..."

"ம்... கண்டிப்பா... அத நான் பாத்துக்கறேன்... "

“குட் லக்... காரியத்த வெற்றிகரமா முடிக்க வாழ்த்துக்கள்...”

என்று இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன், அந்த ஆடியோ ஆதாரம் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது.

மிகுந்த யோசனையில், சற்றே முகம் மாறியிருந்த இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா,

டவர் இன்ஜினீயர் சிவராம்ஜியைப் பார்த்து,

“சிவராம்ஜி...! அந்த CROSS TALK CALLERS-ரோட DISTANCE எவ்ளோ இருக்கும்னு நெனைக்கிறீங்க...?”

சற்றும் தாமதிக்காத சிவ்ராம்ஜி,

“சார்... கண்டிப்பா ஒரு பத்து கிலோமீட்டர் சுற்றளவுல தான் சார் இருக்க முடியும்... நான் ஏன் இதைக் கண்டிப்பா சொல்றேன்னா... நான் டவர் RADIATION AND FREQUENCY செக் பண்ணும்போது, மத்த டவரோட CONNECTION எல்லாம் CUT பண்ணிட்டு தான் OPERATE பண்ண ஆரம்பிப்பேன். அப்ப ONLY லோக்கல் செக்டார் மட்டும் தான் ACTIVE ஆக இருக்கும்... SO பேசுற கால் எல்லாம் லோக்கல் கால்ஸ் மட்டும் தான் சார்... ”

“ஹ்ம்ம்... அப்ப பேசுன ரெண்டு பேருமே பத்து கிலோமீட்டர் SURROUNDING-ல தான் இருக்காங்க... சூப்பர்…” என்ற அவர் எதிரே இருந்த கரும்பலகையில், ஒரு வட்டமிட்டு அதில் பத்து கிலோமீட்டர் சுற்றளவை குறித்திருந்தார்.

“அப்புறம்... இந்த ஆடியோவோட LENGTH எவ்வளவு இருக்கும்...?”

“சார்... MAXIMUM 3 மினிட்ஸ் சார்...”

“3 மினிட்ஸ்... ஹ்ம்ம்...“ என்று யோசித்த அவர்,

“சரியா… என்ன டைம்ல உங்களுக்கு இந்த CROSS TALK கால் ரிசீவ் ஆச்சு...?” என்றார்.

“சார்... கரெக்டா காலைல 9 மணியிலிருந்து இருந்து 9.10க்குள்ள இருக்கும் சார்...”

கரும்பலகையில் மீண்டும் , காலை (9.00 -9.10 ) என்று தெளிவாகக் குறித்துக் கொண்டு, தன் பின்னால் நின்று கொண்டிருந்த குர்தாஸ் சிங்க்கை ஏறிட்ட விகாஷ் சர்மா,

“குர்தாஸ்... இதுவரைக்கும் உங்களால ஏதாவது யூகிக்க முடிந்சுதா...?”

“இல்ல... சார்... இந்த ஆடியோவ வச்சு, அவுங்கள TRACE பண்றது ரொம்ப கஷ்டம்ன்னு நான் நெனைக்கிறேன் சார்...”

ஒரு பத்து நிமிட மௌனம்.

இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மா, ஏதோ ஒரு யோசனையில், மீண்டும் மீண்டும் அந்த ஆடியோ ஆதாரத்தையே PLAY செய்து கேட்டுக் கொண்டிருந்தார். அங்கு இருந்த அனைவரும் ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். இப்படியே ஒரு அரை மணி நேரம் வேகமாக கடந்திருந்தது. அவர் தன் மூளைக்குள் ஒரு மௌனப் போராட்டத்தையே நடத்தியிருந்தார்...

கரும்பலகையில் எழுதப் பட்டிருந்த குறிப்புகளைப் பார்த்துக் கொண்டே, கடைசியாக ஒரு முறை அந்த ஆடியோ ஆதாரத்தை PLAY செய்த இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா, சரியாக 2.45 ஆவது நிமிடத்தில் இருந்து, அதை PAUSE செய்து கொஞ்சம் முன்னால் சென்று அதை REWIND செய்து கேட்டுப் பார்த்த அவர் திடுக்கிட்டார்.

இந்த முறை அவர் முகத்தில் ஒரு சிறிய மாற்றம் தெரிந்திருந்தது.

5

விசாலமாக இருந்த அந்த இராணுவ மருத்துவக் கூடம் சற்றே பரபரப்புடன் காட்சியளித்தது. “சாவைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ இருக்கும்போது அது வரப்போவதுமில்லை. அது வந்த பின் நீ இருக்கப் போவதுமில்லை” என்ற விவேகானந்தரின் வாசகத்தோடு கூடிய, அவரின் கம்பீரமான புகைப்படங்கள் அந்த மருத்துவக் கூடத்தின் சுவர்களை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. அதன் பதினாறாவது அறையில், ஜாஃபரும் ஆர்யாவும் தங்களின் காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவில் உலாவிக் கொண்டிருந்தனர். ஜாஃபரின் வலது தோள்பட்டையை சுற்றி ஒரு பெரிய கட்டு போடப் பட்டிருந்தது . கையை அசைத்து அசைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அவனை ஏறிட்ட ஆர்யா,

"என்ன ஜாஃபர்...! ரொம்ப வலிக்குதா...???" என்றான்.

"அவ்வளவு ஒன்னும் பெருசா வலிக்கல ஆர்யா... காயம் சின்னதுதான். ஆன கட்டு தான் பெருசா போட்ருக்காங்க..."

"என்னடா சொல்ற…? உண்மையாலுமே வலி இல்லையா…? அவ்வளவு ரத்தம் போச்சேடா...?” என்றான் சிரித்துக் கொண்டே.

"டேய்... இதெல்லாம் ஒரு வலியா...?? இருந்தாலும், நீ சாதாரணமான ஆளே இல்லடா ஆர்யா..."

"ஏன் அப்படி சொல்ற ஜாஃபர்...?”

"எப்படிடா...? அவனுங்க சுடுவாங்கன்னு தெரிஞ்சே… அவ்வளவு தைரியமா எழுந்து அவங்க முன்னாடி ஓடுன??"

"அது எல்லாம் ஒரு பயிற்சி தாண்டா ஜாஃபர் ..." என்றான் சிரித்துக் கொண்டே.

"என்னது பயிற்சியா...? அவனுங்க சுட்ட ஒரு தோட்டா, உன் மேல பட்டிருந்தாலும் நீ இந்நேரம் என் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்க மாட்ட தெரியுமா...?. நானே ஒரு நிமிஷம் பயந்துட்டேன்..." என்றான் ஆர்யா.

“ஆனா, அதுக்கு வாய்ப்பே இல்ல ஜாஃபர்... அவனுங்க தோட்டா என்ன தொட்டிருக்கவே முடியாது."

"எப்படி இவ்வளவு நம்பிக்கையா சொல்ற ஆர்யா...?" என்றான் ஆச்சர்யமாக.

"ஜாஃபர்... கட்கா கலையின் முதல் பாடமே தன்னம்பிக்கை தான்... என்னால, அவங்க தோட்டாக்களின் வேகத்தைத் தாண்டி ஓட முடியும்ன்னு நான் நம்புனேன். அதனால நான் ஓடுனேன். அவ்வளவுதான்... ரொம்ப சுலபம்."

“ஆர்யா... அந்த கட்கா கலையை நீ முழுசா கத்துக்கிட்டயா...???”

“இல்ல ஜாஃபர்... நான் இன்னும் அதோட ஆரம்பக் கட்டத்துல தான் இருக்கிறேன். இந்த முறை லீவ்ல போகும்போது, அதை எப்படியாச்சும் முழுசா கத்துக்கணும்ன்னு ஒரு வைராக்கியத்தொடு இருக்கிறேன்.”

“சூப்பர் ஆர்யா... நானும் இந்த முறை விடுமுறையை உன்னோடு கழிக்கலாம்னு ஆசைப்படறேன் ஆர்யா...” என்றான் ஜாஃபர்.

“டேய்... அப்புறம் உன்னோட ஆசைக் காதலி “மானஷா”வோட கதி... அவ ஏற்கனவே உன்ன பார்க்கனும்னு நெறையா தடவ இங்க வந்துட்டு போயிருக்கா... நீ வேற லீவ்ல எங்கூட வந்துட்டின்னா... அவளுக்கு என்னால பதில் சொல்ல முடியாதுடா...” என்று சிரித்தான் ஆர்யா.

மெல்ல சிரித்த ஜாஃபர், உடனே தன் பர்சில் இருந்த மானஷாவின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்து, அதை தன் மார்போடு அணைத்துக் கொண்டான். அதைப் பார்த்த ஆர்யா,

“என்னடா… மலரும் நினைவுகளா...???”

“இல்லடா ஆர்யா... நானும், அவகிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். இந்த இராணுவ வாழ்க்கைங்கறது என்னிக்குமே நிரந்தரம் இல்ல. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எப்ப என்ன ஆகும்னு யாருக்கும் தெரியாது. அதனால நீ வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிப் பார்த்துட்டேன். அவ கேட்கிற மாதிரி இல்ல... ஆனா, இப்ப என்னோட ஆசை கனவு எல்லாம், எனக்காகவே காத்துக்கிட்டிருக்கிற அவளை கரம் பிடிக்கிறது தான்...” என்றான் உணர்ச்சிப் பெருக்கோடு.

“எல்லாம் நல்ல படியாக நடக்கும் ஜாஃபர்... நீ கவலைப் படாதே. கண்டிப்பா நீ அவள கை பிடிப்ப...” என்ற ஆர்யா, பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீளமான கம்பை எடுத்து, வேகமாக சுழற்ற ஆரம்பித்திருந்தான்.

“அதெல்லாம் இருக்கட்டும் ஆர்யா.... நீ என்ன முடிவு பண்ணிருக்க...?? உன்னோட ஆசை தான் என்ன...?”

சுழற்றிக் கொண்டிருந்த கம்பின் வேகத்தை சற்றும் குறைக்காத ஆர்யா,

“எனக்கு அந்த மாதிரி எல்லாம் ஒரு ஆசையும் இல்லை ஜாஃபர்... ”

“அப்புறம்... என்ன பண்ணலாம்ன்னு இருக்க ஆர்யா...??”

“என்னோட ஆசையெல்லாம், இந்த எல்லைப் பாதுகாப்புப் படையிலே என்னோட வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன் ஜாஃபர்.”

“என்னடா சொல்ற...??” என்றான் ஜாஃபர்.

“ஆமாம் ஜாஃபர்... என் உயிர் இந்த எல்லையிலேயே பிரிந்து விடவேண்டும் என்று தான் நான் ஆசைப்படறேன். எனக்கு இந்த வெளி உலக வாழ்க்கை வாழ்றதுல ஒரு துளியும் ஆசை இல்லை. எந்த விதமான இலட்சியமுமே இல்லாமல் தனக்கென சுயநலமாக வாழ்கின்ற அந்த வாழ்க்கையை நான் வெறுக்கிறேன் ஜாஃபர். ”

என இருவரும் பேசிக் கொண்டிருந்த சமயம்,

சீனியர் கமாண்டன்ட் சஞ்சய் மிஸ்ரா, காயமடைந்தவர்கள் ஒவ்வொருவரையும் பார்வையிட்ட படியே மருத்துவக் கூடத்தில் விசிட் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்ற இருவரும்,

“ BSF – கான்ஸ்டபிள் வீர் பிரதாப்சிங் ஆர்யா ரிப்போர்ட்டிங் சார்...! “

“ BSF – கான்ஸ்டபிள் ஜாஃபர் காதிம் ரிப்போர்ட்டிங் சார்...! “ என்று சல்யூட் அடித்தவாறே அசையாமல் நின்றனர் . அவர்களை கையமர்த்திய அவர்,

“NO FORMALITIES, MY DEAR BOYS... WELL DONE. YOU GUYS DID A FANTASTIC JOB.” என்ற இருவரையும் கட்டியணைத்துக் கொண்ட அவர்,

“I AM REALLY PROUD OF YOU GUYS… அந்த தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் உங்க உயிரையும் துச்சமாக மதித்து அவர்களை வீழ்த்தியிருக்கின்றீர்கள். அதற்காக என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். ”

“தேங்க் யூ சார்...” என்று இருபுறமும் பதில் வந்திருந்தது.

“காயங்கள் ஆறும் வரை நீங்க ரெண்டு பேரும் நல்லா ரெஸ்ட் எடுத்துக்குங்க. அதுவரைக்கும் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயக்கமில்லாம கேளுங்க... YOU GUYS ARE DESERVE TO BE HONOURED”.

“சார்... அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை… மீண்டும், நாங்க ரெண்டு பேரும் எல்லையில் நிற்பதற்கு தயாராக இருக்கிறோம் சார்... எங்களுக்கு ஓய்வு தேவையில்லை சார்...” என்றான் ஜாஃபர்.

“இதெல்லாம் வெறும் சாதாரண காயம் தான் சார்... நாங்க தயாராக இருக்கிறோம் சார்...” என்று நெஞ்சை நிமிர்த்தியவாறே கூறினான் ஆர்யா.

அவர்களைப் பார்த்து புன்னகைத்த சஞ்சய் மிஸ்ரா,

“உங்களுடைய உணர்வுகளை நான் மதிக்கிறேன். இருந்தாலும் 100 சதவிகித உடல் தேர்ச்சி இல்லாமல், யாரையும் எல்லையில் நிறுத்த முடியாது என்பது நம் தேசத்தின் இராணுவ விதி. HOPE YOU GUYS UNDERSTAND.”

“YES சார்...” என்ற கர்ஜித்த அவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்த அவர்,

“I WILL DO ONE FAVOUR FOR YOU” என்று தன் பாக்கெட்டில் இருந்த சீட்டுக்கட்டுகளில் இருந்து இரண்டு சீட்டுகளை எடுத்து அவர்கள் முன் நீட்டினார். அதை வாங்கிப் பார்த்து புரியாமல் நின்ற அவர்களை,

“என்ன பார்க்கறீங்க...?? இது ஒரு மீட்டிங் டிக்கெட். வர்ற செப்டம்பர் 28, தியாகி பகத்சிங் சிங் பிறந்தநாள் விழாவையொட்டி, நமது மரியாதைக்குரிய பிரதமர் இங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். HOPE YOU GUYS ALREADY KNOW ABOUT THIS NEWS. அந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு டிக்கெட் தான் இது. அதில் நீங்கள் கலந்து கொள்ள உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. ” என்றார்.

“தேங்க் யூ சார்.. WE WILL ATTEND DEFENETELY சார்...” என்று அமோதித்திருந்தார்கள்.

மீண்டும் ஒருமுறை அவர்களை மார்புறத் தழுவிக் கொண்டு விடைபெற்றார் சீனியர் கமாண்டன்ட் சஞ்சய் மிஸ்ரா.

6

பதற்றத்துடன், குறிப்பிட்ட அதே நிமிடங்களை மீண்டும் REWIND செய்து கேட்டுப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா , சற்றே நிதானித்து ஒரு முடிவுக்கு வந்தவராக,

குழப்பம் தோய்ந்த முகங்களுடன் இருந்த மற்றவர்களைப் பார்த்து துரித கதியில் பேச ஆரம்பித்தார்.

“Guys... எல்லாரும் கொஞ்சம் நல்லா கவனியுங்க… இந்த ஆடியோவில், சரியா 2.32 நிமிடத்திலிருந்து 2.45 நிமிடம் வரைக்கும் கொஞ்சம் நல்லா கூர்ந்து கவனிச்சீங்கன்னா, உங்களுக்கு ஒரு பெல் அடிக்கிற சப்தம் நல்லா கிளியரா கேக்கும். நீங்களும் கொஞ்சம் கவனிப்போட இதக் கேட்டுப் பாருங்க...” என்ற அவர், அந்த குறிப்பிட்ட நிமிடங்களை REWIND செய்து காட்டினார்.

அதை கூர்ந்து கவனித்த மற்றவர்களும் ஒருசேர தலையை ஆட்ட, இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா தொடர்ந்தார்.

“இப்ப நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது, அவங்க பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளதான் இருக்கிறாங்க” என்ற அவர் தான் கரும்பலகையில் முன்பு எழுதிய வார்த்தைகளை வட்டமிட்டு காட்டினார். இரண்டு நிமிட மௌனத்திற்குப் பிறகு மீண்டும் பேச ஆரம்பித்த அவர்,

“இந்த ஹுசைனிவாலா எல்லையை ஒட்டி, பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வெறும் பள்ளிக் கூடங்களைத் தவிர, இங்க கல்லூரிகள், தொழிற்சாலைகள், ரயில்வே ஸ்டேஷன்னு எதுவுமே இல்ல. SO, பெல் சப்தத்துக்காக நமக்கு இருக்கிற ஒரே க்ளூ, பள்ளிக்கூடம் தான்.

அதுமட்டுமில்லாம, இந்த ஆடியோ ரெக்கார்ட் ஆயிருக்கிற நேரம், கிட்டத்தட்ட காலை 9 மணி சுமார் இருக்கும். சரியாக 9 மணிக்கு கேட்கிற இந்த பெல் சப்தம், காலையில பள்ளிக்கூடம் தொடங்கறதுக்காக அடிக்கப்படுகின்ற பெல் சப்தம் மாதிரி தான் தெரியுது. SO, என்னோட யூகப்படி, நாம ஆடியோவில் கேட்ட அந்த பெல் சப்தம், கண்டிப்பா ஒரு SCHOOL பெல்-லோட சப்தமாக இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. “

எல்லாரும் உன்னிப்பாக வைத்த கண் வைக்காமல் அவரையே பார்க்க, அவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.

“IF MY GUESS WORK IS CORRECT, THEIR LOCATION IS NEAR TO ONE SCHOOL WITH IN 10 KILOMETERS SURROUNDING FROM THAT TOWER. பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ள இருக்கிற மொத்த ஸ்கூல்ஸ் பத்தின தகவல்களை SEARCH பண்ணுங்க. அந்த பகுதிகளில் நாம் தீவரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டும். நமக்கு நேரம் ரொம்ப ரொம்பக் குறைவா இருக்கு. சீக்கிரம்... சீக்கிரம்...” என்று முடித்தார் இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா.

”ஓகே... சார்...” என்ற குர்தாஸ் சிங் ஸ்கூல்ஸ் லிஸ்ட் சம்பந்தமான தேடலில் தீவிரம் காட்டியிருந்தார்.

அடுத்த பத்து நிமிடங்களில் கன்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா,

"ஹலோ... கன்ட்ரோல் ரூம்... ஹுசைனிவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா ஹியர்..."

"எஸ் சார்..." என்று மறுமுனையில் இருந்த குரல் தீவிரம் காட்டியிருந்தது.

"பிரதமர் வருகையை முன்னிட்டு, ஹுசைனிவாலா ஏரியா முழுமையும் இன்னும் பாதுகாப்பு ஏற்பாடுகளை TIGHT பண்ணுங்க. புதிய நபர்கள் மற்றும் வாகனங்களை தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தின பிறகே, உள்ளே ALLOW பண்ணுங்க. சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டால் உடனே கைது செய்து விசாரணையை ஆரம்பிங்க. BE ALERT.

காவல்துறை கட்டுப்பாட்டு எண் பொறிக்கப்பட்ட பலகைகளை ஹுசைனிவாலா ஏரியாவின் முக்கியப் பகுதிகளில் உடனே வைக்க ஏற்பாடு பண்ணுங்க. THIS IS AN HIGH PRIORITY SECRET INFORMATION. PLEASE PASS IT IMMEDIATELY. “என்று பேசி முடித்திருந்தார்.

"OK SIR ... WILL DO IT NOW ITSELF..." என்றவுடன் அந்த இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.

பக்கத்தில் நின்றிருந்த டவர் இன்ஜினியர் சிவ்ராம்ஜியை ஏறிட்ட இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா,

“சிவ்ராம்ஜி... எனக்கு இன்னொரு தகவல் வேணும்...???”

“சொல்லுங்க... சார்... என்ன தகவல் தெரிஞ்சிக்கணும்...???” என்றான் பௌவ்யமாக.

“இல்ல... அந்த CROSS-TALK CALLERS-ஐ எப்படியாச்சும் TRACE பண்ண முடியுமா...??? ”

தலையை சொறிந்துகொண்டே யோசித்த சிவ்ராம்ஜி,

“சார்... அதை TRACE பண்றது ரொம்ப கஷ்டம்ன்னு நெனைக்கிறேன்... பொதுவா யாரும் இந்த மாதிரியான தகவல்கள செக் பண்றதில்ல. இது சம்பந்தமா நாம ஏர்டாக் மொபைல் நெட்வொர்க்ஸ் கம்பெனியோட NETWORK AND TOWER SECURITY TEAM-கிட்ட தான் சார் செக் பண்ணனும்... எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் 70 சதவிகிதம் அதை TRACE பண்ண வாய்ப்பே இல்ல சார்... ” என்றான் உறுதியாக.

“சரி... மீதியிருக்கிற அந்த 30 சதவிகிதத்துக்காவது நாம கொஞ்சம் ட்ரை பண்ணிப் பார்க்கலாமே சிவ்ராம்ஜி. IMMEDIATE-டா அவங்கள CONTACT பண்ணி செக் பண்ணுங்க. முடிஞ்ச வரைக்கும் அவங்கள ட்ரை பண்ணி பார்க்க சொல்லுங்க.”

“ஓகே... சார்...” என்ற சிவ்ராம்ஜி, அடுத்த கட்ட வேலையில் இறங்கியிருந்தார்.

“சார்... இந்த சீரியசான விஷயத்த மேலிடத்துக்கு உடனே தெரியப்படுத்த வேண்டாமா....??” என்றார் சப்-இன்ஸ்பெக்டர் குர்தாஸ் சிங்.

“கண்டிப்பாக தெரியப்படுத்தனும் குர்தாஸ்... ஆனா அதுக்கு முன்னாடி நாம கொஞ்சம் ட்ரை பண்ணி பார்த்துட்டு, இன்பார்ம் பண்ணலாம்னு நான் நெனைக்கிறேன்.”

“சார்... விஷயம் கொஞ்சம் விவகாரமாக இருக்கே...”

அவரைப் பார்த்துச் சிரித்த விகாஷ் ஷர்மா,

“விவகாரமாத்தான் இருக்கு குர்தாஸ்... இருந்தாலும் பிரதமர் வருகைக்கு இன்னும் சரியாக ரெண்டு நாள் மீதம் இருக்கு. நாம நாளைக்கு ஒரு நாள் அவகாசம் எடுத்து, கடுமையாக தேடுதல் பணியில் ஈடுபடுவோம். முயற்சிய கைவிடாம, இரவு பகல் பார்க்காம உழைப்போம் . முடியாத பட்சத்தில நாம மேலிடத்துக்கு தகவல் கொடுப்போம். முடியாதுங்கற வார்த்தையை நாம முடிஞ்ச வரைக்கும் உபயோகிப்பதை தவிர்க்கலாமே குர்தாஸ்... ” என்றார்.

“ஓகே... சார்...” என்றார் சப்-இன்ஸ்பெக்டர் குர்தாஸ் சிங்.

சற்று நேரத்தில் செல்போனில் பேசி முடித்திருந்த டவர் இன்ஜினியர் சிவ்ராம்ஜி,

“சார்... இப்பதான் ஏர்டாக் மொபைல் நெட்வொர்க்ஸ் கம்பெனியோட மேனேஜிங் டைரக்டர் கிட்ட பேசினேன். அவர்கிட்ட எல்லா விசயத்தையும் சொன்னேன்... அவர் அதைப் புரிஞ்சுக்கிட்டு, உடனே அவுங்க NETWORK AND TOWER SECURITY TEAM-ஐ தொடர்பு கொண்டு செக் பண்ணிட்டு இருக்கார் சார்.”

”ஹ்ம்ம்... குட் ...”

“சார்... இது வெறும் ட்ரை தான் சார்... நம்பகமான தகவல் கிடைக்கும்ன்னு உறுதியா எதையும் சொல்ல முடியாதுன்னு அவரே சொன்னார்... அதுனால இதையே நம்பிட்டு இருக்காம அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கொஞ்சம் தீவிரம் காட்டலாம் சார்... ”

“கண்டிப்பா சிவராம்ஜி....”

அடுத்த சில மணி நேரங்களில், கையில் அச்சிடப்பட்ட பேப்பர் தாளோடு வந்த சப்-இன்ஸ்பெக்டர் குர்தாஸ் சிங்,

“சார்... அந்த டவர சுத்தி, பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ள இருக்கிற ஸ்கூல்ஸ் லிஸ்ட் மற்றும் அதோட தகவல்கள் இதில இருக்கு சார்... ” என்று அந்த பேப்பர் தாளை நீட்டினார். அதை வாங்கிப் பார்த்த இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா அதை ஒவ்வொன்றாக வாசித்துப் பார்த்தார்.

“கௌடில்யா இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல். பெரஷ்பூர் வட்டம்”

“குரு கோவிந்த் சிங் பப்ளிக் சீனியர் செகண்டரி ஸ்கூல். பெரஷ்பூர் வட்டம்”

“ஜவகர் நவோதய வித்யாலயா ஸ்கூல். ஹுசைனிவாலா கிராமம்”

“ஆர்மி பப்ளிக் ஸ்கூல். ஹுசைனிவாலா கிராமம்”

“ஓகே... SO, மொத்தம் நாலு ஸ்கூல் தான், அந்த குறிப்பிட்ட பௌண்டரிக்குள்ள இருக்கு... ”

“ஆமாம்... சார்... ”

“ஓகே… குர்தாஸ்... அல்ரெடி, ஹுசைனிவாலா கிராமத்தை சுத்தி இருக்கிற இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருக்கு. அதனால, இப்ப நம்ம TARGET இந்த நாலு ஸ்கூல்ஸ சுத்தி இருக்கிற இடங்கள் மட்டும் தான்... AM I RIGHT...?? ”

“எஸ்... சார்...” என்று தலையை ஆட்டினார் குர்தாஸ் சிங்.

“SO, கொஞ்சம் கவனமா கேளுங்க. நமக்கு நேரம் ரொம்பக் குறைவாக இருக்கு. நம்ம DEADLINE நாளைக்கு ஒரு நாள் தான். .அதுக்குள்ள நாம அவங்கள TRACE பண்ணியாகணும்.”

“கண்டிப்பாக சார்... நம்மோட அடுத்த மூவ் என்ன சார்...?”

“குர்தாஸ்... அவங்கள பிடிக்கறதுக்காக நாம ஒரு நாலு தனிப் படைகளாகப் பிரிந்து, அந்த ஸ்கூல்ஸ ஒட்டியிருக்கிற பகுதிகள்ல SEARCH ஆபரேஷன ஆரம்பிக்கணும். கொஞ்சம் கூட பின் வாங்காம, நாம இந்த ஆபரேஷன்ல ஈடுபடனும். தனித்தனியாகப் பிரிந்த ஒவ்வொரு குழுவையும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ, அங்கு இருக்கிற நிலவரங்களை உடனுக்குடன் WALKIE TALKIE-ல அப்டேட் பண்ண சொல்லுங்க... சீக்கிரம்... சீக்கிரம்... COME ON QUICK... LET'S DO IT” என்று அவசரப் படுத்தினார்.

உடனே “ஓகே... சார்...” என்ற குர்தாஸ் சிங் அங்கிருந்தவர்களை நான்கு தனித் தனி குழுக்களாகப் பிரித்து அவர்களை தேடுதல் பணியில் தீவிரப்படுத்தி அனுப்பியிருந்தார்.

7

இராணுவ மருத்துவக் கூடம். மதியம் 3 மணி.

"எவ்வளவு நேரம் தான் இந்த மெடிக்கல் கேம்ப்லயே, இப்படி சும்மா உட்கார்ந்துட்டு இருக்கிறது ஜாஃபர்…??? கை கால்கள் எல்லாம் மரத்துப்போய்விடும் போல் இருக்கிறது. " என்றான் ஆர்யா.

"வேற என்ன பண்ணலாம் ஆர்யா...?”

"வா... வெளியில போய் சுத்திப் பார்க்கலாம். இன்னிக்காவது, வெளி உலகத்தோட தொடர்பில இருக்க முயற்சி பண்ணுவோம். இதை விட்டா வேற சந்தர்ப்பமே கிடைக்காதுடா...! "

"சரி... எங்க போகலாம் ஆர்யா...?”

"பகத்சிங் நினைவிடம்..."

"டேய்... வெளியில போகிறதுக்கு நமக்கு அனுமதி கிடைக்குமா...?”

"அதெல்லாம், நான் நேற்றே பேசி வாங்கிட்டேன். பயப்படாம வா...! போகலாம்…" என்ற ஆர்யா ஜாஃபரை அழைத்துக் கொண்டு, அந்த ராணுவ மருத்துவக் கூடத்தின் நுழைவு வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஒரு ஐந்து நிமிட நடை பயணத்தில் அந்த பெரிய நுழைவு வாயில் வந்திருந்தது. அங்கிருந்த செக்யூரிட்டியிடம் விவரங்களை தெரிவித்துவிட்டு, மீண்டும் உள்ளே வருவதற்கான நேரம் குறிப்பிடப்பட்ட சீட்டையும் வாங்கி கொண்டு வெளியே வந்தார்கள் இருவரும்.

வெளியே தயாராக நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறியிருந்த அவர்கள், சரியாக இருபது நிமிடப் பயணத்தில், ஹுசைனிவாலா கிராமத்தின் தேசிய தியாகிகள் நினைவிடத்தை அடைந்திருந்தார்கள்.

"ஜாஃபர்... அதோ பார்...! பகத்சிங் நினைவிடம்... " என்று ஆர்யா கையைக் காட்டிய திசையில் அமைந்திருந்தது அந்த தேசிய தியாகிகள் நினைவிடம்.

தன் கைகளை மேலே உயர்த்தி, ஆங்கிலேயே அரசுக்கு எதிராக, வீர முழக்கமிட்டவாறே பகத்சிங்க்கும், அவரோடு கைகோர்த்தபடி ராஜகுருவும், சுகதேவும் அந்த தேசிய தியாகிகள் நினைவிடத்தில், கற்சிலைகளாக நின்றிருந்தார்கள்.

--தேசிய தியாகிகள் நினைவிடம். ஹுசைனிவாலா.

அந்த நினைவிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை, சுத்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தன. அந்த இடம் முழுவதிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

"இந்த இடத்தில் நிற்கும் போதே உடல் சிலிர்க்குது ஆர்யா...!” என்றான் ஜாஃபர்.

"நிச்சயமாக ஜாஃபர்...! நீ நிற்பது, விடுதலை புரட்சியின் வீர நாயகன், மீளாத் துயில் கொண்டிருக்கும் நினைவிடம் ஆயிற்றே...!"

"ஆமாம் ஆர்யா... வெறும் 23 வயதில், இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரையே அர்ப்பணித்த ஒரு புரட்சி இளைஞன் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான். அவன் தியாகத்தை நினைத்துப் பார்க்கும் போது, நாம் எவ்வளவு ஒரு அற்பத்தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது ஆர்யா... "

ஒரு அரை மணி நேரத்தை, அந்த நினைவிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே உலாவி செலவிட்டிருந்த அவர்கள், கடைசியாக அந்த இடத்தை தொட்டு வணங்கிவிட்டு கொஞ்ச தூரம் முன்னே நடந்திருந்தார்கள்.

வழியெங்கும் காவல்துறை கட்டுப்பாட்டு எண் பொறிக்கப்பட்ட அறிவிப்புப் பலகைகள் அபாயக் குறியீடுடன் பார்வைக்குத் தென்பட்டன.

"பிரதமர் வருகையை முன்னிட்டு, இந்த இடம் முழுவதும் சிசிடிவி கேமராவால் கண்காணிக்கப் பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் என எதையேனும் கண்டால் உடனே காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காவல்துறை கட்டுப்பாட்டு எண் : 01632-246697." என்ற வாசகங்கள் அதில் அதிகம் இடம்பெற்றிருந்தன.

“என்னடா...! வழியெங்கும் அறிவிப்புப் பலகையா வெச்சிருக்காங்க...???”

“பிரதமர் வருகையாச்சேடா...! பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கும் ஜாஃபர்..”

ஒரு பதினைந்து நிமிட நடைபயணத்தில், “ஜவகர் நவோதய வித்யாலயா” பள்ளிக்கூடம் வந்திருந்தது. பகத்சிங் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, அந்த பள்ளியின் சாரணர் இயக்க மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை, ஒரு ராணுவ ஒழுங்கோடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் இருந்த சிறுவர் விளையாட்டுத்திடலில், ஒரு நான்கைந்து சிறுவர்கள் கூட்டமாக நின்று, ஏதையோ தீவிரமாகத் தேடுவதைப் போல் தெரிந்தது. ஆச்சர்யத்துடன் அவர்களின் பக்கம் சென்ற ஜாஃபரும் ஆர்யாவும் அவர்களைப் பார்த்து,

“தம்பி...! என்ன தேடிட்டு இருக்கீங்க...?”

“அண்ணா... நாங்க விளையாடிட்டு இருந்த பந்து ஒன்னு, அந்த மதில்சுவரைத் தாண்டி விழுந்துடுச்சுங்கன்னா... அதை எடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம்... ” என்ற அந்த சிறுவர்கள் கை காட்டிய திசையில் எட்டிப் பார்த்த ஜாஃபர், ஆர்யாவைப் பார்த்து,

“டேய்... ஆர்யா... அவங்களுக்கு அந்த பந்தை எடுத்துக் குடுத்துடுடா...” என்றான்.

“ஹ்ம்ம்... சரி...” என்று புன்னகைத்தவாறே தலையை ஆட்டிய ஆர்யா, மதில்சுவரைத் தாண்டி எட்டிப் பார்த்த அவன், யோசிக்காமல் உடனே அதில் ஏறி கீழே குதித்தான். கீழே கேட்பாரற்றுக் கிடந்த அந்த தரிசு நிலம், வெறும் குப்பை கூளங்களால் நிரம்பி வழிந்திருந்தது. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்த ஆர்யா, ஒரு மூலையில், பழைய கட்டிடம் ஒன்றின் இரண்டு சுவற்றுக்கு நடுவே, கைக்கு எட்டாத தொலைவில், அந்த பந்து இருப்பதைக் கண்ட அவன், அந்த இரண்டு சுவற்றுக்கு நடுவே தன்னை உட்புகுத்தி உள்ளே செல்ல முன்றான். ஒரு இரண்டு நிமிடப் போராட்டம். சற்று கடினப்பட்டு, ஒரு வழியாக உள்ளே நுழைந்தான். நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆர்யா, அந்த பந்தை கையில் எடுத்து விட்டு, வெளியே வர முயன்ற அடுத்த வினாடி, அந்த மர்மக் குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் சற்றே திடுக்கிட்டுப் பார்த்த ஆர்யா, அந்த குரல் வரும் திசையை நோக்கி, தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு மெல்ல நடக்க ஆரம்பித்தான். அவனின் அடுத்தடுத்த நடைகளில், அந்த குரல் மெல்ல மெல்ல தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது. அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆர்யாவின் முகம் கொஞ்ச நேரத்தில் வெடவெடத்திருந்தது. ஒரு கட்டத்தில் தான் நின்று கொண்டிருக்கிற இடத்திற்கு கீழே இருந்து தான், அந்த குரல் வருகிறது என்பதை அறிந்த ஆர்யா தன் காதுகளை இன்னும் தீட்டி வைத்து அந்த குரலின் பின்னணியில் இருக்கின்ற நிதர்சனத்தை அறிய முற்பட்டான். மிகுந்த நேரமாகியும் ஆர்யாவைக் காணாததால், அந்த மதில்சுவரிலிருந்து எட்டிப் பார்த்த ஜாஃபர்,

“டேய்... ஆர்யா... என்னடா பண்ணிட்டு இருக்கிற...??” என்று சப்தமாய் கேட்டான்.

“உஷ்...! ” என்று அவனைக் கையமர்த்திய ஆர்யா, சைகையின் வாயிலாக அவனை உள்ளே வரச் சொன்னான். ஆர்யாவின் முகத்தில் தெரிந்திருந்த களேபரத்தை உணர்ந்த ஜாஃபர், உடனடியாக அந்த மதில்சுவரிலிருந்து கீழே குதித்து ஆர்யாவின் பக்கம் நெருங்கினான். இந்த முறை ஆர்யா கேட்டுக்கொண்டிருந்த அதே மர்மக்குரல், ஜாபரின் காதுகளிலும் ஒலிக்கத் தொடங்கியது. இருவர் கண்களிலும் பதற்றம் தெரிந்தது. இப்படியே ஒரு ஐந்து நிமிடம் கடந்திருந்தது. கொஞ்ச நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஜாஃபர்,

“ஆர்யா... இந்த குரலின் பின்னணியில், எனக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவது போல் தெரியுடா... எனக்குத் தெரிந்து, கீழே ஏதோ ஒரு சுரங்கம் இருப்பது போல் தோணுதுடா...”

“எனக்கும் அதே சந்தேகம் தான் ஜாஃபர்... ”

“இப்ப என்ன பண்ணலாம் ஆர்யா...?”

சற்று நேரம் யோசித்த ஆர்யா,

“ஜாஃபர்... இப்ப உடனடியாக கீழே என்ன நடக்குதுங்கற தகவல் நமக்குத் தெரிஞ்சாகனும்... கீழே போறதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு மொதல்ல தேடுவோம்...”

“ஹ்ம்ம்... சரி...”

ஒரு பதினைந்து நிமிட தேடல். இரு புறமும் நன்றாக தேடித் பார்த்துக் கொண்டே வந்த அவர்கள், சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு இடத்தில், காய்ந்த சருகுகள் மூடி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டதும் நின்றார்கள். ஒரு பத்து நிமிட இடைவெளியில், சருகுகளை அப்புறப்படுத்தியிருந்த அவர்கள் பிரமித்தார்கள். கீழே ஒரு சுரங்கத்தின் விசாலமான படிக்கட்டுகள், பாதாளம் வரை சென்றிருந்தது. இருவரும் திகைத்துப் போய், ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஆர்யா... வா... உள்ள போய் பார்ப்போம்... என்ன தான் இருக்குன்னு ஒரு கை பார்த்திடுவோம்...” என்றான் ஜாஃபர்.

“அவசரப்படாதே ஜாஃபர்...! நம்மில் யாரோ ஒருத்தர் தான் உள்ள போகணும். ஏதாவது விபரீதமாக இருந்தால், இன்னொருத்தர் அதை வெளிஉலகிற்கு தெரியப் படுத்த கட்டாயம் வெளியே இருந்தாகணும்...”

“சரி... அப்ப நான் போறேன் ஆர்யா...!”

“நீ போக வேண்டாம் ஜாஃபர்... நான் போறேன்... நீ வெளியிலயே இரு. ” என்று அவனை சமாதானப்படுத்தினான் ஆர்யா.

“உன் இஷ்டம் ஆர்யா...” என்றான் ஜாஃபர் அரைமனதோடு.

“ஜாஃபர்... நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளு. நான் இப்ப உள்ள போகப் போறேன். போனதுக்கு அப்புறம், சரியா பத்து நிமிடத்துல எப்படியும் நான் வெளியில வந்துருவேன். ஒருவேளை நான் வரலைன்னா, நீ உடனே போலீசுக்கு போன் பண்ணி, இன்பார்ம் பண்ணிடு. காவல்துறை கட்டுப்பாட்டு எண் நியாபகம் இருக்குல்ல..?”

“நியாபகம் இருக்குடா...”

“சரி... இப்ப மணி சரியா நாலு பதினைந்து. சரியா நாலு இருபத்தைந்தைக்கு நான் வெளியில வந்துருவேன். இல்லைன்னா...” என்று சொல்ல வந்த ஆர்யாவைக் கையமர்த்திய ஜாஃபர்,

“அப்படியெல்லாம் சொல்லாத ஆர்யா...! ஒன்னும் ஆகாது... நீ தைரியமா போயிட்டு வா...” என்ற ஜாஃபரிடம் விடை பெற்றுக்கொண்ட ஆர்யா, சற்றும் தாமதிக்காமல் படிக்கட்டுகளில் வேக வேகமாக இறங்கி மறைந்திருந்தான். அடுத்த நொடியில் இருந்து, ஜாஃபரின் கைக்கடிகாரத்தோடு சேர்ந்து, அவன் மனதும் ஓட ஆரம்பித்திருந்தது. முதல் ஐந்து நிமிடங்கள் மிக வேகமாகக் கடந்திருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருந்த அவன், தன் கையில் வைத்திருந்த சிறுவர்களின் பந்தை எடுத்து வெளியே வீசினான். நேரம் நெருங்க நெருங்க அவன், மனதும் படபடவென அடிக்க ஆரம்பித்திருந்தது.

ஆறாவது நிமிடம்... லேசாக ஒரு வித பயம் அவனைத் தொற்றிக்கொண்டது.

””

ஏழாவது நிமிடம்... கைகளைக் கூப்பி மனதில் கடவுளை நினைத்திருந்தான்.

“”

ஜாஃபர் கடிகாரத்தையும், படிக்கட்டுகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தான்.

எட்டாவது நிமிடமும் அதிவிரைவாக கடந்திருக்க, பதற்றம் இன்னும் அதிகரித்திருந்தது.

உள்ளே சென்று ஒரு கை பார்த்து விடலாமா...? என்ற எண்ணம் வேறு அவனை அரித்துக்கொண்டிருக்க, ஆர்யா சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. உச்சகட்ட பதற்றத்துடன் ஒன்பதாவது நிமிடத்தைக் கடந்திருந்த ஜாஃபரின் கண்களின் ஓரம், கண்ணீர் கோர்த்திருந்தது. இன்னும் ஒரு நிமிடத்திற்குள் எப்படியாவது வந்துவிடு ஆர்யா...! என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தான். படிக்கட்டுகளை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அவனின் கடிகார முள், கடைசி நிமிடத்தின் நாற்பத்தைந்தாவது நொடியைத் தொட்டிருந்தது. கண்களை துடைத்துக் கொண்ட அவன், சற்றும் தாமதிக்காமல் மதில் சுவரின் மேல் ஏறி அந்தப் பக்கம் குதித்தான். வேக வேகமாக சென்ற அவன், பக்கத்தில் இருந்த டெலிபோன் கடையில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணை தொடர்பு கொண்ட அடுத்த வினாடி,

மறுமுனையில் இருந்த குரல் ஹலோ என்றது.

“ஹலோ... நான் ஜாஃபர் காதிம் பேசுறேன்... ஒரு அவசர செய்தி...” என்று படபடவென பேச ஆரம்பித்திருந்தான்.

8

ஹுசைனிவாலா காவல் நிலையம். மதியம் 4 மணி.

சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் தீவிர விசாரணை நடந்து கொண்டிருந்தது. இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மாவை, ஏறிட்ட சப்-இன்ஸ்பெக்டர் குர்தாஸ் சிங்,

“சார்... நேரம் சரியா நாலு மணி. அடுத்த WALKIE TALKIE அப்டேட்டுக்கு டைம் ஆச்சு சார்... ”

“ஓகே குர்தாஸ்... CONNECT பண்ணுங்க...”

“எஸ்... சார்...” என்ற குர்தாஸ் சிங் WALKIE TALKIE கருவியை ஆன் செய்தார். WALKIE TALKIE கருவி, தன் வழக்கமான இரைச்சலுடன் கரகரத்து, மற்றவர்களையும் தொடர்பில் இணைத்தது.

“சப்-இன்ஸ்பெக்டர் குர்தாஸ் சிங் ஹியர்… இந்த ஒரு மணி நேரத்திற்கான தகவல்களை சீக்கிரம் அப்டேட் பண்ணுங்க ... ஓவர்...!”

மறுமுனையில் ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு,

“TEAM-1 கான்ஸ்டபிள் கோகுல்நாத், ரிப்போர்ட்டிங் ஃப்ரம் “கௌடில்யா இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல்” சார்... NO SUSPECTS AND VICTIMS SIR … ஓவர்...!”

“ஓகே... TEAM-2 அப்டேட் பண்ணுங்க...” என்றார் குர்தாஸ் சிங்.

“TEAM-2 கான்ஸ்டபிள் சாய் அகர்வால், ரிப்போர்ட்டிங் ஃப்ரம் “குரு கோவிந்த் சிங் பப்ளிக் சீனியர் செகண்டரி ஸ்கூல்” சார்... NO SUSPECTS AND VICTIMS SIR … ஓவர்...!”

“ஓகே... TEAM-3...”

மறுமுனையில் மௌனம்.

“TEAM-3 ரிப்போர்ட் பண்ணுங்க...” என்று மறுபடியும் பேசினார் குர்தாஸ் சிங்.

மீண்டும் மௌனம். பதில் வரவேயில்லை.

குழப்பத்துடன் “TEAM-4 REPORT PLEASE…” என்றார்.

அடுத்த சில நொடிகளில்,

“TEAM-4 கான்ஸ்டபிள் அன்வர், ரிப்போர்ட்டிங் ஃப்ரம் “ஆர்மி பப்ளிக் ஸ்கூல்” சார்... NO SUSPECTS AND VICTIMS SIR… ஓவர்...!” என்று பதில் வந்திருந்தது.

“ஓகே... TEAM-3 கான்ஸ்டபிள் ஸ்வதீப் ராஜ் லைன்ல இருக்கீங்களா...?”

மறுமுனையில் மீண்டும் மௌனம் தொடரவே... இதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா சந்தேகத்துடன் குர்தாஸ் சிங்கை நெருங்கிய அவர்,

“என்னாச்சு... குர்தாஸ்...?”

“சார்... TEAM-3 கான்ஸ்டபிள் ஸ்வதீப் ராஜ் இஸ் மிஸ்ஸிங் சார்... அவர் கிட்ட இருந்து எந்த பதிலும் வரல சார்...”

“WHAT...? ”

“எஸ்... சார்... பதிலே இல்ல சார்...”

“அவர் எந்த LOCATIONல இருந்து ரிப்போர்ட் பண்ணனும்...?”

“ஜவகர் நவோதய வித்யாலயா ஸ்கூல் சார்...”

“3’ஒ CLOCK கால்ல ரிப்போர்ட் பண்ணினாரா...?”

“எஸ்... சார்... ரிப்போர்ட் பண்ணினார் சார்...”

“சம்திங் ராங்... மறுபடியும் ட்ரை பண்ணி பாருங்க...” என்றார் குழப்பத்துடன்.

அடுத்த சில நிமிடங்களில்,

போனில் பேசிக் கொண்டிருந்த டவர் இன்ஜினீயர் சிவ்ராம்ஜி திடீரென்று கத்தினார்.

“சார்... அந்த CROSS TALK கால்-ஓட LOCATION - TRACK பண்ணிட்டாங்க சார்...”

மிகுந்த ஆச்சர்யத்துடன் எல்லாரும் அவனைத் திரும்பிப் பார்க்க, அவன் பக்கம் வந்த இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா.,

“இஸ் இட்...? எந்த ஏரியா...?” என்றார் ஒரு வித எதிர்பார்ப்போடு.

“ சார்... ஜவகர் நவோதய வித்யாலயா ஸ்கூல் பக்கத்தில தான் சார், அவங்க பேசின கால் TRACK ஆயிருக்கு சார்...”

உடனே அதிர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் குர்தாஸ் சிங்,

“சார்... நம்ம TEAM-3 கான்ஸ்டபிள் ஸ்வதீப் ராஜ், ரிப்போர்ட் பண்ண போட்டிருந்த இடம் சார்... ஹி இஸ் ஆல்சோ மிஸ்ஸிங் சார்...”

எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்த அடுத்த வினாடி, திடீரென்று இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மாவின் செல்போன் அலறியது. எடுத்துப் பார்த்த நொடி, கன்ட்ரோல் ரூமில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

அதை உடனே எடுத்து அட்டென்ட் செய்த அவர், “ஹலோ, இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா ஹியர்...” என்றார்.

மறுமுனையில் இருந்த குரல்,

“சார்... திஸ் இஸ் அன் இம்பார்டன்ட் இன்பார்மேசன் ஃப்ரம் கன்ட்ரோல் ரூம். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, கன்ட்ரோல் ரூமுக்கு ஒரு தகவல் வந்துச்சு. அதன்படி, ஹுசைனிவாலா ஜவகர் நவோதய வித்யாலயா ஸ்கூல் பக்கத்தில இருக்கிற, குப்பை கூளங்கள் நிறைந்த தரிசு நிலத்தில், சந்தேகத்திற்கிடமான நபர்களோட நடமாட்டம் இருக்கிறதா, “ஜாஃபர் காதிம்”ங்கற ஒரு நபர்கிட்ட இருந்து தகவல் வந்திருக்கு. SO, உடனே நீங்க உங்க TEAM-ஓட அங்க போய் விசாரணையை தொடங்குங்கனும் சார்...”

“YES... WILL START IMMEDIATELY...” என்றவுடன் இணைப்பைத் துண்டித்த அவர் மற்றவர்களைப் பார்த்து,

“COME ON GUYS, அவங்களோட இருப்பிடம் கிட்டத்தட்ட உறுதி ஆயிடுச்சு... SAME LOCATION... ஜவகர் நவோதய வித்யாலயா ஸ்கூல் பக்கத்தில இருக்கிற தரிசு நிலம் தான் அவங்க LOCATION... LET’S GO... ”என்று அவர் சொன்னதும், சொற்ப நிமிடங்களில் ஹுசைனிவாலா காவல் நிலையத்தில் இருந்த எல்லா போலீஸ் வாகனங்களும் சம்பவ இடத்தை நோக்கி சீறிப் பாய்ந்திருந்தன.

9

கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்தவுடன் இணைப்பைத் துண்டித்த ஜாஃபர், வேக வேகமாக மதில் சுவரைத்தாண்டி, அந்த சுரங்கப் படிக்கட்டுகளை நோக்கி விரைந்தான். பதற்றத்துடன் அதில் இறங்க ஆரம்பித்திருந்த அவன் மனதில், பய உணர்வுகள் மேலோங்கியிருந்தது. “எப்படியும் ஆர்யா வந்துவிடுவானே... அவனுக்கு என்ன ஆயிற்று...???” என்ற எண்ணங்கள் அவனுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக படிக்கட்டுகள் தன் எல்லையை முடித்து, அவனை ஒரு இருட்டறையின் உள்ளே புகுத்தியிருந்தது. உள்ளே ஒரு வித மயான அமைதி. அதில் அவனின் காலடிச் சத்தம் மட்டும் தெளிவாகத் தெரிந்திருந்தது.

மனதில் பலவித சிந்தனைகளோடு, தன் கைகளை முன்னே நீட்டியவாறே முன்னேறிக் கொண்டே சென்றிருந்தான் ஜாஃபர். ஒரு பத்து அடி எடுத்து வைத்திருப்பான். தன் பின்னே யாரோ இருப்பதைப் போல் உணர்ந்த அவன், சுதாரித்துக் கொண்டு திரும்ப முயன்ற கணம், திடீரென்று அவன் முகத்தின் மேல் ஒரு துணி போர்த்தப்பட்டு, அவன் கை கால்களை பின்னால் வைத்து ஒரு உருவம் கட்ட ஆரம்பித்தது. அதற்கு பிடி கொடுக்காமல் திமிறிய ஜாஃபர், வேறு வழியின்றி, வலுக்கட்டாயமாக கட்டித் தர தரவென்று இழுத்துச் செல்லப் பட்டான். போகும் இடம் அவனுக்கு புரியாத புதிராய் இருந்தது.

ஒரு இரண்டு நிமிட நேரத்தில், ஒரு இடத்தில் ஜாஃபரின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட வைக்கப் பட்டிருந்தான். அவன் கண்களில் கட்டப் பட்டிருந்த துணி இன்னும் அவிழ்க்கப் படாமல் இருக்க, வெளிய கேட்ட அந்தக் குரல் இந்த முறை அவன் பக்கத்தில் இருந்து கேட்டது.

“யார் இவன்...???”

ஒரு வினாடி மௌனத்திற்குப் பிறகு,

“இவனும் அவனைப் போல இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவன் போலத் தெரிகிறது. படிக்கட்டுகள் வழியா இறங்க ஆரம்பிச்சு, உள்ள வர முயற்சி செய்து கொண்டிருந்தான். அதான் கட்டி இழுத்து வந்து விட்டோம்...” என்றது அந்த பின்னாலிருந்த குரல்.”

“ஹ்ம்ம்...”

இவர்களின் பேச்சு வார்த்தைகளை ஜாஃபர் உன்னிப்பாக கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் உடல் சற்றே நடுக்கத்திற்குள்ளாயிருந்தது.

“சரி... அவன் கண்களில் கட்டியிருக்கிற துணியை கழற்றிவிடு...” என்றது அந்த அதிகார தோரணை கொண்ட குரல்.

“இதோ உடனே...” என்ற சப்தம் பின்னாலிருந்து வந்தவுடன், அவன் கண்களைக் கட்டியிருந்த துணி அவிழ்க்கப் பட்டது. துணி இறுக்கமாகக் கட்டப் பட்டிருந்ததால் ஜாஃபர் தன் கண்களைத் திறக்க கடினப்பட்டு, மெல்ல திறந்து பார்த்தான். அவனுக்கு எதிரே, கருப்பு நிற துணியால் முகத்தையும், உடலையும் மறைத்த நான்கைந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, கைகளில் துப்பாக்கியேந்தி நின்று கொண்டிருந்தது.. அந்த சுரங்கத்தின் சுவர்களில், கருப்பு நிற பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஐ.எஸ் . ஐ.எஸ் . (ISIS) தீவிரவாத இயக்கத்தின் கொடிகள் தொங்கவிடப் பட்டிருந்தது. கீழே அவனுக்குப் பக்கத்தில், அவன் நண்பன் ஆர்யாவும், காவல்துறையைச் சேர்ந்த ஒரு கான்ஸ்டபிளும், உடம்பு முழுவதும் ரத்த காயங்களோடு கீழே படுக்க வைக்கப் பட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் அதிர்ந்து போயிருந்தான் ஜாஃபர்.

“இவனுங்கள என்ன பண்ணலாம்...??” என்றான் ஜாஃபரைக் கட்டி இழுத்து வந்தவன்.

“சந்தேகமே வேண்டாம்... நேரா மேல அனுப்பி விட வேண்டியதுதான்... இவனுங்களோட கடைசி நிமிடங்களை, கேமராவில் பதிவு செஞ்சு, அதை இணையத்தளத்தில் வெளியிட வேண்டும்... ” என்றான் அந்த கும்பலின் தலைவன்.

அடுத்த சில நிமிடங்களில், ஒரு பத்து அடி இடைவெளியில், ஒரு கேமரா பொருத்தி வைக்கப்பட்டு அதன் லைவ் ரெக்கார்டிங் ஓடிக் கொண்டிருந்தது.

கீழே படுக்க வைக்கப் பட்டிருந்த ஆர்யாவையும், அந்த காவல்துறையைச் சேர்ந்தவரையும் எழுப்பி, ஜாஃபரோடு சேர்ந்து மண்டியிட வைத்தார்கள். இந்த மூவரின் கழுத்திலும் கத்தி வைக்கப் பட்டு, முகமூடி அணிந்த மூன்று பேர், இவர்களுக்குப் பின்னால் தயார் நிலையில் நின்றார்கள்.

இவர்களுக்குப் பக்கத்தில் வந்த அந்த தீவிரவாத கும்பலின் தலைவன்,

“இன்றைக்கு உங்கள் மூணு பேரோட கடைசி நாள்... அதாவது நீங்கள் கடவுளை அடையப் போகின்ற நாள்… அதேபோல் நாளை மறுநாள், உங்கள் பாரதப் பிரதமருக்கான கடைசி நாள்... இந்த உலகமே எங்களைத் திரும்பிப் பார்க்க போகின்ற நாள்... இந்தியாவிலும் எங்களின் கிளைகள் (ஐ.எஸ் . ஐ.எஸ் . (ISIS)) தொடங்கப்பட்டு விட்டதை, இந்த உலகம் அறியப் போகின்ற நாள்...” என்று கூறிச் சிரித்த அவன்,

இந்த மூவரையும் ஒருமுறை அருகில் வந்து பார்த்துவிட்டு, அவர்கள் சட்டையில் அச்சிடப் பட்டிருந்த பெயர்களைப் படித்துக் கொண்டே வந்தான்.

“ஸ்வதீப் ராஜ்… போலீஸ் கான்ஸ்டபிள்... ஹ்ம்ம்...”

“வீர் பிரதாப் சிங் ஆர்யா... BSF ARMY…”

ஜாஃபரின் சட்டையில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களைப் பார்த்ததும்,

“ஜா.... ஃபர்” என்று பேச்சை நிறுத்தியிருந்த அவனின் கண்கள், ஆச்சர்யத்தோடு ஜாஃபரைப் பார்த்து,

“ஜாஃபர் காதிம்... சலாம் அலே கும் ஜாஃபர் பாய்…!” என்றான்.

ஜாஃபர் தன் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் மௌனம் காத்தான்.

“நீ என் இனத்தைச் சேர்ந்தவன் என்பதற்காகத் தான், உன்னிடம் இவ்வளவு மரியாதையாக பேசிட்டு இருக்கிறேன். உனக்கு ஒரு கடைசி வாய்ப்பு தருகிறேன்… உன் உயிர் மேல் ஆசை இருந்தால் சொல்... நீயும் எங்களோடு சேர்ந்து விடுகிறாயா...? இல்லை இவர்களைப் போல் சாகப்போகின்றாயா...? ” என்றான்.

இந்த முறையும் ஜாஃபரிடம் இருந்து மௌனமே பதிலாக வந்திருந்தது.

அதைப் பார்த்த அந்த கும்பலின் தலைவன்,

“நமது இனத்துக்கான இந்த போராட்டம், சிரியா தொடங்கி, உலகின் பல நாடுகள் வரை பரவி, இன்றைக்கு இந்தியாவிலும் கோலோச்சியிருக்கின்றது... பல இடங்களில் நமது கொடி பட்டொளி வீசிப் பறக்கின்றது. ஒரு நாள்... இந்த உலகமே நமதாகும்... இதை எதிர்ப்பவர்கள் கண்டிப்பாக கடவுளை சென்றடைவார்கள்.” என்று உரக்கக் கத்திய அவன்,

“தைரியமாகச் சொல்... இறைவனின் திருப்பெயரால் உனக்கு மன்னிப்பு அளிக்கப்படும்...” என்றான் மறுபடியும்.

இதைக் கேட்டவுடன் ஜாஃபரின் முகத்தில் உக்கிரம் தெரிந்தது. ஒரு நொடியில் முகம் சிவந்த ஜாஃபர்,

“என்ன...? இறைவனின் திருப்பெயராலா...? அந்தப் பெயரை உச்சரிக்கும் அருகதை கூட உனக்குக் கிடையாது. மதத்தின் பெயரால் மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளான உங்களோடு, அந்த புனிதமே உருவான கடவுளை தொடர்பு படுத்தாதே... உங்களுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது...! இதற்கான விளைவுகளை மிக விரைவில் அனுபவிக்கத்தான் போறீங்க...!” என்றான் முகம் முழுக்க ஆவேசத்தோடு.

“ஏய்... நீ எங்களை எச்சரிக்கிறாயா...? உன்னோட உயிர்க்கே இன்று உத்தரவாதம் இல்லை... கொஞ்சம் கொஞ்சமாக இந்த நாட்டில் சகிப்புத்தன்மை என்பதே அழிஞ்சுகிட்டு வருது... குறிப்பா நமது மதத்திற்கு எதிரான அடக்குமுறைகள் இங்க ரொம்ப அதிகம்... அது உனக்குத் தெரியாதா...? ” என்றான் அந்த கும்பலின் தலைவன்.

இதைக் கேட்டதும், ஆவேசம் கொஞ்சமும் குறையாமல் பேச்சைத் தொடர்ந்தான் ஜாஃபர்.

“எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், நாடுன்னு வரும்போது, அது எல்லாத்தையும் மறந்து, ஒரு இந்தியானாகத்தான் இன்னிக்கு வரைக்கும் நாங்க இருந்திட்டு இருக்கோம்... நாங்க இனிமேலும் அப்படித்தான்... ஆனா உன்ன மாதிரி, சில தேசவிரோதிகள் இதைப் பயன்படுத்தி, எங்களுக்குள்ள மதத்துவேசத்த உண்டு பண்றீங்க... அது இனிமேல் பலிக்காது... நாங்க முழிச்சுகிட்டோம்...” என்று உணர்ச்சிமிகப் பேசினான் ஜாஃபர்.

இதைக் கேட்ட அந்த கும்பலின் தலைவன் அகோரமாய் கத்தினான்.

“அப்படியானால், சாகத் தயாராக இரு...”

அவனைப் பார்த்து பரிகாசமாய்ச் சிரித்த ஜாஃபர்,

“இந்த உயிர் என்றைக்காவது ஒருநாள், இந்த உடலை விட்டு பிரியத் தான் போகின்றது... சாகப் போறதைப் பத்தி நான் கவலைப் பட வில்லை. நான் இராணுவத்தில் சேர்ந்த முதல் நொடியே, என் உயிரை என்றைக்கோ இந்தியாவுக்கு அர்ப்பணித்து விட்டேன்.

வெறும் இருபத்தி மூன்று வயதில், இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டு, தூக்குக் கையிற்றை ஏற்ற பகத்சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்ட இந்த மண்ணில், சாவதை நினைத்து நான் பெருமைப் படுகிறேன்.

ஆனால்….” என்று பேச்சை நிறுத்திய ஜாஃபர் மீண்டும் தொடர்ந்தான்.

“தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக முளைத்திருக்கின்ற, உன் போன்ற புல்லுருவிகள் என் கண் முன் நின்றிருக்க, என் உயிர் என்னைவிட்டுப் பிரிவதை நான் ஒருகாலும் விரும்பவில்லை. உன்னைப் போன்ற தேசத் துரோகிகள் வேரறுக்கப்பட வேண்டும். எங்கள் கைகள் கட்டுண்டிருக்கின்றது... ஆனால் உனக்கான நேரம் வெகுசீக்கிரத்தில்... ” என்று நரம்புகள் முறுக்கேற திமிறினான்...

"இதோ... நானே உன்னை அனுப்பி வைக்கிறேன்..." என்ற அந்த கும்பலின் தலைவன், கத்தியை வாங்கி ஜாஃபரின் மார்பில் இரண்டு முறை பலமாக இறக்கியிருந்தான். ஜாஃபரின் மார்பில் இருந்து இரத்தம் பீறிட்டு கிளம்பியிருந்தது.

அடுத்த கணம், யாரும் எதிர்பாராத சமயம், கண்ணிமைக்கும் நேரத்தில் வீறிட்டு எழுந்த ஆர்யா, தன் வலது கையால் பின்னால் நின்றிருந்தவனின் கழுத்தில் ஓங்கி அடித்தான். ஒரு வினாடி திக்கு முக்காடிப் போன அவன் மூர்ச்சையற்றுக் கீழே விழுந்தான். கட்கா கலையில் கை தேர்ந்த ஒருவன் அடித்த அடி போல் இருந்தது அந்த அடி. கத்தியோடு அவனை நோக்கி வந்த மற்ற இருவரையும், தன் முஷ்டியால் அவர்களின் அடி வயிற்றில் பலமாக குத்தினான். அது அவர்களின் உயிர்நாடியையே அசைத்து விடும் போல் இருந்தது.

ஆர்யாவின் வேகத்தைப் பார்த்து வியந்த அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தன் பங்கிற்கு, கீழே விழுந்தவர்களை முன்னேறவிடாமல் பார்த்துக் கொண்டார்.

சற்றே சுதாரித்துக் கொண்டு ,கொஞ்ச தூரம் பின் வாங்கிய அந்த கும்பலின் தலைவன் துப்பாக்கியை எடுக்க முன்னேறினான்.

அடுத்தடுத்த விநாடிகளில் மின்னலைப் போல கிளம்பியிருந்த ஆர்யா, கீழே கிடந்த கத்தியை எடுத்து அனாசயமாக சுழற்றி வீசினான். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாகப் பாய்ந்த அந்த கத்தி, அந்த கும்பலின் தலைவனின் காலைப் பதம் பார்த்தது. அவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். சற்றும் தாமதிக்காமல் விரைந்த ஆர்யா, அந்த கும்பலின் தலைவனை சராமரியாகத் தாக்கி அவனை வலுவிழக்கச் செய்தான்.

அடுத்த வினாடி, இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மாவின் தலைமையில் ஆன போலிஸ் படை, அந்த சுரங்கத்தின் உள்ளே நுழைந்திருந்தது. தீவிரவாத கும்பலை சுற்றி வளைத்திருந்த அவர்கள், அந்த இடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். பேச்சு மூச்சில்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜாஃபர், ஆர்யாவுடன் அவசர அவசரமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உடன் அவனுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிரவாதிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், செல்போன்கள் மற்றும் கேமராக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அடுத்த கட்ட விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தது. தீவரவாதிகளிடம் பிடிபட்டிருந்த இருந்த போலிஸ் கான்ஸ்டபிள் ஸ்வதீப் ராஜ் நடந்த விவரங்களை, இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மாவிடம் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். அடுத்த கட்ட விசாரணையில், இந்த தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடைய பலர் கைது செய்யப் பட்டனர்.

அடுத்த நாள், இந்த செய்தி நாடு முழுவதும் உள்ள செய்திச் சேனல்களில் நேரலையாக ஓடிக் கொண்டிருந்தது. தீவிரவாதிகளின் பிடியில், அந்த சுரங்கத்தில் ரெக்கார்ட் செய்யப்பட்ட கடைசி நேர வீடியோக் காட்சிகள் இந்தியாவின் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி, நாடு முழுவதிலும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியிருந்தது.

பகத்சிங் பிறந்தநாள் விழாவில் பேசிய இந்தியப் பிரதமர் பிரதீப் சவான், சகிப்புத்தன்மைக்கு உதாரணமாக திகழ்ந்த ஜாஃபரையும் ஆர்யாவையும் பார்த்து தலைவணங்குவதாக புகழாரம் சூட்டியிருந்தார்.

ஜாஃபருக்கும் ஆர்யாவுக்கும் சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவு கூடியிருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்த ஜாஃபர் கண்களை விழித்திருந்தான். எதிரே அவன் நண்பன் ஆர்யாவும், சீனியர் கமாண்டன்ட் சஞ்சய் மிஸ்ராவும் நின்று கொண்டிருந்தார்கள். இருவரையும் அணைத்துக் கொண்ட சஞ்சய் மிஸ்ரா,

“இந்திய ராணுவத்திற்கே பெருமை சேர்த்துவிட்டீர்கள்...” என்று அவர்களை கட்டியனைத்துக் கொண்டார்.

அவர்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் கோர்த்திருந்தது.

இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை. இரண்டடுக்கு இரும்பு முள்வேலி, உலக வரைபடத்திலிருந்து இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனியாக பிரிக்கிறது. இந்த எல்லைக்கோட்டை ஒட்டியே, தனக்கென ஒரு எல்லையை வகுத்து வாழ்ந்து, ஆயுதத்தோடு புறப்பட்ட பலரது வாழ்க்கைப் பயணங்கள், வெறும் சொற்ப வருடங்களில் முடிவுக்கு வந்திருக்கின்றது. இது எதைப்பற்றியும் ஒரு துளிகூட சட்டை செய்யாத ஒரு கேடுகெட்ட கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற, நமது வாழக்கை ஒரு முடிவுறாத் தொடர்.

உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் .இப்படிக்கு பூபதி கோவை .+91-7299543057